கூடும் பூகம்பமும்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2025
பார்வையிட்டோர்: 1,507 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மிகப் பழங்காலத்து மரம் அது! 

சமீபத்தில்தான் பறக்க ஆரம்பித்திருந்த அந்தக் குருவிக்குஞ்சின் முன்னோர், தொல்பெருங்காலமாக, வாழையடி வாழையாக, அந்த மரத்திலேதான் கூடு கட்டி வாழ்ந்துவந்திருக்கின்றனர். 

அந்த மரம் எத்தனையோ சூறாவளிகளுக்கு ஈடு கொடுத்திருக்கிறது; எத்தனையோ புயல்களைப் பார்த் திருக்கிறது. அத்தனை பேராபத்துக்களிலும் அதில் கட்டியிருந்த ஒரு கூடாவது கீழே சிதைந்து விழுந்ததில்லை. 

ஆனால் ஒரு நாள் திடீரென்று அந்த மரம் ‘கிடு கிடு வென்று நடுங்க ஆரம்பித்தது. 

வெளியே புயல் வீச ஆரம்பித்திருக்கும்’ என்று அந்தக் குருவிக்குஞ்சின் தாய் எண்ணியது. 

குஞ்சு வெளியே தலை நீட்டிப் பார்த்தது; ஆகா யம் மேகமற்று நிர்மலமாக இருந்தது! 

தாய், குஞ்சை உள்ளே இழுத்து, “ஏதாவது சூறைக் காற்றாக இருக்கும்; நீ பேசாமல் தூங்கு ” என்றது. 

தாயின் ஸ்பரிசத்தினால் உண்டாகும் இனிய ஆனந்தம் இன்று அந்தக் குஞ்சுக்கு வேண்டியிருக்க வில்லை. 

அது அடிக்கடி வெளியே தலையை நீட்டிப் பார்த்தது. 

மரங்கள் பின்னும் அதிகமாக ஆட ஆரம்பித் தன். அவை பூமித்தாய்க்குப் பெரிய சாமரங்கள் வீசுவது போலத் தோற்றின. 

குருவிக் குஞ்சு பார்த்தது: புயலுக்கு ஆதாரமான அடையாளம் எதுவும் தென்படவில்லை. 

பார்த்துக்கொண்டே இருக்கையில் அக்கம் பக் கத்து வீடுகள் தடதடவென்று சரிந்தன. பிறகு கோயில்கள், அரண்மனைகள்- 

தட தட தடதட-

 “அம்மா, அம்மா! அம்மா!ஐயோ அம்மா !”

அந்தப் பயங்கரக் கூக்குரலைக் கேட்டு, குருவிக் குஞ்சு தன் தாயைக் கூட்டுக்கு வெளியே இழுக்க ஆரம்பித்தது. 

தாய் அதற்கு மாறாக அதைக் கூட்டுக்குள்ளே இழுத்தது. 

“அம்மா, இது சுழல்காற்று அல்ல, புயல் அல்ல; இது பூகம்பம்!” என்றது குருவிக்குஞ்சு. 

“குழந்தாய், நம்முடைய இந்த மரம் மிகப் பழங் காலத்தது. இப்படிப்பட்ட எத்தனையோ பூகம்பங் களை அது பார்த்திருக்கிறது!” என்று பேசியது தாய்.

கூட்டின் வாசலில், ஒன்றன் மீது மற்றொன்று உயிரை வைத்திருக்கும் அவ்விரண்டு ஜீவன்களும் வாதாட ஆரம்பித்தன. 

“குழந்தாய், பூகம்பம் பூகம்பம் என்று ஏன் உளறிக்கொட்டுகிறாய்? வெளியே பெரும் பிரளயம் ஆரம்பமாகி யிருக்கிறது. கூட்டுக்குள்ளே ஒட்டிக் கொண்டு இருந்தால்தான் நம் உயிர் மிஞ்சும். மிகப் பழங்காலத்து வைரம் பாய்ந்த மரம் இது !” என்று தாய் சொல்லியது. 

“அம்மா, பூகம்பத்தைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது!கூட்டை விட்டு வெளியே போனால்தான் நம் உயிர் பிழைக்கும். இனி இந்தப் பழங்கால மரத்தை நம்பிப் பயன் இல்லை!” என்று குஞ்சு பதில் சொல்லியது. 

குஞ்சு, தாயை அநேகமாகக் கூட்டுக்கு வெளியே இழுத்து வந்துவிட்டது. அதற்குள் தாய், குஞ்சை வெளியே பிடித்துத் தள்ளிவிட்டு, கோபத்தோடு உள்ளே போயிற்று. 

தாய் தள்ளிய வேகத்தில், குஞ்சு கூட்டுக்கு வெளியே போய்ப் பறந்தது. 

காதைச் செவிடுபடுத்தும் மிகப் பெரும் சத்த மொன்று கிளம்பியது. கடகட – சடசட – கடகட சடசட – அந்தப் பழங்காலத்து மரம் வேரோடு பெயர்ந்து தரையில் சாய்ந்து கிடந்தது! 

அந்தக் குருவிக்குஞ்சு தாயைத் தேடுவதற்காக மரத்தைச் சுற்றி வட்டமிடலாயிற்று. 

– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *