குடை நிழல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 5, 2025
பார்வையிட்டோர்: 72 
 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டு நாட்களாகக் கோடை வெக்கை மிகக் கடுமையாக இருந்தது. கோடை மழை ஒன்று பெய் வதற்கும் நாளாகிவிட்டது. எனினும் அன்று மாலை அவ்வளவு சீக்கிரமாக மழை வருமென அவன் எதிர்பார்க்க வில்லை.

அன்று மாலையில் சுந்தரம் குடையுடன்தான் வெளியே கிளம்பினான். குருட்டு வெயில் அன்று கடுமையாக இருந்தது. டவுனில் தன் அலுவல்களை முடித்துக் கொண்டு நடையாகவே சென்டிரல் ஸ்டேஷனை அடைந்தான். அங்கே ரயிலில் அவன் தன் நண்பன் ஒருவனைச் சந்திக்க வேண்டி இருந்தது. அவனைச் சுந்தரம் சந்திக்க முடியவில்லை. வீடு திரும்ப எதிரிலுள்ள ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாண்டை அவன் அடைந்தான். அங்கே அன்று மாலை அதிகக் கூட்டம் இல்லை. மழை திடீரென்று ஆரம்பித்தது. மழை ஆரம்பித்ததும் இருந்த சிலரும், அங்குமிங்குமாகச்சிதறிப் போய்விட்டார்கள். மாலை இருட்டு கண்டு கொண்டிருந்தது. வீதி விளக்குகளும் ஏற்றியாகிவிட்டன. அவ்விடத்தில் தன்னைத்தவிர வேறு யாரும் இல்லையெனத் தெரிந்துகொண்ட போது, திடீரென ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண் அங்கு வந்து சேர்ந்தாள். அவள் எவ்விடமிருந்து வந்தடைந்தாள் என்பதை இவன் கவனிக்கவில்லை. அவள் உடை மழையில் நன்றாக ஊறி தனைத்து உடம்போடு உடம்பாக ஒட்டிக்கொண் டிருந்ததைச் சுந்தரம் கவனித்தான்.

காத்திருந்த இவர்களை நாலைந்து பஸ்ஸுகள், தங்காதே தாண்டிச் சென்றுவிட்டன. மற்றும் தங்கிப் போன பஸ்ஸுகளும் இவர்கள் போகவேண்டிய இடத்துப் பஸ்ஸுகள் அல்ல. இருட்டு நன்றாகக் கண்டுவிட்டது. இவர்கள் இருவரும்தான் அங்கு இருந்தவர்கள். வலுத்து மழையும் விடுவதாகத் தெரியவில்லை.

மோட்டார் வருகிறதா என்பதைக் கவனித்துக் கொண்டிருந்த இருவரும், முதலில் ஒருவரை ஒருவர் கவனிக்கவில்லை. பஸ் வரும் என்ற நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கலானார்கள். நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. வீதியிலும் ஜன நடமாட்டம் குறைந்துவிட்டது. மோட்டார்கள் மட்டும் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன. தன் அருகாமையில் ஒன்றி நின்றிருந்த அப்பெண்ணைச் சுந்தரம் அப்போது தான் நன்றாகக் கவனித்தான்.

சிறிய அழகான பெண் அவள். அவளுக்கு இருபது வயதுதான் இருக்கலாம். இவன் பார்த்ததைப் பார்த்த அவள் முகம் புன்சிரிப்புக் கொண்டது. அப்போது சுந்தரத்திற்கு என்னவோபோல் இருந்தது. அவனுக்கு மனது அமைதியை இழந்ததான ஒரு எண்ணம். மற்றும், ஒரு வசீகரப்பெண் பக்கத்தில் நின்றிருப்பதில் மனதில் ஒரு குதூகலமும் போலும்.

“மழை விடாதுபோல் தோன்றுகிறது” என்றாள் அவள்.

“ஆமாம். பஸ்ஸும் வராதுபோல தோன்றுகிறது” என்றவன் அவளுடன் பேசியது போதாது போன்று “ஆமாம் நீங்கள் எங்கு போகவேண்டும்” எனச் சிறிது விட்டுத் தொடர்ந்து கேட்டான்.

“இப்படி மழை வருமென்று தெரிந்திருந்தால் குடையாவது கொண்டு வந்திருக்கலாம்…. என்றாள் அந்தப் பெண்.

“தெரியாது தான், முற்கூட்டியே… ஆமாம் தெரிந்து தான் என்ன ஆகப்போகிறது… நான் இங்கு உனக்காகக் குடை வைத்துக் காத்திருப்பதும் தெரிந்தால், கொண்டா வரப்போகிறாய், நீ உன் குடையை?” பேசினதற்குப் பின் தான் சுந்தரத்திற்கே தான் ஏன் இப்படியாகப் பேசினோம் என்று ஆச்சரியம் கொடுப்பதாயிற்று. அவன் வேற்றுப் பெண்களுடன் பேசியதே கிடையாது. மேலும் அவன் சங்கோஜ சுபாவமும் படைத்தவன். சாதாரணமாக, கபாவம் சமய சந்தர்ப்ப விசேஷத்தினால் எவ்வெவ் வகையோ மாறுதல் கொள்ளுகிறது போலும். சுந்தரம் மறுபடியும் சொன்னான். “பஸ்ஸுக்காகக் காத்திருப்பதில் பிரயோஜனமில்லை… நான் மவுண்ட்ரோட் போனால், அங்கு ஒருக்கால் எனக்கு பஸ் அகப்படலாம்… என்னுடைய குடையிருக்கிறது இருவரும் போகலாமே”. சிரித்துக் கொண்டு அவள், அவன் பக்கத்தில் பிரித்த குடையின் கீழ் வந்தாள். ஒருபெண், அதிலும் தனக்குத் தெரியாத ஒரு வசீகரமான வாலிபப் பெண், அவளுடன் ஒரு குடையின் கீழாக இருட்டிலும், மழையிலும் செல்வது – ஆம், சுந்தரம் இது கனவில்தான் நடப்பதாக நினைத்தான். ஒரு சமயம் அவன் மனது சொல்லிக்கொள்ளும் – இதில் என்ன தவறு இருக்கிறது? தெரிந்தவர்கள் யாராவது பார்த்தாலல்லவா ஏதாவது நினைக்க இடம் இருக்கும்?

மின்னல் ஒளி பாய்ந்த கணத்தில் சுற்றுமுற்றும் கவனித்ததில் கண்ணுக்கெட்டிய வரையிலும், ஒருவரும் படவில்லை..ஏதாவது நினைத்துக் கொள்ளலாம்… அந்த நேரத்தில் யார் பார்த்து இவர்களைத் தெரிந்து கொள்ளப் போகிறார்கள்…! ஒரு குடையின் கீழ் இருவருமாகச் சேர்ந்து சென்றனர். இருட்டிலும், மழையிலும், முக்கால்வாசி தூரம் போகும் வரையில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள வில்லை. சிற்சில சமயம் இருவரும் மோதிக்கொள்வார்கள். அப்போது சுந்தரம் தன் மனதிற்கு விரும்பிய அதிர்ச்சியைக் கொள்வான். அப் பெண்ணோவெனில் சற்று உரத்து இவனைப் பார்த்துச் சிரிப்பாள் போன்று காதில் படும். வானம் முழுவதையும் மேகம் நன்றாக மூடிக்கொண் டிருந்தது. காற்றற்று செங்குத்தாகத் தடிமழை பொழிந்து கொண்டிருந்தது.குடையின்றியே இருவரும் நனைந்து கொண்டு போயிருக்கலாம். சாரலில் நனைந்து கொண்டு ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு போகத்தான் இந்த குடை உதவியது போலும். இடியும் மின்னலும் மிகக் கடுமையாக இருந்தன.

“நீங்கள் மவுண்ட் ரோட்டில் எங்கே இருப்பது?” என்று சுந்தரம் அவளைக் கேட்டான்.

“ஏன், உங்களுக்குத் தெரியவேண்டியது அவசியமோ என்றாள் அவள். யதேச்சையாகப் பட்ட ஒரு பெண்ணுடன் எவ்வளவு தூரம் அவனால்போக முடியும். மவுண்ட்ரோடும் வந்துவிட்டது. வெகுதூரம் தான் போவதை அவன் விரும்ப வில்லை போலும். யாராவது ஒரு கௌரவமான குடும்பப் பெண்ணாக அவள் இருக்கலாம்…

“இல்லை…. நான்” என்று இவன் தயங்கி ஆரம் பித்ததை அப்பெண் மறித்து…. “நான் உங்களைக் கேட்டது அல்ல. என்னைத்தான், என் மனதைத்தான். நான் சிறிது உங்கள் காதுகேட்க உரத்துக் கேட்டுக்கொண்டேன்… என்னை யாரென உங்களுக்குத் தெரியவேண்டாம். மவுண்ட்ரோட் வந்துவிட்டது. நான் இப்படியே இச்சந்து வழியாக என்வீட்டிற்குப் போகிறேன்..” என்று சொல்லி அவனை விட்டு நகர்ந்தாள்.

அவளை வீட்டிற்கு கொண்டு விட்டுப் போவதாகச் சுந்தரம் சொன்னான். அவள் பதில் சொல்லவில்லை. அரவணைப்பிற்கு ஆசைகொண்ட அனாதைக் குழந்தையைப் போல அவள் அவனைப் பார்த்துச் சொன்னாள்.

ஆயினும் அவள் வார்த்தைகளில் பரிதாபம் தொனிக்கவில்லை. “என் வீடு சமீபத்தில் தான் இருக்கிறது. நான் தனியாகப் போகிறேன். நீங்கள் வரவே வேண்டாம்.

உங்களை தடுப்பதிலும் நான் உங்கள் எண்ணத்தைத் தடுக்கச் செய்ய முயலவில்லை.” சிறிது நகர்ந்தவள் தொடர்ந்து பிறகு “உங்கள் இஷ்டம், வேண்டுமாயின் வந்துவிட்டுப் போங்கள்…’ முடிக்கு முன்பே அவள் முகத்தில் கொஞ்சம் அலட்சியச் சிரிப்பும் தெரிந்தது.

இந்த ஹோட்டலில் காப்பியாவது சாப்பிடலாம் என்று நுழைந்த இருவரும் ஏதேதோ சாப்பிட்டுவிட்டுப் பசியைத் தணித்துக் கொண்டு சென்றனர். அவள் வீடும் வெகு சமீபத்தில் தான் இருந்தது. சுந்தரம், அவளை அவள் வீட்டில் தவிர வேறெங்கேயும் விடுவதான எண்ணத்தில் இல்லை. இருவர் உடைகளும் நன்றாக நனைந்திருந்தன. தூற்றல் நின்றுவிட்டது.

ஒரு பெரிய வீட்டின் வாயிற்புறம் வந்தவுடன் அப்பெண் நின்றாள். “இதுதான் நான் இருக்குமிடம்” என்றாள். அது வீடாகவே தோன்றவில்லை. தனித்தனி அறைகளில் அநேகர் வசிக்கத்தக்க ஒரு விடுதியாகத் தோன்றியது. மாணவிகளின் விடுதியாக அது இருக்கலாம். ஆனால் அந்தப் பக்கத்தில் மாணவிகள் தங்க விடுதி இருப்பதாக, அவன் அறிந்த மட்டில் தெரியவில்லை. சுந்தரம் அப்போது அவளைப் பார்த்து… “அம்மா நீங்கள் யார்….என்ன செய்கிறீர்கள்… இங்கே” என்று கேட்டான். வாயிற்புறத்து வெளிச்சம் அவள் முகத்தின்மீது விழுந்தது. அவள் முகம் நன்றாக அவனுக்குத் தெரிந்தது. அவள் முகம் குவிய அதில் ஒரு வசீகரச் சிரிப்பு தென்பட்டது. ரோஜா மொக்குகள் போன்று அவள் உதடுகள் குவிந்து இருந்தன.

அநேக ஆயிரம் விளக்கொளியிலும், ஆயிரம் விதமான கனவுகள் அவ்விடுதியில் ஒதுக்குப்புறமாக மறைந்து நின்று உட்புகும் அவர்களை விழுங்க இருந்தன போலும். அவனுடன் அவள் உள்ளே செல்லச் சிறிது தயங்கினாள். அவள் பார்வையில் மாசு படர்ந்தது. அங்கேயே, வாயிற் புறத்திலேயே தங்கி, அவனுடன் பேசிப்பேசி வாழ் நாட்களைக் கழிக்க எண்ணியவள் போன்று உட்புகத் தயங்கி நின்றிருந்தாள். ஊதலும் சாரலும் தெருவழியே ஓடிக்கொண்டிருந்தன. ஆயிரம் விநோத விரோத யோசனைகள் அவள் மனதில் புதைந்து, மறைந்து மாறு பட்டும், அவளுக்கு வாழ்க்கையில் அலுப்புக் கொடுக்கத் தான் ஒன்றாகத் தோன்றின. ஆதரவை அவனிடம் நாடின பார்வை அவள் கண்களினின்றும் விடுபட்டுச் சலித்து எட்டிய வெளியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. எங்கேயோ பார்த்து நின்று கொண்டிருந் தாள். அவளுக்கு இருபது வயதிற்குள் தான் இருக்கும். ஊறிய உடம்பில் ஒட்டிக்கொண்ட ஈரத்துணியின் அடியில் அவள் அங்கங்கள் ஒவ்வொன்றிலும் கவர்ச்சி தெரிந்தது. அவளுள் பரிசுத்த ஆத்மாதான், அவள் கண்களில் இவ்வளவு தெளிந்த பார்வையை அப்போது கொடுத்தது போலும்! அவன் எதிரில் அவள் வருத்தத்தில் நின்றிருந் தாள். வெளிக் காட்டக் கூச்சம் கொண்டு அவள் கண்கள் பளிங்கு போன்று பிரகாசம் இழந்து தோன்றின. அவள் முகத்தோற்றமும் ஏதோ விதமாகத் தெரிந்தது.

அவளை பார்க்கும் போதும், புருவஞ் சுழிக்கும் போதும், அவள் பேசாத வார்த்தைகள் அருத்தம் கொள்ள, புருவத்திடைப் புகுந்து கொண்டன போலும், அவ்வித விளங்காத வகைப் பார்வையில், சுந்தரம் தன் மனதிற் கிஷ்டமான எவ்வளவோ அருத்தம் கண்டான். அவள் சொன்னாள்… “என்னை இப்போது நீங்கள் வெறுக்க வில்லை… பின்னாலும் உங்களால் முடியாது… உங்களிடம் உள்ள என் எண்ணத்தைத் தானே நீங்கள் எப்போதும் என்னிடம் கொள்ள முடியும், பிரதிபலிக்க முடியும். நீங்கள் எனக்குச் செய்த இச்சிறு காரியத்தை ஏன் செய்தோமென மனக்கசப்பின்றி நினைக்க, நான்யார் என்று தெரிந்து கொண்டபின் உங்களால் முடியுமா என்பதை நீங்கள் இப்போது சொல்ல முடியுமா? பின்னால் தெரிந்து கொள்ளப் போவதை முன் கூட்டி யோசித்து உங்களைப் பதிலளிக்க நான் கேட்கவில்லை. நான் இப்போது உங்களிடம் ஏன் இவ்விதம் பேசுகிறேன் என்பதும் எனக்குத் தெரியவில்லை. யோசனைகள் யோசிக்கும் போது யோசிக்கப்படுவதென்பதாலேயே மாறுதல் அடைகின்றன. நான் பேசுவது என்னைப் போன்று இல்லை. மீறித்தான் இருக்கிறது.. நீங்கள் யார் என்பதற்கு, எவராக இருந்தால், யாராக இருந்தால் என்ன என்பதின்றி, யார் என்பதற்கு, ஆம். ஆயிரம் தடவை உன் பகற்கனவில் தோன்றிய நான் என்று என் மனது பதில் கொள்ளும் போது… என் பிரியமானவனே நீ போய்விடு…” அவள் கண்கள் போதைகொண்டு துள்ளி விளையாட வெளியே ஓடுவதாகத் தெரிந்தன. வெளியே துள்ளி மறுபடியும் ஜலப்பரப்பின் கீழ் புதையும் வெள்ளி மீன்களாக உட்புதைந்தது அவள் பார்வை. அவள் கண்கள் பார்க்க முடியாத வகையில் ஒளிகொண்டு பிரகாசித்தன. அவன் யோசனைகளையே போன்று அவள் கண்கள் சலித்தன.

“எனக்குச் சொல்வதில் ஒன்றுமில்லை.. உங்க ளுக்குத் தெரிந்தால் ஒன்றுமில்லையா…? உங்களை ஒரு கணத்தில் நான் தெரிந்து கொண்டுவிட்டேன். என்னை நான் யார் என்று சொல்லாமலே அநேக ஆடவர்கள் என்னைத் தெரிந்து கொண்டு விடுகிறார்கள்! ஆம், என்னைமட்டுமல்ல; எல்லாப் பெண்களையும் கூட…. அப்படித்தான் தெரிந்து கொள்கிறார்கள் போலும். ஆனால் அவர்கள் தெரிந்தவர்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் தான். உங்களுக்கோ வெனில் என்னைப் பார்த்தவுடன் அதுவும் ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் தெரிந்து கொள்ள முடியவில்லை. சொன்னாலும் நீங்கள் தெரிந்து அறிந்து கொள்ள முடியுமோ என்பதிலும் எனக்குச் சந்தேகம் தோன்றுகிறது. முடிந்தாலும், உங்களுக்குத் தெரிந்தது உங்களுக்கு நன்மை யானதா என்பதில், என் மனது திரும்பித் திரும்பி சந்தேகம் கொள்ளுகிறதே, நான் சொல்லித் தான் ஆகவேண்டுமா?”

அவள் பேசியதும் பேசிய வகையும் சுந்தரத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதாக இல்லை. அதிசயமாகவும் அவள் படவில்லை. மனதிலிருந்து ஒன்று விடுபட்டுப் போனதினால் தான் அவன் அவளை வெறுமனே வெறித்துப் பார்த்து நின்றான் போலும். நேருக்கு நேராக யாருக்கும் சொந்தமற்ற ஒருத்தியுடன் பேசுவதில் ஆனந்தம் ஒன்றும் இல்லை; அதிர்ச்சியும் இல்லை. தன் இருதயத்திற்கு நேரான குறுக்குப் பாதையில் சென்றடைந்து விட்ட ஏதோ ஒன்று, ஆராய்வதற்கு அவகாசம், அவன் அறிவிற்குக் கொடுக்கவில்லை. பின்னால் ஆயிரம் யோசனைகளுக்கு அடிப்படையாக அவள் எண்ணம் அவன் மனதில் தோன்றலாம். அப்போதோவெனில் எதிரில் நிற்பதைக் கூட அவன் அறிந்தவன்போன்று நின்று இருக்கவில்லை.

“ஏன் நிற்கிறீர்கள் – வாருங்கள் என் அறைக்குப் போகலாம்…. உங்களைக் கண்டது முதல் என் மனது என்னை வெறுக்க வேதனைக் கொடுக்கிறது. அதில் உள்ள இன்பம் உங்களுக்கு அனுபவிக்க கொடுத்து வைக்க வில்லை. தன்னை வெறுக்க எண்ணம் கொடுப்பவர்களை வெறுப்பது என்பது, வேறொன்று. உங்களை நான் விரும்புகின்றேன். மனதிற்கு அடியிலிருந்து ஏதோ ஒன்று இப்போது வாழ்க்கையில் இனிமை கொள்ளத் தூண்டு கிறது. உங்களால் உணருகிறேன் என்பதிலா நான் உங்களை வெறுக்காது விரும்புகிறேன்…? என்னுடைய காரியங்களிலே நான் சிந்தனைகளைக் கொடுத்தது. கிடையாது. யோசித்தால், யோசனைகளின் அடியே ஒரு அதிசயப் பயம் கொண்டிருக்கிறது. அடிப்படையான பயங்கரம் இருக்கிறது போலும். எவற்றையும் யதேச்சையில் கவனிப்பின்றிதான் நான் செய்கிறேன். சரி, நாம் உள்ளே போவோம். எங்கேயோ என்னைத் தனியாக பேச்சில் தனியாக செல்லவிட்டு விட்டீர்கள்.”

அவளைப் பின் தொடர்ந்து மாடியில் ஒரு அறைக்குச் சென்றான். அவள் அறையை அடைந்ததும் அவன் மனது கொஞ்சம் நிதானம் அடைந்தது. தனியறையில், தனியாக தான் யார் முன்னிலையில் நிற்கிறோம் என்பது அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. இந்த அனுபவம் அவனுக்குப் புதிது. அவளிடம் அவனுக்கு யாது காரணம் பற்றியோ ஒரு அநுதாபம் தோன்ற ஆரம்பித்தது. அவள் பேச்சும், பேசும் வகையும் அத்தகைய ஒருத்தியினது போன்று இல்லை. ஒருக்கால் இவன் இளமையும் புதுமையும், அப்படி நினைக்க ஏதுவாயிற்றோ என்னவோ, அவன் தன் ஈர ஆடைகளைக் களைந்து வேறு உலர்ந்த ஆடைகளை அணிந்துகொண்டு வந்தாள்.

“நீங்கள் ஈரத்தில் நிற்கிறீர்களே. ஆடை நான் கொடுக்கிறேன். உங்களுக்குச் சரியாகக் கூட இருக்கும். அணிந்து கொள்ளுகிறீர்களா?” அவள் சிரித்துக்கொண்டே கூறினாள். “ஆமாம், உங்களைப் பெண்ணுடையில் பெண்ணாக்கி என் சிநேகிதியாக என் பக்கத்திலேயே, ஏன் – என் உள்ளேயே வைத்துக்கொள்ள ஆசையாக இருக்கிறது. எவ்வளவு அசட்டுத்தனமாக நான் உங்களை மௌன மாக்கிப் பேசிக்கொண்டே இருப்பேன் தெரியுமா? பசியே எனக்குத் தெரியாது. வாழ்க்கையும் வெகு சீக்கிரத்தில் இனிமையாக முடிந்ததென என் மனம் நினைக்க உங்களிடம் பேசும் நேரம் நீண்டு கொண்டே போகும்-“

“வேண்டாம் பாதகமில்லை எனக்கு-” என்று சொல்ல வாயெடுத்தான் சுந்தரம். அவள் மேலும் கவனி யாது பேசிக்கொண்டே போனாள். “ஆமாம், உங்களை இதற்கு முன்னாலேயே பார்த்து இருக்கிறேன். அநேக நாள் பகற் கனவில் உங்களை எதிர்பார்த்திருக்கிறேன். நீங்கள் வரவில்லை, இப்போது நீங்கள் வேண்டா விருந்தினன் போல வந்திருக்கிறீர்கள். பிடிக்காததை சீக்கிரம் புறக்கணித்துத் தள்ள உபசாரத்தில் தான் முடியும் போலும். ஆமாம் என் பிரியம் உங்களிடம். பிரிவு உபசாரம் தான் உங்களுக்கு நான் செய்கிறேன்… உங்களைப் பிடிக்காது வெளியனுப்பத்தான் என் மனம் உங்களிடம் இவ்வளவு ஆசை கொள்கிறது.”

“சரி ஜோன்ஸ்… மழை விட்டுவிட்டது, நான் போய் வருகிறேன்… போகட்டுமா…” என்று சொல்லி, ‘சரி, நாளை நான் வருகிறேன்” என்று ஐந்து ரூபாய்களை அவள் மேஜையின் மீது வைத்து விட்டு வெளியே போய்விட்டான். அவன் போன பின்பு ஜோன்ஸ்க்கு சிரிப்புத் தாங்கவில்லை. ரூபாய்களை எடுத்துக் கையில் கலகலவென்று குலுக்கிச் சிரித்துக்கொண்டாள். அது அழுகைச் சிரிப்பாகத்தான் அந்த ரூபாய்களைப் பார்த்துச் சிரித்ததாக இருந்தது.

மறுநாள் இருட்டிக்கொண்டிருக்கும் போது சுந்தரம் ஜோன்ஸ் அறையை அடைந்தான். வாயிற்புறத்தில் உட்புகச் சிறிது தயங்கி நின்றுகொண்டிருந்தான். உள்ளே யும் வெளியிலும் பெண்கள் குதூகலத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். ரிக்ஷாக்களில் சிலர் ஆடவருடன் வெளிக்கிளம்பிக் கொண்டிருந்தனர். திருநாள் கடைகளை ஆச்சரியத்துடன், அர்த்த மற்று கவனித்து நிற்கும் சிறு பிள்ளையைப் போன்று சிறிது நேரம் சுந்தரம் இவைகளைக் கவனித்து நின்றிருந்தான்.

எப்படி உள்ளே நுழைந்து அவள் அறையின் வாயிலை அவன் அடைந்தான் என்பது அவன் பிரக்ஞையில் பட்டது போல் இல்லை. அநேக பெண்களின் பார்வையிலும், பேச்சு சப்தங்களிலும் அவன் அகப்படாது மிதந்துபோனதான ஒரு எண்ணந்தான் அவன் கொண்டது. ஜோன்ஸ் அறைக் கதவு தாழ் இடாது, பொருந்தாது சாத்தி இருக்கக் கண்டான். அதைத் திறந்து உட்புகவும் சிறிது தயங்கினான். ஒருக்கால் திறந்தும் உள்ளே அவள் இருப்பதையோ இல்லாததையோ தெரிந்துகொள்ள அவன் ஒன்றையும் அப்போது விரும்ப வில்லைபோலும். எனினும் சாசுவதத்தில் அவன் வெளியே நின்றுகொண்டிருக்க முடிகிறதா? எவ்வளவு அறிவற்ற பலம் வேண்டியிருக்கிறது. முதலில் சிறு காரியம் கூடச் செய்ய வழக்கம் கொண்டவுடன் வாழ்க்கையே சவத்தின் ஒரு பழக்கமாகிறது.

அந்த அறைக் கதவை சுந்தரம் அவ்வளவு வேகம் கொண்டு திறந்து இருக்க வேண்டாம். கதவு சுவற்றில் மோதுண்ட சப்தத்தில் ஜன்னலடியில் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்த ஜோன்ஸ் இவனைத் திரும்பிப் பார்த்தாள். சிந்தனைகளினின்று விடுபட்டு தன்னை எதிர் பார்த்து நிற்பவளாக அவள் தோன்றவில்லை. இவனைப் பார்த்ததும் அவள் கன்னம் குழிவு கொள்ளச் சிரித்தாள்.

“என்ன ஜோன்ஸ், நான் வரமாட்டேன் என்றுதானே நீ நினைத்துக் கொண்டிருந்தாய்?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான். அருகில் வந்த அவன் பார்வையில் ஒரு ஆதரவு இருந்தது. அவளுக்கு அது பிடிக்கவில்லை என்றாலும், அவளுடைய அநேக நாட்களின் அலுப்புக் கொடுக்கும் தொல்லைகள், அக்கணநேரப் பார்வையில் கரைந்ததென உணர்ந்தாள் போலும். இன்புறத் தழுவிய அவன் கரங்கள், இயற்கையின் குதூகல ஆரவாரிப்புப் போன்று அவளைப் பரவசப்படுத்தியது. அவன் மார்பில் அவள் தலையைப் புதைத்துக் கொண்டாள்.

“ஏதோ வெளியில் இரைச்சல் கேட்கிறதே” என்றான் சுந்தரம்.

“ஆமாம் வெளியுலகு மடியுமட்டும் உள்ளே கேட்கும் கோர சப்தங்கள் அவை. நம்முடைய அணைப்பில் மரணாவஸ்தை கொள்ளும் சப்தங்கள். பாழ்பட்ட வசீகரம் வெளியே உலாவ அவர்களைப் பார்க்கும் போது..” அவளால் பேச முடியவில்லை. அவள் கண்களினின்று வழிந்த கண்ணீர் அவன் மார்பை ஈரமாக்கியது. முன்பு அவளுடன் மழையில் நனைந்ததுகூட அவனுக்குத் தோன்றவில்லை. அவள் கண்ணீரால் ஈரம்பட்டதும் அவனை நடுக்கியது. அவள் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தான். கண்ணீரிலும் அவள் உதடுகள் ரோஜா மொக்காகக் குவிந்து இருந்தன. முகத்திலும் புன்சிரிப்புத் தெரிந்தது.

“ஏன் அழுகிறாய்… நான் வருத்தம்தானா உனக்குக் கொடுக்கிறேன்… என்னால் உனக்குச் செய்ய முடிவது ஒன்றுமில்லையா?”

“உங்களால் செய்ய முடிந்தது, அதோ அந்த மேஜையின் மீது இருக்கிறது பாருங்கள்.. ஆம், அதைத் தான் நான் உங்களிடம் எதிர்பார்க்க முடியும். எப்போதும் நிலைத்து நிற்க, என்னிடம் இல்லாததையா உங்களிடம் நான் எதிர்பார்க்க முடியும்? என்னுள், என் இனிமை, தனிமையில் துன்புறுத்தாது நிற்கும் நாளைத்தான் நான் நாடுகிறேன். உங்களைப் பெற்று உங்களால் அடையும் ஆனந்தம் நீடிக்கும் போதல்லவா நீங்கள் கொடுத்தது என்று ஆகும்.

“என்னுள் ஏதோ ஒன்று தூங்கினதைத்தான் தட்டி எழுப்பினீர்கள். நீங்கள் உங்களால் ஒன்று செய்ய முடியாததினால் தான் உங்களிடம் இப்போது நான் பிரியம் கொண்டிருக்கிறேன். எங்கள் பிரியம் காசுக்கு அகப்படும் போது, பிறகு தூக்கி எறியப்படும் சாம்பலாகத்தானே இருக்க முடியும். காசுக்கு அகப்படும் பிரியம் எவ்வளவு மலிவாக இருக்கிறது! உங்களுடைய அநுதாபம் அடையும் பாக்கியம் பெற்றும் ஏற்கும் வகை தான் நான் புரிந்து கொள்ள வில்லை.” அவள் தன்னை அறிந்து கொள்ளத் தான் இவ்வகையாக அவள் பேச்சில் தடுமாறிக் கொண் டிருந்தாள். சுந்தரமும், தன்னுள் தலைவிரித்தாடும் ஒன்றை சமனம் செய்யப் பாடுபட்டுக் கொண்டு இருந்தான்,

“ஜோன்ஸ், வெளியே போய் சிறிது உலாவியாவது வரலாம்… ஏன், எப்படி? இத்தொழிலைக் கொண்டாய்….?” ஏதோ சம்பந்தமற்று அருத்தமற்றுத் தானும் பேசவேண்டும் மென்பதற்காகச் சொன்னது போன்றுதான் இருந்தது. சுந்தரம் கேட்டது.

ஜோன்ஸ் அவனைப் பார்த்தாள். அவன் முகத்தைப் பார்த்தாள். அவள் பார்வையில் கோபம் இல்லை, வருத்தம் இல்லை, ஒருவகை அலட்சியம் தெரிந்தது. அவள்

அவனைப் பார்த்த பார்வையில் அவன் கேட்டதில் கேவலமான எண்ணமும் இருந்ததாகத் தெரியவில்லை.

“ஆமாம், மூன்று சிறிய சகோதரிகளும் வேலையற்ற வயதான தாயார் தகப்பனாரும் முன்னும் பின்னுமாக எப்போதும் ஏழ்மையில் என்னை வெறிக்கும் போதும், வெட்கத்திற்கு மேலே போய், மீறிப் பிச்சையெடுக்கும் வகையில் பசி தெரியாமல் இருந்தாலும் அப்போதுதான் தாங்கள் என் பக்கத்தில் நின்று, நீ ஏன் இப்படியானாய் என்று கேட்க வேண்டும். உங்கள் கேள்வியைத்தான், உங்களைத் தான் நான் பக்கபலமாக்கிக்கொள்ள வேண்டி யிருக்கிறது. யார் யாரோ என்னவெல்லாமோ, கேட்டும், செய்தும் போய்விட்டார்கள், மறைந்துவிட்டார்கள். ஆனால் என்முன்னும் பின்னும் தெரிவதுதான் என் மனதில் மறைய வில்லை. நான் மட்டும் சாசுவதத்தில் நிற்கப் போகிறேனா? நான் நிற்குமிடமும் சூனியமாகிறது. நான் இருப்பது, அதுவும் ஒரு பெரிய பொய்தானே. நிற்கும் பொய்யைத் தானே நிஜமெனக் காணப் பக்கத்தில் வருகிறார்கள். பொய்யை நம்பும் நீயும் இறக்கப் போகிறாய், இறப்பைத் தவிர உலகில் நடக்கிறது எது நிஜம்? இறப்பில்தான் மனித வாழ்க்கை பூர்த்தியாகிறது.”

“ஜோன்ஸ், உன் வார்த்தைகள் சொல்லுகின்றன – நீ உன் இறப்பிலும் நிஜமாகமாட்டாய். இறந்த உன் வாழ்விலும் கனவுகள் உண்டு. கனவில் மிதக்கும் நீ, உனக்கு எது இறப்பு, விழிப்பு? உனக்கு சாவு இல்லை. சாவினால் நீ சமாதானம் அடைய முடியுமா?” என்றான் சுந்தரம்.

“அதோ அங்கே பார் பூமியின் கீழ், ஐந்தடிக்குக் கீழ் சிறுபுல் என்மேல் படர்ந்தால், இனிமையான பக்ஷிகள் என் மேல் பாடினால், வெளியுலகம் அப்போது பாழடைந்து மடியும். இரவின் வானக் கூரையில் அநேக நக்ஷத்திரங்கள் தெரியும். என்மேல் மெல்லிய காற்றுத் தடவிச் செல்லும்- என் இன்பக் கனவுகளைத் தவிர ஒன்றும் என்னைத் தொடர்ந்திட முடியாது. அப்போது விழிப்பின்றி, தூக்கமின்றி சதா இன்பக் கனவின் வாழ்க்கைக்கொள்ளும். நான் எனக்கு எது மெய்யானால் என்ன? பொய்யானால் என்ன?

“நான் எங்கெல்லாமோ சென்று கொண்டிருக்கிறேன். சரி வாருங்கள், வெளியே உலாவி வரலாம்… இருங்கள், இதோ வருகிறேன்…” என்று ஒரு சிறு தலை ஆட்டலுடன் வெளியே சென்றாள். எவ்வளவு அனுபவம் அச் சிறு தலையாட்டுதலில் தெரிகிறது. அவளைப்பற்றி அதிகநேரம், அவன் சிந்தித்து நிற்க இடமில்லாமல் சீக்கிரமே ஜோன்ஸ் திரும்பி வந்துவிட்டாள். இருவருக்கும் உள்ள பிடிப்பு என்னவென்பது தெரியவில்லை. அவள் நினைவை சுந்தரத் திற்குத் தன் மனதிலிருந்து களைந்து எறிய முடியவில்லை. அவள் நினைவுமட்டும் அவனுக்கு போதவில்லை போலும். அவளைப் பார்க்க அவளிடம் அடிக்கடி வரவேண்டி யிருக்கிறது. வெளியே சென்று உலாவித் திரும்ப இரவு வெகு நேரமாகி விட்டது.

மாலை வரையிலும் சுந்தரத்திற்கு அன்று காத்திருக்க முடியவில்லை. மத்தியானமே ஜோன்ஸைக் காண அவள் அறைக்கு அவள் சென்றான். அவளும் அன்று அங்கிருந் தாள். சுந்தரத்தை அவள் அந்த வேளையில் கண்டதில், ஆச்சரியமடைந்தவள் போன்று, ‘என்ன, நீங்களா இப்போது வருகிறது’ சுந்தரத்தைப் பற்றியும், அவன் குடும்பத்தைப் பற்றியும், கொஞ்சநாள் பழக்கமாயினும் அவள் அறிந்து கொண்டிருந்தாள். கேட்கவேண்டியது என்பது அவசியமே இல்லாமல் நடுநடுவே சுந்தரம் சொல்வதிலிருந்தும் அவளுக்கு அவனைப்பற்றி நன்றாகவே தெரிந்து இருந்தது.

“ஆமாம் ஜோன்ஸ், நீ இன்னும் இறக்கவில்லையே, இருக்கிறாயா என்று பார்க்கத்தான் வந்தேன்…” என்று அவன் சிரித்துக்கொண்டே கூறினான். அவனுடைய சிரிப்பு இவளுக்குப் பிடிக்கவில்லை. அவனுடைய வேடிக்கைப் பேச்சுகளும் அவளுக்கு ஆத்திரத்தைத்தான் கொடுத்தன. அவனைப் பார்த்து அவள் மிகுந்த துக்கத்தில் சொன்னாள்:

“என் பிரியமானவனே, நான் சொன்னால் நீ சாதாரணமான வகையில் எடுத்துக்கொள்ளலாம்… என்னை, உன்னைப் பற்றிய வரையில், என்னை, நீ இன்னும் அறிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. உன்னையும் நான் சரியாகத் தெரிந்து நடந்து கொள்ளவில்லை என்றும் நினைக்கிறேன். இல்லாவிட்டால் நீ இப்படி எனக்கு வருத்தம் கொடுக்க நடந்து கொள்ளமாட்டாய். தவறியே உன்னைத் தெரிந்து கொண்டுவிட்டேன் போலும். உனக்காகத்தான் நான் காத்திருந்தேன். ஆனால் இப்போது உனக்காக நான் காத்திருக்கவில்லை… உன் நன்மைக்கு என்பதில்… என் பிரியமானவனே, நீ கேட்டது சரி, நான் இறக்காதிருப்பது சரியில்லைதான். ஆனால் நான் விரும்பும் வகை என் இறப்பு இருக்க முடியும் என்பதில் இப்போது உன்னைக் கண்டவுடன் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. மறுதளிக்காதே. இனி இங்கு வராதே. என்னைப் பார்ப்பதை விட்டு விடு. முதலில் உனக்குச் சிரமமாக இருந்தாலும் எல்லாம் காலத்திலும், பழக்கத்திலும் சரியாகிவிடும்…”

அவள் உடைகளில் பூக்களும் கொடிகளும் தெரிந்தன. அநேக வண்டுகளும் வண்ணாத்திப் பூச்சிகளும் மொய்த்துக் கொண்டிருந்தன. அவள் அன்று வெகு வசீகரமாக சுந்தரத்திற்குத் தோன்றினாள். அவள் மனதும் மிகுந்த சமாதானம் அடைந்து இருந்தது போல் தெரிந்தது. அன்று அவள் சிரித்துக்கொண்டும், வெகு உல்லாச மாகவும் சுந்தரத்துடன் பேசிக் கொண்டிருந்தாள்.

“நேற்றிரவு நான் ஒரு கனவு கண்டேன், வெகு விநோதமான இன்பக் கனவு கண்டேன். இப்போது உங்களிடம் சொல்வதற்கான அளவு அது ஞாபகத்தில் இல்லை. இருந்தாலும் வார்த்தைக்குள் அடைபடாது போலும், மறந்து மறைந்து விடவும் இல்லை. உங்களை நான் இப்போது பார்ப்பதும் நேற்றைய என் கனவுதான் போலும்”. அவனை அவள் அணைத்துப் பேசியதெல்லாம் ஞாபகத்தில் நிற்காது மறக்காது விநோதக் கனவர்கத்தான் சுந்தரத்திற்கு இன்பம் கொடுத்தது. அவள் தன்னிடம் ‘காதல்’ கொண்டவள் என்று சிறிது நினைத்தான். தெரியாத தற்கும் அறிய முடியாததற்கும் பெயர் கொடுப்பதினால் தெரிந்ததெனக் கொள்ளும் மனிதர்கள், பேச்சற்ற பிராணிகளை விடப் பேச்சினால் எவ்வகையில் மேம்பட்ட வர்கள்?

மறுநாள் மாலை சுந்தரம் போனபோது ஜோன்ஸ் அறையில் அவள் இல்லை. மற்றொரு யுவதியை அங்கு சுந்தரம் பார்த்தான். அவளும் பாலியத்தில் வெகு அழகாகத் தோன்றினாள். இவனைக் கண்டு சிரித்துக் கொண்டே “வாருங்கள், உங்களைத் தான் குறிப்பிட்டாள் என நினைக்கிறேன், ஜோன்ஸ், அவள் அவசர ஜோலியாக வெளியூருக்குப் போக நேர்ந்துவிட்டது. வருவதற்கு இரண்டொரு மாதகாலம் ஆகலாம் என்று உங்களிடம் சொல்லச் சொன்னாள். ஒருக்கால் இவ்வூருக்கு வராமல் இருந்தாலும் இருக்கலாமாம். மற்றும் உங்களிடம் கொடுக்கச் சொன்னாள்” என்று அவனிடம் ஐந்து ரூபாய் களைக் கொடுத்தாள். ‘நீயே வைத்துக்கொள்’ என்று வாங்கியவன் அவள் கையிலேயே கொடுத்தான். அவ்விடத்தை விட்டு அவன் அகலும்போது, இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும். வாசலில் தூறிக் கொண்டிருந்தது. இன்றைக்கு அவன் குடையைக் கொண்டு வரவில்லை.

– சிவாஜி மலர் 1959.

மௌனி மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) தமிழில் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்.மணிக்கொடி இலக்கியக் குழுவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுபவர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் கட்டற்றட தன்மையை பூடகமான மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர். எஸ். மணி ஐயர் என்கின்ற இயற் பெயருடைய மௌனி, ஜூலை 27, 1907-ல் தஞ்சாவூர் மாவட்டம்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *