குடப்பூசணிக்காயும் நடக்கீரையும் குழிக்கிணறும் அனுப்பியது
கதையாசிரியர்: இராயர்-அப்பாஜி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 19, 2025
பார்வையிட்டோர்: 72
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

டில்லி பாச்சாவானவன் இராயரிடத்திலிருக்கிற அப்பாச்சி யினுடைய உயரிய தந்திரங்களையும் உத்தி விசேஷங்களையும், புத்தியினுடையத்தையும் கேள்விப்பட்டு அதைப் பரிசோதிக்கும் படியாகக் “குடப்பூசணிக்காயும், நடக்கீரையும் குழிக்கிணறும் சீக்கிரத்தில் அனுப்பவேணும்” என்று இராயருக்கு எழுதி அனுப்பினான்.
அந்த நிருபம் இராயரிடத்திற்கு வந்தது. அவர் படித்துப் பார்த்து அப்பாச்சிக்குக் காண்பித்தார்.
அப்பாச்சி அப்படியே செய்வோமென்று சொல்லிவிட்டுப் போய் ஒரு பூசணிப் பிஞ்சைக் குடத்துக்குள்ளே விட்டு வளர்த்து அது குடத்துக்குள்ளே தானே பருக்கும்படி செய்து, ஒரு வண்டியின் மேலே முழ உயரம் மணல் பரப்பிப் பாத்தி கட்டிக் கீரை விதைத்து, அந்தக் குடத்தையும், வண்டியையும் இராயரிடத்தில் கொண்டுபோய்க் காட்டி, இதுகளைப் பாச்சாவுக்கு அனுப்பி “இத்தேசத்திலிருக்கிற குழிக்கிணறு அத்தேசத்திற்குப் புதிதென்பதால் அத்தேசத்துக் கிணறுகளிலேயே ஒன்றை அனுப்பினால் பிணைபோட்டு அனுப்புகிறோம்” என்று எழுதி அனுப்பச் சொல்லிச் சொன்னான்.
இராயர் சந்தோஷப்பட்டு அப்படியே செய்தார்.
பாச்சா இந்த ஓலையையும், பூசணிக்காய்க் குடத்தையும், கீரை வண்டியையும் பார்த்து மிகவும் அப்பாச்சியின் வல்லமையை மெச்சிக் கொண்டான்.
– இராயர் அப்பாஜி கதைகள், இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2006, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
![]() |
பதிப்பாசிரியரின் முகவுரை - செப்டம்பர் 2006 முன்னுரை : மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை. இலக்கிய அழகு மிகுந்த இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்பவையாகும். குறிப்பாகச் சிறுவர்களை ஈர்க்கும் திறம்படைத்தவை இவை. இவற்றில் மரியாதைராமன் கதைகள் ஏற்கனவே என்னால் பதிப்பிக்கப் பெற்றுச் சரசுவதி மகால் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. மரியாதைராமன் கதைகள் குறித்த நெடிய ஆய்வுக் கட்டுரையொன்று மகால்…மேலும் படிக்க... |
