காந்தி தேசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 20, 2024
பார்வையிட்டோர்: 667 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அங்கிங்கெனாதபடி சென்னை மாநகரின் எல்லாப் பகுதிகளிலும் வானொலிப் பெட்டிச் செய்தி படிக்கும் கடைகளின் முன்பு ஒரே கூட்டம். முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டும், கண்களைத் துடைத்துக் கொண்டும், ஏன்; தேம்பி அழுது கொண்டும் கூட மக்கள் தெருக்களில் அலை மோதிக் கொண்டிருந்தனர். 

அந்த நாள் 1948 ஜனவரி 30 ஆம் நாள்! காந்தியடிகளைக் கோட்சே கொன்றுவிட்டான் என்று தெளிவான செய்தி இல்லை. ஆனால் சுதந்திரத்துக்காகப் போராடிய அந்த தேசத் தந்தைக்கு ‘உரிய பரிசை’ இந்து ராஜ்ய இஷ்டமித்திரர்கள் கொடுத்து விட்டனர். மூன்று துப்பாக்கிக் குண்டுகளைத் தாங்கி வீழ்ந்த அந்த உத்தமனின் உடல் இன்னும் பொதுமக்களின் பார்வைக்காகக் கூட வைக்கப்படவில்லை. 

அந்த நேரத்தில்தான் மின்மினியைப் போல் ஒளிவிடும் மின் விளக்குக் கம்பங்களைக் கடந்து அந்த வாலிபன் மெல்ல நடந்து கொண்டிருந்தான். இருட்டைக் கிழிக்கச் சக்தியற்ற அந்த மின் விளக்குகளின் மங்கிய ஒளியில் அவன் விழிகளிலிருந்து நீர் வழிந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவன் நடந்து செல்வது நூற்றுக்கணக்கான குடிசைகள் நிறைந்த ஒரு பகுதி. பாதையோரத்தில் பல குட்டிகளுடன் பன்றிகள் சாக்கடைச் சகதியில் புரண்டுகொண்டிருக்கின்றன. நடுச் சாலையில் சின்னவயதுப் பிள்ளைகள் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் இயற்கை உபாதைகளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். செங்கற்கள் குவிந்து கிடக்கும் ஒரு பகுதியில் அரை ஆடைக்கும் வழியற்ற ஆண்கள் சிலரும் பெண்கள் சிலரும் உரக்கப் பேசிச் சிரித்துக்கொண்டு சென்னைக்கேயுரிய செந்தமிழைப் பிழிந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

அவன் நினைவுகள் அலை மோதின! இந்தக் கொடுமைகள் எல்லாம் நீங்கி, வறுமைக் கோட்டுக்குக் கீழே வௌவால்களாகத் தொங்கிக் கொண்டிருப்பவர்களை வானம்பாடிகளாகப் பறக்க விட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் தான் காந்தியடிகள் சுதந்திரப்போர் நிகழ்த்தி வெற்றி கண்டார். ஆனால் அவரைத் தீர்த்துக்கட்டி விட்டார்களே-யார் அவர்கள் ? வெளியேறிய வெள்ளையர்களா? இல்லை; அவர்கள்தான் காந்தியடிகளைக் கண்போல் காத்தவர்களாயிற்றே! சுதந்திரம் பெற்ற நாட்டில் மதவெறிக்குச் சுதந்திரம் கோரிய ஒரு கூட்டமல்லவா அவரைக் கொன்று போட்டிருக்கிறது! கன்னத்தில் வழிந்திடும் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான் அவன்! இரண்டுநாட்களுக்கு முன்புதான் மூன்றாவது முறையாக அவன் படித்து முடித்த காந்தியடிகளின் சத்தியசோதனையின் ஏடுகள் மனத்திரையில் புரளுகின்றன. உப்பு சத்தியாக்கிரகம் – தண்டி யாத்திரை – நவகாளிப்பயணம் – தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்புப் போர்- வட்டமேஜை மாநாடு – உண்ணா நோன்புகள் – வன்முறைக் கண்டனம் – நன்முறை அறிவுரைகள் – அடக்குமுறைகளை ஏற்ற அமைதியான புன்னகை – இவை அனைத்தையும் மறந்த ஓர் அராஜகக் கும்பல் அந்த அண்ணலைப் பிணமாகக் கிடத்திவிட்டதே! ஒன்றன்பின் ஒன்றாகப் பல பாறைகளை அவன் உள்ளத்தில் உருட்டி விட்டது போன்ற வேதனை – நடந்து கொண்டேயிருந்தவன் கண்ணெதிரில் எதையோ பார்த்துவிட்டு சற்று திகைத்து நின்றான். குடிசைகள் முளைத்திருந்த அந்தப் பகுதியின் ஒரு மேட்டின் மீது ஒரு ‘டாக்சி’ கார் வந்து நின்றது. டாக்சியின் பின்புறத்து இருக்கையிலிருந்து கதவைத் திறந்து கொண்டு ஒரு வாலிபன் இறங்கி நின்றான். டாக்சி டிரைவர் அந்த வாலிபனிடம் ஏதோ சொல்லிவிட்டு குடிசைப் பகுதிக்குள் நுழைந்தான். நட்சத்திரங்களுக்கிடையே அதுதான் நிலவு என்று உவமை சொல்லுவதற்கேற்ற வகையில், அந்தக் குடிசைகளுக்கு மத்தியில் ஓர் ஒட்டு வில்லை வீடு! டாக்சி டிரைவர் வேகமாக நடந்து போய் அந்த வீட்டின் கதவைத் தட்டியதையும், கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண்மணி வெளியே வந்ததையும் அவள் அந்த டாக்சி டிரைவரின் பின்னால் தொடர்ந்ததையும் காணமுடிந்தது. 

காந்தியடிகளின், முடிவால் கனத்துப் போயிருந்த அவன் நெஞ்சில் மற்றொரு பாறை விழுந்தது. 

‘அடப்பாவிகளா; இன்றைக்குக் கூடவா இந்த வியாபாரம்?’ அதிர்ந்தது அவன் இதயம். உலக முழுதும் சோககீதம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மோக கீதம் இசைக்க ஆசைப்பட்ட அந்த மனித மிருகத்தை அருகே சென்று பார்க்க வேண்டுமென்று விர்ரென்று விரைந்து நடந்தான் அந்த டாக்சியின் அருகில்! 

“கோபி கிருஷ்ணா! நீயா?” 

“அடடே; காந்திதாசனா? நீ எங்கய்யா வந்தாய்? என்னைப் போல வேட்டைக்குத்தானா?” 

‘சே! வெட்கமாயில்லை உனக்கு ?’ 

‘இந்த விஷயத்திலே வெட்கமென்னப்பா வேண்டியிருக்கு. பசியெடுக்கிற பறவை மீனைக் கொத்த வருது!’ 

‘வெட்கம் வேண்டாம், வேதனை கூடத் தெரியாதா? இன்றைக்கு உலகமே துக்கத்தில் மூழ்கியிருக்கு! அதிலும் நம்மை எல்லாம் சுதந்திர மண்ணிலே நடக்க வச்சவர் இனி நடமாட முடியாமல் ஆக்கப்பட்டு விட்டார். அவருக்காக இந்த ஒரு நாளாவது துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதா?’ 

காந்திதாசனால் அதற்கு மேல் பேச முடியவில்லை. விம்மி விம்மி அழத் தொடங்கிவிட்டான். கோபிகிருஷ்ணன் அவனைத் தழுவிக் கொண்டு, “அழாதே! உன் உணர்ச்சி புரியுது எனக்கு!” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே டாக்சி டிரைவரும் அந்தப் பெண்ணும் அவர்களுக்கருகே வந்து விட்டார்கள். கோணல் வகிடு எடுத்துக் கொண்டை போட்டு, அதைச் சுற்றி கனகாம்பரச் சரத்தை வளைய விட்டிருந்தாள் அவள். முகத்தில் பூசப்பட்டிருந்த வாசனை மாவு அந்த மங்கலான ஒளியில் திட்டுத் திட்டாகத் தெரிந்தது. பச்சை நிறத்தில் நெற்றியில் ஒரு நீளமான பொட்டு, வெள்ளைக் கட்டம் போட்ட சிகப்புச் சீலை. கையில் மடித்துப் பிடித்திருந்தாள் ஒரு மஞ்சள் நிறக் கைக்குட்டையை! 

டிரைவர், அவளைக் காரின் பின்னால் உட்கார வைக்கக் கதவைத் திறந்தபோது காந்திதாசன் குறுக்கிட்டு, ‘டிரைவர் சார்! கொஞ்சம் இருங்க!’ எனக் கூறிவிட்டு அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டான்; 

‘ஏம்மா, இன்னைக்கு காந்தியை சுட்டுட்டாங்க இன்னைக்குக்கூட இந்தத் தப்பு பண்ணனுமா?’ 

‘யாரைச் சுட்டா எங்களுக்கு என்னய்யா – இது எங்க பொழப்பு!’ 

சட்டென்று பதில் வந்தது மட்டுமல்ல; அந்தப் பெண் டாக்சி டிரைவரைப் பார்த்து, ‘யோவ்! என்னை எங்கணே கொண்டாந்து விட்டிருக்கே – இந்த ஆளு யாரு ? யாரோ செத்ததுக்கு என்னைக் கட்டி அழச் சொல்லுது! எவனோ ஒருத்தனை தினம் தினம் கட்டி அழுதா தானே; எங்க அப்பன், ஆயி, புள்ளை குட்டிங்க வயிறு நிரம்பும்’ என்று மளமளவெனப் பேச ஆரம்பித்துவிட்டாள். 

‘இன்னைக்கு உன் தொழிலுக்கு சம்பளம் எவ்வளவும்மா?’, கனிவோடு வினவினான் காந்திதாசன். 

‘அம்பதுன்னு பேசி அட்வான்ஸ் வாங்கியிருக்கேன். இஷ்டப்பட்டா பத்து அஞ்சு மேலே போட்டுக் கொடுக்கிறதுதான்.’ 

அதற்குள் டாக்சி டிரைவர் கோபமடைந்து, கோபிகிருஷ்ணனைப் பார்த்து, ‘என்ன சார் இதெல்லாம் பேஜாரு – யாரு இந்த ஆளு ? என்னைப் பலான இடத்துக்கு கூப்பிட்டு வந்துட்டு; இப்ப என்னமோ இவரு மகாத்மியம் படிக்கிறாரு – நீ என்னமோ மெளனம் சாதிக்கிறே?’ என எரிந்து விழவே – ‘டிரைவர் – நானே சொல்றேன். நான் இவரோட நண்பன். இன்னைக்கு இவர் செய்யப் போற காரியத்தை நான் தடுத்துட்டேன் – இந்தாங்க; நூறு ரூபா இருக்கு இதை இந்தப் பெண்ணுகிட்டே கொடுத்து வீட்டுக்கு போகச் சொல்லுங்க! நாங்க ரெண்டு பேரும் உங்க டாக்சியிலே வர்ரோம்; கிளம்புங்க!’ என்று காந்திதாசன் கூறியவாறு டிரைவர் கையில் நூறு ரூபாயை வைத்தான். டிரைவர், அதை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு, ‘அப்புறம் வந்து பேசிக்கிறேன். இப்ப நீ வீட்டுக்குப் போ!’ என்று கூறி டாக்சியை ஓட்ட முற்படவே காந்திதாசனும் கோபி கிருஷ்ணனும் டாக்சியின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டார்கள். 

‘எங்க சார் போகணும் ?’ 

‘மெரினா பீச்சு’க்குப் போங்க – அங்கே எங்களை விட்டுவிட்டு வெயிட்டிங்கிலே நிக்க முடியுமில்லே?’ 

‘காசு கொடுத்தா சரி சார்!’ 

கோபிகிருஷ்ணன் மௌனமாகவே இருந்தான். மெரினா கடற்கரையை வந்தடையும் வரையில் காந்திதாசனும் அவனுடன் பேசாமலே இருந்தான். இருவரும் டாக்சியை விட்டு இறங்கி மணலில் நடந்து அலை கடலோரம் சென்று ஓரிடத்தில் அமர்ந்தனர். 

‘ஏம்ப்பா, தாசு ! இவ்வளவு நாளா உன்னை ஆளையே காணும்…’

‘ரொம்ப நாளைக்கு அப்புறம் உன்னை அந்த இடத்திலே பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்லை கோபி!’ 

‘உன்னைப் பத்தி நான் கேள்விப் பட்டுகிட்டு இருக்கேன். காந்திதாசன், பேருக்கு ஏத்தபடி ஆள் மாறிட்டான். விபச்சாரத்திலே ஈடுபடுற ஆண் பெண் இருசாராரையும் திருத்தணும்னு முடிவு எடுத்துகிட்டு பேய்மாதிரி அலையிரான். அப்படிப்பட்ட ஆம்பளைகிட்டேயும் பொம்பளைகிட்டேயும் போயி தனித்தனியா உபதேசம் பண்ணி அவுங்களைத் திருத்தி நல்வழிப்படுத்துரான். வேற வழியில்லாம அந்தத் தொழில் பண்ற பெண்களுக்கு எங்காவது நல்ல வேலை வாங்கித் தந்து அவுங்களை ஒழுக்கமான முறையிலே வாழ வைக்கிறான் என்றெல்லாம் சொல்ராங்க. எல்லாம் உண்மைதானா?’ 

‘ஏதோ என்னால முடிஞ்சதை செஞ்சிகிட்டு இருக்கேன். உலகத்தையே திருத்த முடியுமா ? ஏதோ பத்து பேரை இருபது பேரை திருத்தி நல்ல முறையிலே வாழவச்சேன்கிற திருப்தி எனக்கு இருக்கு – இருந்தாலும் மனம் சோராமல் தொடர்ந்து அந்தத் தொண்டை ஆற்றிக்கொண்டு தானிருக்கிறேன்.’ 

‘ஆமாம், இதுக்கெல்லாம் பணம் ஏது ? உங்கப்பாவும் உன் சின்ன வயசிலேயே இறந்துட்டாரு ?’ 

‘சின்ன வயசு என்னா? நான் பச்சைக் குழந்தையா இருக்கும் போதே செத்துட்டாரே!’ 

‘அம்மா இருக்காங்கள்ளே ? அவுங்க பேரு கூட சொர்ணாம்பிகை இல்லே?’ 

‘ஆமாம்….. போன மாசம்கூட வந்துட்டுப் போனாங்க! இன்டியன் பாங்க் பிராஞ்ச் ஒண்ணுலே பம்பாயிலே வேலை பாக்கிறாங்க. அவுங்க சம்பளத்திலே மிச்சப்படுத்தி அனுப்புற பணத்திலேதான் காலேஜ் படிப்பை முடிச்சேன். இங்க எங்க அத்தையம்மா வீட்டிலே சாப்பிட்டுகிட்டு இருந்தேன். அவுங்க வயசு முடியாம செத்துட்டாங்க ; அதுக்கு துக்கம்கேட்கத்தான் அம்மா வந்துட்டு ரெண்டு நாள் இருந்துட்டுப் போனாங்க! 

‘பாவம்; உங்கம்மா இளம்வயசிலேயே விதவை ஆனவுங்கள்ளே…. இப்ப என்னா நாப்பது வயசு இருக்குமா?’ 

‘அதுக்கு மேலயே நாலு அஞ்சு வயசு அதிகமா இருக்கும். ஏதோ நல்ல காலம். அம்மா படிச்சிருந்ததினாலே பம்பாயிலே எங்கப்பா வேலை பாத்த பாங்கிலேயே சுமாரா ஒரு வேலை கிடைச்சது.’ 

‘சரி, காந்தி! நீ ஒண்ணும் வேலை பாக்க முயற்சி பண்ணலியா?’ 

‘அதான் பாத்துகிட்டிருக்கேனே – ஒவ்வொரு நாளும் சாக்கடையிலே விழப்போற ஒரு மனுஷனையாவது தடுத்துக் காப்பாத்தி, உன்னை இப்ப இங்கே அழைச்சிகிட்டு வந்தது மாதிரி அழைச்சிகிட்டு வந்து, திருத்துற வேலையைப் பாத்துகிட்டிருக்கேன்’. 

‘இதுக்கு சம்பளம் உனக்கு எந்த சர்க்காரு கொடுக்குது?’ 

‘கோபீ! சம்பளமில்லாத வேலை. ஆனா இந்த வேலைக்கு ஆகிற செலவுக்கு எங்க அம்மா எனக்கு மாசாமாசம் அனுப்புற பணமே போதுமானதாயிருக்கு!’ 

‘நீ செய்ற இந்த வேலை, மணலைக் கயிறா திரிக்கிறதுக்கு சமமான வேலை. இதைப் போயி உங்கம்மா ஆதரிச்சு உனக்கு முட்டாள்தனமா பணம் வேற அனுப்பிகிட்டு இருக்காங்களா?’ 

‘வெள்ளைச் சேலையோட மாத்திரமில்ல கோபி; வெள்ளை உள்ளத்தோடவும் எங்கம்மா என்னுடைய கொள்கையை ஏத்துகிட்டு என்னை ஊக்கப்படுத்தி அடிக்கடி கடிதம் கூட எழுதுவாங்க…. இதோ பாரு; இன்னைக்கு பம்பாயிலேருந்து எனக்கு அம்மா எழுதின கடிதம்.’ 

காந்திதாசன் சட்டைப் பையிலிருந்து கடிதத்தை எடுத்தான். கோபிகிருஷ்ணனிடமிருந்த சிறிய டார்ச் விளக்கு அந்தக் கடிதத்தைக் காந்திதாசன் படித்துக்காட்ட உதவியது. 

‘பிரியமுள்ள மகன் காந்திதாசுக்கு எழுதியது. நமது தேசம் சுதந்திரம் அடைந்து ஆறு மாதங்களைத்தான் கடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆறு மாதத்தில் எத்தனை பிரச்சினைகளைத் தன் தலை மீது போட்டுக்கொண்டு மகாத்மா காந்தியடிகள் அகிம்சா வழியில் ஒற்றுமையை நிலைநாட்டப் பாடுபட வேண்டியுள்ளது. அவர் போதிக்கும் அகிம்சைக் கொள்கைக்கு மாறாக இரண்டு நாட்களுக்கு முன்பு கூட நான் வேலை பார்க்கும் பாங்கின் பக்கத்தில் ஒரு குண்டு வெடித்து தெய்வாதீனமாக யாருடைய உயிருக்கும் ஆபத்தில்லாமல் உடைமைகள் மட்டும் பெரும் அளவு சேதமடைந்துள்ளன. இதைப் படித்துவிட்டு நீ பயந்துவிட வேண்டாம். அம்மா வேலை பார்க்கும் பாங்க் கட்டிடத்துக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று பதற்றமடையத் தேவையில்லை. பாங்க் கட்டிடத்தைக் கண்காணிக்கப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

நான் இந்த மாதம் உனக்கு அனுப்பியுள்ள பணத்தையும் நீ ஏற்றுக் கொண்டுள்ள புனிதமான திட்டம் நிறைவேறுவதற்குச் செலவழிப்பாய் என்றே நம்புகிறேன். மனிதச் சந்தையில் வாடகைக்கு உடலை விடும் பெண்களையும் – அந்தச் சொற்ப நேர சுகத்தைச் சொர்க்கலோக சுகம் என்று எண்ணிச் சீரழியும் ஆண் வர்க்கத்தையும் முழுமையாகச் சீர்திருத்தி ஒழுக்கமுள்ள ஒரு சமுதாயத்தைக் காண முடியும் என்ற பூரணமான நம்பிக்கை இல்லை என்றாலும்கூட, அழுக்காகிவிட்ட குளத்திலிருந்து ஒரு குடம் நீரை மொண்டு அந்த நீரைக் கொதிக்கக் காய்ச்சி விட்டால் அந்த ஒரு குடம் நீராவது தூய்மையாகி விடுகிறது அல்லவா ? அத்தகைய தூய்மைப் பணியைத் தோள்மீது போட்டுக்கொண்டு, தொண்டாற்றுகிறாய் நீ என்கிற போது என்மனம் அன்றலர்ந்த செந்தாமரை ஆகிறது கண்ணா! 

‘யாருடையது என்றே தெரியாத ஒரு பிணத்தை இருட்டறையில் தழுவுவது போலத்தான் பணம் கொடுத்த ஆடவரை விலை மகளிர் தழுவுவார்கள்’ என்று வள்ளுவர். கூறியதை ஆண்களுக்கு மட்டும் நீ எடுத்துச் சொல்லிப் பயனில்லை. ‘பணத்துக்காக ஓர் ஆடவனை பிணத்தைத் தழுவுவது போல அல்லவா நீ உணர்ச்சியற்றுத் தழுவவேண்டியுள்ளது’ என்று பெண்ணுக்கும் சொல்லி நல்ல பாதைக்கு வழி காட்ட வேண்டும். ‘அய்யா, உமது பேச்சைக் கேட்டு இந்தத் தொழிலை விட்டு விடுகிறேன். என் வாழ்க்கைக்கு என்ன வழி ?’ என்று கேட்ட பெண்கள் மூவருக்கு நீயே செலவழித்து நல்ல கணவர்களைத் தேடிப் பிடித்து ஒழுங்கான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கிறாயே; அது பெரிய சாதனைதான். 

நீ தொடங்கித் தொடரும் இந்த அரும்பணியுடன் உனக்கென்று ஒரு தொழில் – அல்லது நிறைந்த ஊதியத்தில் ஒரு வேலை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டாமா ? அதில் கிடைக்கும் பணம் இந்தப் பணிக்கும் பயன்படுமல்லவா? 

நானும் சில வருஷம் கழித்து சென்னைக்கு வந்து உன்னோடும், என் பேரன் பேத்திகளுடனும் பொழுதைப் போக்க வேண்டாமா; என் கடைசிக் காலத்தில்! 

உடன் பதில் எழுது! இப்படிக்கு உன் அன்புள்ள அம்மா சொர்ணாம்பிகை’. 

கடிதத்தைப் படித்து முடித்து விட்டுக் காந்திதாசன், கோபிகிருஷ்ணாவை லேசான புன்னகையுடன் பார்த்தான். அந்த முறுவலிலும் சோகச் சாயல் படர்ந்திருந்தது. 

‘காந்தீ ! உங்கம்மா பேரன் பேத்தியோட கொஞ்சணும்னு எழுதியிருக்காங்க; அப்படின்னா கல்யாணம் ஆயிட்டுதா உனக்கு?’ 

‘நான் கல்யாணம் பண்ணிக்க ஒப்புக் கொள்ளணும்கிறத்துக்காக அப்படி எழுதியிருக்காங்க!’ 

‘நீ என்னைத் தடுத்து நிறுத்தியது, இங்கே அழைச்சிகிட்டு வந்து உபதேசம் பண்ணினது எல்லாத்தையும் விட உன் தாயார் எழுதியிருக்கிற ஒவ்வொரு எழுத்தும் என் தலையிலே சம்மட்டியால அடிக்கிறமாதிரி இருக்குது. எவ்வளவோ காலத்துக்குப் பிறகு ஒரு விபரீதமான சந்தர்ப்பத்திலே சந்திச்ச நம்ப; இப்பவே இந்தக் கடலுக்கு முன்னாலேயே உங்க அம்மா சத்தியமா ஒரு உறுதி எடுத்துக்குவோம்.’ 

‘என்ன உறுதி கோபி?’ 

‘நம்ப ரெண்டு பேரும், வாழ்க்கையிலே சந்தர்ப்பவசத்தாலே வழுக்கி விழுந்த பெண்களையே கல்யாணம் பண்ணிக்கிறதுங்கிற உறுதி !’ இருவரும் கைகளை அழுத்திப் பிடித்துக் குலுக்கிக் கொண்டார்கள். 

ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டுக்கொண்டு அந்த மணலில் ஆடி அசைந்து நடந்து வந்த அவர்களை, நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்த அந்த ‘டாக்சி’ ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. 

‘இதுதான் நான் தங்கியிருக்கும் ஓட்டல்’ என்று எளிமையான ஒரு சிறிய கட்டிடத்தின் வாசலில் டாக்சியை காந்திதாசன் நிறுத்தச் சொன்னான். ‘ஓ, இந்த இடம்தானா? காலையில் வந்து நான் பார்க்கிறேன்’ என்று கூறிவிட்டு கோபிகிருஷ்ணா அதே டாக்சியில் புறப்பட ஆயத்தமான போது; காந்திதாசன் டாக்சி வாடகைக்கான பணத்தை எண்ணி எடுத்துக்கொண்டிருந்தான். 

‘நானே கொடுத்துவிடுகிறேன். நீ விடப்பா வண்டியை’ என்று கோபி கூறவே, டாக்சி கிளம்பிவிட்டது. 

ஓட்டலின் வரவேற்புப் பகுதியில் தூக்கக் கலக்கத்துடன் இருந்த துணை மானேஜர், “காந்திதாசன் சார்! உங்களுக்கு ஒரு தந்தி பம்பாயிலிருந்து வந்திருக்கு” என்று கூறிக் கொண்டே தந்தித் தாளைக் கையில் கொடுத்தார். தந்தியை வாங்கிப் படித்த காந்திதாசன் அந்த இடத்திலேயே தலை சுற்றி மயக்கமுற்றுக் கீழே சாயப் போனவனை துணை மானேஜர் தாங்கிப் பிடிக்கவே; அவர் போட்ட கூச்சலில் சிப்பந்திகள் ஓடிவந்து காந்திதாசனை ஆசுவாசப்படுத்தி அவனது அறைக்குக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர்.

‘சொர்ணாம்பிகை மாரடைப்பால் காலமானார். உடனே புறப்பட்டு வரவும்’. 

தந்தி கொடுத்திருப்பவர் பம்பாய் மாதுங்காவில் இருக்கும் டாக்டர் வைத்தியநாதன். 

காந்திதாசன் மறுநாள் காலையில் பம்பாய் புறப்படும் ரயிலில் கிளம்பி விட்டான். தாயின் கடைசி முக தரிசனம் காண்பதற்கு வருவதாக மாதுங்கா டாக்டர் வைத்தியநாதனுக்கும் தந்தி மூலம் செய்தி தெரிவித்துவிட்டான். 

மறுநாள் பிற்பகல் பமபாய் ரயில் நிலையம் அடைந்தவன், நேராக மாதுங்கா சென்று டாக்டர் வைத்தியநாதன் வீட்டு விலாசத்தை விசாரித்துக்கொண்டு அழுது வீங்கிய கண்களுடன் வீட்டுக்குள் நுழைந்தான். அங்கு அம்மாவின் பூத உடல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவனை வரவேற்ற வைத்தியநாதன், ‘உன் தாய் சொர்ணாம்பிகை என்னை மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டு, இந்த வீட்டு விலாசத்தைத்தான் உனக்குக் கொடுத்திருந்தாள். ஆனால் அவள் வசித்தது வேறு இடம்’ என்றவுடன் காந்திதாசன் முகம் ஆச்சரியத்தால் மாறியது. 

‘அப்படின்னா உங்களுக்கு எப்படி அம்மா அறிமுகம் ?’ 

‘அதுவா? வாரம் ஒருதடவை கிரேண்ட் ரோடு ரெட்லைட் ஏரியாவிலே இருக்கிற எல்லா பெண்களையும் டெஸ்ட் பண்ணி சர்ட்டிபிகேட் கொடுக்கிற டாக்டர்கள் லிஸ்டிலே நான் ஒருத்தன்! அப்பதான் உங்க அம்மா என்னை கெஞ்சிக் கேட்டு, நீ கடிதம் எழுதுறதுக்கு எங்க வீட்டு விலாசத்தைக் கொடுக்கச் சொன்னாள்’. 

தழுதழுத்தான் காந்திதாசன்! பேச முடியாமல் தத்தளித்தான்! 

‘அப்படின்னா எங்கம்மா இங்கே பாங்கிலே வேலை பார்த்தது?’. 

‘எந்த அம்மாவாவது தான் பாக்கிற இந்த வேலையை பெத்த மகனுகிட்டே பெருமையோட சொல்லிக்க முடியுமா ? சரி! சரி! உனக்காக உங்கம்மா பாடியை இன்னம் எடுக்காம வச்சிருக்காங்க – இந்தா விலாசம்! உடனே கிளம்பு’ 

என்றவாறு ஒரு தாளில், கிராண்டு ரோடு – சிவப்பு விளக்குப் பகுதியின் விலாசத்தை வீட்டு எண் உட்பட காந்திதாசனிடம் டாக்டர் வைத்தியனாதன் எழுதிக் கொடுத்தார். 

ஆகாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டுத் தடாகத்து நீரைச் சுத்தப்படுத்த முயற்சித்த அந்தத் தாய்மீனின் உடலைக் காண அவன் அங்கிருந்து நத்தையாக ஊர்ந்து சென்றான். 

– 16 கதையினிலே, முதற் பதிப்பு: டிசம்பர் 1995, திருமகள் நிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *