கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 4, 2025
பார்வையிட்டோர்: 1,653 
 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று எனக்கு வேலை இல்லை. கடலைப் பார்த்து வெகு நாளாகிவிட்டதே என்று தோன்றவும் புறப்பட் டேன். கிடைக்காத பொருளுக்காகப் பித்துப் பிடித்து ஏங்கிக் கரையோரம் வந்து மோதித் திரும்பும் கடலலை போன்ற வழக்கமான எண்ணங்கள் கூட அன்று நெஞ்சில் பொங்கவில்லை. மனம் சித்திரை மாதத்து ஆகாயம் போல் தெளிந்திருந்தது. மன திருந்த நிலையிலே வழி நெடுகிலும் தலைவிரித்தெழுந்த மாடமாளிகைகளோ குபேர பட்டணம் கொள்ளையோ, ஒரு பொருளாகத் தோன்றவில்லை. அவ்வளவு கும்பலான தெருக்களை எல்லாம் எப்படிக் கடந்தேன் என்று எனக்கே தெரியாது நாகரிகத்தின் சந்தை வாசலை விட்டு, அந்தப் பெரிய தோப்புக்குள் நுழைந்தபொழுதுதான் மனது தரை தட்டியது. 

தோப்பின் இரு புறத்திலும் இரண்டு பெரிய பஞ் சாலி மரங்கள் பூத்திருந்தன. பச்சை என்பதே தெரிய வில்லை. ஒரே வெறி பிடித்து, தீப்பற்றியது போல மரங்கள் பூத்திருந்தன. அவைகளுக் கப்பால் பேணுவா ரற்ற பாதையும் சவுக்கையும் இதர மரங்களும் அடர்ந் திருந்தன. மாலை மணி மூன்று தான் என்றாலும், தோப் புக்குள் அந்தி கவிந்திருந்தது. 

தோப்பை மிதித்ததும் கடலின் ஞாபகம் போய் விட்டது. சொந்த வீட்டுக்குத் திரும்பியது போன்ற ஒட்டு நெஞ்சில் படர்ந்தது. ஒரு மரத்தினடியில் உட்கார்ந் தேன். அமைதியான மனத்தில் அமுதமான நிறைவு புகுந்தது. இந்தப் பெருக்கில் எத்தனை நேரம் ஆழ்ந்தி ருந்தேன் என்று எனக்கே தெரியாது. பிறகு கண் திறந்தபொழுது எதிரே இருந்த மருத மரம் கவனத்தைக் கவர்ந்தது. கட்டு விரியனைப்போல் செதில் செதிலாகத் தோல் போர்த்த அடிமரமும், கொய்யா மரத்தைப் போன்ற வழவழப்பான கிளைகளும் மினுமினுப்பும் எந்த இடத்திலும் கவனத்தைக் கலைக்காமல் விடாது. ஒரு விநாடிக்குப் பிறகுதான் என் கவனத்தை மருதமரம் மட்டும் ஈர்க்கவில்லை என்ற உண்மை தெரிந்தது. கிளை யில் இரண்டு மணிப் புறாக்கள் உட்கார்ந்திருந்தன. 

இதற்கு முன்பு மணிப் புறாக்களைப் பார்த்திருக் கிறேன். எங்கென்றால், வேடன் கையில். பெரிய மூங் கில் தட்டைத் தொம்பைகளில் பலவகைக் குருவிகளை அடைத்துக் காவடி கட்டித் தூக்கிக் கொண்டு கடைத் தெருவில் போகும் வேடனைப் பார்த்திருக்கிறேன் அவன் கையில் கொத்தாக வக்காவோ மணிப்புறாவோ இல்லாமல் இருக்காது. வக்காவைக் கண்டு மனம் நெகிழ்ந்ததில்லை. ஆனால், மணிப்புறாக் கொத்தைக் கண்டபொழுதெல்லாம் நெஞ்சு நீராகிவிடும். வக்காவை அழகில் சேர்க்க முடியாது. ஆனால், மணிப்புறா அப்படி அல்லவே! தோப்பிலிருந்து குமுறிக்கொண்டு வரும் அதன் குரலினிமை எதோ ஒரு உலகத்துக் கல்லவா பட காகி ஓடுகிறது! அதனால் தானோ ?… 

நான் அவைகளைக் கவனித்தேனே ஒழிய, அவைகள் என்னைக் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் பறந்து போயிருக்கும். மணிப்புறாக்கள் காக்காய்களல்ல- கையைக் காட்டி ஓட்டினால்கூட அசைந்து கொடுத்து விட்டு, அதே இடத்தில் உட்கார்ந்திருக்க. கண்டால் பறந்துவிடும்-அவ்வளவு பயம்! நியாயம்தானே ! வாழும் உரிமையை மறுப்பவர்களிடம் கா தலா கொள்ள முடியும்?… 

பழுப்பு வர்ணமான உடலில் கறுப்புப் புள்ளிகள். இறகுகளின் ஓரம் கறுப்பு வரி. கறுப்புக் கயிறு கழுத்தில் கட்டியது போன்ற கோடு. கொஞ்சம் தட்டையான தலை நீண்ட உடல். குறுகிய கால்கள். எல்லாவற்றிற் கும் மேலாகக் கறுப்புப் பாசுமணியைப் போன்ற கண் கள். கண்களில் தான் என்ன நீரோட்டம்! அமைதிக் கும் அடக்கத்திற்கும் புகலிடமான கோயில்! 

அடக்கமாக ஒன்றுக்கொன்றின் அருகில் உட் கார்ந்து அவைகள் சிறகைக் கோதிக் கொண்டிருந்தன. உடம்பைச் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு மூக்கு போதும் என்று நினைக்கும் முட்டாள்கள் ! உடலின் ஒவ் வொரு பாகமாகக் கோதிக் கொண்டிருந்தன. சிறிது நேரத்திற்குள் ஒரு மணிப்புறா உடலைக் கோ துவதை நிறுத்திவிட்டுச் சிலிர்த்துக் கொண்டு, உடலை ஒரு தரம் சிலுப்பியது. சல்லி இறகுகள் பூப்போலக் காற்றில் மிதந்தன. மறு விநாடி அதன் உடல் பட்டுப்போல் அமர்ந்து விட்டது. 

அதற்குப் பிறகு, ஏதோ நினைவு வந்ததுபோல் அரு கிலிருந்த பிணையை அந்த மணிப்புறா நோக்கிற்று. காத லியின் அலங்காரம் முடிந்தபாடில்லை இன்னும் உடலைக் கோதிக் கொண்டிருந்தது. காதலியின் சிறகுகளைக் கோத ஆண் புறாவும் துவங்கிற்று. பெண் புறா தன் பாட்டில் மற்றொரு பக்கத்தைச் சீர்படுத்திக் கொண்டிருந் தது. உடல் செம்மையாகி விட்டதென் ற உணர்வெழுந் ததும் உடலைப் பெண் புறா சிலுப்பிக்கொண்டது. பஞ் சைப் போன்ற சல்லி இறகுகள் காற்றில் மிதந்தன. இரு மணிப்புறாக்களும் மணவறையில் அமர்ந்திருப்பது போல் கிளையின்மேல் அமரிக்கையாக உட்காந்திருந்த காட்சி தெவிட்டாத இன்பமாக இருந்தது. இன்பம் நீடிக்கக் கூடாது போலிருக்கிறது ? ஏனெனில் அடுத்த விநாடி ஒரு மணிப்புறா என்னைப் பார்த்துவிட்டு விறுக் கென்று பறந்துபோய்விட்டது. இணை பறந்ததும் மற்றொன்றும் பறந்து விட்டது. 

அதற்குமேல் என்னால் தோப்பில் இருக்க முடிய வில்லை. தோப்பு சடமாகிவிட்டது. உயிர் பறந்துவிட் டது. கடலைப் பற்றிய நினைப்பும் கடலலையின் ஓசையும் மனத்தில் மோதிக் கொண்டு எழுந்தன. கடலை நோக்கிப் புறப்பட்டேன். 

மெரினாவை வர்ணிக்க வேண்டியதில்லை, அது மோட்டார் கார் ராஜ்யம் ! ஜவுளிக் கடைக் கண்காட்சி: சிற்ப – ஓவிய -சினிமா! கலாசாரத்தின் அலங்கோலம்! அவற்றை எல்லாம் தாண்டிக் கடல் அலையை நோக்கி நேரே நடந்தேன். வழி நெடுகிலும் கிளிஞ்சல். கிளிஞ் சலைப் பொறுக்கினேன். ஒன்றைவிட மற்றொன்றின் வர்ணமும் நயமும் ஆசையைத் தூண்டின. சில கிளிஞ் சல்களைப் பொறுக்கி ஒரு இடத்தில் வைத்துவிட்டு, அலைகளண்டை சென்றேன். அலைகள் பரவித் திரும்பும் மணலில் கால்கள் பதிந்தன. மேய வந்த சிவப்பு நண்டு கள் காலடி ஓசையைக் கேட்டு நடுங்கி வளைகளுக்குள் புகுந்தன. சிறிது நேரம் அலைத் தண்ணீர் காலைக் கழுவ நின்றுவிட்டு, கிளிஞ்சலைப் பொறுக்கி வைத்திருந்த இடத்திற்குத் திரும்பினேன். 

கிளிஞ்சலைப் பொறுக்குவதென்று என்ன ஆசை? இன்னும் குழந்தையா என்ன ? ஒருக்கால் மனத்திற்கு ஏதேனும் குருட்டு வேட்கை இருக்கிறதோ என்னவோ ! சம்பாதிப்பதும் செலவழிப்பதும் என்னும் சகடத்தில் சிக்கி, வேதனை என்னும் மிச்சத்தைச் சேமிக்காமல் நிலை யான அழகையும் மெய்யையும் காணும் மர்மமான மோகம் இதுவோ என்னவோ ! கீழே கிளிஞ்சல் ! மேலே மேகங்கள் ! எதிரே கண்ணாடிச் சுவர்கள் சரிந்து விழு வது போன்ற அலைகள் ! விளையாட்டு என்பதுதான் உண்மையான வினையோ? 

இப்படி ஏதோ எண்ணிக் கொண்டிருக்கும்பொழுது, பக்கத்தில் பேச்சுக் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். மேல்நாட்டு முறையில் உடை உடுத்தி இருந்த ஒரு இளைஞர் உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் பஞ்சாலி மரம் பளிச்சென்று எரிவது போல், ஒரு யுவதி சினிமாப் பாணியில் படுத்திருந்தாள். எல்லாமே சிவப்பு-உதடும் விரல் நுனிகளும் உள்பட ! 

‘நாளைக்கே மாற்றிவிட வேண்டும்’ என்று அழுத்த மாகக் கூறினாள் அந்த யுவதி. 

‘எதை?’ என்றது ஆண் குரல். 

கொஞ்ச நேரமாக அவர்கள் பேசிக்கொண்டு இருந் திருப்பார்கள் போல் தோன்றிற்று. 

‘அப்பொழுதே சொன்னேனே, கவனிக்கவில்லையா? ஏன் கவனிக்கப் போகிறீர்கள்?’ 

‘கோபம் செய்யாதே!’ 

‘இப்பொழுதாவது-அதோ பாருங்கள்.’ பெண் சுட்டிக் காட்டிய திசையில் நாகரிகத் தம்பதிகள் போய்க் கொண்டிருந்தனர். 

‘பார்த்தீர்களா?’ 

‘அடுத்த தெரு சுசீலா அசட்டுடன் போய்க்கொண் டிருக்கிறாள். பிற ஸ்திரீகளைப் பார்ப்பது ஒரு வேலையா?’ 

‘அந்த வேலையை நானில்லாதபோது செய்யலாம். அவள் வண்டியை மாற்றிப் புது வண்டி வாங்கிவிட்டாள்.’ 

‘அவன் ஒரு அசடு. அந்த வண்டியை நமக்குப் பிறகுதானே வாங்கினான்? அவள் உத்தரவிட்டதற்காக மாற்றிவிட்டான் என்று சொல்ல வருகிறாயா!’ 

‘இல்லை, இல்லை. அவர் ஒரு அசடு. நீங்கள் ஒரு…. ‘

‘பைத்யங்கள் எதை வேண்டுமானாலும் செய்யும்’

‘நாம் பைத்யங்களா?’ 

‘பின் என்னவாம்? நேற்று கிளப்பில் சுசீலாவின் பக்கத்தில் இருந்த கோடி வீட்டுக்காரி அவசர அவசர மாக நான் உட்கார்ந்திருந்த சோபாவுக்கு வந்தாள். பழக் கூடையை விற்கப் போகிறாயாமே? என்று கேட் டாள். எனக்குப் புரியவில்லை. பழக் கூடை 

என்றால் தெரியாதா – ஐந்தறைப் பெட்டி என்றாள். அப்பொழுது தான் நம்முடைய மோட்டாரைப் பற்றிக் குறிப்பிடு கிறாள் என்பது பளிச்சிட்டது நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகவேண்டும் போலிருந்தது. 

‘உனக்கு ஹாஸ்யம் பிடிக்காது என்று அவளுக்குத் தெரிந்திருக்காது.’ 

‘ஹாஸ்யமென்றால் எனக்கு நன்றாய்த் தெரியும். கசப்பான உண்மையைத் தமாஷான சர்க்கரையில் புரட்டி எடுத்து மாத்திரையாக உருட்டிவிடுவது.’ 

‘சரி போகட்டும்… அதற்காக?’ 

‘நாளைக்கே வண்டியை மாற்றிவிட வேண்டும். கௌரவம் போன பிறகு இருந்தாலும் ஒன்றுதான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.’ 

‘அதற்குப் பணம் வேண்டாமா?’ 

‘இந்தத் தகர டப்பாவில் இனி நான் வரமாட்டேன். புதுக் கார் வாங்கினால் சரி; இல்லாவிட்டால் மரவட்டை மாதிரி சுருட்டிக்கொண்டு வீட்டில் கிடக்கிறேன்.’ 

‘இந்தக் கார் வாங்கி ஒன்பது மாதம்கூட ஆகவில்லையே? யாரோ ஏதோ சொன்னாள் என்பதற்காக.’ 

யுவதி அதற்குமேல் பேசவில்லை. அதுவரை மண லில் படுத்திருந்தவள், எழுந்திருந்து கணவனுக்கு முதுகைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்தாள். அவள் முகத்தருகில் போய்க் கணவன் ஏதோ சொல்ல முயன்றான். 

என் காதில் அது ஒன்றும் விழவில்லை. மணிப்புறா வையும் கடற்காற்றையும் ஏற்ற என் மனக் கிளை, இப் பொழுது முறிந்துவிட்டது. மறுகணம் அந்த யுவதி விருட்டென்று எழுந்து ரஸ்தாவை நோக்கிக் கிளம்பி விட்டாள். அவள் போன வேகத்தைக் கோபம் என்று கடல் மணல் பதிவு செய்துகொண்டே போயிற்று. மணிப்புறாக்களும் பறந்து சென்றன. இவர்களும் பறந்து விட்டனர். ஆனால்… 

வீடு திரும்புவதற்காக வந்து பஸ்ஸில் ஏறினேன். மாறுபட்ட காட்சிகளைக் கண்டு முறிந்த மனக் கிளை, ஊசலாடிக் கொண்டிருந்தது. பஸ்ஸில் ஏறிய பிறகு அடுத்த நிற்கும் இடம் வந்தது. யாரோ ஏறினார்கள். மறுபடியும் புறப்படும் சமயம். அரைச் சக்கரம் உருண்டு விட்டது. 

‘இரு இரு’ என்று வண்டிக்குள் இருந்து பல குரல்கள் எழுந்தன. மோட்டார் ஓட்டி வண்டியை நிறுத்தினான். யாரோ இருவர் வண்டி ஏறுவதற்காகத்தான் தாமதப்படுத்தினார்கள் என்ற உண்மை, பக்கத்துச் சீட்டில் இருவர் வந்து உட்கார்ந்தபோதுதான் தெரிந்தது. 

‘மெதுவா, மெதுவா’ என்றது ஆண்குரல் ஈனமான சுரத்தில். ஆளைப் பிடித்துக்கொண்டே ஒரு ஸ்திரீ தள் ளாடிக் கொண்டே வந்தாள். இருவரும் இடத்தில் அமர்ந்த பிறகுதான் கவனித்தேன். 

ஆண்பிள்ளைக்கு முப்பது வயதிருக்கலாம். எண்ணெய் காணாத கிராப். கொத்தவரைக்காய் போன்ற உடல் பழுப்படைந்த வேஷ்டி. அதெல்லாம் கூடப் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. அந்த முகம் ! முகத்தில் முற்றிய நோயின் களை ! பார்க்கவே பயமாக இருந்தது. நிமிஷத்திற்கு ஒரு தரம் முகத்தின் தசைநார் கள் ஏதோ வேதனையில் சுழித்து நெளிந்தன. என்ன கோளாறோ? 

அடுத்தாற்போல் அந்த ஸ்திரீயைப் பார்த்தேன். யாருக்கு நோய் அதிகம் என்று சொல்லக்கூடவில்லை. சுரத்தின் களை சொட்டிக் கொண்டிருந்தது. இயற்கை தந்த வனப்பெல்லாம் வாழ்வின் வறண்ட காற்றில் உலர்ந்திருந்தது. ‘மெதுவாக மெதுவாக’ என்று கண வன் சொன்னதில் பிசகொன்றும் இல்லை. 

இவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த பொழுதே கண்டக்டர் ஊதிவிட்டான். வண்டி நகர ஆரம்பித்த வுடன், அந்த ஸ்திரீ செய்ததுதான் எனக்கு வியப்பாக இருந்தது, கணவனுக்கு ஆதரவு தேவை என்ற நினைப் பில், தனது வலது கையால் கணவனை அரவணைத்துக் கொண்டாள். வண்டி அசைவதினால் அவனுக்கு வேதனை அதிகப்பட்டுவிடக் கூடாதல்லவா? ‘மெது வாக’ என்று அவளுடைய நிலைக்குப் பரிந்துகொண்டு கணவன் சொல்லிவிட்டதனால் என்ன ? சுவர் இருந்தால் தானே சித்திரம் மினுக்கும் ? கணவனை அரவணைத்துக் கொண்டு நிமிஷத்திற்கொருதரம் அவள் பார்த்த பார் வையை என்னால் மறக்கவே முடியாது. முறிந்து ஊச லாடிக் கொண்டிருந்த மனது வெள்ளம் வடிந்த நாணலைப் போல் தலை தூக்கிற்று. 

ஆஸ்பத்திரிக்கருகில், பஸ் நிற்கும் இடம் வரையில், அரவணைக்கும் கையை அவள் எடுக்கவே இல்லை. அந்த ஆதரவில் அவன் கண்ணை மூடிக்கொண்டே வந்தான். ஆனால், எனக்குமட்டும் ஒன்று தெரிந்தது. ஸ்திரீ மூச்சு விடும்போதெல்லாம் சூடான துர்நாற்றம் ஒன்று என்வரையில் எட்டிற்று. இவள் நோய்வாய்ப்பட்டதற்காகக் கணவன் இவளை அரவணைத்துக்கொண்டு வந்திருந்தாலும் பொருத்தமாகத்தான் இருந்திருக்கும். அப்பொழுதும் இதே மன நிறைவைக் கண்டிருப்பேன்! 

ஆஸ்பத்திரியண்டை நிற்கும் இடம் வந்ததும் ஒரு வர் கையை மற்றவர் பிடித்துக்கொண்டு, நிதானமாக இறங்கினார்கள். நான் அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். 

– பிச்சமூர்த்தியின் கதைகள்‌, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1960, ஸ்டார்‌ பிரசுரம்‌, சென்னை.

ந.பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *