காணாமல் போன சங்கிலி!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கோகுலம்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 28, 2025
பார்வையிட்டோர்: 117 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கம்ப்யூட்டர் கதை கூடச் சொல்லுமா?” என்று வாயைப் பிளந்தான் சேகர்.

“கதை மட்டுமென்ன? பாட்டும் பாடுமாக்கும்” என்று தன் பர்சனல் கம்ப்யூட்டரின் பெருமை பிடிபடாமல் புன்முறுவலாக நின்றார் சாம்பு மாமா.

“நல்ல கதையா மாமா?” என்று ஆவல் உந்த, சேகர் கேட்டே விட்டான்.

“மொதல்ல நான் சொல்றதைக் கவனமாக் கேட்டுக்கோ!” – அப்பளம் நொறுக்கிய மாதிரி ‘நறுக்’கென்று ஆரம்பித்தார் மாமா.

“இந்தக் கம்ப்யூட்டரில் ‘மெனு’ கேட்பது முதல் ‘ரிடர்ன்’ ‘கீ’யை அமுக்குவது வரை ரொம்பச் சுலபம். ஆனால், ஒவ்வொரு கதை முடிந்ததும் கம்ப்யூட்டர், வேதாளம் மாதிரி ஒரு கேள்வி கேட்கும். சரியான பதில் சொன்னால் ‘தாங்க்ஸ்’ சொல்லிவிட்டு மௌனமாகிவிடும்.

“தப்பானால்?” என்றான் சேகர்.

“தப்பாச் சொல்லிப் பாரேன். கம்ப்யூட்டர் என்ன பண்ணும் என்று!” எனச் சொல்லிவிட்டு நகர்ந்தார் மாமா.


மாமா சொன்ன குறிப்புகளின்படி சேகர் கம்ப்யூட்டரின் மௌனத்தைக் கலைத்து, அதை ஒரு கதை சொல்லச் சொன்னான்.

கம்ப்யூட்டர் கதையைத் தொடங்கியது.

“பைஜுவும், ஜில்லியும் நல்ல நண்பர்கள். இரண்டு பேரும் ஒரே வகுப்பில் படித்து வந்தார்கள்.

பைஜுவின் பிறந்தநாள் வந்தது. புது உடைகளை அணிந்து, வகுப்பில் எல்லோருக்கும் பிறந்தநாள் இனிப்பு வழங்கினான்.

மறுநாள் காலை… பள்ளி வகுப்பு அறை.

பைஜுவின் தந்தை, பைஜுவுடன் நின்று கொண்டிருந்தார். பைஜு அழுது கொண்டிருந்தான்.

முந்திய நாள் பைஜு பள்ளிக்குப் போட்டுவந்த தங்கச் சங்கிலியைக் காணோமாம்!

“சங்கிலி காணோம்ங்கிறது எப்போ தெரிந்தது?” – பைஜுவிடம் பள்ளி வாட்ச்மேன் கேட்ட கேள்விக்குச் சரியான பதில் பைஜுவிட மிருந்து வருவதாக இல்லை.

டீச்சர் வந்ததும் வராததுமாகப் பிரச்னையைப் போட்டு உடைத்தார் பைஜுவின் தந்தை.

“விசாரிக்கிறேன்” என்று டீச்சர், அன்றைக்கு ‘யார் வரவில்லை’ என்று நோட்டம் விட்டார்.

ஜில்லியைக் காணோம்!

கொஞ்ச நேரம் சென்றதும், வகுப்பில் சின்னச் சலசலப்பு. வாசலில் ஜில்லி! அம்மாவுடன் – அவள் முகத்தில் கொஞ்சம் வாட்டம்!

டீச்சர் நிலைமையைப் புரிந்து கொண்டார். ”என்னப்பா ஜில்லி?”

ஜில்லி பதில் சொல்வதற்குள், ”டீச்சர்! ஒரு சின்னத் தவறு நடந்து விட்டது. பைஜுவின் தங்கச் சங்கிலியை ஜில்லியின் பையில் பார்த்தேன். விசாரித்ததில், ‘ஆசையாக இருந்தது. எடுத்துக் கொண்டு வந்தேன்’ என்றான் இவன். உங்களிடமும் சொல்லிவிட்டு, பைஜுவின் பெற்றோரிடமும் நேரில் மன்னிப்புக் கேட்கலாமென்று நானே வந்தேன்” என்றாள் ஜில்லியின் அம்மா.

பைஜுவின் அப்பாவும், “சங்கிலிதான் கெடைச்சிடுச்சே! ஜில்லி! இனிமே இந்த மாதிரி செய்யக் கூடாது. பிறத்தியார் சொத்துக்கு ஆசைப் படக் கூடாது. திருடன்னு பேர் வாங்கப் படாது” என்று சொல்லிவிட்டு நடந்தார்.

டீச்சரும், ஜில்லியின் அம்மாவும் அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

கதையை முடித்து விட்டதாக அறிவித்து, கம்ப்யூட்டர் கேள்வி கேட்டது.

“இந்தக் கதையில் உண்மையான குற்றவாளி யார்?”

தொடர்ந்து இரண்டாவது கேள்வியையும் போட்டது.

“டீச்சர், ஜில்லி, ஜில்லியின் அம்மா, பைஜுவின் அப்பா இவர்களில் யார் சிறந்தவர்கள்? ஏன்?”

சேகர் யோசனை செய்தான்.

“முதல் கேள்விக்குப் பதில் –

பைஜுவின் பெற்றோர்தான். பள்ளிக்கூடம் படிக்கும் பையனுக்கு, தங்கச் சங்கிலியெல்லாம் போட்டு அனுப்புவது தப்பு. அடுத்தவருடைய ஆசைகளைத் தூண்டிவிடும் போது, தன்னுடைய சொத்தைப் பாதுகாக்கும் அளவிற்கு, பைஜுவிற்கு விவரம் தெரியாது. இதில் பைஜுவின் பெற்றோர் மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும்.”

சேகர் தொடர்ந்தான் :

“இரண்டாம் கேள்விக்குப் பதில் –

ஜில்லிதான். தான் செய்த தவறை மறைத்துப் பொய் சொல்லாமல், “ஆசையாக இருந்ததால் எடுத்தேன்” என்று நேர்மையாக அம்மாவிடம் ஒப்புக் கொண்டது மிகப் பெரிய செயல். இம்மாதிரி ஒரு தவறை ஒப்புக் கொள்ள நல்ல மனத் துணிவு தேவை. ஒருதவறை மறைக்க இன்னொரு பொய் சொல்லாமல், குற்றத்தை ஒப்புக் கொண்டதோடு, அதை எதற்காகச் செய்தோம் என்பதையும் கூறியிருக்கிறானே! சந்தேகம் இல்லை. ஜில்லி சிறந்தவன் தான்!”

சேகரின் பதில்களால் கம்ப்யூட்டர் திருப்தியடைந்தது போலும்! கலர் கலராக வணக்கம்! நன்றி எல்லாம் சொல்லிவிட்டுத் திடீரென்று வெளிறி விடைபெற்றது.

சேகர் வேறு வேலைகளில் ஈடுபடலானான்.

– கோகுலம், ஆகஸ்ட் 1992.

என்.சந்திரசேகரன் சந்திரசேகரன் (நரசிம்மன்) அவர்கள் புகழ்பெற்ற தென்னிந்திய இந்து பிராமண வழக்கறிஞர்கள் குடும்பத்தில் அரியலூரில் பிறந்தார். மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம்(1976) பெற்று சமூக விஞ்ஞானி ஆவதற்குத் தொடர்ந்தார். கல்லூரியின் சிறந்த ஆல்ரவுண்ட் மாணவருக்கான டாக்டர்.எம்.நஞ்சுண்டராவ் தங்கப் பதக்கம் வென்றார். பார்வை: நான் என்னை ஒரு தலைவர், வழிகாட்டி, ஆலோசகர், வழி கண்டுபிடிப்பாளர், பிரச்சனை தீர்வு காண்பவர், பேச்சுவார்த்தை நடத்துபவர், ஆராய்ச்சியாளர், பொருளாதார…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *