காட்சிப்பிழை
நான் இண்டைக்கு என்ர அம்மா, அப்பா, தங்கச்சியோட இருந்த இடத்தை விட்டு காலி பண்ணி போறன். இப்பிடி இடம் விட்டு இடம் மாறுறது எங்களுக்கு வழக்கமானது தான். ஆனா இந்த தடவை எங்களோட நிறைய அயல் வீட்டாரும் வாறாங்க.
நாங்க இருந்த இடத்துல திடீரெண்டு நிறைய பேர் சாக துவங்கிட்டாங்க. இரவு நேரத்தில பயங்கரமா வெடி சத்தம் கேக்குது. அதான் ஒரு புது இடத்தை தேடி நாங்க எல்லோரும் போறம். நான் இப்ப கிட்டடியில தான் பிறந்தன். எங்கட அப்பா எங்களுக்கு ஒரு புது இடம் பாத்து இருக்கார். நாங்க எல்லாரும் அங்க தான் இனி இருக்க போறம்.
காலையிலேயே நாங்க எல்லாரும் பயணத்தை துவங்கினதால இன்னும் யாரும் சாப்பிட இல்ல. இப்ப இருட்ட போகுது. இங்க பக்கத்தில ஒரு இடம் இருக்குதாம், அங்கேயே இரவு சாப்பிட்டு காலையில போகலாம் எண்டு பக்கத்துக்கு வீட்டு மாமா அப்பாவிட்ட சொல்லுறது எண்ட காதுல கேக்குது.
ஒரு மாதிரி அப்பா எங்களுக்கு இண்டைக்கு இரவு தங்கிறதுக்கு ஒரு தற்காலிக இடம் ஏற்பாடு பண்ணிட்டார். எங்களுக்கு சாப்பாடு இருக்கா எண்டு பார்க்க அப்பா கிளம்பிட்டார். என்ர தங்கச்சி நித்திரை ஆயிட்டு. நானும் என்ர அம்மாவும் அப்பா எப்ப வருவார் எண்டு காத்து கொண்டு இருக்கம்.
திடீரெண்டு எங்கன்ர ஊருல கேட்ட வெடி சத்தம் மாதிரி பயங்கரமா இங்கயும் கேக்குது. எங்களுக்கு பயம் நல்லா புடிச்சிட்டு, அப்பாவுக்கு என்ன ஆச்சோ எண்டு. அம்மா சொன்னா அப்பிடி எல்லாம் இருக்காது, அப்பா பத்திரமா திரும்பி வருவார் எண்டு.
ஆனா நேரம் ஆக ஆக எங்களுக்கு நம்பிக்கை இல்லாம போயிட்டு. அந்த நேரம் பாத்து பக்கத்துக்கு வீட்டு மாமா வந்து, எங்கட அப்பா தூரத்தில எங்கயோ இறந்து கிடக்கிறார். இனி இங்கயும் ஆபத்து வர வாய்ப்பிருக்கு எண்டு என்ர அம்மவிட்ட சொல்லிட்டு போயிட்டார். அம்மா என்னையும் தங்கச்சியையும் காப்பாத்துறதுக்காக இந்த இடத்தை காலி பண்ண போறம் எண்டு சொல்லுறா.
நான் சொன்னன் “அம்மா, என்னால நிறைய தூரம் பயணம் செய்ய முடியாது எனக்கு பசிக்குது “. அம்மா சொன்னா “நீ இங்கயே இரு நான் ஏதும் ஆட்கள் இருக்காங்களா சாப்பாடு எடுக்க எண்டு பாத்திட்டு வாறன், அம்மா திரும்பி வரும் வரைக்கும் கவனமா இங்கயே இரு”.
நான் என்ர தங்கச்சிய பாத்தன், தங்கச்சி தூங்கிட்டு, அவளுக்கும் உடம்பு முடியல போல. அம்மா திரும்பி வந்திட்டா. அம்மா சொன்னா “இப்ப தான் ஒரு ஆள் வந்திருக்கான் பக்கத்தில தான். நிலைமையும் சாதகமா இருக்கு. போய் டக்கென்று சாப்பிட்டு திரும்பி வரலாம், அப்புறமா நான் வந்து தங்கச்சியையும் கூட்டி போறன், இண்டைக்கு ஜாமத்திலேயே வேற இடம் மாறுவம்”. நானும் அம்மாவும் அந்த ஆள தேடி போயிட்டு இருக்கம்.
ஆள பாத்தாச்சு. இந்த நேரத்துல மல்லாக்கா படுத்து கிடந்தான். அம்மா சொன்னா “மறைவா போவம், அப்ப தான் பாதுகாப்பா சாப்பாடு எடுக்கலாம்” எண்டு. ஒரு மாதிரி மறைவா போய், எங்களுக்கே எண்டு இருக்கிற ஸ்ட்ரோவை (straw) போட்டு, இப்ப சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம்.
திடீரெண்டு அம்மா சொன்னா “ஆபத்து, அவன் நாங்க சாப்பிடுறத பாத்திட்டான், உடனே வெளிக்கிடு” எண்டு. நானும் சாப்பாடை உறிஞ்சுறத நிப்பாட்டிட்டு வெளிக்கிட்டன். அம்மாவும் நானும் கிளம்பும் போது ஒரு முரட்டு கை வந்து என்னை தூரமா காத்துல தள்ளி விட்டிச்சு. பக்கத்துல பாத்தா அம்மாவை காணல. எங்கேயுமே காணல. நான் பயத்துல எங்க போறது எண்டு தெரியாம எங்கயோ போறன். திரும்பி அந்த முரட்டு கை வந்து என்ன பிடிச்சிட்டு. இந்த முறை என்னை நசுக்கிட்டு, நான் நசுங்கி போனன். அம்மாவுக்கு என்ன நடந்திச்சு எண்டு தெரியல, என்ர தங்கச்சிக்கு என்ன நடக்க போகுது எண்டும் தெரியல. நான் கொஞ்சம் கொஞ்சமா மயங்குறன். என்னை நசுக்கினவன் சொல்றது எண்ட காதில கேக்குது “டேய் , இங்க நுளம்பு அதிகமா இருக்குடா, அந்த நுளம்பு பேட் (Bat) ஐ கொண்டு வாங்கடா”. எனக்கு அதோட அர்த்தம் புரியல. யாரு நுளம்பு? எது நுளம்பு பேட் (Bat)? எனக்கு கொஞ்சம் கொஞ்சமா கண்கள் மூடுது.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: February 18, 2026
பார்வையிட்டோர்: 542