கன்னிகையோ காணிக்கையோ?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 11, 2025
பார்வையிட்டோர்: 66 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பரன்சேர்வழி கொங்கு நாட்டில் நடுமத்தியில் உள்ள ஒரு ப பண்டைக் காலத்திய சிறு ஊர். ஊரைச் சுற்றிலும் சோளம், கம்பு, இராகி, புகையிலை, மிளகாய் முதலிய புன்செய்த் தானியங்கள் விளையக்கூடிய நிலங்கள் பரந்துகிடக்கும். ஊருக்கு அடுத்து ஒரு சிறு ஓடை ஓடுகின்றது அதில் மழைக்காலத்தில் பெரு வெள்ளம் வரும். அதில் அடித்துக்கொண்டு வரும் வண்டல் நீர் அடுத்த புன்செய் நிலங்களில் பாய்ந்து அவைகளுக்கு நல்ல உரம் கொடுக்கும். அவ்வோடைக்கு அடுத்தாற்போல் அதன் கரையில் ஒரு சிவாலயமும் பெருமாள் கோயிலும் உண்டு. அவைகளை அண்டிப் பிழைக்கும் இரண்டு மூன்று பிராமணக் குடும்பங்கள் உண்டு. பரம்பரையாகச் சிவாலயத்தில் ஒரு குருக்களும் பெருமாள் கோயிலில் பட்டாச்சாரியாரும் இருந்துவருகிறார்கள். இக்குடும்பங்களில் முன் இருந்த அர்ச்சகர்களில் இருவர் ஒன்று சேர்ந்து இவ்வூருக்கு ஒரு புராணமும் பாடி வைத்துள்ளார்கள். அதன்படி இவ்வோடை உபேந்திர நதி என்ற ஒரு திவ்ய நதி என்றும், அதில் ஸ்நானம் செய்து பரனைச் சேரும் வழியைக் கண்டுகொண்டான் என்றும், அதனாலே இவ்வூருக்குப் பரன்சேர்வழி என்ற திருநாமம் வந்ததென்றும் முதலான வரலாறுகள் அதில் எழுதப்பெற்றுள்ளனவாம். இவ்விருத்தாந்தத்தைக் கூறும் அர்ச்சகர்களோ அப்புராணப் பிரதியை மட்டும் யாருக்கும் தருவதில்லை. மகா மகோபாத்தியாயர் களெல்லாம் ஏடுகளைத் தேடுவதற்காக, அந்த ஊர் சென்றபோது அதனைத்தராது சாக்குச் சொன்ன அர்ச்சகர்கள் அதனை நமக்குக் கொடுப்பார்களா? ஆனால் அவ்வரலாற்றில் முழு நம்பிக்கையும் அவ்வூர் வேளாளர்களுக்கு உண்டு. மிகுந்த பயபக்தியுடன் அவர்கள் அக்கதையைக் கேட்டுவிட்டு அபிஷேகாதிகளைச் செய்துவிட்டு, காணிக்கைகளைச் செலுத்திப் பிறகு பெருமையுடன் வீடு செல்வார்கள். அப்படியானால் அவ்வாலயங்களில் வழிபாடு செய்யும் அர்ச்சகர்களுக்கு என்ன குறை? பெருமாள்கோயில் பட்டாச்சாரியார் பெயர் கோபாலையங்கார். அவர் பிரபந்தம் வாசித்திருக்காவிட்டாலும் கர்ண பரம்பரையாக “ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று ஒரு பாசுரம் கம்பீரமாகச் சொல்லுவார். அர்ச்சனை செய்யும்போது 108 திரு நாமங்களிலே 25-வது சொல்லுவார். உச்சரிப்பு சிறிது பிசகிச் சொன்னால் அது கொங்குநாடுதானே என்று விடை கூறிவிடலாம் அல்லவா? 

கோபாலையங்காருக்கு நல்ல வரும்படி உண்டு. கௌண்டன்மார் மாத்திரமேயன்றி அருகில் கரிசல் நிலங்களில் பருத்தியைப் பொன்னாக்கும் கம்மவார் நாயக்கன்மார்களும் அவரிடம் மிகுந்த விசுவாசம் வைத்துக் காணிக்கைகள் தருவார்கள். அவர் மிகுந்த பயபக்தியோடு பூசை செய்து காட்டுவார். உடம்பில் துவாதச நாமங்களில் ஒன்றும் குறையாது பட்டைபட்டையாக விளங்கும். அவர் திருமேனியைக் கண்ட சிலர் அவர் ‘அபிநவ பாஷ்யகாரர்’ என்றுகூடக் கூறுவார்களாம். கோபாலையங்காருக்குப் பாவம், ஒரே ஒரு பெண் குழந்தை. பல குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன. திருப்பதி வெங்கடேசுவரப் பெருமாளிடம் ஆணை வைத்து ஒரு உண்டியல் கட்டிவைத்தார். ஆண் குழந்தை பிறந்ததும் அவ்வுண்டியலை முடியுடன் ஏழுமலையானுக்குச் சமர்ப்பிப்பதாகக் கோரிக்கைக் கொண்டார். உண்டியலும் நாளுக்குநாள் நிர்ம்பிக்கொண்டே வந்தது. அது பூசையறையில் வைக்கப்பட்டிருந்தது. பூசை ஆனவுடன் நாடோறும் அதில் ஒரு தம்பிடிக் காசு விழும். அதில் காசு பெருகப் பெருகத் தம் பத்தினிக்கும் திருவயிறு வாய்க்கும் என்று நம்பி வந்தார். 

கோபாலையங்கார் திருமகள் பெயர் கமலாவதி; மிகுந்த வனப்புள்ளவள்; தவிர, புத்திசாலி, வெகு நல்ல சாரீரம் அழகாக பாடுவாள். அவ்வூர் ஸ்தல ஸ்தாபன (ஜில்லா போர்டு)ப் பாடசாலையில் 4-வது வகுப்பில் வாசித்துக் கொண்டிருந்தாள். ஜில்லாக் கல்விச் சங்கத்தார் பார்வையில் அது இருந்தது. கடவுள் வணக்கம் தினந்தோறும் தொடக்கத்தில் சொல்லவேண்டுமென்று அவர்கள் உத்தரவு விட்டிருந்தார்கள். அதற்காகக் கடவுள் வணக்கச் செய்யுட்கள் என்ற சிறு நூலை வாங்கி உபாத்தியாயர் அப்பாட சாலைச் சிறுவர் சிறுமிகளுக்குப் பாடக்கற்றுக்கொடுத்திருந்தார். கமலமோ அந்நூலிலிருந்து தேவாரம் மட்டுமன்றிப் பிரபந்தப் பாக்களையும், நன்றாகப் பாடுவாள். ‘பட்டி மேய்ந்தோர் காரேறு’ ‘வாரணமாயிரம்’ என்ற பாடல்களைப் பாடும்போது, பிரம்புத்தடிப் பெருமாள் வாத்தியாரும் உருகிவிடுவார் என்றால் நான் அதிகம் கூறவேண்டியதில்லை. அவளுடைய அழகிய கானத்தைக் கேட்டுச் செவிமடுத்த வாத்தியார் அவளையே தினந்தோறும் பாடும்படிக் கட்டளை இட்டார். 

ஒருநாள் காலையில் பாடசாலை கூடிற்று. எப்போதும் போலவே பெருமாள் வாத்தியார் பிள்ளைகளை ‘நில்’ என்றார். எல்லாரும். நின்றார்கள். கமலம் பாடு’ என்று கத்தினார். பாட்டு எழும்பவில்லை. நிசப்தமாக இருந்தது. வாத்தியார் ஆச்சரியத்துடன் கமலம் சாதாரணமாக நிற்கும் இடத்தை நோக்கினார். கமலம் காணோம். அடுத்த குழந்தை, “கமலம் இன்று வரவில்லை சார் ! என்றது. ”ஏன்?” என்றார். அவரது பிரம்புத்தடியைக் கண்ட பிள்ளைகள் நடுக்கத்தினால் ஒன்றும் கூறாமல் நின்றார்கள். மறுபடியும் “ஏன் வரவில்லை? யார் அடுத்த வீட்டுப் பயல்? என்று கத்தினார். ஒரு பையன் தைரியமாய், நான் வரும்போது அவள் வீடு சாத்தி இருந்தது சார்! என்றான். என்ன செய்வார் உபாத்தியார்? வேறு ஒரு பையனைப் பாடச் சொல்லிவிட்டுப் பாடம் தொடங்கினார். அடுத்த இரண்டு மூன்று நாட்கள் பார்த்தார். கமலம் வரவில்லை. பிரம்புப் பிரயோகம் அதிகமாகச் செய்து வந்தவராக இருந்தாலும் உபாத்தியாருக்கு நல்ல குழந்தைகளின்மீது உண்மையான பிரியம் உண்டு. கமலத்தைப் பெற்ற தகப்பனைவிட அதிகமாகப் பிரியம் வைத்திருந்தார். கமலம் பாடசாலைக்கு வாராதிருக்கவே அவருக்கு ஏதோ ஒரு விலையுயர்ந்த பொருளை இழந்தாற்போலத் தோன்றிற்று “ஏன் வரவில்லை?’ என்று விசாரித்தார். கோபாலையங்கார் ஆலயத்திற்கும் சரியாய் வருவதில்லை என்றும், அவர் மனைவி அசௌகரியமாய்ப் படுத்திருக்கிறாள் என்றும் தெரியவந்தது. ஆனால் கமலத்தைப் பற்றி ஒரு துப்பும் கிடைக்கவில்லை. கமலம் வீட்டில் இல்லை என்று மாத்திரம் தெரிந்தது. ஆனால் ஐயங்காரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வழியில்லாமல் இருந்தது. 

சிலநாள்களில் பாடசாலைப் பரீஷாதிகாரி வருவதாகத் தகவல் வந்தது. அப்போதுதான் நல்ல பிள்ளைகள் இருந்தால் தமக்கு நல்ல பேர் வரும் என்பது உபாத்தியாயரின் எண்ணம். எப்படியாவது கமலத்தை வரச்செய்து. பரீஷாதிகாரி முன்னிலையில் பாடச் செய்துவைக்கவேண்டும் என்பது உபாத்தியாயரின் கருத்து. உடனே தாமே ஐயங்கார் வீட்டிற்குச் சென்றார். “கோபால ஐயங்கார் சுவாமிகள் !” என்று உரக்கக் கூப்பிட்டார். 

”யாரது?” என்ற சப்தம் உள்ளிருந்து கேட்டது “நான்தான் பெருமாள், பாடசாலை உபாத்தியாயர்” 

“என்ன வேண்டும்?” 

“நாளைப் பரீட்சை. உங்கள் குழந்தை கமலத்தைப் பாடசாலைக்கு அனுப்புங்கள். அதற்காக நானே நேரில் வந்திருக்கிறேன். அவள் வராவிட்டால் அதிகாரி கோபித்துக்கொள்வார்.” 

“குழந்தை, கிழந்தை! அவளில்லை போங்கள். பாட்டி வீட்டிற்குப் போயிருக்கிறாள்.” 

“ஐயோ, அபாண்டமான பொய்! என் முத்தே, கண்ணே, மணியே! எங்கே சென்றாயடி? என்னை முன்னே கொன்றிருக்கலாகாதா?” என்ற ஒரு பெரும் அழுகைக் குரல் கேட்டது. அது ஐயங்காரின் மனைவியின் குரல் என்று அறிந்தார் உபாத்தியாயர். 

“அடிபாவி என்னைத் தொலைத்துவிடுவையோ?” என்று ஒரே ஒரு இரைச்சலுடன் வைதுவிட்டு வெடுக்கென்று கதவைச் சாத்திக்கொண்டார் ஐயங்கார். 

இதைக்கண்ட பெருமாளுக்கு அதன் பொருள் ஒன்றும் விளங்கவில்லை. அதைப் பற்றி யோசித்துக் கொண்டே பாடசாலை சென்றுவிட்டார். பரீட்சை ஒருவாறு நடந்தது. ஆனால் பெருமாளுக்குத் திருப்தி இல்லை. கமலம் இருந்திருந்தால் தமக்கு என்ன பெருமை கிடைத்திருக்கும் என்று எண்ணினார். ஐயங்கார் சம்சாரம் அழுது கொண்டு கத்தின பேச்சுக்கள் அவர் காதைத் துளைத்துக் கொண்டே இருந்தன. அபாண்டமான பொய், என்னை முன்னே கொன்றிருக்கலாகாதா ? இவ்வார்த்தைகளின் அர்த்தம் என்ன? ஐயங்கார் ஏன் என்னை உள்ளேவிடாமல், சாத்திக்கொள்ளவேண்டும்?” என்று ஆலோசித்தார். கமலம் பாட்டி வீட்டிலும் இல்லை என்று தெரிந்தது. அவள் மீது வைத்திருந்த பேரன்பினால் இந்த மர்மத்தை விசாரிக்க வேண்டும் என்று முனைந்து நின்றது அவர் மூளை. 

பரன்சேர்வழி காங்கய வட்டத்தைச் சேர்ந்தது. அந்த ஊர்ப் போலீசு உத்தியோகஸ்தர் பெருமாளுடைய நண்பர். அந்த மாதத்திய உபாத்தியாயர் கூட்டமும் காங்கயத்தில் நடந்தது. அதற்குப் பெருமாள் சென்றார். கூட்டம் முடிந்தவுடன் போலீசு நண்பர் திருமலையிடம் சென்றார்; கமலம் காணாமற்போன செய்தியைச் சொன்னார்! திருமலைக்கோ நல்ல பேர் வாங்கவேண்டுமென்ற பேராசை உண்டு. சின்ன வழக்குகளில் எல்லாம் பெருத்த அக்கரை எடுத்துக்கொண்டு பாடுபடுவார். ஆகவே, இக்கதையைக் கேட்டவுடன் சும்மா இருப்பாரா? உடனே தாம் வந்து விசாரிப்பதாக உறுதி கூறினார். பெருமாளும் வெகு திருப்தியுடன் ஊர் திரும்பினார். 

தம் சொற்படி, அடுத்த ஞாயிற்றுக்கிழமையன்று திருமலை பரன்சேர்வழி வந்தார். ஊரில் பலரிடம் விசாரிக்கக் கோபால ஐயங்காரின் நடவடிக்கைகளைத் தெரிந்து கொண்டார். கமலம் காணாமல் போனது முதற்கொண்டு அவருடைய நடவடிக்கை சந்தேகத்திற்கிடமானது என்று அறிந்தார். அவரது மனைவியை விசாரிக்கச் சென்றார். முதலில் கோபாலய்யங்காரின் வீட்டிற்குள் செல்லவே முடியவில்லை. கட்டாயப்படுத்தி உள்ளே செல்லவே ஐயங்கார் மறைந்துவிட்டார். அம்மாளைப் பரிசோதிக்க அவள் உடம்பில் பல காயங்கள் ஆறி வருவதாகக் கண்டார். பெருத்த சந்தேகம் ஏற்பட்டது. நயமும் பயமும் காட்டினதில் அவள் உண்மையை வெளியிட்டாள். பெருமாளுக்காகக் கட்டி வைத்திருந்த உண்டியலில் நான்கணாவைக் கமலம் எடுத்து விட்டதாகக் கோபாலையங்கார் சந்தேகப்பட்டு ஆத்திரத்துடன் அவளை அடித்ததாகவும், அவள் மறுக்கவே அவள் தலையைச் சுவரில் மோதினதாகவும், அதனால் அப்பெண் கீழே விழுந்துவிட்டதாகவும், அதனால் காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிந்தது. கமலம் எங்கே என்றதற்கு அன்றிரவே அவள் இரத்தத்தைக் கக்கி இறந்துவிட்டதாகவும், ஐயங்கார் பயந்துகொண்டு அவள் உடலைப் புறக்கடையில் புதைத்து வைத்ததாகவும் கூறினாள். உடனே புறக்கடை சோதிக்கப்பட்டது. பாவம் கமலத்தின் உடல் எடுக்கப்பட்டது. 

ஐயங்கார் ஓடிவிட்டார். வாரண்டு பிறந்தது. இரண்டு மாதம் கழித்து ஒரு குக்கிராமத்தில் மாறு வேடத்துடன் கைது செய்யப்பட்டார். விசாரனை தொடங்கிற்று. பணக்காரச் சீடர்கள் நல்ல வழக்கறிஞரை (வக்கீல்) வைத்துத் தந்தார்கள். அவரும் நன்றாக வாதாடினார். “கமலம் இறந்தது உண்மை. ஆனால் அவள் தகப்பன் கொலை செய்யவேண்டுமென்ற எண்ணத்துடன் அடிக்கவில்லை.” சுவாமியின்மீது வைத்திருந்த பக்தியினாலே காணிக்கைக் காசு எடுத்தாள் என்று கோபங்கொண்டு அடித்தார். அது தவறி மண்டையில் பட்டது. ‘ஒரு மகளைக் கொலைசெய்ய ஒரு தகப்பன் எண்ணுவானா?’ என்று போதனை செய்யப்பட்டது. அப்படியானால் “மனைவியை ஏன் அடித்தான்?” என்று ஒருவரும் கேட்கவில்லை. அது தனிக்குற்றம் அல்லவா? ஆகவே அதனை இதில் கலக்கக்கூடாதாம்! ‘திருப்பதி வேங்கடேசப்பெருமானுக்கு என்று வைத்திருந்த காணிக்கையைத் தொட்டால் பெரும் பாதகம் அல்லவா? ஆகவே, ஏன் அவருக்கு அடக்கமுடியாத கோபம் வராது? பெருங் கோபம் பைத்தியத்திற்குச் சமானமல்லவா? அப்படிப்பட்ட சமயத்தில் செய்யும் குற்றம் பெருங் குற்றமல்ல. ஆகவே கொலைக்குற்றம் ஆகாது’ என்று தீர்ப்பு கூறினார் நீதிபதி. ஆகவே கொடுந் துன்பத்திற்காகக் குற்றம் சாட்டி 7 வருடம் சிறைத்தண்டனை விதித்தார். மனைவியைத் துன்புறுத்தியதற்காக ஒரு வருடம் சிறை கிடைத்தது. 

குழந்தை உயிரைவிடக் காணிக்கைக்கு மதிப்பு எத்தனை அதிகம் ! இப்பேயெண்ணம் நாட்டில் இக்காலத்திலும் தாண்டவம் ஆடுகிறது ! சிட்சையில் திருமலைக்குத் திருப்தி இல்லை. ஒரு அந்நிய நீதிபதி வாய்க்கவில்லையே என்று நொந்துகொண்டார். எல்லாரிலும் பெருமாளுக்குச் சிறிதும் மனச்சாந்தி இல்லை. கமலத்தின் நிர்மலமான ஆத்மா எவ்வாறு தவிக்கிறதோ என்று ஒரே கனாவாகக் கண்டு கொண்டிருக்கிறார். அவளுடைய இனிய பாசுரங்கள் இன்னமும் அவர் காதில் ஒலித்துக் கொண்டு ஆனந்தத் துக்கத்தைத் தந்து கொண்டிருக்கின்றன. 

– கோயிற் பூனைகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு; 1945, திராவிடர் கழக வெளியீடு, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *