கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 – ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர்.
நூல்கள்
பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை.
கா.ஸ்ரீ.ஸ்ரீ மொழியாக்கம் செய்த காண்டேகரின் நூல்கள்
நாவல்கள்
எரிநட்சத்திரம்
இருதுருவங்கள்
மனோரஞ்சிதம்
வெண்முகில்
இருமனம்
வெறுங்கோயில்
சுகம் எங்கே
முதற்காதல்
கருகிய மொட்டு
கிரௌஞ்சவதம்
கண்ணீர்
யயாதி
அமுதக்கொடி
சிறுகதைகள்
காண்டேகர் கதைகள் ( இரண்டு பகுதிகள்)
கூட்டுக்கு வெளியே
ஆஸ்திகன்
அரும்பு
கா.ஸ்ரீ.ஸ்ரீ செய்த மற்ற மொழியாக்கங்கள்
பகவான் புத்தர், சாகித்ய அகாதெமி – பழனியப்பா பிரதர்ஸ், 1957 (மராட்டிய மூலம்: தர்மானந்த தாமோதர் கோசாம்பி)
கா.ஸ்ரீ.ஸ்ரீ நூல்கள்
நாவல்
காந்தம் 1945
காற்றாடி 1949
சிறுகதை
நீல மாளிகை
அன்னபூரணி
பொது
சைவ தத்துவம்
என் முதல் கதை – பிப்ரவரி 1967
‘உமா’ ஆசிரியர் என் முதல் கதையைப்பற்றி எழுதச் சொன்னார். காக்கைச் சிறகினிலே கண்ணனுடைய கருமையைக் கண்டு களித்த கவியைப்போல, என் நெஞ்சம் என் கதைகளின் கதையிலே திரிந்துகொண்டு, முதல் கதை யைத் தேடி ஓடி இன்புற்றது.
“தற்கொலைக்கு மிகவும் எளிய வழி ஒன்று இருக்கிறது” என்று வியாசர் ஒரு தடவை அர்ஜுனனிடம் சொன்னாராம்.
”அது என்ன?” என்று கேட்டான் அர்ஜுனன்.
“நிறைந்த சபைதனிலே உன்னைப் பற்றியும் உன்னுடைய நற்குணங்களைப் பற்றியும் வீரதீர பராக்கிரமங்களைப் பற்றியும் சிறிது நேரம் பேசிக்கொண்டிரு; போதும்!” என்று வியாசர் சொன்னாராம்.
ஆனால், இப்படி நடந்தது மகாபாரத காலத்திலே. இப்பொழுது ஒருவருடைய தமுக்கை மற்றவர் அடித்துக் கொள்ள வேண்டிய நிலை வந்திருக்கிறது. அதனால்தான் ‘உமா’ ஆசிரியர் சொல்கிறார். “அப்பனே, உன் முதல் கதை எது? அந்த டமாரத்தை இப்படிக்கொண்டு வந்து ‘டம் டம்’ வென்று அடி!” என்று.
2
குயில் தானாகப் பாடுகிறது; மயில் தானாக ஆடுகிறது; ஆறு தானாகப் பாய்கிறது; தென்றல் தானாக வீசுகிறது. ஆயினும் இவையனைத்துக்கும் ஒரு தூண்டுதல் வேண்டும். இளவேனில், மேக மண்டலம்,மாமலை, தென்திசை- இப் படிப் பல. இவற்றின் இயக்கத்துக்குக் காரணமாகின்றன. அதுபோலவே கதை எழுதவும் ஒரு தூண்டுதல், ஓர் எழுச்சி வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள். உள்ளத்தை உந்தும் உணர்ச்சி,தன்னம்பிக்கையை எழுப் பும் பத்திரிகாசிரியரின் கடிதம், வாசகரின் பாராட்டு, இலக்கிய உலகில் நமக்கு மாறுபட்ட கருத்து உடையவ ருடைய உத்வேகமூட்டும் இகழ்ச்சி – இப்படிப் பல காரணங்கள் கதை எழுதத் தூண்டுகோலாக அமைகின்றன. ஒவ்வொரு கதையின் கதைக்கும் பின்னால் இப்படிப் பல சூழ்நிலைகள் குவிந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் எழுத் தாளன் தானே எழுத முடியுமே அல்லாமல், விமரிசகரோ, வாசகரோ கற்பனை செய்துகூட வரைய இயலாது. பிராய் டின் தத்துவத்தைக் கொண்டு வேண்டுமானால் இந்த முயற்சியைச் செய்யலாம், நிற்க.
என் கதைகள் ஆரம்பமான காலத்துச் சூழ்நிலையை முதலில் சொல்லுகிறேன். சத்தியம், அஹிம்சை, இரக்கம், எனிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை, சாத்துவிகம், மனுஷத் தனம்,நீதி,கற்பு முதலிய நூற்றுக்கணக்கான கனவுகளில் வளர்ந்த, அல்லது வளர்க்கப்பட்ட நான், அப்பொழுது ஒரு புதிய உலகைக் கண்டேன். ஏழைக் குடும்பத்தில் பிறந்த நான் சொல்லொணாத வறுமைக்கு இரையாகி, வாழ்வதற்கு வழி தேடிக்கொண்டிருந்த நாள் அது. ஏறக் குறையப் பத்து ஆண்டுகள் நாலாறு துறைகளில் அல்லும் பகலும் உழைத்து, உழைப்புக்குப் போதிய பாராட்டை யும், வாழ்வுக்குப் போதாத ஊதியத்தையும் பெற்று நான் கதிகலங்கிக் கிடந்த காலம் அது. ஓர் அழகிய கனவிலிருந்து அப்பொழுதுதான் விழிப்புற்று, மனிதன் என்று சொல்லப் படும் பிராணியினுடைய கோர வினைகளைக் கண்டேன். ஏராளமான தருமங்களும் தானங்களும் செய்வதாகப் பாசாங்கு செய்துகொண்டு கறுப்புச் சந்தையில் பண்டங் களை விற்ற வியாபாரிகளைக் கண்டேன்: தருமம், அதருமம்; நீதி, அநீதி; சொர்க்கம், நரகம்; கற்பு, விபசாரம் என் பவை போன்ற பழைய உண்மைகள் யாவும் இந்த உலகில் தூள் தூளாயின. ஆத்மா வேறு, உடல் வேறு; இம்மை வேறு, மறுமை வேறு; சமூகம் வேறு, தனிமனிதன் வேறு என்ற வேற்றுமைத் தளைகள் படபடவென்று அறுந்தன். மனிதனுடைய ஆசை இமயத்துக்குமேல் ஓங்கியது; அகங் காரம் பூலோக – புவர்லோக-ஸுவர்லோகங்களைக் கடந்து சுடந்து மேலே எழும்பியது; ‘குவி, குவி’ என்ற வேட்கை, கடலாழத்தோடு போட்டியிட்டது. ‘தேவர்களுக்கும் தானவர்களுக்கும் மூண்டது போர்’ என்று தொடங்கும் பழங்கதைகள் யாவும் இந்தக் காலத்துக் கதைக்கு நிகரல்ல என்று தோன்றிற்று. அக்கம் பக்கத்தில் நல்ல எண்ணத் தைக் காண்பது குதிரைக் கொம்பாக இருந்தது. ஒருபுறம் லோப மோகங்கள்: மறுபுறம் பீதியும் நடுக்கமும். இப்படி இருந்த அந்தக் காலந்தான்,இரண்டாவது உலகப் போர்க் காலம்.
இப்படி நீதியே தலைகவிழ்ந்துபோன காலத்திலும், நல்ல ஆத்மாக்கள் இல்லாமல் இல்லை. வாழ்வைக் கோயி லாகவும் கலையைத் தெய்வமாகவும் போற்றி வாழும் மக் கள் எந்தக் காலத்திலும் இருக்கிறார்கள். இந்த நிலையில் நான் ‘கலைமகளை’ப் புகலடைந்தேன்.
இறைவனின் படைப்பிலே எல்லாப் பொருள்களும் சமமானவை; எல்லாம் பயனுடையவை. இலக்கிய உலகிலே ஆலமரங்களும் தென்னையும் பலாவும் மாவும் உண்டு; என்னைப் போன்ற புற்பூண்டுகளும் உண்டு. சமதரிசிக ளான வாசகர்கள் என்னையும் ஆதரித்தார்கள்.
3
என் முதல் கதை – ‘மழையிடையே மின்னல்’. இது 1942-ல் ‘கலைமக’ளில் வெளிவந்தது. ‘நீலமாளிகை’ என்ற என் முதல் கதைத் தொகுதியில் முதல் கதையாக விளங்கு கிறது. இந்தத் தொகுதிக்கு முன்னுரை அளித்த புதுமைப் பித்தன்’, ‘இவருடைய சொந்தக் கற்பனைகள் எல்லாம், முக்கால்வாசிப் பேர் திரை போட்டு மறைத்து வைக்க வேண்டியவை என்று சொல்லும் விவகாரங்களைப் பற்றி அமைந்திருக்கின்றன. அவைகளைப் பற்றி இவர் தெம்பு குன்றாமல், கை தழுதழுக்காமல் எழுதக்கூடியவர் என் பதை இவர் கதைகளே சொல்லும்” என்று குறிப்பிட்டார்.
4
‘மழையிடையே மின்னல்’- வெளியுலகில் மயக்கமுறும் இளைஞன் ஒருவன், தன் மனைவியின் அன்பை விளக்கமாகக் கண்ட வரலாறு அது.
எனக்கு அக்கம் பக்கத்தில் இருந்த உலகில் நான் கண்ட காட்சிகளின் சித்திரந்தான் அது. “இவரது கதை கள் வாழ்க்கையை ஒட்டியவை; எங்கும் நிகழாதவற்றை யும் நிகழ முடியாதவற்றையும் எழுதிப் படிப்பவருக்குப் போதை ஊட்டி மயக்கும் நோக்கம் ஆசிரியர்க்கு இல்லை” என்று பேராசிரியர் மு.வ. புகன்றிருப்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.
– புனைபெயரும் முதல் கதையும், தொகுத்தவர்: பூவை எஸ்.ஆறுமுகம், முதற் பதிப்பு: பிப்ரவரி 1967, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
ஜூலை 28. கா.ஸ்ரீ.ஸ்ரீ. யின் நினைவு தினம்.

மொழிபெயர்ப்பு இலக்கிய உலகில் சுடராக ஒளிவிட்டு மற்ற தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கு முன்னோடியான அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீனிவாசாச்சார்யா அவர்கள், கோதாவாி சலசலக்கும் நாசிக் நகரத்தில் 28.7.99 அன்று தமது 87ம் வயதில் மறைந்தார்.
அறிஞர் அண்ணா ஒருமுறை (1961ம் ஆண்டு,செங்கல்பட்டு) இலக்கிய மாநாட்டில் கா.ஸ்ரீ.ஸ்ரீயை ‘தமிழக காண்டேகர் ‘ என பாராட்டினார். கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் மொழிபெயர்ப்புகளால் தமக்கு தற்கால இலக்கிய ஆர்வம் ஏற்பட்டதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டதுண்டு. இலக்கிய உலகில் தனக்கென ஒரு பாணி, தனி நடை ஏற்படுத்திக்கொண்ட கா.ஸ்ரீ.ஸ்ரீயின் எழுத்துப் பணி மகத்தானது!
நேர்மை, எளிமை, வாய்மை, தூய்மை, பன்மொழிப்புலமை, சொல்வளமை, ஆன்மிகத் தன்மை, எண்ணத்தில் இளமை என அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் அரும்பெரும் குணங்களைப் பற்றி நிறைய எழுதலாம். எதையுமே ஆராய்ந்து பார்த்தபின் ஏற்பதோ மறுப்பதோ அவருடைய நிதானத்தைக் காட்டியது. உள்ளத்திருந்ததை ஒளிக்காமல், யாரையும் புண்படுத்தாமல் பேசும் திறமை அவருக்கு கைவந்த கலை. பழுத்த வயதிலும் பண்பு, அடக்கத்துடன் வாழ்ந்த அவாிடம் (ஜூன் 99ல் ஒரு நாள்), ‘தற்கால தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன ? ‘ என்று கேட்டபோது, அவர் தயங்காமல், ‘வயதான பின்பு புதிய தமிழ் நூல்களை நான் அதிகம் படிக்கவில்லை. எனவே தற்கால தமிழ் எழுத்தாளர்பற்றி ஏதும் கூற எனக்குத் தகுதியில்லை ‘ என்று நேர்மையான மறுமொழி தந்தார்.
சில குறிப்புகள்
மகாத்மா காந்தி 1937ல் சென்னை வந்தபோது, உ.வே.சாமிநாத ஐயாின் தமிழ் வரவேற்புரையை கி.வா.ஜகந்நாதனின் வேண்டுகோளுக்கிணங்கி, இந்தியில் மொழிபெயர்த்தது கா.ஸ்ரீ.ஸ்ரீ.தான். மகாத்மா காந்தி அந்த உரையை வெகுவாகப் பாராட்டினார். அப்போது கி.வா.ஜ.வுடன் ஏற்பட்ட உறவு கா.ஸ்ரீ.ஸ்ரீ.க்கு சுமார் 40 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. கா.ஸ்ரீ.ஸ்ரீ. ‘கலைமகள் ‘ பத்திாிகைக்கு துணையாசிாியராகவும் பதிப்பாசிாியர்களுள் ஒருவராகவும் பல ஆண்டுகள் பணிபுாிந்தார். ‘மஞ்சாி ‘ பத்திாிகையில் ஏராளமாக எழுதினார்.
பன்மொழிப்புலவரான கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழுக்கு சிறப்பிடம் தந்தார். சென்னை இந்தி பிரசார சபாவில் அவர் வேலை செய்த போது நடந்த சம்பவம் அவருடைய தமிழுணர்வை இலக்கிய உலகுக்கு வெளிகாட்டியது. ‘இந்தியைத் தவிர வேறு இந்திய மொழியில் சிறந்த இலக்கியம் இல்லை, நாமே இலக்கியச் சக்கரவர்த்திகள் ‘ என்ற தொனியில் சில இந்தி எழுத்தாளர்கள் பேசினார்கள். இதைக்கேட்டு வெகுண்ட கா.ஸ்ரீ.ஸ்ரீ. ‘இந்தியை விட தமிழில் சிறந்த கதை கட்டுரைகள் இருக்கின்றன ‘ என்று வாதாடினார். அப்போதிலிருந்து தமிழ் கதைகள், கட்டுரைகள், தமிழிலக்கிய வளம்பற்றின கட்டுரைகள் என பலவற்றை இந்தியில் மொழி பெயர்த்து இந்தி இலக்கியப் பத்திரிகைகளில் வெளியிட்டு வெற்றிகண்டார். ‘இந்தியச் சிறுகதைகள் ‘ என்ற நூல் இந்தியில் வெளிவந்தபோது அதில் கல்கி, புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, கு.ப.ரா, சிதம்பர சுப்ரமணியன் போன்றோர் படைப்புகளை இந்தியில் அமைத்து இடம் பெறச் செய்த அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.தான். இந்த முயற்சிக்கு முத்தாய்ப்பு வைத்ததுபோல பாரதியின் ‘தராசு ‘ (கட்டுரைகள்) படைப்பை உள்ளது உள்ளவாறே இந்தி வடிவாக்கி வெளியிட்டார்.
மொழிபெயர்ப்புத் துறையில் சுடராக விளங்கிய கா.ஸ்ரீ.ஸ்ரீ. ஒரு சிறந்த படைப்பாளரும்கூட என்பது குறிப்பிடத் தக்கது. ‘காந்தம் ‘ என்பதுதான் இவர் எழுதிய முதல் தமிழ் நாவல் – 1945ல் கலைமகள் வெளியீடாக வந்தது. இரண்டாம் நாவல் 1949ல் வெளியிடப்பட்ட ‘காற்றாடி ‘ என்ற தமிழ் நாவல். மேலும் ‘நீல மாளிகை ‘ ‘அன்னபூரணி ‘ போன்ற சிறுகதைத் தொகுதிகளையும் கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழ் வாசகர்களுக்கு அளித்தார். குமுதம் பத்திாிகை நிறுவிய திரு. எஸ்.ஏ.பி.அண்ணாமலை கேட்டுக்கொண்டபடி, கா.ஸ்ரீ.ஸ்ரீ. சொந்தச் சிறுகதையை குமுதம் முதல் இதழுக்கு அனுப்பினார். மேலும், கா.ஸ்ரீ.ஸ்ரீ.தமிழில் மொழிபெயர்த்த காண்டேகாின் நாவலான ‘வெண்முகில் ‘ குமுதம் வெளிவர ஆரம்பித்த 1947 நவம்பர் மாதம் அதில் முதல் தொடர்கதையாக வெளிவந்தது. 1940-50களில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் கதைகளை வெளியிடாத தமிழ் பத்திாிகைகளே இல்லையென்றால் மிகையாகாது.
இளம் வயதிலேயே வடமொழிப்புலமையும் மராட்டி மொழி பழக்கமும் பெற்ற கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்கள், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் சரளமாக எழுத பேசக் கற்றுக்கொண்டார். இவர் வி.ஸ.காண்டேகாின் மராட்டி இலக்கியத்தைத் தமிழில் மொழிபெயர்த்துக் குவித்தார். காண்டேகருடன் இவருக்கு இருந்தது கடிதத்தொடர்பு மட்டுமே. இருவரும் நோில் சந்தித்துக்கொள்ள வாய்ப்பே ஏற்படாமல் போனது. ‘காண்டேகாின் நூல்களை ஏன் மொழி பெயர்க்க விரும்பினீர் ? ‘ என்ற கேள்விக்கு, கா.ஸ்ரீ.ஸ்ரீ.அளித்த பதில் – ‘வங்க, இந்தி நாவல்கள் தமிழில் பெரும்பாலும் வந்து ஓய்ந்திருந்த காலத்தில், புதுமையான காண்டேகாின் இலக்கியத்தை தமிழாக்க விரும்பினேன். 1940-50களில் காண்டேகாின் 13 நாவல்களையும், சிறந்த 150 சிறுகதைகளையும் தமிழாக்கினேன். வாசகர் காண்டேகர் இலக்கியத்தை ஆர்வத்துடன் விரும்பிப் படித்தனர். ‘
‘சமூக அமைப்பு முறையில் மிகப்புரட்சிகரமான மாறுதல் வேண்டும் என்பதற்கான போர் முரசு – காண்டேகரின் கதைகள் ‘ என்று அறிஞர் அண்ணாவால் குறிப்பிடப்பட்ட அந்த கதைகளை தமிழ் வாசக உலகுக்கு அயராமல் அளித்த கா.ஸ்ரீ.ஸ்ரீ.யைப் பற்றி, ‘மராத்தியில் நான் பெற்ற புகழைவிட, தமிழில் என் இலக்கியத்தை மொழி பெயர்த்து கா.ஸ்ரீ.ஸ்ரீ.பெற்ற புகழ் அதிகம். அதற்கு அவர் தகுதியானவருங்கூட ‘ என்று காண்டேகரே ஒருமுறை கூறியுள்ளார்.
காண்டேகாின் படைப்புகளில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.யை மிகவும் கவர்ந்த நாவல் ‘யயாதி ‘தான். ‘புராண பாத்திரமான யயாதியை இக்காலத்திய மிதமிஞ்சிய வேட்கை வெறியிலாழ்ந்த மனிதனாக காண்டேகர் சித்தாித்திருக்கிறார். புராணக்கதையொன்றை அற்புதமான நவீனமாய் படைக்க முடியுமென்பதற்கு இது தக்க சான்று ‘ என புகழ்ந்தார் கா.ஸ்ரீ.ஸ்ரீ. காண்டேகாின் மராட்டிய ‘யயாதி ‘க்கு பல ஆண்டுகளுக்கு முன்பு சாகித்ய அகாதெமியின் பாிசும் பிறகு அதற்கு பாரதீய ஞானபீட பாிசும் கிடைத்தன. கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘யயாதி ‘க்கு 1991ல் சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்புப் பாிசு கிடைத்தது!
மொழி நம்மைப் பிாிக்கும் என்று எண்ணுவது குறுகிய கண்ணோட்டம். சமுதாயப் பிரச்னைகளை விளக்கிட்டுகூ காட்டும் நூல்கள் எந்த மொழியிலிருந்தாலும் தாய்மொழியில் தரப்படும்போது, பிரச்னைகளை நம்மால் நன்கு புாிந்துகொள்ளமுடிகிறது. தேசிய ஒருமைப்பாட்டுக்கு இவ்வகையில் மகத்தான தொண்டு புாியும் இலக்கியவாதி கள்தாம் மொழிபெயர்ப்பாளர்கள். ஆரவாரமில்லாமல் ஆயுட்காலம் முழுதும் இந்த இலக்கியப் பணியில் ஈடுபட்டிருந்த வர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. ‘மொழிபெயர்ப்பு என்பது ஒரு நுண்கலை. நல்ல சங்கீதம், ஓவியம் போல பிசிறில்லாமல் இருக்க வேண்டும். அதற்காக எவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டாலும், எவ்வளவு பாடுபட்டு உழைத்தாலும் தகும் ‘ என்று சொன்னவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.
வடமொழிப்புலமை கொண்ட கா.ஸ்ரீ.ஸ்ரீ. வான்மீகி ராமாயணத்தை நன்கு அறிந்தவர். இந்த இலக்கிய ஆராய்ச்சின் விளைவாக, ‘சுதர்ஸனம் ‘ என்ற வைணவ மாத இதழில் ராமாயணத்தையொட்டி பல மனோதத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதினார். வேதங்கள் பற்றி விாிவான ஆராய்ச்சியை பல ஆண்டுகள் செய்தார். பல பாகங்கள் கொண்ட வேதநூல்களை தமிழில் எழுத வேண்டும் என்பது இவருடைய பொிய இலக்கிய இலக்காக இருந்தது. ஆனால் அதற்குள் முதுமை இவரை வென்றது. இவர் கடைசியாக ஆங்கிலத்தில் எழுதியுள்ள சிறிய நூல் வேதத்தைப் பற்றியதுதான். கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் நூல்களை சீராக வெளியிட்ட, 2000ல் நூற்றாண்டை கொண்டாடப்போகும் மயிலை அல்லயன்ஸ் பதிப்பகத்தார்தான் இந்த ஆங்கில நூலையும் வெளியிடுவதாக இருக்கிறார்கள். இது ஒரு ஆன்மிகக் கருத்துக்கோவை – கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் இலக்கியப் பணிக்கு ஒரு சிகரம்போன்றது எனலாம்.
‘இலக்கியப் பணி என்றால் அதில் சமூகப் பணியும் ஆன்மிகப் பணியும் அடக்கம் ‘ என்று சொன்ன அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. இன்று இந்தியாவை ஆக்கிரமித்துள்ள (சமூக)நோய் என்ன என்ற கேட்டபோது, ‘தன்னலம் ‘ என்று ஒரே சொல்லில் பதில் தந்த அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.க்கு நமது அஞ்சலி.
(இந்த அஞ்சலியின் சுருங்கிய வடிவம் கல்கி 15.8.99 இதழில் இடம்பெற்றது. – வாசன்)
முன்னணி – புயலும் படகும், ஏப்ரல் 1970
உலகம் பல விதம். பல விதமாக இருப்பதனால்தான் இது உலகமாக இருக்கிறது. இல்லாவிட்டால் இவ்வுலகத் தில் வாழ்வது சுவையற்றதாகிவிடும். இலக்கிய உலகமும் இத்தகையதே. பல விதமான நோக்கங்களும் சிந்தனைப் போக்குகளும் ஆராய்ச்சி முறைகளும் நடைகளும் கொண்ட ரசிகர்களுக்கு இது உறைவிடமாகிறது. அவர்கள் படைத்த உலகம் என்றும் இதைச் சொல்லலாம். அடிப்படையிலேயே கருத்து வேற்றுமை கொண்ட ஜன சமூகத்தினிடையிலும் பொதுவகையில் ஒற்றுமை இல்லாமல் இல்லை. இலக்கியப் பண்பும் மனித மனோதர்மமும் யாவருக்கும் பொதுவானவை. மலர்வனங்களும் பறவைக் கூட்டமும் மேகமண்டலமும் எவ்விதம் ஆஸ் கார் ஒயில்டுக்கு உரியனவோ, அவ்விதமே எதிர்காலத்துப் பரந்த உலகில் வாழப்போகும் நம் குழந்தைகளுக்கும் அவை சொந்தமாகும். தேய்பிறைத் தசமியின் அமைதியான இரவில் மூன்று மணிக்கு, நிர்மலமான வானவெளியில், பறங்கிச் சக்கையைப் போல விளங்கும் வெண்மதியையும், எங்கும் இறைந்து கிடக்கும் நட்சத்திர மணிகளையும் பார்த்துக்கொண்டும், அலை ஓயாத குடாக் கடலின் கம்பீர கோஷத்தைக் கேட்டுக்கொண்டும், அந்த இன்பத்தில் நான் எத்தனையோ நாட்கள் மிதந்தது உண்டு. இந்த சுவையின் இன்பம் வேறு யாருக்கும் கிடையாதென்று நான் எப்படிச் சொல்ல முடியும்?
முற்றும் தூய்மையான பொருள் இவ்வுலகில் எதுவும் இல்லை. ‘அக்கினியைப் போல் திவ்யமான, தூய பொருள்’ என்கிறார்களே, அது லட்சியவாதியின் கனவென்றே நான் கருதுகிறேன். அந்த உவமையே முதலில் பொருத்தமான தல்ல. “தீய பொருள்களையும் தன்னுள் கொண்டு, அவற் றைத் தூய்மைப்படுத்துவதனால், அக்கினி திவ்யப் பொருளா கிறது” என்று சமாதானம் கூறலாம். அப்படிப் பார்த் தால் உலகில் ஒவ்வொரு மனிதனும் திவ்யன்; தூயவன். அவனுடைய உள்ளத்திலிருந்து ஆன்மாவின் சுடரொளி வீசுகிறது. தன்னிடத்திலுள்ள ஆசாபாசங்களையும், விருப்பு வெறுப்புகளையும் ஆன்மாவின் ஞானத்தீயில் அவன் எரித்து விடக்கூடும். ஆனால், அப்படிச் செய்துவிட்டபின்பு, அவனுக்கு இந்தப் புவியில் விரும்பக்கூடிய பொருள் எதுவும் இராது. ஆகவே, அவன் அவற்றுடன் வாழும் வரையில்தான் அவ னுக்கு இவ்வுலகம் பயன்படுகிறது. தூய்மையும் தூய்மை யின்மையும் ஒன்றனை ஒன்று அடுத்திருக்கும் வரையில்தான் மனிதவர்க்கம் முன்னேறும். சத்திய யுகம் என்ற லட்சியத்தை நாம் எட்டிவிட்ட பின்பு, உயிரற்ற தெய்வ பிம்பங்களைக் காண்போமே தவிர, உயிருள்ள மனித உணர்வைக் காண முடியாது. மனிதன் மரணத்தைக் கடந்துவிடும் அந்தக் கணத் திலே இவ்வுலகத்துக்குப் பிரளயம் வந்துவிடும்.
மேன்மேலும் முன்னேறிக்கொண்டிருக்கும் நம்முடைய தலைமுறையில், பண்டை நாட்களில் யாரும் நினைத்துக்கூட இராத அத்தனை பெருந்தொண்டு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தத் தொண்டுக்குத் ‘தூயது’ என்ற முத்திரை இல்லை; அதனால்தான் இது பொதுமக்கள் யாவருக்கும் பயன்படுகிறது. திலீப ராஜனை நம் முன் கொண்டு நிறுத்தும்போது, “அவன் மகா சமுத்திரத்தைப் போன்றவன்” என்றார் மகாகவி காளி தாஸர். எழுத்தாளன் கற்பனையூற்றாக மட்டும் இருந்து பய னில்லை; அவன் சத்தியத்தில் நாட்டமுடையவனாகவும் இருக்க வேண்டும். அதிலும், கவி? மகாகவி? உண்மையை அவன் ஒளிக்க முடியுமா? அந்த மகாகவி உண்மையைக் கூறி விட்டான்.
கடலை யாராவது அடக்க முடியுமா ? ‘முடியும்’ என்று சொல்லி எவனாவது அதற்குள் குதித்தால், அதிலுள்ள சுறா மீன்கள், கடற் பாம்புகள் முதலிய துஷ்ட ஜீவ ஜந்துக்கள் அவனை விழுங்கி, ஒரு கணத்தில் அவனுக்குத் தகுந்த பதில் சொல்லிவிடும். ஆனால், அந்தக் கடல்தான் நவரத்தினங் களுக்குக் கொள்ள மாளா நிதியாக இருக்கிறது. அதனுடைய அந்த அருங் குணம் மனிதனைத் தன்னிடம் அண்டச் செய் கிறது. பயங்கரமும் கவர்ச்சிகரமுமான குணங்களினால், திலீப ராஜனும் இத்தகைய சாகரத்தைப் போல அடக்க முடியாத வனாகவும், குடிமக்களால் அண்டக் கூடியவனுமாக இருந் தான் என்பது மகாகவியின் கருத்து. திலீப ராஜன் மட்டு மல்ல; ஒவ்வொரு தொண்டனும்-அவ்வளவேன், ஒவ்வொரு மனிதனும் – அப்படித்தான் இருக்கிறான்.
இவ்விதமான குணதோஷங்கள் நிரம்பிய வாழ்க்கையில் கவிஞன் தன் ரஸ சிருஷ்டியை அழியாததாக்க முயன்று, அதன்வழியே தன் ஜீவ ஒளியைப் பரப்பிவிட்டுப் போகிறான். எவ்வளவுக்கு எவ்வளவு அந்தப் படைப்பில் ஜீவன் இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதிக காலம் அது வாழும் என்பதில் ஐயமில்லை.
நமக்கு முந்திய தலைமுறையில் தோன்றி நம் தலைமுறை யில் மறைந்த ரவீந்திரநாத் டாகுர் பாரதநாட்டின் பெரும் பேறுகளில் ஒருவர். இலக்கியத்துறைகளில் அவர் பட்ட பெரும் பாடும், பயிர் செய்த பண்ணைகளும் மிகப் பரந்தவை. அயல் நாடுகளின் பாராட்டும் அவருக்குப் போதிய அளவு கிடைத் தது. ஆனால் மேல்நாட்டுப் பிரபல எழுத்தாளர் ஒருவர் அவ ரையும் கவிகோகிலமாகிய ஸரோஜினி தேவியையும் நோக்கி, “நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவதெல்லாம் மிக நன்றாகத்தான் இருக்கிறது. ஆயினும், நீங்கள் உங்கள் சொந்த மொழி யிலேயே எழுதிக்கொள்வதுதான் பொருத்தமானது” என்ற முறையில் பேசியிருப்பதை என்னால் மறக்க முடியவில்லை. கவி ரவீந்திரர் தம் கடைசி நாட்களில் பாடிய பாடல்களும் சிந்த னைக்கு உரியைைவ. நாவலாசிரியர் என்ற முறையில் அவருக்கு மேலானவர்களை இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதும் என் உறுதியான அபிப்பிராயம்.
ரவீந்திரர் தம் குறையைத் தாமே நன்கு உணர்ந்திருந்ததுடன், சுரண்டப்பட்டவர்களுக்கும் தொழிலாளருக் கும் நன்மையை விரும்புகிறவராகவும் இருந்ததனால்,
‘உலகஅரங் கினிலெல்லா விடத்தும்யான்
புகவில்லை
இலகியவென் வாழ்க்கைநிலை யிடையிடயான்
புறம்நின்றேன்
ஏருழவன் தறிக்காரன் எறிவலைஞன்
முதலானோர்
பாரினையே தம்முழைப்பின் பகுதிகளால்
இயக்குவார்
மூலையிலே நின்றவரைப் பார்த்தவன் யான்
மூண்டபுகழ்ச்
சாலையிலே சமுதாய மேற்றளத்தைச்
சார்ந்தமையால்
மிகப்புறமாம் எல்லையையே யானறிந்து
மிதித்தவன்காண்
அகத்தேயான் புகுவதற்காம் பேறுடையே
னல்லேனால்’
என்று பாடினார். தம்முடைய இந்தப் பலவீனத்தை உணர்ந்து வருந்திய அந்த மகாகவி தம் கடைசி நாட்களில் நோய்வாய்ப் பட்டுப் படுக்கையாகக் கிடந்தபோது, பழங்காலத்திலிருந்து கிளம்பி வந்து, இப்போது, சுருதி சேர்ந்த ஒரு புரட்சிக் கோஷமாகியிருக்கும் பெரும் பாடலைத் தம் காட்சியில் கேட்டுக் களிப்புற்றார்.
“கோடி கோடிக் குரல்கள் இணைந்தன
கூடி யின்னிசைப் பாட்டென நின்றன
நாடொ றும்படும் துன்பமும் இன்பமும்
நண்ணி யோர்மகா மந்திர மாயின”
என்ற பாடல்தான் அது.
அவர் இவ்விதம் உணர்ந்து சென்ற அந்தக் குறையை நிறைவாக்க முயன்று வரும் இந்திய எழுத்தாளர்களில் வி.ஸ.காண்டேகரும் ஒருவர். அவருடைய அந்த முயற்சி யின் வெளியீடுதான் கூட்டுக்கு வெளியே. காண்டேகர் பண் படுத்தியிருக்கும் இலக்கிய நிலங்களைப்பற்றி, தமிழில் வெளிவந்திருக்கும் அவருடைய கதைத் தொகுதிகள் நாவல்கள் மூலம் நம் வாசகர்கள் அறிந்திருக்கிறார்கள்.
கதையை ரஸமயமாக்கி, மிகவும் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தி, ஜாலவித்தைகளைச் செய்யும் திறன் பங்கிம் சந்திரருக்கு உண்டு. அவருடைய சில நாவல்களைப் படிக்கும் போது, “அடே! இவ்வளவு மோசமான ஒரு கதையைக்கூட நம்மைப் படிக்கும்படி செய்துவிட்டாரே!” என்று நாம் வியக் காமல் இருப்பதில்லை. ரவீந்திரர் வேத ரிஷிகளைப்போல மந்தி ரம் கண்டவர். பாரதநாட்டுப் பண்பாட்டின் நுணுக்கங் களை அறிந்தவர். மேல்நாட்டு நாகரிகத்திலும் நன்கு பழகிய வர். இரண்டையும் கலந்து, அவர் நம்மை ஒரு மாய உலகில் கொண்டுபோய் விடுகிறார். “உலகிலுள்ள உயர்ந்த பொருள்கள் யாவும் எங்களுடையனவே !” என்று கூறிக் கொண்டு இறுமாப்பும் கிறுக்கும் பிடித்து உலவும் ஒரு வர்க் கத்தை அவர் வெகுவாகச் சித்திரித்திருக்கிறார். பாரதநாட்டுப் பெண்களின் உயர்வையும், அமுக்கப்பட்டவர்களின் முனகல் களையும் சரத்சந்திரர் காண்கிறார். நாவல்களின் கட்டுக் கோப்பும், உணர்ச்சித் திறனும் அவரிடம் நன்கு அமைந் துள்ளன. கிராம சமூகத்தையும், நவநாகரிகத்துக்கும் பழ மைக்கும் இடையே அல்லற்படும் மத்திய வகுப்பாரையும் தம் கூரிய கண்களால் ஆராய்ந்து, லட்சியமும் உண்மை வாழ்வும் கலந்த கலையை நிர்மித்தார் பிரேம்சந்த். இவர்கள் மூவரும் பார்த்தும் கடந்து போய்விட்ட ஒரு பாதையில் இன்று நம் மிடையே வாழும் எழுத்தாளர்களில் பிரமுகரான வி. ஸ. காண் டேகர் செல்கிறார். அன்பு – சிறப்பாகக் காதல்தான் – அவ ருடைய விஷயம். ‘அன்பினால் உலகை ஆள முடியும்’ என்பது உண்மையாக இருக்குமானால், வி. ஸ. காண்டேகர் அன்புலகப் பூங்காவில் ஒரு ராஜகுமாரனைப்போல உலாவுவதில் சிறிதும் ஆச்சரியம் இல்லை.
‘புயலும் படகும்’ என்ற இந்த நாவலின் ஒவ்வோர் அத் தியாயமும் தனிப்பட ஒரு சிறு கதையாக அமைந்து, அவ்விதம் அமைந்த ஏழு தனிக் கதைகள் சேர்ந்து இந்த நவீனம் உருவாகி யிருக்கிறது. முதற் காதலின் தத்துவத்தைத் தாம் கண்ட வாறு, வி.ஸ. காண்டேகர் இதில் சித்திரித்திருக்கிறார். தம் உள்ளத்தில் காதல் முளை கிளம்பிய இளைஞர்களும் யுவதிகளும் உணர்ச்சி வசப்பட்டு, மோகனமான முதற் காதலை உண்மை என்று நம்பி, காவியங்களில் மிகுதிப்பட வண்ணம் தீட்டியுள்ள காதற் கதைகளையே கருத்தில் கொண்டு, அத்துடன் தம் வாழ்க்கையே பாழாகிவிட்டதென்று தீர்மானித்துவிடுகிறார் களே; அவர்கள் அதை விட்டொழித்து, மோகனமான முதற் காதலின் தன்மையை நன்றாக உணர்ந்து, உண்மையான காதலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று விவரிக்கிறார்.
மோகனமான காதல் என்பது என்ன, உண்மையான காதல் எப்படி இருக்கும் என்பதைப்பற்றி அவர் தம் முன் னுரையில் கூறுகிறார்:
இருபது இருபத்தைந்து வயதான இளைஞர்களும் யுவதிகளும் ஒரு புறம் இருக்கட்டும்; ஐம்பது வய தாகித் தலை நரைத்துப்போன அறிவாளிகள்கூட மன்மத பாணத்துக்கு இலக்காகி என்ன என்ன திரு விளையாடல்கள் புரிகிறார்கள் என்பதை நாம் நாள் தோறும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆண் பெண்களின் காதலுக்கு முதற் படி, உடல் சம்பந்தமான கவர்ச்சிதான். சமூகத்திலுள்ள கொடிய மூடப் பழக்க வழக்கங்களுக்கு இரையாகி, நம்முடைய இளம் சந்ததிகள் இந்த உண்மையை மறுப்பதும், முதற் காதல் வெகு காலம் வரையில் நிலைநின்று பக்தியாக உருவெடுக்கும் என்று எண்ணு வதும் கடைசியில் ஆபத்தாக முடிகின்றன.
காதல் செய்வது இளம் மக்களின் உரிமை. அவர்கள் தம் நாட்டைக் காதலிக்க வேண்டும்; சமூகத்தைக் காதலிக்க வேண்டும். தமது குடும்பத்தைக் காதலிக்க வேண்டும்; தமக்குப் பிடித்த பெண்ணையோ பையனையோகூடக் காதலிக்கத்தான் வேண்டும். ஆனால், சந்தர்ப்பவசமாக இந்தக் காதல் பலிக்கா மற்போனால், தம் வாழ்க்கையிலுள்ள சுவை முழுதுமே தொலைந்துவிட்டதென்று அவர்கள் நம்பிக்கையை இழப்பது மனத்தின் பலவீனம். காதலுக்கும் வாழ்க் கைக்கும் உள்ள தொடர்புகளைப் பார்க்கும் நோக்கு இவ்வளவு குறுகியதாக இருந்தால், ஒன் றுமே நடக்காது. உருகும் தன்மையுடைய ஏதோ சில பேர்களைக் காதல் முறிவு அதிகமாகப் புண் படுத்தலாம். ஆனால், இளம் உடலில் பட்ட புண்ணோ ரணமோ விரைவில் ஆறிவிடுகிறதல்லவா? இளம் மனத்தின் விஷயமும் அத்தகையதுதான்.
நாம் முதற் காதலென்று கூறும் பொருள் உண் மையான காதலினின்றும் முற்றும் வேறுபட்டது. சௌந்தரியமே முதற் கா தலின் உயிர். ஆனால், வாழ்க்கையை மலர்விக்கும் சாந்தமான காதல் வெறும் எழிலினால் உதித்துவிடுவதில்லை. அந்த எழிலுடன், ஆற்றலும் நேர்மையும் கலக்கவேண்டும். இந்த முக்கூடல், ஒரே கணத்திலோ, ஒரு நாழி கைப் பொழுதிலோ, ஒரு வருஷ காலத்திலோ நேர்ந்துவிடாது. கடுமையான வாழ்க்கை வழி யில் பல்லாண்டுகளாக ஒருவர் கையை மற்றவர் கோத்துக்கொண்டே பிரயாணம் செய்து, தம் இள முறுவலினால் ஒருவருக்கு ஒருவர் தைரியமூட்டும் இயல்புடைய காதலர்களின் கண்ணில்தான் இந்த முக்கூடலைக் காண முடியும். இத்தகைய காதலர் களின் விஷயத்தில் காதல்முறிவு என்னும் ஆபத்து நேருவதே இல்லை. மிருத்தியுவுக்குக்கூட, காதலின் இந்த உயர் வடிவத்தைத் தீண்டும் தைரியம் உண்டாவதில்லை.
உருண்டோடும் உணர்ச்சிகளும் அழகிய கற்பனைகளும் கொண்டதுடன் மட்டும் நில்லாமல், வாழ்க்கையில் நேரும் முதற் காதலின் தத்துவத்தை ஆராயும் இந்த நாவல், வாஸ்தவ உலகத்தின் ஒரு ரகசியக் கதவைத் திறந்து காட்டி, காதல் முறிவினால் எந்த இளைஞனும் யுவதியும் சோர்வுற வேண்டியதில்லை என்று தைரியமூட்டுகிறது.
“காதலின் முறிவால் வேட்கை
கருத்திழந் திடுவோன் மீண்டும்
காதலின் பற்றுக் கோட்டால்
புத்துயிர் கமழ்வா னன்றோ?”
என்று கவியொருவர் கூறிச்சென்ற முடிபை இது அர்த்தம் நிரம்பியதாக்குகிறது. காண்டேகரின் மற்ற நாவல்களைப் போலவே, இதுவும் இலக்கிய ரசிகர்களுக்கு அளப்பரிய மகிழ்ச்சியை ஊட்டவல்லது.
சென்னை, 15-4-1970
கா.ஸ்ரீ.ஸ்ரீ
– புயலும் படகும், கதை மூலம்: வி.ஸ.காண்டேகர், தமிழாக்கம்: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: டிசம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.