கண்ணாலத்துக்கு சம்மதம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 22, 2025
பார்வையிட்டோர்: 245 
 
 

“கெழவஞ்சொல்லறது கின்னாரக்காரனுக்கு ஏறுமா? எக்கேடோ கெட்டு போங்க. அண்ணங்காரன் தரகனப்பாத்தானாம், தாலி கட்டப்போறானாம். இதென்னடா புதுப்பழக்கம்? காட்டுக்குள்ள களை வெட்னது மாதரையும் இருக்கோணும், ஊட்டுக்குப் பொண்ணுப் பார்த்தது மாதரையும் இருக்கோணும். ஆடு மேச்ச மாதரையும் இருக்கோணும், அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதரையும் இருக்கோணும். அப்படித்தான காலங்காலமா கவண்டக பழக்கம்” சலித்துக்கொண்டு தனது இரண்டாவது மகன் சின்னப்பனிடம் கோபத்துடன் பேசினார் விவசாயி மாரப்பகவுண்டர்.

“நீ ஒன்னம் ஹைதர் அலி காலத்திலியே பொழைச்சிட்டிருக்கறே. இப்ப காலம் ரொம்பம்மே மாறிப்போச்சு” பேசிய மகன் சின்னப்பனை கோபமுடன் பார்த்தார்.

“என்னத்த காலமாறுனாலும் வகுத்துக்கு உங்கற சோறு அதேதான். நம்மூட்ல ஆக்கற அரிசீம்பருப்பு சோத்த பாயிக பிரையாணிங்கறாங்க. உள்ள ஆட்டுக்கறீவோ, கோழிக்கறீவோ போட்டு பேர மாத்திச்சொல்லறாங்க. எது மாறுனாலும் மனுசனுக்கு வர்ற பசியும், சோத்துல இறக்கற ருசியும் ஒன்னு தாண்டா…‌ கொசவன் ஆட்டத்தோள்ல போட்டுட்டு ஆட்டக்காணம்னு பெராது கொடுத்த கதையால்ல இருக்குது உன்ற கத. பச்சக்கிளியாட்ட பக்கத்துல இருக்கற என்ற தங்கச்சி நல்லதங்கா பொண்ணு அருக்காணிய வெச்சுப்போட்டு, நாலெழுத்து படிச்சுப்போட்டான்னு நாலு ஊரத்தாண்டி நாகப்பம்புள்ளைய எதுக்குடா பாக்கோணும்? நாலு தலைக்கட்டா அவிலுக்கும், நம்முலுக்கும் ஆகாதுன்னு தெரியுமில்ல உனக்கு?” பேசியவர் தனது மேய்சல் மாட்டில் பால் கறக்க கன்றுக்குட்டியை அவிழ்த்து விட்டார்.

“குத்தம்பாத்தா சுத்தமில்லாம போயிரும்னு அப்பத்தாதான் சொல்லிக்குடுத்துச்சு. ஆனா நீயி எதுக்கெடுத்தாலும் குத்தம் கண்டு புடிச்சே தனிக்கட்டையா போயிட்டே. நாளைக்கு அண்ணனுக்கு கண்ணாலம்னா ஆறு வருவாங்க. சொத்துப்பத்து சம்பாதிக்கறமோ இல்லியோ சொந்த பந்தத்த சம்பாறிச்சாத்தா நாலுபேருக்குள்ள நாமுலும் மனுசனாத்தெரீவோம்” பேசியவன் தந்தை மாரப்பன், கட்டுத்தரையில் கட்டப்பட்டிருந்த மாட்டின் மடியில் கறந்த பாலை வாங்கி சமையலறைக்கு கொண்டு சென்று விறகு அடுப்பில் காய்ச்சி இறக்கி வைத்து, காபி போட்டு எடுத்து வந்து தந்தைக்கு கொடுத்ததோடு தானும் குடித்தான்.

“இந்த காப்பித்தண்ணி குடிக்கத்தான் இத்தன கஷ்டமா?அந்தக்காலத்துல ஆரு இந்தக்கருமத்தெல்லாங்குடிச்சாங்க. பழைய சோத்து தண்ணிய வடிச்சு, மோரூத்தி ரெண்டு உப்பப்போட்டு, பச்ச மொளகாய, இல்லீன்னா சின்ன வெங்காயத்த கடிச்சுக்குடிச்சுப்போட்டு மம்முடிட்டிய தூக்கித்தோள்ள போட்டுட்டு போனா அரையனப்ப நிக்காம வெட்டிப்போட்டில்ல வருவாங்க. அதனால ஒடம்பும் தெடகாத்தரமா இருந்தது. நூறு வயசும் வாழ்ந்து போட்டு போனாங்க. ம்… என்னத்தையோ பேசி பேச வேண்டியத பேசாம உட்டுப்போட்டம்பாரு. ஒரெட்டு பேயி நல்லதங்காள நாங்கூப்புட்டான்னு கூப்புட்டு வா”

“என்னய்யா சொல்லற நீயி….? நாம்போயி எப்புடி கண்ணாலமாகாத பையன் அத்த கிட்ட சொல்லறது?”

“என்னடா பைத்தியகாரன் நீயி….? உன்னப்போயி உன்ற அத்தக்காரிகுட்ட பொண்ணக் குடுன்னா கேக்கச்சொன்னே…? ஐயங்கூப்பிடறாரு வான்னு சொல்லிப்போட்டு வரத்தான சொன்னேன்….”

சின்னப்பன் சொல்லி விட்டு வந்ததும் மறுசேலை மாற்றி கட்டாமல் கூட சேற்றுக்காட்டிலிருந்து நேராக அண்ணன் மாரப்பனைக்காண வந்து விட்டாள் நல்ல தங்காள்.

“இத பாரு தங்கா…‌ உம்பட குட்ட இது நாள்வெரைக்கும் அண்ணங்காரன் நானு ஒன்னுங்கேட்டதில்ல. நீ கேட்டு வந்தத இல்லீன்னும் சொன்னதில்ல. இப்ப ஒன்னு கேக்கறேன்….”

“கேளண்ணா…. நீ கேட்டு நானும் இல்லீன்னு சொல்லிப்போட்டு போயிருவனாக்கு…?” சொன்னவள் திண்ணையில் அமர்ந்தாள்.

“என்ற பெரிய பையன் கண்ணப்பனுக்கு உன்ற புள்ள அருக்காணியக் கொடுத்துப் போடோணும். இத நாஞ்சொல்லறான்னு நெனைச்சுப்போடாதே. செத்துப்போன நம்ம அய்யனம்மாளோட ஆசையாக்கு….”

“நானென்ன மாட்டேன்னா சொல்லறே…. பின்னைக்கும் பக்கத்துல கொடுத்துப்போட்டா வெசனமில்லாம அன்னாடும் சித்த வந்து எட்டிப்பாத்துட்டு போயிக்குவேன். அவளுகதான் மோட்டர்சைக்கிள் மேலயும், பிளசர் காரு மேலயும் ஆச வெச்சுட்டு வெளியூருக்கு, டவுனுக்கு வாக்கப்படோணும்னு ஆசப்படறாளுக”

இதைக்கேட்டு அதிர்ச்சியான மாரப்பகவுண்டர்” பவுனுக்கு ஆசப்படற பொம்பளப்புள்ளைகல பாத்திருக்கறேன். டவுனுக்கு ஆசப்படற பொம்பளப்புள்ளைய இன்னைக்குத்தாம் பாக்கறேன். டவுனுக்கு பொண்ணக்குடுத்தீன்னா பவுனப்புடுங்கி வித்துப்போட்டு புள்ளைய வெறுங்கழுத்தோட முடுக்கி உட்ருவாங்க. அந்த தப்ப மட்லும் பண்ணிப்போடாத தங்கா….” சொன்னவர் கண்களில் கண்ணீர் துளி எட்டிப்பார்த்தது.

அன்றிரவு தூங்காமல் தவித்தார். பல வகையில் யோசனைகள் வந்து போனது. எப்படியும் தங்கை மகள் அருக்காணியை தன் மூத்த மகன் கண்ணப்பனுக்கு கல்யாணம் செய்து வைத்து விட வேண்டும் என முடிவு செய்தவர் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த சின்ன மகன் சின்னப்பனை தட்டி எழுப்பினார்.

“ஏண்டா சின்னப்பா டவுன்ல ஓடற மோட்டார் சைக்கிள் ஒன்னு போயி வாங்கிப்போட்டு வந்திரலாம்” திடீரென எழ வைத்து தந்தை சொன்ன செய்தி இனிப்பாக இருந்தது.

“ஐயா நீ தான் பேசறியா? இல்லே அப்பாரய்யன், பாட்டையன், முப்பாட்டையன் உனக்குள்ள பூந்து பேசறாங்களா?” சொன்னவன் தன்னையே கிள்ளிப்பார்த்துக்கொண்டான்.

“பத்து வருசமா உண்டியல்ல காசு, பணத்த சேத்து வச்சு நாங்கண்ட கெனாவு இன்னைக்கு நெறைவேறப்போகுது…” சத்தமிட்டு சொல்லிக்குதித்தான் சின்னப்பன்.

“மோட்டார் சைக்கிள் வாங்கறதென்னமோ நீதான். ஆனா அதையோட்டறவன் உன்ற அண்ணங்காரனாத்தான் இருக்கோணும். நல்லா சோக்கா புல்பேண்ட் போட்டுட்டு ஓட்டோணும். அப்பத்தா நல்லதங்கா பொண்ணு அருக்காணிக்கு அவனப்பாத்தா டவுனுக்காரனாட்டத்தெரியும். கட்டிக்கறதுக்கு ஒத்துக்குவா..‌.”

தந்தை சொன்னது விசனத்தைக்கொடுத்தது சின்னப்பனுக்கு. தவிர அண்ணன் கண்ணப்பன் சைக்கிள் ஓட்டுவதையே அதிகம் விரும்பாதவன் பைக்கை தொடவே மாட்டான். அதனால் ஓட்டும் வாய்ப்பு தானாகவே தனக்கு வந்து விடும் என நினைத்தவன் தந்தை யோசனைக்கு செவி மடுத்தான்.

“புல்லட் பைக்கீ மாரப்பகவுண்டமூட்டுத்தோட்டத்துல நிக்கிறத பாக்கப்போகலியா…?” என ஊரில் பலரும் பேசிக்கொள்ள, அருக்காணியும் தனது தாய் நல்லதங்காளை அழைத்துக்கொண்டு வந்து விட்டாள்.

“மோட்டார் சைக்கிள் மட்டுமில்ல தங்கா…. அடுத்த பட்டம் வெள்ளாமைய எடுத்து மழைல நனையாம, வெயில்ல காயாம போறமாதர பிளசர் காரும் வாங்கத்தாம் போறேன்னு வெச்சுக்கவே….” பெருமை பொங்கச்சொன்னார் மாரப்ப கவுண்டர்.

மாமன் சொன்னதைக்கேட்ட அருக்காணி புள்ளி மானைப்போல் துள்ளிக்குதித்தாள். கண்ணப்பனைப்பார்த்து முதலாக வெட்கப்பட்டாள். கண் சிமிட்டி காதலைச்சொன்னாள். 

காரில் செல்ல வேண்டும் எனும் விருப்பத்தால் டவுன் மாப்பிள்ளை கேட்டவள், தன் மாமனே கார் வாங்குவதாக சொன்னதும் மாமன் மகனையே திருமணம் செய்து கொள்ள மனம் மாறினாள். தனது தாயிடம் ‘இப்பவே கண்ணாலத்துக்கு சம்மதம்னு சொல்லு’ என அவசரப்படுத்தினாள்.

‘பாலையாப்போன நெல்லு எப்புடி அடுத்த பட்டம் கார் வாங்க காசாகும்? இதத்தான் பொய்யைப்பொருந்திப்பேசுன்னு நம்ம முன்னோர்கள் சொன்னாங்களோ….?’ என யோசித்தபடி சின்னப்பன் காட்டிற்குள் மேய்ந்துகொண்டிருந்த மாட்டைப்பிடிக்கச்சென்றான்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *