கண்ணகி
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: செம்மலர்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 3, 2025
பார்வையிட்டோர்: 95
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அப்ப நான் ரொம்பச் சின்னப் பையன். பையன் பையன். பையன் என்று சொன்னால்… மூணாப்பு, நாலாப்புப் பையன் மாதிரி யில்லை. பதினைந்து பதினாறு வயது இருக்கும். நாலு முழவேட்டியும், கைப்பனியனும் தான் போட்டிருப்பேன்.
எங்க ஊர் பெரியாட்களுக் கெல்லாம் எவ்வளவு விபரம் தெரியும்? எனக்கு எவ்வளவு தெரியுமோ… அவ்வளவு தான். கிராமத்தாட்கள். எழுதப்படிக்கத் தெரியாத பாமர ஜனம். கையெழுத்தை இங்கிலீஷ்லே போடத் தெரிகிற அளவுக்குப் படிப்பு படித்திருந்தாலும்… இருந்த ஊரே முதலைக்கு வைகுந்தங்கிற மாதிரி… சுத்துப்பட்டி எங்கும் சுற்றிப் பார்க்காமல் அனுபவக்குறைவாக இருப்பார்கள். விபரக்குறைவுதான். அதனாலே பதினாறு வயசுப் பையன் மட்டத்துலேயே மொத்த ஊர்ஜனமும்.
எனக்கு அவ்வளவாக விபரம் தெரியாது. ஊருக்குள் சுற்று வதோடு சரி… எனக்கு சிவகாசி கூட எங்கோ இருக்கிற சீமைதான். பதினைந்து மைல் தூரத்தில் இருக்கிற இராச பாளையம் வட்டமா, சதுரமா என்பதுகூடத்தெரியாது எனக்கு அப்போது.
அப்ப எங்களுக்குத் தெரிந்த சர்க்கார் என்றால்… அது கர்ணம் தான். ஜில்லாக் கலெக்டருக்கும் மேலே அவருக்குப் பவர் என்று சொல்வார்கள். அவர் சொன்ன படிதான் சர்க்கார் நடக்கும். இவர் பார்த்து ஒரு கோடு கிழித்துவிட்டால்… அது பிரம்மன் எழுதிய தலையெழுத்தை விட கூடுதலான உத்தரவு என்று பெரிசுகள் பேசும் பிரமிப்பாய்.
அது நிஜம்தான் என்ற நம்புகிற மாதிரிதானிருந்தது. நடப்பு. வீட்டு வரி வசூல், நிலவரி வசூல் எல்லாம் அவர்தான். யாரும் குத்தம் செய்தால்… பிராது கொடுப்பதுவும் அவர்தான். கொடுக்காமலிருக்கவும் அவருக்குத்தான் முடியும்.
கிராமக் கர்ணம் என்றால்… ஆள் நல்ல சிவப்பு. நெடுநெடு வென்று வளர்ந்த உயரம். உயர்ந்த அளவுக்கு உடல் பருமன் கிடையாது. காய்ந்த வாளைக் கருவாடு மாதிரியிருப்பார்.
மஞ்சளப் பிளந்தால் ஒரு நிறம் இருக்குமே… அப்படியொரு பொன்னிறம். மழுங்கச் சிரைத்த முகம். தீத்துக் கல் வைத்துத் தேய்த்த மாதிரி வழுவழுப்பு. எந்நேரமும் வெத்தலைச் சிவப்பு. ரத்தக்கனிவான கீழுதடு. நெற்றியில் திருநீறு. சாக்பீஸ் துண்டு சைஸ். நடுவில் குங்குமம். குழைத்து வைத்த சின்ன வட்டம். நீர்த்துளியளவு.
ஊர் ஜனம் முழுவதும் துவைத்துத் துவைத்து நிழலில் காயப் போட்டு துவர் பழுப்பு நிறமாகிப் போன வேட்டியைத் தான் கட்டியிருக்கப் பார்த்திருக்கிறேன். ஒன்று, முழங்காலுக்குக் கீழே வரை தொங்குகிற மாதிரி உடுத்தியிருப்பார்கள். அல்லது தார்ப்பாய்ச்சி கட்டியிருப்பார்கள்.
ஆனால், கிராமக்கர்ணம் அப்படியில்லை. எதிலும் தனி மாதிரி. தேவலோகத்துலேயிருந்து இறங்கி வந்த அதிசய புருஷன் மாதிரி நீலம் முக்கின தும்பைப்பூ மாதிரியான ஒரு பளீர் வெள்ளை வேட்டி. கண்ணை உறுத்துற வெள்ளி மின்னல். ராசாராணி வேட்டி. நாவில் பட்டால் நனைந்துபோகும். அத்தனை மெல்லுசு அதையும் கணுக்கால் மறைகிறமாதிரி கட்டியிருப்பார். கட்டியிருக்கிற முறையிலும் ஒரு நேர்த்தி. ஓர் ஒழுங்கு. ஓர் அழகு. வேட்டியின் பார்டர் ஒரு ஓவியம் போலத் தெரியும். மடித்துக்கட்டினால் அதிலும் ஒரு புதுமை. முழங்கால் மட்டும் தெரிகிற மாதிரி மடித்துக் கட்டியிருப்பார். நேர்த்தியும், கச்சிதமுமான மடிப்பு.
அவரைவிட பத்துவயது மூத்தவர் தலையாரி. தலையாரி வயதுதான் வெட்டியானுக்கு.
ஆனா… கிராமக்கர்ணம் ரெண்டுபேரையும் ‘டேய்’ போட்டுத் தான் பேசுவார். இல்லையென்றால் ‘ஏலேய்’ என்பார். அவர் வரிவசூலுக்கு வருகிறார் என்றால்… ஒரே ராஜ தர்பார்தான். ராஜாவின் தர்பாரே தெருவில் நகர்ந்து வருகிற மாதிரிதான்.
ராஜா மாதிரி வருவார், கர்ணம். நிமிர்ந்த முகம். ஏந்திய நெஞ்சு, அதிகாரமிடுக்கான பார்வை. எண்ணெய் தேய்த்து வழு வழுவென்று சீவியிருப்பார். வெயிலுக்கு எண்ணெய் மின்னும். கிராமத்து ஜனம் பார்த்திருக்காத நவீன ரகச் செருப்பு. நடந்தால்… சிலுக்குச் சட்டை உரசுற மாதிரி சொரப், சொரப்பென்று ஒரு சத்தம் வரும்.
தலையாரி தலையில் கயறு போட்டு கட்டிய நாலைந்து பேரேடுகள் இருக்கும். கனத்த கனத்த பேரேடுகள். வலது கையில் போலீஸ்காரர் வைத்திருக்கிற மாதிரியான லத்திக் கம்பு. நெஞ்சு மட்டத்துக் கம்பு. பயந்து பம்மிப் பதுங்கித்தான் பின் தொடர்வார்.
வெட்டியான் தலையில் வெள்ளைத்துணியில் பெரிய பொட்டலமாகக் கட்டிய சர்க்கார் கணக்கு. இடது கையில் சாக்குத்துணியில் தைத்த பெரிய பைக்கட்டு. அது நிறைய பேரேடு நோட்டு. தலையாரிக்குப் பயந்து பம்மிப்போய் வெட்டியான்.
தலையாரி சித்திரகுப்தன் மாதிரி. திறமையான கணக்கர். எல்லார் பெயரும் அத்துப்படி. அவரவர் புஞ்சைகளின் சர்வே நம்பர், பசலி, தீர்வை, சர் சார்ஜ், புஞ்சைகளின் அத்துமால் (எல்லை) எல்லாமே மனப் பாடம் அவருக்கு. நுனி நாக்கில் ஊர் கணக்கே உட்கார்ந்திருக்கும்.
“ஏலேய்… சுப்ரமணியம் மகன் தீர்வை போட்டுட்டானா?”
“போட்டுட்டான், சாமி. ஆனா…”
“என்னலேய்… ஆனா?”
“ரசீது போட்டுக் குடுத்துட்டோம் சாமி, ரூவா இன்னும் வரலே.”
“எம்புட்டு?”
“மூணு ரூவாயும் பதினொன்றரையணாவும் சாமி.”
“நாளைக்கு வசூல் பண்ணிரு… தரலேன்னா வீட்டுக் கதவைப் புடுங்கிட்டு வந்து ஊர் மடத்துலே போட்டுரு.”
பயப்பதைப்பில் பவ்யமாகப் பேசி வந்த தலையாரி, இந்தக் கடைசி அதிரடி உத்தரவில் அரண்டேபோனார்.
செம்மறிக் கிடாய் கொம்பு மாதிரி திருகல் முறுகலாக நிமிர்ந்திருந்த மீசையே காற்றுக்கு அதிர்ந்து நடுங்கியது.
“கதவைப் புடுங்கிறவா சாமி?”
“காசு வரலேன்னா… கதவைப் புடுங்கு. அப்பத்தான் மத்தப் பயக பதறிக்கிட்டு ஒழுங்கா நடப்பான்ங்க. தாசில்தாரு சொன்ன டயத்துலே ஜமாபந்தி முடிச்சுக் காட்டணும்லே?”
கர்ணம் காரியம்பூராவும் இப்படித்தான் அதிரடியாக இருக்கும். தடாலடியாகச் செய்வார். தாட்டியமாகச் செய்வார். அவரைப் பார்த்தால், கொம்பாதி கொம்பன், வில்லாதி வில்லனெல்லாம் சொரூபத்தைச் சுருட்டிப் பம்மிப் பதுங்கிவிடுவான்கள். கில்லாடி களெல்லாம் பயந்து ஒதுங்குவார்கள்.
“ஏலேய் தலையாரி…”
“என்னா… சாமி?”
“கண்ணப்பக் கோனாருக்கு என்னென்ன நம்பர் இருக்கு?”
“27/122 Aலே எழுவத்தேழு செண்ட்… 24 /228 Bலே ஒண்ணேமுக்கா ஏக்கர்… 12/132 சர்வே நம்பர்லே மூணு ஏக்கர் முப்பது செண்ட்…”
“தீர்வையை போட்டுறலாமா?”
“ம்… அவரு ஊர்லே இல்லே”
“எங்கே போயிருக்கான்?”
“பட்டாளத்துலே ஆபிசராயிருக்குற மகனைப் பாக்கப் போயிருக்காரு…”
“பட்டாளத்து ஆபிஸர்னா… பெரிய கொம்பா? அவரையே புடிச்சு, கேஸ்லே போட்டு உள்ளே தள்ள முடியும்… இந்தக் கர்ணம் நெனைச்சா.. தெரியுமா?”
கம்பீர பெருமிதமாகக் கேட்கிற கர்ணம். தலையாரிக்குக் குலை பதறி வந்தது. குடலைப் புரட்டுகிற மாதிரியோர் திகில்.
“ஆமா சாமி… ஆமா சாமி” என்று பயத்தில் ஒத்துப்பாடினார் தலையாரி. வேறு வழி தெரியவில்லை.
“ஏலேய் வெட்டியான்…”
“என்ன சாமி…?”
“இந்தத் திண்ணையிலே பொட்டலத்தை எறக்கு. ஏய் தலையாரி, நீ கணக்குப் பொஸ்தகத்தை எடு… கண்ணப்பனுக்கு தீர்வையைப் போட்டு ரசீதை வீட்லே, குடுத்துருவம். ஜமா பந்திக்குள்ளே ரூவா வந்தாகணும்னு கண்டிஷனா சொல்லிரு…”
“ஆட்டும் சாமி…”
திண்ணை நுனியில் கர்ணம் சம்மணக்கால் போட்டு உட்கார்ந்தார். வெற்றிலைப் பெட்டியைத் திறந்தார். பித்தளைப் பெட்டி. கொட்டைப் பாக்கு. தளிர் வெற்றிலை. சிவப்புச் சுண்ணாம்பு. பன்னீர்ப் புகையிலை. வாசம் மணந்தது. வெற்றிலையைக் குதப்பினார். இரண்டு உதடுகளையும் இறுக அழுந்திக் கொண்டு எச்சிலைத் துப்பினார். அரை வட்டமாக எம்பி… தூரத்தில் விழுந்தது.
சம்மணக்கால் போட்டிருந்த கர்ணம் தொடையில் கணக்குப் பொஸ்தகத்தை விரித்தார். கார்பன் பேப்பரை பக்கம் மாற்றிச் சொருகினார். எழுதுகிற பென்சில் எழுத்து நீல நிறத்தில் அடியில் விழுவதை மாயமந்திரத்தைப் பார்க்கிற மிரட்சியான பிரமிப்போடு கிராமத்தாட்கள்.
கர்ணத்துக்கும்… அவருடைய அதிகாரத்துக்கும் பயப்படாத ஆட்களே கிடையாது. அண்ணன் தம்பி குடும்பத்துக்குள் அடிதடி. வெட்டுக்குத்து வரை போய்விட்டது. ரெண்டு பேருக்கும் ரத்தக்காயம்.
அண்ணன்காரன் பிராது கொடுத்தேயாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றான். “எத்தனை ஆயிரம் செலவா யிட்டாலும் சரி… இந்தப் பயலை ஒரு நா ஒரு பொழுதாச்சும் ஜெயில்லே வைக்கலேன்னா… நா எங்கப்பனுக்குப் பொறக்கலே” என்று வன்மம் கூறினான்.
பழி உணர்வின் வெறியில் ‘தங்கு, புங்’கென்று குதித்தான். பயங்கரமாய் சாமியாடினான், ஆகாயத்துக்கும், பூமிக்குமாக.
கிராமத்தாட்கள் சொன்ன நல்ல வார்த்தைகள், கெஞ்சல் சமாதானம் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
கர்ணம் பிராது எழுதிவிட்டார். வாதி, பிரதிவாதி, சாட்சி என்று எல்லாரிடமும் கையெழுத்தும், கை நாட்டுகளும் வாங்கினார். பிராதை கிழித்துத் தலையாரியிடம் கொடுத்துக் காதுக்குள் மந்திரம் ஓதி அனுப்பிவிட்டு… அண்ணன்காரனிடம் கணிசமான ஒரு தொகையையும் வாங்கிக் கொண்டார்.
அப்போது கச்சேரி, பதிமூன்று மைல் தாண்டி ஓர் ஊரில். போலீஸ் இப்ப வந்துரும், பெறகு வந்துரும்னு ஊரே திகிலோடு காத்துக்கிடந்தது. போலீஸ் என்றால், எமதூதர் மாதிரிதான், ஜனங்களுக்கு. ரொம்பப் பயம். குடல் நடுங்கிப்போன சிலர், பதற்றத்தில் மாமா வீட்டுக்குப் போறேன், சித்தப்பா ஊருக்குப் போறேன் என்று புடுங்கிக்கொண்டார்கள்.
ஊருக்குள் கதை கதையாகப் பேச்சு. விதம்விதமாக விவாதம். கேஸில் சிக்கிச் சீரழிந்த கதைகள். கோர்ட் படியேறி குடிமுழுகிப் போன கதைகள். வழக்குகளில் நாசமாகிப் போன குடும்பக் கதைகள்.
கதை கேட்க, கதை கேட்க… அண்ணன்காரனுக்கு வயிற்றைக் கலக்கியது. நாலைந்து தடவை ஓடைக்குப் போய் வந்தான்.
‘கேஸும் வேண்டாம், மண்ணும் வேண்டாம்… விட்டால் போதும் ‘என்ற மனநிலைக்கு வந்துவிட்டான். கர்ணம் வீட்டுக்கு நடையாய் நடந்தான்.
“ஏலே, பிராது குடுத்துட்டு, எப்படி வாபஸ் வாங்க முடியும்லே?” என்று ஏகப்பட்டு “லா பாயிண்டு”களைப் பேசி மிரட்ட மிரட்ட, அண்ணன்காரனுக்கு ஓடைக்கு ஓடணும் போலிருந்தது.
வியர்த்துக்கொட்டியது. தொடைச்சதைகள் கிடு கிடுவென்று நடுங்கின.
மறுபடியும் கணிசமான தொகையை வாங்கிக் கொண்டார். தலையாரிக்கு காதுக்குள் மந்திரம் ஓதி, அனுப்பி வைத்தார்.
பிராது வாபஸ் என்ற சேதி வந்த பிறகுதான்.. அண்ணன் காரனுக்கு மட்டுமல்ல… சிவப்புக்குல்லா தொப்பிக்குப் பதறிப் போய் கிடந்த ஊருக்கே… உயிர் திரும்ப வந்தது.
ஊரையே நடுங்க வைக்கவும், உயிர்கொடுக்கவும் கர்ணத்தால் முடியும் என்ற விஷயத்தில்… கர்ணம், விசுவரூபமாகத் தெரிந்தார். ஊராரின் பார்வையில். குதிரை ஏறிசாமத்தில் வேட்டை நடத்தும் அய்யனார் சாமி மாதிரி இவரை கும்பிட்டார்கள்.
‘சாமி… சாமி… சாமி..’ என்று ஒரே சரணாகதிதான். பயந்து செத்தார்கள். வெத்தலை என்று கர்ணம் சொல்வதற்குள், பாக்கு, சுண்ணாம்பு, வாசனைப் பன்னீர் புகையிலை என்று படையல் செய்யத் தயாராக இருந்தார்கள்.
ராஜ நடைதான் கர்ணத்துக்கு. அவரை நிமிர்ந்து பார்க்கவே எவருக்கும் பயம்தான். அவர் வாடை பட்டாலே… எல்லாரும் எழுந்து நின்று, “கும்புடுதேன் சாமி” என்று குழைந்தனர்.
புறம்போக்கு நிலங்களை யாருக்காவது ஜாரி பண்ணித் தருவார். ராஜா தானம் தருகிற மாதிரி… இந்தா… இதை வைச்சுப் பொழைச்சிட்டுப்போ என்பார். ஆனால், உளுந்து, நெல், எள், தட்டப்பயறு என்று அவனிடம் ஒரு வேட்டையும் நடத்தி விடுவார்.
நிலத்தையே பட்டாப் போட்டுத் தருகிற ராஜ அதிகாரம் இவருக்கு இருக்கிறது என்றான பிறகு… அவருடைய தர்பாருக்கு ஏகப்பட்ட மரியாதைகள். தடபுடல் உபசரிப்புகள் உள்ளுக்குள் ஏகப்பயம்.
கர்ணத்துக்கு ரெண்டு குடும்பம். பத்து ஒன்று அடங்கல் வாங்கப் போகிற போதெல்லாம்… கர்ணம் சின்ன வீட்டு சிங்காரியோடு இருப்பதைப் பார்ப்பார்கள், சம்சாரிகள். சிங்காரியின் அழகையும், சிரிப்பின் லட்சணத்தையும், தேவதைப் பிரகாசத்தையும் மாயலோகக் கதை போலப் பேசுவார்களே தவிர… யாரும் குற்றமாகப் பேசத் துணிந்ததே யில்லை. கர்ணம் சாமி என்றாலே… எல்லோருக்கும் கடவுள் சாமி தான்.
கர்ணம், சங்கரலிங்க நாடார் திண்ணையில் உட்கார்ந் திருந்தார். தலையாரியும், வெட்டியானும் பக்கத்தில் பவ்ய பணிவோடு நின்றனர்.
கோனாக்கமார் தெரு, நாடாக்கமார் தெரு, நாயக்கமார் தெரு, தேவமார் தெருவுக்கெல்லாம் போய், திண்ணைகளில் கேம்ப் போட்டு தர்பார் நடத்துவார், கர்ணம். சக்கிலியக்குடிக்கும், பறைத்தெருவுக்கும் மட்டும் போகமாட்டார். வெட்டியானை அனுப்பி, ஒவ்வொருத்தராக அழைத்து வந்து… நிறுத்தி… அதட்டி மிரட்டி வசூல் பண்ணுவதுதான் வழக்கம். அவர்களும் தோள்த் துண்டை குடங்கையில் போட்டு கும்பிட்டுப் பணிவார்கள்.
அங்குப் போவதைப் பத்தி கர்ணம் எப்பவும் யோசித்ததே யில்லை. தலையாரிக்கும் அந்தத் தெருக்களுக்குப் போவதில் அசூயை உண்டு. முறுக்கும் மீசைக்குக் கீழே உதடுகள் அருவருப்பில் சுழிக்கும்.
“ஏலேய் வெட்டியான்…”
“என்ன சாமி?”
“கீழத்தெரு பூராவும் தண்டல் முடிஞ்சதா?”
“தீர்வையெல்லாம் முடிஞ்சது, சாமி.”
“ம்?”
“வீட்டுவரியிலே ஒண்ணெ ஒண்ணுதான் பாக்கி”
“எவண்டா… அது?”
“தேவசகாயம்…”
“அது யார்லே… தலையாரி?”
ராஜாவின் அதிகாரத் தொனியிலான கர்ணத்தின் கேள்வி. வெற்றிலைச் சிவப்பான உதட்டின் கோபத்துடிப்பு.
வேதக்காரச் சாமியாரு சப்போர்ட்லே படிச்சுட்டு வாத்தியார் உத்தியோகத்துக்காகக் காத்துருக்கானே… அவன்தான்.
“வீட்டுவரி ரசீது போடலியா?”
“இல்லே சாமி…”
“கேட்டுப் பாத்தீயா?”
“ஒரு தரமில்லே… நூறுதரம் கேட்டுப் பாத்துட்டேன் சாமி..”
“என்ன சொல்லுதான்?”
“அதை நீங்கதான் போய்க் கேக்கணும்… சாமி”
“நானா? அந்தத் தெருவுக்கா?–ப்பயத் தெருவுக்கு நா… போகவா ?” ஏளனமும், கோபமுமாய்ச் சீறிய கர்ணம்.
“ஏலேய் வெட்டியான்… போய் அந்தப் –ப் பயலை நா சொன்னேன்னு சொல்லிக் கூட்டிட்டு வாலே…”
வெட்டியான் தயங்கினான். எதையோ மென்று விழுங்கினான். போக விருப்பமில்லாமல் மருகினான்.
அதைக் கவனித்த கர்ணம், அதட்டலாகக் கத்தினார்.
“போலே… போய் கூட்டிட்டு வா, அந்த நாயை”
வெட்டியான் மருகி மருகி… மனசில்லாமல் போனான். சற்று நேரத்திற்கெல்லாம் வெட்டியானோடு தேவசகாயம் வந்தான். நாலுமுழு வேட்டி, கட்டம் போட்ட அரைக்கைச் சட்டை, காலில் செருப்பு, கையில் ரிஸ்ட் வாட்ச், வாலிப வயது.
அவனது அந்த உடைநேர்த்தி படிப்பு வாசம் கர்ணத்துக்குள் தீயை வைத்தது. பற்றிக்கொண்டு எரிந்த கோபம். மனசுக்குள் தீயின் சீற்றம், ஆத்திரக் கனல்.
“-ப்பய மாதிரியா வாரான்? என்னமோ… பெரிய ஆபிசர் கணக்கா வாரானே…! அவன் சட்டையும் … வாட்சும்…!”
வந்துநின்ற தேவசகாயம். அவனது அடர்கறுப்பு நிறம்.
“என்ன… கூப்புட்டீகளா?”
“ம்…”
“எதுக்கு?”
“வீட்டு வரி தரல்லியா, நீ?”
“தரல்லே”
“ஏன் தரல்லே?”
“எல்லார் தெருவுலேயும் போய் வசூல் பண்றீக? எங்க தெருவுலேயும் வந்தா… பணம் தர்ரேன்…”
“உங்க தெருவுக்கு நா வரணுமா?”
மிரட்டலும், அதிர்வுமான ஒரு குரலில் கர்ணம்.
“எங்க தெருவுக்கு மட்டும் வரல்லேன்னா… அதுக்குப் பேரு, தீண்டாமை. தீண்டாமை சட்டப்படி குத்தம்ங்கறது, கவர்மெண்ட் எம்ப்ளாய் ஒங்களுக்குத் தெரிஞ்சுருக்கணும்”
“ஏலேய்…ய்ய்…”
பீறிட்ட மாதிரி ஆத்திரத்தில் கத்திய கர்ணம். இப்படி ஒரு எதிர்ப்பை – வெளிப்படையான மறுப்பை – எதிர்பார்க்க வேயில்லை, அவர். ராஜாவாக இருந்து தர்பார் நடத்துகிற அவரையே அரசாங்கக் குற்றவாளியாக விரல் நீட்டிச் சுட்டிக் காட்டுகிற இந்தத் துணிச்சல், ரொம்ப அத்துமீறலாகத் தோன்றியது.
இவரது கத்தலுக்குப் பிறகும் பயப்படாத தேவசகாயம் அதிராமல் – துணுக்குறாமல் – மென்னகை புரிகிற அவன்.
“ஏலே…. ஒலேய்னெல்லாம் சொல்லவேண்டாம், சார், ஒலைபனை மரத்தோப்புலே கெடக்கும். போய் எடுத்துக்கங்க… அதுக்கு மேலே பேசுனா… சரிப்பட்டு வராது” ரோஷமாய் அழுத்தமாய் – பேசிய தேவசகாயம்.
“சரிப்பட்டு வராதா? என்னடா செய்வே? தொலைச்சுரு வேண்டா–ப்பயலே’
“தீண்டாமை ஒழிப்புச் சட்டப்படி நீங்க செய்தது குத்தம். இப்ப சாதியைக் குறிச்சு இழிவாப் பேசியிருக்கீக. அதுவும் குத்தம். நா தீண்டாமை எதிர்ப்புக் கோர்ட்டுக்குப் போறேன்… மத்ததை கோர்ட்லே பாத்துக்கிடுவோம்…”
தேவசகாயம் திரும்பி நடந்தான். பதற்றமில்லாத துணிச்சலோடு நடந்தான்.
சுற்றி நின்ற கிராமத்தாட்கள் வியப்போடு தேவசகாயத்தின் முதுகையே பார்த்தனர். ஆச்சரியத்தில் திணறிப் போயினர். இப்படியும் நடக்குமா? இப்படியும் ஒரு மனுசனா?
“என்னடா இது… ராஜா மாதிரி கர்ணம் சாமி. அந்தச் சாமியையே ஒருத்தன் குத்தம் சொல்லிட முடியுமா? இவன் என்ன அம்புட்டுப் பெரிய கொம்பனா?” என்று முணுமுணுக்காத குறையாகப் பார்த்தனர்.
இத்தனை பேர் மத்தியில் ஒரு –ப்பயல் வந்து, அவமானப் படுத்திட்டானே என்கிற ஆத்திரம். தீண்டாமைக் கோர்ட்டைப் பற்றிய பயம் வேறு.
கர்ணம் தத்தளித்தார். தர்மசங்கடத்தில் நெளிந்தார். வீரன் ஜெம்புலிங்கம் மாதிரி… மலையூர் மம்பட்டியான் மாதிரி… நடந்து போன தேவசகாயத்தையே எல்லாரும் வியப்பும், மறைமுக மகிழ்ச்சியுமாக பார்த்தனர். நானும் பார்த்து நின்றேன்.
ஆசிரியர் தேவசகாயத்தின் மகன் இப்போது கேரளாவில் மாவட்ட ஆட்சியராக இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.
– ஜனவரி 1999, செம்மலர்.
– என் கனா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 1999, வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
