கட்டு உடைந்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2025
பார்வையிட்டோர்: 323 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தினத்தாள் படித்துக் கொண்டிருந்த டாக்டர் நளினி மயக்கம் போட்டு சோபாவில் சாய்ந்தாள்.

ஓடிவந்து தம் மார்போடு அணைத்துக் கொண்டார் டாக்டர் எபனேசர்.

“நளி, என்ன ஆச்சி?” பரிவுடன் கேட்டார் கணவர் எபி. மாமியார் குளிர்ந்த தண்ணீரை முகத்தில் தெளித்து கைக்குட்டையால் துடைத்தாள். அதனைத் தடுத்த நளினி ‘என்னை அமைதியாக இருக்க விடுங்கள்’ என்று சொல்லி எழுந்தாள். சூடாக ஒரு தம்ளர் பால் கொண்டு வருவதற்குள் மாடிக்குச் சென்று விட்டாள்.

சிறிது நேரம் கழித்து அவள் நன்கு தூங்குவதைக் கண்ட டாக்டர் எபி மேலே யாரையும் அனுமதிக்கவில்லை.

பத்திரிக்கையில் அப்படி என்ன செய்தி இருந்தது?

கட்டம் கட்டி முக்கிய செய்தியாக ஒரு மாணவியின் பேட்டி இருந்தது. அதனைப் படித்த நளினியின் உடல் சிலிர்த்தது, வேர்வை கொட்டியது. மயக்கமானாள்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருந்த மாணவியின் படம் மூன்று வண்ணங்களில் அழகாக முதல் பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. ‘நான் பெரிய டாக்டராகி ஏழைகளுக்கு இலவச சிகிச்சை செய்வேன்’ என்று கூறியது முத்திரைச் செய்தியாக முக்கியத்துவம் பெற்றிருந்தது.

நளினியின் மனத்திரையில் கடந்த காலக் காட்சிகள் பல பளிச்செனத் தோன்றின.

சரியாகப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு-பள்ளி இறுதித் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றேன். புகைப்படக்காரர்கள் வந்து பல கோணங்களில் ‘கிளிக்’ செய்தனர். பத்திரிக்கைக்காரர்கள் பல கேள்விகள் கேட்டார்கள்.

நீங்கள் என்ன வேலைக்குப் போவீர்கள்?

டாக்டராவேன்?

உங்கள் இலட்சியம் என்ன?

பிளஸ் டூ தேர்விலும் முதல் மதிப்பெண் எடுப்பேன்,

டாக்டராகி ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவம் செய்வேன்.

இச் செய்தி அனைத்து இதழ்களிலும் ஒளிமயமாக வெளியாயின.

பல அமைப்புகளிலிருந்து பரிசுகள் குவிந்தன. உள்ளூர் பொதுநலச் சங்கத்திலிருந்து பாராட்டும், பரிசும் பெற அழைத்தார்கள். படித்த பள்ளியிலிருந்தே பணமுடிப்புக் கொடுத்தார்கள். ஒரு தினப் பத்திரிக்கையி லிருந்து திரண்ட தொகை கிடைத்தது. சக மாணவர்கள் அகம் குளிர்ந்து பாராட்டினர். பெற்றோர் பூரித்துப் பொங்கினர், நான் திக்கு முக்காடிப் போனேன்.

பன்னிரண்டாம் வகுப்பிலும் முதல் தரமாக வந்தேன். மருத்துவக் கல்லூரிகளிலிருந்து மாலைபோட்டு அழைத்தனர்.

டாக்டர் நளினி எம்.பி.பி.எஸ் முடித்து இதயநோய் பிரிவில் வல்லுநர் ஆனார். டாக்டர் எபனேசர் எம்.டி. அவர்களை நளினியின் பெற்றோர் பல இலட்சங்கள் கொடுத்து விலைக்கு வாங்கினர். அதற்காக நளினி நிறைய சம்பாதிக்க வேண்டி இருந்தது.

எப்போதாவது இதயத்தின் அடி ஆழத்தில் ஏழைகள் நினைவு வந்து மறையும். திருமணம் மிகச் சிறப்பாயிருந்தது. அதுவும் கூட பெரிய வசூல் விழாவாயிற்று.

இருவரின் ஒருமித்த உழைப்பால் மருத்துவ வருமானம் பெருகியது.

ஒருநாள் கணவனிடம் கிசுகிசுத்தாள்:

‘இதய நோயால் அவதிப்படும் ஆழ்வாருக்கு சற்று சலுகை காட்டுவோம். பாவம், ஏழை வர்த்தகக் குமஸ்தா’ என்றாள்.

‘நளினி, பொருள் இல்லார்க்கு இவ்வுலம் இல்லை,கார் வாங்கி விட்டோம். மூவாயிரம் சதுர அடியில் வீடுகட்டிக் கொண்டிருக்கிறோம். இன்னும் நவீன கருவிகளுடன் கூடிய பெரிய மருத்துவமனை கட்ட வேண்டும். நமக்கு இன்னும் கோடாகோடிக்குத் தேவைகள் உள்ளன. நோயாளிகளிடமிருந்துதான் பணத்தைக் கறக்க வேண்டும். தயவு தாட்சணயங்கள் நயா பைசாவுக்கும் செல்லுபடி ஆகாது’ என்று ஈவு இரக்கமற்றுப் பேசினார் டாக்டர் எபி.

பணக்கணக்கு டாக்டர் எபியின் கண்டிப்பான கண்ட்ரோலில் இருந்தது. தேவைகளின் அடிப்படையில் டாக்டர் நளினி, டாக்டர் எபியின் செல்லப் பிராணியாகவும் பொருளாதார அடிமையாகவும் ஆகி விட்டாள்.

ஆணாதிக்கம் கொடிகட்டிப் பறந்தது.

வருடா வருடம் மாநில அளவில் மதிப்பெண் பட்டியல்களும் . மாணவர்களின் பேட்டிச் செய்திகளும் வந்து கொண்டே இருந்தன.

‘நான் கலெக்டராகி நீதி செய்வேன்’

‘நான் மந்திரியாகி சுத்தமாக வாழ்ந்து காட்டுவேன்’

‘நான் பொறியியல் வல்லுநராகி பொதுப்பணித் துறையில் ஊழல் இல்லாமல் மாதிரி காட்டுவேன்’.

‘நான் நரம்பியல் டாக்டராகி அனைவருக்கும் இலவச மருத்துவம் செய்வேன்’. இப்படிச்சய்திகள் வருடாவருடம் வந்து வந்து மரத்துப்போயின.

எபி மருத்துவமனை பற்றி…

பிரசவவேளையில் அவசியமில்லாமல் ஆயுதகேஸ் ஆக்கி விடுகிறார்கள்.

ஏழைகள் புகமுடியாதவாறு பீஸ் அதிகம் வாங்குகிறார்கள்

டாக்டர் நளினிக்கு நல்ல மனம் உண்டு, ஆனால் அவர்களால் ஒன்றும் பண்ண முடியாது. இப்படி மக்கள் பரவலாகப் பேசினார்கள்.

எபி மருத்துவ மனையின் ஆடம்பரத் தேவைகள் பெருகின. இரண்டு கார் போதாது, நான்கு வேண்டும். அனைத்தையும் கம்ப்யூட்டர் மயமாக்கல் அவசியம். இப்படியாக அனுமார் வால்போல் தேவைகள் நீண்டன.

அவர்களின் மருத்துவமனையில் ஒரு பரிதாபமான கேஸ். அண்ணாமலை என்ற ஒரு தொழிலாளிக்கு இருதய நோய். இரண்டு வாரத்திற்குள் லட்சத்திற்கு மேல் செலவாயிற்று. இன்னும் பத்து நாட்கள் சிகிச்சை செய்தால்தான் சுகம் கிடைக்கும்.

பணம் காரணமாக நோயாளிக்கு மருத்துவம் நிறுத்தப்பட்டது. விடிந்தால் அண்ணாமலையை வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். அண்ணாமலை வீட்டார் டாக்டர் எபி காலில் விழுந்து கெஞ்சி வேண்டினார்கள்.

“பணம் இல்லாமல் ஒன்றும் நடக்காது, வீட்டிற்குப்போய் கைப் பக்குவமாப் பாருங்க” என்ற சொல்லி ஒரே மறுப்பு.

அன்று இரவு நளினிக்குத் தூக்கமேயில்லை.

‘அண்ணாமலையின் உயிரை நாம் காப்பாற்றலாம், வீட்டிற்கு அனுப்பினால் உயிர்போய்விடும், பாவம் அவருக்கு ஐந்து பிள்ளைகள்’ நளினி கணவனிடம் வேண்டினாள்.

‘இரக்கம், கருணை என்று பார்த்தால் ஆஸ்பத்திரியை நடத்த முடியாது. அந்த ஆளுக்கு இன்னும் இரண்டு இலட்சம் ஆகும், நாம் செலவிட முடியுமா?’ டாக்டர் எபி இரைந்து விழுந்தார்.

நளினிக்குத் தூக்கம் வரவில்லை. தலையணை நனைந்தது. தன் மாணவப்பருவத்தில் பத்திரிக்கைகளுக்குக் கொடுத்த பேட்டிச் செய்தி மனக்கண் முன் பூதாகரமாகத் தோன்றின.

ஏழைகளுக்கு இலவச வைத்தியம் செய்வேன் என்று சொன்ன செய்தி கண்முன் நின்று ஈட்டி போல் பாய்ந்தது.

மறுநாள், காலைவேளை; பத்திரிகையைத் திறந்தால் அதே செய்திகள்.

டாக்டராகி இலவச மருத்துவம் செய்வேன்

டாக்டர் நளினிக்கு எரிச்சல் மூண்டது. கண்கள் இருண்டன. மயக்கமானாள் – மாடிக்கு வந்து சற்று ஓய்வெடுத்து எழுந்து உட்கார்ந்தாள்.

டக் டக் ஒலியுடன் மாடிக்கு வந்த டாக்டர் எபி,

‘நளி, கார் ரெடியாயிட்டு, சீக்கிரம் டிபன் பண்ணிட்டு உடனே புறப்படு. இன்று நம் கிளினிக்கில் பெரிய சீரியஸ் கேஸ்கள் இருக்கே…’ எபி அவசரப்படுத்தினார்.

டாக்டர் நளினியின் முகம் இறுக்கமானது. குற்ற உணர்வுடன் இதயம் கனத்தது. ‘டாக்டர் நீங்க போங்க, நான் நடந்து வருவேன். அண்ணாமலையின் உயிரைக் காப்பாற்றுவேன். மற்றும் பாவப்பட்ட நோயாளிகளுக்குக் கருணை காட்டுவேன். நாம் சம்பாதித்தது போதும்’ என்று உறுதியாகக் கூறி நடந்து கிளினிக்கிற்குக் கிளம்பினாள்.

டாக்டர் எபி, தம் கட்டுப்பாடு உடைவது கண்டு எரியும் அக்கினிபோல் சீறினார்.

– ஆர்‌.எஸ்‌.ஜேக்கப்‌ சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *