கடலே, அகஸ்தியன் வருகிறான்!





(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பழங் காலத்துக் கதை இது. பூமியிலுள்ள பொன் மயமான மலைகளின் ரத்தினங்களிழைத்த சிகரங் களைக் கடல் தூரத்திலிருந்து பார்த்தது. கதிரவனின் கிரணங்களில் அவை பளபளவென்று மின்னின. குபேரன் தன் பொக்கிஷத்தையெல்லாம் கொணர்ந்து அவற்றின்மீதே குவித்துவிட்டானோ என்று தோற் றியது. கடல் தன் சொந்தப் பொக்கிஷத்தைப் பார்த் தது. அதில் சங்குகள், சிப்பிகள், கடல்நுரை, மணல் – இவற்றைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை!
கடல் பூமியினிடம் பிச்சை கேட்க வந்தது. அலை களாலாகிய குடலைகளில் மல்லிகை மலர்களை நிரப்பிக் கொண்டு வந்து, பூமியின் திருவடிகளில் தூவியது. பூமியின் வள்ளன்மையைப்பற்றிக் கம்பீரமாகப் புகழ்ந்து போற்றியது. பூமி பிரசன்னமாயிற்று.
கடல் வரம் கேட்டது; பூமி அதைக் கொடுத்தது. டைவிடாமல் பிரதக்ஷிணம் செய்யவும், அபிஷேகம் செய்த நீரைத் தீர்த்தமாக உபயோகிக்கவும் அநுமதி வேண்டுமென்று கடல் கோரியது. பூமிக்கு ஆச்சரி யம் உண்டாயிற்று. ‘இந்தக் கடல் வெறும் பைத்தி யம் போல இருக்கிறதே!என்னிடம் இருக்கும் ரத்தி னங்களைக் கேட்கக்கூட இதற்கு அறிவு இல்லையே !’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டது.
வருணன் மேகக் குடங்களைக் கொண்டு தினமும் பூமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். மலைகளாகிய தர்மகர்த்தாக்களுக்கெல்லாம் பூமி உத்தரவிட்டது.
அபிஷேகம் செய்த நீர் முன்போல மலைகளின் அடி வாரத்தில் தங்காமல், கடலை நோக்கிப் பெருகலா யிற்று. மெல்ல மெல்ல அந்த நீரோடு கூடவே, மலை யுச்சிகளில் இருந்த ரத்தினங்களும் சரிந்து ஓடலாயின. மலைகளின் பொன்னிற உடல் நன்கு அலம்பப் பெற்று, மேற்பரப்பு முழுவதும் கரைந்து போயிற்று. அங்கே கடல் ரத்தினாகரமாயிற்று; இங்கே பூமி ஏழையாயிற்று.
முற்றும் ஏழையான பின்புதான், கடலின் சதி யாலோசனையைப் பூமி அறிந்தது. தன்னைச் சுற்றி மிகவும் தொலைவிலிருந்து பிரதக்ஷிணம் செய்யும் சந்திரனிடத்தில் அது இந்தச் செய்தி முழுவதையும் கூறியது. ஆனால் தன்னைக் கண்ட மாத்திரத்தில் ஆனந்தக் கூத்தாடும் கடல் இவ்வளவு கபடமாக நடந்துகொள்ளும் என்ற விஷயத்தில் வெண்மதிக்கு நம்பிக்கையே உண்டாகவில்லை. பூமி சூரியனிடம் விண்ணப்பம் செய்தது; ஆனால் அது கடல்நீரைக் குடித்துக் குடித்து ஏற்கனவே கடலுக்கு ஆட்பட்டி ருந்தது. தனக்கு உதவி செய்ய யாருமே வராததைக் கண்டு, பூமிக்குக் கோபம் பொங்கியது. கோபத்தால் அதன் உடல் படபடத்து நடுங்கியது. பாவம்! அதன் மார்பில் இருந்த அழகிய நகரங்களாகிய அணிகலன் களே இதனால் நாசமாயின. கோபம் மனத்துக் குள்ளே அடங்காதபோது, அதன் கண்களிலிருந்து கொதிகொதிக்கும் நெருப்புத் திரவம் பெருகும். ஆயினும் தன் மனத்தைப்போலவே உடலையும் எரித்துக்கொள்வதைத் தவிர, இதனால் வேறு ஒன்றும் லாபமில்லை என்பதை அது அறிந்துகொண்டது.
ஒரு காலத்தில் செல்வம் மிகுந்திருந்து, இப்போது பரம தரித்திரமாகிவிட்ட பூமி, நம்பிக்கையை இழந்த மனத்தோடு சிந்தனை செய்யலா யிற்று. மலைகள் யாவும் கல்லுருவாயின. நகரங்களின் களை மங்கிப்போயிற்று. அரசர்களின் பொக்கிஷங்களி லுங்கூட ரத்தினங்கள் காலியாயின. ரத்தினக் களஞ் சியம் முழுவதையும் தன் அந்தரங்கத்திலே வைத் துக்கொண்டு, கடல் பூமியின் ஏழைமையைப் பார்த் துப் பரிகாசம் செய்ய ஆரம்பித்தது.
பூமித்தாய் நம்பிக்கை தோன்றும் கண்களோடு தன் பிள்ளைகளைப் பார்த்தாள். எத்தனையோ பிருகஸ் பதிகள் எழுந்து நின்றார்கள்; கடலினிடம் போய் இனிய மொழிகளால் வணக்கமாக விண்ணப்பம் செய் தார்கள். கரையில் நின்றுகொண்டே ரத்தினங்களைக் கேட்கும் இந்தப் பலவீனர்களைக் கண்டு, “ரத்தினங் களைக் காக்கும் சக்தி உங்களிடம் இல்லை ; அதனால் தான் அவற்றை நான் வைத்திருக்கிறேன். நீங்கள் சாமர்த்தியசாலிகளானவுடனே அவற்றைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன்” என்று கடல் பதில் சொல்லி யது. பேச்சில் வல்லவர்களான அந்தப் பிருகஸ்பதிகள் தமக்கு வெற்றி கிடைத்துவிட்டதென்று ஆனந்த மாகத் திரும்பி வந்தார்கள். சொற்களினால் செல்வ மோ சுதந்தரமோ கிடைக்காது என்பது பாவம், அவர்களுக்கு அடியோடு தெரியவில்லை.
ஆண்டுகள் பல உருண்டன. பூமியில் வாழும் குடிமக்கள் பலவீனர்கள் என்ற கடலின் கொள்கை நிலைத்துவிட்டது. பூமி சலிப்படைந்து, தன் வீர புத் திரர்களைப் பார்த்தது. அவர்கள் கடலின்மீது படை யெடுத்தார்கள். ஆனால் பிரசண்டமான கடலலைகளின் முன்பு அவர்கள் ஜம்பம் ஒன்றும் சாயவில்லை. சிலர் அப்பொழுதே கரையை நோக்கித் திரும்பினார்கள். ஆனால் கடலின் அந்தரங்கத்துக்குப் போகும் தீரச் செயலை மேற்கொண்ட மற்றவர்களின் விஷயமோ? அவர்களுடைய பிணங்கள்கூடக் கைக்கு எட்டவில்லை!
பூமியின் ஆசாபங்கம் உச்சநிலையை எய்தியது. விளக்கின்மீது துள்ளிப் பாயும் விட்டிற் பூச்சியைப் போல, சூரியனிடமுள்ள எரிமலை மீது மோதி எரிந்து போனால் என்ன என்றுகூட அது நினைத்தது. வெறி பிடித்த கடலின் அலைகள் ஆகாயத்துக்குச் சென்று மோதின. இதற்குள் எங்கிருந்தோ,”அம்மா, பயப்படாதே என்று மதுரமும் ஆனால் கம்பீரமு மான ஒரு குரல் வந்தது.
ஒரு ரிஷிகுமாரனுடைய பேச்சு அது. அவன் உடனே கடலினிடம் சென்று, ரத்தினங்களைக் கொடுக்கும்படி கேட்டான். அவனுடைய ஒல்லியான உருவத்தைக் கண்டு கடல் நகைத்தது; ” ஸ்நானத் தையும் ஸந்தியாவந்தனத்தையும் விட்டு நீ ஏதுக்கு அப்பனே இந்தத் தொந்தரவுக்கு வருகிறாய்? ஒரே அலையால் நான் உன்னைப் பொடி சூர்ணமாக்கிவிடு வேனே !” என்று அது நையாண்டி செய்தது.
ரிஷிகுமாரன் அதன் பேச்சைப் பொருட்படுத்த வில்லை. முழங்காலளவு நீரில் நின்றுகொண்டு அவன் மந்திரம் ஜபிக்கலானான். கடல் கிறுக்குத்தன மாக, “ஓய் ரிஷிபுங்கவரே! தலையைக் கீழே தொங்கப் போட்டுக்கொண்டு வேதாத்தியயனம் செய்யும் இடம் இது அல்ல. வீணாக உங்கள் உயிரை ஆபத்துக்கு உள்ளாக்க வேண்டாம்” என்றது.
ரிஷிகுமாரன் தன் பேச்சைக் கேட்காமலிருக் கவே, கடல் அவன்மீது மலைகளைப்போன்ற அலைகளை வீசி எறிந்தது. ஆனால் அவை அவனருகில் செல்லவே இல்லை.
ரிஷிகுமாரன் மந்திரத்தை ஜபித்து ஆசமனம் செய்ய ஆரம்பித்தான். கடல்நீர் பரபரவென்று வற்றத் தொடங்கியது. எத்தனையோ ஆள் ஆழ முள்ள நீர் இருந்த இடத்தில் மணல் தென்படலாயிற்று.
பூமியின் ரத்தினங்கள் அதற்குத் திரும்பக் கிடைத்தன. அது ரிஷிகுமாரனின் முதுகை அன் போடு தட்டிக் கொடுத்து, “குழந்தாய், உன் பெயர் என்ன? யுத்தவீரர்களும் பண்டிதர்களும் தோற்றுப் போன இடத்தில் நீ எப்படிப் புகழைச் சம்பாதித் தாய்?” என்று கேட்டது.
குமாரன் பூமியை வணங்கி, “தாயே, என் பெயர் அகஸ்தியன். உன் அருளினால் எனக்குப் புகழ் கிடைத்தது. என்னிடம் பண்டிதர்களுடைய சொற்கள் இல்லை ; வீரர்களின் ஆயுதங்களும் இல்லை. உன்னிடம் நான் கொண்டுள்ள பக்திதான் என் பேச்சுவன்மை ; அதுதான் என் ஆயுதம்” என்றான்.
ரிஷிகுமாரன் இரக்கத்தினால் மனங் கனிந்து, கடலுக்கு அதன் உயிரைத் திருப்பிக் கொடுத்தான். மணல் பரந்திருந்த இடத்தில் மீண்டும் எத்தனையோ ஆள் ஆழமுள்ள நீர் கூத்தாடத் தொடங்கியது.
அகஸ்தியன் தவம் புரியக் காட்டுக்குச் சென்றான்.
செல்வம் படைத்த பூமியைக் கண்டதும், அதன் செல்வத்தைக் கவரவேண்டும் என்ற பேராசை இடையிடையே கடலுக்கு உண்டாகிறது. தன் தோல்வியை மறந்து, அது வேகமாக முன்னால் பாய்கிறது. அது எல்லை மீறி வருவதைக் கண்டவுடனே, கரையிலுள்ள மரங்களும் கொடிகளும் மணலும், “கடலே, அகஸ்தியன் வருகிறான் ! கடலே, அகஸ்தி யன் வருகிறான் !” என்று உரக்கக் கூவுகின்றன. கடலின் முகம் உடனே சுண்டிப்போகிறது. பொங்கிக் கொண்டிருந்த அதன் பேராவல் மறைந்து, அது வற்ற ஆரம்பிக்கிறது. எவ்வளவு வேகத்தோடு அது முன்னால் பாய்ந்ததோ அவ்வளவு வேகமாகவே அது பின்னுக்குப் போகிறது!
– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க... |