கடன்காரர் – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,998 
 
 

”ஏன்’யா முத்துசாமி! உன்னிடம் நான் கடன் வாங்கியது எப்போது?”

“ஒரு மாதத்துக்கு முன்னே”.

“எப்போது தருவதாகச் சொன்னேன்?”

“இருபது நாளில்”.

“கெடு தாண்டிவிட்டதா இல்லையா?”

“ஆமாம்”.

”பின்னே ஏன்’யா வந்து கேட்கவில்லை?”

“நீங்களே வந்து தருவீர்கள் என்று இருந்து விட்டேன்”.

“நன்றாக இருக்கிறதே! வாங்குவதற்கும் நான் வர வேண்டும்; கொடுப்பதற்கும் உன்னைத் தேடி வந்து நான் அலைய வேண்டுமா?”

“மன்னியுங்கள். எங்கே ஓடிப் போய்விடப் போகிறீர்கள் என்று நினைத்தேன்”.

”நான் ஓட மாட்டேன் என்பதற்கு என்னய்யா உறுதி?”

“உறுதியில்லைதான். அப்படி நான் எவ்வளவு தந்து விட்டேன்? ஆயிரமா, பத்தாயிரமா? இருநூறு தானே?”

“இருநூறு உனக்குக் கேவலமாகத் தெரிகிறதா? இருநூறு வாங்கின நான் கேவலமானவன் என்று குத்திக் காட்டுகிறாயா?”

“ஐயையோ! அப்படியில்லை. பணம் வந்ததும் தூக்கி எறிந்து விடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.”

“என்னது? எறிகிறதா? பணத்தை மதிக்க வேண்டுமய்யா. ‘பொருள்தனைப் போற்றி வாழ்’ என்று ஒளவையார் சொன்னதைப் படித்ததில்லையா?”

“நீங்கள் சொல்வது சரிதான். நானே வந்து வாங்கிக் கொள்வேன்”.

“எப்போது?”

“நாளைக் காலையிலே”.

“கண்டிப்பாக வர வேண்டும். டிமிக்கி கொடுத்தால் நான் பொல்லாதவன் ஆகிவிடுவேன்.”

“கோபிக்காதீங்க. நிச்சயமாக வருவேன்.”

“வார்த்தை தவற மாட்டாயே?”

“மாட்டேன்.”

“ஜாக்கிரதை! காத்திருப்பேன்!”

– சொ.ஞானசம்பந்தன் (ஓகஸ்ட் 2014)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *