கங்கை எரிகிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 6, 2025
பார்வையிட்டோர்: 48 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காந்தி சமாதியருகே ஒரு பைத்தியம் அழுகிறது. அழுக் கேறிய காவி உடை. சடை விழுந்த முடி, தாடி; தோளில் ஒரு ஜோல்னா பை. 

தூரத்தில் நின்றபடியே பிரஸ் போட்டோகிராபர் ஒருவன் பல கோணங்களில் அவரைப் படம் பிடிக்கிறான். கறுப்பு நாயொன்று சுற்றிச் சுற்றி ஓயாமல் குரைத்துக் கொண்டிருக் கிறது. 

பின்னணியில் யமுனை. பக்கத்தில் செங்கோட்டை. எதிரில் ஜும்மா மசூதி ! 

ஆ! அற்புதமான காட்சி. 

ஆணையர் வருகிறார். பைத்தியத்தையும் நாயையும் வெறிக் கிறார். கைகளைப் பிசைகிறார். புருவத்தை நெளிக்கிறார். குறிப் பறிந்த நாலு போலீஸ்காரர்கள் ‘தாடி’யைத் தரதரவென்று இழுத்துப்போய் தூரத்தில் நிற்கும் ‘வானி’ற்குள் ஏற்று கின்றனர். கறுப்புநாயும் குரைத்துக் கொண்டே பின்னால் ஓடுகிறது. 

அடுத்த சில நிமிஷங்களில் சமாதியில் நூறுபேருக்கு மேல் கூடுகின்றனர். கப்பல் கப்பலாய் சாலையை அடைத்துக் கொண்டு கண்ணைப்பறிக்கும் வண்ணங்களில் கார்கள் தூரத்தில் நிற்கின்றன. விதேசித் தூதுவர் ஒருவர், அவரைச் சேர்ந்த ஏழெட்டு பேர், இந்திய உயர் அதிகாரிகள், வில்லையணிந்த அரசாங்கச் சேவகர்கள், பத்திரிகைக்காரர்கள், ‘ பாப் ‘ வைத்துக் கொண்டு கறுப்புக்கண்ணாடி அணிந்த பெரிய இடத்துப் பெண்கள் எல்லோரும் சமாதியைச் சுற்றி நிற்கின்றனர்; விதேசித் தூதுவர் ஒரு பெரிய மலர் வளையத்தை, இரு மெய்காப்பாளர் களின் உதவியோடு, சமாதியில் வைத்துவிட்டு நிமிரும்போது இருபது காமிராக்கள் ‘க்ளிக்’ அடிக்கின்றன. 

காலை வெய்யிலில், அங்கு நின்றவர்களின் டெரிலின் உடை கள் தகதகக்கின்றன. வில்லைச் சேவுகர்களைத் தவிர அங்கிருந்த மற்றவர்கள் உடலில் மருந்துக்குக் கூடப் பருத்தி நூலிழை கிடையாது. 

தூதுவர், மற்றவர்கள் புடைசூழ, ராஜரீகப் புன்னகைகளை உதிர்த்துக் கொண்டே திரும்பிவிட்டார். சத்தமோ, புகையோ ஏதுமின்றி எல்லாக் கார்களும் மாயமாய் மறைந்துவிட்டன. 

போலீஸ் வானில் ஏற்றியிருந்த அந்தத் ‘தாடி’யை கீழே இறக்கிவிட்டார்கள். அது மீண்டும் சமாதியருகே வந்து ஓவென்று அழவாரம்பித்தது. கறுப்புநாயும் விடாமல் சுற்றிச் சுற்றிக் குரைத்தது. 


நாற்பத்து இரண்டாம் வருஷத்திலேயே-ஒருநாள் திண்ணை ‘தேமேன்னு ’ உட்கார்ந்திருந்தவரைப் பிடரியில் கை கொடுத்து தடதடவென்று வெளியே தள்ளிக் கொண்டு போய், “ நீ காந்தி பக்தன்தானேடா ?” என்று கேட்டு, ஒரு காரணமு மில்லாமல் மண்டையில் . மடேர் மடேரென்று குண்டாந்தடி யால் போலீஸ்காரர்கள் அடித்து நொறுக்கியபோதே-அவருக் குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். ஆனால், ஒரு வெள்ளி விழாக்காலம் தள்ளி, அறுபத்தெட்டில் தில்லியின் பொசுக்கும் கோடையில், காந்தி சமாதியினருகில் வந்து பித்துப் பிடித்தாற் போல் அவர் அழுவார் என்று யாருக்குத் தெரியும் ? 


கும்பகோணத்திற்குத் தெற்கே எட்டாவது மைலில் இருந்த ஒரு கிராமத்தில் கோவிந்த தீட்சிதருக்கு விட்ட சீட்டு சென்று கொண்டிருந்த காலம்! முப்பாட்டனார் செய்த ‘வாஜபேய’ யாகத்தினால், ‘ஓசி’யில் கிடைத்த தீட்சிதர் என்ற விருது, சந்தியாவந்தனம் கூட ஒழுங்காகச் செய்யாத கோவிந்தனின் பெயரோடு ஒட்டிக் கொண்டது. விருதோடு வந்த பிதுரார்ஜிதத் தில், ஐந்து வேலி நிலம், நாலு ஓட்டு வீடு, இரு வில் வண்டி, ஒரு ரேக்ளா யாவுமிருந்தன. எடுபிடிகள், ‘ ஆமாஞ்சாமி’ விற்பன்னர் கள், மூணுசீட்டு ஜமா, ஆகியவர்களின் உறவு போதாமல், கும்பகோணத்துக் கனகாங்கியின் அந்தரங்க உறவையும், சேர்த்துக் கொண்டான் கோவிந்தன். வாரத்தில் மூன்று நாட்கள் ரங்காட்டம். இரவையும் பகலையும் பிரித்துக்காட்ட, பரிசாரகன் வெள்ளிக் கூஜாவில் கொதிக்கக் கொதிக்கக் கொண்டு வந்து வினியோகிக்கும் காப்பிதான் சாட்சி. கீழண்டை வீட்டுத்திண்ணை யில் மும்முரமான நிசப்தம் நிலவும். பேச்சே இருக்காது. தபஸ் செய்வது போல் எல்லோர் முகத்திலும் ஒரு உக்ரம். ‘கலவை’யின் போது புகையிலையைத் துப்பத்தான் நேரமிருக்கும். துப்பாமல் விழுங்கும் வான்கோழிகளும் சில இருந்தன. கால்கடுக்க நின்று, கைகள் இற்று விழுவதுபோல் ஒருவன் ‘பங்கா’ இழுத்துக் கொண்டிருப்பான். 

வாரத்தில் மற்ற நாட்களில் தீட்சீதர் கும்பகோணத்திலிருப் பார். “இப்படி ராக்கண் முழிச்சா ஐயா உடம்பு என்னத்துக்கு ஆகும்?” என்று கனகாங்கி கரிசனம் பொங்கக் கூறுகையில், தீட்சிதருக்கு உடல் அசதியெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் பறந்துவிடும். கனகு, உடம்பு, உடம்புன்னு புலம்பிகிட்டிருந்தா. போகும்போது உடம்பைக் கூடவாத் தூக்கிட்டுப் போப்பறோம் ? ஏதோ, இருக்கிறவரையில் அனுபவிக்க வேண் டியது. அது கெடக்குது. உன் கையாலே இரண்டு வேளை கண்டந்திப்பிலி ரஸம் வச்சுப்போடு. உடம்பு கலகலன்னு ஆயிடும்!” 

தீட்சிதருக்கு உடம்பில் நல்ல தெம்பு இருந்தது. பசையிருந்தது. வாழ்க்கையின் உயர்ந்த ரஸனைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள அவர் விழையவில்லை. 

கனகாங்கிக்கு அவள் தொழிலுக்குத் தேவையான அத்தனை லக்ஷணங்களுமிருந்தன: எந்தெந்த வேளையில் எதைச் செய்ய வேண்டுமென்ற அபூர்வமான தேர்ச்சி. “இந்த ஊர்லே இருக்கற அத்தனைப் பெண்களும், கல்யாணமாகறத்துக்கு முன்னே உங்கிட் டப் பத்து நாள் ட்ரெய்னிங் எடுத்துக்கிட்டுப் போவணும் கனகு“ என்பார் தீட்சிதர்: 

அப்பேற்பட்ட தீட்சிதரின் வாழ்வில் ஒருநாள் தீடீரென்று ஓர் அதிசயம் நிகழ்ந்தது. இரவோடு இரவாகத் தீட்சிதர் புனர் ஜன்மம் எடுத்துவிட்டார். நவீன நாகரிகத்தின் நிழலைக்கூட மிதிக்காமல் இருந்ததாலும், படிப்பு வாஸனை அறவே இல்லாமல் கூடக் இருந்ததாலும், குயுக்தியினால் அயோக்யத்தனத்தைக் கலாச்சாரமாக்கிவிடும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி வாழ்ந்த தாலும், அவருக்கே இயல்பான கிராமிய வெகுளித்தனம் தீட்சி தரைப் பூரணமாக ஆட்கொண்டது; 

ரங்காட்டம், கனகாங்கியின் உறவு யாவற்றையும் தீட்சிதர் ஒருங்கே துறந்தார். சொத்து முழுவதையும் கனகாங்கிக்கு எழுதி வைத்துவிட்டு, கதர் வேஷ்டியும் துண்டுமாகச் சேரியின் நடுவில் ஒரு குடிசையைப் போட்டுக் கொண்டார். தோட்டிக ளோடு இவரும் தெருக் கூட்டினார். குஷ்டரோகிகளுடன் உழன்றார். கையில் கொடியேந்தி கள்ளுக் கடையில் போய் மறியல் செய்தார். ஹரிஜனங்களுக்கெல்லாம் திருநீறு அணி வித்து தானும் தனக்குரிய ஜபதபங்களில் மூழ்கினார். வெற்றிலை யைத் துறந்தார். சுயம்பாகம் ஆரம்பித்தார். 

அவரது குடிசைச் சுவரில், மகாத்மாவின் படத்திற்கடியில் சில வரிகள் வருவோரின் கவனத்தை ஈர்த்தன: 

“எனது தகப்பனார் எமனுடன் போராடும் வேளையில் நான் அடுத்த அறையில் என் மனைவியுடன் பருவ மழையில் திளைத்துக் கொண்டிருத்துவிட்டு, அவர் உயிரிழக்கும் தரு வாயில் பக்கத்தில் இல்லாதிருந்த வெட்கக்கேட்டை ஊரறியச் சொல்லி அழுதால்தான் நான் செய்த பாவம் தொலையும். உடலுறவு மோகத்தினால் ஆத்மாவைத் துருப்பிடிக்க வைத்துவிடும் எல்லோருக்குமே இது பாடமாக இருக்கட்டும்”. 

கோவிந்த தீட்சிதரை மீண்டும் பிராமணனாக்கிய வாசகம். கனகாங்கியின் வீட்டிலிருந்து திரும்பும் போது ஒருநாள், வழியில் வண்டியை நிறுத்தச் சொல்லி, பட்டாணிக் கடலை சொன்னார். கடலையைத் தின்றுவிட்டு, காகிதத்தைக் கசக்கி கடலை வாங்கச் எறியாமல் படிக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது, முப்பாட்டனார் செய்த வாஜபேய யாகத்தின் பலனோ, அல்லது இவரே பூர்வஜன்மத்தின் விட்டகுறை தொட்ட குறையாக இத்தனை நாள் போக வாழ்வு வாழ்ந்துவிட்டு அவ்வினையிலிருந்து விடுபட வேண்டிய காலம் வந்துவிட்டதோ, தெரியாது, வண்டி யைத் தெரு விளக்கொளியில் நிறுத்தச் செய்தார். காகிதத்தி லிருந்த வரிகளை ஒருமுறை படித்தார்: இருமுறை படித்தார். படித்துக் கொண்டேயிருந்தார். கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது. மகாத்மா, மகாத்மா” என்று வாய் புலம் பிற்று. 

அவ்வளவுதான். கணீரென்ற குரலில் தீட்சிதர் – 

“டேய்! வண்டியை ஆத்துப்பக்கமாக் கொண்டு போடா!” என்றார். 

வண்டி காவிரியை அடைந்தது. தீக்ஷிதர் இறங்கி, நீரில் கிழக்கே பார்த்து நின்று கொண்டு அவசர அவசரமாக மூன்று முழுக்குகள் போட்டார். பிறகு விருட்டென்று, ஈரத்துணி யுடனேயே வண்டியில் ஏறிக் கொண்டு, “என்னைப் புடிச்ச சனியன் இன்னியோட விட்டுதுடா, விடு வண்டியை!” என்றார். 

பிரக்ருதியின் இடையரு இயக்கத்தின் வேகத்தில் பிசிரில் லாமல் ரீங்காரம் செய்யும் லோகச்ருதியோடு, தனிமனிதனின் அடிமனத்தில் சீந்துவாரின்றிச் சுருண்டு கிடக்கும் ஆத்ம ஒலி, ஏதோ ஒரு தருணத்தின் தவப்பயனால் மீட்டப்பட்டு இழையும் போது, வாழ்க்கையின் சுருதி சுத்தமாகிவிடுகிறது. இசையற்ற, சுருதியற்ற, ஆத்ம ரஸனையற்றக் கடந்தகாலக் கட்டாந்தரை வாழ்க்கை கெட்ட சொப்பனம் போல் அர்த்தமற்றதாகி, கண் களைக் கசக்கிக் கொண்டு வாழ்க்கையில் முதல் முதலாகச் சூரியோதயத்தைப் பார்ப்பது போன்ற ஓர் இனிமையான அனுபவம் ஏற்படுகிறது. 

எட்டு வயதில், பூணூல் போட்ட காலத்தில், வெள்ளித் தாம்பாளங்களில் கோவணாண்டியாக மணையில் நின்று கொண்டு, பட்டு அங்க வஸ்திரப் போர்வையின் மறைவில், தகப்பனார் காதில் ஓதிய பிரம்மோபதேசத்தின் போது, பிராமணனாகாத கோவிந்தன், முப்பது ஆண்டுகள் கழித்து, நடுத்தெருவில், மறைவற்ற தெரு விளக்கின் மங்கலில், பட்டாணிக் காகிதத்தில் தெரிந்த சில வரிகளினால், பிரம்மணீயத்தை-பிரம்மச்சரியத்தை-ஒரே தாவில் பிடித்துவிட்டார். 

தீட்சிதரின் செய்கைகள் யாவரையும் பிரமிக்க வைத்தன. சிலரைக் கிண்டல் செய்யவும் வைத்தன. மரைலூஸ் என்று ‘நக்கல்’ செய்தனர். அவர்களது கேலி வார்த்தைகள் தீட்சிதர் செவிகளுக்கும் எட்டின. உள்ளுணர்வின் புலம்பலினால் பத்ரம் கழன்று லூஸ் ஆகும் போதுதாண்டா, மனுஷனின் போலிச் செதிள்களெல்லாம் உதிர்ந்து போகின்றன. தளைகளை அறுத்துக் கொண்டு உள் பிரக்ஞை வீறுகொண்டு எழும் போது, உலகமே அதற்குள் அடக்கம். தனித்துநின்று அவ்வெழுச்சியைப் பைத் தியக்காரத் தனம் என்று சொல்ல யாருக்குடா யோக்யதை இருக்கு?” என்று தீட்சிதர் பொதுப் படையாகச் சொல்வார். 

தீட்சிதரின் பாஷையின் உட்கருவைச் சேரிமக்கள் அறிந்தார் களில்லை. ஆனால் அந்த அறியாமையே, அவர்கள் தீட்சிதர் பால் கொண்டிருந்த பக்திக்கு, ஆனைபலமாக நின்றது. 

மஹாத்மாவை தீட்சிதர் நேரில் பார்க்கவில்லை. விழையவும் செய்ய இல்லை. அந்தப் போர்பந்தர் யோகியைத் தரிசனம் லக்ஷக்கணக்கில் ஜனங்கள் கும்பகோணம் ரயிலடியில் நெரியும் போது, இவர் காவிரிப் படித்துறையில் உட்கார்ந்து கொண்டு ஜபத்தில் மூழ்கியிருந்தார். பிறகு, “என்ன இப்படிப் பண்ணிட் டீங்களே? ” என்று இவரைத் துக்கம் விசாரிப்பது போல் யாரோ கேட்ட போது, தீட்சிதர் சொன்னார் : “ஐயா, அவர் என் தெய்வம். தெய்வத்தை நேரில் பார்த்துட்டா ஒரு மாத்துக் கொறச்சல்தான். கண்ணுலேபடாம ரகஸியமா இருக் கிறவரையில் தான் தெய்வம். நான் அவரைத் தெய்வமாகவே பூஜிக்க விரும்புகிறேன்!” 

1948 ஜனவரி முப்பது, வெள்ளிக்கிழமை. தீட்சிதரின் தெய்வம், மனித உடலை நீத்து, எல்லோருக்குமே கண்ணுக்குத் தெரியாத தெய்வமாகி விட்டது. வானொலியில் ஷெனாயின் அழுகையும், பாபுஜி, பாபுஜி என்ற கதறல்களும், அதைக்கேட்டு மயக்கம் போட்டு விழுந்தவர்களும், வீதியில் புரண்டு அழுதவர் களுமாக, நாடே சோக அவலத்தில் மூழ்கியிருந்த போது, தீட்சிதர் ராமா, ராமா என்று கதறிக் கொண்டிருத்தார். 

“சாமி! குழந்தேங்க கூட சாப்பிடாம அழுவுதுங்க சாமி! இந்தக் கண்றாவியை வந்து பாருங்களேன் !” என்று யாரோ வந்து தீட்சிதரிடம் முறையிட்டபோது, குழந்கைள் கூட அழறதா? எல்லோரும் அழறாங்களா? அழட்டும்டா. நன்னா அழட்டும்டா……” 

“சாமி! தாங்க முடியலீங்களே !’ 

தீட்சிதர் பளிச்சென்று அழுகையை நிறுத்தினார். பிறகு ஏதோ ஆவேசம் வந்தவர்போல், 

“மனுஷன் ரேடியோவை, டெலிபோனை, டெலிவிஷனை எல்லாத்தையும் கண்டுபிடிச்சிட்டு, தொலைவை வென்று உலகத் தையே சுருக்கிட்டதாக மார் தட்டறான். ஆனால், இவன் கண்டு பிடிக்காத ஒன்று, இவனுக்குள்ளேயே இருந்துண்டு, தொலைவை யும் சுருக்கி, மனசையும் விசாலமாக்கக் கூடிய தெய்வ மருந்தா அமைஞ்சு போயிடுத்து. அது என்ன ? தெரியுமாடா?” 

வந்தவன் இவர் பேச்சையே லட்சியம் செய்யாமல் அழுது கொண்டிருந்தான். தீட்சிதரும் அவன் அழுகையை லட்சியம் செய்யாமல் பேசிக்கொண்டே போனார். 

“நீயும் நானும் இப்ப அழறோமே, அதுதாண்டா அந்த மருந்து. அழுகைதாண்டா ஞானம். கோடிக்கணக்கான உள்ளங் களை ஒரு நிமிஷமேனும் அழுது உருக வைத்து விடறவன் மகாத்மா. நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை. நான் ஏண்டா அழறேன்? நீ ஏண்டா அழறே; இந்த வேளை தெய்வ வேளை உலகத்துலே ஒவ்வொரு நிமிஷமும் எல்லோரும் உருகி அழுதுண்டேயிருந்தா மனசறிஞ்சு ஒரு பாவத்தைச் செய்யத் தோணுமாடா? ” 

இதைச் சொல்லிவிட்டு தீட்சிதரும் ஓவென்று அழுதார். 

அடுத்த நாளிலிருந்து தீட்சிதர் அந்தக் கிராமத்தில் இல்லை. வடக்கே தபஸ் செய்யப் போய்விட்டதாக எல்லோரும் பேசிக் கொண்டனர். 


இருபது வருடங்கள் கழித்து, ஹிமாலயத்தின் ஏதோ ஒரு பகுதியிலிருந்து தீட்சிதர் வெளியே வந்தபோது, கங்கை எரிந்து கொண்டிருந்தது. 

மண்ணெண்ணெய் கங்கை நீருடன் கலந்து விட்டதால் எரிகிறது என்று எல்லோரும் வாளாவிருந்தனர். யாரும் பதறி அழவில்லை. ‘தெய்வகுத்தமாக இருக்குமோ?” என்று பயப் படும் பத்தாம்பசலி அஞ்ஞானத்தில் யாரும் உழலவில்லை. கல் பாந்த காலமாக இக்கர்ம பூமியின் பாவத்தையெல்லாம் அலுக் காமல் சுமந்து கொண்டு, ஞானிகளையும், தெய்வக் கவிஞர்களை யும், உபநிஷதங்களையும் வேதங்களையும், இராமரையும், மஹாத் மாக்களையும் ரிஷிகளையும், தனித்வம் மிக்க ஒரு கலாச்சாரத்தை யும் இந்நாட்டுக்கு ஈந்த அந்த ஹிமவான் புத்ரிக்கு நேர்ந்த தீவிபத்தை மிகச் சாதாரண விஷயமாக்கி, அதற்காக ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வடிக்காத இந் நாட்டுமக்களின் ஆன்மீக வரட்சியை நினைத்து, தீட்சிதருக்குப் பகீரென்றது. 

நாட்டு மக்கள் ஏதோ அபச்சாரம் செய்து விட்டதால் தான் இப்படி ஒரு விபத்து நேர்ந்து விட்டது என்று அவரது பழமையான கிராமிய அறிவு குத்திக்காட்ட, அடிவயிற்றின் குமைச்சலின் உந்தலில் என்னதான் நேர்ந்து விட்டது என்ற வேட்கை மிக, பதறும் நெஞ்சத்துடன் அவர் ஊர் ஊராகச் சுற்றிய போது- 

நகரங்களிலும், கிராமங்களினும், பட்டி தொட்டிகளிலும் இருவிதமான நச்சரவுகள் ஊர்ந்து நெளிவதைக் கண்டார்: அதிகார மோஹமும், சினிமா மோகமும் மக்கள் ரஸனையை சிந்தனைத் தெளிவை, தியாகத்தை, நேர்மையை, கற்பை, நாண யத்தை, யோக்யப் பொறுப்பை எல்லாவற்றையும் எவ்வளவு தூரம் அரித்திருக்கிறது என்பதைப் பார்த்தார். “வந்தே மாதரம்!”-தாயை வணங்குகிறேன்-என்ற, இதயத் தரத்தை யும் அடக்கத்தையும் உணர்த்தும் அஞ்சலி கோஷம் போய், வாழ்க்கைத் தரம்” என்ற உடலைச் சார்ந்த வரட்டுக் கோஷம் வளர்ந்திருப்பதைப் பார்த்தார். 

ஜாதிப் பூசல்களிருந்த இடத்தில் காட்சிப் பூசல்களைப் பார்த்தார். அரசியல் பதவிகளுக்காக அடுத்துக் கெடுக்கும் கயமையைப் பார்த்தார். புனிதக் கொள்கைகள், இலட்சியங் களிலிருந்த பிடிப்பு விட்டுப் போய், ‘எரிகிற வீட்டில் பிடுங்கிய வரையில் ஆதாயம்’ என்ற வெறித்தனம் எல்லாத் துறைகளிலும் வியாபித்திருப்பதைக் கண்டார். ரகஸியமாகவும், பகிரங்கமாகவும் உடலுணர்ச்சிகளின் தேவையைப் பெரிது படுத்தி, அத்தேவைக் கேற்ப, கற்பின் இலக்கணத்தையே இழுத்த இழுப்புக்கு ‘ வரும் படியாக மாற்றியமைத்து, குடும்பம் என்ற சமூக ஆணிவேரையே அறுக்கும் ஒரு புதிய நாகரிகத்தைப் பார்த்தார். மக்களின் நடை, உடை, பாவனைகளின் பால் உணர்ச்சியைப் பொங்க வைக்குமாறு கையாளும் சாமர்த்திய மான புதிய யுக்திகளைப் பார்த்தார். பஸ்ஸில் ஏறுவதிலிருந்து, அமைச்சரவையில் ஸ்தானம், பிடிப்பது வரையில் நடக்கும் ஒரே மாதிரியான ‘குடுமிபிடிச் சண்டை’யைப் பார்த்தார். சத்தியம் செல்லாக் காசாகி விட்டதைப் பார்த்தார். ஆன் மீகம் அர்த்தமற்றதாகி விட்டதைப் பார்த்தார். ஆமையுள்ளங் களைப் பார்த்தார். சிறுமையைக் கண்டு துடிக்காத தோள்களைக் கண்டார். மக்களின் சிந்தனை, உடை, நடவடிக்கைகள் எதிலுமே இந்த மண்ணின் முத்திரை இல்லாமலிருப்பதைப் பார்த்தார். உருகி அழக்கூடிய ஞானத்தைக் கூட மனிதர்கள் இழந்து விட்ட தாகத் தோன்றியது, தீட்சிதருக்கு. 

கடைசியாக தில்லிக்கு வந்து சேர்ந்தார். காந்தி சமாதி யின் அருகில் போய் ஓவென்று தேம்பித் தேம்பி அழுதார். 

“பாபுஜி! கங்கை எரிகிறது. இம்மண்ணின் அன்னை எரி கிறாள். சத்தியம் எரிகிறது. தெரியவில்லையா உங்களுக்கு? வாருங்கள், இன்னொரு முறை வாருங்கள். இன்னும் ஆயிரம் முறை வாருங்கள்….. மீண்டும் மீண்டும் இம்மண்ணில் பிறந்து எங்களை மனிதர்களாக்குங்கள். அண்ணலே! சமுத்திரத்தில் பெருங்காயத்தைக் கரைத்ததுபோல், இந்நாட்டிற்கு ஒரு காந்தி எப்படிப் போதும்? வாருங்கள்… மீண்டும் மீண்டும் வாருங்கள்….”

தீட்சிதர் அழுது கொண்டேயிருந்தார். கறுப்பு நாய் ஓயாமல் குரைத்துக் கொண்டேயிருந்தது. 

பின்னணியில் யமுனை, பக்கத்தில் செங்கோட்டை, எதிரில் ஜும்மா மசூதி! 

ஆ! அற்புதமான காட்சி!

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *