ஒரு ஞாயிற்றுக்கிழமை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 15, 2025
பார்வையிட்டோர்: 46 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மயில் வாகனத்தாருக்கு வழக்கம் போல அதிகாலையிலேயே நித்திரை கலைந்து விடுகிறது. கட்டிலிலிருந்து காலை எடுத்துத் தரையில் ஊன்றி எழ முயன்றவர், ஏதோவொரு நினைப்பு எழ மீண்டும் படுக்கையில் சாய்கிறார். 

‘இப்ப எழும்பித்தான் என்ன செய்யிறது……… ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா…..? கந்தோருமில்லை. பாரன் எல்லா அறையிலும் கேக்கிற குறட்டையை …. மூதேசியள் விடிஞ்சும் இப்படித் துாங்குதுகள்…. எனக்கெண்டா எப்பனும் துாக்கம் வருகுதில்லை….. சும்மா படுக்கையில் கிடந்து கிடந்து புரள்றதுதான் மிச்சம்…. அண்டைக்கு டொக்டர் சோம சேகரத்திட்ட கேட்டா அவன் சிரிக்கிறான். வயது போயிற்றா நித்திரையும் குறைவாம்….. விசர் டாக்குத்தர் பொடியன்….. இண்டைக்கும் ஒரு இளந்தாரி என்னோட நேருக்கு நேர் நிற்கமுடியுமே…..டாண் டாண்! டாண் பேராலய மணி ஒலிக்கிறது. 

ஓ!….. சண்டே மாஸ்ஸுக்கு கத்தோலிக்கர் வரத்தொடங்கிட்டினம் போல நான் விசரன் போல….. முகட்டைப் பார்த்துக் கொண்டு சாய்… நான் வீணா நிண்டிட்டன்….. இந்த வீக் – எண்டிலும் ஊருக்குப் போய் வந்திருக்கலாம். விசர்வேலை பண்ணிப்போட்டன்… எண்டாலும் பரவாயில்லை…. கண்டபடி ஊருக்குப் போய் வாறதால…… எடுக்கிற சம்பளம் எல்லாம் ரயிலுக்கும் பஸ்ஸூக்கும் தான் போகுது. அடுத்த வாரம் சம்பளம் வாங்கின கையோட ஊருக்கு போனாத்தான்…. வடக்காலபாறிக்கிடக்கிற வேலியையும் நாலு கதியால் போட்டு நிமித்தி அடைக்க முடியும்…. வீட்டிலும் ரெண்டு மூண்டு வயதுக்கு வந்ததுகள் நிக்குதுகள்….. வடக்காலும் என்ன?…. எங்கட சொரியல் காணியள் தான்… அடைக்காமலும் விடலாம் தான்…. எண்டாலும் ஒரு பத்தறிக்கை இல்லாம…… இருக்கலாமே? அதால ஆடு மாடுகள் பூந்து வீட்டில ஒரு மரம் செடியை வைக்க விடுகிதுகள் இல்லை எண்டு அவளும் எழுதியிருக்கிறாள். வாற கிழமை ஊர்த் திருவிழா ஆரம்பமாம். 

மரம், செடி, கொடி என்ற நினைப்பு வந்ததும் அவரால் படுக்கையில் கிடக்க முடியவில்லை. இடுப்பால் நழுவிய சாறத்தைத் துாக்கி உடம்பில் முளைத்த மேடான வயிற்றில் இறுக்கிக் கட்டிக் கொண்டு யன்னலடிக்குப் போகிறார். 

யன்னலின் ஒரு சதுர அடிக் கண்ணாடி, காற்றில் அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. யன்னலினுாடாகப் புகுந்த வெண்மை அறையை அம்பலமாக்குகிறது. கண்ணாடியில் பார்த்தவாறு கன்னங்களையும் நாடியையும் தடவிப் பார்க்கிறார். 

சொர… சொர…. 

இன்டைக்கு என்னத்துக்கு? நாளைக்கு ஒப்பீசுக்குப் போகேக்க ஷேவ் செய்யலாம். 

சுவரில் பதித்திருந்த பல கைத்தட்டிலிருந்து ரூத் பேஸ்டை எடுத்து பிறசில் பிதுக்கிக்கொண்டு நிமிர்ந்தவர் பரவசமாகிறார். உடம்பில் உணர்ச்சி ஜில்லிட்டுப் பரவுகிறது. 

இவரின் ஜன்னலுக்கு அப்பால் மூன்றடி துாரத்தில் ‘கவர்மன்ட் குவாட்டர்ஸ்’ மதில்… அறையின் தரை உயரமாதலால், மதிலுக்கு அப்பாலும் இவர் பார்வை விழ வாய்ப்புண்டு. ஆனால் மதிலுக்கு அப்பாலுள்ளவர்களுக்கோ இவர் அறையில் நடமாடுவது தெரியாது. 

அடுத்த வளவு வெறும் காணி உடைந்த மதிலும், முட்கம்பி வேலியுமாக, நாயுண்ணி மரப் பற்றைகளாக நிறைந்த என்றோ எப்போதோ ஆங்கில அரசாங்கத்தால் கட்டப்பட்டு, தாழ்வாரப் பத்திகளின் கொழுக்கி ஓடுகள் உடைந்தும் சிதறியும், நிலங்கள் குண்டும் குழியுமாக அதில் போடப்பட்டிருந்த கற்கள் நீண்ட கால பாவனையால் மெருகேறி பளிச்சிட்டுக் கொண்டிருக்கும் வீடும் வளவும்…… யார் யாரோ வருவார்கள். போவர்கள். எவரது கவனத்தையும் அது ஈர்த்ததில்லையாயினும், இவர் அதிகம் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார். அந்த வளவிலும் அரசாங்கம் ஏதாவது ஒரு புதிய கட்டிடம் அரசாங்க அலுவலகமாகவோ, பாச்சுலர்ஸ் குவாட்டசாகவோ எழுந்துவிட்டால், எவ்வளவு நல்லது, பாம்பு பூச்சி வராது. கண்ட கண்ட ஆட்கள் வந்து குடியேறி அசிங்கம் பண்ணாது அதோட. இந்தக் குவாட்டர்சுக்கும் நல்ல பாதுகாப்பு…. 

புதிதாக யாரோ குடிவந்திருக்க வேணும். 

ஒரு பெண் நாட்டுக்கட்டை இளவயசு வீட்டிற்குள்ளிருந்து அவசரம் அவசரமாக வெளியே வந்து போகிறாள். 

இவரது முகத்தை குளிர் காற்று தாக்குகிறது. 

அவள் வீட்டிற்குள் நுழைந்து நீண்டநேரமாகியும், இவரது கால்கள் நகர மறுக்கின்றன. 

அறையை விட்டு வெளியே வருகிறார். நீண்ட விறாந்தை, பல அறைகள், கிழக்குத் திசையில் ‘பொது மண்டபம்’ அதனைச் சுற்றியும் பல அறைகள், பெரிய வளவு, வடக்குச் சுவரோரமாக ‘லட்ரின்’ வரிசை இவரது அறைக்கு நேராக விறாந்தையை ஒட்டி ஒரு பெரிய பழங்கால கிணறு, என்றும் பாவனையிலிருப்பதால் பழமையை மீறிய இளமையின் உயிர்த்துவம் கொண்ட கற்கண்டாய் ருசிக்கும் நீர் கொண்ட கிணறு, கிணற்றின் உட்பக்கச் சுவரின் பொந்தில் குடித்தனம் நடத்தும் பெயர் தெரியாத குருவிகள் ‘விர் விர்’ ரென்று நீருக்கு மேலால் பறந்து கொண்டிருக்கும்… 

இருபது பேருக்கு மேலாக வாழும் குவாட்டர்சின் நீண்ட கால அங்கத்தவர் மயில்வாகனத்தார் தான் வயதிலும் சீனியர்தான். கச்சேரியில் நிதி கிளையில் அக்கவுண்டனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் அரசாங்க எஸ்ரபிலிஸ்மண்ட் கோட். ஏ. ஆர். எவ். ஆர். எல்லாம் தண்ணிபட்டபாடு. இதனால் இவருக்கு கச்சேரியில் ஏக செல்வாக்கு. எந்தப் பெரிய உத்தியோகத்தர் யாருக்காவதுநிர்வாகச் சிக்கலோ டிபார்ட்மன்ரல் விசாரனையோ வருமிடத்து இவரைதான் தஞ்சம் அடையவேண்டிய ஆளுமை, செல்வாக்கு மட்டுமல்லாமல் சாராயப்போத்திலிருந்து ஆயிரக்கணக்கான ரூபாய்வரை சாத்தியம் நிறையவுண்டு. வீட்டிலும் ஒன்றுக்கும் குறைவில்லை. இரண்டு பெடிச்சிகளுக்கும் ‘இப்ப மாப்பிள்ளை ரெடி’ எண்டால் நாளைக்கே பந்தல் போட அவர் தயார். ‘பொம்பிளைக்கு என்னென்ன தேவையோ அத்தனையும் ரெண்டு பெட்டைகளுக்கும் செய்து தயாராக வைத்திருக்கிறார். ஊர்க்கோயில் கொடியேறிவிட்டால் அந்தப் பத்து நாளும் ஊரில் போய் தஞ்சம் புகுந்துவிடுவார். இவரின் அட்டகாசம்தான் திருவிழாச் சப்தங்களைவிட மேலோங்கி நிற்கும். அந்தச் சப்தம் கூட ஊர்மக்களுக்கு வேண்டியிருந்தது. பெருமையாகப் பேசிக்கொள்வார்கள். மயில்வாகனத்தார் இல்லாட்டி இந்தத்திருவிழாக்கள் சண்டை சச்சரவுகள் இல்லாமல் நடந்து முடியுமே?’ 

வாயில் ‘பிறஷை’ போட்டுக்கொண்டு, வாளித் தண்ணீருடன் லெட்ரினை நோக்கி நடக்கிறார். மனம் திடீரென இளமையாகிவிட்ட குதுாகலம். மீண்டும் கிணற்றடியில் வந்து வாயையும் முகத்தையும் தண்ணீரால் மெல்லத் துடைத்துக்கொண்டு, காலை மீண்டும் தண்ணீரால் நன்கு கழுவிக் கொள்கிறார். கிணற்றைச் சுற்றி ஆறடிக்கும் மேலாக வாழைகள் எழும்பி குலைகள் தள்ளியிருக்கின்றன. அத்தனை வாழையும் அவர் நட்டது. ஒபீஸ்பியோன்களின் துணையுடன் போட்ட தோட்டம் குவாட்டர்சில் வசிக்கும் ஏனைய கவுண்மன்ற் ஒபீசர்ஸ் குளிக்கிற தண்ணீர் எல்லாம் தோட்டத்துக்கு இறைக்கும் நீராகிவிடும். வாழைக்குலை தள்ளி ஒருபழம் குவாட்டர்சில் வசிப்பவர்களுக்கு கொடுத்ததாக ஞாபகமில்லை. வார இறுதியில் ஊருக்கு பயணமாகும் காலங்களில் ‘காட் போர்ட்’ பெட்டியில் குலைகள் சீப்புச் சீப்பாக அடைக்கலமாகிவிடும். 

ஓ…. அந்த நடுக்குலை நல்லா முத்தி நிறத்து வந்திட்டுது. இந்த முறை ஊருக்குப் போகேக்க மறக்காம வெட்டிப்போடவேணும். ஊரிலும் திருவிழா என்டெல்லே எழுதியிருக்கிறாள். ஊரில இந்த இன வாழை கிடைக்காதே. 

“ஐயா! எழும்பிப் போட்டியளே!” என்ற குரல் கேட்க திரும்புகிறார். 

ஒபீஸ் பியோன் தணிகாசலம் அவர்தான் அவனை வரச்சொல்லியிருந்தார். லீவு நாட்களிலும் அவன் அவருக்குப் பியோன்தான். அவனும் ஒரு வழியில் அவர் ஊர்க்காரன்தான். அவனின் அப்பா இந்த அண்ணருக்கு வேலை தேடி இளைஞனாக வந்தவன். மீண்டும் ஊருக்குப் போகவில்லை. வேலையோடு தனக்கொரு துணையையும் சேர்த்துக் கொண்டான். ஊர்ப்பக்கம் தலைகாட்ட முடியாத சேர்ப்பு. அதனால் தணிகாசலம் இங்கேயே பிறந்து வளர்ந்து வேலை பார்க்கிறான். ‘பிளாஸ்கை எடுத்துக் கொண்டுபோய் டீ வாங்கி வந்திட்டு அப்படியே சாப்பாட்டுக்கும் சொல்லிப் போட்டு வா ஐயா ஊருக்குப் போகேல்லியாம்….. நல்லதா மத்தியானத்துக்கு கோழி முட்டை வைச்சு அனுப்பச் சொல்லிவிட்டு வா’ 

அவன் பிளாஸ்குடன் வெளியேறுகிறான். 

அவன் ‘ரீ’யுடன் வந்த பொழுது மயில்வானத்தார் உடம்பு முழுக்க எண்ணை பளபளக்க, இடுப்பில்’ டவலு’டன் வெற்று மேனியராகக் காட்சியளிக்கிறார். 

கன்னங்கள்…. வயிற்றுத் தொப்பூள் எல்லாம் எண்ணையில் பளீச்சிட உச்சி மயிர் எண்ணைத் தேய்ப்பில் எழும்பியிருக்கின்றன. கண்கள் இரண்டும் கோவைப்பழமாக சிவந்து “என்ன சிசி…….. என்னும் எண்ணை தேய்ச்சு முடியேல்லியா? இதென்ன தேத்தண்ணிய….? ஏன் இப்ப…இதெல்லாம் என்ன வேலை பார்க்கிறீர்?” – கிளாக்கர் கனகசபை வருகிறார். 

“என்ன எல்லாரும் வந்திட்டினமே…?” 

“எல்லாரும் எப்பவோ ரெடி…. நீர் தான்…” 

“சரி … சரி… தணிகாசலம்… பிளாஸ்கை கொண்டுபோய் உள்ளவை. உடன் போயிராத…நில்லு…என்ன…?” 

கனகசபையும் அவரும் பொது மண்டபத்துக்குப் போகிறார்கள். அவனும் அவர்களைத் தொடருகிறான். பொது அறையில் அங்கங்கே சிதறிக்காணப்பட்ட கதிரைகள் ஓரமாகத் தள்ளப்பட்டுள்ளன. நடுமையத்தில் நாலைந்து ‘பெட்சீட்’கள் விரிக்கப்பட்டு சாராயப் போத்தல்களும், சோடாப் போத்தல்களும், கிளாஸ்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒதுக்கிப் போடப்பட்டிருந்த கதிரைகளில் அமர்ந்திருந்த கல்விக் கந்தோரைச் சேர்ந்த பரஞ்சோதி, புலேந்திரன், மின்சார சபையைச் சேர்ந்த விநாயகமூர்த்தி, ரிஜிஸ்ரார் வேலாயுதம், தபாற்கந்தோர் அதிபர் வெற்றிவேலு எல்லாரும் அவரைக் கண்டதும் அசட்டுச் சிரிப்புடன் எழுந்து நிற்கிறார்கள். அவருக்கு பரஞ்சோதி, புலேந்திரன், விநாயகமூர்த்தி ஆகியோஜைர கண்டதும் உள்மனம் சுருங்குகிறது. 

முளைச்சு மூண்டு இலை விடேல்ல. அதற்குள்ள அவைகளுக்கு குடி. இவங்களை நம்பி எப்படி நாங்கள் எங்கட பெண்பிள்ளையளக் கட்டிக் கொடுக்கிறது. கொடுக்கிற சீதன பாதனத்தை நாலு நாளில் குடிச்சளிச்செல்லே போடுவாங்கள்……. 

“வாரும் நல்ல எண்ணை முழுக்குப் போடப் போறீர் போல. உமக்காகத்தான் காத்திருக்கிறம்….” ரிஜீஸ்ரார் வேலாயுதம் உரிமையுடன் அழைக்கிறார். 

எல்லாரும் அமர்கிறார்கள். அவர் கண் வட்டமிட்டுச் சுழல்கிறது. என்ன ஒண்டையும் காணேல்ல.’ 

‘என்ன?’ 

‘என்னத்தைக் கடிக்கிறது….?’ 

‘ஏதாவது…. வடை…. பகோடா… முந்திரிப்பருப்பு… கச்சான்…’ 

சாச்சாய்… உதொண்டும் வாய்ப்பானதில்லை. … பச்சை மிளகாய்…. வெங்காயம் கடிச்சுக்கொண்டு அந்தக் காரத்தில சாராயக் கசப்பை விழுங்கினா என்ன மாதிரி இருக்கும் தெரியுமே… அமிர்தம் தான்’ 

“நோ பிராப்ளம்… வாங்கிவிட்டாப் போச்சு.” 

“தணிகாசலம்…… நல்ல பிள்ளையா… ஓடிப்போய் ஐந்து ரூபாய்க்கு சின்ன வெங்காயம்…. பச்சை மிளகாய் வாங்கிறியா?” 

“அதுக்கென்ன ஐயா?” 

“கெதியா வரவேணும்……. உனக்காகத்தான் வெயிட் பண்ணுறம். நீயும் இண்டைக்கு எங்களோடைதான் நிக்கவேணும்… உனக்குக் காலமை சாப்பாட்டுக்கும் ஏதும் வாங்கி வா… என்ன?” 

சமா உச்ச நிலையை எய்திக்கொண்டிருக்கிறது. பச்சை மிளகாயும், வெங்காயமும், சாராயமும் தமது மணத்தை ஹோல் முழுவதும் வாரியிறைக்கின்றன. ஹோலின் வாசலில் நிலைப்படிக்கருக்காமையில் இருந்தவாறு தணிகாசலம் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவர்கள் அடிக்கடி ஏவும் வேலைகளுக்காகக் காத்திருக்கிறான். 

“தணிகாசலம் ஒரு பெட்டி பிறிஸ்டல் வாங்கிவ……” 

‘ஒரு நெருப்புப் பெட்டியும்’ 

‘என்ற பிராண்ட் வேற…. நெவிக்கட்….’ 

‘தணி தண்ணிகொண்டு வா…’ 

பரஞ்சோதி, புலேந்திரன், விநாயமூர்த்தி மூவரும் அநாகரீகமாக எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல் ‘தண்ணி அடிப்பதை’ பார்க்கப் பார்க்க அந்த வெறியிலும் மயில்வானத்தாருக்கு ‘பற்றிக்’ கொண்டு வருகிறது. 

பாரன்… எல்லாருமே பாம்புக் குடலன்கள், எப்பனெண்டாலும் வெறியேறுதா. இப்ப எனக்கு என்ன மாதிரி தலையைச் சுற்றிக்கொண்டு வருகுது… எல்லாருமே குடிகாரன்கள். இவங்களை நம்பி பொம்பிளையலைக் கொடுத்துப் பாரன் …. இவங்கள் சொத்தைமட்டுமே அழிப்பாங்கள்…. வாற பொம்பிளையளின்ர சீவியத்தையுமல்லே அழிச்சுப் போடுவாங்கள்…… 

வேலி நினைப்பு வந்ததும் ஊர் ஞாபகம் தலை நீட்டுகிறது. மறுகணம் மதில் என்றதும் காலையில் பார்த்தது நினைவுக்கு வருகிறது. 

“ஹா…. ஹ…ஹோ… ஹோ…’ என்று தொடையில் தட்டியவாறு சிரிக்கத் தொடங்குகிறார். எல்லாரும் அவரையே வியப்புடன் பார்க்க, ரிஸிஸ்ரார் ‘என்ன மயில்வானத்தார் என்ன திடீரென்று?’ என்று கேட்கிறார். 

காலையில் கண்டதற்கு, கொஞ்சம் கால், கை, வாய் மூக்கு வைத்துச் சொல்லி சந்தோஷப்படுகிறார். கற்பனை ஆகாயமாக விரிய… இளைஞர்கள் வாய்பிளந்து… மதியம் தாண்டிவிட்ட வேளையிலும் சமா ஓயவில்லை. மயில்வாகனத்தாரின் எண்ணை மேனியே வியர்வை வெள்ளத்தில் குளிக்கின்றது….. 

ரிஜிஸ்ரார் வேலாயுதத்தார் ஏதோ வெளியில் போறவர் போல் எழுந்து சென்று மதில் பக்கமாக கொஞ்ச நேரத்தை செலவு செய்துவிட்டு வருகிறார். முகத்தில் வாட்டம் தெரிந்தது. கொஞ்ச நேரம் கழித்து புலேந்திரன் போய் விட்டு வந்து பரஞ்சோதியின் காதில் முணுமுணுக்கிறான். “மச்சான்….. கறுப்பெண்டாலும் ரொப் மச்சான் இனி பின்னேரங்களில் இந்த விறாந்தைதான் கிழவன்ர அறைதான் ரொப்… ஒருத்தருக்கு தெரியாது. கிழவன் இனி அறையில்தான் கிடக்கப் போகுது…’ 

மணி இரண்டைத் தாண்டுகிறது. 

“ஐயா…. நேரம் போகுது… சாப்பாடு அப்பவந்து காத்துக்கிடக்கு…எப்ப முழுகிறது…எப்ப சாப்பிடுறது…’

அதுவும் சரிதான்…இது தான் கடைசி றவுண்ட் எல்லாரும் எழும்புங்கே…. கிணத்தடிக்குப் போவம்…’ 

எல்லாரும் தட்டுத் தடுமாறிக் கொண்டு எழும்புகிறார்கள். 

கிணத்தடி அல்லோல கல்லோலப்படுகிறது. 

நாலு மணியாகியும் ஒருவரும் குளித்து முடிந்தபாடில்லை. ‘தணி இங்க வா…. எனக்கு ரெண்டு வாளி தண்ணி ஊத்து என்று மயில்வாகனத்தார் அவனை அழைக்கிறார். அவனுக்கோ ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. அருமையான ஞாயிற்றுக்கிழமையை இந்தக் கிழங்களுக்காக இழக்க நேரிட்டுவிட்டதே… ‘அதோட இப்ப தண்ணி ஊத்தி குளிப்பாட்டட்டாம். மாட்டன் எண்டால் நாளைக்குத் தொலைஞ்சன்…’ 

விதியை எண்ணியபடி துலாக்கயிற்றைப் பிடிக்கிறான். 

‘தணி…. இந்த முதுகைத் தேய்ச்சுவிடு….!’ 

அவன் திடுக்கிட்டு நிற்கிறான். இப்ப மாட்டன் எண்டால்….. வெறியில நிக்கிற மனுஷன் உயிரை வாங்கிப்போடும்….பிறகு நெடுகிலும் சறவைதான்….! 

அவன் முதுகைத் தேய்க்க ஆரம்பிக்கிறான். ‘ஆ…. அப்படித்தான்… ஆ!… என்ர மனுஷிகூட இப்படித் தேய்ச்சு விடமாட்டாள்….என்ன சுகம்… கண்ணை மூடி ஆனந்தப் பரவசத்தில்…. “டேய் தணி… நீயும் குளியடா…. இண்டைக்கு என்னோடதான் சாப்பாடு… திடீரெனக் கூறுகிறார். மற்றவர்கள் வியப்போடு பார்க்கிறார்கள். டிசிப்பிளின் பார்க்கிறவர் பியோனோடு தோழமை கொண்டாடுவது என்பது…? அவர்களுக்கு ஆச்சரியத்தால் முழி பிதுங்கிவிடும் போலிருக்கிறது. 

திடீரென்று அவன் மேல் தனக்கு அவன் ஊற்ற வந்த வாளித் தண்ணீரைக் கவிழ்க்கிறார். அவன் திகைத்துப் போய் நிற்க, அவரே அள்ளிக் குளிப்பாட்டத் தொடங்க அவன் கூச்சத்தால் நெளிகிறான். 

‘திரும்படா…. முதுகைக் காட்டடா…. நீயும் என்ர பிள்ளை போல என்ன கூச்சம்……’ என்றவாறு அவன் முதுகை வேறு தேய்க்க ஆரம்பிக்கிறார். ‘ஆளுக்கு கொஞ்சம் கூடிப்போட்டுது….’ மற்றவர்கள் முணுமுணுப்பது அவருக்கு கேட்பதில்லை. 

எல்லோரும் ஒன்றாக இருந்து தங்களுக்கு வந்திருந்த எடுப்புச் சாப்பாட்டை பிரிக்கிறார்கள். எனக்கு மீன் வைச்சிருக்கிறாங்கள். எனக்கு முட்டை….. அவர் தனது சாப்பாட்டை பிரித்து வைத்துக்கொண்டு ‘தணி இங்க வாடா… சாப்பிடுவம் என்று அழைக்கிறார். 

“வேண்டாம் ஐயா… நீங்க சாப்பிடுங்க…நான் வீட்ட போய்ச் சாப்பிடுகிறன்…” 

‘வீட்ட போய்ச் சாப்பிடுறியோ….. நல்ல கதைதான்…. வாடா … எண்டா வந்திரோணும்…’ அவன் அவரை பயபக்தியுடன் அணுகுகிறான். 

அவர் அவனுக்கு ஊட்டாத குறையாக தனது சாப்பாட்டை பங்கீடு செய்கிறார். 

அவர் கண்களில் நீர் பனிக்க ‘ஐயா எவ்வளவு நல்லவர். வேலையில்தான் நெருப்பு…..’ 

சாப்பாடு முடிய மாலை ஆறுமணியாகிவிட்டது. எல்லாரும் அவரவர் அறைகளில் போய் விழும்போது ஏழுமணியாகி இருக்கும். 

மறுநாள் காலை புலர்கிறது. மயில்வாகனத்தார் எழுகிறார். ‘பரபற’வென்று கிடக்கும் முகத்தை தடவிக் கொள்கிறார். சவர்க்காரம், ஹேவிங் ரேசர் முதலான சாமக்கிரியை உபகரணங்களுடன் கிணற்றடிக்குப் போகிறார். 

குளியல் எல்லாம் முடிந்து, காற்சட்டை போட்டு, கண்ணாடிக்கு முன் நின்ற போது ‘ஐயா….. எழும்பிட்டீங்களா? ….நேத்து ஐயாவுக்கு கொஞ்சம் கூடிப்போட்டுது…. அதுதான் பார்க்க வந்தனான். எண்டாலும் ஐயா இப்படிக் குடிக்க்க கூடாது…’ என்று நேற்று அன்பு மழையில் நனைந்த உரிமையில் தணிகாசலம் அவர் அறையில் காலடி பதித்தான். 

‘என்னடா சொன்னாய் நாயே….. நான் குடிகாரனோ…. இதுதான்…. இந்த எளியதுகளை வைத்துக்கொண்டு ஒன்டும் செய்யக்கூடாது என்கிறது. முதல்ல யாரைக் கேட்டு அறைக்குள் வந்தாய் போடா வெளியால…… 

அவன் திக்கித்தான். 

செம்பியன் செல்வன்

அமரர் செம்பியன் செல்வனின் இருசிறு கதைகளான ‘ஞாயிற்றுக்கிழமை. பூவும்கனியும்’ என்பன ஈழநாடு இதழில் வெளிவந்துள்ளன. நெருப்பு மல்லிகை. விடியலைத்தேடும் வெண்புறா, கானகத்தின் கானம் என்பன செம்பியன் படைத்த நாவல்கள். உருவுக்கதைகள், குறுங்கதைகள் பலவும் எழுதியுள்ளார். ‘தன் எழுத்து காலத்தை உணர்த்தி நிற்கவேண்டும்’ என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் செம்பியன் செல்வன், பல்துறை இலக்கியப் பரிமானங்கொண்டவர் 

– 02.07.1989

– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.

Sembiyan_Selvan இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (சனவரி 1, 1943 - மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழக புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம், தின்னவேலியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்து இவரையும் இவரது தமையன் கணேசபிள்ளையையும் வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *