ஒரு சனிக்கிழமை காலையில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 21, 2026
பார்வையிட்டோர்: 130 

கிச்சா

எனக்கு எங்கப்பாவைக் கொல்லணும்போல ஆத்திரம் வரும். அடிக்கடி. ஆனா, எங்கே இருக்கார், உயிரோடதான் இருக்காரான்னே தெரியாதவரை எப்படிக் கொல்றது?

எனக்குப் பயந்துதான் வீட்டைவிட்டு ஓடிப்போயிட்டார்னு நினைச்சுப்பேன். சிரிப்பு சிரிப்பா வரும்.

அம்மா வெள்ளிக்கிழமை தவறாமல் என்னைக் கோயிலுக்கு அழைத்துப்போவாள். கடைசிக் காலத்தில் நானாவது அவளுக்கு ஆண்துணையாக இருப்பேன் என்று அவள் நினைத்திருந்தது அந்த வயதில் எனக்குப் புரியத்தானில்லை.

கோயிலுக்குப் போகும் நேரத்தில் சினிமா பார்க்க ஏதாவது தியேட்டருக்குப் போகலாம். ஆனால் அதைச் சொன்னால், அம்மா அழுவாள்.

எதற்குத்தான் அழுவது என்று கிடையாது அம்மாவுக்கு. தன்னால் புரிந்துகொள்ள முடியாத, அல்லது பிடிக்காத சமாசாரம் என்றால், அதை அழுகையாக வெளிப்படுத்துவாள்.

அம்மாவை விடுங்கள். எனக்குத் திரைப்பட கதாநாயகர்கள்போல் பேசுவது பிடித்த விஷயம்.

`நீ சினிமாவுக்கு நடிக்கப் போகலாண்டா. என்ன அழகு நீ! சுருள் சுருளா தலைமயிர். தீர்க்கமான மூக்கு!’ என்று என் வகுப்பில் படிக்கும் யாராவது புகழ்ந்தால், உச்சி குளிர்ந்துவிடும்.

`சினிமாவிலதான் பொய்முடி வெச்சுக்கறாளாமே!’ என்றுவிடுவேன், வலுவில் வரவழைத்துக்கொண்ட அலட்சியத்துடன்.

சற்றுப் பெரியவன் ஆனதும், அதையே சற்று மாற்றிச் சொல்வார்கள். “சினிமாவுக்கு வேண்டிய எல்லா கெட்ட பழக்கமும் இருக்கு. வீணடிக்கிறே!’

நான் பெரிதாகச் சிரிப்பேன். கூடவே ஒரு சந்தேகம் எழும்: அது எப்படி, எத்தனை வயதானாலும், சினிமா கதாநாயகர்களுக்கு அழகான இளம்பெண்களை எளிதாக மயக்க முடிகிறது?

`நானும் எல்லாப் பெண்களையும் மயக்கிக் காட்டுகிறேன், பார்!’ என்று எனக்கு நானே சவால் விட்டுக்கொள்வேன். ஆனால் அப்பாமாதிரி இருக்கக் கூடாது. ஒருத்தியையும் விரலால்கூடத் தீண்டக்கூடாது. அப்புறம் அம்மாவின் அழுகையை எப்படித் தாங்குவது!

கோயிலில் பிரசாதம் ஒன்றுதான் எனக்குப் பிடித்த விஷயம். சர்க்கரைப்பொங்கலோ, இல்லை, புளியோதரையோ, இந்த அம்மாவால் ஏன் இவ்வளவு ருசியாகப் பண்ணத் தெரியவில்லை என்று ஆத்திரமாக இருக்கும். அம்மாவுக்கு அழத்தான் தெரியும்.

“என்னை விட்டுட்டுப் போயிடாதேடா!” என்றபடி, ராத்திரி என்னைத் தூங்கவைக்கும் சாக்கில், என் தலைமயிரைக் கோதியபடி அரற்றுவாள்.

நான் என்ன, புட்டிப்பால் குடிக்கும் பாப்பாவா? அம்மா தூங்கவைத்தால்தான் தூங்க முடியுமா, என்ன? எரிச்சல் எரிச்சலாக வரும். அம்மாவின் கையைப் பிடித்துத் தள்ளுவேன்.

அடுத்தமுறை கோயிலுக்குப்போகும்போது, `சாமி! அம்மா செத்துப்போகணும்!’ என்று வேண்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தபடி, பற்களைக் கடித்துக்கொள்வேன்.

அதற்குப் போதுமான பக்தி எனக்கு இல்லையோ, என்னவோ, என் வேண்டுதல் பலிக்கவில்லை.

“ஏண்டா! இன்னுமா குளிக்கலே? இன்னிக்கு வெள்ளிக்கிழமை. மறந்துட்டியா?” நாசூக்காக நினைவுபடுத்தினாள் அம்மா.

“போம்மா. நான் கோயிலுக்கு வரல்லே,” என்றேன் சிணுங்கலாக.

என்னமோ, நான் கொலை செய்துவிட்டு, அதை ஒப்புக்கொண்டதுபோல அம்மாவின் முகத்தில் ஒரே அதிர்ச்சி.

சிறிது நேரம் அசாத்திய மௌனம். மெதுவாகச் சமாளித்துக்கொண்டு, “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. சாமி கண்ணைக் குத்தும்,” என்றுவிட்டு, “ஏன் வரலே? ஒடம்பு சரியில்லையா?” என் நெற்றியில் கை வைத்தாள்.

பதில் சொல்லும் விதமாக, “சாமி நான் கேக்கறது எதையும் குடுக்க மாட்டேங்கிறது,” என்றேன் முணுமுணுப்பாக.

“அப்படி என்ன கேட்டே?” அம்மா முகத்தில் – அபூர்வமாக – ஒரு சிறு புன்னகை.

வெளிப்படையாகச் சொல்லமுடியுமா, `நீ செத்துப்போகணும்னுதான் வேண்டிண்டேன்’ என்று?

எதுவும் பேசாமல், “குளிக்கணும்,” என்று நழுவினேன். காலையில் ஒரு முறை குளித்தாயிற்று. இருந்தாலும், அம்மாவுக்கு அது போதாது. ரொம்ப சுத்தமாக இருந்தால்தான் சாமி கண்ணைத் திறப்பாராம்.

கோயிலில் இருந்த சாமி பெயர் துர்கா. `கெட்டவர்களை அழிக்கிறவள்’ என்று கோயிலில் கதாகாலட்சேபம் செய்கிற மாமா சொல்வார். ஒரே அம்மன் இத்தனைபேருக்கும் எப்படி நல்லது செய்வாள் என்று என் யோசனை போயிற்று.

“ஏண்டிம்மா? இன்னிக்கு ஒங்கம்மா வரலியா?” ஒரு பெண்ணை யாரோ மாமி கேட்டுக்கொண்டிருந்தாள்.

“இல்லை மாமி. அம்மா ஆத்திலே இல்லே”.

அம்மாவுக்கு மாசாமாசம் வருவது. வெளிப்படையாகச் சொல்லக்கூடாத வார்த்தையாம்! எதுதான் கெட்ட வார்த்தை என்று கிடையாது. ஆங்கிலத்தில், எருதின் சாணி’ என்றால்,பொய்யளக்கிறே’ என்று அர்த்தமாம்.

அந்தப் பெண் தொடர்ந்து, “அதான் அப்பா என்னை அழைச்சிண்டு வந்திருக்கார்,” கூறினாள்.

அப்பா!

அந்த வார்த்தை காதில் விழுந்ததுமே எனக்குப் பற்றிக்கொண்டு வந்தது. எனக்கும் இருக்கிறாரே!

எனக்கு முகமே தெரியாத அப்பாவுடன் ஏன் எல்லாரும் என்னை இணைத்துப் பேசுகிறார்கள்? நான் ஒருவயசுக் குழந்தையாக இருந்தபோதே காணாமல் போய்விட்டாராம். போனவர் சும்மா போய் தொலைந்திருக்கக் கூடாதா!

‘ஒங்கப்பன்மாதிரிதானே நீயும்!’ என்று பாட்டி அடிக்கடி என்னை வசைபாடியதற்கான காரணம் எனக்கு மீசை முளைக்க ஆரம்பித்ததும்தான் புரிந்தது.

கூட வேலை செய்தவளுடன் காதல் லீலை! அப்பாவின் உயிர் அவள் உடலிலும் வளர ஆரம்பித்ததும், அந்த காரியம் செய்வதற்குமுன் இல்லாதிருந்த அவமானம் பொங்கி எழ, அதைத் தாங்கமுடியாதுதான் தலைமறைவாகிவிட்டார் என்று பேசிக்கொண்டார்கள்.

அப்போதுதான் அந்த முடிவை எடுத்தேன்.

நான் அப்பாமாதிரி ஆகமாட்டேன்! பெண்களிடம் மரியாதையாக நடந்துகொள்வேன். தொட்டுப் பேசினால்தான் அன்பா?

அதுதான், `நீயும் அப்பாமாதிரி ஆகிடாதேடா’ என்று அம்மா தினமும் அழுதாளோ?

அம்மா, பாட்டி, அப்பா எல்லாரும் ஓயாமல் என் மனதைக் குழப்பிக்கொண்டு இருந்தார்கள்.

`எங்கப்பா தினம் ராத்திரி என்ன அடிக்கிறார். எதுக்கு அடிக்கிறாருன்னே புரியல,’ என்று அரற்றிய கேசவன் எனக்கு நெருங்கிய நண்பன் ஆனான்.

‘நல்லவனா இருந்தா, யாருமே கவனிக்கிறதில்லே,’ என்று குறைப்பட்ட சாங்,வகுப்புத் தலைவனாக இருந்து என்ன பயன்!’ என்ற விரக்தியில் எங்களுடன் சேர்ந்தான்.

எங்களுக்குள் இன ஒற்றுமை இருந்தது. அதைத்தானே மலேசிய அரசியல் தலைவர்கள்,`முஹிப்பா’ (muhibbah) என்று அடித்துக்கொள்கிறார்கள்!

மூவரும் சேர்ந்து, திருட்டுத் தம் அடிப்போம். பள்ளி கழிப்பறையில் ஒரு தடவை மாட்டிக்கொண்டு, வாராந்திர பொதுக்கூட்டத்தில் எல்லா மாணவர்களுக்கும் முன்னால் பிரம்படி வாங்கினோம்.

“ஏண்டா? இப்படி அடி வாங்கறீங்களே! வெக்கமா இல்லை?” என்று மிஸஸ்.ஜான் கேட்க, என் நண்பர்கள் இருவரும் என்ன பதில் சொல்வது என்று புரியாது விழிக்க, நான்தான் சொன்னேன், “இல்லை டீச்சர், எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ்தானே!” என்று.

இன்று நான். நாளை இன்னொருத்தன். இதில் என்ன வெட்கம்?

வீட்டில் மனைவிக்குப் பயந்து அடிபணிகிறவன் டிசிப்ளின் மாஸ்டராக வந்து, எங்களைப்போன்ற ரெண்டுங்கெட்டான்களை மிரட்டிப்பார்க்கிறான். அவனே சிகரெட் பிடிக்கிறான். எங்கள் வயதிலேயே ஆரம்பித்திருப்பான். இப்போது என்னவோ, பெரிய ஒழுக்கசீலன்போல ஆக்ஷன் (action)!

எனக்குப் பொங்கிய சிரிப்பை அடக்க, வாயைப் பொத்திக்கொண்டேன்.

`வெக்கமில்லாம சிரிக்கறான், பாரு!’ யாரோ கமெண்ட் அடித்தார்கள்.

டீச்சராக வரும் பெண்கள் மட்டும் என்னவாம்! புகுந்த வீட்டில் மாமியார் மட்டுமில்லாமல் கணவரிடமும் கிடைக்காத அதிகாரம் வேலை செய்யும் இடத்திலாவது கிடைக்கிறதே என்று தேடுகிறவர்கள்தாம் இந்தத் தொழிலுக்கு வருகிறார்கள். எனக்கு அதில் சந்தேகமே கிடையாது.

எனக்குத் தெரிந்த பெண்களில் வித்தியாசமானவள் கோகி.

தீப்பெட்டிக் குச்சிகள்போல் ஒட்டிக்கொண்டிருந்த எங்கள் வீட்டிலிருந்து மூன்று வீடு தள்ளி அவளுடையது. ஜட்டி போடாமல், அம்மாவின் இடுப்பில் அவள் இருந்தபோதே அவளைத் தெரியும்.

ஒன்பது குழந்தைகளில் கடைக்குட்டி என்பதால் எல்லாருக்கும் ஒரே செல்லம். எட்டு வயதானபோதுகூட, அவளுடைய அம்மா கோகியைத் தூக்கி வைத்துக்கொண்டு இருப்பாள். அவள் திட்டோ, அடியோ வாங்கி நான் பார்த்ததில்லை.

கோகிலா

கிச்சா எல்லார் முன்னிலையிலும் அடி வாங்கியபோது, என் முதுகிலும் காலிலும் வலி பின்னி எடுத்தது. அப்படியே மண்தரையில் மயங்கி விழுந்தேன்.

என்னைப் பார்த்து இளிக்கும் மற்ற ரௌடிகள்போல் இல்லை அவன்.

“வயத்து வலியா?” என்று என் புத்தகப்பையை வீட்டிலிருந்து தூக்கி வருவான். “எங்கம்மாவும் மாசாமாசம் இப்படித்தான் துடிப்பா!”

அவன் சர்வசாதாரணமாகச் சொல்வான். எனக்குத்தான் வெட்கமாக இருக்கும். (`எல்லார்கிட்டேயும் ஒப்பிச்சிண்டு இருக்காதே!’ என்று அம்மா எச்சரித்திருந்தாளே!).

பள்ளிக்கு அடுத்த தெருவில், “இந்தா!” என்று பையை என்னிடமே கொடுத்துவிட்டு, “எவனாவது தறுதலை நம்பளை ஒண்ணாப் பாத்தா, ஒன்னைத்தான் தப்பா பேசுவான்” என்பான்.

அவன்மேல் எனக்கிருந்த மரியாதை கூடியது.

அப்படியும் மாட்டிக்கொண்டோம்.

ஒருமுறை பையை என்னிடம் கொடுக்கும்போது, வேறொரு பள்ளியில் படித்த எவனோ, `என்னடா? கேர்ல் ப்ரெண்டா?’ என்று கேட்டுவிட்டான், கேலியாக.

கிச்சா ஆத்திரப்பட்டு அன்றுதான் பார்த்தேன்.

“இந்தா, பிடி!” நான் வாங்குமுன் என் பையை நழுவவிட்டு, ஒரே பாய்ச்சலில் அந்தப் பையனின் சட்டைக்காலரைப் பிடித்தான்.

அவன் நடுங்கி விட்டான். கிச்சாவின் ஆறடி உயரத்துக்குமுன் அந்த சோனி எம்மாத்திரம்!

சமாளித்துக்கொண்டு, “ஒண்டிக்கு ஒண்டி சண்டை போடலாமா? இல்லே, என்னோட கூட்டாளிங்களையும் கூட்டி வரவா?” என்று வீரம் பேசினான்.

சாங்கும், கேசவனும், புதிதாக அவர்கள் குழுவில் சேர்ந்திருந்த ஜூல்லும் (Zul) வந்தார்கள், நண்பனுக்குத் தோள் கொடுக்க.

பள்ளிக்கூடத்தில் வசவு. இல்லையேல், போரடிக்கும் டீச்சர்கள். இங்கே அதைவிட சுவாரசியமாக இருக்கிறதே என்று வேடிக்கை பார்க்க மாணவர்களின் கூட்டம் சேர்ந்தது.

போலீஸ் வந்து அவர்களைப் பிடித்துப்போனார்கள்.

`வாங்கற சம்பளத்துக்கு இந்த வேலையாவது கிடைச்சதேன்னு அவங்களுக்கு சந்தோசமா இருந்திருக்கும்!’ என்று அதன்பின் சாங் கூறினான், கேலியாக.

‘இந்த வயசில படிச்சு, முன்னுக்கு வரப்பாருங்கப்பா,’ என்ற வேண்டாத அறிவுரையுடன் அவர்களை விட்டுவிட்டார்கள்.

`எங்கப்பாவோட சப்போர்ட் இருக்கு. எனக்கென்னடா பயம்!’ என்று காலரைத் தூக்கி விட்டுக்கொண்டானாம் ஜூல். அவனுடைய அப்பா போலீஸ் அதிகாரி.

கிச்சா அவனுடைய தைரியத்தைப்பற்றிச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பான் – அவனுடைய தைரியம் தனக்கும் ஒட்டிக்கொண்டுவிட்டதுபோல்.

கிச்சா

`கிருஷ்ணசாமி’ என்று நீளமான பெயரை வைத்து, அது கிச்சாமி என்றாகி, இன்னும் சுருக்கிவிட்டார்கள். எனக்கு என்னையும் பிடிக்கவில்லை. என் பெயரையும் பிடிக்கவில்லை.

ஆனால், கோகிக்கு என்னைப் பிடித்தது.

இவளைத்தான் கல்யாணம் செய்துகொள்ளணும் என்று முடிவெடுத்தேன். ஆனால், பெண்டாட்டியை நிர்கதியாக விட்டுவிட்ட அப்பாமாதிரி எங்கேயும் ஓடிவிடமாட்டேன் என்று நினைத்துக்கொள்வேன். அந்த நினைவே இன்பமாக இருக்கும். சிரிப்பு வரும். இன்னும் மீசையே சரியாக முளைக்கவில்லை. அதற்குள் எப்படியெல்லாம் யோசனை போகிறது!

இப்போதைக்கு இந்த மூன்று நண்பர்கள் போதும்.

எங்கள் குழு நண்பர்களிடம், “சனிக்கிழமை காலையில பத்து மணிக்கு எங்க வீட்டுக்கு வர்றீங்க!” அதிகாரமாக, ஆனால் கண்ணைச் சிமிட்டியபடி கூறினான் ஜூல்.

“எதுக்குடா?” ஒரே குரலில் மூன்று பேரும் கேட்டோம்.

“அப்பாவும் அம்மாவும் அமெரிக்கா போறாங்க, அண்ணா பட்டம் வாங்கற பெருமையைப் பாக்க,” என்றவன் குரலில் கசப்பு. “வீட்டில நான் மட்டும்தான் — டெஸ்டுக்குப்

படிக்கணும்னு நைசா தங்கிட்டேன். பாட்டி எப்பவாச்சும் வருவாங்க”.

“எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்து படிக்கப்போறோமா?” அசுவாரசியமாகக் கேட்டான் சாங்.

“ஆமா. ஆனா, ஸ்கூல் பாடம் இல்லே. வாழ்க்கைப் பாடம்”. கண்ணடித்தான்.

சாங்கிற்குப் புரியவில்லை. “எங்கடா போறேன்னு அப்பா துளைச்சு எடுப்பாரே!”

“ஸ்டுபிட்! இதுகூடவா நான் சொல்லித் தரணும்? லைப்ரரிக்குப் போறேன்னு சொல்லிட்டு வாங்களேண்டா”.

நான் யோசித்தேன். “பொய் சொல்லச் சொல்றியா?” இதுவரை அம்மாவிடம் பொய் சொன்னதில்லை.

அம்மாவுக்குத் தெரியாமல், சிகரெட்டு பிடிப்பேன். பஸ்சுக்கு என்று கொடுத்த காசை மிச்சம் பிடித்து, நடந்தே போவேன். அம்மாவும் துருவித் துருவிக் கேட்டதில்லை.

அதற்குக் காரணமும் எனக்குத் தெரியும். “`நமக்கு அப்பா இருந்தா, இப்படி எல்லாம் நடக்குமா’ன்னு அவன் சங்கடப்படக்கூடாது,” என்று யாரிடமோ சொன்னதைக் கேட்டிருக்கிறேன்.

அதுவே எனக்கு சௌகரியமாகப் போயிற்று.

சனிக்கிழமை எப்போது வரும் என்று நாங்கள் ஆவலுடன் காத்திருந்தோம். கண்ணைச் சிமிட்டுகிறமாதிரி, அப்படி என்ன ரகசியம்?

நண்பன் ஒரு சி.டியை வீடியோக்குள் போட்டான்.

“டி.வியா!” எங்கள் உற்சாகம் எழுந்த வேகத்தில் வடிந்தது.

“அவசரப்படக்கூடாது!” செல்லமாக மிரட்டினான் ஜூல்.

முதலில் சற்று நேரம் நாங்கள் மூச்சு விடக்கூட மறந்தவர்களாய் திரையில் கண்ணைப் பதித்தோம்.

வியந்தபடி, “ஏதுடா?” கேசவன் கேட்டான். உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் குரல் கரகரத்தது.

“கடைக்குப்போய், ஸ்..ஸ் அப்படிம்பேன், விசில் அடிக்கிறமாதிரி. மேசை அடியால குடுப்பாங்க!”

விரைவிலேயே, மௌனம் கலைந்தது. அதன்பின், ஒரே கும்மாளம்.

“இன்னிக்கு இது போதும். அடுத்த வாரத்திலேருந்து ஆளுக்கு ஒரு வெள்ளி குடுக்கணும். சொல்லிட்டேன்”. வியாபாரியாக மாறினான் `நண்பன்’ என்று நாங்கள் நம்பியவன்.

எங்கள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை மாற்ற முயற்சிக்கும்வண்ணம், “நீங்க ஒரு பொண்ணைக் கூட்டிட்டு வரலாம். அவங்களுக்குக் காசில்ல. ஃப்ரீ!” என்று ஆசை காட்டினான்.

“அடுத்த வாரம் எப்போ வரும்னு இருக்கில்ல?” ஏக்கத்துடன் கேட்டான் சாங்.

எனக்குள் பல கேள்விகள் எழுந்தன.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இப்படியெல்லாம் அசிங்கமாக, அதுவும் நிர்வாணமாக, நெருங்கத் தோன்றுமா?

யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்?

ஒருவேளை, இவை இயற்கையாகவே எழும் உணர்ச்சிகளோ?

எல்லாரையும்போல அப்பா-அம்மா என்று இருந்திருந்தால், எனக்கு இம்மாதிரியான சந்தேகங்கள் எல்லாம் வந்திருக்குமா என்ற ஏக்கம் எழுந்தது.

அடுத்தமுறை, கோகிலாவை அழைத்து வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். என்னைவிடச் சற்று சிறியவள். ஆனால், புத்திசாலி. என் கேள்விகளுக்கு அவள் பதில் சொல்வாள்.

ஜூல் (ZUL)

என் அப்பா வேலை பார்க்கும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் அந்த வீடியோ கடை இருந்தது சௌகரியமாகப்போயிற்று.

இந்த மடையன்ஸ் மூன்று பேரும் பணத்துடன் வருவான். நான் வாங்கியதைவிட மூன்று மடங்கு சம்பாதித்துவிடுவேன்.

என்னை `முட்டாள்’ என்று ஏளனமாகப் பார்க்கும் அண்ணாவுக்கு அப்போது தெரியும், யார் சாமர்த்தியசாலி என்று. படித்தால்தான் புத்திசாலியோ?

கோகிலா

“கோகி! நாளைக்கு என்கூட வர்றியா?” கிச்சா கேட்டபோது, எனக்கு அவன்மேல் துளிக்கூட சந்தேகம் ஏற்படவில்லை. ஆனாலும், தயக்கமாக இருந்த து.

“அம்மா ஒன்கூட சேரக்கூடாதுன்னு சொல்லியிருக்கா,” என்று இழுத்தேன்.

அவன் அழகு முகம் வாடியது. “ஏன்? ஏன் கோகி?”

“ஒங்கப்பா எங்கே இருக்கார்?”

“தெரியாது”.

“அப்படி ஒருத்தர் இருக்காரான்னே தெரியாத பையனோட ஒனக்கென்ன சிநேகம்னு அம்மா திட்டறா. ஆத்துக்காரர் ஓடிப்போயிட்டார்னு ஒங்கம்மா கதை கட்டியிருக்காளாம்”.

கிச்சாவின் சிவந்த முகம் இன்னும் சிவந்தது. அவனுக்கு அப்போதுதான் புரிந்திருக்க வேண்டும், அவனுடைய அம்மாவின் நடத்தையில் எல்லாருக்கும் சந்தேகம் என்று.

“அது ஒண்ணும் கதையில்ல,” என்று அம்மாவுக்கு வக்காலத்து வாங்கினான். “நீ வராட்டா போயேன்!”

எனக்குப் பாவமாக இருந்தது. அத்துடன், பிணம் கனம் கனத்த என் பையை இனிமேல் யார் தூக்கி வருவார்கள்!

“எத்தனை மணிக்கு வரணும்?” என்று இறங்கிவந்தேன்.

கிச்சா

“சீ! இந்த கண்ராவியைப் பாக்கவா என்னை வருந்தி, வருந்தி அழைச்சிண்டு வந்தே? நான் போறேம்பா!”

“அப்படியெல்லாம் பாதியில போகமுடியாதும்மே. வாயைப் பொத்திக்கிட்டு ஒக்காரு!” எங்களில் ஒருவன் கிறங்கிப்போன நிலையில், கோகியின் கையைப் பிடித்து வேகமாக இழுத்தான்.

அவள் அப்படியே மல்லாக்க விழுந்தாள். இப்போது எல்லாருக்கும் படத்திலிருந்த கவனம் அவள்மேல் திரும்ப, ஜூல் ஒரு வெற்றிச்சிரிப்புடன், கோகியின் தொடைமேல் உட்கார்ந்தான். அவன் கருவிழிகளைச்சுற்றி வெள்ளை நிறத்தில் நிறைய வட்டங்கள் இருந்ததுபோல் எனக்குத் தோன்றியது. சில கணங்கள் ஏதேதோ நடந்தது, திரையில் பார்த்ததுபோல்.

அவள் திமிற, “இதோட கையையும் காலையையும் பிடிங்கடா,” என்று கட்டளையிட்டான்.

நான் முந்திக்கொண்டேன். ஜூல்லின் மார்பில் உதை விட்டேன். அதைச் சற்றும் எதிர்பாராது அவன் பக்கவாட்டில் சரிந்து விழுந்தான்.

“எழுந்து ஓடு, கோகி!” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து, நிற்கவைத்தேன்.

கோகிலா

”அந்த கிச்சாதான் என்னை வரச்சொன்னான்”.

“அவன் கூப்பிட்டானாம், இவ போனாளாம். சட்டையைக் கிழிச்சிண்டு வந்து நிக்கறா! ஒனக்கெங்கேடி போச்சு மூளை? இந்த வயசிலேயே பொய்! லைப்ரரிக்குப் படிக்கப்போறதா சொல்லிட்டு…!” அம்மா அழ ஆரம்பித்தாள். “இனிமே, வெஷம்தான்!”

“ஒண்ணும் நடக்கலேம்மா!” நான் சொன்னதை யாரும் காதில் வாங்கிக்கொள்ளத் தயாரில்லை.

பிறகுதான் நினைத்தேன், எனக்கேற்பட்ட பயத்தை எப்படியாவது சமாளித்திருக்க வேண்டுமென்று. நடந்ததை அப்பாவிடம் சொல்லி அழுதிருக்க வேண்டாம். அப்பா இப்படி ஒரு காரியம் செய்வாரென்று அப்போது தோன்றவில்லையே!

மறுநாள் பள்ளி முழுவதும் வேடிக்கை பார்க்க, இருபுறமும் போலீஸ் காவல் வர, குனிந்த தலையுடன் மாடிப்படிகளில் இறங்கியபடி கிச்சா! நிமிர்ந்து, என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் தலையைக் குனிந்துகொண்டான்.

அவன் கண்களில் தெரிந்தது கோபமா, இல்லை, வேதனையா?

எனக்குள் சந்தேகம் எழுந்தது.

எப்போதும் மரியாதையாகப் பழகியவன் அப்படி ஒரு காரியம் செய்யத் துணிந்திருப்பானா?

என் புத்தகப்பையை அவனிடம் கொடுக்கும்போது என் கை அவன்மேல் பட்டால்கூட, `சரியா பாத்துக்குடேன்!’ என்று சீறியவன்!

திரும்பத் திரும்ப யோசித்தேன்.

கிச்சாவுடன் போனது மட்டும்தான் ஞாபகத்தில் இருந்தது. போன இடத்தில், யாரோ இரண்டு பையன்கள் என் கையையும் காலையும் பிடிக்க முயன்றார்கள். அவர்களைப்

பிடித்துத் தள்ளிவிட்டு, வெளியே ஓடினேன். வேறு எதுவும் சரியாக நினைவில்லை.

அம்மா அப்பாவிடம் ரகசியக்குரலில், “நம்ப குடும்ப லட்சணம் அக்கம்பக்கத்தில இருக்கிறவாளுக்குத் தெரியறதுக்குள்ளே, தூரத்திலே வேற வீடு பாருங்கோ,” என்றது எனக்கும் கேட்க அதிர்ந்துபோனேன்.

“அம்மா! என் பள்ளிக்கூடம்?” என்று அலறினேன்.

“போறும் நீ படிச்சுக் கிழிச்ச லட்சணம். பொண்ணுக்கு எதுக்கு படிப்பு? சமைக்கவும், பிள்ளை குளிப்பாட்டவும் தெரிஞ்சா போறாது?” அம்மா தன் காலத்திலேயே இருந்தாள்.

என்ன செய்வது என்று புரியாமல், அழமட்டும்தான் முடிந்தது என்னால்.

எப்போதாவது பழைய ஞாபகம் வரும்.

கிச்சாவை ஜெயிலில் போட்டிருப்பார்களா?

அங்கே இவனைவிடப் பெரிய ரௌடிகள் இருப்பார்களே! இவன் எதற்கு உள்ளே வந்தான் என்று தெரிந்தால், அவர்கள் இவனைச் சும்மா விட்டுவைப்பார்களா?

என்ன காரியம் செய்துவிட்டேன்! அழுகை பீறிட்டது.

அடுத்த சில நாட்கள் படுக்கையிலேயே இருந்தேன். யாருடனும் பேசப் பிடிக்கவில்லை. எப்போதாவது அம்மா இரைவது கேட்கும்.

`இவளைப் பாத்தா பயமா இருக்கு. ஏதோ வியாதி வந்தவமாதிரி எப்பவும் படுத்த படுக்கை. கண் வெறிச்சிண்டு, எங்கேயோ நிலைகுத்திண்டு ..! நிலைமை முத்தறதுக்குள்ளே ஒங்க பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெக்கிற வழியைப் பாருங்கோ. பைத்தியம்னு தெரிஞ்சா, அப்புறம் எவன் இவளைச் சீந்துவான்?”

அப்பாவின் குரல் உரக்க ஒலித்தது. `கல்யாண ஏற்பாடு செய்யணும். அவ்வளவுதானே? அதைச் சொல்லிட்டுப்

போயேன். குழந்தையைப் பைத்தியம், அது, இதுன்னு..!’ என்றவர், `பதினெட்டு வயசுக்குள்ளே கல்யாணம் பண்றது சட்டவிரோதம்,’ என்று முனகியபடி அப்பால் நகர்ந்தார்.

கிச்சா

முன்பு ஒருமுறை, வகுப்பில் பாடம் நடந்துகொண்டிருந்தபோதே, “போரிங்!” என்று வெளிநடப்பு செய்து, என்னுடன் சாங்கையும் அழைத்துக்கொண்டான் ஜூல்.

பள்ளிக்கு வெளியே சென்று, மீ கோரிங், தேத்தண்ணி என்று அவன் செலவில் ஜாலியாகப் பொழுதைக் கழித்தோம்.

ஜூல் அப்போது சிரித்தான்: `எங்கப்பாவோட சப்போர்ட் இருக்கு எனக்கு. எதுக்கு கவலை! ஹெட்மாஸ்டர் ஆயிரம் ரிங்கிட் செக்கை வாங்கிட்டு என்னை விட்டுட்டார்’.

இப்போது அவனுடைய அப்பா அலறிப்புடைத்துக்கொண்டு நாடு திரும்பினாராம்.

அவருடைய வீட்டில் நீலப்படம் பார்த்துக்கொண்டு இருந்த நான்கு பள்ளி மாணவர்களில் அவருடைய மகனும் ஒருவன்!

வெட்கக் கேடு! வெளியே தெரிந்தால், அப்புறம் யார் அவரை மதிப்பார்கள்?

விசாரித்ததில், பலாத்காரம் செய்ய முயன்றார்கள், ஆனால், ஏதும் விபரீதம் நடப்பதற்குள் தப்பி ஓடிவிட்டாள் என்று தெரிந்தது.

வயசுக்கோளாறு. இந்த சின்ன விஷயத்தைப் பெரிசுப்படுத்தினா, பசங்க வாழ்க்கையே கெட்டுடும், பாவம்!’ என்றுபெரிய மனது’ பண்ணினார் அதிகாரி.

இப்படித்தான், ஜூல்லின் புண்ணியத்தில் நானும் இன்னொருமுறை தப்பினேன்.

அம்மா எதுவும் சொல்லாமலிருந்தது என் குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிட்டது. பாவம், அம்மாவும்தான் வாழ்க்கையில் என்ன சுகம் கண்டாள்!

“கோயிலுக்குப் போகலாமாம்மா?” நான் குளித்து, தலையைத் துவட்டியபடி கேட்க, அவள் முகத்தில் தோன்றிய பிரகாசம் இதுவரை நான் பார்த்திராதது. மகன் உருப்பட்டு விடுவான் என்ற நம்பிக்கை அப்போதுதான் அவளுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.

சிறு வயதில், அம்மா சாகவேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்ததை நினைத்தால் சிரிப்பு வந்தது. எனக்கு இந்த அம்மா வேண்டும். அவள் முகத்தில் சிரிப்பு நிலைக்கவேண்டும்.

கோகி

எனக்கொரு கல்யாணத்தைச் செய்துவைத்த பெற்றோருக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்.

`கணவன்’ என்ற உரிமையுடன் என்னைத் தொட வந்தவரைப் பார்த்துக் கத்தினேன்: “என்னைத் தொடாதீங்கோ!”

அதனால் அதிர்ந்துபோனாரா, இல்லை நான் அழ ஆரம்பித்து, மாதக்கணக்கில் அந்த அழுகை ஓயவேயில்லையே என்று பயந்தாரா என்று தெரியாது. நான் பிறந்தகத்துக்கே திரும்ப வந்தேன். இல்லை, அனுப்பப்பட்டேன்.

“ஹிஸ்டீரியா வந்தாத்தான் இப்படி ஓயாம அழுவாங்க,” என்று யாரோ புத்திசாலி சொல்ல, மனநிலை மருத்துவரிடம் அழைத்துப்போனார்கள்.

இப்போதெல்லாம் அழுவதில்லை. ஆனால், சிரிக்கவும் மறந்துபோனேன்.

“தெளிவாப் பேசு, கோகி. நாக்கு ஏன் இப்படிக் குளர்றது!” என்று அம்மா அடித்துக்கொண்டாள்.

என் பேச்சும் குறைந்தது.

கிச்சா

எந்தச் சிறு தவறானாலும் மூன்று நாட்கள் பள்ளி பக்கமே தலைவைத்துப் படுக்கக்கூடாது என்று அடிக்கடி என்னை சஸ்பெண்ட் செய்துவந்த டிசிப்ளின் மாஸ்டர் ஹமீது அன்று என்னைப் பார்த்து தோழமையுடன் சிரித்தார்.

நான் விழித்தேன்.

“இப்போ நல்லா படிக்கிறயாமே! மத்த டீச்சரெல்லாம் பேசிக்கிட்டாங்க. ஸ்போர்ட்சிலேயும் சேர்ந்துக்க. ஒன் ஒசரத்துக்குப் பலத்துக்கும் பெரிய ஆளா வருவே!”

எப்படி முன்னுக்கு வரலாம் என்று முதன்முதலாக அந்த மாஸ்டர்தான் எனக்குச் சொல்லிக்கொடுத்தார்.

`அப்பாமாதிரி ஆகிடாதேடா’ என்று ஓயாமல் அழும் அம்மா.

`ஒங்கப்பன் புத்திதானே ஒனக்கும் இருக்கும்!’ தன் மகள் பிறரது ஏச்சுப்பேச்சுக்கு ஆளாகிவிட்டாளே என்ற வருத்தத்தை என்மீது அனலாகக் கொட்டிய பாட்டி.

சற்றே வருத்தத்துடன், `ஒங்கம்மா ஒருமாதிரி. அதனால ஒன்கூடச் சேரக்கூடாதாம்!’ என்ற கோகி.

சிறு வயதிலிருந்து நான் கேட்டுக் கேட்டு அலுத்து, ஆத்திரப்படவைத்த வசனங்கள்! அவை எல்லாம் ஆசிரியர் காட்டிய நல்வழியில் மறைந்துபோயிற்று.

இப்போது நான் நாட்டைப் பிரதிநிதித்த விளையாட்டு வீரர்களில் ஒருவன்.

என் பழைய நண்பர்கள் மூவரின் பெயரும் தினசரிகளில் அடிபட்டுக்கொண்டிருந்நது.

சாங் தன் வீட்டு வேலைக்காரியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவிக்கிறான். அவனுடைய வழக்கில் எதிர்தரப்பு வக்கீலாக இருந்தவர் – சிரிக்காதீர்கள் – ஜூல்!

52 கிராம் டாடா (dadah – போதைப்பொருள்) கடத்திய குற்றத்துக்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, சிங்கப்பூர் சிறைச்சாலையில் அணு அணுவாகச் செத்துக்கொண்டிருந்தான் கேசவன்.

வெள்ளிக்கிழமை தவறாமல் கோயிலுக்குப் போனதை மெச்சி, கடவுள்தான் என்னைக் காப்பாற்றி இருக்கவேண்டும்.

எனக்குப் பெண்கொடுக்க பெண்ணைப் பெற்றவர்கள், `நான், நீ’ என்று முண்டியடித்துக்கொண்டு வந்தார்கள்.

ஆனால், `ஆண்-பெண்’ என்று நினைத்தாலே, ஜூல்லும் கோகியும் இருந்த நிலைதான் நினைவில் எழுந்தது. அந்த நினைவே பயங்கரமாக இருந்தது.

இந்த ஜன்மத்தில் கல்யாணம், கருமாதி எல்லாம் வேண்டாம். அப்பாமாதிரி ஆகி, எவளையோ காலம் பூராவும் அழவைக்க வேண்டுமா?

ஒரு காலத்தில், `கல்யாணம் செய்துகொண்டால், கோகியைத்தான் செய்துகொள்ளவேண்டும்!’ என்று சங்கல்பம் செய்தது நினைவிலெழுந்தது. எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன்!

அவளைக் கெடுக்கப் பார்த்தவனிடமிருந்து காப்பாற்றி இருக்கிறேன். அதை மறந்து, என்மேல் குற்றம் சாற்றியிருக்கிறாள், படுபாவி.

இந்தக் குமுறல் எழும்போதெல்லாம், `பாவி, துரோகி, சண்டாளி, நயவஞ்சகி!’ என்று மனத்துக்குள் வரிசையாக அவளைத் திட்டித் தீர்ப்பேன் – ஒவ்வொரு திரைப்படத்திலும் வில்லன் மனைவியை ஏசிப்பேசியதுபோல்.

ஆனால், நான் வில்லன் இல்லை. நல்லவன்.

நிர்மலா_ராகவன் நிர்மலா ராகவன் (பிறப்பு: அக்டோபர் 17 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஓய்வு பெற்ற இடைநிலைப் பள்ளி ஆசிரியையான இவர் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக எழுதக்கூடியவர். மின் அஞ்சல் முகவரி: nirurag@gmail.com எழுத்துத் துறை ஈடுபாடு 1967 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியாவின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *