ஒரு கோடை விடுமுறை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 3, 2026
பார்வையிட்டோர்: 547 
 
 

(1981ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9 | இரண்டாம் பாகம்

அத்தியாயம் – 9

போன வெள்ளிக்கிழமை போனமாதிரி ஒரு குற்றமனப் பான்மையுடன் இன்று போகவில்லை.

கார்த்திகா கேட்டால் கேட்கச் சந்தர்ப்பம் இருந்தால் என்னென்ன மறுமொழிகள் சொல்லவேண்டும் என்று நினைத்து வைத்திருந்தான்.

தெகிவளையில் ஒரு பெரிய வீட்டின் ஒரு பகுதியது. ரண்டறையும் ஒரு குசினியும், ஒருசிறு ஹோலும். எத் தனை ரூபா கொடுத்து அந்த வீட்டில் இருப்பார்கள் என்று தெரியாது.

கார்த்திகா ஒரு ஆசிரியை. சபேசன் ஒரு கிளார்க்? இவர்களின் சம்பளம் எப்படி இந்தக் குடும்ப சீவியத்தைச் சமாளித்துச் சபேசனின் அடுத்த மூன்று தங்கச்சிக்கும் சீத னம் தேட உதவும்?

கதவு மணியை அடிக்க அன்றுபோல் இன்றும், அவள் தான் கதவு திறந்தாள்.

அன்று போல தலை முழுகி விரித்துவிட்டு சாந்துப் பொட்டு வைத்துப் பளிச்சென்று இருந்தாள். ஆனால் அன்று போல் பிரமையுடன், நம்பிக்கையின்மையுடன் இவனைப் பார்க்கவில்லை. பேயடித்தாற்போல் பிரமை பிடித்து நிற்க வில்லை.

“உள்ளே வாருங்கள்” என்றாள்.

யாருடைய வீட்டில் யாரோ நுழைவதுபோல் இருந்தது அவனுக்கு.

பக்கத்து அறையில் குழந்தைகளின் சத்தம் கேட்டது. தமிழர்கள் வீடுபோலும். ஒரு மேசையும் இரண்டொரு கதிரைகளும் கிடந்த அந்த குறுகிய ஹோலைக் காட்டினாள் இருக்கச் சொல்லி. சுரில் ஒரு பக்கத்தில் சரஸ்வதியும் பிள்ளையாரும் இருக்க, அடுத்த பக்கத்தில் ஈழ விடுதலையைப் பற்றி ஒன்றிரண்டு சுலோகங்கள் எழுதப்பட்டிருந்தன. பக்கத்து வீட்டு றேடியோவில் தமிழ்ப்பாட்டுக் கேட்டது.

இன்னும் சபேசனைக் காணவில்லை.

இவள், உள்ளே போனவளையும் காணவில்லை.

தர்ம சங்கடத்துடன் உட்கார்ந்திருந்தாள். சபேசனிடம் எங்கோ கடற்கரையிலோ, பார்க்கிலோ சந்திப்பதாகச் சொல்லியிருக்கலாம் என்று பட்டது. அவன் நிலை கொள் லாமற் தவிப்பது அவளுக்குத் தெரிந்ததுபோல், தேனீருடன் வந்து சேர்ந்தாள். வைத்து விட்டு ஓடப் போகிறாள் என்பது தெரியும்.

“கார்த்திகா” என்றான் மென்மையாக.

அவள் ஓடவில்லை. என்ன என்பதுபோல் ஏறிட்டுப் பார்த்தாள். அவளை நிமிர்ந்து பார்த்தான்,

‘இந்தப் புது மலரையா புழுதியில் எறிந்தார்கள் கயவர்கள்? அவனுக்குக் கண்ணீர் முட்டிக் கொண்டு வரும்போல் இருந்தது. ‘Sorry கார்த்திகா’ என்றான். அவன் பெரு மூச்சு விடுவதை அவள் மெளனமாகப் பார்த்துக் கொண்டு நின்றாள். அவன் ஏதும் கதைக்க முதல் அவள் சொன்னாள்.

“தயவுசெய்து ஒன்றும் சொல்லி விளங்கப் படுத்த வேண்டாம். என் தலைவிதி அவ்வளவுதான்.”

அவள் திட்டியிருந்தால் பேசியிருந்தால் அவன் சந் தோஷப்பட்டிருப்பான் போல் இருந்தது. அவள் அப்படிச் சொன்னதை, அவனால் தாங்க முடியாமல் இருந்தது.

ஓ.. என்று அலற வேண்டும் போல் இருந்தது.அவள் என்னவென்று இதெல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு இப்படிச் சொல்ல முடியும்?’

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எதெல்லாம் நடக்கக் கூடாதோ அதெல்லாம் நடக்கிறது நடந்து விட்டது. எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு என்னவென்று இப்படிப் பேசமுடியும்.

“சபேசன் யாழ்ப்பாணம் போய் விட்டான்” என்றாள். ‘ஏன் வழியில் வைத்துச் சொல்லி என்னைத் திருப்பி அனுப்பவில்லை?’ அவனுக்கு அவளை விளங்கவில்லை.

என்னால் ஏமாற்றப்பட்ட பெண் எதுவும் நடக்காதது போல் என் முன்னால் இருக்கிறாள்.

“கார்த்திகா” என்றான் ஆச்சரியத்தைக் காட்டிக் கொள்ளாமல்.

“உங்களுடன் கொஞ்சம் கதைக்க வேண்டும்.” அவன் ஏறிட்டுப் பார்த்தான்.

“எங்களைப் பற்றியல்ல – எங்களைப் பற்றிக் கதைக்க எதுவும் இருப்பதாக தெரியவில்லை”

அவள் குரலில் என்ன பதிந்து கிடக்கிறது என்று தெரியவில்லை.

“சபேசனையும் பானுமதியையும் பற்றி சபேசன் தன்ர கொள்கையில் பைத்தியமாக இருக்குமளவுக்குப் பானுமதி யில் பை பத்தியமாக இருக்கிறானோ என்று தெரியாது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவன்ர கொள்கைகளால் என்ன பிரயோசனமும் கிடைக்காது. சந்தர்ப்பம் பார்த்துத் தமிழர்களைத் தாக்கவிருக்கும் பொலிஸார், சபேசன் தரவழி களில் எந்த நேரமும், ஒரு கண் வைத்திருக்கிறார்கள். அவன் கொள்கையால் ஒரு தம்பியைப் பறிகொடுத்து விட்டு இருக்கிறோம்.”

“உங்கள் தங்கைக்காக மட்டுமல்ல, எனது தங்கைகளுக் காச பைத்தியமாக இருக்கும் என்னுடைய தாய்க்காக அவனை லண்டனுக்குக் கூப்பிடுங்கள். அவள் குரல் தழு தழுத்தது. அவளை அழவிடாமல் அணைத்துக் கொள்ள வேண்டும்” என்று பட்டது.

தம்பியையிழந்து, தாயைப் பைத்தியமாக்கி. கார்த்திகாவை.. என்ன அரசு இலங்கையில் நடக்கிறது?

சபேசனை லண்டனுக்கு வா என்று சொல்ல, சபேசன் வீழுந்தடித்துக் கொண்டு வருவான் என்று தெரியவில்லை.

எத்தனையோ பேர் யார் காலில் விழுந்தென்றாலும் ங்கிலாந்துக்கு வரப் பார்க்கிறார்கள். இவன் என்னவென்றால்…

பரமநாதனுக்கு என்ன வழியில் சபேசனுக்குப் புத்தி சொல்வது என்று தெரியவில்லை.

“இன்றும் ஒரு கூட்டத்துக்குத்தான் போனான். உங் களுக்குச் சொல்ல முடியவில்லை என்று சொன்னான். ஞாயிற் றுக்கிழமை வருவான். அவள் சொல்லிக் கொண்டு சாப் பாடு கொண்டு வைத்தாள் மேசையில்.

எனக்காகவுமா சமைத்தாள்?

நான் வருவேன் என்றா நினைத்தாள்.

மரக்கறிச் சாப்பாடு.

“சாப்பிடுங்கள்” என்றாள் சர்வ சாதாரணமாக. கடந்த பத்து வருடங்களாக ஒரேயடியாகக் குடும்பம் நடத்தும் மனைவிபோல்.

அவன் கைகளைக் கழுவிக் கொண்டு வந்தான்.

அவள் சாப்பாடு போட்டாள்.

மட்டக்களப்பு வழக்கத்தில் கன்னிப்பெண் ஒரு வாலிபனுக்கு கல்யாணம் அன்றுதான் சாப்பாடு போடுவாள்.

சோறு கொடுப்பது – சோறு போடுவது ஒரு திருமணச் சடங்கு. யாரோ சொன்னது ஞாபகம் வந்தது.

சொல்ல நினைத்துவிட்டு மெளனமாக இருந்தான்.

அவனால் நம்ப முடியவில்லை அவள் சோறு போட அவன் சாப்பிடுவது.

தன்னை அவள் முன்னால் இருந்து உற்றுப்பார்ப்பது போல் இருந்தது. நிமிர்ந்து பார்த்தான்.

அவள் கண்கள் நீர் வழிய…

அவனால் அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை.

“கார்த்திகா” என்றான். குரல் அடைத்துக் கொண்டது.

“நான் எப்போதோ கற்பனை செய்து பார்த்த நிகழ்ச்சி. இப்படி ஒரு உறவுக்கும் அருகதையில்லாத நேரத்தில்” அவள் குனிந்திருந்து அழுதாள்.

அவன் மெல்ல அவள் கைகளைப் பற்றிக் கொண்டான். அவள் திமிறவில்லை.

“கார்த்திகா என்னை மன்னித்து அவன் பின்னால் போய் அவள் தலையைத் தன் மார்பில் அணைத்துக் கொண்டான்.

அவள் அப்படியே கதிரையில் இருந்தாள்.

எழும்பவில்லை. ஓடவில்லை.

படுபாவி என்று பேசவில்லை.

அவளையணைத்த இரு கைகளையும் இறுகப் பற்றிக் கொண்டாள். “எனக்குச் சொந்தமாக இருக்க வேண்டியவை. தன் கண்ணீரில் நனைத்தெடுத்தாள் அவன் கைகளை. குரல் விம்மியது.

அவன் துடித்து விட்டான்.

“கார்த்திகா நான் உன்னை வேணுமென்று ஏமாற்ற வில்லை”.

அவன் தன் கதை சொல்லித் தீரவேண்டும் என்ற நினைப்பில் படபடத்தான்.

அவள் மேசையில் தலைபதித்து அழுதாள்.

”என் தலைவிதி என் தலைவிதி” அவள் விம்மி விம்மி அழுதாள்.

“என்னுடன் திரிந்த பெண்ணுக்கு – லண்டனில் இளைஞர்கள் கல்யாணமாக முதல் எத்தனை பெண்களுடனும் திரிவார்கள். மரியன் என்னுடன் திரிந்தபோது அவளின் வயிற்றில் குழந்தை.. என்னால் ஒரு பெண்ணைக் கை விடத் துணிந்த அளவு ஒரு குழந்தையைக் கை விடத் துணி விருக்கவில்லை கார்த்திகா”. அவன் வார்த்தைகள் உண்மையின் தெறிப்புக்கள்.

அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

ஒவ்வொருதரம் என் மனைவியுடன் இருக்கும் போதும் எத்தனையோ தரம் உன் நினைவில் துடித்திருக்கிறேன் என்று அவன் சொல்ல நம்புவாளா?

பக்கத்து வீட்டார் வர மாட்டார்களா?

எங்குதான் வாழ்ந்தாலும் தமிழர் தமிழர்கள் தாள். இந்த நிலையில் இருவரையும் கண்டால்…

அவன் இன்னும் இரண்டு கிழமைகளில் லண்டனுக்குப் போகப் போகிறவன்.

அவள்? அவளைப்பற்றி…

அவன் அவசர அவசரமாக வெளிக்கிட்டான்.

அவள் மேசையில் இன்னும் குனிந்திருந்து அழுதாள்.

***

பானுமதியை வரச் சொல்லி எழுதி அவள் வந்திருந்தால் கொழும்புக்கு.

வீட்டில் ஒரு ஜீவன் கூட மிச்சமில்லாமல் திடுக்கிட்டனர். பானுமதியை லண்டனுக்கு கூட்டிக் கொண்டு போவதாக அவன் சொன்னபோது.

தாய் வாயடைத்து விட்டாள் அவன் சொன்னபோது. கௌரி லண்டனுக்குப் போகிறாள். பானுமதியும் அம்மாவும் யாழ்ப்பாணத்திலிருந்து என்ன செய்வது? பானுமதி கொஞ்ச நாள் லண்டனுக்கு வரட்டும். அம்மா பெரியக்காவுடன் கொழும்பில் இருக்கட்டும்.

அவன் மற்றவர்கள் சம்மதத்தைக் கேட்கக் கூட இல்லை. பானுமதியை இழுத்துக் கொண்டு விசா, பாஸ்போட் என்று திரிந்தான்.

பானுமதியைக் கொண்டு போனால் சபேசனை எப்படியும் லண்டனுக்கும் கூப்பிடலாம் என்று தெரியும்.

சபேசன் இலட்சியவாதி, முன்கோபி, முரட்டுக் குணம் படைத்தவன். எல்லாவற்றுக்கு மேலாக நேர்மையானவன். ஒரு பெண்ணை எந்த இலட்சியத்துக்காகவும் கை விடமாட் டான். காலம் எடுக்கலாம். ஆனால் அவன் கட்டாயம் பானு மதியிடம் வருவான் என்று தெரியும்.

பானுமதிக்கு எல்லாம் விளங்கப் படுத்திச் சொன்னான். சபேசனைக் கேட்காமல் செய்வதா என்று சண்டை பிடித்தாள்.

“நீயும் சேர்ந்து அழிந்து போவதென்றால் சபேசனின் குடும்பத்தையும் அழிப்பதென்றால் என் சொல் கேளாமல் நட” என்று கத்தினான்.

அண்ணா சிரித்த முகத்துடன் லண்டனிலிருந்து வந்தவர் ஏன் எல்லாரிடமும் சீறி விழுகிறார் என்று தெரியாமல் தவித்தாள். அண்ணா இழுத்த இடமெல்லாம் முணுமுணுத் துக் கொண்டு திரிந்தாள். பரமநாதன் ஒன்றையும் பற்றி அக்கறைப் படவில்லை.

இவ்வளவு காலமும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் யாருக்காகவோ தன் வலிமைகளை விட்டுக் கொடுத்து விட்டது போலவும், இப்போதுதான் சுய உணர்வு வந்து தன் மன உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுத்து நடப்பது போல வும் பட்டது.

இதெல்லாம் கார்த்திகாவுக்காக, கார்த்திகாவின் குடும் பத்துக்காக என்று நினைத்தபோது நினைவே இனிமையாக இருந்தது. தன் இனிய காதலிக்கு இவ்வளவென்றாலும் செய்ய முடிந்ததே என்று நினைத்தபோது அவனையறியாமல் ஒரு நிம்மதி அவன் மனதில் பட்டது.

பிளேன் ரிக்கற் புக் பண்ணிவிட்டு வரும்போது சபேச னையும் கார்த்திகாவையும் கண்டான்.

சபேசன் சந்தோசத்துடன் இவளைப் பார்த்தான்.

கார்த்திகா இருக்கிறாள் என்பதைக் கூடக் கவனிக்காமல் பானுமதி என்னுடன் வரப் போகிறாள் என்று உமக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்” என்றான் பரமநாதன்.

சபேசன் தன் உணர்ச்சிகளைக் காட்டவில்லை.

பஸ் ஸ்ரொப்புக்கு நடந்து கொண்டிருந்தார்கள்.

“சபேசன், கொள்கைகளையும் இலட்சியங்களையும் சரி சந்தர்ப்பத்தில் உபயோகிக்காவிட்டால் எதை இலட்சியம் என்று பாடுபட்டோமோ அதே இழிவான அழிவான பாதைகளுக்கு அழைத்துக்கொண்டு போகும்.”

பரமநாதன் எதை மறைமுகமாகச் சொல்கிறான் என்று தெரிந்தது.

சபேசன் சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரே சனக் கூட்டம். உல்லாசப் பிரயாணிகள், தமிழர்கள் சிங்களவர்கள், தமிழர்கள்!

எத்தனை வருடங்களுக்குத் ‘தமிழர்’களாகப் பெயரள வில் என்றாலும் இருக்கப் போகிறோம் என்று நினைத்தாள்.

அவன் பெருமூச்சு விட்டான்.

சுயநலங்களுக்காக இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் ஓடிப் போனவர்களுக்கு இலங்கையில் தமிழர் எப்படி நடத் தப் படுகிறார்கள் என்று தெரியுமா?

ஒரு கோடை விடுமுறையில் அனுபவித்து முடியுமா ஒரு இனம் படும் வேதனையை?

பரமநாதனுக்குச் சபேசனுடன் கதைத்து நிலைமைகளை விளங்கப் படுத்த வேண்டும் போல் இருந்தது.

“எங்கு போகிறீர் இன்று பின்னேரம்” என்றான்,

“அக்கா படம் பார்க்க வேண்டும் என்றாள்” என்றான் சபேசன்.

“நானும் வரலாமா?” பரமநாதனுக்குத் தெரியும் ஒரு துளி எண்ணமும் இல்லை தமிழ்ப் படம் பார்க்க.

ஆனால் இன்னும் ஒரு கிழமைக்கிடையில் எவ்வளவு தூரம் கார்த்திகாவின் அருகில் இருக்க முடியுமோ அவ்வள வும் இருக்க யோசித்தான்.

அது பிழையாகவோ – மனச்சாட்சிக்கு விரோதமாகவோ தெரியவில்லை.

ஆயிரம் வார்த்தைகளால் சொல்லி விளக்கி அவளிடம் மன்னிப்புக் கேட்க நினைத்ததெல்லாவற்றையும் ஒரு வார்த்தையையும் எதிர்பார்க்காமல் அவள் மன்னித்த விதம்!

இவளையா இன்னொருத்தனுடன் காணலாம் என்று கற்பனை செய்தேன்?

அவனும் சேர்ந்து வருவது அவளுக்குத் தர்ம சங்கடத்தை யுண்டாக்கியிருக்க வேண்டும்.

வெறும் மௌனச் சிலையாக இருந்தாள்.

தனக்காக பரமநாதன் இவ்வளவு அக்கறை எடுப்பான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

தம்பி ஒருத்தனின் சடுதியான கோர மரணம், தன் வாழ்வு இப்படிப் போனது – சபேசன் இப்படி இலட்சியம், ஈழநாடு என்று திரிவதெல்லாம் தாயை எவ்வளவு தூரம் மனவருத்தப்படுத்தி அவளைப் பைத்தியமாக்கி விட்டது என்று தெரியும்.

தன் வாழ்க்கை இப்படி போனது தன் தலைவிதி என்று தேற்றிக் கொண்டவள் தன் தங்கைகள், ஒரே ஒரு தம்பி சபேசனின் வாழ்க்கை நாசமாவதைக் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

பானுமதியின் சபேசனின் கதை தெரிந்தபோது இன்னொரு தோல்விக் கதையாக முடியப் போகிறது என்றுதான் நினைத்தாள்.

பரமநாதன் வந்திருந்ததும் பானுமதிக்கு உதவி செய்வ தாக ஒப்புக் கொண்டதும் தனக்குச் செய்த பாவத்துக்குக் கைம்மாறு என்று அவள் நினைக்கவில்லை. ஒவ்வொரு கிழமை யின் பின்னும் அவனின் இனிய கடிதங்களை எதிர்பார்த்து மாதமொன்றாய்க் குறைந்து வெறும் கிறிஸ்மஸ் கார்ட்டுடன் நின்று, யாரோ ஒருத்தியின் சொந்தமாகி விட்டான் என்று தெரிந்தபோது துடித்த துடிப்பு..

கார்த்திகா, பெருமூச்சுடன் தலைவிதியை நொந்து கொண்டாள்.

படம் சாதாரண தமிழ்ப் படமொன்று. காதலன், காதலி, வில்லன்.. வழமையான பழம் சரக்கு.

இப்படிப் படங்களை என்னவென்று தமிழ்ச் சனங்கள் பார்க்கிறார்கள் என்று பரமநாதனுக்கு விளங்கவில்லை.

அதிலும் முற்போக்கான இளைஞர்களான சபேசன் போன்றவர்கள் என்னவென்று பார்க்கிறார்கள் என யோசித்தான்.

சத்தியமூர்த்தி சொன்னது ஞாபகம் வந்தது.

”தமிழ் ஏழைகளுக்கு உள்ள ஒரே ஒரு பொழுது போக்கு இப்படி தரம் கெட்ட தமிழ்ப்படங்களேதான். இல்லாத் தமி ழரின் இரசனையைத் தங்கள் இலாபத்துக்கு மூலதனமாக்கி விட்டார்கள் பட முதலாளிகள். அந்த முதலாளிகளை மீறி யாரும் முற்போக்கான படங்களை எடுத்து வெற்றியடைய லாம் என்று நினைப்பது முட்டாள்த்தனம்.”

படம் பார்க்கப் பார்க்க பரமநாதனுக்கு எரிச்சலாக வந்தது. போதாக்குறைக்கு கார்த்திகா -காதலியின் தோல் வியைக்கண்டு கைக்குட்டையால் கண்களைத் துடைத்த போது வெளிக்கிட்டுப் போக யோசித்தான்.

ஏதோ எல்லாம் நடந்து காதலர்கள் சேர்ந்து படம் சுபம் என்று முடிந்தது.

“உமக்கு வேறுவேலை இல்லையா இந்தப்படங்கள் பார்க்க நேரம் செலவளிப்பதை விட?” பரமநாதன் பாயாத குறையாகக் கேட்டான்.

“நான் எனக்காக வந்தேன் என்று யார் சொன்னது? அக்காவுக்காக வந்தேன்” என்றான் சபேசன்.

கார்த்திகாவைச் சொல்லி என்ன பிரயோசனம்? தரம் கெட்ட படத்தியேட்டர்கள் திருவிழாக்கள் கோயில்களைக் சாட்டி என்றில்லாமல் என்ன இருக்கிறது இலங்கையில் ஒரு தமிழ்ப் பெண் வெளிக்கிட்டுப் போக?

பஸ்ஸில் வரும்போது சபேசன் ஏதோ வேலையாக இடையில் இறங்கி விட்டான்.

கார்த்திகா மெளனமாக இருந்தாள். அவன் அவள் பக்கத்தில் வந்து இருந்தான்.

அவள் காலி ரோட்டுச் சந்தடியையும் சனத்தையும் ஜன்னலால் பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன கற்பனையில் இருக்கிறீர்?” அவன் குரலைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு கேட்டான்.

அவள் ஒன்றும் பதில் சொல்லாமல் தோள்களையுலுக்கி விட்டு ஜன்னலால் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“கார்த்திகா!” அவன் மெல்லமாகக் கூப்பிட்டான். “தயவு செய்து கதைக்காதீர்கள் தேலையில்லாமல், யாரும் தெரிந்தவர்கள் இருப்பார்கள்.” அவள் மெல்லச் சொன்னாள்.

அவன் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தான்.

“கார்த்திகா, சபேசன் என்ன சொன்னான் பானுமதி லண்டனுக்கு வருவதைப் பற்றி?”

பரமநாதன் பேச்சை மாற்றிக் கேட்டான்.

“என்ன சொல்ல இருக்கிறது. உங்கள் தங்கை, அது அவளின் பிரச்சனை. தன் கொள்கைகளுடன் மோதாமல் விட்டால் சரி என்றான்” என்று சொன்னாள் கார்த்திகா.

மாலைச் சூரியன் மறைந்து கொண்டிருந்தான்.

பஸ் ஜன்னலால் எட்டிப் பார்த்த சூரியனின் மஞ்சள் கதிர்களில் அவள் முகம் பளபளத்தது.

அழுதிருக்க வேண்டும் படம் பார்த்து முகம் வீங்கி, கண்கள் சிவந்திருந்தன.

எவ்வளவு வருடம் இப்படி அழுதுகொண்டிருக்கப் போகிறாள்?

தன் தலைவிதி என்ற பெருமூச்சுகளுக்குப் பின்னால் என்ன எரிமலை இருக்கிறது வெடிக்க?

“கார்த்திகா உம்முடன் கொஞ்சம் கதைக்க வேண்டும்.” அவன் சொல்ல, அவள் என்ன இருக்கிறது கதைப்பதற்கு என்பதுபோல் திரும்பிப் பார்த்தாள்.

“எங்காவது ஒரு தனியிடம் போக முடியுமா?”

அவன் அவசரப் பட்டான்.

அவளுக்குச் சொல்ல வேண்டும் இப்படி வாழ்க்கை முழுக்க அழுது கொண்டிருக்க முடியாது அழுது கொண்டிருக்கக் கூடாது என்று.

தூரத்தே பம்பலப்பிட்டிக் கடற்கரை தெரிந்தது. ஞாப கமிருக்குமா இவளுக்கு நாங்கள் கைகோர்த்துத் திரிந்த காலம்?

அவள் கேட்காதவாறு உட்கார்ந்திருந்தாள்.

“கார்த்திகா அடுத்த ஸ்ரொப்பில் இறங்க முடியுமா?” அவனின் குரலில் இருந்த உத்தரவை அவள் திழிம்பிப் பார்த்தாள்.

அவள் இறங்காவிடில் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஒடுவான் போல இருந்தது.

அவள் வாழ்கையில் எத்தனையோ நடந்து விட்டன அவள் விரும்பாத காரியங்கள்.

ஒருதரம் – ஒரே ஒருதரம் அவளின் இனியவனாக இருந்த அவனின் விருப்பத்தை நிறைவேற்றக கூடாதா? அவள் எழுந்தாள்.

அவன் பின்தொடர்ந்தான்.

இப்படி அவர்கள் ஒரு காலத்தில் ஒருவரை ஒருவர் பின் தொடர்ந்தது இறந்தகால நிகழ்ச்சியாகப் போய் விட்டது. இது மட்டுமென்ன? இந்த நிமிடம் மட்டுமென்ன நிலைத்து நின்றுவிடப் போகிறதா?

இருவரும் உட்கார்ந்தார்கள் பாறையில்.

“என்ன சொல்லப் போகிறீர்கள்?”

அவள் வழக்கறிஞர் போலக் கேள்வி கேட்டாள்.

அவள் முகத்தைத் திருப்பி, குரலை உயர்த்திக் கேட்ட விதம் அவனுக்குச் சிரிப்பாக இருந்தது.

“என்ன குறுக்கு விசாரணை?” அவன் கேட்டான்.

“நான் யார் உங்களைக் குறுக்கு விசாரணை செய்ய?” அவள் எடுத்தெறிந்து பேசினாள்.

“கார்த்திகா, பானுமதி, சபேசன் விடயத்தில் இவ் வளவு அக்கறை எடுப்பது அவர்களுக்காக மட்டும் என்றா நினைக்கிறாய்?”

அவள் பேசாமல் இருந்தாள்.

“கார்த்திகா. உமக்காசு, உமது குடும்பத்துக்காக. நான் உமக்காக இவ்வளவு செய்கிறேன், எனக்காக ஒன்று மட்டும் செய்வீரா?”

இருள் படர்ந்த நேரத்தில் அவள் கண்களில் என்ன உணர்ச்சிகள் இருக்கின்றன என்று தெரியவில்லை அவனுக்கு.

“என்ன செய்ய வேணும்? கிட்டத்தட்ட செத்துக் கொண்டிருக்கும் மனத்தையும் உடம்பையும் ஒரேயடியாக அழித்துவிடச் சொல்கிறீர்களா?”

அவள் குரல் தழுதழுத்தது.

“கார்த்திகா நடந்ததை யோசித்து என்ன பயன்? அப்படி நீர்தான் சொன்னீர். இப்போது வேறு விதமாகக் கதைக்கிறீர்.”

அவன் சலித்துக் கொண்டான்.

“என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” அவள் கேட்டாள். உங்களுக்காக வாழ்ந்து, உங்களுக்காக அழுது கொண்டிருக் கிறேன் என்பது போல் இருந்தது அவள் குரல்.

“நீர் என்னை உண்மையாக மன்னிக்கவில்லை.” அவன் குற்றம் சாட்டினான்.

அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

“அந்த இழவுப் படத்தைப் பார்த்து ஒப்பாரி வைத்தது போல், உன்னைப் போன்ற பெண்களைக் கணவனுடன் கானும் போதெல்லாம் என்னை நீர் மனதில் திட்டவில்லை என்று, என்ன நிச்சயம்?”

அவன் எரிந்து விழுந்தான்.

அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

“கார்த்திகா, அழுது என்ன பிரயோசனம்?”

அவன் அவளை அணைத்துக் கொண்டான்.

அவள் விலகியுட்கார்ந்தாள்.

”கார்த்திகா, நீர் இப்படிக் கலங்குவதால் என்னுடைய வாழ்க்கையையும் நாசப்படுத்தப் போகிறீர் என்பது உமக்குத் தெரிந்திருக்க வேண்டும். இதுவரை எப்படி லண்டனில் இருந்தேனோ தெரியாது. ஆனால் இனி உமது நினைவு என்னை என்ன செய்யப்போகிறதோ தெரியாது.” அவன் வெடித்தான்.

“என்ன செய்ய வேண்டும்?”

அவள் எடுத்தெறிந்து கேட்டாள்.

“நீர் திருமணம் செய்யும் வரை எங்கள் இருவரின் வாழ்வும் நாசம்.” அவன் நிதானமாகச் சொன்னான்.

“என்ன, என்ன சொன்னீர்கள்?”

அவள் தன் நிலை மறந்து கத்தினாள்.

அந்தக் காரிருள் நேரத்திலும், கடந்து போனவர்கள் திரும்பிப் பார்த்தார்கள்.

“ஒருவனால் ஏமாற்றப்பட்டுப் பலரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்குச் கல்யாணமா?”

அவள் வெறி வந்தவள் போல் கத்தினாள்.

அவன் தாவி ஓடிப்போய் அவள் வாயைப் பொத்தினான். எந்த நிகழ்ச்சியுடன் அவளை ஒப்பிட்டு நினைத்துப் பார்க்க அவன் வெறுத்தானோ அந்த நிகழ்ச்சியை அவள் வாய் விட் டுச் சொல்வதை அவன் வெறுத்தான்.

“சட் அப்” பரமநாதன் உலகமறியக் கத்தினான். அவன் குரல் நடுங்கியது.

“கார்த்திகா, நீர் நம்பாவிட்டாலும் நம்பினாலும் நான் சொல்வதைக் கேள். எனக்கொரு மகள் இருக்கிறாள். அவள் பெயர் மீரா. அந்த அழகிய செல்வத்தால்தான் உன்னைக் கைவிட்டேன். அவளுக்காக தான் லண்டனுக்குப் போகிறேன். அவளுக்காகத்தான் மரியனைக் கல்யாணம் செய்தேன். மரியனை நான் ஒரு நாளும் ஏமாற்றியதில்லை. ஏமாற்றப் போவதுமில்லை. ஆனால் உம்மையும் நான் ஏமாற்றவில்லை. சந்தர்ப்பத்தால் இப்படியாகி விட்டது என்பதை நிரூபிக்க. நீர் என் மனைவியை விவாகரத்து செய்யச் சொல்லிச் சொன்னால் நான் செய்வேன். ஆனால் என் மகள் மீராவுக்காக நீர் என்னைக் கயவன் என்று நினைப்பதையே நான் விரும்புகிறேன்.”

பரமநாதன் வெறிவந்தவன் போலப் பேசுவது அவளால் பொறுக்கவில்லை.

“தயவு செய்து அப்படிப் பேசாதீர்கள். நீங்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை. நான் எப்படி இருக்கிறேன். இருக்கப் போகிறேன் என்பதை யோசித்து உங்கள் குடும்பத்தை நாசமாக்காதீர்கள்”.

அவள் கேவிக் கேவியழுதாள்.

மெல்லிய இருட்டின், மௌனத்தின் பின்னணியில் கடலலையின் தாலாட்டில் அவள் கண்ணீர் விட்டுக் கத்துவதைக் கையாலாகத்தனத்துடன், பார்த்துக் கொண்டிருந்தான் பரமநாதன்.

***

ஒரு மாதம் இவ்வளவு கெதியில் ஓடிவிடும் என்று தெரியவில்லை.

தகப்பனின் அந்திரட்டி முடிந்து விட்டது. உறவினர், சினேகிதர்களிடமிருந்து லண்டனுக்குப் போக விடைபெற்று விட்டாயிற்று.

தாய், தந்தையர், தங்கைகள். தமக்கை ஏன் எல்லா உறவுமே ஒரு சாதாரண பிரயாணத்தின் ஒவ்வொரு கட்டத்தில் ஏற்படும் உறவா?

வாழ்க்கையே ஒரு பிரயாணம்.

இனிப்பும் கசப்புமான பண்டங்களைக் கடையில் வாங்கித் தின்று பசி தீருவதுபோல் இனிப்பும் கசப்புமான உணர்வுகளால் வாழ்க்கையை நிரப்பி…

யாழ்ப்பாணம் பெரியகடை தன்பாட்டிற்கு சினிமாப் பாட்டின் தாலாட்டில் இயங்கிக் கொண்டிருந்தது.

லண்டனுக்குக் கொண்டுபோக மரியனுக்கும் மீராவுக்கும் தேவையான சாமான்கள் வாங்கிக் கொண்டான்.

கொழும்பில் மீராவுக்குப் பெரிதாக ஒரு யானை வந்தவுடனேயே வாங்கி வைத்துக் கொண்டான்.

விமானம் வரும்போது விட்ட சேட்டைகள் ஒன்றுமின்றி வந்து சேர வேண்டும் என்று மரியன் சொன்னாள். கொழும்பில் நின்றபோது இரண்டு மூன்று தரம் அவளுக்குப் போன் பண்ணினான்.

லண்டனில், ‘நியூக்கிளியர்’ போரை எதிர்த்து ஊர்வலம் நடத்தியபோது தானும் கலந்து கொண்டதாகப் பெரிய சந்தோசத்துடன் சொன்னாள்.

உமது மைத்துனி பானுமதியையும் சேர்த்துக் கொள் அடுத்த ஊர்வலத்துக்கு என்றான்.

டெலிபோனில் பேசும்போது அவன் குரல் வித்தியாசமாக இருப்பதாகச் சொன்னாள்.

குரல் மட்டுமல்ல தானே வித்தியாசமாக இருப்பதாகச் சொல்ல வேண்டும் போல் இருந்தது.

தன்னில் ஏற்பட்டிருக்கும் மன உணர்ச்சியின் மாறுதல் களால் தன் நடவடிக்கையில் எரிந்து விழுதல், சலிப்பு என் பன தாராளமாகக் கலந்து விட்டது அவனுக்குத் தெரிந்தது. அதைப் பானுமதியும் சுட்டிக் காட்டினாள்.

சபேசன், பானுமதி லண்டனுக்குப் போவதை மறுத்து ஏதும் கத்துவான் என்று எதிர்பார்த்தது பிழையாகத் தெரிந்தது.

ஒரு வருட பிரயாணம் தானே என்று நினைத்திருப்பான் சபேசன் என்று மனத்தில் யோசித்துச் சிரித்தான் பரமநாதன். முடியுமான வரையில் சத்தியமூர்த்தியை சபேசனுடன் கதைத்துப் பார்க்கச் சொன்னான்.

சத்தியமூர்த்தியும் சபேசனும் கொள்கைகளில் எதிரும் புதிருமானவர்கள் ஒன்றாகப் பழகச் சொன்னது வேடிக்கையாக இருக்கும் என்றாள் பானுமதி.

மகாதேவன் லண்டனுக்குப் போகும் பொழுது கௌரியைக் கூட்டிக் கொண்டு போக முடியவில்லை. இரண்டொரு மாதம் எடுக்கும் கௌரியின் விசா விடயம் பார்க்க என்பதாலும் மகாதேவனின் லீவு முடிந்து விட்டதாலும் தனியாகப் போக வேண்டி இருந்தது.

இப்படியான கல்யாணங்கள் பரமநாதனுக்கு விசித்திர மாக இருந்தன.

என்னவென்று முன்பின் தெரியாத இன்னொரு ஜீவனுடன் தீடீரென்று வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்து இன்னும் ஐம்பதோ அறுபதோ ஆண்டுகள் கொண்டு செல்ல முடியும் என்று அவனால் நம்ப முடியாமல் இருந்தது.

ஆயிரக்கணக்கான வருடங்களாக எங்கள் சமுதாயத்தை இப்படித்தான் வாழ வேண்டும் இப்படித்தான் நடக்க வேண்டும். இப்படித்தான் யோசிக்க வேண்டும் என்று Brain wash பண்ணி வைத்திருக்கிறார்கள். அதை மீறி யோசிப்பதோ, நடப்பதோ புண்ணியமாகவும் ‘மரியாதையாகவும்’ கருதப்பட மாட்டாது.

பரமநாதன் யாரையோ செய்தது புண்ணியமான-மரி யாதையான காரியமாகவும் கருதப்படவில்லை வீட்டில் என்பது தெரியும்.

தாய் தகப்பனுக்கு விருப்பமில்லாமல் செய்தது ‘புண்ணியமான’ காரியமில்லை.

இங்கிலாந்தில் ‘எப்படியும்’ வாழ்ந்து விட்டு இலங்கைக்கு வந்து தங்களை லட்சக்கணக்கில் விலை பேசி விற்றுப் போட்டுப் போகும் பட்டதாரிகளுக்கு, வெள்ளைக்காரிகளைச் செய்வது மரியாதையான காரியம் இல்லை.

மகாதேவனோடு வாழப் போவது கெளரி. அவள் படித்துத் தேறட்டும் எதிர்காலத்தை.

லண்டனுக்குப் போக இரண்டொரு நாட்களுக்கு முன் கொழும்புக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு துப்பாக்கிச் சூடு காரணமாகச் சந்தேகப்பட்ட இளைஞர்களை எல்லாம் கைது செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டான்.

மனம் பதறியது.

சபேசன் யாழ்ப்பாணத்தில் இருக்கக் கூடாது என்று மனம் வேண்டிக் கொண்டது.

இளைஞர்களின் துடிப்பையும் ஆவேசத்தையும் சில தனிப்பட்ட பயங்கரவாதக் கூட்டத்தினர் தங்கள் சுய தேவைகளுக்குப் பாவிப்பதைப் பற்றி, சத்தியமூர்த்தி சொல்லியிருந்தான்.

கடந்த ஆண்டுகளில் தமிழ் இளைஞர் பேரில் நடந்த வங்கிக் கொள்ளைகள், கொலைகள் சில இளைஞர்களில் பழியாகப் போடப்பட்டன என்றான் சத்தியன்.

சபேசன் வீட்டுக்குப் போய் அவனைப் பார்க்கத் துடித்தான்.

தன்னையும் கார்த்திகாவையும் பற்றி பரமநாதன் வீட்டில் தெரியாவிட்டாலும் சதாசிவம் மாஸ்ரருக்கு நன்றாகத் தெரியும்.

என்ன நினைப்பார் என்னைப் பற்றி?

என்னவும் நினைத்து பேசட்டும்.

சபேசன் எப்படியிருக்கிறான் என்று தெரிய வேண்டும்.

ஒரு காலத்தில் உள்ள மகிழ்வுடன் திறந்த ‘கேட்டை’ தயக்கத்துடன் திறந்தான்.

கோழிகள் முற்றத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தன.

பத்து வருடங்களுக்கு முன் நண்டும் சிண்டுமாய் இருந்த குடும்பம். இப்போது வளர்ந்து போய் இருக்கலாம்.

மெளனமாக இருந்தது கொஞ்ச நேரம்,

பின்னர் வீணையொலி கேட்டது வீட்டில் இருந்து. விறாந்தையில் போய் நின்றான்.

கதவெல்லாம் பூட்டியிருந்தது.

வீணையொலி மெல்லக் கேட்டுக் காண்டிருந்தது.

எந்தத் தங்கச்சியாக இருக்கும்? கார்த்திகாவுக்கு மூன்று தங்கைகள் எல்லோரின் முகமும் ஞாபகம் வராது.

தான் வந்திருப்பது தெரியாமலே இருக்கும் என்று தயங்கிக் கொண்டு நின்றபோது வந்தார் சதாசிவம் மாஸ்ரர். வெழுத்த தலைமயிருடன் வித்தியாசமாக இருந்தார்.

“மாஸ்டர்” என்றான் பரமநாதன்.

அவர் மூக்குக்கண்ணாடிக்குள்ளால் இவனைப் பார்த்தார். “பரமநாதன்?’ சரியாக அடையாளம் கண்டேனா என்ற நம்பிக்கையில் பெயரையிழுத்தார்.

“ஓம் பரமநாதன்தான்.” அவன் கீழேயிறங்கி வந்தான்.

பேச்சுக் குரலில் வீணை ஒலி நின்றது.

யன்னலால் ஒரு முகம் எட்டிப் பார்த்தது.

”இருமன்” அவர் கதிரையைக் காட்டினார். அவன் தயக்கத்துடன் இருந்தான்.

வீடு பழமையுடனும் ஏழ்மையுடனும் இருந்தது.

இந்த லட்சணத்தில் நான்கு பெண்கள்.

“எப்போது வந்தீர்?” ஏதோ பேச வேண்டும் என்பதற்காகக் கேட்டார் என்பது தெரிந்தது.

ஒரு மாதமாகி விட்டது. இரண்டு நாளில் போகிறேன்.

“இனி லண்டனில் இருப்பதுதான் யோசனையோ?” அவர் எங்கோ பார்த்துக் கொண்டு கேட்டார்.

அவன் தலையாட்டினான்.

வெறும் சாட்டுக்குப் பேசுவது அவர் தொனியில் தெரிந்தது.

அவருக்குத் தெரியாதா அவனைப் பற்றி.

அவன் மனச்சாட்சி குடைந்து கொண்டிருந்தது.

“சபேசன் எங்கே?” அவன் தன் துடிப்பை மனதில் அடக்கிக் கொண்டு கேட்டான்.

கொழும்பில்தான் வேலை. அவர் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

அதாவது யாழ்ப்பாணத்தில் இல்லை. இதுவரைக்கும் கைதாகவும் இல்லை என்பது நிம்மதியாய் இருந்தது.

காலத்தில் முற்போக்கு, சோசலிசம் போதித்த வாத்தியார் மெளனமாக இருந்தார் தன் மாணவன் முன்.

இங்கிலாந்தில் வசிப்பவனுக்கு இனி என்ன அக்கறை இருக்கப் போகிறது ஏழைகளின் பிரச்சினை பற்றி என்று நினைத்திருக்கலாம் அவர். அல்லது என் குடும்பத்துடன் விளையாடிவிட்டுப் போனவனுக்கு என்ன மரியாதை கொடுப்பது என்று நினைத்திருக்கலாம். அவரைச் சொல்லி என்ன பிரயோசனம்?

தேத்தண்ணி குடிக்காமல் வெளிக்கிட்டான் அவன்.

யாழ்ப்பாணத்து வெயில் மண்டையை உ ருக்கிக் கொண்டிருந்தது.

***

கொழும்பில் கடைசியாகக் கார்த்திகாவைப் பார்க்கும் யோசனையில் போனான். இந்தத் தடவை சத்திய மூர்த்தியும் சேர்ந்து வந்தான்.

சபேசனும் வீட்டில் இருந்தான். யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் கைதானது பற்றி சொன்னான் சபேசனுக்கு.

“உங்கள் சுகம் பாதிக்கப்பட்டிருக்கும் இப்படியான செய்திகளால். ஆனால் எங்களுக்குப் பழகிவிட்டது கேட்டு”.

சபேசனுக்கு எடுத்தெறிந்து பேசாமல் பழகத் தெரியாது.

பரமநாதன் தன் கோபத்தை அடக்கிக் கொண்டான்.

சத்தியமூர்த்தியும் அவனும் சண்டை தொடங்காமல் இருக்க வேண்டுமே என்று தவித்தான்.

சத்தியமூர்த்தி முன்கோபி இல்லை. சபேசனைப் போல் இளைஞனும் இல்லை உணர்ச்சி வசப்பட.

தன் இடதுசாரிக் கொள்கைகளை அவிழ்த்து வீட்டு ஏன் தர்க்கத்தில் இறங்க வேண்டும் என்று நினைத்தோ பேசாமல் இருந்தான்.

கார்த்திகாவுடன் தனிமையில் கதைக்க அதிகம் சந்தர்ப்பம் இருக்கவில்லை.

இனி எப்போது காண்பது?

போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு எழுந்தபோது அவள் வாசல் வரை வந்தாள்.

முதலாம் பாகம் முற்றிற்று

– தொடரும்…

– ஒரு கோடை விடுமுறை (நாவல்), முதற் பதிப்பு: ஐப்பசி 1981, அலை வெளியீடு, யாழ்ப்பாணம்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *