ஒரு அவிழ் கூட…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 11, 2025
பார்வையிட்டோர்: 99 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் கூறுவது உங்களுக்கு நம்பிக்கை தருவதாக இராது. ஆனாலும், நீங்கள் நம்பித்தான் ஆகவேணும். கடந்த மூன்று நாளாக, ஒரு அவிழ்கூட, என்ரை வாயில விழேல்லை. காலையிலை அம்மா தந்த வெறும் தேத்தண்ணி மட்டும் ஒரு மிடறு விழுங்கினனான். பச்சைத்தண்ணி மட்டும் நல்லா மண்டுவன். தண்ணிதான் என்ரை உயிரைப்பிடிச்சு வைச்சிருக்கு. 

இப்பகூட, கிணத்தில ஒரு வாளிதண்ணி அள்ளிக்குடிச்சனான். வெறுவயித்தில் தண்ணி குடிச்சது குமட்டிக்கொண்டு வருகுது. ஓங்காளத்துடன் சத்தி எடுத்திட்டன். சத்தியா…? சத்தி எண்டபேரில தண்ணிதான். தண்ணியில தேத்தண்ணிச் சாயமும் கொஞ்சம் கலந்திருக்கு. 

“நிதி இஞ்ச பாரும்… இந்த அகதிப் பெட்டை வகுப்பில சத்தி எடுக்கிறதை…” 

அருகில இருந்த ராதிகா குதிச்செழுந்து, நுனிவிரலால் மூக்கைப்பொத்திக் கொண்டு என்னை விலத்தி ஓடினாள். 

கிட்டவந்த மொனிற்றர் நிதி, ஒரு பழந்துணியை என்னிடம் தந்து, “யசோ இதால், இந்தத் துணியால, மேசையைத் துடையும். நிலத்திலையும் சத்தி சிந்திக் கிடக்குது, கொஞ்ச மண்ணள்ளிப் போடும்…” என்றாள். 

ஓடி வந்த கிருஷ்ணி, நிதியின்ரை கையில இருந்த துணியை வாங்கி, மேசையைத் துடைத்தாள். நிலத்தில் கிடந்த சத்திக்கும் மண் அள்ளிப் போட்டாள். 

கிருஷ்ணி நல்ல பிள்ளை. என்ரை தோளைத் தொட்டுத் தடவினபடி பட்சமாய்க் கேட்டாள்: 

“காலையில ஒண்டும் சாப்பிடேல்லையா…?” 

“இல்லை….” 

தலையசைத்துப் பதில் தந்தன். என்னால பேச முடியேல்லை. அழுகை அழுகையாய் வந்தது. அழுதன். 

“அழாதையும்.. உமக்குப் பக்கத்தில நான் வந்திருக்கிறன்… ராதிகா என்ரை இடத்தில இருப்பா…” 

ஆதரவாகக் கூறின கிருஷ்ணி, தன்ரை புத்தகப்பையை எனக்குப் பக்கத்தில கொண்டு வந்து வைத்தாள். 

முதல் மணி அடிக்குது. பிள்ளையள் எழுந்து வரிசையில நிக்கினம். இரண்டாவது மணி அடிக்க வரிசை நகருது. வரிசையில் நிண்ட கிருஷ்ணி ஓடி வந்து என்னைக் கேட்டாள்: 

“யசோ..! அசெம்பிளிக்கு வரேலுமா…? உம்மாலை ஏலாது… பிறிஃபெக்ற் அக்காமார் வந்தால் தலைசுத்தி, சத்தி எடுத்ததெண்டு சொல்லும்.” 

கூறியவள், திரும்பவும் வரிசையில சேர்ந்து கொண்டாள். 

பசிக்களைப்பு. கொஞ்சம் கண்ணை மூடினன். முழிச்சுப் பார்த்தா, சிவபுராணம் படிக்கிறது கேக்குது. 

எங்கட வகுப்புக் குணேஸ்தான் புராணம் படிக்கிறாள். கணீரெண்ட குரல். சேர்ந்து படிக்கிற பிள்ளையளின்ரை குரல் தேஞ்சு மெலிசாய்க் கேக்குது. புராணம் முடிஞ்சு – ஆசியுரை, அதிபர் உரை முடியச் சரியான நேரம் எடுக்கப்போகுது…. 

வயித்தில சுள் எண்டு வலி… பெருங்குடலைச் சிறுகுடல் பிடிச்சுப் பிசைஞ்சு இழுக்குது. ஊசி முனை பட்டுக் கிழிச்ச மாதிரி ஒரு அராத்தல். அடி வயித்தில கனக்கக் கொட்டின ஊசிகளின்ரை நரநரப்பு…. 

மூச்சை மெதுவா உள்ள இழுத்து, வெளிய விடுறன். வலி குறைஞ்ச மாதிரி இருக்கு. 

காத்தில கலந்து முட்டைப் பொரியலும் பிலாப்பழமும் மணக்குது. இன்னும், தாளித்த வெங்காயமும் சுறாப்பிட்டும் கலந்த மணம் வேறை… 

வாயூறி – அந்தரப்பட்டு, கிருஷ்ணியின்ரை புத்தகப்பையைத் திறந்து பார்த்தன். பேப்பரிலை எதோ சுத்தியிருந்தது. 

ம்… பணிஸ். சீனிப் பணிஸ்கூட இல்லை. வெறும் பணிஸ்தான் கொண்டுவந்திருக்கிறா… பாவம் கிருஷ்ணி. 

என்னைப்போல இவளும் ஏழைப்பிள்ளை… செத்தலாய், கருவாடுமாதிரி இருக்கிறாள். வெளிறி, இரத்தம் கெட்ட தேகம். சுள்ளி சுள்ளியாய்க் கையும் காலும். அந்தக் கண்கள் மட்டும் பெரிசாக… இரக்கப்படுறவையளுக்குக் கண்கள் இப்படிப் பெரிசா இருக்குமே… 

நாக்குவழிக்கிற அந்தச் சின்னமேளம் ராதிகான்ரை சாப்பாட்டைத்தான் தின்னவேணும். அவவின்ரை சாப்பாட்டுப் பெட்டியை எடுத்தன். பெட்டி நல்ல வடிவு. நீலம். மூடி வெள்ளை. பெட்டியில அடசி அட்சி அரிசிமாப் பிட்டு; மேல முட்டைப் பொரியலும் பிலாப்பழத் துண்டுகளும்… 

இந்தச் சொறி, ஒரு நேரம் பட்டினி கிடக்கட்டுமன்… விதானையாற்றை மகள் எண்டால் எனக்கென்ன… அவளுக்குக் கொம்பா முளைச்சிருக்கு.. அவளின்ரை கெப்பர் அவளோடை… 

ராதிகாவை மனதுக்கை திட்டின சந்தோசத்தில, பிட்டை, பொரியலுடன் விழுங்கினன். பிலாப்பழத் துண்டுகளையும் அள்ளி அடசினன். விக்கல் வந்திட்டுது. அவளின்ரை போத்தில் தண்ணியையே எடுத்துக் குடிச்சன். சாப்பிட்டதும் – பெட்டியை அவளின்ரை பையில வச்சிட்டு – நசுக்கிடாமல் வந்து படுத்திட்டன். 

சாப்பிட்ட களைப்பு, கொஞ்சம் கண்ணயர்ந்திட்டன்… 

பிறேயர் முடிஞ்சு, பிள்ளையள் வகுப்புக்கு வந்துகொண்டிருக் கினம். கிட்டவந்த கிருஷ்ணி, என்னைப் பார்த்து ஒரு கள்ளச் சிரிப்போட கேட்டாள்: 

“உம்மில பிலாப்பழம் மணக்குது… சாப்பிட்டனீரா? வாயில பிட்டுத்தூளுமிருக்கு. துடையும். துடைச்சுப் போட்டு முழிசாமல் இரும்.” 

கிருஷ்ணிக்கு விளக்கம் அதிகம்… என்ரை கள்ளத்தைப் பிடிச்சிட்டாள்போ…நான் பேய்த்தரவளிபோல ஒண்டுமே நடவாத மாதிரி இருந்தன். 

கிருஷ்ணி விடேல்லை, தொடர்ந்து காதிலை குசுகுசுத்தாள்: 

“இதொண்டும் வகுப்பிலை புதுசில்லை. நான், லதா, றோசலின், சாந்தி எண்டு எல்லாருமே கள்ளச் சாப்பாடு சாப்பிட்டு அடிவாங்கி இருக்கிறம். எரிமலை வெடிக்கப் போகுது… எப்ப வெடிக்குமெண்டு பாப்பம்…” 

“எரிமலையா! வெடிக்குமா..? வெடிக்கிற நேரம் வெடிக்கட்டும். எனக்குப் பயமில்லை.” 

“ஆள் நல்ல உசாராய்த்தான் இருக்கிறீர். திருட்டு முழி முழிச்சுக் குழப்பாமல் இருந்தாச் சரி…” 

“இப்ப என்ன பாடம் தமிழா? தமிழ் வாத்தியார் வாறார். ஒருகிழமையா ஆள் வரேல்லை. அவற்றை உடம்பு சரியாக் கொட்டிண்டு கிடக்கு. காச்சலாக்கும்…” 

கிருஷ்ணிதான் தொடர்ந்து கதையளந்தாள். 

“தமிழ் வாத்தியார் ராமலிங்கம் நல்லவர். ஏழைப் பிள்ளையளில் அவருக்குச் சரியான விருப்பம். இரக்கம். அட்சரம் தப்பாத உச்சரிப்பு. அவர் எந்தக் கஷ்டமான பாடத்தையும் விளங்கிறமாதிரிப் படிப்பிப்பார். அவர் எது சொன்னாலும் புதிசு புதிசா இருக்கும். படிப்பிக்கேக்கை எட்டாம் வகுப்பு எண்டதை மறந்திடுவார். பெரிய பெரிய விஷயங்களைப் பற்றி எல்லாம் சொல்லுவார். சொல்லேக்கை எங்களுக்கு விளங்கிறமாதிரிச் சொல்லுவார்.” 

கிருஷ்ணியின் வாயூறலும் சளசளப்பும் எனக்கு எரிச்சலைத் தருகுது. 

வகுப்பறைக்கு வந்த வாத்தியார் – வணக்கம் சொல்லிப்போட்டு – தமிழ்ப் புத்தகத்தை எடுத்தார். 

“ஐந்தாம் பாடமா.. அட பாரதியா..? பாரதியின் இலட்சியப் பெண்..!” 

தேன் குடிச்ச நரியாட்டம் இளிச்சபடி நிண்டவர், ராதிகாவின்ரை குரலைக்கேட்டு, அவளது பக்கமாகத் திரும்பினார்.

“இந்த அகதிச் சனியன் சத்தி எடுத்திட்டா. வகுப்பு முழுதும் நாறுது… இஞ்ச இருக்கேலாது சேர்…” 

“ஆரது… எந்தப் பிள்ளை…? அகதி, சனியன் எண்டெல்லாம் சொல்லப்படாதம்மா. நாங்கள் எல்லாரும் அகதிகள்தான். தொண்ணூற்றைஞ்சு ஐப்பசி மாசத்தை மறக்கேலுமா…?” 

“ஆளார்…பிள்ளை எழுந்திரும்…” 

நான் மசிண்டிக்கொண்டு எழுந்து நிண்டன். 

“என்ன பேரம்மா உமக்கு..?” 

“யசோதா…” 

“இடம் பெயர்ந்து வன்னியில எங்க இருந்தனீங்க…” 

“புதுக்குடியிருப்பில..” 

“இஞ்சை எந்த இடம்?” 

“கட்டுவன்” 

“அங்க போகேலாது. அவங்கட அதிபாதுகாப்பு வலயம் எண்ட கோதாரி எங்கட மண்ணில அவங்கட நாட்டாண்மை வலுத்திட்டுது… ஹும்… என்னசெய்யேலும்.” 

வாத்தியார் முணுமுணுத்தார். 

“‘இப்ப, இவ இருக்கிறது கொட்டு தோட்டப் பக்கம். முத்துமாரியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில…” 

கிருஷ்ணிதான் திரும்பவும் என்ரை உதவிக்கு வந்தாள். 

“சேர்! யசோ காலையில சாப்பிடேல்லை… வெறும்வயிறு… அதுதான் சத்தி எடுத்தவ. அதைத்தான் இந்தக் கோள்குண்டணி சொண்டு உரைஞ்சிறா.” 

என்னைப் பார்த்த கிருஷ்ணி மனசிளகிச் சிரிச்சாள்.

கண்கலங்கியபடி, கிருஷ்ணியை அன்போடை பார்த்தன். 

“அதுசரி பிள்ளை, உங்களுக்கு உலர் உணவு, அது இதெண்டு கிடைக்குமே…” 

“இவை வந்து மூண்டு கிழமைதானாகுது. விதானையார் இழுத்தடிக்கிறார். நல்ல விதானையும் பானையும். உந்தக் குறளி ராதிகாவின்ரை அப்பாதான் விதானை” 

கிருஷ்ணி பொரிந்து தள்ளினாள். 

“கிருஷ்ணி பெரியாக்களை இப்பிடிப் பேசப்படாது பிள்ளை. அதுசரி, குடும்பத்திலை நீங்க எத்தனை பேர்…” 

“அம்மா, தங்கச்சி, நான்.” 

“அப்பா…?” 

“தொண்ணூற்றேழில, வள்ளிபுனம் பள்ளிக் கூடத்தடியில, பொம்மர் அடிச்சது. அப்ப குண்டுபட்டு, அப்பா செத்துப்போயிட்டார்”

வகுப்பு இறுகி, உறைஞ்சு போனது. எல்லாப் பிள்ளையளும் கண்கொட்டாமல் என்னையே பார்த்தபடி இருந்தினம். 

அப்ப, இரண்டாம் பாடவேளை மணி அடிச்சது. 

இனி, கணக்குப்பாடம். வகுப்புக்கு நண்டு வரப்போகுது. எங்கட கணக்கு ரீச்சர் மிஸ்ஸிஸ் தம்பையா. அவவுக்கு நண்டு எண்டு பட்டப்பேர். அந்தப் பேரை வைச்சது கிருஷ்ணிதான். பட்டப்பேர் வைக்கிறதிலை அவள் சரியான விண்ணி. 

கால்களை அகலவைத்து, தனது கனத்த உடம்பை அசைக்க முடியாமல், தம்பையா அரக்கி அரக்கி நடந்து வாறது, சினை நண்டு வாறதுபோல இருக்கும். 

வகுப்பில கணக்குச் செய்யேக்கை பிழை விட்டா, நண்டு துடையில, சள்ளையில, சொக்கைல எண்டு கோலிக் கோலி நுள்ளும். நுள்ளின இடத்தில் இரத்தம் வரும். 

அதின்ரை தண்டனை முறை எல்லாம் நிமிஷத்துக்கு நிமிஷம் மாறும். சில வேளையில நெஞ்சிலையும் முதுகிலையும் மூசிமூசிக் குத்தும். மூச்சு அடைக்க அடைக்க இந்தக் கூத்து நடக்கும். கொலைபாதகி, யமன்ரை தங்கச்சி எண்ட பேரும் அதுக்கு வலு பொருத்தம். 

அது கிட்டவந்தா, எங்களுக்குத் தெரிஞ்ச கணக்கும் தெரியாமல் போயிடும். அதுக்கு உடம்பு முழுக்கக் கண். மனசை உள்ளாலை பார்த்து, எங்கடை கள்ளமெல்லாத்தையும் சட்டெனக் கண்டுபிடிச்சிடும். 

என்ரை குட்டெல்லாம் உடையப் போகுது எண்ட பயம் எனக்கு. ராதிகாவிலையே என்ரை கவனம் முழுக்க இருந்தது. புத்தகப் பையைத் திறந்து, கணக்குப் புத்தகத்தை அவள் வெளியில எடுத்தாள். புத்தகத்தோடை சாப்பாட்டுப் பெட்டியும் தட்டுப்பட்டு, வெளியில வந்து விழுந்தது. விழுந்த வேகத்தில் பெட்டி திறந்திட்டுது. 

ராதிகா டான்சாடத் தொடங்கினாள். வகுப்பறைக்கு வந்த நண்டைப் பார்த்து, கத்தினாள். 

“ஆரோ அம்புலோதிப்பட்டது என்ரை சாப்பாட்டைத் திருடித்திண்டிட்டுது ரீச்சர்…!” 

“எரிமலை புகையிது. கொதிகுழம்பு வெளியில வருகுது. பட்டென பட் வெடிச்சுச் சிதறப் போகுது. கவனம். ரெடியாய் இரும் யசோ..” 

கூறின கிருஷ்ணி, என்னைப் பார்த்து உதடுகளைக் குவித்து ஒரு கள்ளச் சிரிப்புச் சிரித்தாள். 

நடந்து வந்த களைப்பு… அதோட ராதிகாவின்ரை கூச்சலும் சேர, நண்டு கோபத்தில அதிர்ந்தது. கண்களை அகல விரித்து ஒரு பார்வை பார்த்தது. இமை வெட்டாத அந்தப் பார்வை என்னை நிலை குலையச் செய்தது. 

பயத்திலை, எனக்கு மூத்திரம் வந்தது. கையை உயர்த்தி, சுட்டுவிரலை நண்டுக்குக் காட்டிப்போட்டு, ஒண்டுக்கு இருக்க ஓட்டமெடுத்தன். 

திரும்பிவந்து பார்த்தா – வகுப்பறை அமைதியாக இருந்தது – நண்டுக்கு எல்லாமே விளங்கி இருக்கவேணும். 

“வந்து மூண்டு நாளாகேல்லை, உனக்குத் திருட்டுச் சாப்பாடு வேணுமா? கழுதை, குட்டிப் பிசாசு, தட்டுவாணித் தேவ…” 

கெட்ட வார்த்தைகள் அதுக்குத் தண்ணி பட்டபாடு. ராதிகாவின்ரை பார்வையில மட்டும் ஒரு குரோதமிருந்தது. உதடுகளில் லேசான ஏளனச் சிரிப்பும் குமிழிட்டது. 

நண்டின்ரை மனசை ஆழங்காணேலாது… எப்ப என்ன செய்யுமெண்டு சொல்லேலாது… 

“உங்களை அடிச்சுச் சரிவராது. உங்களுக்குத் தோல் தடிச்சுப்போச்சு. புதிசா ஏதாவது உறைக்கிறமாதிரிச் செய்யவேணும். வெக்கத்தில இனி இந்த மாதிரி எளிய வேலையளைச் செய்யாத அளவுக்கு அது இருக்கவேணும்.” 

கூறின நண்டு, என்னைத் தரதரவெண்டு, தன்ரை மேசையடிக்கு இழுத்துக்கொண்டு போனது. 

அதுக்குக் கோபத்தில மூச்சுமுட்டி, ஈழை மாதிரி இழுத்தது. தரையில விழுந்த மீன் கணக்கா வாயை மூடிமூடித் திறந்தது. பின்னால கூச்சலிட்டது: 

“டிசிப்ளின்… டிசிப்ளின்… டிசிப்ளின்… அது இல்லாமல் படிப்பெதுக்கு, குப்பையில கொட்டவா?” 

அதிர்ந்த உடலை ஆறுதல்படுத்திக் கொண்ட நண்டு, தான் கொண்டு வந்திருந்த பிறிஸ்ரல் போர்ட் ஒண்டை எடுத்து, சரிபாதியாக மடித்துக் கிழித்து, அதில கறுப்பு ஃபெல்ற் பேனையால தன்ரை கிறுக்கல் எழுத்தில ஏதோ எழுதினது: 

‘நான் கள்ளச் சாப்பாடு தின்னிற பட்டினிப்பட்டாளமாம். எனக்குப் பகாசுரப் பசியாம். அண்டா அண்டாவாகச் சாப்பிடுவனாம். சாப்பிட எனக்குக் கொட்டிக் கொடுக்க வேணுமாம்’ 

எழுதின போர்ட்டைத் துளையிட்டு, நூல்கட்டி, என்ரை கழுத்தில மாட்டிவிட்ட நண்டு; பள்ளிக்கூடத்தைச் சுற்றி வரும்படி கட்டளை இட்டது. 

நான் அசையாமல் விறுமன் கணக்கா நிண்டன். 

அதைப் பார்த்துக் கோபங்கொண்ட நண்டு, ஓடிவந்து என்ரை முதுகில ஒரு குத்துவிட்டது. தளம்பி விழப்போன நான், மனசுடை ஞ்சு அழுதபடி, மெதுவாக நடக்கத் தொடங்கினன். கூட, நிதியும் என்னோடை வந்தாள். 

நான் பக்கத்து வகுப்பறையள், விஞ்ஞான கூடம், நூலகம் எண்டு நடந்து, விளையாட்டு மைதானத்தை அடையேக்க, அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிள்ளையள் எனக்குப் பின்னாலை ஓடிவந்தினம். அவையளுக்கு இது புதினமா இருந்திருக்கவேணும்… ஆனா, எனக்குச் சீலைகழண்ட வெக்கமாயிருந்தது. 

‘எனக்கு ஏன் இந்தத் தண்டனை…? நாலு பேர் பகிடி பண்ணிறமாதிரி… நண்டை வட்டாரியாலை கூரை நல்லாத் தீட்டிப்போட்டுக் குத்தவேணும்… ரத்தம் சொட்டச் சொட்டக் குத்தவேணும்…’ 

மனம் கறுவிக் கொண்டது. 

அதிபர் அலுவலகத்துக்கு முன்னாலை வந்தபோது, வெளிய வந்த அதிபர் கொடுப்புக்குள்ள சிரிச்சது தெரிஞ்சது. 

“மிஸ்ஸிஸ் தம்பையான்ர வகுப்பா?” 

“….” நிதி தலையாட்டினாள். 

“நாளைக்கு அசெம்பிளியிலயும் இவவை நிறுத்தவேணும்…”

தம்பையா நண்டெண்டால், இது நரி, உலாந்தா மாதரி வளர்ந்து, சின்னத் தொந்தியைத் தடவினபடி அது நிண்டது. 

எரிச்சலுடன் அதைப் பார்த்தும் பாராத மாதிரிக் காறித் துப்பினன். 

மனிசனுக்கு விளங்கினமாதிரித் தெரியேல்லை. அவரது கவனமெல்லாம் பிள்ளையளுக்கு வலைப்பந்தாட்டம் பழக்கிற பவானி ரீச்சரின் குதிப்பிலும் மதமதப்பிலுமிருந்தது. 

குட்டைபிடிச்ச சனங்கள். இனி இந்தப் பள்ளிக்கூடப் பக்கம் வரப்படாது. செல்வராசாண்ணற்றை தோட்டத்தில் அம்மாவோடை வேலைக்குப் போகவேணும். 

மனசு தீர்மானித்துக்கொண்டது. 

தம்பிமுத்து மண்டபத்தைக் கடந்து, நடந்த போது – தெரிஞ்ச தெரியாத ஆசிரியர்களும் ஆசிரியைகளும் வகுப்பறையைவிட்டு வெளியவந்து, விடுப்புப் பார்த்தினம். அவையளக்குப் பின்னாலை வகுப்புப் பிள்ளையள், பெரிய வகுப்பு அக்காமாரும் ஒருத்தரை ஒருத்தர் இடிச்சு இடிச்சு ஏதோ சொல்லிச் சிரிச்சினம். என்ன விண்ணாணம் பார்க்கினையோ தெரியேல்லை. 

அருணாசலம் மண்டபப் பக்கமா வாறன். அப்ப தயாரீச்சரும், அமலன்சேரும் வாறது தெரியுது. பின்னாலை, தமிழ் வாத்தியார் ராமலிங்கம்சேர் ஓடிவாறார். 

அமலன் சேர் என்னமோ சொன்ன மாதிரி இருந்தது: 

“திஸ் இஸ் ரூ மச்… ஏப்பாட். பிறிசிடென்ஸ்..” 

ஆங்கிலத்தில சொன்னதாலை எனக்கு விளங்கேல்லை. தயா ரீச்சர் கலங்கிப் போய் என்னை அணைத்துக்கொண்டா. அவவின்ரை கண்கள் கலங்கி இருந்தன. 

“என்னம்மா இது..?” 

ராமலிங்கம் சேர் அழுவாரைப்போலக் கேட்டார். 

நிதி பதில் சொன்னாள்: 

“தம்பையா ரீச்சர்தான் அனுப்பினவ…” 

“இவ என்ன வாத்தி… பெரிய பட்டதாரி… டிப்ளோமா… கல்வி உளவியல் அது இதெண்டு படிச்சுக் கிழிச்சிருப்பா… ஓகே… அவவுக்குப் பகுதித் தலைவர் எண்ட மிதப்பாக்கும். விசர்க்குடுக்கை. இதுகள் பிழையெண்டு ஏன் இவவுக்குத் தெரியேல்லை… பிள்ளையளின்ரை சமூக நிலையை அறிஞ்சு உதவி செய்யிறது தானே வடிவு..” 

இயல்புக்கு மாறாக வாத்தியார் உரத்துப் பேசினது போலத்தான் எனக்கு இருந்தது. 

அவசர அவசரமா என்ரை கழுத்தில கிடந்த பிறிஸ்ரல் போர்ட்டைக் கழட்டி, கிழித்துத் தூரவீசினவர், நிதியிட்டக் கூறினார்: 

“இவவின்ர புத்தகங்களை எடுத்துக் கொண்டு வாரும். இவ வீட்டை போகட்டும். அதிபரிட்டை நான் சொல்லிறன்.” 

நன்றி உணர்வு கண்களில் மின்ன, தமிழ் சேரைப் பார்த்தன். அவர் என்ரை கையைப் பிடிச்சு, தன்ரை வகுப்பறைக்குக் கூட்டிக் கொண்டு போனார். எவ்வளவு நிதானம் இவர். ஏதேன் பிழை எண்டா நல்ல மனிசருக்குத்தான் இப்பிடிக் கோவம் பொதுக்கெண்டு வரும் போல…. 

தூரத்திலை, நிதி புத்தகப்பையோட ஓடிவந்தாள், கூடவே கிருஷ்ணி, கிருஷ்ணி கிட்ட வந்து, கையைப்பிடிச்சு கனிவாய்ச் சொன்னாள்: 

“பயப்பிடாதையும்… நாளைக்குப் பள்ளிக் கூடத்துக்கு வாரும்…. கட்டாயம் வாரும்… இண்டைக்கு நடந்ததை மறந்திடும்…” 

அவளது குரலில் அழுகை இருந்தது. 

புத்தகப்பையை வாங்கிக்கொண்டு, பள்ளிக் கூடத்தைவிட்டு வெளிய வந்தன். 

என்னில் எனக்கே வெறுப்பு வந்தமாதிரி இருந்தது. தனிய விடுபட்டுத் தவிக்கிற மாதிரி இருந்தது. பசியிலதானே செய்தனான். இது பிழையா..? கெட்டபழக்கமா…? பசி.. பசிக் கொடுமையிலதானே இப்படி நடந்திட்டுது. 

நல்ல வெய்யிலடிக்குது. அனல்காத்தும்வீசுது. நாவறண்டு போனமாதிரி இருக்குது. செல்வராசா அண்ணற்ற தோட்டத்தில் தண்ணி அள்ளிக் குடிக்கவேணும். தாகம் தீரக்குடிக்கவேணும். இந்த அவமானத்தில, நெருக்குவாரத்தில் இருந்து விடுதலை கிடையாதா…? ஆயிரம் பேர் படிக்கிற பள்ளிக் கூடத்தில ராமலிங்க வாத்தியார், அமலன் சேர், தயாரீச்சர், நிதி, கிருஷ்ணி இவை மட்டும்தான் எனக்காகக் கலங்கிற மாதிரி இருக்கு… இவை மட்டும் போதுமா… செத்திடலாம் போல இருக்கு. சாகப்படாது. ஏன் சாகவேணும். அம்மாவை, தங்கச்சியை விட்டிட்டு எப்பிடி..? பள்ளிக்கூடம் போகாமல் விடுவம். போனால்தானே கெட்டபேரும் கிரிசைகேடும். 

நினைவுகளோடை, மில்லடி ஒழுங்கைக்கு வந்திட்டன். மில்லைக் கடந்து, கொட்டு தோட்டத்தடியிலை வரேக்கை, தண்ணி குடிப்பம் எண்டு கிணத்தடிப் பக்கம் போனன். தமரோன் மணத்தது. செல்வராசா அண்ணர் தோட்டத்தில் மிளகாய்க் கண்டுகளுக்குப் செல்வராசா அண்ணர் தோட்டத்தில் மிளகாய்க் கண்டுகளுக்குப் பூச்சி மருந்து அடிக்கிறது தெரியுது. அவர் தூரத்தில, தோட்டத்துத் தெற்குத் துண்டில நிக்கிறார். 

கிணத்தில தண்ணி அள்ளிக் குடிச்சுப் போட்டுத் திரும்பேக்கை, அது… அந்தப் போத்தில் தெரிஞ்சது. தமரோன் போத்தில். போத்திலிலை மருந்து முக்காப் பதத்துக்கு இருந்தது. போத்திலைக் கையில எடுத்தன்; எடுத்ததும் அந்த எண்ணம் என்ரை மனதில ஊடுருவியது. எல்லாமே சடுதியில நடந்தது. ஒரு வேகத்திலை என்னை மறந்த நிலையில, மூக்கைப் பொத்திக் கொண்டு லபக்கென மருந்தை விழுங்கினன். தொண்டை எரிஞ்சது. நெஞ்சும் எரிஞ்சது. குடிச்சபிறகுதான் மூளைக்கு ஏதோ வெளிப்பு வந்தமாதிரி இருந்தது. இனி என்ன… சாகவேண்டியதுதான். விக்கலோடை அழுகை வந்தது. உயிராசை மனசைக் குடைஞ்சது. 

மாரியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில அம்மா வாறது தெரியுது. இடுப்பில தங்கச்சி. 

ஓடிப்போய் அம்மான்ரை கையை எடுத்துக் கொஞ்சினன். குனிஞ்சு என்னைப் பார்த்த அம்மா, “ஏன் பள்ளிக்கூடம் முடியமுந்தி வந்தனி…?” எண்டு கேட்டா. 

பதிலென்ன சொல்லேலும். புத்தகப்பையை அம்மாற்றைக் குடுத்திட்டு, தங்கச்சியை வாங்கி அணைச்சுத் தூக்கிக் கொண்டு நடந்தன். 

வீட்டுப்படலையடியில வரேக்கை நெஞ்சு அடைச்சது. மூச்சுவிட முடியேல்லை.. கால் தடக்கின மாதிரி இருந்தது. லேசா நுரை வாயில வழிஞ்சது… 

நிலைதடுமாறி விழப்போன என்னை, அம்மா அணைச்சுக்கொண்டா. புத்தகப்பையோடை தங்கச்சியையும் வாங்கிக் கொண்டா. 

“என்ன… உன்னில பூச்சிமருந்து மணக்குது.” 

“அம்மா நான்…நான் தமரோன் மருந்தைக் குடிச்சிட்டன்..”

“அடிபாதகத்தி, என்ன செய்து போட்டை…” 

அம்மா பதறி அழுதா. 

செல்வராசா அண்ணர் ஓடிவாறது தெரியுது. ஆனால் மங்கலாய்த்தான். நினைவு இழந்து கொண்டு போவது போல இருந்தது. எல்லாமே ஒளியில்லாமல் இருளாய் இருந்தது. 

‘நான் செத்துப் போவனா…?’ மனசு அடிச்சுக்கொண்டது. 

“ஆள் அம்மனிட்டைப் போய்விடுவா போலத்தான் இருக்கு… மூச்சுப் பேச்சில்லை… எதுக்கும் ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு போவம்.” 

செல்வராசா அண்ணற்றை குரல் கனவில… தூரத்தில கேக்கிறமாதிரி இருந்தது. 

‘கெதியிலை கொண்டு போங்களேன்’ எண்டு கத்தவேணும்போல இருந்தது… ஆனால் முடியேல்லை. 

அம்மா கதறிக் கதறி அழுகிறா. கூடத் தங்கச்சியும் அழுகிறா…

“பயப்பிடாதையும் நாளைக்குப் பள்ளிக்கூடத்துக்கு வாரும்.. கட்டாயம் வாரும்…” 

கிருஷ்ணியின்ரை குரல் ஏதோ அதள பாதாளத்தில் இருந்து ஒலிப்பதுபோல இருந்தது. 

“கிருஷ்ணி..!” 

அவளைக் கூப்பிட வேணும்போல இருக்கு… ஆனால் என்னாலை முடியாமல் இருக்கு… 

– வெளிச்சம், புரட்டாதி ஐப்பசி, 2004.

– புதியவர்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2006, பொன்னி வெளியீடு, சென்னை.

க.சட்டநாதன் க.சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர். நவீன கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சட்டநாதன், மார்க்ஸிம் கோர்க்கி, ஆன்டன் செக்காவ், புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியவர்களைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் கருதுகிறார். இவரது முதல் சிறுகதை ‘நாணயம்’ 1970-ல் 'வீரகேசரி' இதழில் வெளிவந்தது. 1972-74 காலப்பகுதியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *