எலுமிச்சங்காயளவு சாதம்
கதையாசிரியர்: நெ.சி.தெய்வசிகாமணி, மரியாதைராமன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 13, 2025
பார்வையிட்டோர்: 10
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு தேசாந்திரி ஓர் உணவு விடுதிக்குச் சென்றான். சாப்பிட உணவு கொடுக்கும்படி அந்த உணவு விடுதி நடத்தும் பெண்மணியிடம் கேட்டான். அவளோ சாப்பாடெல்லாம் ஆகிவிட்டது ஒன்றும் இல்லை என்றாள்.
“அம்மா பசி காதை அடைக்கிறது. ஒரு பணம் தருகிறேன். ஒரு எலுமிச்சங்காயளவு சாதம் போட்டாலும் பரவாயில்லை” என்றான் தேசாந்திரி.
அந்தப் பெண்மணி தேசாந்திரியிடமிருந்து ஒரு பணத்தை வாங்கிக் கொண்டாள்.
தேசாந்திரி கைகால் அலம்பிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தான். அவன் முன்னால் ஒரு வாழை இலையைப் போட்டாள் அந்தப் பெண்மணி. பின்னர் இலையில் ஓர் எலுமிச்சங்காயளவு சாதத்தை வைத்துச் சிறிது குழம்பு விட்டு, “சாப்பிடு!” என்றாள்.
“என்ன, அநியாயமாக இருக்கிறதே! ஏதோ பேச்சுக்காகச் சொன்னேன். ஒரு பணத்திற்கு எலுமிச்சங்காயளவு சாப்பாடா? உன் சாப்பாடும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம். என்பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடு. நான் பட்டினியாகவே இருந்து விட்டுப் போகிறேன்” என்றான் தேசாந்திரி.
அந்தப் பெண்மணியோ தான் வாங்கிய பணத்தைத் திரும்பத் தரமுடியாது என்று பிடிவாதமாகச் சொல்லி விட்டாள்.
தேசாந்திரி மரியாதைராமனிடம் சென்று தன் வழக்கைக் கூறினான்.
“அய்யா, சும்மா ஒரு பேச்சுக்காக அந்த அம்மாவிடம் ஒரு எலுமிச்சங்காயளவு சாதம் போட்டால் ஒரு பணம் தருகிறேன் என்று கூறினேன். ஆனால், அந்த அம்மாளோ என்னிடம் ஒரு பணம் வாங்கிக் கொண்டு உண்மை யாகவே எலுமிச்சங்காயளவு சாதம் போட்டார்கள். சாதம் வேண்டாம். பணத்தைத் திரும்பக் கொடுத்து விடு என்றால் பணத்தையும் திரும்பத் தரமாட்டேன் என்கிறார்கள்” என்றான் தேசாந்திரி.
“இவர் சொல்லுவது உண்மையா?” என்று உணவுவிடுதிப் பெண்மணியிடம் கேட்டான் மரியாதைராமன்.
“நீங்கள் இவருக்குப் போட்ட சாதத்தைக் கொண்டு வந்து காட்ட முடியுமா?” என்று அந்தப் பெண்மணியிடம் கேட்டான் மரியாதைராமன்.
“அப்படியே இலையில் தான் இருக்கிறது. இதோ கொண்டு வருகிறேன்” என்று வீட்டுக்குப் போய் இலையுடன் சாதத்தைக் கொண்டு வந்து மரியாதை ராமனிடம் காட்டினாள் அந்தப் பெண்மணி.
இலையில் இருந்த சாதத்தைக் கூர்ந்து பார்த்த மரியாதைராமன், “ஒரு சாதம் கூட எலுமிச்சங்காயளவு இல்லையே?’ என்று அந்த உணவு விடுதிப் பெண்மணியிடம் கேட்டான்,
“எலுமிச்சங்காயளவு சாதமா?” என்று வாயைப் பிளந்தாள் அந்தப் பெண்மணி.
“ஆமாம் இவர் எலுமிச்சங்காயளவுள்ள சாதம் தானே போடச் சொன்னார். நீ பல சாதங்களைக் கொண்டு எலுமிச்சங்காயளவு போட்டிருக்கிறாய். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீ ஒப்புக் கொண்டபடி எலுமிச்சங் காயளவுள்ள சாதத்தைப் போட முடியுமானால் போடு; இல்லாவிட்டால் இவருக்கு நீ பத்து பணம் அபராதம் செலுத்த வேண்டும்” என்றான் மரியாதைராமன்.
எலுமிச்சங்காயளவுள்ள சாதம் போட முடியாத உணவுவிடுதிப் பெண்மணி தன்தோல்வியை ஒப்புக் கொண்டு தேசாந்திரிக்குப் பத்து பணம் அபராதமாகத் தந்தாள்.
– மரியாதைராமன் கதைகள், முதற் பதிப்பு: ஏப்ரல் 1981, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை.
| பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்) மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும். புகழ்மிகு கதையிலக்கியங்கள் : விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க... |