எலியின் வால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 14, 2025
பார்வையிட்டோர்: 149 
 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு பூனை பசியால் ஓர் எலியின் வாலைக் கடித் தெடுத்துத் தின்னப் போயிற்று. 

அப்போது எலி, 

‘அருமைப் பூனையே, அருமைப் பூனையே 
அறுத்த வாலைத் திருப்பித்தர அருள் புரிவையே,’ 

என்று கேட்டது. 

பூனை, ‘என் பசிதீரப்பால் தந்தால் நான் வாலைத் தருவேன்,’ என்றது. 

உடனே எலி பசுவினிடம் போய், 

‘பசுவே, பசுவே, பால் தா. 
பூனை பாலைக் குடித்துப் பின்னால் 
அறுத்த வாலைத் திருப்பித்தர அருள் புரிவையே’, 

என்று கேட்டது. 

பசு ‘என் வயிறு நிறைய வைக்கோல் தந்தால் நான் பால் தருவேன்,’ என்றது. உடனே எலி உழவனிடம் போய், 

‘அருமை உழவா, வைக்கோல் தா,
பசு வைக்கோல் தின்று பால் தரப்,
பூனை பாலைக் குடித்துப் பின்னால்
அறுத்த வாலைத் திருப்பித்தர 
அருள் புரிவையே’, 

என்றது. உழவன் ‘நான் அப்பந் தின்று வயலுக்குப் போய் வைக்கோல் கொண்டுவரவேண்டும். எனக்கு அப்பந் தா,’ என்றான். உடனே எலி அப்பக்காரனிடம் போய், 

‘அப்பக்காரா, அப்பம் தா, 
உழவன் அப்பந் தின்று வைக்கோல் தரப், 
பசு வைக்கோல் தின்று பால் தரப், 
பூனை பாலைக் குடித்துப் பின்னால்
அறுத்த வாலைத் திருப்பித்தர 
அருள் புரிவையே,’ 

என்றது. அப்பக்காரனுக்கு இரக்கம் வந்து கொஞ்சம் அப்பம் கொடுத்தான். எலி அதை மென்று விடாமல் உழவனிடம் கொண்டுபோய்க் கொடுத்தது. 

உழவன் அதைத் தின்று களிப்புடன் வயலுக்குப் போய் வைக்கோல் கொண்டுவந்து கொடுத்தான். 

பசு வைக்கோலைத் தின்று வயிறு நிறைந்ததனால் பால் கொடுத்தது. பூனை பால் குடித்துப் பசி தீர்ந்ததனால் எலியின் வாலைத் திருப்பிக் கொடுத்து விட்டது. எலி வாலைத் திரும்ப ஒட்டவைத்துக் கொண்டு மகிழ்ச்சியடைந்தது. 

அருஞ் சொற்கள் 

அப்பக்காரன்
அருள் புரி 
களிப்பு 
நிறைய 
அறுத்த
இரக்கம் 
பசி தீர 
பசி தீர்ந்து 
மகிழ்ச்சி
மென்றுவிடாமல் 
வயிறு 
வைக்கோல் 

– கழகக் கதைச் செல்வம், முதற் பதிப்பு: டிசம்பர் 1941, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *