கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 28, 2025
பார்வையிட்டோர்: 105 
 
 

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சவுதியிலிருந்து,

‘இன்றிரவு என்னால் தூங்கமுடியுமா?’

வேலைக் களைப்புடன் கதவைத் திறந்தவனுக்கு குப்பென்று அடித்தது துர்மணம்.

ஒவ்வொரு இரவும் இப்படித்தான்.

சகிக்க முடியாதபடி… எரிச்சல் கூட வந்தது.

மனைவி வரும்போது வேறு வீடு பார்த்துக் கொள்ளலாம்.

அதுவரையிலாவது சமாளிக்க வேண்டும்.

குறைந்த வாடகையில் இப்படி ஒரு அறை எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

இந்த அறை எடுக்கப்பட்டபாடு… அலைச்சல்… வீண்செலவு வேறு.

வியாழன் வெள்ளி விடுமுறைகளில் வந்து தங்கிச் செல்லும் நண்பர்கள்கூட வருவதை நிறுத்திவிட்டார்கள்.

அப்போதுதான் ஞாபகத்தில் வந்தது…

பொறி!

கடைக்குப்போய், வாங்கி வந்து – அன்று சமைத்த இறைச்சித் துண்டை கட்டி… தயார்படுத்தி வைத்து – தூங்கப்போனேன்.

நடுச்சாமத்தில் – பொறிவிலகி… ஈனமான குரலில் சத்தமிடும் எலியின் சத்தம் கேட்க… கனவுலகிலிருந்து இறங்கி வந்து விளக்கைப் போட்டேன்.

இறைச்சித் துண்டு காணாமல் போயிருந்தது. ஆச்சரியத்தைத் தந்தது.

‘இந்தப் பொறியில் எலி அகப்படாதது எலி செய்த அதிஷ்டமா’ நண்பன் சொன்னான்.

எரிச்சல் வந்து படுத்தேன். ஏ. ஸி இரைச்சலுடன் குளிரைத் தந்தாலும்….

‘இந்த எலியைத் துரத்தினால் தான் நிம்மதி தரும்’

உறங்கிப்போனது தெரியவில்லை. அதிகாலை ஐந்து மணிக்கு ‘அலாரம்’ அடிக்க…எழுந்து –

பாத்ரூம் நுழைந்தேன்.

‘தூங்கும்போது ஜட்டி போட்டு படும் காணும்!’ யாவரும் சிரித்ததும்,

ஊரில் அப்பா அம்மாவிடம் எலுமிச்சம் பழம் பத்திரம் என்றபடி சிலேடையாக… எலுமிச்சம் பழத்தை கொடுத்ததும் ஞாபகத்தில் வர….

லுங்கியைத் தளர்த்தி – நிலத்தில் இறக்கி – றவுசரில் கால்களைத் துளைத்து – சேர்ட்டை ‘இன்’ செய்து கண்ணாடியில் – என்னை சிங்காரித்து –

கதவைத் திறந்து வெளியேறினேன்.

‘க்ளூ வாங்கி வை! எலி பிடிபடும்’

ஒருவன் யோசனை சொன்னான்.

‘இவனுக்கு எலியைப் பொறியில் பிடிக்க வைக்கத் தெரியவில்லை. அதுதான் எந்த பெட்டையும் கொளுவேல்லை போல…’

இன்னொருவன் சொன்னான்.

அவனுக்கு ‘லவ்‘ பண்ணத் தெரிந்தது என்று குத்திக்காட்டினான்.

நான் சேமித்து பாதுகாக்கும் புத்தகங்களை எலிகள் சாப்பிடாதவரை பாக்கியசாலிதான்.

இங்கு வந்து வாழ்கின்ற பத்து வருடங்களில் இப்போது தான் எலிகளிடமிருந்து அச்சுறுத்தல் வந்திருக்கிறது. தீர்மானம் வேண்டும்.

பூனை வளர்க்கலாம் என்றால் இங்கு பூனையும் எலியும் தோழன் என்பது பார்த்த அனுபவம் – அந்த யோசனையை தவிர்த்து விட்டேன்.

‘பொறியில் அகப்பட்டு வலியுடன் முனகி இறக்கும் அந்த வாயில்லா ஜீவனின் உடலைப் பார்க்கிற தைரியம் எனக்கு உண்டா?’

நெஞ்சில் வலித்தது.

‘இந்த பழம் புத்தகங்களுக்குத்தான் எலி வருகின்றது’ என்று தனக்கு வாசிக்கத் தராத எரிச்சலில் ஓசி வாசக நண்பன் சொல்வதாகப்பட்டது.

‘யாருக்குத் தான் என் மீது பொறாமையில்லை? என் வளர்ச்சி, என் சேமிப்பு… குறைவில்லாமல் வந்து சேரும் புத்தகங்கள்…. கவிதைகள்….!’

Air Freshner Sprayஐ எடுத்து அறை முழுக்க Spray பண்ணினான்.

மல்லிகை மணம் பரவியது மாதிரி இருந்தது. எனினும் –

இது தற்காலிகம்தான். நிரந்தரமாக எனில்…

தேநீரை ஆற்றியபடி… விளக்கை அணைத்து தூங்கியபடி… உடைகளின்றி குளித்தபடி… புத்தகங்களை புரட்டியபடி….

சிந்தித்தான்….

மௌனம் நிலவிய அந்த அறையில் பைப்பிலிருந்து ஒழுகும் நீரின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

‘நாளை நிச்சயமாக வேறு அறை பார்க்க வேண்டும்’

கதவைப் பூட்டி… மீண்டும் இழுத்துப் பார்த்து – வீதியில் இறங்கினான், நண்பனைப் பார்க்க.

(யாவும் கற்பனையல்ல)

– நான்காவது பரிமாணம், ஏப்ரல் 1994.

MullaiAmudhan எழுத்தாளர் முல்லை அமுதன் கல்லியங்காடு, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முல்லைஅமுதன் எனும் பேயரில் 80களில் இருந்து எழுதி வருகிறார். அவர் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் எனப் பல தளங்களிலும் கால் பதித்தவர். வருடந்தோரும் இங்கிலாந்தில் ஈழத்து எழுத்தாளர்களின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *