என்பிலதனை நிலாப்போல

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 30, 2025
பார்வையிட்டோர்: 125 
 
 

அண்ணாமலை ‘அண்ணா’வைத் தேடித்தான் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு வந்திருந்தான். சுமார் ஐம்பது வருடங்கள் ஆகியிருக்கும். அந்தப் பள்ளியில் படித்த போது ஒன்பதாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்புவரை அவர் பல பாடங்கள் எடுத்தார். ஒன்பதாம் பத்தாம் வகுப்புகளில் வரலாறு புவியியல், பதினொன்றாம் வகுப்பில் ஆங்கிலம் கற்பித்தார். கண்ணதாசனின் கவிதைப் புத்தகத்தை பள்ளி நூலகத்திலிருந்து அவன் எடுத்து வந்த போது, அவன் கையில் அது இருப்பதைப் பார்த்தார். அவருடைய முன்னெடுப்பில் தான் நூலகத்தில் புத்தகங்கள் வாங்கியிருப்பார்கள். அப்படித்தான் இருக்கும். இதுவெல்லாம் சொல்லித் தெரிவதில்லை. பள்ளியில் வேறு ஆசிரியர்கள் பாடத்தைத் தவிர சினிமா, உணவு, நகைச்சுவை என்றெல்லாம் பேசி, நேரத்தைக் கழித்த போது, அவர் மட்டும் உலகத்தின் பல்வேறு நாடுகள் பற்றி, வரலாற்றின் நாயகர்கள் பற்றிப் பேசினார். அதைவிட அவனுக்கு பிடித்த சாக்ரெடீஸின் ‘ஏன்? எதற்கு? என்ற கேள்விகளை மனதில் பதியவைத்தார். ஒன்பதாம் வகுப்பில் வரலாறு பாடத்தில் அவனுக்கு இருந்த ஆர்வத்தை வைத்து, ‘ஹிஸ்டரி மேன்’ என்று வகுப்பில் பெயர் கொடுத்தார்.

பள்ளி வளாகத்தில் அவனுடைய கார் நுழையும் போது, அங்கே சின்னக் கூண்டின் அருகில் நின்றிருந்த காவலர், கைகாட்டி வண்டியை நிறுத்தினார். காரும், அவன் அணிந்திருந்த உடையும் அவர் வார்த்தைகளைத் தீர்மானித்தன. ‘சார், எங்க போகணும்? யாரைப் பார்க்கப் போகணும்?’ கேட்டுக் கொண்டே ஒரு ரிஜிஸ்டரை எடுத்துவந்தார். அவன் இங்கே படித்த போதும் இப்படி ஒரு வாயில்காவலர் இருந்தார். ஒரு கண்ணில் ஆட்டுக்கண் பொருத்தியிருக்கும். பார்த்தாலே கஷ்டப்படுகிறவர் என்று தெரியும். அவருக்கும் இந்தக் காவாலளிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இவர் டிப்டாப் ஆக இருந்தார். அவன் மட்டும் முன்னேறவில்லை. காவலாளிகளும் முன்னேறி இருந்தனர்.

ஸ்வாமிஜியைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லி கார் நம்பர், செல் போன் நம்பர் இரண்டையும் கொடுத்து விட்டு,வண்டியை நகர்த்தினான். இப்போதிருக்கும் ஸ்வாமிஜியின் பெயர் கூடத் தெரியாது. அந்தக் காலத்தில் சோமானந்தாஜி முக்கியப் பொறுப்பில் இருந்தார். ஒரு முறை அவருக்குப் பல்வலி வந்து அவஸ்தையில் வராண்டாவில் அமர்ந்திருந்தார். அவனுக்கு அப்போது தோன்றியது லௌகிக வாழ்க்கையைத் துறந்துவிட்டால் கூட உடலில் மற்ற வலிகளை அனுபவிக்க வேண்டும். புத்தரும் வயிற்று வலியால் இறந்தார். யார் யாரெல்லாம் இருக்க மாட்டார்கள் என்று யோசித்துக் கொண்டே காரை ஓட்டினான். மெயின் ரோட்டிலிருந்து, முதல் கட்டிடம் வரை சுமார் நூற்றைம்பது மீட்டர் வரை இருபுறமும் மரங்கள் நிழல் கொடுத்துக் கொண்டிருந்தன. அந்த இடம் அப்படி ஒன்றும் வெய்யில் கொழுத்தும் இடம் அல்ல. ஆனாலும் இத்தனை வருடங்களாக மரங்களை வெட்டிவிட்டுக் கட்டிடங்கள் கட்டாமல் இருக்கிறார்களே என்று மகிழ்ந்தான்.

பெரிய ஆலமரத்தடி இருந்த இடத்தில் இப்போது ஒரு புங்கை மரம் இருந்தது. அந்த ஆலமரத்தடியில் ஐஸ்விற்பவன், பேனா விற்பவனிடம் தேவையானதை வாங்கியதுண்டு. ஒவ்வொரு வாரமும் தவறாமல் வரும்

பாலைஸ்காரனைப் பார்ப்பதற்கென்றே அவன் அந்த இடம்வரை வருவான். ஆறு வருடங்களில் பாலைஸ் சாப்பிட்டது ஓரிரு முறைதான். அதுவும் யாராவது வாங்கிக் கொடுத்தால் உண்டு. இப்போது எத்தனை பாலைஸ் வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் ஆசை இல்லை. பதினொன்றாம் வகுப்புச் சான்றிதழை வாங்க வந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பக் கிளம்பி நடந்து வரும்போதுதான் பார்த்தான். அந்த ஆலமரத்தைக் காணவில்லை. அந்த இடத்தில் கொஞ்ச நேரம் நின்றிருந்தான். நெஞ்சுக்குள்ளிருந்து ஏதோ ஒரு குமிழ் எழுந்து தொண்டையை அடைத்தது. கண்கள் கலங்கின. அந்த இடத்தைப் பார்ப்பது அதுதான் கடைசித் தடவை என்று உள்ளுணர்வு. ஏதோ ஒன்று மாறிவிட்டது. பள்ளியை விட்டு, ஹாஸ்டலை விட்டுச் செல்லும் அந்தத் தருணம் கல்லெழுத்துப் போல் அவன் மனதில் பதிந்துவிட்டது. அதற்கப்புறம் நாற்பது ஆண்டுகள் ஓடிவிட்டன.

நாற்சந்தி வந்துவிட்டது. அடுத்து பள்ளியும் ஹாஸ்டலும். திடீரென்று மூளையும் சிந்தனையும் நின்றுவிட்டன. ‘எதைத் தேடி வந்தோம்?’’ என்று புரியவில்லை. அதுவரை வர வேண்டும் என்று தோன்றியதால் அங்கே வந்தான். அதன் வடக்குப் பகுதியில் இருந்த கெஸ்ட் ஹவுஸ், கொஞ்சம் மேக்கப் மாறியிருந்தாலும், கட்டிடம் அப்படியே இருந்தது. அறுபது வருடங்களாக. பதினொன்றாம் வகுப்புத் தேர்வுகளுக்கு முன்னால் அங்கே விளக்குப் போட்டு இரவுகளில் பதினொன்று பன்னிரண்டு வரை படித்தது உண்டு. படிப்பதாகப் பாவனை பண்ணிக்கொண்டு விளையாண்டதும் உண்டு. தேர்வுகள் நடந்த காலத்தில் ஓரிரவில் நடந்தது ஞாபகம் வந்தது. அவனுடைய கிளாஸ்மேட்டாக இருந்து, பத்தாம் வகுப்பில் பெயிலாகிப் போன சிவசுப்பிரமணியன், சுவரில் சாய்ந்து, கால்களைக் குறுக்கி மேலே தூக்கிக் கொண்டே தூங்கிவிட்டான். சாந்தகுமாரும் இவனும் சேர்ந்து திட்டமிட்டு எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு, கும்மிருளில் சிவாவைப் பயமுறுத்த வேண்டுமென்று, கல்லெறிந்து அவனை எழுப்பிவிட்டார்கள். அவன் எழுந்து பயந்து போய் விறுவிறென்று ஹாஸ்டல் பக்கம் ஓடிய போது பின்னாலேயே ஓடினர். இவர்களைப் பார்த்ததும் அவன் கோபத்தில் ‘கண்டமானக்கி’த் திட்டியது ஞாபகம் வந்தது.

தினமும் காலை பள்ளி தொடங்குமுன் பிரேயர் நடக்கும் இடத்தில் காரை நிறுத்தினான். சுற்றிலும் அமைதி வெளிச்சத்தைப் போர்த்துக்கொண்டிருந்தது. ஏழாம் வகுப்பின் அறையிலிருந்து, ஆசிரியர் குரல் மிகச் சன்னமாக வந்து கொண்டிருந்தது. அதிலிருந்து இடது பக்கம இருந்த ஊஞ்சல்களைப் பார்த்தான். அதற்குப் பின்னாலிருந்த நூலகம் திறந்திருந்தது. அதுவும் இடம் மாறவில்லை. காரிலிருந்து இறங்கிக் கொஞ்ச நேரம் நின்று சுற்றும் முற்றும் பார்த்தான். பாடம் கற்பித்த பல ஆசிரியர்களில் அவனுக்குப் பிடித்த அண்ணாமலை அண்ணா திடீரென்று முன்னால் வந்து நிற்கக் கூடும். கடந்த காலத்திலிருந்து வேறு யாராவது கூடத் வரலாம். அவர் அவனை ஞாபகம் வைத்திருப்பாரா? கண்ணதாசன் கவிதைப் புத்தகத்தில் ‘கவிஞர் இரால்’ என்று புதிய பெயரைச் சூட்டி எழுதிய அவர் கையெழுத்து நினைவில் வந்தது. அந்தப் புத்தகத்தை வீட்டிலே பத்திரமாக வைத்திருந்தான். வீட்டில் அவனில்லாத பல வருடங்களில் அதுவும் காணாமல் போய்விட்டது.

தொடக்கத்தில் பள்ளித் தோழர்கள் இரண்டு மூன்று பேர்களுடன் கவிதைக் கடிதல்கள், கதைக் கடிதங்கள் எழுதித் தொடர்பு வைத்திருந்தான். இரண்டு மூன்று வருடங்களில் நான்கைந்து வீடுகள் மாறி, இன்னும் என்னென்னவோ நடந்து தொடர்பற்றுப் போய்விட்டது. நண்பர்களின் ஊர்ப்பெயர்கள் மட்டும் ஞாபகம் இருந்தன. மீண்டும் தேட முடியவில்லை. அவனுக்கு வேலை கிடைத்து நகரத்துக்குப் போய் வாழ்வின் சிலந்தி வலைகளில் சிக்கிக் கொண்டான்.

பள்ளியில் ‘உதவிப் பிரதமராகப்’ அவன் கவிதை வாசித்துப் பதவியேற்ற இடம் இது. பத்தாங்கிளாஸ் பையன்களுக்கும் இவன் கிளாஸ் பையன்களுக்கும் வந்த தகராறில், அவன் யாரையும் அடிக்காத போதும், அசெம்பிளியில் முதல் ஆளாக மன்னிப்புக் கேட்டதும் நினைவில் வந்தது. நினைவுகளிலிருந்து விடுபட்டு, ஸ்வாமிஜியின் அலுவலக அறையை நோக்கி நடந்தான். அவர் யாரோ? எப்படி எதிர்கொள்வாரோ? நன்கொடை கேட்பாரோ? அதிகம் எதிர்பார்ப்பாரோ? அலுவலகத்தின் முன்னால் நின்றான். ஓடுகள் போட்ட கட்டிடம், கான்கிரீட்டாக மாறியிருந்தது. விவேகானந்தரின் கம்பீரமான படம் இருந்த இடம் காலியாக இருந்தது. அங்கே ராமர் கல்யாணக் கோலத்தில் இருந்த படம் இருந்தது.

ஸ்வாமிஜியின் அறையை எட்டிப் பார்த்தான். நாற்காலி காலியாக இருந்தது. பதினொன்றாம் வகுப்பு இருந்த இடத்திலிருந்து ஒருவர் பள்ளி அலுவலகத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். வெள்ளைச் சட்டையும் கருப்புப் பேண்டும் போட்டிருந்தார். அந்தக் காலத்தில் கதர்ச் சட்டையும் வேட்டியும்தான் அணியவேண்டும். மாணவர்களும் கதர்ச் சட்டை கதர் டிரௌசர். இத்தனை வருடங்களில் காந்தி காணாமல் போயிருக்க வேண்டும். அவர் இவனைப் பார்த்தும் கேட்டார் ‘ஸ்வாமிஜியைப் பாக்கணுமா? வெளியூர் போயிருக்கார். வர இரண்டு நாளாகும்’. அவருக்கு அருகில் நடந்து போனான். அவர் நின்றார். காலுக்கடியில் மணல் அழுத்தியது. எட்டுவைக்க கொஞ்சம் பிசகியது. ‘அண்ணாமலை அண்ணா இருந்தாங்களே அவங்களப் பாக்க வந்தேன்’. அவரா? அவரைக் கேள்விப்பட்டிருக்கேன். இரண்டு மூணுதடவை ஆஃபீசுக்கு வந்திருக்கார் பாத்திருக்கேன். நான் ஜாயின் பண்றதுக்கு முன்னாடியே ரிடையர் ஆய்ட்டார். ஏன் என்ன விஷயம்?’

‘ஒண்ணும் இல்ல சும்மா பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன். நானும் பழைய ஸ்டூடண்ட் தான். 68-74 ல படிச்சேன்’.

‘ஓ பழைய மாணவரா? வாங்க வாங்க!’ என்று சொல்லிக் கொண்டே நடக்கத் தொடங்கினார்.

‘அஞ்சுவருஷம் இருக்கும். அண்ணாமலை அண்ணா இறந்துவிட்டார்’. அவனுக்குத் திக்கென்றது. நின்றுவிட்டான். அந்த ஒரே நொடியில் அங்கே இருந்த ஏற்கனவே அவன் அறிந்திருந்த எல்லா இடங்களும், பொருட்களும் வெற்றிடமாகப் போய்விட்டன. எதுவுமே தொடர்பற்ற, தனிமையை உணர்ந்தான். நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து அவனை இன்ஸ்பையர் பண்ணியவருக்கு நேரடியாக வணக்கம் செலுத்த முடியவில்லை. இத்தனை துயரங்களிலும், சின்னச் சின்ன வெற்றிகளிலும் எல்லாவற்றையும் தாண்டி நினைவில் நின்ற முகம், வெறும் பெயராகிவிட்டது.

அவனுடன் பேசிய மனிதர், அலுவலகத்திற்குள் நுழையும் நொடியில் திரும்பிப் பார்த்தார். அவன் வேறெங்கோ திசையில் நடப்பதைப் பார்த்துவிட்டு உள்ளே போய்விட்டார்.

‘ஒரு வேகத்தில் கிளம்பி வந்துவிட்டேன், நாற்பது வருடங்களுக்கு முன்னால் நாற்பது ஐம்பது வயதிலிருந்த ஆசிரியர், இன்னும் உயிரோடிருப்பார் என்று கற்பனை செய்வது முட்டாள்த்தனம்’ என்று நினைத்தான். நாற்பது வருடங்களுக்கு மேலாக, இன்னும் வாழும் காலம் வரையிலும் ஒருவரை நினைக்க முடியும் என்றால்…

அவன் போன்ற படிப்பில் சுமாராக இருந்தவனுக்கு பயந்தாங்கொள்ளிக்கு, கவிதை கதை, நேர்மை, நீதி என்று இத்தனை வருடங்களாக எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்து, மனநிறைவில்லாத ஒருவனுக்கு, வீரமோ, பணமோ, கல்வியோ பெரிதாக இல்லாத அவனுக்கு…அவர் என்னவாக இருந்தார்?

ஒரு புழுவாக இருந்த அவன் மீது நிலா வெளிச்சமாக குளிர்ந்து அணைத்துக் கொண்ட அவருடைய வார்த்தைகள்… அவரைத் தேடிவந்தான். அவரையா? அவரிடமிருந்து எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் அவன் மீது மானசீகமாக வீசத் தொடங்கிய ஒளித்துகள்… எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் இறந்துவிட்ட நட்சத்திரங்களின் ஒளி பூமியின் இன்னும் தெரிந்து கொண்டிருப்பது போல. இன்னும் ஒளிவிடும். மனதில்.

காரை நோக்கி நடந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *