என் பெண்டாட்டி எதிர் வீட்டு வைப்பாட்டி..!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 21, 2025
பார்வையிட்டோர்: 3,118 
 
 

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16

அத்தியாயம் – 10

இரவு முழுக்க போன் செய்த புள்ளி எவன் ? என்று துாக்கம் வராமல் புரட்டி புரட்டி யோசித்த நித்யாவிற்கு அவனாகத்தான் இருக்க வேண்டும்! புரிந்துவிட்டது.

மறுநாள் காலை. சம்பத் அலுவலகம் புறப்பட்டுச் சென்ற அடுத்த சிறிது நேரத்தில் அவள் பங்கஜம் வீட்டில் ஆஜரானாள்.

கணவனை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு குளித்து முடித்து அறையில் புடவைக் கட்டிக்கொண்டு பளிச்சென்று வெளியே வந்த அவளுக்கு நித்யாவைப் பார்த்ததும் ஆச்சரியம்.

“அக்கா! அந்த பொறுக்கி பேரென்ன?” நித்யா முகம் சிவக்க நேரடியாகவே விசயத்திற்கு வந்தாள்.

“எந்த பொறுக்கி?”

“அவன்தான். நேத்திக்கு உங்களைக் கோயில்ல சந்திச்சானே அவன்!”

“அவனுக்கென்ன?”

“பேரைச் சொல்லுங்க ?”

“சூசன்!“

“அவன்கிட்ட என் வீட்டுப் போன் நம்பர் கொடுத்தீங்களா?”

“இல்லியே! ஏன்?”

“என்கிட்ட பொய் சொல்றீங்க. கொடுத்திருக்கீங்க. அவன் ராத்திரி என் வீட்டுக்குப் போன் போட்டான். அவர் எடுத்தார். அவர் யாருன்னு கேட்டு வைச்சுட்டான்!”

“அடப்பாவமே!“ பங்கஜம் வாயைப் பிளந்தாள்.

“அதோட விடாம அடுத்தும் போன் செய்தான். ஆளைக் கண்டுபிடிச்சு போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்திடுவோம்ன்னு சொல்லி நல்லவேளை அவர் என்னையே எடுக்கச் சொன்னார்.”

“அப்புறம்?“

“எடுத்தேன். பாவி இவன்தான் பேசினான். இவரை எப்படி சமாளிக்கிறதுன்னு யோசிச்சு உங்களுக்குத்தான் யாரோ போன் பண்றா எவ அவன்னு பாணத்தை அவர்மேல திருப்பி விட்டேன். ஆள் அரண்டுட்டார். அடுத்து இதைப் பத்தி அவர் பேசக்கூடாதுன்னு நெனைச்சு அதையே ஆதாரமாப் புடிச்சிக்கிட்டு எவ என்ன எனக்குத் துரோகமான்னு பலபடியாய்ப் பேசி அவரைப் புடிச்சேன். ஆள் கப்சிப். எதுக்கு அவன்கிட்ட என் போன் நம்பரைக் கொடுத்தீங்க?” சீறினாள்.

“நான் இத்தினி மணிக்கு வர்றேன்னு உன் கிட்டே போன் போட்டு சொல்றேன்னு கேட்டாள் கொடுத்தேன்.” பங்கஜம் நடந்த உண்மையைச் சொன்னாள்.

“விசயத்தை என்கிட்ட சொல்லி இருந்தால் நானே எடுத்து சமாளிச்சிருப்பேன்!“ நித்யா ஆதங்கப்பட்டாள்.

“மறந்துட்டேன்.” என்று மன்னிப்புக் கேட்ட பங்கஜம் “உன்கிட்ட பேசினபிறகு அடுத்து அவன் எனக்குப் போன் செய்து விசயத்தைச் சொன்னான். காரியத்தைக் கெடுத்தேன்னு நானும் அவனைப் பேசி வைச்சுட்டேன்.” என்றாள்.

“அப்போ அவன் இன்னைக்கு வரமாட்டான்?!” நித்யா கேள்விக்குறியாக பங்கஜத்தை ஏறிட்டாள்.

“சரியா பதினோரு மணிக்கெல்லாம் வருவான்!”

“அக்கா!“ நித்யா முகத்தில் அதிர்ச்சி காட்டினாள்.

“அதான் சொல்லி சமாளிச்சுட்டீல்லே. ஏன் வீணா பயந்து அலர்றே?“

“இல்லேக்கா. அவர் மனசுல சந்தேகம் வந்திடுமோன்னு பயமா இருக்கு.”

“அதெல்லாம் வராது. அதான் திருப்பி அடிச்சுட்டியில்லே. எவ அவங்குற மண்டையிடியிலேயெ கெடப்பான். பயப்படாதே!” தைரியம் சொன்னாள்.


அவள் சொன்னது சரியாக இருந்தது, சம்பத்தும் இரவு முழுக்க தன்னை இப்படி இக்கட்டில் மாட்டிவிட்டவள் எவள் என்ற யோசனையிலேயே பழியாகக் கிடந்தான். அலுவலகத்திற்கு வந்த பிறகும் அது ஓயவில்லை. வேலை ஓடவில்லை. சேலத்தில் பார்த்த பள்ளித் தோழி மல்லிகா விசாரித்திருக்கலாம் தோன்றியது. உடனே தன் மேசை டிராயரை உருவி அதிலிருந்து டெலிபோன் டைரக்டரியை எடுத்தான். சேலம் பகுதியைப் பிரித்து காந்திநகரை எடுத்து …எப்படி விசாரிக்க ? ஒரு நிமிடம் யோசித்தான். மல்லிகா பெயர் உள்ள எண்களைப் பிடித்தான். அந்த பெயரில் நான்கு எண்கள் இருந்தது, போன் செய்யலாமா என்று யோசிக்கும் முன் தொலைபேசி மல்லிகா பெயரில் இருக்கும் என்பது என்ன நிச்சயம். கணவன் பெயரில் இருந்தால் ? கொஞ்ச நேரம் தடுமாற்றினான். அடித்துப் பார்க்கலாம் துணிந்து முதல் எண்களை அழுத்தினான்.

‘ஹலோ! இது அருப்புக்கோட்டை ஆனதாண்டவபுரம் மல்லிகா வீடுங்களா?” கேட்டான்.

“இல்லீங்களே இது சேலம்!” எதிர்முனையில் பெண் அடுத்து பேசாமல் வைத்தாள். அடுத்த இரண்டு இடங்களுக்கும் இதே போல போன் செய்து கேட்டான். “சாரி ! ராங்க் நம்பர்!” பதில் வந்தது. கடைசியாக எஞ்சி இருக்கும் அந்த ஒரே ஒரு நம்பரையும் அழுத்தினான்.

மணி அடித்தது. ஆனால் யாரும் எடுக்கவில்லை. மீண்டும் முயற்சித்தான்.

அலுவலக போன்லேயே வீட்டு வேலையெல்லாம் முடிச்சுடாலாம்ன்னு நெனப்பா?” கேள்வி துாக்கிவாரிப் போட்டது. நிமிர்ந்தான். எதிரில் அலுவலக மேலாளர்.

“அடக்கி வாசிங்க சார். அத்தியாவசியம் அவசரம் அலுவலக வேலைக்குத்தான் போன். உங்க இஷ்டத்துக்குச் செய்ய இல்லே. இப்படி உங்க இஷ்டத்துக்கு எடுத்து பேசினா நிர்வாகம் பூட்டிடும். அடுத்து நம்ம அவசரத்துக்குத் தொட முடியாது.” எச்சரித்துவிட்டுச் சென்றார். மேலாளர் எல்லார் முன்னிலையிலும் கண்டித்தது அவமானமாக இருந்தது. எழுந்தான்.

பாலாவிற்குச் சம்பத்தைப் பார்க்கப் பாவமாக இருந்தது,

“உனக்கு என்ன பிரச்சனைடா? காலையிலேர்ந்து முகம் சரி இல்லே.” வந்து அக்கரையாய் விசாரித்தான்.

சம்பத்திற்கு விசயத்தை இவனிடம் பகிர்ந்து கொள்ள தயக்கமாய் இருந்தது.

“என்ன விசயமாய் இருந்தாலும் கூச்சப்படாம சொல்லு. மனம் விட்டு விசயத்தை மத்தவங்ககிட்ட பகிர்ந்து கிட்டாத்தான் உன் மனஅழுத்தம் குறையும். உனக்குத் தெரியாத யோசனை மத்தவங்களுக்குத் தோன்றி பிரச்சனைக்கு வழியும் கிடைக்கும்.” என்றான்.

‘நியாயம்!’ சம்பத்திற்குள் தோன்றியது. “வா” அவனை வெளியில் அழைத்து வந்து “எவளோ வீட்டுக்குப் போன் செய்து என்னை விசாரிச்சிருக்கா. வீட்டுக்காரி சந்தேகப்படுறா!” உடைத்தான்.

பொறுமையாய்க் கேட்ட பாலா “இதெல்லம் பெரிய விசயமே இல்லே. எந்த திமிரெடுத்த கழுதையாவது விளையாட்டாய் செய்திருக்கும். துாக்கிப் போடு.” தைரியம் சொன்னான்.

“இல்லைடா. என் வீட்டுக்காரி நம்பலை!“ தழுதழுத்தான்.

“நீ நம்புறாபோல நடந்துக்கலை. திருமணமான புதுசுல மனைவி தன்னைப்பத்தி பெரிசா நினைக்கட்டும்ன்னு நெனைச்சு எல்லா ஆம்பளைங்களும் சொல்றாப்போல எனக்குப் படிக்கும் போது அவள் மேல் காதல் இவள் மேல் காதல்ன்னு பீலா விட்டிருப்பே. அது இன்னைக்குப் பாம்பாய் கொத்துது.” குற்றம் சாட்டினான்.

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லே. அந்த விளையாட்டுப் பேச்செல்லாம் அலுவலகத்தோட சரி. வீட்டுக்குப் போய் எந்த பொம்பளை விசயத்தையும் வாயைத் திறக்கிறதில்லே.” என்றான் சம்பத்.

“கொஞ்ச நாள் எதுவும் கண்டுக்காம பொறுமையாய் இரு. எல்லாம் தானா சரியாய்ப் போயிடும். இன்னைக்கு உனக்கு மூடு சரி இல்லே. வீட்டுக்குப் போய் நல்லா ஓய்வெடுத்துட்டு நாளைக்கு வா.” என்றான் பாலா.

சம்பத்திற்கு அப்படி செய்யத் தோன்றியது.

மணியைப் பார்த்தான். 10.30

விடுப்பு எழுதிக் கொண்டு நேராக மேலாளரிடம் சென்றான்.

“நியாயத்தைச் சொன்னா கோபம்! இப்படி விடுப்பு எடுத்துக்கிட்டுப் போனா அலுவலக வேலையெல்லாம் யார் பார்க்கிறது?” கடுப்படித்தார்.

“இல்லே சார். உண்மையிலேயே தலைவலி!” தழைந்தான்.

“உண்மையாய் இருந்தா சந்தோசம்”. அவர் வேண்டா வெறுப்பாக கையெழுத்துப் போட்டு திருப்பினார்.

அதை வாங்கி உரிய இடத்தில் ஒப்படைத்துவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான்.

நேராக வீட்டிற்குச் செல்லலாமா இல்லை வேறு எங்காவது சென்று மனப்புழுக்கத்தைக் கொஞ்சம் ஆற்றிக் கொண்டு போகலாமா என்று மனசுக்குள் சின்ன தடுமாற்றம். வந்தது.. ஒரு முடிவிற்கு வந்து வண்டியை நேராய் வீடு நோக்கி விட்டான்.


குளித்து முடித்து சீவி சிங்காரித்து சூசனை எதிர்பார்த்து தயாராக இருந்த நித்யாவிற்கு வாசலில் கணவனைப் பார்த்ததும் சொரக்கென்றது.

எதற்கு வருகிறார்? முகம் கலவரமாகியது.

இந்த நேரத்தில் அவன் வந்துவிடுவான் நினைக்க வயிற்றைக் கலக்கியது,

எப்படி சமாளிக்க?

ஆடிப் போய் “ஏங்க! என்ன ஆச்சு இப்படி சோர்ந்து வர்றீங்க?” சம்பத்தை ஓடிப்போய் வரவேற்றாள்.

“ஒன்னுமில்லே. லேசா தலைவலி.” அவன் நேராக படுக்கை அறைக்குச் சென்று கட்டிலில் படுத்தான்.

மணி பதினொன்று அடித்தது.

நித்யாவிற்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

பங்கஜத்திடம் விசயத்தைச் சொல்லி அவள் வீட்டு வாசலில் உட்கார வைத்து ஆள் வருவதைத் தடுத்து அவனை அப்படியே அவள் வீட்டிற்கு அழைத்து சரி செய்து அனுப்ப வேண்டும். அதுதான் வழி! தோன்ற… வெளியே ஓடி அவள் வீட்டிற்குள் நுழைந்தாள்.

“என்ன நித்யா! இப்படி அரக்கப்பரக்க ஓடிவர்றே?” பங்கஜம் கேட்டாள்.

“ஆபத்து!” என்று ஆரம்பித்து தான் வந்த விசயத்தைச் சொன்னாள். அடுத்து அவள் செய்ய வேண்டிய காரியத்தையும் சொன்னாள். “கவலைப்படாதே! நான் பார்த்துக்கிறேன்.” அவள் தைரியம் சொன்ன பிறகே நித்யாவிற்கு நிம்மதி வந்தது.

“நன்றிக்கா. அப்புறம் நேத்திக்கு நீங்க போன் பண்ணின இடத்துக்கும் போக வேணாம்.”

“சரி. அதையும் நான் பார்த்துக்கிறேன். நீ கவலைப்படாம போ. சம்பத் உன் மேல சந்தேகம் ஏற்படாதவாறு நடந்துக்கோ.”

“சரிக்கா.” திருப்தியுடன் வெளியே வந்த வெளியே வந்த நித்யா.. சூசன் காவலையும் மீறி விசயம் தெரியாமல் தப்பித்தவறி தன் வீட்டிற்குள் நுழைந்துவிடக்கூடாது! என்கிற முன்னெச்சரிக்கையில் வீட்டிற்குள் நுழைந்ததும் தாழ்ப்பாள் போட்டாள்.

“எங்கே நித்யா போய்ட்டு வர்றே?” சம்பத்.

“தலைவலிக்கு என்ன வைத்தியம் செய்யலாம். எப்படி கஷாயம் போடன்னு பக்கத்து வீட்டு அக்காக்கிட்ட கேட்டுத் தெரிஞ்சு வர போனேன்.” பொய் சொன்னாள்.

“சொன்னாங்களா?”

“சொன்னாங்க.”

“எப்படி கஷாயம் போட?“

“இதோ போட்டு வர்றேன்.” நித்யா நித்யா அடுத்துப் பேசாமல் சமையலறைக்குள் நுழைந்தாள். அடுப்பில் வானலியை வைத்து நிமிசத்தில் கஷாயம் தயாரித்து வந்து கணவனிடம் நீட்டினாள். அவனும் ஒரு மிடறு விழுங்க…. அழைப்பு மணி அழைத்தது.

மாமி கோட்டை விட்டுவிட்டாளா? என்று நித்யாவிற்கும், மல்லிகாவா..? என்று சம்பத்திற்கும் கலக்கியது.

அத்தியாயம் – 11

நித்யா நடுக்கத்துடன் திறந்தாள். சம்பத்தும் வாசலை பயத்துடன் பார்த்தான்.

ஆச்சரியம். இன்ப அதிர்ச்சி.

“அம்மா!“ அழைத்தபடி பத்து வயது மகன் அருண் பிரகாசமாக நின்றான்.

பின்னால் தண்டபாணி தாமிரபரணி மாமன் மாமியார்.

“அருண்!” நித்யா அவனைத் தாவி அணைத்துக் கொண்டாள்.

“வாங்க மாமா! வாங்க அத்தை!” அடுத்து இருந்தவர்களையும் வரவேற்றாள்.

எல்லாரும் உள்ளே நுழைந்தார்கள்.

சம்பத்திற்கு உயிர் வந்தது. தலைவலியும் பறந்தது.

“வாசல்ல வண்டி இருக்கே. சம்பத் வீட்டுல இருக்கானாம்மா?“ தண்டபாணி கேட்டுக் கொண்டே வந்து சோபாவில் அமர்ந்தார். “இருக்கேன்ப்பா!” அவன் சொல்லிக்கொண்டே எழுந்து வந்தான்.

அருண் ஓடிப்போய்… “அப்பா!” தந்தையைக் கட்டிக்கொண்டான்.

சம்பத் அவனை அணைத்துக் கொண்டே அவர்கள் முன் கூடத்து சோபாவிற்கு வந்தான்.

“அலுவலகம் விடுப்பா?” தாமிரபரணி மகனை எறிட்டாள்.

“இல்லேம்மா. சின்ன தலைவலி. இப்போதான் வந்தேன்.”

“மாத்திரை போட்டியா?” தாய் பரிவுடன் விசாரித்தாள்.

“போட்டேன்ம்மா. உங்களைப் பார்த்த சந்தோசம் சரியாப் போச்சு.” மகனை மடியில் அமர்த்திக்கொண்டு “என்னப்பா திடீர் விஜயம்?” சம்பத் தந்தையின் அருகில் அமர்ந்தான்.

“எதுவும் விசேசமில்லே. அருணுக்கு அம்மா அப்பாவைப் பார்க்க ஆசை. எங்களுக்கும் உங்களைப் பார்க்க ஆசை. புறப்பட்டு வந்தோம்.”

“தாகத்துக்கு மோர் எடுத்து வர்றேன்!” நித்யா அவர்களை உபசரிக்க பிரிந்து சமையலறையை நோக்கி நடந்தாள்.

“நானும் வர்றேன்!” தாமிரபரணி மருமகளைத் தொடர்ந்தாள். கூடத்தில் தந்தையும் மகனும் பேசிக் கொண்டிருக்க…. அருண் தகப்பன் மடியில் உற்சாகமாக இருந்தான்.

“ஏதாவது விசேசமா நித்யா?” கேட்டு தாமிரபரணி மோர் கலக்கும் மருமகளை உற்றுப் பார்த்தாள்.

“இல்லே அத்தே!” டம்ளர்களில் ஊற்றினாள்.

“வளர்க்கிறதுக்குன்னு ஒன்னு வந்தால் வயிறு தானா திறக்கும்ன்னு சொல்வாங்களே!” தாமிரபரணி தட்டை எடுத்து டம்ளர்களை அடுக்கினாள்.

“அதெல்லாம் மூட நம்பிக்கை அத்தே!” மோர் டம்ளர்கள் அடங்கிய தட்டை எடுத்துக் கொண்டாள்.

“இல்லேம்மா. பல இடத்துல இதுபோல நடந்திருக்கு. சம்பந்தப்பட்டவங்க பெத்தது மேல பாசத்தைக் காட்டுறதா வளர்த்தது மேல பாசத்தைக் காட்டுறதான்னு முழிச்சிருக்காங்க.” தாமிரபரணி மருமகள் பின்னாலேயே வந்தாள்.

“நமக்கு வளர்றதே போதும்த்தே!” சொல்லிக்கொண்டே கூடத்திற்கு வந்த நித்யா “இந்தாங்க மாமா!“ தட்டை நீட்டினாள். அவர் அருண் சம்பத் எடுத்துக் கொண்டார்கள்.

“அப்பா என்னைக்குப் புறப்படுறீங்க?” தண்டபாணியைப் பார்த்துக் கேட்டான் சம்பத்.

“ஏன்?“

“அருணோட நாங்க கடைத்தெரு போகனும். போகலாமா நித்யா?” மனைவியைப் பார்த்து கேட்டான்.

அவளுக்கும் மகனுக்குப் பொருட்கள் வாங்க ஆசை. தலையசைத்தாள்.

தண்டபாணி என்றைக்குமே பெற்றவர்கள் பாசத்தின் முன் குறுக்கே நிற்கமாட்டார்.

“இப்போ புறப்படுங்க. பையனுக்கு ரெண்டு நாள்தான் லீவு. நாங்க நாளைக்குப் புறப்படுறோம்.” என்றார்.

அவர்கள் புறப்பட்டார்கள்.

சம்பத்திற்கு மகனைக் கோட் சூட்டில் பார்க்க ஆசை. வண்டியை ஒரு பெரிய மரத்தடி நிழலில் நிறுத்திவிட்டு எதிரிலுள்ள பிரம்மாண்டமான ஜவுளிக் கடையில் நுழைந்தார்கள். இவர்கள் கேட்டது கிடைக்காமல் திரும்பினார்கள். அடுத்து விமல் ரெடிமேட் கடைக்குள் நுழைந்தார்கள். அது கடை இல்லை. கடல். ஐந்து மாடிக்கட்டிடம். எல்லா இடங்களிலும் விதவிதமான ஆயத்த துணி வகைகள். ஒவ்வொரு பிரிவிலும் சுடிதார், பாவாடை, தாவணி அணிந்த இளம்பெண்கள்.

கோடிக்கணக்கான முதலீடு வரவு செலவு. ஐநுாற்றி ஐம்பது ரூபாயில் நல்லதாக வாங்கி கீழிறங்கினார்கள்.

“அப்பா ஐஸ்கிரீம் !” அருண் எதிரிலுள்ள பெரிய கடையைக் கை காட்டினான்.

“வா நித்யா!“

“நான் வரலை!” மறுத்தாள். அவளுக்கு ஐஸ்கிரீமென்றால் அலர்ஜி. உடனே சளி பிடித்துக் கொள்ளும்.

“சரி. நாங்க போய்ட்டு வர்றோம். நீ இங்கேயே இரு.” சம்பத் தன் கையிலுள்ள பையை அவளிடம் கொடுத்துவிட்டு மகனை அழைத்துக் கொண்டு அருண் கை காட்டிய கடைக்குள் நுழைந்தான்.

நித்யா கையிலுள்ள துணிப்பையை வண்டியில் மாட்டிவிட்டு கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்.

“வணக்கம் மேடம்!”

நிமிர்ந்தாள் எதிரில் இருபத்தைந்து வயது வாலிபன்.

“யார் நீங்க?” துணுக்குற்றுப் புரியாமல் பார்த்தாள்.

“வந்து… வந்து…”

“என்ன வேணும்?”

“என்னைத் தெரியலை?”

“தெரியலை.”

“சூர்யா. உங்க வீட்டுக்கு வந்திருக்கேன். ரெண்டாயிரம் பணம் கொடுத்திருக்கேன்.”

நித்யாவிற்குள் ஞாபகம் வர உதறியது. சம்பத் இருக்கிறான்! நினைவு வர திகிலடித்தது,

“சாரி. மறந்துட்டேன். என்ன வேணும்?” படபடப்பாகக் கேட்டாள்.

“அன்னைக்கு என் கைக்குட்டையை விட்டு வந்துட்டேன்..”

‘அடப்பாவி!‘ உள்ளுக்குள் அலறினாள்.

“எங்கே வைச்சீங்க?” வியர்த்தாள்.

“எங்கே வைச்சேன்னு தெரியலை. உங்க வீட்டுல ரொம்ப வியர்வை துடைச்சேன். அடுத்து வெளியே வந்து ஓட்டல்ல பார்க்கும்போது இல்லே.”

நித்யா எப்போதுமே ஜாக்கிரதை. தினம் ஒரு ஆள் வந்து சென்றாலும் கணவன் கண்ணில் எதுவும் தெரியக்கூடாது என்பதற்காக அவர்கள் சென்ற பிறகு அடுத்த வினாடி எதையாவது விட்டுச் சென்றார்களா ?கவனிப்பாள். இவள் அன்றைக்கும் பார்த்தாள். இருந்ததாய் ஞாபகம் இல்லை.

“காணலையே!” சொன்னாள்.

“காணாது வரை சந்தோசம். ஏன்னா அது உங்க வீட்டுக்காரர் கண்ணுல பட்டு உங்களுக்குப் உங்களுக்குப் பிரச்சனை ஆகிடக்கூடாதேன்னுதான் கேட்டேன். உங்களோட வந்தவர் தான் உங்க கணவரா?” நகராமல் கேட்டான்.

“எப்போ பார்த்தீங்க?”

“நீங்க விமல் இந்த கடைக்குள் நுழையும் போதே பார்த்தேன். தனியே சந்திச்சு விசயம் சொல்லத்தான் அவர் விலகட்டும்ன்னு காத்திருந்தேன். குழந்தை உங்க பையனா?”

இவன் பேச்சைத் தொடரத் தொடர… நித்யாவிற்கு கணவன் கண்ணில் பட்டுவிடுவோம்! பயம்.

“ஆமாம் ” நெளிந்தாள்.

சூர்யா அடுத்து ஏதோ பேசுவதற்கு வாயெடுத்தான் அதற்குள் சம்பத்தும் அருணும் ஐஸ்கிரீம் பார்லரை விட்டு வெளியே வந்தார்கள். கவனித்தவன் “சரி. அவுங்க வர்றாங்க. நான் வர்றேன்!” சொல்லி அவசரமாக அந்த இடத்தைவிட்டு அகன்றான்.

நித்யாவிற்கு சம்பத் இவனைப் பார்த்து விட்டானோ சந்தேகம் வர பதற்றம் தொற்றியது.

“யார் நித்யா அது?” சம்பத் பார்த்தும் விட்டான். கேட்டும் விட்டான்.

“தெரிஞ்சவர்!“

சம்பத் அடுத்து ஏதுவும் கேட்டகவில்லை.

‘அன்றைக்குக் கைக்குட்டை, சிகரெட், போன், இவன்…!’ மனசுக்குள் குறித்துக்கொண்டான்.

“ஓ.கே. போகலாம்.” தன் ஹீரோ ஹோண்டாவைத் தொட்டு உசுப்பினான்.

தன் வீட்டில் விட்ட அவன் கைக்குட்டை எங்கே போனது? நித்யாவிற்குள் யோசனை ஓடியது.

அப்பா அம்மாவுடன் வண்டியில் செல்வது அருணுக்கு உற்சாகமாக இருந்தது, வழியில் எல்லாருக்கும் கை காட்டிக் கொண்டு வந்தான்.

வீட்டிற்கு வந்ததும் “தாத்தா! எனக்குக் கோட் சூட்!” பையை எடுத்துக் கொண்டு வந்து தண்டபாணி தாமிரபரணியிடம் முதலில் காட்டினான்.

அவர்கள் அதைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே.. நித்யா மாமன் மாமிக்குப் பலகாரம் செய்ய அடுப்படிக்குள் நுழைந்தாள். சம்பத் அறைக்குச் சென்றான்.

அருணின் சட்டையைப் பார்த்து முடித்த தாமிரபரணி அவர்களை விட்டு விலகி மருமகள் இருக்கும் இடத்திற்குச் சென்றாள். “நித்யா!“ அழைத்தாள்.

பஜ்ஜிக்கு வாழைக்காய் சீவிக்கொண்டிருந்த அவள் “என்ன அத்தே!“ திரும்பினாள்.

“போன மாசம் நீ அந்த அனாதை ஆசிரமத்துக்குப் போயிருந்தீயா?” குசுகுசுப்பாகக் கேட்டாள்.

“எந்த அனாதை ஆசிரமம் அத்தே?” துணுக்குற்றுக் கேட்டாள்.

“அதான் நம்ம அருணை எடுத்துவந்த ஆரோக்கியா அனாதை ஆசிரமம்.”

“இல்லியே?!” பொய் சொன்னாள். மேலுதடு வேர்த்தது.

“அங்கே உன்னையும் இன்னொரு பொம்மனாட்டியையும் பார்த்ததா சொன்னாங்க.”

“யார்?”

“கிராமத்துல நம்ம வீட்டுக்கும் மூணாவது தெரு.”

‘மாட்டிக்கொண்டோம்!’ என்பதற்கடையாளமாய் நித்யாவிற்குள் சின்ன உதறல் வந்தது,

“அவுங்களுக்கும் நம்மைப் போல புள்ளை இல்லே. நம்மை எங்கே எடுத்தோம்ன்னு விசாரிச்சுப் போனாங்க.. அப்போ உங்களைப் பார்த்தாங்களாம். உனக்கு அவுங்களை அடையாளம் தெரியலை. பேசலையாம்!” தாமிரபரணி விபரம் சொன்னாள்.

அன்றைக்கு எவளோ ஒரு பெண்மணி இவளை உற்று உற்று பார்த்தாள். பார்த்த ஞாபகம் ஆள் தெரியவில்லை. பேசவில்லை. என்ன சொல்லி சமாளிக்க? நித்யாவிற்கள் யோசனை ஓடியது.

“நல்ல கொழுக் மொழுக்குன்னு ஒரு பொம்பளைப் புள்ளையைப் புடிச்சு வந்திருக்காங்க. குழந்தைப் பார்க்க அழகா இருக்கு. எனக்கே போய் அது போல இன்னொன்னைத் துாக்கி வந்துடலாம் போல தோணுது. சம்பத்தான் ஒன்னே போதும்ன்னு பிடிவாதமாய் இருக்கானே. அதனால அந்த ஆசையை அடக்கிக்கிட்டேன். நீ எதுக்குப் போனே?”

“அருணுக்குப் பொறந்த நாள். அங்கே ஸ்வீட் கொடுக்கப் போனேன். குழந்தைக்குத் தெரிஞ்சா மனசு பாதிக்கப்படும்ன்னு உங்க மகனுக்குக்கூட தெரியாது. சொல்லிடாதீங்க.” கெஞ்சினாள்.

“இப்படித்தான் இருக்கும்ன்னு நெனைச்சேன். அதான் தனியா கேட்டேன்.” தாமிரபரணி திருப்தியாய் அகன்றாள்.

சம்பத் இவர்கள் பேச்சைக் காதில் வாங்கிக் கொண்டு பாத்ரூம் சென்றான்!

அத்தியாயம் – 12

மாலை ஐந்து மணிக்கு மேல் கோப்புகளில் கையெழுத்துப் போட்டு நிமிர்ந்த அம்பலவாணனுக்கு எதிரிலுள்ள காலண்டர் தேதி 25 உதைத்தது,

31ந் தேதிக்குள் தன் வருமானவரி கணக்கு ஒப்படைக்க வேண்டும்! பகீரென்றது. தன் மேசை டிராயரைத் திறந்தார். பத்திரப் படுத்தி வைத்திருந்த அதற்கான கோப்புகளை எடுத்தார். பிரித்துப் பார்க்க எல்லாம் சரியாக இருந்தது, விண்ணப்பங்கள் இல்லை.

மணி அழுத்தினார்.

“சார்!“ பியூன் பொன்னுசாமி வந்து எதிரில் நின்றான்.

“சூப்பிரண்டுகிட்ட போய் நான் வருமான வரி விண்ணப்பம் கேட்டேன்னு வாங்கி வா.” அனுப்பினார்.

அவன் போய் ஐந்து நிமிடத்தில் இவர் சொன்னதைக் கொண்டு வந்தான். வாங்கி தன் கோப்புகளில் வைத்தவருக்குள் அடுத்து அதற்கு தேவையான வருமான வரி அடையாள அட்டை இல்லை உறைத்தது. மேசை டிராயரைத் திறந்து தேடினார். இல்லை.

எங்கே போச்சு!? அதன் கீழுள்ள அடுத்தடுத்த டிராயர்களில் தேடினார். இல்லை. எங்கே? நெற்றியில் சுருக்கம் விழுந்தது. வெளியில் எடுத்துச் செல்ல வேண்டிய வேலை இல்லை? மூளையைக் கசக்கினார். அலுவலகத்தை விட்டால் வேறு வைக்க வேண்டிய இடம் வீடு ! பட்டது. எடுத்து வைத்த கோப்புகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். தன் வீட்டு முன் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தார். பங்கஜம் அடுப்படியில் ஏதோ வேலையாக இருந்தாள். அறைக்குள் நுழைந்து நுழைந்து அலமாரியை அலசினார். இல்லை. இங்கேயும் இல்லை எங்கே? அவரையும் அறியாமல் மனசுக்குள் உதைப்பு வந்தது. வீட்டில் எங்காவது தவறுதலாக வைக்க பங்கஜம் எடுத்து வைத்திருப்பாளோ ?! சந்தேகம் துளிர்த்தது, அடுத்துள்ள அவள் அலமாரியைப் பார்த்தாள். சாவி அதிலேயே தொங்கியது,

ஒரு சுமங்கலி பூசைக்குச் சென்று திரும்பிய பங்கஜம் இவர் வருகைக்குச் சிறிது நேரத்திற்கு முன் தான் வீடு திரும்பி இருந்தாள். அணிந்து சென்ற நெக்லசைக் கழற்றி அலமாரியில் வைத்துவிட்டு பூ ட்டக்கூட நேரமில்லாமல் கணவனுக்கு மாலை டிபன் சுண்டல் செய்ய அடுப்படிக்குச் சென்றிருந்தாள்.

அம்பலவாணன் அலமாரியைத் திறந்தார். மேல் தட்டு அடுத்து இரண்டு தட்டுகளில் பட்டு, நைலெக்ஸ், நுால் என்று வரிசைக்கிரமமாகப் புடவைகள். நான்காவது தட்டில் விதவிதமான ஜாக்கெட்டுகள், பெட்டிக்கோட், பிராக்கள்.

‘ஒரு ஜவுளிக்கடை அலமாரி போல் ஒரு பொம்மனாட்டிக்கு இத்தனைப் புடவைகளா?’ அம்பலவாணன் மனைவியிடம் எப்போதோ கேட்ட ஞாபகம்.

“தீபாவளி, பொறந்த நாள், திருமணநாள்ன்னு ஒரு வருசத்துக்கு மூணு. மூணு. இது இல்லாம சுமங்கலி பூ சைக்குன்னு தனி புடவை. நமக்குத் திருமணமாகி 25 வருசத்துல ஒரு வருசத்துக்கு நாலு புடவைன்னாலும் மொத்தம் நுாறு புடவை. இருக்கேன்னு புதுசு எடுத்து உடுத்திக்காமலும் இருக்க முடியாது, அடுத்து பொம்மனாட்டிங்களுக்கு புடவை ஜாக்கெட்டெல்லாம் அதிகம் கிழியாது, இதுதான் அலமாரி பொங்கி வழியறதுக்குக் காரணம்.” என்றாள்.

இவர் கேட்டதும் சரி. அவள் சொன்னதும் சரி.

புடவை சந்து பொந்துகளிலெல்லாம் கை விட்டு தேடினார். இல்லை. கடைசியாக கடைசியாக நுால் புடவைகளை ஒவ்வொன்றாகத் துாக்கிப் பார்க்கும்போது பத்து கவர்களை ஒன்றாக சேர்த்து ரப்பர் பேண்ட் போட்ட கட்டு ஒன்று இவர் காலடியில் விழுந்தது, அதன் கூடவே வருமானவரி கார்டும் சேர்ந்து விழுந்தது, கார்டை எடுத்தவர் கட்டையும் எடுத்தார். எல்லா கவர்களும் வாய்ப்பகுதி பிரிக்கப்பட்டிருந்தது, பெறுநர் நித்யா என்று பெயர் எழுதி பக்கத்து வீட்டு விலாசம். அட்சரம் பிசகாமல் சுத்தமாக இருந்தது, விடுநர் விலாசம் ஆரோக்கியா அனாதை இல்லம் என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. பக்கத்து வீட்டுக்காரி கடிதம் இவள் ஏன் பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும்? அப்படியென்ன ரகசியம்? ஒரு கவரின் உடைக்கப்பட்ட வாய்ப்பகுதியைப் பிரித்தார்.

பங்கஜம் புயலாய் வந்தாள்.

“என் அலமாரியில உங்களுக்கென்ன வேலை?” பேயாய்ப் பிடுங்கினாள். மொத்த கவர் கட்டும் அவள் கைக்குச் சென்றது.

அம்பலவாணன் இதை எதிர்ப்பார்க்கவே இல்லை. திகைத்தார்.

“இல்லை பங்கஜம்… என் வருமானவரி கார்டு?“ தடுமாறினார்.

“என்ன இல்லை… நொல்லை. எதுவாய் இருந்தாலும் என்னைக் கேட்டுத் தொட்டிருக்கனும்.!” சீறியவள் “நகருங்க அந்தண்டை!” சிடுசிடுத்து அலமாரிக்குள் கட்டை வைத்து சாத்தி பூட்டி சாவியை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு வேகமாக சமையலறையை நோக்கி விரைந்தாள்.

அம்பலவாணனுக்கு ஒரு வினாடி என்ன செய்வதென்று புரியவில்லை. அதே சமயம் அடுத்தவள் கடிதக்கட்டு இவளிடம் இருக்க வேண்டிய அவசியம் ? உறுத்தியது, மெல்ல சமையலறையை நோக்கி சென்றார்.

“பங்கஜம் அது என்ன கடிதம்?“ கேட்டார்.

“அது உங்களுக்குத் தேவை இல்லாத விசயம்!” இன்னும் அவளுக்குக் கோபம் மாறவில்லை.

“சரி. அது என்ன அடுத்தவளுக்கு வந்த கடிதம் உன்கிட்ட?“ இவரும் விடவில்லை.

“பொம்மனாட்டிக்குள்ள ஆயிரத்தெட்டு ரகசியம் இருக்கும். நீங்க தேடியது கிடைச்சுதா?”

“கிடைச்சுது…”

“போய் வேலையைப் பாருங்க. நான் சமைக்கனும்.” சாதம் வடித்தாள்.

அவர் நகர்ந்தார்.

‘இப்படி அள்ளிப்போட்டு பூட்டிச் செல்லும் அளவிற்கு அதிலென்ன ரகசியம்?’ உறுத்தியது.

பெண்டாட்டியைப் பற்றி எப்படி எப்படியோ கேள்வி பட்டவருக்கு.. இனி அப்படி விடக்கூடாது! என்ற முடிவிற்கும் வந்தார். என்ன செய்யலாமென்றும் யோசித்தார்.


மறுநாள் காலை. பங்கஜம் தன் கணவர் அலுவலகத்திற்கு வீட்டைவிட்டு கிளம்புவார் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அம்பலவாணன் புறப்பட்டுச் சென்ற அடுத்த வினாடி நித்யா வீட்டு மேல் கண் வைத்தாள்.

8.45க்குச் சம்பத்தும் தன் ஹீரோ ஹோண்டாவில் புறப்பட்டு அலுவலகம் சென்றான்.

பங்கஜம் வில்லிலிருந்து விடுபட்ட அம்பு போல புறப்பட்டு தன் வீட்டை விட்டு வெளியே வந்து கதவை இழுத்துச் சாத்தி பூட்டிக்கொண்டு பக்கத்து வீட்டிற்குள் நுழைந்தாள்.

நித்யா சோபா துணியை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தாள்.

“நித்யா!“

“என்னக்கா?”

“அப்படியே உட்காரு ஒரு அவசர சேதி.”

அவள் முகம் கலவரமானது.

“நேத்து என் வீட்டுக்காரர் கையில நம்ம கடிதம் சிக்கிடுச்சு!” கூறி அவள் அருகில் அமர்ந்தாள்.

“என்னக்கா சொல்றே?!” இவள் அதிர்ச்சியாய் அவளைப் பார்த்தாள்.

“ஆமாம்டி. அவர் என் அலமாரியில எதையோ தேடப் போய் எதிர்பாராதவிதமாய் அவர் கையில சிக்கிடுச்சு. ஆள் பிரிச்சு படிக்கிறதுக்குள்ளே நான் பாய்ஞ்சு பிடுங்கி அலமாரியில் போட்டு அடைச்சுட்டேன்.”

‘அப்பா!‘ நிம்மதி மூச்சு விட்ட நித்யா “அவர் அது என்னன்னு கேட்கலையா?” கேட்டாள்.

“கேட்டார். அது பொம்பளைங்க சமாச்சாரம். நீங்க ஒன்னும் கண்டுக்க வேண்டியதில்லே போங்கன்னு சொல்லி வாயை அடைச்சுட்டேன்.!”

நித்யாவிற்குள் இப்போது திருப்தியாக இருந்தது.

“நானும் உங்ககிட்ட ஒரு சேதி சொல்லனும்“என்றாள்.

“என்ன?”

“இனிமே நாமளும் கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருக்கனும். முந்தா நேத்து நானும் அவரும் அருணை அழைச்சுக்கிட்டு கடைத்தெருவுக்குப் போனோம். ஜவுளி முடிச்சு திரும்பியதும் அப்பாவும் புள்ளையும் ஐஸ் கிரீம் கடைக்குப் போய்ட்டாங்க. நான் தனியா நின்னேன். அப்போ ஒருத்தன் என்கிட்ட வந்து பேச்சுக் கொடுத்தான். என் வீட்டுல கைக்குட்டையை வைச்சுட்டு வந்துட்டேன்னு வழிஞ்சான். அவர் தலையைக் கண்டதும் ஒன்னும் தெரியாத புள்ளை மாதிரி ஒதுங்கி ஓடிட்டான். சம்பத் வந்து அவன் யாருன்னு கேட்டார். தெரிஞ்சவள்னு சொல்லி முடிச்சுட்டேன். அந்தப் பய என்கிட்டுட பேச்சு கொடுக்கனும்ங்குறதுக்காக கைக்குட்டை காணோம்ன்னு சொல்லி அவர்கிட்ட என்னை மாட்ட வைச்சுட்டான்!” நடந்தைச் சொன்னாள்.

கேட்ட பங்கஜம் முகம் இறுக்கமானது. சிறிது நேரத்தில் தெளிந்தது.

“சரி விடு. இன்னைக்கு நாம ரங்கோன் ரங்கமணி வீட்டுக்குப் போற கெடு.” என்றாள்.

“வேணாம்க்கா..“ நித்யா முகம் சூம்பினாள், சுளித்தாள்.

“நல்ல பார்ட்டிடி. நம்ம கைநிறைய கிடைக்கும்!”

நித்யா முகம் தெளியவில்லை.

“அந்த ஆளைப் பார்க்கிறதோட முடிச்சுக்குவோம். அடுத்து நாம எங்கேயும் போக வேணாம். அதுவும் இன்னைக்கு வர்றேன்னு அன்னைக்கே நான் போன் பண்ணி சொல்லிட்டேன். மனுசன் தயாராய் எதிர்பார்த்துக்கிட்டிருப்பார்.”

“சரிக்கா.” நித்யா மனசு மாறினாள். “சீக்கிரம் போய் திரும்பிடலாமா?” பார்த்தாள்.

“அவர் நம்மை சீக்கிரம் அனுப்பினாத் திரும்பலாம். அடுத்து நமக்கு வேலையே இல்லே.”

நித்யா மௌனமாய் இருந்தாள்.

“எதுக்குடி யோசனைப் பண்றே?“ பங்கஜம் அவள் முகத்தைப் பார்த்தாள்.

“சம்பத் அன்னைக்குத் திடீர்ன்னு போன் பண்ணினார். அடுத்து தலைவலின்னு வந்தார். ஆள் நடவடிக்கை சரி இல்லே. நேத்திக்கு அருண் மாமா மாமியெல்லாம் ஊருக்குப் போனாங்க. அதைச் சாக்கு வைச்சி திடீர்ன்னு வந்தா என்ன செய்யுறதுன்னுதான் யோசனை.”

“இதெல்லாம் வீண் பயம். அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது. சீக்கிரம் திரும்பிடலாம் வா.” அழைத்தாள்.

நித்யாவிற்கு அதற்கு மேல் மறுக்க மனமில்லை. மறுத்தாலும் பங்கஜம் தன்னை வற்புருத்தி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிடுவாள்! என்பது புரிந்தது, எது நடந்தாலும் சமாளித்துக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழி இல்லை. தீர்மானத்திற்கு வந்தாள். “சரிக்கா” தலையசைத்தாள்.

“உடனே புறப்படு” பங்கஜம் அவசரப்படுத்த…

இருவரும் கதவைப் பூ ட்டிக்கொண்டு நடந்தார்கள்.

‘கடவுளே! இதுதான் கடைசி. யார் கண்ணுலேயும் பட்டு எதுவும் நடந்துடக்கூடாது, என் வாழ்க்கைப் பாழாகக் கூடாது!‘ நித்யா மனசுக்குள் வேண்டியபடி பங்கஜத்தைத் தொடர்ந்தாள்.

அவள் வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தினாள். இருவரும் ஏறினார்கள்.

“ரங்கோன் ரங்கமணி வீடு போப்பா!” பங்கஜம் கட்டளையிட… டிரைவர் துணுக்குற்றான்.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *