உழைக்க மட்டுமே பிறந்தவர்கள்





(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்தக் கிழவன் சாலையோரத்தில் உட்கார்ந்திருந்தான். முதுமையின் இலக்கணமாய்க் கூன் விழுந்து…. உடல் தளர்ந்து சிறுத்துப் போன சின்ன உருவமாய் அவன் காட்சி தந்தான். அவனருகில் பிச்சை வாங்குவதற்கான ஒரு தகரக் குவளையும் துணைக்கு ஒரு ஊன்று கோலும் கிடந்தன. எதிர்ப்புறத்தில் ஓர் அழகிய சிற்றாறு நளினமாக ஒடிக் கொண்டிருக்கிறது. அவனுக்குப் பின்னால்…. தூரத்தில் தேயிலைச் செடிகளின் பசுமை…. அந்த மலைக் குன்றுகளின் மேல் பச்சையால் அள்ளிப் பூசப்பட்டிருக்கிறது.
அந்த ஏகாந்த சூழலில் அவனும் ஒருவனாய் இரண்டறக் கலந்திருந்தான்.

அந்த மனிதனின் முன்னைய வாழ்க்கை அவனது பூர்வீகம் எப்படியிருந்திருக்கும் என்று நான் யோசிக்கிறேன்.
இளமைக் காலத்தில் அவன் எப்படி இருந்திருப்பான்…? அவனுக்குச் சொந்தம் – சுற்றம் என்று ஒரு குடும்பப் பிணைப்பு இருந்திருக்குமா? குறைந்த பட்சம் இரவில் படுத்து எழும்புவதற்கு ஒரு இஸ்தோப்பு அறையாவது இருந்திருக்குமா…?
ஆம், அவன் எல்லாவற்றையும் இழந்தவனாகவே காணப்படுகின்றான். எதிர்காலமும் அவனை அச்சுறுத்திக் கொண்டிருப்பதாக ஒரு தாக்கமும் அவனுள் தெரிகிறது.
அந்த மலைக்கும், ஆற்றுக்கும் இடையில் …….அந்தப் பாதையோரத்தில் உருவழிந்து கிடைக்கும் ஒரு சிதைந்த வீட்டைப் போல அவன் இன்னும் சமைந்திருந்தான்! நான் ‘அலுவலகம்’ நோக்கிச் செல்கின்றேன். அந்த நிர்க்கதியான உருவம்….. படமாய் என் மனதில் பதிந்து விட்டது. அது அலுவலகம் வரை என்னுள் தொடர்ந்து வருகிறது.
இளங்காலைப் பொழுது முடிந்து பகல் புழுக்கம் ஆரம்பம். எனது வேலைப் பளு உக்கிரமடைகிறது. ஜனங்களின் சந்தடி ஜன்னலருகே நடமாட்டம். அவர்களின் நிழல்கள் எனது அறையில் விழுந்து விரைகின்றன.
ஒரு நிழல் மட்டும் நிலைத்து நிற்பதாய் நான் உணர்கிறேன். நான் வெளியில் எட்டிப் பார்க்கிறேன். அந்தக் கிழவன் அந்தப் பெரிய மனுஷன்…. பிச்சைக்காரனைப் போன்ற அவன் கையேந்திக் கொண்டு நிற்கிறான். அவனை ‘ஒரு பிச்சைக்காரன்’ என்ற சொல்லுக்கு ஆளாக்க என்னால் முடியவில்லை. அவன் ஒரு பரம்பரைப் பிச்சைக்காரன் அல்ல! அந்த பதத்துக்கே இடமளிக்க முடியவில்லை.
அவனது முகத்தில் தவழ்ந்து கொண்டிருக்கும் அந்தச் சாந்தமான பார்வை ஆயிரம் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
நான் ஒரு ஐந்து சத நாணயத்தைக் கொடுத்தேன்.
நீங்க ……. நல்லா…. இருக்கணும்! அந்தப் பெரிய மனுசன் என்னை ஆசீர்வதித்தான். பின் என்னைத் தொடர்ந்து பலர் சில்லறைகளைக் கொடுத்தனர். இந்தச் செயல் அந்த மனிதனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நீங்க எல்லாரும் சிரஞ்சீவியா வாழணும்…. அவன் திரும்பத் திரும்பச் சொன்னான்.
“இன்னும் ரெண்டு நாளைக்கு அலைஞ்சித்திரியாம அக்கடான்னு இருப்பேன்!” நொண்டி… நொண்டி பிச்சை கேட்டு அலையும் நிலையிலிருந்து இரண்டு நாட்கள் ஓய்வாக இருக்கப் போகிறேன்’ என்ற சந்தோசம் அவனது வார்த்தைகளிலிருந்து விழுந்தது. நான் மகிழ்ந்து போனேன்.
சில நாட்கள் பெய்த மழைக்குப் பிறகு வெளியே வெய்யில் பிரகாசமாய் அடித்தது. எனக்கு ‘ஆப்பீஸ்’ உள்ளே இருக்க முடியவில்லை. வெளி முற்றத்திற்கு வந்துவிட்டேன்.
சுவரில் சாய்ந்திருந்தான். முதுமை தோய்ந்த அவனது முகத்தில் ஏக்கமும் ஒருவித கடுமையும் படர்ந்திருந்தது. சுவரில் சாய்ந்தபடி இன்னும் அப்படியே உட்கார்ந்திருக்கின்றான். அவனுக்கு முன்னால் ஒரு குப்பைவாளி இருந்தது. வாளிக்குள்ளே சாப்பிட்டு எறிந்த வாழை இலைகள் சிதறிக் கிடந்தன. அழுகிய உணவின் துர்நாற்றம் காற்றோடு கலந்து வந்தது. வீச்சம் நிறைந்த குப்பைவாளியில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. நாய்கள் சில….. குப்பை வாளியைக் கிண்டுவதில் போர்க்கொடி தூக்கின. ஒன்றையொன்று எதிர்க்கின்ற உறுமல்…. பிச்சைக்காரனும் இப்படி…. உணவுக்காக குப்பைவாளியில் கையைப் போட்டு துளாவுவதையும் ‘மனிதனுக்காக’ நாய்கள் விட்டுக் கொடுப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால்…….. இங்கே….. இந்த இடத்தில் இந்தக் கிழவன் இந்த நிலையில் எல்லாவற்றுக்கும் அப்பால் உயர்ந்து நிற்கின்றான்….(Even in this respect…. the old man was unique) அவனது முகத்தில் ஒரு விசித்திரப் புன்னகை இழையோடுகிறது. அந்த தளர்ந்துபோன உடலில் ஓர் ஆத்ம கௌரவம் கம்பீரத்தோடு பிரகாசித்துக் கொண்டிருந்தது.
“அ….வ….ன்” இல்லை அவர் மேல் எனக்கு ஒரு மரியாதை படர்ந்து நான் பேச்சுக் கொடுத்தேன்.
“நீங்க ஏதாச்சும் சாப்பிடல்லையா…….?”
“ஹி….. ஹி…. பசி இல்லீங்க ஐயாவு! கால சாப்பாட்ட கொஞ்சம் சொணங்கி சாப்பிட்டேன்.. ஹி ஹி..” அவரது சிரிப்பில் கோடிக்கணக்கான மரியாதை தவழ்ந்தது.
“நீங்க தோட்டத்துல…. இருக்கிறீங்களோ……..?”
“ஆமாங்க ஐயாவு!”
“அப்ப சொந்தக்காரங்க நிச்சயமா இருப்பாங்கள்?”
“ஆமாங்க ஐயாவு! எல்லாரும் இருக்காங்க…… எனக்கு ரெண்டு மவன்மாருங்க… ஒரு மவ பேரப்புள்ளங்க எல்லாரும் இருக்காங்க!”
“அப்ப அவங்களோட நீங்க இருக்கலாந் தானே?’
“நா……..ஏன் அவங்கள்ல தங்கி இருக்கணும்?” இதுக்கு முன்ன நா….. அப்படி இருந்ததுமில்ல. இனிமேலேயும் அப்பிடி இருக்கப் போறதுமில்ல! மற்றவர்களின் அனுசரணையுடன் வாழ விரும்பாத தன்மான உணர்வு அவரின் சூடான பதிலில் தெரிந்தது.
“என்னா இருந்தாலும் இந்த வயசான காலத்துல நீங்க அண்டியிருக்கிறதுக்கு….. ஒங்களுக்கின்னு ஒரு எடம் இருக்கணுமில்லே?” என் அபிப்பிராயத்தைக் கூறினேன்.
“எம்மவன்மார்களும், மவளும் ஆத்துக்கு அந்தப் பக்கம் இருக்காங்க ஐயாவு! எங்க தோட்டம் வந்து சின்னத் தோட்டம்! பகல் நேரத்துல இப்படி ஊரசுத்திட்டு வருவேன். ராத்திரியில மாரியம்மன் கோயிலுக்கு வந்திடுவேன்…..”
“சின்னத் தோட்டத்துல எவ்வளவு காலமா இருக்கீங்க?”
“பொறந்ததிலிருந்து இருக்கேன்! தேயிலக் கன்னு போடுறதுக்கு இந்த மலையலுக்கெல்லாம் எங்கப்பருதான் கூனி அடிச்சாரு! நாந் தான் இந்தத் தோட்டத்துக்கு தேயிலைக் கன்னு நட்டு வளர்த்தவன்! இங்க இருக்கிற ஒவ்வொரு தேயிலக் கன்னும் எனக்குத் தெரியும்! ஒவ்வொரு மரமும் தெரியும்! ஒவ்வொரு கானுக்கட்டையும் தெரியும்!’ கிழவனார் மிகப்பெருமையோடு வார்த்தைகளை உதிர்த்தார்.
உழைப்பின் மகத்துவம் உழைப்பாளிக்குத் தான் தெரியும்.
“அப்ப நீங்க இந்தத் தோட்டத்துல தான் பென்சன் வாங்குறீங்கன்னு நெனைக்கிறேன்!” நான் பேச்சை இழுத்தேன்.
“ஆமாங்க ஐயாவு! நம்ம தொர… மாசம் பதினஞ்சி ரூவ்வா குடுக்குறாரு.”
“இன்னும் கொஞ்சம் கூட்டிக் கேட்டிருக்கலாந்தானே?”
“கேட்டேன் கூட்டிக் குடுத்தா தோட்டம் கட்டுப் படியாகாதாம்! தொர சொல்லிட்டாரு” அவர் உதடுகள் ஏளனமாக நகைத்தன.
“அப்படியோ?” நான் வருத்தப் பட்டேன்.
“ஆமாங்க ஐயாவு… சீவியம் பூராவும் இந்தத் தோட்டத்துக்காகப் பாடுபட்டேன். எனக்கு முந்தி எங்க அப்பாரு மழ வெய்யில்ன்னு பார்க்காம….ராவு பகல்ன்னு நெனைக்காம ஒழைச்சாரு.மாய்ஞ்சி, மாய்ஞ்சி இந்தத் தோட்டத்துக்கே ஒழைச்சி மாண்டுபோனாரு தோட்டத்துல ஒரு தம்பிடிகூட அவனுங்க அவருக்கு குடுக்கல்ல! அதுதான் என்னமோ சொல்லுவாங்களாம்’ வெள்ளைக்காரன் தயவு செவுத்துல ஒட்டின சுண்ணாம்பு மாதிரி. அது எந்த நேரமோ உதுந்து கொட்டிப் போயிரும்”
அவர் மௌனமானார்.
மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார். “ஓ…! இந்தத் தோட்டத்துக்காக நானு எவ்வளவு ஒழைச்சி குடுத்திருப்பேன்!’ நானு நேர்மையான மனுசன்! -நேர்மையான வேலைக்காரன்’னு அவுஹ சொன்னாஹ! நானு வயசாகி ஒடம்பு தளந்துபோனதும் அவுஹ புழிஞ்ச சக்கையைத் தூர வீசுறமாதிரி என்னைய வீசிப்புட்டாங்க….”
“ஒங்க சம்சாரத்தப் பத்தி ஏதாவது……..? அவுங்களும் சின்னத் தோட்டத்துல தான் இருக்காங்களா?” நான் தயங்கியபடி கேட்டேன். அவர் முகத்தில் கருமை படர்ந்தது. அவர் மௌனமானார்.
“அவ மாண்டு மடிஞ்சிட்டாளுங்க சாமீ! அவ உசுரோட இருந்திருந்தா…… நா இப்படி பிச்ச எடுக்கிற அளவுக்கு வந்திருக்க மாட்டேன்…..”
“அவுங்க இளம் வயசிலேயே எறந்திட்டாங்களா?”
“இல்லீங்க ராசா! அவ கொஞ்சம் வயசுபோயித் தான் செத்தா. நல்லோரு மவராசி! பாசமுள்ள பொம்பள! எங்க சீவியத்துல நாங்க ரெண்டு பேரும் சண்ட புடிச்சதே கெடையாதுங்க!அவ ஒரு போதும் என்னையத் தவிர வேற எந்த ஆம்பள மொகத்த பார்த்ததேயில்ல! அதே மாதிரி நானும் ஒரு பொம்பள மொகத்தப் பார்த்தது கெடையாது!’
“அப்போ நீங்க ரெண்டுபேரும் ஒரு சந்தோசமான ஜோடின்னு சொல்லுங்க!” என்று கிண்டலாகச் சிரித்தேன்.
“ஆமாங்க ஐயாவு” அவர் முகத்தில் ஓர் இன்ப மலர்ச்சி தவழ்ந்தது. நான் அவரை விட வில்லை. பேச்சைத் தொடர்ந்தேன்.
“அவுங்க ஒங்களுக்கு சொந்தமோ…….?”
“மொறப்பொண்ணுங்க ஐயாவு! எங்க அப்பாவூட்டு தங்கச்சி மவ! சொந்த அத்த மவ! பேரு பூங்காவனம்!”
“…..”
“பூங்… கா….வ….ன…..ம்” அவர் கண்களை மூடிக் கொண்டு துயரம் தோய்ந்த குரலில் மீண்டும் மீண்டும் அந்தப் பெயரை உச்சரித்தார்.
“அவ என்ன வுட்டுட்டுப் போனதோட எனக்கு கெட்டகாலம் தொடங்கிருச்சி” அவர் நா தளர்ந்தது. அவர் துயரப்படுவதை நான் விரும்பவில்லை. பேச்சை மாற்றிக் கொண்டேன்.
“ஒங்க பேரு என்னாங்க பெரியவரே?”
“சிவசாமி ஐயாவு!”
“நல்லது சிவசாமி. நீங்க இந்தியாவுக்குப் போற நோக்கம் எதுவும் இருக்குதா?”
‘இந்தியாவுல எனக்கு என்னாங்க சாமி இருக்கு? ஒரு புது ஊர்ல போயி இனிமே என்னால் என்னாங்க செய்ய முடியும்?”
“அப்போ சின்னத் தோட்டத்திலேயே நீங்க கடைசிக்காலம் வரைக்கும் இருக்கப் போறீங்களா……..?”
“ஆமாங்க! எங்க தாய், தகப்பன் இங்கேயே வாந்துமடிஞ்சி போனாங்க. நானும் இங்கேயே பொறந்து, வளந்து கண்ணாலமும் கட்டினேன்! இங்கதான் எம்புள்ளக் குட்டிகளும் பொறந்து வளந்ததுஹ! எம்பொஞ்சாதியையும் அந்தத் தேயிலத்தூர்ல் தான் அள்ளிவச்சேன். அந்த ஏழாம் நம்பர் மலையில எங்காயி கப்பன் பக்கத்துலத்தான் பூங்காவனமும் படுத்திருக்கா. என்னைக்காவது ஒரு நாளு நானும் கண்ண மூடிட்டா எம்மவன்மாருங்க அவுங்க பக்கத்துல என்னையும் கொண்டுபோயி வச்சிருவாங்க. நானும் ஒஞ்சிப் போய்ட்டேன். ரொம்ப நாளைக்கு இருக்க மாட்டன்”
சிவசாமி கிழவனாரின் குரல் தழுதழுத்தது. என் மனமும் நெகிழ்ந்து வேதனைப் பட்டது.
கடைசிக் காலத்தில் சிவசாமிக்கு அவரைப் போன்ற எல்லா உழைப்பாளிகளுக்கும் இங்கே இது தான் விதியும், கதியும் என்று என் மனம் உறுத்தியது. இவரைப் போன்ற எத்தனை உழைப்பாளிகள் இப்படி வீதியில் இழுத்து வீசப் பட்டிருக்கிறார்கள்? உழைப்பு சூறையாடப் பட்ட இன்னும் எத்தனைபேர் இப்படித் தெருவுக்கு வரவிருக்கிறார்கள்? ஆமாம்….. ஆமாம்…….. இங்கே வருந்தி உழலும் இந்த ஆண்களும், பெண்களும், உழைக்க மட்டுமே பிறந்திருக்கிறார்க்ள. (Yes the men and women born to labour)
– ஆங்கில தொகுதி: One of the many, Born to labour [by] C.V.Velupillai, Publisher: M.D.Gunasena & Co., 1970.
– தேயிலை தேசம், ஆங்கில மூலம்: சி.வி.வேலுப்பிள்ளை, தமிழில்: மு.சிவலிங்கம், முதற் பதிப்பு: பெப்ரவரி 2003, துரைவி பதிப்பகம், கொழும்பு.