உடைந்த சிலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 7, 2025
பார்வையிட்டோர்: 1,232 
 
 

நகரின் மத்திய பகுதியில் மார்க்கெட் வாயிலில் கையில் கைத்தடியுடன் நின்று கொண்டிருந்த காந்தியின் கற்சிலை உடைந்துவிட்டது. அதனடியில் ஓரடிக்குக் குறைவான இடத்தைத் சுற்றி அரையடி உயரத்துக்குக் கம்பிவேலி அமைக்கப்பட்டிருந்தது. காந்தி சிலைக்கு எந்த ஆபத்தும் வராது என்ற யூகத்தின் அடையாளம் அது. இன்று தலையின் மேற்பகுதியும், கண்ணாடியும் வலதுகையின் விரல்களும் உடைந்து சிலைக்குக் கீழே சிறுசிறு துண்டுகளாக விழுந்து கிடந்தன. சுமார் பதினைந்து அடி உயரத்தில் இருந்த காந்தி சிலை அண்ணாந்து பார்த்தால்தான் தெரியும். அதை யாரும் கவனிக்கவில்லையா? அல்லது கவனித்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களா?

மார்கெட் எப்போதும் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பெரிய லாரிகளும், சின்ன டிரக்குகளும், காய்கறி லோடுகளுடன் கிடைத்த இடைவெளிகளில், நெரிசலில் உள்ளே நுழைந்து கொண்டிருந்தன. அவைகளுடன் காய்கறி மூட்டைகள் ஏற்றிய சின்னக் கைவண்டிகளும், முன்னும் பின்னும் பாரமேற்றிய டி.வி.எஸ் 50 வண்டிகளும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. இவற்றிற்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு செல்லும் மனிதர்களும், மடித்துவைத்த பெரிய சிறிய பைகள், சாக்குகளை எடுத்துக் கொண்டு சிறிய காய்கறி வியாபாரிகளும் வந்து இறங்கும் காய்கறி மூட்டைகளைப் பார்த்தபடியே உள்ளே போய்க் கொண்டிருந்தார்கள். அந்த இடம் முழுக்க காய்கறிகள் கீரைகள், வாசனையோடு ஈரத்தில் காலடியில் நசநசத்துக் கொண்டிருக்கும் கழிவுகளின் நாற்றமும், மனிதர்களின் வாசனையும், நாற்றமுமாக மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது.

காலை வெய்யில் இன்னும் ஏறவில்லை. அதற்குள் பாரம் சுமக்கிற வேலைகளை முடித்துவிட வேண்டும் என்பது போல் எல்லோரும் இயங்கிக் கொண்டிருந்தனர். அன்றாடம் வீடுகளுக்குக் காய்கறி வாங்க வருகிறவர்கள் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கூட்டம் கூட்டமாக வருவார்கள். டிராஃபிக் அதிகமாகி ரோட்டை நிறைத்துவிடும். கூட்டத்துக்கு முன்னால் வந்து காய்கறிகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று வந்து கொண்டிருந்த யாரோ ஒரு மனிதர் தன்னுடன் வந்த ஏழுவயதுச் சிறுமியிடம் ‘காந்தி சிலையைப் பார்’ என்று காட்டிய போதுதான் கவனித்தார். காந்தியின் தலைப்பகுதியும் கண்ணாடியும், கைத்தடியைப் பிடித்திருந்த சில விரல்களும் சேதம் அடைந்திருந்தன. அந்தச் சிறுமி கத்தினாள், ‘காந்தித் தாத்தாவோட கண்ணாடியைக் காணம்’. அருகில் வெறுங்கையுடன் நடந்து கொண்டிருந்த அனைவரும் காந்தி சிலையைப் பார்த்தனர். தலைப்பகுதியும் விரல்களும் உடைந்திருந்தன. ‘எவனோ உடைச்சிட்டான்’ அவர்களில் ஒருவர் அதிர்ச்சியடைந்த் குரலில் சொன்னார். இன்னும் பல பார்த்தனர். பெரும்பாலானவர்கள் அதைக் கேட்டது மாதிரித் தெரியவில்லை.

காய்கறி வாங்க வந்த கமிஷனர் அலுவலகத்தில் வேலைபார்க்கும் சந்தனம், போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்துவிட்டார். போலீஸுக்கு இன்னொரு வேலை வந்துவிட்டது. ஊரில் என்ன குற்றங்களுக்கா பஞ்சம்? தகவல் கிடைத்ததும் ‘இதெல்லாம் ஒரு வேலையா?’ என்று மனதுக்குள் அலுத்துக் கொண்டார் போலீஸ் கமிஷனர். ஆனால் ‘காந்தி’ என்ற பெயர் கேட்டதும் ஒவ்வொரு மனிதனுக்கும் மனதில் ஒரு மின்னல் வெட்டும். அவரையும் அது நிம்மதி இழக்கச் செய்தது. ‘காந்தி சிலையை யார் உடைப்பார்?’ காந்தியின் பக்தர்கள் மறைந்து போன

உயிரினங்களைப் போல வரலாற்றிலிருந்து மறைந்து போனவர்கள் என்று நினைக்கும் அதிகாரிகள் வர்க்கத்தில் அவரும் ஒருவர். ஆனால் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கக் கூடிய குற்றம் இது. காந்தி சொன்னதைப் பற்றி நினைக்காத ஒரு பெரும் கூட்டம், அவரது நினைவை மட்டும் புனிதமாக்கிக் கொண்டிருக்கிறது என்று அவருக்குத் தெரியும். அவரைப் பொறுத்தவரை காந்தி ஒரு பிரச்சனை அல்ல. சிலை உடைந்ததும் அதனால் எதிர்பாராமல் வரக்கூடிய மேலிடத்து கூச்சல்களும் ஒரு பிரச்சனை.

மார்க்கெட் பகுதிக்கான இன்ஸ்பெக்டரை அழைத்து ‘விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று ஆணையிட்டார். ஆணையிடத்தான் முடியும். காந்தி சிலையாக இருந்தாரே தவிர யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை. அந்தச் சிலை அங்கிருந்ததைப் பற்றியோ அல்லது அதன் காரணம் குறித்தோ யாரும் யோசிக்கவில்லை. இன்ஸ்பெக்டர் பிரதீபனுக்கும் அது மிகவும் மோசமான செயல் என்றே பட்டது. அடுத்த நாள் செய்தித்தாளில் போட்டோவுடன் செய்தி வந்துவிடும். அதுதவிர வேறெதுவும் நடக்க வழியில்லை. ஆனாலும் ஏதாவது கூட்டம் கூச்சல் வந்துவிட்டால்? போலீஸ் மூளை அப்படித்தானே யோசிக்கும்.

இரண்டு நாள்களாக மிக அவசரமாக ஆணைகள் அங்கும் இங்கும் பறந்தன. முனிசிபாலிடியின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தத் தலை உடைந்த சிலை வெளியே தெரியாமல் இருக்க, இரண்டு மூன்று வேலையாட்கள் பிளாஸ்டிக் ஷீட்டுகளைக் கொண்டு மூடி வைத்துவிட்டார்கள். ‘அது யார் கண்ணிலும் படாது. பதட்டம் அதிகரிக்காது’ என்ற போலீஸ் டிபார்ட்மெண்ட்டின் அறிக்கை உயர்மட்டத்துக்குப் போனது. காந்தியைப் பற்றிச் சரியான தகவல்களே தெரியாத பெருவாரியான மனிதர்கள் இருந்த ஒரு சமூகத்தில் சிலை உடைந்ததால் பதட்டம் ஏற்படாது என்று சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் நினைத்தார். அது அவருடைய ஸ்டேஷன் பகுதியில் இருந்தது.

சிலையை இடித்ததுயார் என்று விசாரிக்க வேண்டிய வேலை, சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனிடம் வந்தது. அவர் கொஞ்சம் சுத்தமான ‘கை’ என்று கமிஷனருக்கு ‘இன்டெலிஜன்ஸ்’ கிடைத்திருந்தது. ‘ஒன்றுமில்லாத கேஸ்’ என்று உள்ளுக்குள் நினைத்தாலும், இதை ஒரு முக்கியமான கேஸாக ‘ஊதிப்பெருக்கி’ தனக்கொரு நல்ல பெயரை வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்று கமிஷனர் செந்தில் முருகன் நினைத்தார். நேர்மையாக விசாரணை நடத்தி வழக்கை நடத்தவேண்டும் என்று விரும்பினார். கெட்டுப் போன தன் பெயரை சரிப்படுத்திக் கொள்ள இது ஒரு சந்தர்ப்பம் என்று அவர் நினைத்தார். காந்தி போன்ற ஒரு ‘புனிதப் பசு’வின் அருகில் நின்றால் அவரும் புனிதராகிவிட வாய்ப்பிருக்கிறது. நிறைய மதிப்பு இல்லாவிட்டாலும், நேர்மைக்கு ஒரு ‘மார்க்கெட் மதிப்பு’ இருக்கிறது என்று அவருக்குத் தெரியும்.

கமிஷனர் தன்னைக் கூப்பிடுகிறார் என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும் கார்த்திகேயனுக்கு உள்ளுர நடுக்கம் ஏற்பட்டது. கமிஷனர் ஆஃபீஸ் போகவே அரை மணிநேரம் ஆகிவிட்டது. கமிஷனர் அழைத்தார் என்று வாசலில் காவலிருந்த பி.சி.யிடமிருந்து உள்ளே கமிஷனர் அறைக்கு அடுத்த அறையிலிருந்து அவரது பி.ஏ. வரை விவரம் சொல்லி, உள்ளே போனார். சிலைகளுக்கெல்லாம் இவ்வளவு பாதுகாப்பு கொடுக்க முடியாது. கமிஷனர் முன் விறைப்பாக சல்யூட் அடித்து நின்றார். ‘உனக்கு முக்கியமான வேலை கொடுக்கிறேன். அந்தக் காந்தி சிலையை

உடைத்தது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். நீ கொஞ்சம் நல்ல ஆளுன்னுதான் இந்தக் கேசைக் கொடுத்திருக்கிறேன். கட்சிக்காரன் அவன் இவன் என்று எவன் வந்தாலும் ஒண்ணும் கண்டுக்கிடாத. ஒழுங்கா விசாரிச்சு, சீக்கிரம் கேசை முடிக்கப் பாரு. எதாவது பிரச்சனைன்னா எங்கிட்டப் பேசு. இன்னிக்கே வேலையத் தொடங்கு’ என்று சொல்லி அனுப்பிவிட்டார். காந்தியுடன் கூட இதைவிட அதிகமாகப் பேசிவிட முடிந்திருக்கும் என்று கார்த்திகேயனுக்குத் தோன்றியது.

கார்த்திகேயனுக்கு வியப்பாக இருந்தது. எப்போதும் அவர்மேல் எரிந்துவிழும் கமிஷனர் இன்றைக்கு ஒழுங்காகப் பேசினார். ஒரு வருடத்துக்கு முன்பு, ஒரு ரவுடியின் மேல் நேர்மையாக நடவடிக்கை எடுத்த கேஸில் அரசியல்வாதியின் சொல்பேச்சுக் கேட்டு ரிமார்க் போட்டு தன் பிரமோஷனைக் கெடுத்த இந்தக் கமிஷனர் இந்தக் கேசை ஏன் என்னிடம் கொடுக்கிறார்? மிக மோசமான அரசியல்வாதிக்கும் போலீஸ்காரருக்கும் கூட சில நேரங்களில் நேர்மையான அதிகாரிகள் ஏன் தேவைப்படுகிறார்கள் என்று அவருக்குப் புரியவில்லை.

தன் சீட்டில் போய் உட்கார்ந்தார். பொதுவாக ‘ஒன்றுக்கும் உதவாத ‘பசையற்ற கேஸ்கள்’ என்று மற்றவர்கள் உதறிவிடும் கேஸ்கள் அவரிடம் வரும். மேஜையில் இரண்டு மூன்று கேஸ்கள் இருந்தன. மற்றவர்களை விட ‘கொஞ்சம் சுத்தமான கை’. கொஞ்சம் என்பது அதிகம் என்றும் கொள்ளலாம். யாரிடமும், குறிப்பாக எஃப்.ஐ.ஆர் போட வருகிறவர்களிடம் கேட்கமாட்டார். எதைக் கேட்பார்கள் போலீஸ் ஸ்டேஷனில் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. சில நேரங்களில் இன்ஸ்பெக்டர் சொன்னார் என்றால் தவிர்க்க முடியாமல் கேஸ்காரர்கள் கொடுக்கும் ‘பரிசுகளை’ வாங்கிக் கொள்வார். கார்த்திகேயன் எதுவும் வாங்கவில்லை என்றால் ‘எங்கேயாவது போட்டுக் கொடுத்துவிடுவானோ’ என்று இன்ஸ்பெக்டருக்குப் பயம் வந்துவிடும். அதற்காகவே கட்டாயப்படுத்தி எதையாவது வாங்கிக் கொள்ள வைப்பார். அவரின் கீழே வேலைபார்க்கிறவர் என்பதனாலேயே அதையெல்லாம் வாங்காமல் இருக்க முடியாது. நேர்மையான வருமானம் அதிகரிக்க வேண்டுமென்றால், கார்த்திகேயனுக்கும் பதவி உயர்வுகள் வேண்டும். அதற்கு இதுமாதிரி அதிகாரிகளின் ‘தயவு’ வேண்டும்.

அன்று மாலையே யார்யாரிடம் விசாரிக்க வேண்டும் என்று ஒரு உத்தேசப் பட்டியலைத் தயார் செய்தார். அதற்குள், செய்தி டெலிவிஷனில் பரவிவிட்டது. ஏதோ பெரிய குற்றம் நடந்துவிட்டது போல் எல்லா சேனல்களிலும் ஒப்பாரி வைக்காத குறையாகக் கத்திக் கொண்டிருந்தார்கள். காந்தியைப் பற்றியும், அவரது நேர்மை உழைப்பு, தியாகம் குறித்தும் விளக்கிக் கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் சொன்னால்தான் ‘சிலை உடைந்து விட்டது’ என்ற செய்தியை ஒரு நாள் முழுக்க ஓட்டலாம். ‘எல்லாப் பயல்களுக்கும் காந்தி சிலை உடைந்தது ஒரு சாக்காகிவிட்டது. தத்தமது காந்தி பக்தியை வெளிப்படுத்தி, தங்கள் மீது ‘புனித’ வர்ணம் பூச எத்தனிக்கிறார்கள் என்று கார்த்திகேயன் நினைத்துக் கொண்டார். உண்மையத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், டெலிவிஷனைப் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டார்.

மார்க்கெட் கமிட்டியின் நிரந்தரத் தலைவராக இருப்பவர் காங்கிரஸ்காரரான, செல்லத்துரைப்பாண்டியன் எம்.ஏ., பி.எல். அவருக்கு தினமிருக்கும் ஒரே வேலை, தன் நிறுவனங்களின் நிதி நிலைமையை ஆராய்வதுதான். காங்கிரஸ் கட்சியில் உள்ளூர் நிர்வாகிகளில் ஒருத்தராக இருப்பது ஒரு கௌரவத்துக்காக. தன்

அலுவலகத்தில் சுவரில் அலங்காரமாக மாட்டியிருக்கும் காந்தியைப் பற்றி அவருக்கு ரொம்ப ஒன்றும் தெரியாது. பள்ளிக் கூடத்தில் படித்த சில விஷயங்கள் தெரியும். மற்றப்படி ஊரில் உள்ள எல்லா விவகாரங்களிலும் தலையிடும் அளவு பெரிய பணக்காரர். கூடவே எப்போதும் பத்துப் பேர் இருப்பார்கள். கோர்ட்டுக்கு ஒரு நாள் கூடப் போனது கிடையாது. எல்லாவற்றையும் அவருடைய ஜூனியர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

அவருடைய கடை மார்க்கெட் நுழையும் பாதையில், காந்தி சிலைக்கு மிக அருகில் இருந்தது. அவரை அவருடைய அலுவலகத்தில் கார்த்திகேயன் அவரைச் சந்தித்த போது மாலை மணி ஆறரை. பெரிய அலுவலக மேஜை ஒருபுறம் இருக்க, அதிலிருந்து இறங்கி, அங்கிருந்த மிகப்பெரிய சோஃபாவில் செல்லத்துரை அமர்ந்திருந்தார். கார்த்திகேயனை எதிர்ப்புறமிருந்த சோஃபாவில் உட்காரச் சொன்னார். இந்த விசாரணையின் மூலம், அவர் இந்த ஊரின் முக்கியப் புள்ளி என்பது மீண்டும் எல்லோருக்கும் தெரியவரும். செய்திகளில் அவர்பெயர் அடிபடும். இந்த விஷயத்தில் அது போதும். மற்றபடி, இன்னொரு காந்தி சிலை வைக்க நிதிவசூலிக்கும் கமிட்டியில் இருக்கலாம். சிலைக்குக் கீழே தன் பெயரைப் பொறித்துக் கொள்ளலாம். என்றெல்லாம் யோசித்தார். இந்த மார்க்கெட் கமிட்டியின் தலைவர், வெளிப்படையான அடக்கத்துடன், ஆனால் உள்ளே பெரும் அகங்காரத்துடன் அமர்ந்திருக்கிறார்’ என்று கார்த்திகேயன் நினைத்தார்.

‘சார், மார்கெட் கமிட்டி சேர்மனாக இருக்கிறீங்க’ – பெரியமனிதர்களுக்கே உரிய அகங்கார அடக்கத்துடன் அவர் புன்னகைத்தார் – ‘உங்க கடைதான் மார்க்கெட் வாசலுக்குப் பக்கத்தில இருக்கு. காந்தி சிலை எப்படி உடைந்தது? யாராவது உடைச்சாங்களா? ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க. டிபார்ட்மெண்ட்ல ஒரே பிரெஷ்ஷர்.’

தொண்டையை லேசாகக் கனைத்துக் கொண்டு செல்லத்துரை பேசத் தொடங்கினார் ‘எங்க கடைதான் காந்தி சிலைக்குப் பக்கத்தில் இருக்கிறது என்பது சரிதான். நான் கடைப் பையங்க கிட்டக் கேட்டுப் பார்த்தேன். ராத்திரி ரெண்டுபேர் படுக்காங்க. அவங்களுக்கும் சத்தம் ஒண்ணும் கேக்கலையாம். அவங்க கூடமாட உதவி செய்றவங்க, பக்கத்துக் கடைக்காரங்கள்ட்டையும் கேட்டுட்டேன்’.

இந்த இடத்தில் அவர் மிகவும் சீரியசாகப் பேசத் தொடங்கினார் ‘எங்களுக்கு, அதாவது காங்கிரஸ்காரங்களுக்கு காந்தியை விடப் பெரிய விஷயம் எதுவும் இல்லை. இதை எப்படியாவது கண்டுபிடிச்சிருங்க. இந்தமாதிரி ஆள்கள் சமூகத்துக்கே துரோகிகள். ஏதாவது கலவரத்தை மூட்டி விட்டுருவாங்க. ஏற்கனவே கோட்செவுக்குச் சிலை வைக்கணும்னு சில பேர் சொல்லிக்கிட்டுத் திரியிறார்ங்க’.

‘யாராவது சிலைமேல ஏறுவாங்களா? – அதாவது சிலையைக் கழுவுறதுக்கு அல்லது துடைக்கிறதுக்கு. வாரம், மாசம், வருஷத்துக்கு ஒருதரமாவது செய்வாங்கள்ல? அப்படிச் செய்றவங்க ஏதாவது பாத்திருக்கலாம்ல’. அந்தச் சிலையைக் காலையில் பார்த்தது கார்த்திகேயனுக்கு ஞாபகம் வந்தது. அதன் மீது படிந்திருந்த தூசியும், காய்ந்து போன பறவை எச்சங்களும்… பல மாதங்களாக யாரும் அதைச் சுத்தம் செய்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது.

செல்லத்துரையின் முகம் சுருங்கிவிட்டது. தான் செய்திருக்க வேண்டிய வேலையை, செய்யாமல் விட்ட வேலையை, வருஷத்துக்கொருதரமாவது செய்ய வைத்திருக்க வேண்டிய வேலையை செய்யாமல் விட்டுவிட்டோமே என்று

வருந்தினார். ‘நாந்தான் முன்னின்று செய்திருக்கணும். ஆனால் அவ்வப்போது – இதைச் சொல்லும்போது அவர் குரல் முனகலாகிவிட்டது – ‘முனிசிபாலிடிக்காரர்கள் செய்வார்கள்’. கொஞ்ச நேரம் அமைதியானார். அதைப் பற்றி தான் இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட யோசித்ததில்லை என்பது அவருக்கே வெட்கமாக இருந்தது. அடுத்த வருஷத்திலிருந்து தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் தொடர்ந்தார் ‘உங்க மார்க்கெட் கமிட்டிலயோ, இந்த மார்க்கெட்லயோ, காந்திய வெறுக்கிறவங்க யாராவது இருக்காங்களா? அதாவது வெளிப்படையா காந்தியைப் பழிச்சுப் பேசுறவங்க இருக்காங்களா? உங்களுக்குத் தெரிஞ்சவரையில. காந்திய ஒழிக்கணும் அல்லது காந்தியத்தை ஒழிக்கணும். காந்தி ஒரு முஸ்லிம் சப்போர்டர் அப்படியெல்லாம் பேசறவங்க யாரையாவது தெரியுமா? உங்ககிட்ட அல்லது அரசியல் மேடைகள்ல பேசறவங்க’

இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தனர். ‘வேற கட்சிக்காரங்க இருக்காங்க. காந்தி செய்தது எல்லாமே தப்புன்னு பேசறவங்க இருக்காங்க. ஆனால் அவங்க கூட சிலையை உடைக்கிற அளவு போவாங்கன்னு எனக்குத் தோணல. அவங்கெல்லாம் பெரிய பெரிய ஆள்கள். மார்க்கெட்லயும், சமூகத்திலயம் மரியாதைக்கு உரியவங்க. அவங்களுக்கு கட்சி, அரசியல், தேர்தல், தேர்தல் போட்டி பதவி இதுவெல்லாம்தான் முக்கியம் காந்தி அல்ல. எப்பவாவது பேசுவாங்க. அது சும்மா’. இப்படி ‘ரவுடி’ வேலைகளைச் செய்ய மாட்டாங்க’.

தான் பேசுவது தனக்கும் பொருந்துமோ என்று அவருக்கும் தோன்றியது. கட்சி அரசியல், தேர்தல், போட்டி சமயங்களில் மட்டும் காந்தியின் பெயரை தானும் தமது கட்சியினரும் உபயோகிக்கிறோம் என்பது அவர் மனதை உறுத்தியது. ஆனாலும் வெளிப்படையாகப் பேச முடியாது. இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு சப்-இன்ஸ்பெக்டர் போய்விட்டார். சிலை உடைக்கப்பட்டதிலிருந்து அவர் மனம் சஞ்சலப்பட்டுக்கொண்டே இருந்தது. இனம்புரியாத குற்ற உணர்வு அவரை பீடித்தது.

சப்-இன்ஸ்பெக்டர், மார்க்கெட் கமிட்டியின் துணைத்தலைவரான, சண்முகம் பிள்ளையைச் சந்திக்கச் சென்றபோது அவர் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய மேஜையில் தேசியக் கொடி ஒன்று இருந்தது. கார்த்திகேயனுக்கு அவர் தேசபக்தி மிகுந்தவர் என்று தோன்றியது. இன்ஸ்பெக்டர் கொடியை உற்றுக் நோக்கியதை சண்முகம் பிள்ளை உற்றுக் கவனித்தார். ‘கொடியை வைத்திருப்பதே அதற்குத்தானே!’ என்று உள்ளுக்குள் நினைத்து மகிழ்ந்து கொண்டார்.

போனை வைத்ததும், ‘வாங்க, சார். வராத ஆள் வந்திருக்கீங்க’ என்று சொல்லிவிட்டு காலிங் பெல்லை அழுத்தினார். வேலையாள் வந்ததும், ஒரு வடை சமோசா கொண்டுவா’ என்றார்.

‘என்ன சார், விஷயம்?’

‘வாசல்ல காந்தி சிலை’ அவர் சொல்லி முடிப்பதற்குள் சண்முகம் பேசத் தொடங்கினார்.

‘யார் உடைச்சிருப்பான்னு நானும் யோசிச்சுப் பாக்கிறேன் ஒண்ணும் பிடிபடலை. நக்ஸலைட்டுகளா இருக்குமோ? அவனுகதான், தங்களுக்குப் பிடிக்காத எல்லாத்தையும் ஒழிச்சிக் கட்றதில குறியா இருப்பாங்க. நாங்க வேற கட்சி சார். எங்களுக்கு காந்தி கொள்கையெல்லாம் பிடிக்காது. எங்க

கட்சி எதிர்ப்புதான். அவரு முஸ்லிம் ஆதரவு, அதுவும் பாகிஸ்தான் ஆதரவு செஞ்சது பிடிக்கல. எங்க கட்சியிலயும் கோட்செவுக்கு சிலை வைக்கணும்னு சொல்ற ஆட்கள் இருக்காங்க. அவருக்குச் சிலை வைக்கணும்னு சொல்றாங்களே தவிர, காந்தி சிலையை உடைக்கணும்னு ஒரு நாளும் சொல்ல மாட்டோம். எங்க கட்சியில அவரை ஒரு பெருந்தலைவரா ஒப்புக்கிட்டுருக்கோம். அவரை அவமானப் படுத்தணும், அல்லது அவர் சிலைய உடைக்கணும்னெல்லாம் நாங்க சொல்லல. செய்யவும் மாட்டோம். ரொம்ப ஒழுக்கமானவங்க எங்க ஆள்கள். எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை’. தங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பதை பதட்டத்துடன் அவர் சொன்னது இன்ஸ்பெக்டருக்குக் கொஞ்சம் வியப்பாக இருந்தது. ‘வேகமாகப் பேசுவதெல்லாம் மேடையில்தான்’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். போலீஸ்,கேஸ் என்பதற்கெல்லாம் பயப்படுகிறவர்போல் பேசினார். வளர்ந்துவரும் கட்சியின் பெயரைக் கெடுத்துவிடக் கூடாது, தனது பெயரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கவனமாக இருக்கும். இது உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் மனதின் ஓரத்தில் ஒரு சந்தேகம் இருந்தது. ‘காந்தியை மிக மோசமாக, அவரது நேர்மையை, எண்ணங்களை அரசியலை வெளிப்படையாக, உரத்து விமரிசிக்கிறவர்கள், யாரும் கையில் கிடைத்தால் அவருடைய சிலை மீது கல்லெறிய மாட்டார்களா?’.

அடுத்ததாக வெற்றிச் செல்வனைப் பார்க்கப் போனார். அவருடன் இன்னொரு கட்சிக்காரரான தமிழரசன் இருந்தார். இருவரும் மார்க்கெட் கமிட்டியில் முக்கிய உறுப்பினர்கள் என்பது மட்டும் கார்த்திகேயனுக்குத் தெரிந்திருந்தது. வெற்றிச் செல்வன் உள்ளூர் அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவர். தமிழரசன், அதன் தோழமைக் கட்சிக்காரர். ‘வெற்றிச்செல்வனின் பேச்சு எப்போதும் போல அலங்காரமானதாக இருந்தது. அவர் ஆளுங்கட்சிக்காரர் என்பதால் சப்-இன்ஸ்பெக்டர் கவனமாகப் பேசினார்.

‘சார், நாங்கள் எப்போதுமே காந்தியைக் அவரது கொள்கைகளைக் கடுமையாக விமரிசித்ததில்லை. சனாதனம் பற்றிய அவரது கருத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். ஆனால் அவரது செல்வாக்கு கொஞ்சமாக குறைந்துவிட்டது. காந்தி பிறந்தநாள் இறந்தநாள் தவிர, அதுவும் கொஞ்சம் பேர்தான், அவரைப் பற்றி பேசுகிறார்கள். நேர்மை, நீதி நியாயம எல்லாம் எங்கே இருக்கிறது சார்? காந்தியே ‘இர்ர்ரெலவண்ட்’ ஆகிவிட்ட போது அவர் சிலை ஒன்றும் எங்களுக்குப் பிரசனைஇல்லை. ‘காந்தி ‘இர்ரெலவண்ட்’ ஆகிவிட்டால், காந்தி சிலை உடைந்தது ஏன் சமூகத்தின், அரசியலின் அதிகார அமைப்புகளைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகிறது’ என்று கார்த்திகேயன் நினைத்தார். ‘காந்திக்கே இந்த நிலையென்றால், அவர்கள் விளம்பரங்கள் மூலம் தூக்கிவைத்துக் கொண்டாடும் தலைவர்களின் நினைவிடங்கள் என்ன ஆகும்?’ என்ற பயம் கூட இருக்கலாம்.

அவர் மார்க்கெட் வளாகத்திலிருந்து கிளம்பும் போது, ஒரு பையனை நாலைந்து பேர் பிடித்துக் கொண்டு மாறி மாறிக் கத்திக் கொண்டிருப்பதைக் கேட்டு, அவர்களை நோக்கி நடந்தார், கார்த்திகேயன். ‘ஏய், போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்துட்டார்டா! அவர்ட்ட பிடிச்சுக் கொடுத்துருவோம்!’ என்று ஒருவன் கத்தினான். ஒரு பஞ்சைப் பராரியைப் போலிருந்த ஒருவனைப் பிடித்திருந்த மற்ற நால்வரும் அப்போதுதான் அவரைப் பார்த்தனர். கார்த்திகேயேன் அவர்களின் அருகில் சென்றார். ‘இவந்தான் சார், காந்தி சிலை மீது கல்லை விட்டெறிஞ்சவன்’ என்று அவர்களில் இருவர் கூச்சலிட்டனர். அவனைப் பார்த்தார். பத்துப் பதினைந்து

வயதிருக்கும். மிகவும் மெலிந்துபோய் பசியில் வாடியவன் போலிருந்தான். ‘யார்றா பாத்தது?’ என்று அவர் கேட்டதும், நால்வரும், இரண்டடி தள்ளி நின்றுகொண்டிருந்த ஒரு பையனைக் காட்டினர். அவனும் இவனைப் போலவே இருந்தான். அவனை அருகில் அழைத்தார்.

‘இவனாடா காந்தி சிலைமேல கல்லைவிட்டு எறிந்தான்?’

‘ஆமா சார், நான் இந்த மார்க்கெட் சுவரு மேல உட்கார்ந்திருந்தேன். அவனும் உட்கார்ந்துதான் இருந்தான். இரண்டுபேரும் சும்மா கல்விட்டெறிந்து விளையாடிக் கொண்டிருந்தோம். என்ன தோணுச்சோ, அந்தக் காந்தி கண்ணாடிய உடைக்கிறேன்ன்னு கல்லை வீசினான். முதல்ல அது மேல படல. மூணாவது தரம் எறியும் போது, விரல்ல பட்டது. இன்னும் இரண்டு மூணுதர ஒரு பெரிய கல்லைத் தூக்கி எறிஞ்சான். கடைசியில கண்ணாடியில பட்டு உடைஞ்சிருச்சு’.

‘பிறகு என்னடா செஞ்சீங்க?’

‘இரண்டு பேரும் இந்த இடத்த விட்டு ஓடிட்டோம்’.

கார்த்திகேயன் அமைதியாக இருந்தார். பிறகு முதல் பையனைப் பிடித்திருந்தவர்களிடம் கேட்டார்

‘இவனை நீங்க எப்படிடா பிடிச்சீங்க?’

‘அதுவா சார், இவங்க கல்லெடுத்து வீசி விளையாடிக்கிட்டுருந்தாங்கன்னு ஒரு ஆட்டோ டிரைவர் சொன்னாரு. இவனுக இரண்டு பேரு தினம் இங்க உங்காந்துகிட்டிருப்பாங்க. வர்றவங்க போறவங்ககிட்ட ஏதாவது கேட்டு வாங்கிக்குவாங்க. இங்கேயே கிடப்பாங்க’ அதான் விசாரிச்சோம், பிடிச்சிட்டோம்’.

‘சரி, தம்பி இங்க வா’ என்று அந்தப் பஞ்சைப் பராரிப் பையன்களை அழைத்துக் கொண்டு ஒரு டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு, இருவருக்கும் டீயும் வடையும் வாங்கிக் கொடுத்தார். முதலில் அவருடைய மேலதிகாரியான, இன்ஸ்பெக்டருக்குப் போன் செய்தார். அவருக்கும் விஷயம் சப்பென்று ஆகிவிட்டது.

‘சார், கமிஷனர்ட்ட சொல்லணும் சார்’

‘நீ சொல்ல வேண்டாம்யா! ஏற்கனவே உம்மேல கோவத்தில இருக்காரு. இதுல ஏதாவது நல்ல கேஸ் வரும்னு நினைச்சிருப்பாரு. இதிலயும் ஒண்ணுமில்லைன்னா, எரிச்சல்படுவாரு. நானா இன்னைக்கு அல்லது நாளைக்கு சொல்லீர்றன். அந்தப் பசங்க ஒத்துக்கிட்டாங்களா?’

‘பாக்கப் பாவமா இருக்காங்க சார். படிக்காத பசங்க. சோத்துக்கு வழியில்லை போல. யோசிச்சு செய்த மாதிரித் தெரியல’

‘ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வா. நானும் பாக்றேன். ஏதாவது பிரச்சனை பெருசா வந்திரக் கூடாது’

‘சரி சார்’ போனை வைத்துக் கொண்டார். கொஞ்ச நேரத்தில் இரண்டு பையன்களையும் ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஸ்டேஷனுக்குக் கிளம்பினார். ஆட்டோவில் ஏறும் போது கேட்டார். ‘காந்தின்னா யாருன்னு தெரியுமாடா?’

‘தெரியும் சார், மகாத்மா காந்தி’

‘அது எப்படிடா உனக்குத் தெரியும்’

‘எங்களைப் பிடிச்சு அடிச்சவங்க சொன்னாங்க’

‘அவர் என்னடா செய்தார்?’ கொஞ்ச நேரம் இரண்டு பையன்களும் அமைதியாக இருந்தார்கள்.

‘எத்தனாம் கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்கீங்க?’

‘நாலாம் கிளாஸ் படிச்சேன் சார்’ அவர்களின் ஒரு பையன் சொன்னான்.

‘நீ?’

‘தெரியல சார்’

சப்-இன்ஸ்பெக்டர் அமைதியாகிவிட்டார். ‘பெரிய பெரிய காங்கிரஸ் காரங்களே காந்தியை சரியாப் புரிஞ்சிக்கிட்டாங்களா என்பது சந்தேகம். இவனுகள்ட்டக் கேட்டா, என்ன சொல்வானுக? ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’னு காந்தி நினைச்சாரு. இவனுகளுக்கு சோத்துக்கே தரிகணத்தோம். படிப்பும் கிடையாது. அம்மா அப்பா கிடையாது. இவர்களைக் குற்றவாளிகளாக ஆக்குவதா? ஒருதடவை ஸ்டேஷன்ல இவனுக பேர எழுதிட்டா. அதோட ஒழிஞ்சானுக. எந்தப் பிடிபடாத கேஸுன்னாலும், இவனுகளைப் பிடிச்சு உள்ள வச்சிருவானுக.’ என்று யோசித்துக் கொண்டே இருந்தார்.

இவர்கள் வாழ்க்கையை இழந்தவர்கள். ‘தன்னால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று எழுதிக் கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்தார். அதன் விளைவுகளை எதிர்நோக்கத் தயாராகிக் கொண்டிருந்தார்.

‘காந்தி சிலையை உடைக்கும் தைரியம் இந்தியாவில் யாருக்கும் வராது’ என்ற நினைப்பு ஆறுதலாக இருந்தது. ஆட்டோ நகரத் தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *