இளங்கோ மறந்தது
கதையாசிரியர்: இலங்கையர்கோன்
கதைத்தொகுப்பு:
சரித்திரக் கதை நாடகம் முல்லை
கதைப்பதிவு: November 7, 2025
பார்வையிட்டோர்: 65
(1946ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இடம் : மரணத்திற்கு அப்பால்.
நடிகர்கள் : கண்ணகி, மாதவி, இளங்கோவடிகள்.
மாதவி : யார் அது, இந்த இருளில்?
கண்ணகி : (நலிந்த குரலில்) நான்…
மாதவி : நான் என்றால்? ஊர் பேர் இல்லையா?
கண்ணகி : காவிரிப்பூம்பட்டினத்துக் கோவலரின் மனைவி கண்ணகி. என்னை இவ்வளவு பயமுறுத்தலுடன் கேட்கும் நீ யார் என்பதை நான் அறியலாமா?
மாதவி : ஓ! நான் அதே கோவலரின் காதலி, கிழத்தி.. மாதவி. என்ன என்னை உனக்குத் தெரியாதா?
கண்ணகி : இல்லை. நான் உன்னை ஒரு பொழுதும் பார்த்ததில்லை. மாதவி, உன்னைக் காணவேண்டும் காணவேண்டும் என்று வெகு நாளாக ஆவல் கொண்டிருந்தேன். பூவுலக வாழ்நாட்களில் அந்தப் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை.
மாதவி : என் வீடுதான் எப்பொழுதும் திறந்து கிடந்ததே. நீ ஏன் வரவில்லை? ‘பத்தினி’ என்ற மமதை உன்னை விடவில்லை போலும். ஆ ! வந்திருந்தாயானால், என் காதலரின் மனைவி என்ற முறையில் உனக்கு எவ்வளவு மரியாதைகள் எல்லாம் செய்திருப்பேன். அது கிடக்க! என்னைக் காணவேண்டும் என்று ஏன் உனக்கு அவ்வளவு ஆவல்? நானும் உன்னைப்போல ஒரு பெண்தானே?
கண்ணகி : கோபப்படாதே, அம்மா! மல்லிகையும் மணமும் போல் நானும் என் நாதரும் நன்றாக இருந்தோம். இளந்தென்றல் வாசனைக்கொள்ளை அள்ளிவரும் நிலவொளி மாடத்திலே. ஆ! அந்த இன்ப நாட்கள்! என்னை அணைத்திருந்த என் நாதரின் கரம் கொஞ்சம் தளருமாயின், நான் எவ்வளவு வேதனைப்படுவேன் (கண்ணீர் வடிக்கிறாள்).
மாதவி : (பொறுமை இழந்து) இது என்ன பெரிய காரியம்? உனக்கு மட்டும் பிரத்தியேகமானதல்லவே? நானுந்தான் அப்படியெல்லாம் அனுபவித்திருக்கிறேன்.
கண்ணகி : இவ்வாறு ‘கவவுக்கை ஞெகிழாமல்’ என்னைப் பொருந்தியிருந்த என் கணவர் திடீரென்று என்னைப் புறக்கணித்துவிட்டு அகல்வதென்றால், அதற்கு ஒரு காரணம் வேண்டுமே. நீயே அந்தக் காரணமாக இருந்தால்? என்னிடத்தில் இல்லாதது எதையோ அவர் உன்னிடத்தில் கண்டிருக்கவேண்டும். அது என்ன என்று அறிய எனக்கு மிக ஆவலாக இருந்தது. அந்த மகத்தான இன்பத்தில் நான் என்னையே மறந்துபோய் இருந்தேன். அவர் என் அருகில் இல்லாமல் போயே விட்டார் என்பதை முதலில் என்னால் நம்பவே முடியவில்லை.
மாதவி : உன்மேல் பிழை இல்லை. நீ அறியாத பெண். உன் கணவருடைய உள்ளம் கவிஞருடைய உள்ளம் போன்றது. அந்தக் கவிதை உள்ளத்தை உன்னால் திருப்தி செய்ய முடியவில்லை. சதா புதுமையையே தேடி விழைந்து கொண்டிருந்த அவருடைய ஐம்புலன்களும் மனமும், தினமும் நன்றாகவே இருந்த உன்னுடைய பழமையைக் கண்டு சலித்துப் போய்விட்டன. உன்னால் புதுமையை உண்டு பண்ண முடியவில்லை. அழகுணர்ச்சி ததும்பி வழிந்து கொண்டிருந்த உன் கணவரின் மனம்…
கண்ணகி : மாதவி, இப்படியெல்லாம் பேசாதே, என்னிடத்தில் அழகு இல்லையா? என் உடலிலும் உள்ளத்திலும் பூரித்து நின்ற அழகையும் இளமையையும் அவர் ஒருவருக்குத்தானே உரிமை செய்தேன்? அப்படி உரிமை செய்வதிலே நான் இறந்துபோக வேண்டி நேரிட்டிருந்தாலுங் கூடக் கொஞ்சமும் கலங்கியிருக்க மாட்டேன். என் அழகு அவர் இன்பம்.
மாதவி : உன்னுடைய அழகைப்பற்றிய மமதை இன்னும் உன் மனத்தைவிட்டு அகலவில்லைபோல் இருக்கிறது. ஆமாம், நீ என்னிலும் பார்க்க அழகிற் சிறந்தவளாகத்தான் இருந்தாய்; அதை நான் மறுக்கவில்லை. ஆனால், அழகுமட்டும் இருந்தால் போதுமா? தாமரைப்பூ அழகாக இருக்கிறது. ஆனால் அதை எத்தனை நாட்களுக்கு வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கமுடியும்? கையில் எடுத்து மோந்தவுடன் அதன் அழகெல்லாம் எங்கேபோய் விடுகிறது? கண்ணகி : உன்னிடத்திலே என்ன இருந்தது? நீ என்ன ரம்பை ஊர்வசி அல்லவே; மானிடப் பெண்தானே?
மாதவி : ஆ! என்னிடத்தில் புதுமை இருந்தது. அவர் மனத்தில் நிகழும் மாற்றம் ஒவ்வொன்றையும் அறிந்துகொண்டு அதன்படி நடக்கும் சக்தி எனக்கு இருந்தது. நான் என்றும் புதுப் பெண்ணாகவே இருந்தேன். என் கடைவிழியின் பிறழ்ச்சியிலே, இளநகையின் மோகனத்திலே, சிறுவிரலின் அசைப்பிலே, தேன் குடித்த மந்திபோல் எந்நேரமும் மயங்கிக் கிடந்தார். இவை மாத்திரம் அல்ல. என் ஆடலும் பாடலும்…
கண்ணகி : போதும் போதும், உன் ஆடலும் பாடலும்! உன்னுடைய ஆடலும் பாடலும் யாருக்கு வேண்டும் ? வாழ்வின் நிலையான ஆடலையும் பாடலையும் தம்முள் உணர்ந்து கொள்ளுவதற்கு மனிதர் செய்யும் மூடத்தனமாக முயற்சி அல்லவா ஆடலும் பாடலும்? இவைகளைக்கண்டு அறிவாளி ஒரு பொழுதும் மயங்கமாட்டான்.
மாதவி : உனக்கே புரியாத விஷயங்களுள் தலையிட்டுக்கொண்டு வீணாக நீ துன்பப்படுகிறாய். பல நூற்றாண்டுகளாக நம் முன்னோர் போற்றி வளர்த்து வந்த அருங்கலைகளை, அவைகளைப் பற்றி ஒன்றுமே அறியாத நீ எங்ஙனம் இகழ்ந்து பேசலாம்? அது இருக்கட்டும்; உன் அழகைமட்டும் பார்த்துக்கொண்டு ஒருவன் உன்னுடைய ஆசையிலே எத்தனை நாட்களுக்கு வீழ்ந்து கிடப்பான்?
கண்ணகி : உன்னிடத்தில் இல்லாத, குலமகளுக்குரிய அம்சங்கள் என்னிடம் எத்தனையோ இருந்தன. நாணம், மடம், அச்சம் பயிர்ப்பு-
மாதவி : பூ! உன் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பைக் கண்டு யார் வியக்கப் போகிறார்கள்? இவையெல்லாம் கையாலாகாத பெண்களின் பழைமையான பலமற்ற ஆயுதங்கள். ஆடவனைத் தம் அறிவினாலும் வல்லமையினாலும் வசியம் செய்யமாட்டாத பேதைப் பெண்கள் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்ற தம் மேன்மையை காட்டி அவனுடைய இரக்கத்தைப் பெற முயல்கிறார்கள்.
கண்ணகி : மாதவி, நீ குதர்க்கம் செய்கிறாய். உன்னோடு வாயாட என்னால் முடியாது. என்னுடைய பதிபக்தி, என் கற்பு என்னுடைய திறமை இவைகளைப்பற்றி உன்னால் சிறிதளவேனும் உணர்ந்து கொள்ள முடியுமா?
மாதவி : பதிபக்தி, பதிவிரதைத்தன்மை இவையெல்லாம் அடிமைத் தனத்தைக் குறிக்கும் வார்த்தைகள் அல்லாமல் வேறு என்ன? உன் கணவர் செய்ததெல்லாம் சரியென்று அதற்கு எதிர்வார்த்தை பேசாமல் நீ செயலற்று இருந்தாய். உன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நீ வல்லவளாக இருந்திருந்தால் உன் கணவர் ஒருபொழுதும் என் வீடே கதி என்று கிடந்திருக்கமாட்டார். உன் வல்லமையின்மைதான் பதிவிரதைத்தனமா?
கண்ணகி : (தன் காதுகளைக் கைகளால் மூடிக்கொண்டு) ஆ! இவை என்ன வார்த்தைகள்! மாதவி, உன் பெண்மை இவ்வளவு தூரத்திற்கு உன்னைவிட்டு அகன்றிருக்கும் என்று நான் கனவிலும் கருதவில்லை. என் காதற் கணவரை உன் செயற்கை மாயங்களினால் மயக்கி அவரை ஓட்டாண்டியாகத் துரத்தியதும் அல்லாமல், அவர் சித்தமே என் பேறு என்று வழிபட்டிருந்த என்னையுமா தூற்றுகின்றாய்? ஆம், ஆம், பதிபக்தி, கற்பு முதலியன எல்லாம் உன் செயலில் அர்த்தமற்ற வார்த்தைகளாகத்தான் ஒலிக்கும். உன்னால் அவைகளை ஒருபொழுதும் உணர்ந்து கொள்ளவே முடியாது.
‘நான் என்பதனை மறந்து, தனக்காக அன்றிப் பிறர்க்காக வாழ்வது என்ற தத்துவத்தின் மேன்மையை, அதனால் வரும் உளமகிழ்ச்சியை நீ உணர்ந்துகொள்ளும் வரைக்கும் இவைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளமாட்டாய். தியாகம் என்ற தீயினால் தான் மனிதனுடைய ஆத்மா பரிசுத்தம் அடைகிறது. இன்று பூவுலகத்தில் சென்று பார்த்தால் தெரியும் மனிதர் எல்லாரும் என்னை எப்படித் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள் என்று.
மாதவி : தெரியும், தெரியும், உன் பதிவிரதைத்தன்மையை மெச்சி உன்னைத் தெய்வமாகக் கொண்டாடும் அந்த உலகம், இன்று என்னைத் தெருக் கூத்திலும், நாடக மேடையிலும், சினிமாத் திரையிலும் வைத்து வேசி விபசாரி என்று தூற்றுகிறது. ஆனாவிற்கும் ஆவன்னாவிற்கும் வேறுபாடு தெரியாத அவ்வளவு பாமரனான நடிகன் ஒருவன், நரி சிங்காதனத்தில் ஏறியதுபோல் நாடகமேடையில் ஏறி, ‘தாசிகள் நேசம் மோசம்’ என்று பாடும்பொழுது என் மனம் எவ்வளவு கொதிக்கிறது! நீ எவ்வளவு பதிவிரதையோ, நானும் அவ்வளவு பதிவிரதை. என் மானிட வாழ்வு முழுதும் ஒரே ஒரு காதலரே என் இருதயத்திலும் உடலிலும் இடம் பெற்றிருந்தார். ஆனால் உன்னைப்போல் நான் அவரைத் தெய்வமாகக் கொண்டாடி அடிமை வாழ்வு வாழவில்லை. எவ்வழியிலும் அவரை எனக்குச் சமமாகவே பாவித்தேன். அந்த ஒரு காரணத்தினால்தான் என் மையலிலே அவரும், அவர் மையலிலே நானும் அவ்வளவு காலம் சொக்கிப் போய் இருந்தோம்.
கண்ணகி : அதுதான் அவர் அப்படித் திடீரென்று உன்னை விட்டு என்னைத் தேடி வந்தாராக்கும்!
மாதவி : ஆம், ஆம். மலடி சந்ததியை விருத்தி செய்வாளென்றா.
கண்ணகி : (திடீரென்று கண்களில் தீப்பொறி சிதற, நெற்றியில் வேர்வை அரும்ப, குறுமூச்செறிந்து, வீராவேசம் கொண்டு) அடி துரோகி, என்ன சொன்னாய்? நானா மலடி? நீதான் என் கணவரின் ரத்தத்தை உறிஞ்சி ஒரு பிள்ளை பெற்றுவிட்டாயாக்கும்! இதோ பார். நீயும் உன் குலமும் உன் ஆடலும் பாடலும் எல்லாம்
(கண்ணகி சாபம் கூறி முடிப்பதற்குள். இளங்கோவடிகள் எங்கிருந்தோ வந்து தோன்றுகிறார்.)
இளங்கோ : தாயே, மன்னித்தருள்வாய். எவ்வளவோ துயரங்களையும் இன்னல்களையும் சகித்துக்கொண்டே பொறுமையின் சாகரமாகிய உனக்கு இந்த அபலை மாதவி, சிந்தனை இல்லாமல் வீசிய வார்த்தைகளைச் சகித்துக்கொள்ள முடியாதா? உலகம் முழுவதையுமே வாரி அணைத்துக்கொள்ளும் உன் பரந்த அன்பில் இவளுக்கும் ஒரு துளி கொடுத்து உதவு. சரி, அப்படித்தான். நீங்கள் இருவரும் சகோதரிகள். பூவுலகில் நடந்தது என்னவோ எவராலும் மாற்றியமைக்க முடியாத ஓர் ஊழின் பயன். நாம் எல்லாம் விதியின் வலிய கைகளில் கிடந்து ஆடம் செயலறியாப் பதுமைகள்தாமே!
– முல்லை – 7, முல்லை இலக்கியக் களஞ்சியம், 1946-1947இல் வெளிவந்த முல்லை இதழ்களின் முழுத் தொகுப்பு, பதிப்பும் தொகுப்பும்: முல்லை மு.பழநியப்பன், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, முல்லை பதிப்பகம், சென்னை.
| இலங்கையர்கோன் என்ற பெயரில் எழுதிய த. சிவஞானசுந்தரம், செப்டம்பர் 6, 1915 - அக்டோபர் 14, 1961) ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவர். தமிழில் சிறுகதை தோன்றி வளர்ந்த காலத்தில் அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவர்களில் ஒருவர் என்று பாராட்டுப் பெற்றவர். இவர் விமர்சனம், நாடகம் ஆகிய துறைகளிலும் ஈடுபாடு காட்டினார். வாழ்க்கைச் சுருக்கம் இலங்கையர்கோன் யாழ்ப்பாணம் ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஈழத்து சிறுகதைத்துறை முன்னோடிகளுள் இவருடைய உறவினரான…மேலும் படிக்க... |