இன்பத்தின் விலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 13, 2025
பார்வையிட்டோர்: 197 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சாயாஜிராவ் தையற் கடையில், வேதாசலம் ஒருவனுக்குத்தான் உண்மையானவன்என்று பெயர். காலையில் ஏழு மணிக்கு மெஷினடியில் உட்கார்ந்தால் இரவு கடை மூடும் வரையில் மாடுபோல் உழைப்பான். அதுவும் தீபாவளி நெருக்கத்தில் இரவும் பகலுமாக அவன்கண்விழித்து வேலை செய்வதுபோல் வேறு எவரும் செய்யமாட்டார்கள். 

வேதாசலம் அன்று மெஷினெதிரே சிந்தனையுடன் உட்கார்ந்திருந் தான். அந்தச் சிறு இடத்தில் மீதமுள்ள நான்கு தையல் இயந்திரங்களும் வெகு வேகமாக வேலை செய்வதற்கு அடையாளமாக ஒலித்துக் கொண்டிருந்தன. 

முதலாளிக்கு வேதாசலத்திடம் அத்யந்த நம்பிக்கை. ஏனெனில் எத்தனையோ பேர் வேலை கற்றுக் கொள்ள சாயாஜியிடம் வந்திருக் கிறார்கள். அரைகுறையாக வேலை கற்றுக் கொள்வார்கள். பிறகு சொல்லிக் கொள்ளாமல் போய் அந்த ஊரிலேயே இரண்டு மூன்று தெருவைத் தாண்டி ஒரு தையல் மெஷினை வாடகைக்கோ, கடனுக்கோ வாங்கித் தொழிலைத் தொடங்கிவிடுவார்கள். அப்படிப் போகவில்லை வேதாசலம். உண்மையாக உழைப்பவனிடம் யாருக்கும் பிரியமும் நம்பிக்கையும் விழுவது இயல்புதானே? 

சிறிது நேரத்துக்கெல்லாம் தலையைப் பிடித்தவண்ணம் குனிந்து யோசனையில் ஆழ்ந்திருந்த வேதாசலம் தலையை நிமிர்த்திச் சாயாஜியிடம், “தலையை வலிக்கிறாற் போலிருக்கிறது. ஒரு ஸிங்கிள் டீ போட்டுவிட்டு வருகிறேன்” என்றான். 

சாயாஜி வேறு பேச்சுப் பேசவில்லை. “சரி சீக்கிரம் வந்துவிடு” என்றார். 

டீக்கடைக்கு விரையுமுன் மார்க்கெட் சந்தில் திரும்பினான் வேதாசலம். தினமும் இந்நேரத்தில் டீ குடிக்கும் காரணத்துடன் அந்தப் பக்கம் வருவது வேதாசலத்தின் வழக்கமாகி விட்டது. காரணம், மரகதம் தினமும் அவனுக்காக வழி மேல் விழி வைத்துக் கொண்டு அங்கே காத்துக் கொண்டிருப்பதுதான். 

வேதாசலம் சிரித்த முகத்துடன் வருவதைப் பார்த்தவுடனேயே மரகதத்துக்கு உள்ளத்தில் எழுந்த இன்பம், அன்றும் நேற்றும் எஜமானி அம்மாள் வீட்டில் மாடுபோல் உழைத்த துன்பத்தையும் மறக்குமாறு செய்யும். மரகதம் வேலை பார்த்து வந்த வீடு பெரிய பணக்கார வீடு. 

முன்பெல்லாம் மரகதத்தின் தாய் அந்த வீட்டில் வேலை பார்த்து வந்தாள். இப்பொழுது அவளுக்கு முன்னைப்போல் வேலை செய்ய முடியாமல் கைகள் விழுந்துவிடவே, மரகதம் தாயின் அந்த வேலையை ஏற்றுக் கொண்டாள். கல்யாணமாக வேண்டிய வயதிலும் அவள் வெளியே போய் வேலை செய்து வந்துதான் ஆக வேண்டுமென்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. 

அந்த ‘நீல பங்களா’ வீட்டில் வேலைப்பளுவுக்குக் குறைவேயில்லை. காலேஜ் போகும் மஞ்சுபாஷிணிக்குத் தலைவாரிப் பின்ன வேண்டும். கடைத் தெருவுக்குப் போய் சாமான் வாங்க வேண்டும். இம்மாதிரி இன்னும் எத்தனை எத்தனையோ இதர வேலைகள்! 

கடைத் தெருவுக்குக் காலை பத்து மணி சுமாருக்குச் சாமான் வாங்கப் போன ஒருநாள், அப்படியே சில துணிகளைத் தைக்கக் கொடுத்துவிட்டு வருமாறு ‘நீல பங்களா’வின் எஜமானியம்மாள் கட்டளையிடவே, மரகதம் சாயாஜிராவ் கடைக்கு வர நேர்ந்தது. 

அவள் கடைக்குப் போன சமயம் சாயாஜிராவ் இல்லை.வேதாசலம் தான் மரகதத்திடமிருந்து அளவு கேட்டுத்துணி வாங்கினான். துணியைத் தைப்பதற்குக் கொடுத்த மரகதம் அதே சமயம் வேதாசலத்தின் இதயத்து அன்பை, தனது அன்புடன் சேர்த்து தைக்கக் கொடுத்து விட்டாள். அது முதற்கொண்டு மார்க்கெட் மூலையில் தினம் ஐந்து அல்லது பத்து நிமிஷங்களாவது சந்தித்துப் பேசுவது அவர்கள் வழக்கமாகி விட்டது. 

தீபாவளி நெருக்கத்தில் இரண்டு மூன்று தினங்கள் வேலை மிகுதியின் காரணமாக அவனால் மரகதத்தைச் சந்தித்துப் பேச முடியவில்லை. இந்த நிலையில் வேலையின் மீது வேதாசலத்துக்குக் கவனம் எப்படிச் செல்லும்? ஏதாவது சாக்கு சொல்லிவிட்டு மரகதத்தைச் சந்திக்கச் சொல்ல துடித்தான். நல்லவேளை! பழியை ஏற்கத் தலைவலி வந்து குதித்தது. 


மரகதத்துடன்அன்று பேசிவிட்டுத்திரும்பும்போது உண்மையிலேயே வேதாசலத்துக்குத் தலையை வலிக்கத்தான் செய்தது. அங்கே போனால் மலை மலையாக ரவிக்கையும் ஜம்பருமாகத் தைக்கப்பட வேண்டிய துணிகள் குவிந்திருந்தன. அவை அவனைப் பார்த்துப் பயங்கரமாகச் சிரித்துக் கொண்டிருந்தன. இங்கோ கிழிந்த ஆடையையும் ரவிக்கை யையும் அணிந்த மரகதம் அன்பை அள்ளிக் கொட்டிச் சிரித்துக் கொண்டிருந்தாள். 

‘எத்தனை விதமான துணிகளை இந்தக் கைகளால் தைக்கிறோம்? அன்பின் வளர்ச்சிக்கு அடையாளமாக அவள் ஒருநாள் திடுக்கிடும் வண்ணம் ஒரு பரிசு அளித்தால் என்ன?’ என்று எண்ணினான் வேதாசலம். 

தீபாவளிக்கு முழுசாக இருண்டு தினங்கள் கூட இல்லை. சாயாஜி ராவ் கடைத் தையல் இயந்திரங்கள் எழுப்பிய ஒலியில் தீபாவளி இன்னும் சீக்கிரம் வந்துவிடும் போலிருந்தது. வர்ணத் துணிகள் வித வித ரூபத்தில் ரவிக்கைகளாக மாறிக் கொண்டிருந்தன. இரவு இரண்டு, மூன்று மணி என்று கண் விழித்துத் தைத்து மெஷின் மீதே சோர்வுற்றுத் தூங்கும் வரை தையற்காரர்கள் வேலை செய்தனர். 

அன்று பொழுது விடிந்ததும் சாயாஜி வேதாசலத்தை எழுப்பி, “தம்பீ! இந்தத் துணிகளெல்லாம் சீக்கிரம் வேணுமாம். கொஞ்சம் ‘சாயா’ போட்டு விட்டு ஒரு மூச்சுப்பிடி” என்றார். 

சாயாஜி கொண்டு வந்திருந்த விதவிதமான பட்டுத் துணிகள் வேதாசலத்தின் மனத்தைக் கவர்ந்தன. இரண்டே வித அளவுகளில் தைக்கப்பட வேண்டிய அந்தத் துணிகளைப் பார்த்த அவன், ‘இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் இந்த வீட்டில் இரண்டே இரண்டு பெண் பிள்ளைகள்தாமா? ஹூம்…’ என்று தனக்குள் சிரித்துக் கொண்டான். அந்தத் துணிகளில் ஒரு துணி அவன் மனத்தை மிகவும் கவர்ந்து விட்டது. எவ்வளவு நேரம் துணிகளை மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தானோ, தெரியாது! 

“தம்பீ! அவசரம் வேலையை ஆரம்பி!” என்று சாயாஜியின் குரல் அவனைத் தன் நினைவுக்குக் கொண்டு வந்தது. 

தையல் மெஷினின் ஒலி எழுந்து அந்த இடத்தின் வேலைத் துரிதத்தை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது. வேதாசலத்தின் கையும் காலும் வேகமாக இயங்கினாலும், அவன் எண்ணம் என்னவோ அந்தத் துணியிலேயே லயித்திருந்தது. அந்தப் பட்டுத் துணியும், அதை மரகதத் துக்குத் திடீரென அளித்தால் அவள் திகைப்புற்றுக் கன்னங் குழிய முகம் சிவக்க நாணித் தலைகுனியும் பாவமும் அவன் கற்பனையில் எழுந்து நடமாடின. அந்த நினைப்பில் வேதாசலம் தன்னை மறந்து வாய் விட்டுச் சிரித்தான். சட்டென எல்லாரும் அவனையே திரும்பிப் பார்த்தனர். 

“என்ன, அண்ணே! தானே சிரித்து கொள்கிறாயே! நாங்களும்தான் கொஞ்சம் ரசிக்கிறோமே!” என்றான் சக தொழிலாளி ஒருவன். 

“இல்லை… எல்லாரும் கடைசி நிமிஷத்தில் துணியைக் கொடுத்து விட்டுத் தை தை என்று குதிக்கிறார்களே… ஒருவருடைய தலையையும், இன்னொருவருடைய கையையும் சேர்த்துத் தைத்துப் போட்டால் என்ன ஆகும் என்று யோசித்தேன். சிரிப்பு வந்தது” என்றான் வேதாசலம். அதைக் கேட்டு எல்லாரும் ‘கடகட’வென்று சிரித்தனர். 

ஆனால், அதற்குப் பின் வேதாசலம் சிரிக்கவில்லை. யோசனையில் ஆழ்ந்தவாறே வேலையைச் செய்தான். அவன் கண்களெதிரே அந்தப் பட்டுத் துணி பலப்பல உருவங்கள் எடுத்து அவனை மதி மயக்கிக் கொண்டிருந்தன. அம்மாதிரித் துணியில் மரகதத்துக்கு ரவிக்கை தைத்துக் கொடுக்க வேண்டும் என்று மனத்தில் திட்டம் போட்டுக் கொண்டான். 

அன்றும் இரவில் சரியான வேலை. இரண்டு மணிக்கு மேல் ஒவ்வொருவரும் பேயடித்தவர்கள் போல் சோர்ந்து மெஷின் மீதே சாய்ந்து கிடக்க, வேதாசலம் மட்டும் வெகு வேகமாகத் தைத்துக் கொண்டிருந்தான். சாயாஜிராவ் ‘அவசரம்’ என்று சொன்ன துணியும், அவன் தைப்பதும் ஒன்றுதான். ஆனால், அளவுதான் வேறு. 

ஜாக்கெட் அழகாகத் தைத்து முடித்தாகிவிட்டது. வேதாசலத்திற்குப் பரம திருப்தி. வளப்பம்மிக்க அங்கங்களை மறைக்கவிருக்கும் அந்த ஜாக்கெட்டோ மடித்ததும் ஒரு கைப்பிடிக்குள் அடங்கவிட்டது. அவ்வளவு மெல்லிய சில்க்! அதைச் சுருட்டித் தன் பையில் திணித்துக் கொண்டு வேலையைக் கவனிக்கத் தொடங்கினான். 


காலை, அதே டீ சாப்பிடும் நேரம். அவசரம் அவசரமாகக் கிளம்பினான் வேதாசலம். சாயாஜியும் தடுக்கவில்லை. ‘பாவம், இராப் பகலாக உழைக்கிறான்’ என்று முணுமுணுத்துக் கொண்டார். வேதாசலம் மார்க்கெட் சந்தை நோக்கி விரைந்தான். அவனுக்கு முன்பாகவே மரகதம் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தாள். 

“உனக்கு ஒன்று கொண்டு வந்திருக்கிறேன்” என்றான் வேதாசலம். இரண்டு மூன்று தினங்களாககண்விழித்ததால்கண்கள்இடுங்கியிருந்தன. தலைமயிர் வாரப்படாமல் முகத்திலெல்லாம் விழுந்து கிடந்தது முகத்தில் களையில்லாவிடினும் களிப்பு கூத்தாடியது. 

“அது இருக்கட்டும்… என்னங்க இப்படி முகமெல்லாம் ஒடுங்கிப் போய் இருக்கிறது? எங்கள் எஜமானியம்மாதான் வாட்டுகிறார் களென்றால் அங்குமா இப்படி…” என்று கூறும்போது மரகதத்தின் கண்கள் அவனைப் பரிவுடன் ஏற இறங்கப் பார்த்தன. 

வேதாசலம் இதையெல்லாம் கவனிக்கவில்லை. “இன்றைக்கு இரவு தீபாவளி இல்லையா மரகதம்? உனக்கு ஒரு பரிசு கொண்டு வந்திருக்கிறேன்!” என்று கூறிய வண்ணம் அந்த ரவிக்கைப் பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தான். 

அதைப் பிரித்துப் பார்த்த மரகதம், ‘அம்மாடி! இம்மாம் விலைத் துணி எனக்கு எதற்கு?” என்றாள். வேதாசலம் அவளை இடைமறித்து, ‘அது பற்றி உனக்கு என்ன மரகதம்? நம் இன்பத்துக்கு இது ஒரு விலையாகுமா? அடுத்த தீபாவளிக்குப் புருஷனும் பெண்சாதியுமாக…” என்று முடிப்பதற்குள் மரகதத்தின் முகத்தில் வெட்கம் கொப்பளித்தது. அடுத்த கணம் அவள் ‘சர்’ என்று அங்கிருந்து எங்கோ மாயமாய் மறைந்து விட்டாள். 


எப்படியோ ஒருவழியாகத்துணிகள் தைத்து முடிந்தது. இரவுக்கிரவே அந்தத் துணிகளைச் சாயாஜிராவ் எடுத்துக் கொண்டு அவரவர்களின் வீட்டில் பட்டுவாடா செய்யப் புறப்பட்டார். 

மரகதத்தின் எஜமானி – அதுதான் ‘நீல பங்களா’வின் எஜமானியின் வீட்டிற்கு சாயாஜி நுழைந்தவுடனேயே, ‘வா, அப்பா! உனக்காகக் காத்திருக்கிறோம். எங்கே தீபாவளிக்குத் துணி கொடுக்காமல் போய் விடப் போகிறாயே என்று பயந்தோம்” என்று வரவேற்றாள் எஜமானி யம்மாள். 

அவசரம் அவசரமாக மூட்டையை அவிழ்ந்து உதறிய மஞ்சுபாஷிணி பரபரப்பான குரலில், “அம்மா… இவர் புள்ளி போட்ட ஒமெகா சில்க்கைக் கொண்டு வரவில்லையே? அதைத்தானே நாளைக்குப் போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன்” என்றாள். 

”அம்மா! அவர் ஆசையாக வாங்கித் தந்ததாயிற்றே” என்று இடை யிடையே அவள் உதடுகள் முணுமுணுத்தன. 

“இருக்குமடீ… மெல்லப் பாருடீ…” என்று சொல்லிக் கொண்டே எஜமானியம்மாள் தையற்காரரை அந்தத் துணியைக் குறித்து வினவினாள். 

இதுவரை எந்த வீட்டிலிருந்தும் ‘துணியைக் காணோம்; துணியின் அளவைக் குறைத்துத் துணியை அபகரித்துக் கொண்டார் என்ற பெயர் வாங்காத சாயாஜியை இந்தப் புகார் திடுக்கிடச் செய்தது. 

“அமமா… தைக்கக் கொடுத்தீங்களோ, இல்லையோ! நன்றாக வீட்டிலேயே இருக்கிறதா என்று பாருங்கள் அம்மா!” என்றார் சாயாஜி மிகவும் பணிவாக. 

இரண்டு எஜமானிகளும் சிங்கம், புலியாயினர். 

வருத்தத்துடன் தலைகுனிந்தவாறு சாயாஜி கடைக்குத் திரும்பினார். எல்லா வேலையாட்களும் அவரவர் வீட்டிற்கு திரும்பி விட்டனர். விளக்கை ஏற்றிக் கடை முழுதும் தேடினார். இவ்வளவு நாள்கள் கஷ்டப்பட்டதனைத்தும் வீணாகிவிட்டதே என்று மனம் துடித்தார். 


மறுநாள் காலையில் மரகதம் தலை முழுகிவிட்டு அன்புப் பரிசாக, இன்பத்தின் விலையாகக் கிடைத்த அந்த ரவிக்கையை அணிந்து கொண்டாள். அவள் உடலுக்கு அது அழகாகத்தானிருந்தது. ஆனால், அதற்குத் தக்கபடி புடைவையும் இருந்திருந்தால்… 

அந்த ரவிக்கையை அணிந்தவாறே வேலை செய்யக் கிளம்பினாள். அந்த ரவிக்கையுடன் எஜமானியின் கண்களில் பட அவளுக்கு வெட்கமாக இருந்தது. எனினும் தோளை இழுத்து மூடிக் கொண்டு பங்களாவுக்குள் நுழைந்தாள். 

ஆனால், கிணற்றில் தண்ணீர் இழுக்கையில் அந்தப் பக்கம் சோர்வுற்று வந்த மஞ்சுபாஷினி, எதேச்சையாக மரகதத்தைக் கவனித்தாள். தான் காணவில்லை என்று தையற்காரரிடம் புகார் செய்த ரவிக்கையை வேலைக்காரி அணிந்து கொண்டிருப்பதைக் கண்டவுடன் மஞ்சு பாஷிணிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. 

உள்ளே ஓடினாள். “அம்மா, அம்மா! நேற்று தைக்கக் கொடுத்தது வரவில்லை என்று சொன்னேனே, அந்த ரவிக்கையை வேலைக்காரி போட்டுக் கொண்டிருக்கிறாள். அம்மா… வாயேன், வந்து பாரேன்!” என்று பரபரப்புடன் கூவினாள். அதைக் கேட்டவுடன் எஜமானியம்மாள் ஓடி வந்தாள். 

மரகதம் அணிந்திருந்தது மஞ்சுபாஷிணியினுடையதுதான் என்பது தெளிவாகிவிட்டது. 

“ஏய்… ஏதுடீ ரவிக்கை?” என்ற எஜமானியின் பயங்கரக் குரலைக் கேட்டுத் தூக்கி வாரிப் போட்டு திரும்பினாள் மரகதம். 

தான் அணிந்திருக்கும் புது ரவிக்கையைப் பார்த்துத்தான் எஜமானி அதுபோல் கத்துகிறாள் என்பது அவளுக்குப் புரிந்தது. 

‘வேலைக்காரி என்றால் புதிதாக ஒன்றும் போட்டுக் கொள்ளக் கூடாதா’ என்று எண்ணிக் கொண்டாள். 

“என்னடீ முழிக்கிறாய்? திருடி! ரவிக்கை ஏதுடீ?” என்று மறுபடியும் பாணம் கிளம்பவே, மரகதம் திடுக்கிட்டுப் போனாள். 

‘திருடியா? எஜமானி என்றால் எது வேண்டுமானால் பேசி விடலாமா? இருக்கட்டும்… இனி அந்த ஜம்பம் என்னிடம் சாயாது’ என்று எண்ணிக் கொண்டாள் மரகதம். 

அது சரி, ஏது ரவிக்கை என்கிறாளே, என்னவென்று சொல்வது? ‘அவர்’ வாங்கிக் கொடுத்தார் என்றால்… ‘அவர்’ புருஷனா… ‘கள்ளப் புருஷன்’ என்று கேலி செய்து பழி சொன்னால்… ஒரு விநாடி மரகதம் செயற்று நின்றாள். பிறகு, “ஏங்க, என் அத்தான் வாங்கிக் கொடுத்தாரு” என்றாள் கம்பீரமாக. அவளுடைய கண்கள் எஜமானியை ஏற இறங்கப் பார்த்தன. 

அவளுடைய பதில் எஜமானியின் சந்தேகத்தையும், ஆத்திரத்தையும் அதிகப்படுத்தியது. 

“எந்த திருட்டுப் பயலடி உன் அத்தான்! திருட்டுக் கழுதை… ரவிக்கையை அவிழ்த்து வையடீ… திருட்டுக் கழுதைகளை வேலைக்கு வைக்கிறதே தப்பு…” என்று எஜமானியம்மாள் சரமாரியாகப் பொழிந்து கொண்டே போனாள். 

மரகதத்திற்கு நன்றாக விளங்கிவிட்டது. வேலைக்காரி என்றால் இளப்பம்; அவள் புது உடை அணியக்கூடாது; அப்படி அணிந்தால் அது திருடப்பட்டது இந்தக் கொள்கையை எஜமானி தன்னிடம் காட்டுகிறாள் என்று திடமாக முடிவு செய்த மரகதம், மேற்கொண்டு அங்கு நின்று பேச விரும்பாமல், “சொல்கிறேன் அம்மா, சொல்கிறேன்… எந்தத் திருடன் வாங்கிக் கொடுதான் என்பதைச் சொல்கிறேன்!” என்று கூறிக் கொண்டே விரைந்தாள் வீடு நோக்கி. 

வேலைக்காரியின் பதிலும், திருட்டு வஸ்து மீளாததும் எஜமானியின் ஆத்திரத்தை அதிகமாக்கின. இவ்விஷயத்தை லேசில் விடக்கூடாது என்று எண்ணி, உடனே போலீஸுக்குப் புகார் செய்தாள். 

ஹெட் கான்ஸ்டபிள் ஒருவர் உடனே விசாரணைக்கு வந்தார். விவரம் அறிந்த அவர் குற்றவாளியைக் கண்டுபிடிக்க மரகதத்தின் குடிசையை அடைந்தார். தன் ‘அத்தான்’ தைத்துத் தீபாவளிக்காகக் கொடுத்தது என்று கூறியதையறிந்து, அவள் அத்தானைத் தேடிப் போனார் அவர். 

காலையில் அப்பொழுதுதான் மெஷினுக்கு எண்ணெய் விட்டுக் கொண்டிருந்தான் வேதாசலம். சாயாஜி காணாமல் போன துணியைப் பற்றிக் கடையிலுள்ளவர்களை எல்லாம் விசாரித்துக் கொண்டிருந் தார். 

ஹெட் கான்ஸ்டபிள் வந்து வேதாசலத்தைப் பற்றி விசாரித்ததும் சாயாஜிக்கு நம்பிக்கையே இல்லை. வேதாசலம் அப்படிச் செய்ய மாட்டான் என்று முதலில் எண்ணினார். பிறகு ‘எந்தப் புற்றில் எந்தப் பாம்போ? இப்பொழுதெல்லாம் பயல் மாறித்தான் வருகிறான்! எவளுக்குக் கொண்டு விற்றானோ, என்னவோ?’ என்று எண்ணினார். 

உடனே சாயாஜி ஹெட் கான்ஸ்டபிளிடம், “செய்கிறதைச் செய்து உண்மையைக் கக்க வையுங்கள். ஒரே நாளிலே கடைக்குக் கெட்ட பெயரைக் கொண்டு வந்துவிட்டான். இப்படிப்பட்டவனை..!” என்றார். 


போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் வேதாசலம் நிறுத்தப் பட்டிருந்தான். மரகதமும் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தாள். மரகதத்தைக் கண்டவுடனேயே, ‘ஐயோ! அவள் என்ன நினைப்பாள்’ என்று துடிதுடித்தான் வேதாசலம். 

“தையற்காரன் – ஏழை என்றால் திருடித்தான் அவன் இன்பத்துக்கு விலையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில்லை. என் சொந்தப் பணம் போட்டு வாங்கினேன்” என்று வாதாடினான் வேதாசலம். 

இதைக் கேட்டு இன்ஸ்பெக்டரும் மற்ற போலீஸ்காரர்களும் ஏளனமாகச் சிரித்தார்கள். 

“நீ மகா பிரபு ! கெஜம் ஐந்து ரூபாய்த் துணிதான் உன் ஆசை நாயகிக்கு வாங்கிக் கொடுப்பாய். இல்லையா? ஏமாந்து யாராவது இருந்தால் வைர நெக்லெஸ்கூட வாங்கி கொடுப்பாய்!” என்றார் இன்ஸ்பெக்டர் கிண்டலாக. 

“வேண்டுமானால் கடையில் வாங்கிய பில்லைக் காட்டுகிறேன்சார்!” என்று பையைத் துழாவினான். சிகரெட் பாக்கெட்டும் நாலணா சில்லறை யும் கைக்கு அகப்பட்டனவே தவிர, ‘பில்’ அகப்படவில்லை. 

மறுபடியும் போலீஸ் ஸ்டேஷனில் கேலிச் சிரிப்பு எழுந்தது. 

“இருநூற்று நாற்பது! நம் ஐயா இப்படியெல்லாம் சொன்னால் உண்மையக் கூற மாட்டார். கொஞ்சம் கவனி” என்று இன்ஸ்பெக்டர் உத்தரளிட்டார். 

அப்பொழுது டெலிபோன் மணி ‘கணகண’வென்று ஒலித்தது. என்னவென்று அறியத் திரும்பினார். 

வேதாசலத்திற்கு ஏதோ கோபுரமே சாய்ந்து தலையில் வீழ்ந்தது போலிருந்தது. இன்பமடைய இதெல்லாம் விலைகளா என்று உள்ளத்தே விம்மினான். ‘மரகதம் தன்னைப் பற்றி என்ன நினைப்பாள்? உண்மையை ஒப்புக்கொள்ள யாருமில்லையே உலகில்!’ என்று எண்ணினான். 

‘திருடியாவது பரிசு கொடுக்க வேண்டுமா?’ என்று அவள் எண்ணி விட்டால் – ஐயோ… அவன் இதயத்தைப் பெரும் பாரம் அழுத்துவது போலிருந்தது அந்த நினைப்பு. 

சப் இன்ஸ்பெக்டர் டெலிபோனைக் கீழே வைத்துவிட்டு, “தேவலை அப்பா… ஆளு கைராசிக்காரன். எல்லாம் அவன் பக்கம்தான் ஜெயம்” என்றார். அதைக் கேட்ட ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. 

“யாரை சொல்லுகிறீங்க?” என்று ஹெட் கான்ஸ்டபிள் கேட்டார். “வேறு யாரைச் சொல்லுவேன்? இதோ நிற்கிறார் பார்! இவரைத் தான்!’ என்றார் சப் இன்ஸ்பெக்டர் வேதாசலத்தைச் சுட்டிக்காட்டி.


அதற்குள் வாசலில் கார் வந்து நின்றது. அதிலிருந்து ‘நீல பங்களா’வின் எஜமானி, சாயாஜிராவ், மஞ்சுபாஷிணி ஆகியோர் இறங்கி ஓடோடி வந்தனர். 

“மன்னிக்க வேண்டும், இன்ஸ்பெக்டர்! எங்கள் வீட்டு வேலைக் காரி போட்டுக் கொண்டிருக்கிற அதே மாதிரித் துணியைத்தான் என் பெண்ணுக்கும் என் மருமகன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆசையாக தீபாவளிக்குப் போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தபோது துணி காணாமல் போய்விட்டதில், அதுவும் வேலைக்காரி அதே மாதிரி ரவிக்கைப் போட்டுக் கொண்டு வந்தாள். உம்… அநாவசியமான சந்தேகம். 

இந்தத் தையற்காரர் சாயாஜிராவ் என்ன செய்தாராம் தெரியுமா? நேற்று ராத்திரி டெபுடி கலெக்டர் வீட்டுத் துணிகளைக் கொண்டு போய்க் கொடுத்தாராம். 

காலையில் அவர்கள் தங்கள் துணி அல்லாத ஒன்று தைத்து வைத்திருப்பதைக் கண்டு அதை உடனே இவரிடம் கொடுத்து வரச் சொன்னார்கள். அந்த வேலைக்காரன் வீட்டிலே தூங்கி விட்டு இன்று காலையில்தான் சாயாஜியிடம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறான். 

‘வேதாசலம் என்ற நம் வேலைக்காரன் மேலே அநாவசியமாகப் பழி சுமத்தினோமே’ என்று ரவிக்கையைத் தூக்கிக் கொண்டு சாயாஜி ராவ் எங்கள் வீட்டுக்கு ஓடி வந்தார்” என்று விஷயத்தை விளக்கினாள். 

சப் இன்ஸ்பெக்டர் புன்முறுவலுடன் “அப்படியானால் வேதாசலம் அதிக விலை கொடுத்து அந்த சில்க்கை வாங்கியிருக்கிறார் என்று ஆகிறது. காதல் என்றால காசைப் பார்க்க முடியாதுதானே!” என்றார். 

எல்லாரும் சிரித்தனர். மரகதத்தின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. ஆனால், வேதாசலம் குனிந்த தலை நிமிராமல் அந்த இடத்தை விட்டு வந்து விட்டான். தன் காசைப் போட்டு வாங்கியும் இத்தனை களேபரம் ஆகிவிட்டதே என்றெண்ணி மிகவும் வருத்தப் பட்டது அவன் உள்ளம். 

ஏழை உயர் ரக துணியைப் பயன்படுத்தக் கூடாதா? யாரைக் கோபிப்பது? 


தீபாவளி கழிந்து கார்த்திகை வருவதற்குள் வேதாசலம் புது மனிதனாகி விட்டான். 

தனியே ஒரு வீட்டுத் திண்ணையில் ‘வேதாசலம் ஜென்ட்ஸ் டெய்லர்’ என்ற போர்டு தொங்க, பழையபடி குனிந்த தலைநிமிராமல் தைத்துக் கொண்டிருந்தான். இப்போது அவனே முதலாளி. ஆனால், பெண்களுக்கான உடைகளைத் தைப்பதில்லை. 

வீட்டின் உள்ளே ஒரு சிறு அறையில் அவர்கள் குடித்தனமிருந்தனர். மஞ்சள் கயிறு கழுத்தில் விளங்க, கால் மெட்டிகள் கலகலவென ஒலிக்க, அதே சில்க் ரவிக்கையைப் போட்டுக் கொண்டு இடுப்பில் குடத்துடன்வரும் மரகதத்தின்புன்முறுவலுக்காக-அந்த இன்பத்துக்காக -வேதாசலம் என்ன விலை கொடுத்தாலும் தகும் அல்லவா?

– 1951

– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.

விக்கிரமன் கலைமாமணி விக்கிரமன் (மார்ச் 19, 1928 - டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள் தொடர்ந்து "அமுதசுரபி" மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார். ஆக்கங்கள் உதயசந்திரன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *