இனிய கிண்டல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2025
பார்வையிட்டோர்: 273 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வேலு ஒரு முரட்டு மாணவன், பெண்பிள்ளைகளைக் கேலி பண்ணுவதாக அவன் மீது பல புகார்கள் வந்தன.

தலைமை ஆசிரியர் மிகவும் கண்டிப்பான பேர்வழி. பிரம்படி ஒன்றுதான் அவரின் சர்வரோக நிவாரணி.

மாணவர்களின் பொது வழிபாட்டின் போது வேலுவை நிறுத்தி பிரம்படி கொடுத்தார். ஒவ்வொரு அடியாக ஆரம்பித்து ஒரு டஜன் அடிவரை வளர்ந்தது. பயல் திருந்துவதாயில்லை.

‘எத்தனை அடி கொடுத்தாலும் அவனுக்கு உரைக்காது’ என்றார் கணக்காசிரியர்.

‘இன்னும் நூறு அடிக்கு அட்வான்ஸ் வாங்குவான்’ என்றார் ஆங்கிலாசிரியர்.

‘பிரம்படியை பிச்சிப்பூ மாதிரி தொடச்சி எறிவான்’ என்றார் தமிழாசிரியர்.

வேலுவுக்கு மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளைக்கொடுக்கும் ஆசிரியர்கள் அங்கில்லை.

பெண்பிள்ளைகள் அவனை ஒரு வீரனாகக் கருதினர். ஏனெனில் நன்கு படித்தும் விடுவான்.

வேலு மீது மீண்டும் மீண்டும் புகார்கள் வந்தன. தலைமை ஆசிரியர் மிகவும் துக்கங்கொண்டார். தண்டனையை மாற்றியமைக்க விரும்பினார்.

ஆணும் பெண்ணுமாகக் கூடி இருந்த அஸெம்ப்ளியின் முன்பாக வேலுவை நிறுத்தி, தலைமை ஆசிரியர் பிரம்பை ஆட்டியவாறு சிம்மகுரலில் கேட்டார்:

‘நான் இனி தப்பு செய்ய மாட்டேன்’ என்று நூறு தடவை எழுதிக் காட்டுகிறாயா? அல்லது இருபது பிரம்படி வாங்கிக் கொள்கிறாயா?’

வேலு, மிகவும் அலட்சியமாக, அடிகளை வாங்கிக் கொள்கிறேன் ஸார்’ என்று சொல்லி வலக்கையை விரைப்பாக நீட்டினான்.

தலைமை ஆசிரியரின் தலை சுற்றியது. மாணவியர் வரிசையிலிருந்து பெருமூச்சும், குறுஞ்சிரிப்பும் எழுந்தன. சிலர் அழுதனர். வேலு பிரம்படிகளை வாங்கி ‘தூ’ வெனத் துடைத்தான்.

பரீட்சைகள் பருவங்களாக வந்து பறந்தன. பதினெட்டு வயதுக் கட்டிளங்காளையாகக் கல்லூரியில் கால் வைத்தான் வேலு. கண்காட்சிகளில் திரியும் பெண் லோலன் ஆனான்.

ஒருநாள் டவுண் பஸ்ஸில் போனான். அவன் பக்கத்தில் மட்டும் ஒரு சீட் காலியாக இருந்தது. அடுத்து ஏறிய ஒரு நடு வயதுப் பெண், ‘கூடப் பிறந்த தம்பி மாதிரி’ என்று சொல்லி அவன் அருகில் அமர்ந்தாள். ‘அக்கா நல்ல அழகு’ என்று ரசித்த வேலு மனதிற்குள் மகிழ்ந்தான்.

மெதுவாகத் தன் குறும்பு வேலையை ஆரம்பித்தான். அந்த அம்மாவிற்கு நாற்பது வயதிற்கு மேலிருக்கும். ஆத்திரம், ஆத்திரமாக வந்தது. கன்னத்தில் ஒரு இழுப்பு இழுப்போமா? அல்லது பஸ்ஸை நிறுத்தி அனைவர் முன்பாகக் கேவலப்படுத்துவோமா?’ என்று ஒரு கணம் சிந்தித்தாள்.

மறுநொடியில் அவனைத் திருத்த விரும்பினாள். மெல்ல பேசி நல்லவனாக்க நினைத்தாள்.

தாய்மையுள்ளம் கொண்ட அப்பெண் இரண்டாம் பேருக்குத் தெரியாமல் அவனைப் பார்த்து மெதுவாகச் சொன்னாள்.

‘தம்பி, எங்கம்மா என்னைவிட ரொம்ப அழகா இருப்பாங்க, அவங்களை இங்கே வரச்சொல்லட்டுமா?’ என்றாள் சிரித்தவாறு.

வேலு வெட்கிப்போனான், மனம் தடுமாறினான், நல்லவனாக மாறினான். இடத்தைக் காலி செய்தான். இதயத்திற்குள் கண்ணீர் வடித்தான்.

தண்டனைக்குத் திருந்தாத வேலு, ஒரு பெண்ணின் இனிய கிண்டலுக்கு அடிபணிந்தான்.

– 1995

– ஆர்‌.எஸ்‌.ஜேக்கப்‌ சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *