இதோ! எந்தன் தெய்வம்!
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 6, 2025
பார்வையிட்டோர்: 136
(கிறிஸ்துமஸ் கவிதை)

அதிகாலைப் பொழுதில் சேவல் கூவிய சப்தத்தில் எழுந்தார் விக்டர். மேகம் கருத்திருந்தது போலத் தோன்றவே எழுந்து வெளியே வந்து பார்த்தார். மகூம்…. மழை வருவேனா? என்று கேட்டது. தென்னந் தோப்பில் தண்ணீர் இல்லை. கிணற்றைத் தூர் வாரியாகி விட்டது. இன்னும் ஒரு மாதக் காலத்திற்குள் மழை வராவிட்டால் இருக்கும் தென்னை மரங்களும் சரிந்து விழுந்து விடும். என்ன செய்வது?
சண்டைக் கோழியாக பேநாய் விட்ட மகனும் எங்கோ அமெரிக்காவில் ஒரு வெள்ளைக் காரியோடு செட்டிலாகி விட்டதை கேள்விப் பட்டதும் உடைந்து போனார் விக்டர். மகன் பிலிப் இறந்த உடனே இறந்து போன மனைவியை மனதிலேயே கொண்டு மகனுக்காக இருந்த வயலிலும் தோட்டத்திலுமாக தன் வாழ்நாளைக் கழித்தார். மகனின் தொழிற்கல்விக்காக இருந்த ஒரே வயலையும் விற்று அவனை மேற்படிப்பு படிக்க வைத்தார்.
சென்னையில் வேலை கிடைத்து பலமுறை பிலிப் அழைத்தும் அங்கே போக முடியாமற் போக, பிலிப் அப்பாவிடம் சொல்லிச் சொல்லி சலித்துப் போய் “வர முடியுமா? முடியாதா? எத்தனை நாள்தான் இந்தத் தென்னை மரத்தை கட்டிக் கொண்டு அழப் போகிறீர்கள். இத்தனை நாள் எனக்காக இத்தனை கஷ்டப்பட்டீர்கள். இனியாவது என்னோடு சந்தோசமாக வந்திருந்து நாட்களை கழியுங்கள்” என்றான். எனக்கு அந்தப் பட்டணமெல்லாம் ஒத்துக்காதுடா. இந்த தென்னை மரமெல்லாம் நீயும் நானும் பார்த்து பார்த்து வச்சதுடா. இதை விட்டுட்டு வரச் சொல்றியா?.”
“அப்பா நான் வளர்வதற்கு எத்தனை கஷ்டப்பட்டீர்கள்? இனியாவது உங்களை சந்தோசமாக வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டாமா?”.
“அதற்காக இந்த தோப்பை அப்படியே போட்டு விட்டு வரச் சொல்கிறாயா?”
“அதை அப்படியே விற்றுப் போட்டு பணத்தை உங்கள் வங்கியில் போட்டுக் கொண்டு என்னோடு வாருங்கள்”.
“ஏண்டா! இந்த சோறு போட்ட தோப்பை விற்கச் சொல்றியே…. உன் அப்பனை எங்கேயாவது வித்துப் போடுவியா?” என்று கேட்ட தந்தையை ஒருகணம் திடுக்கிட்டு பார்த்த பிலிப் “அப்பா இந்த நிலத்திற்கும் உங்களுக்கும் வித்தாயாசமில்லையா?” என்று கத்தி விட்டுப் போனவன் தான்… ஏழாண்டுகள் போய்விட்டன.
ஒவ்வொரு கிறிஸ்துமஸ் தினமும் பிலிப் திரும்ப வந்து விடுவான் என்ற நம்பிக்கையோடு இறைவனை வேண்டிக் கொண்டே தன் வாழ்நாளைக் கழித்தவர் “தேவனே…. இந்த மரங்களும் பட்டுப் போய்விட்டால் நான் என்ன செய்யப் போகிறேன். சாயங்காலம் கிறிஸ்துமஸ் திருப்பலிக்குச் செல்ல தயார் செய்ய வேண்டும். மலைக்குப் போய் கொஞ்சம் சுக்குநாறி அறுத்து வந்து கிறிஸ்துமஸ் குடில் கட்ட வேண்டும்” என்று முணு முணுத்துக் கொண்டே…. காபி போட ஆரம்பித்தார்.
கிறிஸ்துமஸ் குடில் அழகாக வந்திருந்தது. சொரூபங்களை எடுத்து அதனதன் இடத்தில் வைத்து விட்டு கிழே விழுந்து உடைந்த ஆட்டுச் சிற்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு தோப்புக்கு போக விக்டர் கிளம்பிய போது “உங்களைப் பங்குத் தந்தை அருள் தாஸ் அழைக்கிறார்கள்” என்று எதிர் வீட்டு ரோஸம்மா சொல்லி விட்டுப் போனாள்.
தோள் டவலை எடுத்துப் போட்டுக் கொண்டு பங்களாவிற்கு வந்த விக்டர் “என்ன ஃபாதர் கூப்பிட்டியளா?” என்றவாறு வெளியே வந்த தந்தை அருள் தாஸிடம் கேட்டார்.
“விக்டர் நம்ம தேவாலயத்திலே இந்த வருடம் கொஞ்சம் புது சொரூபங்கள் வாங்கி கிறிஸ்துமஸ் குடிலில் வைக்கலாம் என்று இருக்கிறேன்” என்றார் அருட்தந்தை.
“அதுக்கென்ன சாமி. நல்ல விஷயம் தானே ! செய்துட்டா போச்சு”.
“யார் செய்வா? அதுவும் இன்னைக்கு ராத்திரிக்குள்ள எல்லா சொரூபமும் வேணுமே”.
“ஏன் சாமி. உங்க சீசப்பிள்ளையை நாகர்கோயில் டவுனுக்கு அனுப்பினால் தான் நடுநிசிப் பூசைக்கு முன்னாலே வாங்கிட்டு வந்துருவாரே”.
“இந்தத் தடவை கொஞ்சம் வித்தியாசமாக வெளிநாட்டிலிருந்து அதுவும் அமெரிக்காவிலே இருந்து கொண்டு வந்தா அது நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்.”
கொஞ்சம் நெஞ்சம் திடுக்கிட “என்ன சொல்றிய சாமி” என்றார் விக்டர். வெளியே கார் வந்த சப்தம் கேட்க “வாங்க யாருண்ணு பாப்பபோம்” அருட்தந்தை விக்டரை இழுத்துக் கொண்டு வெளியே வந்தார். காரிலிருந்து இறங்கிய பிலிப்பும் சில்வியாவும் வந்து முதலில் விக்டரின் காலில் விழுந்தனர். கண்ணில் நீர் முட்ட மகனை எடுத்து வாரி அணைத்த விக்டர் பேச முடியாமல் தவித்தார்.
“மாமா என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்று அருகில் வந்தாள் சில்வியா.
“என்ன விக்டர் பாக்கிறிய…உங்க மருமக அவளையும் ஆசீர்வதியுங்க” என்றார் அருட்தந்தை. விக்டர் அவள் நெற்றியில் சிலுவை அடையாளமிட்டு ஆசீர்வதித்து “சந்தோசமாக இருக்க ஆண்டவன் அருள் புரிவார்” என்றார்.
அருட்தந்தை அருகில் வந்து “விக்டர். பிலிப் கொஞ்சநாளா என்கிட்ட தொடர்பிலே இருந்தான். உங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கனும்னு தான் இந்த நாடகம்” என்றார்.
“ஃபாதர் நீங்கள் கேட்டபடி எல்லா கிரிப் சொரூபங்களும் இதிலே இருக்கு” என்று மூன்று பார்சல்களை காரிலிருந்து இறக்கினான். “ரொம்ப நன்றி” என்று பிலிப்பின் கையைக் குலுக்கினார் அருட்தந்தை.
“இது என் கடமை பாதர். இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு…. என்னப்பா…… பாத்துகிட்டே நிக்கிறிய… வீட்டுக்கு கூட்டிட்டுப் போவ மாட்டியளா” என்றான் பிலிப் தந்தையிடம், “வாங்கடா, எவ்வளவு சந்தோசமாக இருக்கு. காரு வேண்டாம். நடந்தே போவம்” என்று இருவரையும் அணைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக கிஜீஸ்துமஸ் கொண்டாடிட வீட்டிற்கு நடந்தார் விக்டர்.
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |
