இது மாலை நேரத்து மயக்கம்!?….

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 19, 2026
பார்வையிட்டோர்: 95 
 
 

நந்தினி திரும்பிப் பார்த்த போது கடைசி ஆளும் நேர்முகத் தேர்வு முடிந்து போயிருந்தார்.

வெளியே விளக்குகள் எரிய ஆரம்பித்து இரவு தொடக்கத்தை பகலாக்க முயற்சிகள் ஆங்காங்கே…

அலுவலகத்தில் இருந்த அந்த கடை நிலை ஊழியரும் தேநீர் கொடுத்து விட்டு “ஐயா கூப்பிட்டதும் உள்ளே போங்கள்” என்று கூறி விட்டுப் போய் விட்டான்.

மனதிற்குள் பயப் பட்டாம் பூச்சிகள் பறக்க ஆரம்பித்து விட்டது.

நந்தினியை அவன், அல்லது அவள், அல்லது திரு நங்கை..

எப்படி அழைக்கலாம்? என்று புரியவில்லை…

நந்தன், நந்தினியானதே வேறு பெரும் கதை.

எழுந்து போய் விடலாமா?என்று நினைத்தவள் அந்த நிதான அமைதியைக் கலைத்திட தண்ணீர் குடிப்பதற்காக எழுந்து தொண்டையைச் செறுமிக் கொண்டே அருகிலிருந்த நீர்க் குடுவைக்கு வந்து தண்ணீர் மொண்டு ‘களக்’ ‘களக்’ என்று சப்தம் வரத் தண்ணீர் குடித்தாள்.

திரும்ப வந்து உட்காரவும், கதவு திறக்கும் கேட்டு எழுந்தாள்.

“ஒரு ஐந்து நிமிடம் பொறுங்கள். ஒரு கடிதம் மட்டும் எழுதி விட்டு உங்களை அழைக்கிறேன்” என்று சொல்லி விட்டு கதவைச் சாத்திக் கொண்டார் மேலாளர்.

அவருடைய குரலில் ஏதோ வாசமும் தவிர்க்க முடியாத அழைப்பும் இருந்தது போல உணர்ந்தாள்.

அந்தக் குளிர் அறையிலும் அவளு(னு)க்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது.

சாளரம் வழியே எட்டிப்பார்த்த போது மும்பையின் அவசரம் கார்களின் வேகத்திலும் மக்களின் நடையிலும் வெளிச்ச வெள்ளங்களின் அடையாளங்களில் வெளியேறிக் கொண்டிருந்து.

மற்ற நண்பர்(பி)களைப் போல தொடர்வண்டி நிலையங்களிலும் தொடர் வண்டிகளிலும் பொது இடங்களிலும் பேருந்து நிலையங்களிலும் பேருந்துகளிலும் மற்றவரைத் தொட்டு ஆசிர்வதித்து பிச்சை எடுக்க மனது ஏற்றுக் கொள்ள மறுத்து.

படித்த படிப்பிற்கு ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும் என்று மனத்திற்குள்ளே ஒரு ஆதங்கம் விளைந்திருந்தது.

கல்லூரி முடித்து, நந்தினியாகி வீட்டை விட்டு விரட்டப் பட்ட போது தற்கொலை செய்ய கடலில் விழுந்த போது ரகு வந்து ப்பாற்றினார்.

அவரின் தயவால் மேற்படிப்பு முடித்து அவரையே திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்த போது…

ரகுவின் உறவினர்களும் நண்பர்களும் “இன்றைக்கு உன்னை வெட்டிக் கொன்றே போடோணும்” என்று கத்திக் கம்புகளோடு வர வாங்கிய அடியோடு தப்பி ஓடி ஒரு மருத்துவமனையிலிருந்த நாட்கள்…அப்பப்பா… தலையை சிலிர்த்துக் கொண்டாள்…

திரும்பவும் ரகு தன்னைத் தேடி வர …பயந்து போய் சொல்லாமல் கொள்ளாமல் மும்பை தொடர் வண்டியில் ஏறி ….

வந்த இடத்தில் தங்கிய நண்பர்(பி)களைப் போல வேடமிட்டு பணம் பண்ணத் தயங்கி…

சே…எத்தனை அவமானங்கள்.. அந்த “வாசமில்லா மலர்கள்”

வீட்டில் நடந்த சம்பவங்கள்…

பாத்திரம் பூசி,துணி துவைத்து சமைத்து…உள்ளே நடந்த அசிங்கங்கங்கள்…கெட்ட வார்த்தைகள்..அரசியல் கூத்துகள்…கத்திக் குத்துக்கள்…

கடைக்குச் சென்று அரிசிவாங்கப் போன போது “துமாரா நாம் கியா ஆஜ் ராத்கோ ஆரக்யா” (பேரென்ன…ராத்திரி வாரியா எப்படி இருப்பேன்னு பாக்கலாம்) என்று தாராளமாக் கிடைத்த கேலி கிண்டல்கள்…

இப்போதும் உடலும் மனதும்கூசுகிறது. இங்கேயும் தன் மானத்திற்கு களங்கம் வந்துவிடுமோ என்று கைக்குட்டையை எடுத்து முகத்தினை துடைத்துக் கொண்டாள்.

பிறந்த மனித பிறப்பிற்கு அர்த்தம் கண்டு வாழ்ந்து காட்ட வேண்டுமென மனத்திலிருந்து சபதம் தலை தூக்கியது…

சிறிய வேலையில் சேர்ந்து அரசு தேர்வு எழுதி தேர்வாகி தான் இந்த சமூகத்திற்கு யார் என்று காட்ட வேண்டும்.

ரகு விடம் சத்தியம் செய்ததை நினைவு படுத்திக் கொண்டாள்.

“நந்தினி நீங்கள் வரலாம்” கதவு திறந்து மேலாளர் அழைத்தார்.

உள்ளே வந்து அமர்ந்த மேலாளர் ” அமருங்கள்” என்றார்

“காலையில் முதல் நேர்முகத் தேர்விலேயே நீங்கள் என் உதவியாளர் என்று தேர்ந்து விட்டேன். இருப்பினும் இரண்டாவது சுற்றில் உங்களை விட நல்ல நபர் கிடைப்பாரா? என்று தேடினேன். இல்லை. அதனால் உங்களையே தேர்ந்து விட்டேன்” என்றார்

“மகிழ்ச்சி ஐயா” எனறாள்.

“எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என்றவாறு எழுந்து அருகில் வந்தார்.

வியர்த்துக் கொட்ட எழுந்து விட்ட நந்தினியிடம் “ஏய் முகத்தைத் துடைத்துக் கொள்ளுங்கள். உட்காருங்கள்” என்று தோளைப் பிடித்து நாற்காலியில் அமர்த்த அப்படியே ஆடிப்போனாள் நந்தினி.

திரும்பவும் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்த மேலாளர் “தயவு செய்து நாளையிலிருந்து இங்கு வேலைக்கு வரும்போது தலை முடியை வெட்டி மேக்கப் போடாமல் சேலையிலிருந்து ஆண் ஆடைகள் அணிந்து கொண்டு வேலைக்கு வாருங்கள்.உங்கள் பொறுமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது…காலையில் வேலையில் சேர்ந்து கொள்ளுங்கள். இப்போது போகலாம் வாழ்த்துக்கள்”என்றார்

நந்தினிக்கு ஒரு கணம் ஆகாயத்திலிருந்து போல இருந்து. ‘இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா?!’ என்று ஆச்சரியப் பட்டுக் கொண்டே “மிக்க நன்றி சார்” என்றவாறு கண்ணீரைத் துடைத்துக் கொண்டே வெளியேறினாள்…

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *