ஆளுக்கு ஒரு கால்
கதையாசிரியர்: நெ.சி.தெய்வசிகாமணி, மரியாதைராமன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 13, 2025
பார்வையிட்டோர்: 10
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான்கு பேர் கூட்டாகப் பஞ்சு வியாபாரம் செய்து வந்தனர். நாளடைவில் பஞ்சுக் கடையில் ஏராளமான எலிகள் சேர்ந்து பஞ்சுப் பொதிகளை நாசமாக்கி விட்டன.
எலிகளை ஒழிப்பதற்காகப் பூனை ஒன்றை வளர்க்கலாம் என்று நால்வரில் ஒருவன் அபிப்பிராயம் சொன்னான், மற்ற மூவரும் அவன் கருத்தை ஆதரித்தனர்.
நால்வருமாகச் சேர்ந்து ஒரு பூனையை வளர்க்க ஆரம்பித்தனர். பூனை வந்ததிலிருந்து எலிகளின் உபத்திரவம் குறைந்தது. இதன் காரணமாக நால்வருக்கும் பூனையின் மேல் மிகுந்த அன்பு ஏற்பட்டு விட்டது. பூனைக்குச் சகலவித உபசாரங்களும் செய்ய ஆரம்பித்தனர். அத்துடன் நில்லாமல் அதன் கால்களுக்குத் தண்டை கொலுசு முதலியவைகளை அணிவித்து அழகுபடுத்த நினைத்தார்கள்.
இதை நடைமுறைக்கு கொண்டு வரும்போது பல சிக்கல்கள் வந்தன. எனவே வியாபாரிகள் நால்வரும் பூனையின் நான்கு கால்களை ஆளுக்கு ஒன்றாகப் பங்கிட்டுக் கொண்டனர். அவரவர்க்குச் சொந்தமான கால்களில் தங்களுக்கு விருப்பமான அணிகலன்களைப் பூட்டி மகிழ்ந்தனர்.
ஒரு நாள் பூனை நொண்டிக் கொண்டே வந்தது. இதைப் பார்த்த வியாபாரிகளில் ஒருவன் தன் நண்பனிடம், “நண்பா, உனக்குச் சொந்தமான காலில் அடிபட்டு விட்டது. ஜாக்கிரதையாக மருந்து போட்டுக் குணப்படுத்து” என்றான்.
அந்தக் காலுக்கு உரியவனும் பூனையின் காயத்தைத் துடைத்து எண்ணெய்த் துணியினால் அதைச் சுற்றி வைத்தான்.
அன்று இரவு பூனை விளக்குப் பக்கம் போகவே அதன் காலில் சுற்றியிருந்த துணியில் நெருப்புப் பிடித்துக் கொண்டது. தன் காலில் சுற்றப்பட்டிருந்த துணியில் நெருப்புப் பிடித்துக் கொண்டதும் பூனை மிரண்டு போய்ப் பஞ்சு மூட்டைகளின் மேல் ஓடியது. உடனே பஞ்சு மூட்டைகள் அனைத்திலும் நெருப்பு பிடித்துக் கொண்டது.
முடிவில் அவர்கள் வைத்திருந்த பஞ்சு மூட்டைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
வியாபாரிகளில் மற்ற மூவரும் துணி சுற்றியவனைப் பார்த்து, “நீ எண்ணெய்த் துணி சுற்றி வைத்ததால் தான் இந்த நஷ்டம் ஏற்பட்டது. எனவே எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நீதான் கொடுக்க வேண்டும்” என்றனர்.
அவனோ தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் எதிர்பாரா வகையில் நடந்து விட்டதற்குத் தன்னை மன்னிக்க வேண்டுமென்றும் எவ்வளவோ, கேட்டுக் கொண்டான்.
மற்ற மூவரும் அவன் பேச்சைக் கேட்கவில்லை. அவனை மரியாதைராமனிடம் இழுத்துச் சென்றனர். மரியாதைராமன் அவர்கள் கூறியதைக் கவனமாகக் கேட்டான். பின்னர் கீழ்க்கண்டவாறு தன் தீர்ப்பை வழங்கினான்.
பூனையின் ஒரு காலில் அடிபட்டு உள்ளது. அந்தக் காலால் நடக்கவோ, ஓடவோ, அதனால் முடியாது. அந்தச் சமயத்தில் அது மற்ற மூன்று கால்களால்தான் ஓடியிருக்க வேண்டும். எனவே உங்கள் மூவருக்கும் சொந்தமான கால்களால் ஓடித்தான் அது நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, நீங்கள். மூவரும்தான் இந்த நாலாமவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும்” என்றான்.
– மரியாதைராமன் கதைகள், முதற் பதிப்பு: ஏப்ரல் 1981, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை.
| பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்) மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும். புகழ்மிகு கதையிலக்கியங்கள் : விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க... |