ஆன முதலில்
கதையாசிரியர்: யுவராஜ் சம்பத்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: March 19, 2026
பார்வையிட்டோர்: 123

பல்லடத்தில் திருப்பூர் மெயின் ரோடு அருகில் இருந்த குமரன் காம்ப்ளக்ஸ் மாடியில் கிளினிக் வைத்து நடத்திக் கொண்டிருந்த டாக்டர் ஜெயபிரகாஷை சந்திக்க உமா காந்த் வந்திருந்தார். டாக்டர் ஜெயபிரகாஷ் பல்லடத்தில் அறிமுகமான சிறந்த வைத்தியர்; கைராசிக்காரரும் கூட.
“வணக்கம் டாக்டர்.”
“வாங்க முக்காலி. எங்க மத்த ரெண்டு காலையும் காணோம்?” என்றவாறு உரையாடலை தொடங்கினார் டாக்டர்.
பல்லடத்தில் “முக்காலி” என்பது மூன்று பேர் ஆகச்சிறந்த நண்பர்களாக ஒன்றாக இயங்கி கொண்டிருந்ததை குறிக்கும். மூன்று பேரில் ஒருவர் உமா காந்த். வட இந்தியாவில் இருந்து இங்கு வந்து வெண்ணெய் வியாபாரம் செய்து கொண்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்களின் மூதாதையர்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இங்கு வந்து விவசாயிகளிடமிருந்து தினசரி விலைக்கு வாங்குகிற வெண்ணெயை உருக்கி நெய்யாக்கி வட இந்தியாவிற்கு அனுப்புகிறவர்கள். தமிழ் கொஞ்சம் தாறுமாறாகத்தான் பேசுவார்கள். இவர்களின் ஒரே மகன் உமா காந்த்.
முக்காலியில் இரண்டாவது கால் ராமசாமி கவுண்டர் எனும் பெயர் பெற்ற பிரபலமான நிலச்சுவாந்தார். இருபது ஏக்கர் தென்னந்தோப்பும், மாடு கன்றும் வைத்து பெரும் பைனான்சியராகவும் இருப்பவர். மூன்றாவது கால் அருண் குமார். அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி படித்தவர். பல்லடம் முனிசிபால்டியில் பில் கலெக்டராக வேலை செய்பவர். பில் கலெக்டர் வேலைக்கு தினசரி அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால், முக்காலியில் ஒரு காலாக இவர்களோடு சேர்ந்து இயங்குபவர்.
இவர்களை ஒரு மையப் புள்ளியில் இணைத்தது அரசியல். செல்வாக்கான குடும்பத்திலிருந்து வந்த ராமசாமி கவுண்டருக்கு , கொஞ்சம் படித்தவர், விஷயம் தெரிந்தவர் என்பதால் அருண் குமாரும் , வேலைவெட்டி எதுவும் இல்லாத உமா காந்த் போன்ற ஒருவர் துணையாக இருப்பதாலும், முக்காலியில் செல்வாக்கு பல்லடத்தில் கொடிகட்டி பறந்தது.
“இல்லைங்க டாக்டர், என் மனைவிக்கு கொஞ்சம் அசவுகரியம். கழுத்துக்கிட்ட ஏதோ கருப்பு கருப்பாக தெரியுது, கொஞ்சம் அரிக்குது என்று சொன்னார். அதனால் உங்ககிட்ட பேசிட்டு சாயந்திரம் அவங்களை வர சொல்லலாம் என்று நினைக்கிறேன்.”
“அப்படியா? துணைக்கு வேற யார் வருவார்கள்?”
“என் மகளை அனுப்பி வைக்கிறேன்.”
“சரி, முடிஞ்சா நீங்களும் வாங்க.”
“ஏனுங்க குமார், அந்த பட்வாரி பொண்டாட்டிக்கிட்ட இந்தி டியூஷன் எடுக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?”
“ஆமா, நானும் கேள்விப்பட்டேன். அந்த பொண்ணு ஸ்கூல்ல படிக்கும்போது தமிழ்ல ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குவாளாம். ரொம்ப நல்லா படிப்பாளாம் அப்படின்னு சொன்னாங்க. எனக்கு ஒரு ஆச்சரியமா இருந்தது. அதனால என்ன, அவங்க சொல்லிக்கொடுத்தா ஹிந்தி நல்லாத்தான் இருக்கும். படிங்க,” என்றார் குமார்.
பாவனா பள்ளியில் படிக்கும் போது தமிழில் நன்றாகப் படிப்பார் என்பதோடு, நன்றாகவும் பாடுவார். அதனால் பத்தாம் வகுப்பில் தினமும் பள்ளி தொடங்கும் போது பாடப்படும் இறைவணக்கப் பாடலை இவரை விட்டுத்தான் பாடச் சொல்வார்கள்.
ஹிந்தி பேசுவதற்கான டியூஷன் என்றால் மாதம் ஆயிரம் ரூபாய் தான் வாங்குவார் பாவனா. மூன்று மாதத்தில் பயிற்சி முடிந்து விடும். பேசவும் எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால்
மாதம் 2000 ரூபாய்; நான்கு மாதத்தில் பயிற்சி முடியும். ஓரளவுக்கு தினசரிகளைப் படிக்கவும் எழுதவும் முடியும்.
இதற்கு மேலாக வட மாநிலத்தவர்களின் விழாக்களில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று, அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுப்பதில் ஆர்வம் காட்டுவார் பாவனா. இதற்கும் அவர் படித்த தமிழ் நன்றாக உதவியது. அதனால்தான் அவர் தன்னுடைய ஒரே மகளை தமிழ் மீடியத்தில் சேர்த்து படிக்க வைத்திருந்தார்.
மாலையில் மருத்துவரை சந்திக்க போக வேண்டும் என்ற அவசரத்தில், தான் செய்து கொண்டிருந்த சில வேலைகளை ஒத்தி வைத்திருந்தாள்,பாவனா , உமாகாந்த்தின் மனைவி தமிழும் ஹிந்தியும் மிகவும் சகஜமாக பேசுவார். வீட்டிற்கு வந்து ஹிந்தி படித்து கொண்டிருக்கிற மாணவர்களையும் காத்திருக்க வைக்க வேண்டாம் என்பதற்காக அவசர அவசரமாக வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
வடக்கிலிருந்து வந்ததனால் காந்தி தொப்பி அணிந்திருந்த தன் கணவன் காந்தியவாதியாக கருதப்பட்டு ஊருக்கு சேவை செய்யச் சென்று விடுவதால், வீட்டுச் செலவுக்கு திண்டாடும் சாதாரண குடும்பத் தலைவி பாவனா. பல்லடம், திருப்பூர் போன்ற ஊர்களில் வட இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்து வேலை செய்கிற தொழிலாளர்களிடம் உரையாடவும், வடநாட்டு வியாபாரிகளிடம் வியாபாரம் பேசுவதற்கு உதவியாகவும், வேறு சில காரணங்களுக்காகவும் இங்கிருக்கும் முதலாளிகளும் சில கணக்குப் பிள்ளைகளும் ஹிந்தி கற்றுக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்ததால், அவர்களுக்கு வீட்டிலேயே ஹிந்தி டியூஷன் எடுத்து அதன் மூலம் குடும்பச் செலவுகளை சமாளித்துக் கொண்டிருக்கும் நல்ல குடும்பப் பெண்மணி.
“பட்வாரியின் மனைவி” என்று அறியப்படுபவர். “பட்வாரி” என்பது காந்தி தொப்பி அணிந்த வட இந்தியர்களுக்கு பல்லடத்துக்காரர்கள் வைத்த பெயர். ஏன் என்பது யாருக்கும் தெரியாது.
“அம்மா!” என்று ஓங்கி அழைத்தபடி ஆரவாரமாக ஓடி வந்த தன் மகள் பிரியாவை பார்த்து, “ஏன் இப்படி ஓடி வருகிறாய்? என்ன அவசரம்?” என்று கேட்டார் பாவனா.
“அம்மா, இன்னைக்கு தமிழ் மிஸ் ஒரு பாட்டு சொல்லி பாட நடத்தினார்கள். இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா என்று கேட்டார்கள். நாங்க எல்லோரும் தெரியாது என்று சொன்னோம். தமிழ் மிஸ் உங்க அப்பாவிடம் இதற்கு அர்த்தம் கேட்டு வாருங்கள் என்று சொன்னார். அது ஏன் அம்மா அப்பாவிடம் கேட்கச் சொன்னாங்க? எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அதனால்தான் அவ்வளவு வேகமாக ஓடி வந்தேன்.”
“என்ன பாட்டு அது?”
“அதுவா? இருங்க, நான் படிக்கிறேன்,” என்றவாறு அவ்வையாரின் நல்வழி பாடலை படித்தாள் பிரியா.
ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதியெட்டு போன திசை எல்லோருக்கும் கள்ளனாய் ஏழ் பிறப்பும் தீயனாய் நல்லோர்க்கும் பொல்லானாம் நாடு
கேட்டவுடன் பாவனா தனக்குள் சிரித்துக் கொண்டாள். ஏன் என்பது அவளுக்கு மட்டுமே தெரியும். குழந்தைக்கு அதை அவள் வாயால் சொல்ல விரும்பவில்லை.
“பிரியா, டாக்டர்கிட்ட போகணும். நீ வீட்டில் இரு. அப்பா வருவாங்க. அப்பாவிடம் அதை கேள். சரியா?” என்றவாறே டாக்டரை பார்க்க கிளம்பினார் பாவனா.
அந்தப் பாடலின் பொருள் பாவனாவிற்கு தெரியும் . ஒருவர் தனக்கு வரும் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்தால், அவருடைய மானம் அழியும்; புத்தி தடுமாறும்; நண்பர்கள் மத்தியில் அவரை ஒரு திருடனைப் போல பார்ப்பார்கள்; இறுதியில் நல்லோருக்கும் அவர் கெட்டவராகவே தெரிவார். சுருக்கமாக, வருமானத்திற்குள் வாழாதவன் எல்லா வகையிலும் துன்பப்படுவான்.
இதன் பொருள் உமா காந்திற்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. மேடைதோறும் முழங்குபவர்; ஊரில் இருக்கும் எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் பற்றியும் பேசுபவர்; நண்பர்கள் குழாமில் தமிழ் படித்தவர்களும் அதிகம் இருப்பதால் அவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.
“வாங்க மேடம். என்ன பண்ணுது?”
“டாக்டர், கழுத்துக்கிட்ட கருப்பு கருப்பாக திட்டு திட்டா தெரியுது. கொஞ்சம் அரிக்குது. என்னனு தெரியல.”
“சரி, உட்காருங்க. பார்த்திடுவோம்.”
டாக்டர் கையுறையை மாற்றிக்கொண்டு அந்த இடத்தை சிறிது நகத்தால் சுரண்டிப் பார்த்தார். அவருக்கு என்னவென்று தெரிந்து விட்டது. உடனடியாக தனது சக மருத்துவர் ஒருவரை அழைத்தார்.
“டாக்டர், ஒரு பேஷண்ட் கழுத்தை சுற்றி erythema மாதிரி இருக்கு. ஸ்கின் கலர் எல்லாம் பிளாக் ஆக மாறி இருக்கு.”
“அது ஒன்னும் இல்லைங்க. அது allergic contact dermatitis ஆக இருக்கும். எதுக்கும் அனுப்புங்க, நான் பார்த்துக்கிறேன்.”
இரண்டாவது மருத்துவர் தோல் நிபுணர் மிகச் சரியாக அதை யூகித்தார். பல்வேறு கேள்விகள் கேட்ட அவர், இந்த வியாதி பற்றி விவரித்தார்.
கோல்ட் கவரிங் நகை போடுவதால் வரும் தோல் வியாதிகள் என்றும் அதனால் ஏற்படும் பொதுவான பாதிப்புகள், தோல் தடிப்பு மற்றும் அரிப்பு (Allergic Contact Dermatitis), நகையில் உள்ள நிக்கல் வியர்வையுடன் வினைபுரியும் போது அது தோலில் ஊடுருவி அரிப்பு, சிவப்புத் தழும்புகள் அல்லது தடிப்புகளை உண்டாக்குகிறது. கருமை நிறம் மாறுதல் (Skin Discoloration): உலோகங்கள் ஆக்ஸிஜனேற்றம் அடைவதால் தோல் கறுப்பாகவோ பச்சை நிறத்திலோ மாறக்கூடும். சிறு கொப்புளங்கள் (Blisters): அதிக நேரம் அணிந்தால் நீர் வடியும் புண்கள் வரலாம். தொடர் அரிப்பு (Chronic Itching): சொறியத் தோன்றும்; தோல் உரியவும் செய்யும்.
தவிர்க்கும் முறைகள்: வியர்வையைத் தவிர்க்கவும், அணியும் நேரத்தைக் குறைக்கவும். Nickel-free நகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
“இப்போதைக்கு ஒரு கிரீம் தர்றேன். போட்டு இருங்க. மறுபடியும் பேசிட்டு என்ன solution என்று சொல்றேன். நீங்க போயிட்டு வாங்க,” என்றார்.
பாவனாவிற்கு இந்த ரகசியம் புரிந்தது . தான் கழுத்தில் அணிந்திருக்கும் நகை தங்கம் அல்ல, கவரிங் என்பதை மருத்துவர்கள் தெரிந்து கொண்டார்கள்.
சரி, நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று நினைத்து இல்லம் திரும்பினார்.
பாவனா இன்னைக்கு சாயந்திரம் ஒரு பங்க்ஷன் இருக்குது.அந்த கல்யாணத்துக்கு ரெண்டு பேரும் போகணும் ரெடியாயிரு. வீட்டில் வந்து பத்திரிகை கொடுத்துட்டு போயிருக்குறங்க ..முதலில் சரி
என்று சொன்னாலும் திருமணத்திற்கு போவதற்கு விருப்பம் இலலாமல் தான் இருந்தார் பாவனா..
மீண்டும் அழைத்தால் உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிடலாம் என்று நினைத்திருந்தாள். ஒரு பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் என்ன அர்த்தம் என்பது 15 வருட காலம் குடும்பம் நடத்திய அந்த ஆணுக்குத் தெரியாமலா போகும் ஆனால் உண்மையில் என்ன காரணம் என்பதை பாவனா மட்டுமே அறிந்திருந்தார்…
இரன்டு நாட்கள் சென்றபின் , ஒரு நாள் மாலை வீட்டிற்கு வந்த உமா காந்திடம் பாவனா எதுவும் பேசவில்லை. உமா காந்த் முகத்தைத் தொங்கவிட்டபடி வீட்டுக்குள் வந்தார்.
“பாவனா, டாக்டர் என்ன சொன்னாங்க? மருந்து கொடுத்தாச்சா?”
“அவர் என்ன சொன்னார் என்பது உங்களுக்கும் தெரியும் தானே… உன்ஹோனே க்யா கஹா, யே தோ ஆப் பீ ஜான்தே ஹைன் நா?”
குடும்ப பொருளாதார சிக்கல் தன் மகளுக்கு தெரிய வேண்டாம் என்று பாவனா ஹிந்தியில் பதில் சொன்னார்.
இதைக் அறியாத மகள் பிரியா தந்தையிடம் அவ்வையார் பாடலைக் காட்டி இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டாள்.
படித்த காந்தியவாதி உமா காந்துக்கு அதன் பொருளும் புரிந்தது; மனைவி வியாதிக்குக் காரணமும் புரிந்தது.
தொலைக்காட்சியில் தங்க நகை சேமிப்பு திட்டம் பற்றிய விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது இவர்களுக்காக.