அவள் இட்ட குங்குமம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 15, 2025
பார்வையிட்டோர்: 139 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாலாங் பகுதியில் கடும் சண்டை நடந்து கொண்டிருந்த நேரம். 

மிருகத்தனமான சீனன், பாரத மண்ணில் வைத்த காலைத் துண்டிக்கத் துடித்தெழுந்த ஆயிரமாயிரம் வீர இளைஞர்களில் கோவிந்தராஜுவும் ஒருவன். 

மையிருளிலும், பனியிலும், காற்றிலும் அச்சமென்பதே இல்லாத நிலையில் ஆயுதமும் கையுமாய் வடகிழக்கு எல்லையைக் காக்கும் ஜவான்களில் கோவிந்தராஜுவும் ஒருவன். 

துப்பாக்கியும் கையுமாய், இருளில் எதிரியைக் கொன்று கிழிக்கும் துடிப்புடன் கோவிந்தராஜு காவலிருந்தான். 

தூரத்தே சீனனின் ஈவிரக்கமற்ற மார்ட்டர் பீரங்கிகளின் அனல்கக்கும் வெடி ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. 

கோவிந்தராஜுவின் ரத்தம் கொதித்தது. துப்பாக்கியைப் பிடித்திருந்த அவன் உணர்ச்சி தாளாமல் அடிக்கட்டையை மண்ணில் அறைந்தான். 

மூன்று மைல் தொலைவுள்ள யுத்தகளத்துக்கு அவன் போகத் துடித்தான். ஆனால், ராணுவ அதிகாரியின் கட்டளையை எப்படி மீற முடியும்? இந்தக்காவல் நிலையத்தில்தான் அவனுக்கு வேலை. முதல் அணி போர் செய்து கொண்டி ருந்தது, மூர்க்கத்தனமாக முன்னேறி வந்து கொண்டிருந்த சீனனுடன். 

இரண்டாம் அணி தயாராக நின்றிருந்தது, உத்தரவுக்குக் காத்து. இரண்டாம் அணியைச் சேர்ந்தவன் கோவிந்த ராஜு. 

காதில் விழும் ஒவ்வொரு வெடிச் சத்தமும் எத்தனை வீர உயிரைக் குடித்ததோ ? எப்போது வரும் கட்டளை, எப்போது வரும் கட்டளை என்று நொடிக்கு நொடி எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் கோவிந்தராஜுவும் அவனைச் சேர்ந்த பிரிவினரும். 

கோவிந்தராஜு இருப்புக் கொள்ளாமல் நடந்தான். 

“ராஜு!” என்றான் அவனுடைய தோழன் அஹமத். “இன்று நீ வழக்கமாகச் செய்யும் காரியத்தைச் செய்யவில்லை போலிருக்கிறதே?” 

ராஜுவுக்கு அப்போதுதான் நினைவு வந்தது. 

முத்தம்மாவை இன்று பூராவும் அவன் நினைக்கவே இல்லை. எப்படி நினைக்க முடியும் ? அவன் உடலில் ஓடிய ஒவ்வொரு அணுவிலும் சீனனை விரட்டும் சினமே கொந்தளித்துக் கொண்டிருந்தது. 

போர்க்களத்தில் வீட்டையும், காதலையும் நினைக்க நேரமில்லை. 

அது வீரனைக் கோழையாக்கும் என்றா? அல்லவே அல்ல. 

கோவிந்தராஜுவின் பரம்பரை வீரப் பரம்பரை. அவனது தந்தையும் யுத்த வீரராக இருந்தவர்தான். தன் மகன் ராணு வத்தில்தான் சேர வேண்டும் என்று அவர் அவனைச் சேர்த் தார். தாய் மட்டும் இளைத்தவளல்ல. வீரப்புதல்வனைப் பெற்றதோடல்ல; யுத்த நிதிக்குத் தன் திருமாங்கல்யத்தையே கழற்றிக் கொடுத்துவிட்டு, மஞ்சள் கொம்பும் கழுத்துமாய்ப் புன்னகையுடன் விளங்குகிறாள்.  

கோவிந்தராஜுவுக்கு உணர்ச்சி முட்டியது. 

அவனது இளம் மனைவி முத்தம்மா. 

அவள் அவ்னது நெற்றியில் வீரத் திலகமிட்டுப் போருக்கு அனுப்பி வைத்தாள். அவளைப் பற்றிப் பெற்றோர் அவனுக்கு எழுதிய கடிதம் ஒரு வாரம் முன்னர் அவனுக்குக் கிடைத்தது. ‘போர்க்களத்தில் அவர் குளிரிலும் பனியிலும் போரிட, எனக்கு பஞ்சு மெத்தை தலையணையா?’ என்று முத்தம்மா வெறும் தரையில் தான் படுக்கிறாளாம். எவ்வளவு குளிராயிருந்தாலும் போர்த்துக் கொள்வதில்லையாம்.

‘இலை போட்டுச் சாப்பிடுவதில்லை. ரொட்டியோ சோறோ, ஏதேனும் ஒரு வேளை தான்.’ 

இரவுத் தூக்கமும் நாலு மணி நேரத்துக்கும் குறைவு. இப்படி உன் மனைவி ஒரே பிடிவாதமாகச் சுகங்களைத் துறந்திருக் கிறாள். நீ அவளுக்கு ஒரு வார்த்தை அன்புடன் கண்டித்து எழுது. அவள் உடம்பு எதற்காகும்? உனக்காக, நாட்டுக்காக அவள் எடுத்துக்கொண்டுள்ள விரதங்கள் பட்டியலில் அடங்காது: 

அப்புறம், ஞாபகமாக உனக்கு இதை எழுதச் சொன்னாள் அவள் என்னவோ உன்னிடம் சொல்லியிருக்கிறாளாம், அதைத் தினமும் விடாமல் செய்து வரவும் என்று எழுதச் சொன்னாள். இங்கு அனைவரும் நலமே. நீ வீரத்திருமகன். கொடுமைச் சீனனை வென்று உன்னை ஈன்ற பாரதத் தாயின் மணி வயிற்றைக் குளிரச் செய். உன் உயிரைப் பணயம் வைத்தாலும் கடமையிலிருந்து வழுவாதே. அதற்காக நாங்கள் வருந்த அதற்காக நாங்கள் வருந்த மாட்டோம். நெஞ்சு மகிழ்வோம், நாட்டைக் காக்க ஒரு நல் வீரனைத் தந்தோம் என்று. 

உன் வீரம் வாழட்டும். எதிரியைப் பொடி செய்! மாற்றான் மனை புகுந்த ஈனப் பகைவனை உன் துப்பாக்கி முனை கொன்று கிழிக்கட்டும். 

உன், 
தந்தை’. 

கடிதத்தை மடித்துப் பையில் போட்டுக் கொண்டான். 

முத்தம்மா சொன்னதை நேற்று வரை தினமும் அவன் நடத்தி விட்டான். இன்று உணர்ச்சிப் பெருக்கில், காதில் ஒலித்த எதிரியின் பீரங்கிச் சப்தத்தில், சீறி எழுந்து துடிக்கும் சினத்தில் மறந்து போய்விட்டான்.

அஹமத் ஞாபகப்படுத்திவிட்டான். “மிகவும் நன்றி அஹமத்”, என்று கூறிவிட்டு, கோவிந்தராஜு தன் மடித்த பிளாங்கட்டுக்குள் வைத்திருந்த பொட்டலத்தை எடுத்தான். பிளாங்கட்டுக்குள் வைத்திருந்த அது அவன் மனைவி அவன் நெற்றியில் தினமும் அவள் நினைவாக இட்டுக் கொள்வதற்காகக் கட்டிக் கொடுத்த குங்குமம். 

“அத்தான், எனக்கு நல்ல தைரியம் தான். நீங்கள் நிம்மதி யாகப் போய் வெற்றியுடன் வாருங்கள்.” என்று அவன் நெற்றிக்குப் பொட்டிட்டவள் கூறினாள். “அத்தான்! எனக்காக ஒன்று செய்வீர்களா?” 

“சொல்லு, செய்கிறேன்.” 

“இது நம் அம்மன் குங்குமம், உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, என் ஞாபகத்துக்காக தினமும் இதைக் காலையில் நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். இதை நெற்றியில் வைக்கிறபோதெல்லாம் உங்களுக்கு ‘நான் வெற்றி யோடு வாங்க’ என்று பொட்டிட்டது ஞாபகம் வரும். என் பெயரைச் சொல்லி ஒரு பத்து எதிரியைக் கொல்வதற்கு வீரம் பிறக்கும் !” 

கோவிந்தராஜு குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டான். ஏனோ சரியாக ஒட்டவில்லை. 

அது எப்படி ஒட்டாமல் போகும்? விடலாமா அதை? 

அஹமத் உதவிக்கு வந்தான். “கொஞ்சம் தண்ணீர் போட் டுக் குழை. பிசின் இல்லே ?” என்றவன் தன் வாட்டர் பேக்கி லிருந்து தண்ணீர் சிறிது விட்டான்.

“போதும், போதும். கை நிறையவா ஊற்றுகிறது ?” என்று சிரித்த கோவிந்தராஜு, குங்குமத்தை அளவாகத் தண்ணீர் விட்டுக் குழைத்து நெற்றியில் திலகமிட்டுக் கொண்டான். 

“அச்சா! பிளாரசென்ட் கலர் மாதிரி டாலடிக்குதே ? ஒஸ்திக் குங்குமம் !” என்று சிரித்தான் அஹமத். 

“நமது ரத்தத்தைவிடச் சிவப்புக் குறைவுதான். நமது வீரத்தைவிட ஒளி குறைவானதுதான்”, என்று கோவிந்தராஜு சிரித்தான். 

அதே நேரம் ஒயர்லஸ் அலறியது ! உத்தரவு வந்துவிட்டது! 

“இரண்டாம் அணித் துருப்புக்கள் உஷார். உடனே புறப்படுங்க: எதிரி முதல் அணியைப் பிளந்துவிட்டான்.” 

சிம்மம்போல் சிலிர்த்தெழுந்தது இரண்டாம் அணி. 

சீனனை நேருக்கு நேர் யுத்த களத்தில் கோவிந்தராஜு அப்போதுதான் முதல் தடவை பார்த்தான். குள்ளநரி உருவங்கள் மலைச்சரிவில் பீரங்கிகளுடனும், துப்பாக்கிகளுடனும் வெறி பிடித்த வேகத்தோடு முன் வருவது தெரிந்தது. 

இந்தியத் தரப்பில் யந்திரத் துப்பாக்கிகள் அனல் கக்கின. குண்டு மழை பொழிந்தன. இந்தியப் பீரங்கிகளின் கர்ஜனை எல்லை கடந்த உலுத்தர்களின் உயிரை வாங்கத் தவறவில்லை. ஆயினும் ஈசல்கள் விளக்கில் விழுவது போல் எதிரிகள் வந்து குவிந்த வண்ண மிருந்தனர். 

கோவிந்தராஜு ஒரு பாறை மறைவில் மறைவாக இருந்து கொண்டு எதிரிகளுக்கு அதிகபட்சம் எவ்வளவு சேதமுண்டாக்க முடியுமோ அவ்வளவும் செய்தான். எறி குண்டுகளை எறிந்து இருபது பேர் அடங்கிய சீனப் பிரிவை நிர்மூலமாக்கினான்: ‘தாயே, உன்னை இழிவாக நினைத்து உன்னை நெருங்கிய அன்னி யனை இன்னமும் ஒழிப்பேன்.” என்று கத்தியவாறு, மற்றுமொரு எறி குண்டை எறிய யத்தனிக்கையில் தான்… 

எதிரிகளில் ஒருவன் கோவிந்தராஜுவின் மறைவிடத்தை அறிந்து விட்டான். 

அடுத்த நிமிடம் அந்தச் சீனனின் யந்திரத்துப்பாக்கியின் நோக்கு கோவிந்தராஜுவின் பக்கம் திரும்பியது. 

பட பட பட பட வென்று தொடர்ந்து சுட்டுத் தீர்த்தபின் திமுதிமுவென்று ஓடிவந்தனர் சீனர்கள். 

பாவம், அவர்களுக்குத்தான் எத்தனை ஏமாற்றம்! குறைந் தது ஆறு இந்தியச் சிப்பாய்களாவது அந்தக் குழியிலிருந்து கொண்டு இவ்வளவு நேரம் தங்களைத் தாக்கியிருப்பார்கள் என்று நினைத்து வந்து பார்த்தால், ஒற்றை வீரன் மல்லாந்து கிடக்கிறான் ! 

சீனமொழியில் ஏதோ பேசியவர்கள் கோவிந்தராஜுவைக் காலால் எட்டி உதைத்து இருவர் புரட்டினர். ஒரு சீனன் தன் துப்பாக்கிக் கட்டையால் கோவிந்தராஜுவின் நெற்றியைக் குத்தினான். பிறகு, “ஒழிந்தான்!” என்று கத்தினார்களோ என்னவோ உற்சாகத்துடன் அந்த ஈனக் கூட்டம் அகன்றது. 

சரியாக அரைமணி. 

கோவிந்தராஜு மெதுவே கண்விழித்தான். அவனுக்கு நடந்தது பூராவும் ஒன்றுவிடாமல் தெரியும். 

அவன் சாகவில்லை. எதிரி சுட்ட குண்டுக்கு இலக்காகாமல் அவன் பத்திரமாக ஒதுங்கிக்கொண்டுதான் இருந்தான். அவர்கள் அவனை நோக்கி முன்னேறி வந்ததும் குண்டு பட்டவன்போல் படுத்துவிட்டான். 

ஆனால் அவனுக்குப் புரியவில்லை, எவ்வாறு, அந்தக் கூட்டம் அவனது பாசாங்கை நம்பிவிட்டது என்று.

நெற்றியைத் தடவிக்கொண்டவன் கையைப்பார்த்தான். புறப்படுமுன்னர் இட்டுக்கொண்ட குங்குமம் அழிந்து கையில் பட்டிருந்தது. 

நெற்றியில் அகலமாய் அப்பியிருந்த இந்தக் குங்குமத்தை- என் முத்தம்மா கொடுத்த குங்குமத்தை பார்த்து எதிரிகள், நெற்றியில் குண்டு பட்டு நான் இறந்துவிட்டதாக நினைத்து விட்டார்கள் போலும். ஒரு சீனன் துப்பாக்கிக் கட்டையால் நெற்றியில் குத்தியதற்குக்கூட ‘இதோ காயம்’ என்று சுட்டிக் காட்டத்தான் இருக்குமோ? 

உள்ளம் பொங்கி உவகை நிறைந்தது கோவிந்தராஜுவுக்கு. ‘அஹமத்/ உனக்கும் என் நன்றி’ என்று அவன் மகிழ்ந்தான். 

உயிர் பிழைத்த மகிழ்ச்சியோடு, இப்போது இன்னுமொரு மகிழ்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. சீனத் துருப்புக்கள் போட் டிருந்தபடை முகாமுக்கு அருகில் அவன் இருந்தான். 

இந்தியர்களைப் பின்வாங்க வைத்துவிட்டோம் என்ற வெற்றி மதர்ப்பில் சீனர்கள் தங்கள் முகாமில் குடித்துக் களித்துக்கொண் டிருந்தனர். ‘நமது படைதான் இந்தியர்களை விரட்டிக்கொண்டு பதினைந்து மைல் தொலைவில் போரிட்டுக் கொண்டிருக்கிறதே?’ என்று நினைத்து மனச்சாராயம் குடித்துக்கொண்டிருந்த முகாமில் படீல் படீல் படீல் எனச் சரமாரியாக பத்துப் பதினைந்து குண்டு கள் வெடித்தன. முகாம் முழுவதும் ஒரே தீ. அங்கிருந்த நூற் றுக் கணக்கான சீனர்களில் இறந்தவர்கள் போக மற்றவர்கள் நிலைகலங்கி அலறிக் குழம்பிப்போய் முகாம்களை விட்டு ஓடினர். ஓடும் அவர்களை நோக்கி இருளிலிருந்து மீண்டும் ஒரு எறி குண்டு எறியப்பட்டது. ‘“ முத்தம்மா! உனக்காக, நீ சொன்னாயே, ‘என் பெயரைப் சொல்லிப் பத்து சீனனைக் கொல்லுங்கள்’ என்று, அதை நிறைவேற்றி விட்டேன்,” என்று மனத்திருப்தியுடன் கூறிக்கொண்டான். கோவிந்தராஜு. 

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

ja_raa_sundaresan ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ.ரா.சுந்தரேசன் (பி:சூன் 1, 1932) பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார். தமது தாயார் மற்றும் தந்தையார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்னும் புனைபெயரில் நகைச்சுவைக் கதைகள் மற்றும் தொடர் புதினங்களுக்காக மிகவும் புகழ் பெற்றார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தியின் சகோதரன். சேலத்தைச் சேர்ந்த ஜலகண்டாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *