அவனும் சில வருடங்களும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 6, 2025
பார்வையிட்டோர்: 227 
 
 

(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 10

கார்டினோட் ரெயில்வே ஸ்ரேசனில் அன்ரோனியோ வந்திருக்கவில்லை. மார்ட்டின் மட்டும் வந்திருந்தான். 

“எங்கே அன்ரோனியோ”

மார்ட்டின் ஒரு கொஞ்ச நேரம் ஒன்றும் சொல்லவில்லை. ”அன்ரோன்யோவின் கேர்ள் பிரண்ட்..” 

“ஜூலியட்டுக்கு என்ன நடந்தது?” டெவீனா பதறினாள். 

“ஜுலியட்டுக்கு ஒன்றுமில்லை. அவளின் அப்பா ஒரு விபத்தில் இறந்து போனார். தாயார் மன அதிர்ச்சியில் ஒரு சைக்கியாட்ரிக் ஹாஸ்பிட்டாலில் அட்மிட் பண்ணப் பட்டிருக் கிறாள். அன்ரோனியோவுடன் பாரிஸ் வருவதாக இருந்த ஜுலியட்டால் வர முடியல்ல. அன்ரோனியோ இடிந்துபோய் குடித்துத் தொலைக்கிறான். என்னவென்று ஷுட்டிங் செய்யப் போகிறேனோ தெரியாது.” 

மார்ட்டின் மன வேதனையுடன் அலுத்துக் கொண்டான்.

“இன்றைக்கு நாங்கள் ஒருத்தரும் ஒன்றும் செய்ய முடி யாது. நாங்கள் இருவரும் பிரயாணக் களைப்பிலிருக்கிறோம். நாளைக்கு கிறிஸ்மஸ் யாரும் ஒன்றும் பண்ண முடியாது. முடியுமான வரைக்கும் ஸ்கிரிப்டைப் படித்து, ஸ்ரோரி போர்ட் பார்ப்போம். ஷொட்ஸ் எப்படிச் செய்வது என்பதை யோசிப்போம்.” டெவீனா வழக்கம்போல் தன்னுடைய ஆலோசனைகளைச் சொன்னாள். 

மார்ட்டின் டெவீனாவை நன்றியுடன் பார்த்தான்.

அவரின் ஆறுதல்கள் அவனுக்கு தேவையாயிருந்தன என்று அவன் தொனியில் தெரிந்தது. 

அன்ரோனியோ இன்னும் எழும்பவில்லை. மார்ட்டின் தனது நண்பன் ஒருத்தனின் பிளாட்டில் இவர்கள் தங்க ஒழுங்கு செய்திருந்தான். 

மார்ட்டினின் பிரன்ச் நாட்டுச் சினேகிதன் கமரா வேலை செய்வதென்று ஒழுங்கு பண்ணப் பட்டிருந்தது. 

சோபியா என்ற மார்ட்டினின் சினேகிதியும் இவர்களுடன் கலந்து கொண்டாள். 

சோபியாவும் டெவீனாவும் ‘ஒரு அறையைத் தங்களுடைய தாக்கிவிட்டார்கள்’. 

மற்ற நான்கு ஆண்களும் மற்ற அறையிலும் ஹாலிலும் தங்குவதென்று முடிவாயிற்று. 

“இதெல்லாம் வித்தியாசமான அனுபவங்கள்” டெவீனா சிரித்துக் கொண்டாள். 

அன்று பின்னேரம் பொன்னம்பலம் மாமா வீட்டாருக்குப் போன் பண்ணிவிட்டுச் சென்றான். 

“என்ன திடீரென்று பரிசுக்கு வந்திருக்கிறாய்” மாமா வரவேற்றபடி கேட்டார். 

”சினேகிதன் ஒருத்தன் தனது படப்பிடிப்புக்கு உதவி செய்யச் சொல்லிக் கேட்டான்.” 

மாமா பதில் பேசவில்லை. 

மாமி இவனிடம் ராகவனின் வீட்டாரைப் பற்றி கேள்வி கள் கேட்டுக் கொண்டிருந்தாள். 

இந்திரா காப்பி ட்ரேயுடன் வந்தாள். இவன் கற்பனை செய்தபடியே ஜுன்சும் டீசேர்ட்டும் அணிந்திருந்தாள். அவள் தங்கை கலா ட்ரெஸ் போட்டிருந்தாள். 

“எப்படிப் பரிஸ்” இந்திராவைக் கேட்டான். 

“பாஷை பழகக் கஷ்டமாக இருந்தது” இந்திராவுக்காக மாமா மறுமொழி சொன்னார். 

“பாரதி பாடல்கள் இன்னும் ஞாபகமிருக்கா” ராகவனுக்கு இந்திரா நன்றாகப் பாடுவாள் என்பது ஞாபகம் வந்தது. “இலங்கையில் பாட்டு மட்டுமல்ல, வீணையும் பழகினாள்… இப்போ…” மாமியின் கண்கள் கலங்கின. 

மாமி சாப்பிடச் சொன்னாள். இடியப்பமும் சொதியும் இறால் குழம்பும் முட்டைப் பொரியலும் அமிர்தமாக ருசித்தன. 

“இந்திரா தான் சமைத்தாள்” கலா தமக்கையைச் சீண்டினாள்.  

“நல்ல சாப்பாடு” ராகவன் உண்மையைச் சொன்னான்.

“விருப்பமிருந்தால் வாழ்க்கை முழுதும் சாப்பிடலாம்” கலா ராகவனின் காதில் கிசு கிசுத்தாள். 

ராகவனுக்குத் தர்மசங்கடமாகவிருந்தது. மாமா நாட்டுப் பிரச்சினை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். 

ஒரு சில நாட்களுக்கு முன் அநுராதபுரத்தில் சிங்களப் பொதுமக்கள் தமிழ் விடுதலை வீரர்களால் படுகொலை செய்யப்பட்ட விபரம் பத்திரிகைகளில் வந்திருந்தது. 

“83ம் ஆண்டில் எங்களை மிருகங்களாக வெட்டிக் குவித்தார்கள். நடுரோட்டில் உயிரோடு எரித்தார்கள். தமிழர்கள் என்ன கையாலாகாதவர்களா? சிங்களவர்களும் அனுபவிக்கட்டும்.” 

ராகவன் ஒன்றும் சொல்லவில்லை “என்ன தம்பி பேசாம லிருக்கிறீர்கள்.” 

“கொலைகள் செய்வதால் தேசிய இனப் பிரச்சினைக்கு முடிவு வருமா” 

“கொலைகளைத் தொடங்கியவர்கள் சிங்கள இனவாதிகள். தமிழன் ஆயுதப் போரைத் தொடர்ந்து நடத்தி வெற்றி கொள்ளாவிட்டால் சிங்களவர் எங்களை இன்னும் எத்தனையோ கோடி வருடங்களுக்கு அடிமையாகத்தான் வைத்திருப்பார்கள்.” 

ராகவன் நேரத்தைப் பார்த்தான். பாரிஸ் புதிய இடம். ராகவன் தங்கியிருக்குமிடம் நடந்து போகும் தூரத்தில் இல்லை. ‘மெட்ரோ’ எடுத்துப் போகவேண்டும். அவன் அவசரப் பட்டான்.. 

“தம்பி, இந்த நேரத்தில் போக வேண்டாம். தங்கி விட்டு நாளைக்குப் போங்கள்” மாமி வேண்டிக் கொண்டாள். 

“வேண்டாம், எனக்காகக் காத்திருப்பார்கள் “அவன் அவசரப் பட்டான். 

”பாயாசம் சாப்பிடுங்கள்” கலா குறும்புடன் பாயாசத்தை அவன் முன்னால் தள்ளினாள். 

”என்ன இந்திரா, வாய் திறக்க மாட்டேன் என்கிறாய். ஒரு பாரதியார் பாட்டுப் பாடு” 

ராகவன் இந்திராவைக் கேட்டான். 

இந்திரா நாணத்துடன் மறைய மாமா கூப்பிட்டார். “தம்பி கேட்கிறார் ஒரு பாட்டுப் பாடு.” 

ஒரு சில நிமிடங்கள் மறுப்புச் சொல்லிய பின் மாமியின் உத்தரவுக்குப் பணிந்து இந்திரா பாரதி பாட்டுப் பாடினாள். 

“நல்லதோர் வீணை செய்தே நலம்கெடப் புழுதியில் எறிவதுண்டோ 
சொல்லடி சிவசக்தி, என்னைச் சுடர் 
மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்.
வல்லமை தாராயோ இந்த மானிலம் 
பயனுற வாழ்வதற்கே, சொல்லடி சிவசக்தி, நிலச்
சுமையென 
வாழ்ந்திடப் புரிகுவையோ” 

இந்திராவின் குரல் அப்படியே கணீரென்றிருந்தது. பாரிஸ் நகரில் பாரதி பாடலை இந்திராவின் வாயால் கேட்டது அவள் செய்த பாயாசத்தை விட இனிமையாக இருந்தது. 

மாமா பெருமூச்சு விட்டார். 

“நாடற்ற அனாதைகள் நாங்கள். இந்தப் பாடலை அந்நிய நாட்டில் பாடவேண்டிய தலைவிதியை என்ன சொல்வது?” 

மாமா மெட்ரோ ரெயில்வே ஸ்ரேசன் வரைக்கும் வந்தார். “ஏன் இந்தப் படிப்பு? எதிர்காலம் எப்படியிருக்கும்” மாமா தயக்கத்துடன் கேட்டார். 

“தெரியாது” ராகவன் உண்மையைச் சொன்னான். 

“மாமா எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று போலிக் கற்பனைகள் செய்து ஏமாற்றம் அடைய நான் தயாரில்லை… எனக்கு விருப்பமான படிப்பு படிக்கிறேன். நல்ல திருப்பம் வருமென்று எதிர்பார்க்கிறேன்.” 

“இருபத்தைந்து வயதாகிறது. ஒரு நல்ல வேலை எடுக்கும் படிப்பாயிருந்தால் பரவாயில்லை.” 

மாமா தன்னை ஒரு எஞ்சினியராகவோ லோயராகவோ எதிர்பார்த்திருக்கிறார் என்பது அவரது குரலிற் தெரிந்தது. 

அம்மாவின் தலைமுறையில் பிறந்த மாமாவிடமிருந்து வேறு என்னத்தை எதிர்பார்க்க முடியும்? 

அப்பா எவ்வளவு வித்தியாசமானவர்? 

ராகவனைச் ‘செம்மீன்’ படம் பார்க்கக் கூட்டிக்கொண்டு போயிருக்கிறார். கொழும்புக்கு வரும் நேரங்களில் பிலிம் பெஸ்டிவல் நடந்தால் மகனையும் கூட்டிக்கொண்டு போவார். 

அப்பா நிறைய வாசிப்பார். இவரை பதின்மூன்றாவது வயதில் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ புத்தகத்தைப் பரிசா கக் கொடுத்தார். பதினாறாம் வயதில் ஒரு கமெராவை வாங்கிக் கொடுத்தார். 

மெட்ரோ ட்ரெயினிலிருந்தபடி சடுதியாகத் திரும்பிய தமிழர்களின் வாழ்க்கையை யோசித்துப் பார்த்தான். டாக்டரா கவோ, எஞ்சினியராகவோ, லோயராகவோ தங்கள் குழந்தைக ளைப் பார்க்கும் இலங்கைத் தமிழ்ச் சமுதாயம் ராகவன் லண்டனில் திரைப்படப் பட்டப் படிப்பு படிப்பதை ஆச்சரியத் துடன் பார்ப்பது ஒன்றும் அதிசயமில்லை. 

அவர்கள் தங்குமிடத்திற்குப் போனபோது டெவீனாவைத் தவிர யாருமில்லை. 

“எல்லாரும் குடிக்கப் போய் விட்டார்கள்” டெவீனா அலுப்புடன் சொன்னாள். 

“சாப்பிட்டாயா” டெவீனா ஆச்சரியத்துடன் ராகவனைப் பார்த்தாள். 

“என்ன அப்படிப் பார்க்கிறாய்.” 

“எல்லாரும் வெளியே போய் விட்டார்கள் என்றால் அவர்கள் வெளியில் சாப்பிடுவார்கள். அதுதான் கேட்டேன்.” 

“பிரட், சீஸ், சலட் சாப்பிட்டேன். பிரிட்ஜ் நிறைய வைன் இருக்கிறது. உனக்குத் தெரியும்தானே பிரன்ச் காரர் தண்ணீருக் குப் பதில் வைன்தான் குடிப்பார்கள். உனக்கு ஏதும் வைன் வேணுமா.” 

“வேண்டாம்” ராகவன் தொப்பென்று நாற்காலியில் சாய்ந்தான். 

மாமா குடும்பம் கண்முன்னே நின்றது. இந்திராவின் பாடல் காதில் இன்னும் ஒலிப்பது போன்ற பிரமை. 

“எப்படி உனது சொந்தக்காரர்” இவன் நினைவைத் தெரிந்து கொண்டவள்போல் கேட்டாள். 

“பாவம், அகதியான துக்கம் இன்னும் போகவில்லை. அந்நிய நாட்டில் ஏதோ செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் விரக்தியுடன் வாழ்கிறார்கள். தங்கள் குழந்தைகளைப் பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள். இப்போது நாளாந்தம் போவதையே நரக வேதனையாக யோசிக்கிறார்கள்” சோகத்துடன் சொன்னான் ராகவன். 

“லண்டனுக்குப் போக முதல் இன்னொருதரம் போவாயா” 

“தெரியாது, ஏன் கேட்கிறாய்.” 

“அவர்களைப் பார்க்க ஆசைப்படுகிறேன்.” 

“பார்க்கலாம்” ஏனோ தானோ என்று மறுமொழி சொன்னான் ராகவன். 

சினிமாத் துறையில் மாமாவுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை என்று தெரியும். அவர் முன்னால் ஒரு வெள்ளைக்கா ரப் பெண்ணுடன் போய் நின்றால் அதிர்ந்து போவார் என்று ராகவனுக்குத் தெரியும். 

மாமா வீட்டுக்குப் போனதைப் பற்றி அம்மாவுக்குப் போன் பண்ண நினைத்தான். வெளியில் போய் டெலிபோன் பண்ண ஆயத்தமானான். 

“வீட்டில் அடைந்து கிடக்க எரிச்சலாக இருக்கிறது. கொஞ்சத் தூரம் நடக்கலாமா” டெவீனா கேட்ட கேள்வி இவனைச் சிரிக்கப் பண்ணி விட்டது. 

“என்ன சொல்லிவிட்டேன், ஏன் சிரிக்கிறாய்.” 

”நான் அம்மாவுக்குப் போன் பண்ண வேண்டும் போகிறேன். வேண்டுமென்றால் என்னுடன் வரலாம்.” 

பாரிஸ் தெருக்கள் இன்னும் பிஸியாக இருந்தது. கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் மக்கள் குடித்துக் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தார்கள். 

அவன் இளம் வயதில் மன்னாரில் வாழ்ந்த போது கிறிஸ்தவ மக்கள் எவ்வளவு சிறப்பாக நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவார்கள் என்று நினைத்துக் கொண்டான். 

அம்மா மாமா குடும்பத்தினரில் இந்திராவைப் பற்றி விசேடமாக விசாரித்தாள். 

“பாவம் அந்தப் பெண், சங்கீதத்தில் மிகவும் கெட்டிக் காரி, இப்போது பாரிஸில் ஏதோ வேலை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறாள்.” அம்மா பெருமூச்சு விட்டாள். 

அம்மாவின் அதிகப்படியான விசாரணையின் பின்னணி யில் என்ன கருத்துப் புதைந்து கிடக்கிறது என்று அவனுக்குத் தெரியும். சிந்தனை எங்கேயெல்லாமோ பறந்தது. 

“ஜுலியட் லண்டனுக்கு வராவிட்டால் தன்னால் வாழ முடியாது என்று அன்ரோனியோ புலம்புகிறான்” டெவீனா சிந்தனையை உடைத்தாள். 

“முட்டாள்” அவன் முணு முணுத்தான். 

“ஏன் முட்டாள்” அவள் விசாரித்தாள். 

“காதல் இல்லையேல் சாதல் என்று உளறுவது முட்டாள்தனம்” 

“காதல் வாழ்க்கையின் ஒரு அற்புதமான அனுபவம் இல்லையா” அவன் திரும்பி நின்று அவளைப் பார்த்தான். கேட்டவள் இவனில் பார்வை பதித்திருந்தாள். இரவு நடுச் சாமமாகிக் கொண்டிருந்தது. 

நத்தார் பிரார்த்தனைக்காகப் பக்கத்திலுள்ள நொற்றடாம் தேவாலயத்தில் மணிகள் ஒலித்துக் கொண்டிருந்தன. 

செயின் நதி காதல் ததும்பிய பெண்ணின் நடை போல் மிகவும் ஒய்யாரமாகத் தவழ்ந்து கொண்டிருந்தது. அதன் பின்னணியில் நொற்றடாம் கதீட்ரல் வானத்தைப் பிழந்து கொண்டு நின்றது. அந்தத் தேவாலயத்திலிருந்து பிரார்த்தனைக் கீதங்கள் வானத்திலிருந்து தேவதைகள் வாயிலிருந்து வரும் புனித ஒலிகளாகக் கேட்டன. 

இரண்டு நாளாகப் பிரயாணக் களைப்பில் முகம் வாடினா லும் மனம் வாடாத புன்னகையுடன் டெவீனா அவன் முன் னால் நின்றிருந்தாள். 

திரைப்படக் கல்லூரி லிப்ட்டில் அவன் மார்பில் மாலை யாய் விழுந்தவள். நேற்று லண்டனிலிருந்து வரும்போது நடுக்கடல் கப்பலில் காதற் போதையை அவனில் ஊற்றியவள். 

நேற்று இந்திய வறுமைக்கு உருகியவள்.

இன்று… அன்ரோனியோவின் காதலைப் பற்றிக் கேள்வி கேட்கிறாள். 

“என்ன கேட்டாய்” அவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டு கேட்டான். 

அந்த நிமிடமும் அவள் அவனுக்கு முன்னால் நிற்பதும் கேட்கும் கேள்வியும் அசாதாரணமாகவிருந்தன. 

“காதல் ஒரு அற்புதமான அனுபவம் என்று சொன்னேன்” அவள் குரலில் குறும்பு. 

”எனக்கு ஒரு அனுபவமும் இது வரைக்குமில்லை”

“தெரியும்” அவள் குரலில் கிண்டல். 

அவன் மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் நடந்து கொண்டி ருந்தான். 

“ராகவன்” அவள் குரல் எங்கேயோ தூரத்தில் கேட்பது போலிருந்தது. 

“ம்” அவன் அப்படியே நின்றான். அவள் அவன் அருகில் வந்தாள். 

“என்னைப் பார்க்க ஒரு பெண்ணாய்த் தெரிய வில்லையா” அவளின் கேள்விக்கு மறுமொழி சொல்ல முடியவில்லை. 

“எங்கேயும் எங்களைச் சுற்றியிருக்கும் உலகத்தையும் ஒரு வினாடி சுற்றிப்பார்” 

தனிமை, இருள், பிரார்த்தனைப் பாடல்கள், கோயில் மணியோசைகள், செயின் நதியில் தெறித்து விழும் நிலவின் சிதறல்கள். 

“ராகவன் என்னை முத்தமிட வேண்டும்போல் உனக்குத் தோன்றவில்லையா” டெவீனாவின் கேள்வி அவனைக் குலுக்கியது. 

அத்தியாயம் – 11

நத்தார்ப் பண்டிகையன்று சோபியா, டெவீனா இருவரும் பெரிய சமையல் செய்திருந்தார்கள். அன்ரோனியோ இன்னும் படுக்கையை விட்டு எழும்பவில்லை; ஜூலியட் பற்றி நித்தி ரையிலும் புலம்பிக் கொண்டிருந்தான். 

மார்ட்டின் எரிச்சலுடன் தலையிலடித்துக் கொண்டான். 

“இவனை நம்பி பாரிஸ் வந்தது எனது முட்டாள் தனம்” மார்ட்டின் முணு முணுத்தான். 

சோபியா அவனுக்கு வைனை ஊற்றிக் கொடுத்தாள். “என்ன என்னையும் புலம்பப் பண்ணப் போகிறாயா” சோபி யாவைக் கேட்டான் மார்ட்டின். 

“என்ன பண்ணுவது, உனது படப்பிடிப்பு நேரம் பார்த்து ஜூலியட்டின் அப்பா மண்டையைப் போட்டது அன்ரோனி யோவின் பிழையா” சோபியா எதிர்க்கேள்வி கேட்டாள். 

“தவிர்க்க முடியாமல் வரும் சந்தர்ப்பங்களைத் தாங்கிக் கொள்ள மனித மனம் பழக வேண்டும்” மார்ட்டின் இரண்டா வது கிளாஸ் வைனை ஊற்றிக் கொண்டான். 

“காதலிக்கு வந்த துயர் அவன் துயர்தானே. உனது சுய நலத்திற்காக ஏன் மற்றவர்களின் துயரை உணர்கிறாயில்லை” சோபியாவுடன் டெவீனாவும் சேர்ந்து கொண்டாள். 

“இப்போது என்ன செய்யச் சொல்கிறீர்கள். எல்லாவற்றையும் கான்ஸல் பண்ணி விட்டுப் பார்ட்டி வைத்துக் கொண்டாடுவமா” மார்ட்டினின் குரலில் கோபமா, தவிப்பா என்று தெரியவில்லை. 

ராகவன் பதில் பேசவில்லை. பாரிசுக்கு வந்த நேரத்திலி ருந்து நடப்பதெல்லாம் அவனுக்குக் குழப்பமாக இருந்தது. 

”அன்ரோனியோவின் மூட் சரியாகும் வரை அவனைத் தொல்லைபடுத்தாமலிருப்பது நல்லது” டெவீனா ஆலோ சனை சொன்னாள். 

”டெவீனா நீ ஒரு அமைதிகாக்கும் படையில் இருக்க வேண்டியவள்” 

மார்ட்டின் சிரித்தான். 

அவள் பதில் பேசவில்லை. 

“உனது வீட்டாருடன் நத்தார்ப் பண்டிகையைக் கொண்டாடாமல் எங்களுடன் வந்ததற்கு உன்னை மிகவும் மதிக்கிறேன்” 

“தயவு செய்து அப்படி எல்லாம் சொல்ல வேண்டாம்” டெவீனா முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள். 

“எனது வீட்டில் நிற்கப் பிடிக்காமல்தான் இங்கே வந்தேன்…” 

அவள் குரல் சோர்ந்திருந்தது. சோபியா எழுந்துபோய் டெவீனாயை அழைத்துக் கொண்டாள். 

மார்ட்டீனும் ராகவனும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். 

“இருபத்தி ஒரு வயதுவரைக்கும் என் தாய் தகப்பனின் சொற்படி எல்லாம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். இப்போது அப்படியில்லை. எனக்கு இருபத்தியிரண்டு வயதாகிறது…. எனக்குப் பிடித்த வேலை செய்யலாம். திரைப்படப் பட்டப் படிப்புச் செய்யலாம், பாரிஸில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தைக் கொண்டாடலாம்” 

சட்டென்று ஊசி விழுத்தால் கூடக் கேட்டுமளவுக்கு நிசப்தம். 

“எனது தாய் தகப்பன் எனக்காக ஒன்றாக வாழ்பவர்கள். இந்த வருடமாவது அவர்கள் தாங்கள் நினைத்தபடி சந்தோச மாக இருக்கட்டும் என்று நினைத்தேன்…. அப்பா நியுயோர்க் போய் விட்டார்… தனது கேர்ள் பிரண்டுடன் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடுகிறார். அம்மா….” 

அவள் கண்களில் நீர். 

ராகவன் நீர் தழும்பும் டெவீனாவைப் பார்த்தான். என்னை முத்தமிட மாட்டாயா என்று கேட்ட காதற் தேவதை யாய் டெவீனா தெரியவில்லை. 

தாய் தகப்பனற்ற அனாதையாய்த் தெரிந்தாள். பரிதாப மாக இருந்தது. 

“எனது தாய் நீண்ட நாட்களாகச் சுகவீனமாக இருக்கி றாள். இந்த விடுதலை நாட்களில் தனது தமக்கையுடன் ஸ்கொட்லாந் போய் விட்டாள்” 

“யார் எங்கே போனாலும் என்ன? நான் ஜூலியட் வராவிட்டால் லண்டனுக்கு வர மாட்டேன்” அன்ரோனியோ அரை குறை நித்திரையில் உளறிக் கொண்டு வந்தான். 

சோபியா எல்லோரையும் பார்த்தாள். “சரி, சாப்பிட உட்காருங்கள்” 

ராகவனுக்கு மனதில் ஏதோ அடைத்தது. இத்தனை வேதனைகளையும் வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் இந்தப் பெண் என்னவென்று நிலவில் குளிக்கும் தென்றலாக மென்மையாக இருக்கிறாள்? 

சாப்பாடு இறங்கவில்லை ஏனோதானோவென்று எதையோ சாப்பிட்டு விட்டு வெளிக்கிட்டான். 

பாரிஸ் நகர் நத்தார் தினமன்று மிக அமைதியாக விருந் தது. தூரத்தில் ஐவிள் டவர் மனித உழைப்பின் உயர்ச்சியை உணர்த்திக் கொண்டு மேகத்தை முட்டியது. 

கால் போன போக்கில் நடந்தான். எத்தனையோ மனிதர் கள் இலங்கைத் தமிழர்கள் போற் தெரிந்தார்கள். 83ம் ஆண்டு கலவரத்தின் பின் 300,000 தமிழர் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாய்த் தஞ்சம் அடைந்திருப்பதாகத் தெரிந்தது. 

அதில் கிட்டத்தட்ட 50.000 தமிழர் பரிசிலும் பரிசைச் சுற்றிய பகுதிகளிலும் வாழ்வதாக மாமா சொல்லியிருந்தார். அந்நிய நாடுகளில் அகதிகளாய் வாழும் அவலத்தின் விரக்தி மாமாவின் பேச்சில் எதிரொலித்ததை அவன் உணராம வில்லை. 

எத்தனையோ பெரிய உத்தியோகத்தில் வாழ்ந்த தமிழர் கள் அந்நிய நாடுகளில் கூலிகளாக வாழும் நிலை மனதைக் குடைந்தது. 

பொன்னம்பலம் மாமா வவனியா நகரில் ஒரு பாடசாலை அதிபராக இருந்தவர். மனமொடிந்த அந்த அதிபர் இன்று ஏதோ கட்டிடத்தின் காவலராக வேலை செய்கிறார். 

வீணை தாங்கிய சரஸ்வதியாய்த் தரிசனம் தரும் இந்திரா ஒரு பிரன்ச் ரெஸ்ட்ரோண்ட் ஒன்றில் கூட்டித் துடைக்கும் வேலை செய்கிறாளாம். 

இருதயத்தில் ஈட்டிகள் பாய்ந்தன. எங்கள் தமிழர்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கும்? 

‘நல்லதோர் வீணை செய்தே’…. இந்திராவின் பாடல் ஞாபகம் வந்தது. 

நீண்ட நேரம் கால்போன போக்கில் நடந்தபின் தங்குமி டம் வந்தான். யாருமில்லை. அவனிடம் திறப்புமில்லை. இவன் எப்போது வருவேன் என்று சொல்லாமல் வெளிக்கிட்ட தால் மற்றவர்கள் இவனுக்காகக் காத்திருக்காமல் வெளியில் போய் விட்டார்கள் என்று தெரிந்தது. 

அன்ரோனியோவின் புலம்பலைக் கேட்காமல் அவனைக் கூட்டிக் கொண்டு வெளியில் போனது நல்ல விடயமாகப் பட்டது. 

இவனுக்குப் பிரன்ச் பாஷை தெரியாது. கால் போன போக்கில் இன்னுமொருதரம் போக விரும்பமில்லை. தூரத் தில் தெரிந்த ஐவிள் டவருக்குப் போக யோசித்தான். தனிமை யில் போவது ஒரு வித்தியாசமான உணர்வாக இருந்தது. டவரைச் சுற்றி சுற்றுலாப் பிராயணிகளின் கூட்டம் தெரிந்தது. 

பக்கத்தில் செயின் நதியில் எத்தனையோ படகுகள் உல்லாசப் பிரயாணிகளைச் சுமந்து கொண்டு ஆரவாரமான சத்தத்துடன் போய்க் கொண்டிருந்தது. 

தனக்குப் புரியாத மொழி பேசும் ஆயிரக்கணக்கான மக்களுடன் தன்னைப் பிணைத்துக் கொண்டான். 

அம்மாவைப் பிரிந்து வெளிநாடு வந்தது இதுதான் முதற் தடவை. அம்மாவை நினைத்ததும் டெவீனாவின் தாய் தகப்பனைப் பற்றி நினைத்துக் கொண்டான். 

“என்ன தனிமை?” குரல் கேட்டுத் திரும்பினான். சோபி யும் டெவீனாவும் நின்றிருந்தார்கள். “வீட்டுக்குள் நுழையச் சாவி இருக்கவில்லை. ஏதோ பொழுது போகட்டும் என்று வந்தேன்” 

உண்மையைச் சொன்னான் ராகவன். “நல்ல விடயம்” டெவீனா சொன்னாள். மத்தியான சாப்பாட்டு நேரம் நீர் வழிந்த பெண்ணாகத் தெரியவில்லை. மலர்ந்திருந்தாள். 

“சோபியா வீட்டுக்குப போகிறாளாம். போகலாமா அல் லது கொஞ்ச நேரம் சுத்தித் திரியலாமா? மார்ட்டினும் அன்ரோனியோவும் நாளைக்கு ஷுட்டிங் நடக்குமிடங்களைப் பார்க்கப் போய் விட்டார்கள்.” 

டெவீனா கேட்டபடி இவன் அருகில் உட்கார்ந்தாள். இவன் மறுமொழி சொல்ல முதல் “பயப்படாதே முத்தமிட சொல்ல மாட்டேன்” என்று காதில் மெல்ல ரகசியம் சொன் னாள். அவளின் கிசுகிசுத்த குரல் அவனை என்னவோ பண்ணியது. 

சோபியா போய்விட்டாள். 

பின்னேரக் குளிர் முகத்தைத் தொட்டு விளையாடிது. ”உன்னுடைய தாய் தகப்பன் பற்றிச் சொன்னது எனக்கு மிகவும் துன்பத்தையுண்டாக்கி விட்டது.” 

“என்ன செய்வது? வாழ்க்கையில் ஒவ்வொருத்தர் மனத்தி லும் ஒவ்வொரு துன்பம்” அவள் தத்துவம் பேசினாள். 

“என்ன தம்பி, குளிரில் இருக்கிறியள்” ராகவன் திடுக்கிட்டுப் பார்த்தான். மாமா குடும்பம் எதிரே நின்றது. யாரை அவள் வீட்டிக்குக் கூட்டிக் கொண்டு போகக் கூடாது என்று நினைத்துக் கொண்டானோ அவளுடன் அவர்களுக்கு முன்னால் நிற்பது தர்ம சங்கடத்தை யுண்டாக்கியது. 

“விடுதலை நாளில் வீட்டில் இருந்து என்ன செய்யிறது. அதுதான் சும்மா நகர் சுற்றிப் பார்க்க வெளிக்கிட்டம்” உன்னை ஒன்றும் பின் தொடரவில்லை, தற்செயலாகத்தான் சந்தித்தோம் என்ற சமாதானம் மாமாவின் குரலில் ஒலித்தது. 

“நாங்களும் அப்படித்தான்… இது என்னுடைய சக மாணவி டெவீனா ஸேர்லிங்” ராகவன் டெவீனாவை அறிமுகம் செய்து வைத்தான். மாமா ஹலோ சொன்னார். மாமி உற்றுப் பார்த்தாள். அல்லது முறைத்துப் பார்த்தாள். 

நேற்று தலை குனிந்து, பார்வை நிலம் பதிய நல்லதோர் வீணைசெய்தே பாடிய இந்திரா இப்போது மாமிக்குப் பின்னால் நின்று இவனை நேரடியாகப் பார்த்தாள். 

இரண்டு வருடங்களுக்கு முன் சென்னை மரீனா பீச்சில் பார்த்த குழந்தைத்தனமான இனிய பார்வைக்கும் இன்று ஆயிரம் கேள்விகள் கேட்டும் இந்தப் பார்வைக்கும் எத்தனையோ கோடி வருடங்கள் வித்தியாசம். 

கலா தமக்கையின் அருகில் நின்று ராகவனையும் டெவீனாவையும் வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். இரவு கண்ட குறும்புத்தனம் அவள் முகத்திலில்லை. 

“எப்போது லண்டன் திரும்பிகிறீர்கள்” மாமா சம்பிரதாயத்திற்குக் கேள்வி கேட்டார். 

“இரண்டு மூன்று நாட்களில் என்று நினைக்கிறோம்” அவன் சொன்னான். 

“எங்கள் சினேகிதரின் படப்பிடிப்பைப் பொறுத்தது. அவரின் படப்பிடிப்பிக்கு உதவி செய்ய வந்தோம், ” டெவீனா விளக்கிச் சொன்னாள். 

“போக முதல் எங்கள் வீட்டுக்குச் சாப்பிட வாங்கள்” இந்திரா ஆங்கிலத்தில் டெவீனாவைப் பார்த்துச் சொன்னாள். “ஆஹா ரொம்பச் சந்தோசத்துடன் வருவேன். ராகவன் கூட்டிக் கொண்டு வந்தால்” டெவீனா வழக்கம்போல் களங்க மற்றுச் சொன்னாள். 

“அவர் கட்டாயம் கூட்டிக் கொண்டு வருவார்” இந்திராவின் குரலில்  கிண்டலா உண்மையா, ராகவனாற் புரியவில்லை. 

ராகவன் இருக்குமிட விலாசத்தையும் டெலிபோன நம்பரையும் மாமா வாங்கிக் கொண்டார். 

“உங்களால் வர முடியாவிட்டாலும், நான் அம்மாவுக்குச் சில சாமான்களைத் தர விரும்புகிறேன்” 

மாமி விளக்கம் சொன்னாள். அவர்கள் பிரியும் போது மாமி பின்னால் சென்ற இந்திரா திரும்பி ராகவனையும் டெவீனாவையும் ஒரு நீண்ட பார்வை பார்த்தாள். ராகவனுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. 

மாமா வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் அம்மாவுக்குப் போன் பண்ணி தன் மருமகனை ஏன் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் பாரிசுக்கு அனுப்பினாய் என்று கேட்பார் என்று தெரியும். 

”உங்கள் சொந்தக்காரப் பெண் மிகவும் அழகான பெண்” டெவீனா சொன்னாள். 

“அழகாகப் பாடுவாள்… முறைப்படி சங்கீதம் படித்தவள்” ராகவன் எங்கோ பார்த்தபடி சொன்னான். 

“அவர்கள் வீட்டுக்குப் போனால் கட்டாயம் அவளைப் பாடச் சொல்லிக் கேட்பேன்” 

டெவீனா உலகத்தை மிகவும் களங்கமற்றுப் பார்க்கிறாள் என்று ராகவனுக்குத் தெரியும். 

தங்குமிடம் வந்தபோது அன்ரோனியோவிடம், ராகவனின் சொந்தக்காரர்களைச் சந்தித்த விடயம் பற்றிச் சொன்னாள் டெவீனா. 

“ஆமாம் இந்தியர்கள் இத்தாலியர்களைப் போல் உறவுகளை மிகவும் பேணுபவர்கள் நீ, என்ன சொல்கிறாய் ராகவன்” அன்ரோனியோ பீர் கானை உடைத்தபடி கேட்டான். 

”ஆமாம் உங்களுக்கும் எங்களுக்கும் உறவு இருக்கிறது. ரஜீவ் காந்தி சோனியாவைத் திருமணம் செய்து கொண்டார் இல்லையா” ராகவன் குறும்புடன் சொன்னான். 

“எங்களைப் போல் இந்த இங்கிலிஸ்காரர்களுக்குக் காதலை மதிக்கத் தெரியாது” 

“அப்படி எல்லாம் சொல்லாதே, இங்கிலாந்து மன்னர் எட்டாவது எட்வேர்ட் அமெரிக்க டிவோர்சியான வொலி ஸிம்சனைக் காதலித்துக் கல்யாணம் செய்ய வேண்டித்தானே ஆனானப் பட்ட ஆங்கிலேயே முடியைத் துறந்து இங்கே வந்து காதல் நகர் பரிஸில் வாழ்ந்தார். அதை மறந்து விட்டாயா” 

”எனக்கென்னவோ இவர்கள் எங்களைப் போல் உணர்ச்சிகளை மதிப்பவர்களாகத் தெரியவில்லை” 

அன்ரோனியோ அலுத்துக் கொண்டான். 

ஜுலியட்டின் பிரிவு காரணமாக அவன் பட்ட துயரத்தை மார்ட்டின் சரியாகப் புரிந்து கொள்ளாதது ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. 

“நீ உனது கலாச்சாரத்திற்குப் புறம்பான பெண்களைக் காதலிப்பாயா” 

“அப்படி ஒரு பெரிய திட்டம் ஒன்றுமில்லை” மார்ட்டின கொடுத்த ஸ்கிரிப்டில் பார்வையை ஒட்டியபடி சொன்னான் ராகவன். 

அன்ரோனியோ இன்னுமொரு பீர் கானை உடைத்து ராகவனிடம் கொடுத்தபடி ரகசியம் பேசுவது போற் கேட் டான்: “டெவீனாவுடன் சுற்றுகிறாயே” 

“அவள் எனது சக மாணவி” 

“அதற்குமேல் ஒன்றுமில்லையா” 

“எதற்குமேல்” 

“ஒன்றாயத் திரிவதற்குமேல்” 

ராகவன் பதில் சொல்லாமல் அன்ரோனியோவை முறைத்துப் பார்த்தான். 

அன்ரோனியோ தாடியும் மீசையுமாகத் தெரிந்தான். ஜூலி யட் தன்னைத் தேடி வரும்வரைக்கும் தாடி எடுக்க மாட்டானாம்! தேவதாஸ்! 

“டெவீனா மிகவும் கவர்ச்சியானவள்” அன்ரோனியோ ராகவனை விடாப் பிடியாகச் சீண்டினான். 

“அதற்கு நான் என்ன பண்ணலாம்” 

“காதலித்துப் பார்” அன்ரோனியோவின் குரலில் கிண்டல்.  

“அப்படியா” ராகவன் குரலில் கண்டிப்பு. 

“காதலிக்கும்போது கவனமாக இரு” அன்ரோனியோ ஆலோசனை சொன்னான். 

“அப்படி என்றால் என்ன” 

“உன்னை ஒரேயடியாக இழந்து விடாதே” 

“அதாவது…” ராகவன் அன்ரோனியோவைக் கூர்மையு டன் பார்த்தான். 

“ம்… உன்னை ஒரேயடியாகக் கொடுத்துவிட்டு பைத்தியமாகாதே” 

“அதாவது உடலாசையை மட்டும் திருப்திப் படுத்தி, உள்ளத்து உணர்வுகளைப் பொருட்படுத்தாதே என்கிறாய் அப்படியா” 

அன்ரோனியோ குழம்பிப் போய்ப்பார்த்தான். 

“அன்ரோனியோ உடம்பின் கவர்ச்சியில் வருவது காமக்கவர்ச்சி, ஒரு தடவை படுத்தெழும்பி விட அலுத்து விடும், உள்ளத்தின் இணைப்பில் சங்கமம் அமைக்கும் காதலுக்கு உடல் உறவு பெரிய முக்கியமில்லை” 

“அப்படியா” அன்ரோனியோவின் குரலில் அலுப்பு. “சரி டெவீனாவைத் தீபம் காட்டி ஆராதனை செய்து கொள்” 

அன்ரோனியோ பீர் கானுடன் போய் விட்டான். 

அத்தியாயம் – 12

“அம்மா என்னை புது வருடத்திற்கு ஸ்காட்லாந்துக்கு வரச் சொன்னாள்.” 

டெவீனா அம்மாவுக்கு டெலிபோன் பண்ணிவிட்டு வந்திருந்தாள். 

“அதற்கிடையில் மார்ட்டினின் படப்பிடிப்பு முடியுமா”

நத்தார் முடிந்து இரண்டு நாட்களாகியும் மார்ட்டினினும் அன்ரோனியோவும் அவர்கள் போட்டுக் கொண்டு வந்த திட்டத்தில் கொஞ்சத்தையேனும் முடிக்க வில்லை. 

“ராகவன், மார்ட்டினும் அன்ரோனியோவும் நல்ல பையன்கள். ஆனால் ஒரு உருப்படியான ஒழுங்கு முறையில் லாமல் இழுத்தடிக்கிறார்கள். இவர்கள் இப்படி ஏனோ தானோ என்று இழுத்தடித்தால் இவர்கள் ஒழுங்கு செய்திருக்கும் நடிக நடிகையர் வரமாட்டார்கள். அது கிடக்கட்டும் எங்களை என்ன கமரா உதவியாளர்களாகவா நடத்துகிறார்கள்? ஏதோ எடு பிடி ஆட்கள் மாதிரித்தானே நடத்துகிறார்கள்” 

டெவீனாவின் குரலில் அலுப்பு, களைப்பு, எரிச்சல். கடந்த சில நாட்களாகச் சரியாக நித்திரையில்லை. அத்துடன் தாயைப் பற்றிய யோசனை ஆழமாக இருப்பதை அவள் வெளிக்காட்டாமல் மற்ற வேலைகளில் கவனம் செலுத்துகிறாள் என்பது நேரடியாகத் தெரிந்தது. 

ராகவனுக்கு டெவீனா சொல்வது புரிந்தது. அத்துடன் கல்லூரி தொடங்கியதும் அவன் செய்ய வேண்டிய செமினார் காத்துக் கிடந்தது. 

அதற்கிடையில் மாமா வீட்டாரையும் போய்ப் பார்க்க வேண்டியிருந்தது. 

அப்போது மார்ட்டின் அழாத குறையாக வந்து சேர்ந்தான். 

இவர்கள் எடுத்த பிலிம் ஸ்ரொக் தரக்குறைவான தென் றும் எடுத்த ஷொட்ஸ்களே உதவாமற் போயிருக்கலாம் என் றும் மனம் வெடிக்கக் கூறினான். 

“ஏதோ மிஞ்சிக் கிடந்த பிலிம் ஸ்ரொக்கை ஒருத்தர் தருவதாகச் சொன்னதை நம்பி இப்படி ஏமாந்து போனேன்” 

“மார்ட்டின், யாரும் வேண்டுமென்று, மாணவர்களாகிய எங்களை ஏமாற்றியிருக்க மாட்டார்கள். நல்ல காலம் இப்போ தாவது தெரிந்து கொண்டோமே” டெவீனா வழக்கம்போல் ஆறுதல் சொன்னாள். 

“இப்போது என்ன பண்ணுவது? ஏன் பாரிஸில் கிடக்க வேண்டும்” ராகவன் அவசரத்துடன் கேட்டான். 

அடுத்த நாள் காலையில் லண்டன் புறப்படுவதாக முடிவு கட்டினார்கள். 

அன்ரோனியோ ஆரம்பத்திலிருந்தே அபசகுனம் போல் அழுது கொண்டிருந்ததைச் சொல்லிக் கொண்டிருந்தாள் சோபியா. 

அன்று பின்னேரம் ராகவன் டெவீனாவையும் சோபியா வையும் அழைத்துக் கொண்டு மாமா வீட்டுக்குப் போனான். அவசரமாக லண்டன் திரும்ப நேரிட்டதைப் பற்றிச் சொன்னான். 

அவர்கள் சிக்கன் நூடில்ஸ் செய்திருந்தார்கள். சோபியா இந்தியா போயிருக்கிறாள். சென்னைப் பக்கம் போகவில்லை. பெரும்பாலான வெளி நாட்டார் போல் ஆக்ராவும், கோவா வும் ராஜஸ்தானும் போயிருக்கிறாள். தனது இந்தியப் பிரயா ணம் பற்றி இந்திராவிடம் சொன்னாள். இந்திரா இந்தியாவில் பரதம் படித்தவள். “உலகத்தில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்” நூடில்சை வாயில் போட்டபடி சொன்னாள் சோபியா. 

“தாஜ்மஹாலைப் பார்த்தவர்கள். தாய் மஹாலைப் பார்க்காதவர்கள்” 

மாமா குடும்பத்தினர் அமைதியுடன் சோபியா சொல்வ தைக் கேட்டுக் கொண்டிருந்தனர். 

“அதாவது காதலின் மகிமையை, ஆழத்தை துயரத்தை அறிந்தவர்கள் ஒரு சாரார், அடுத்தவர்கள் அதை ஒன்றையும் தெரியாதோர் என்கிறாயா” 

டெவீனா இந்திரா செய்திருந்த மரக்கறி சலட்டை ஆராய்ந் தபடி கேட்டாள். 

“அப்படியில்லை, தாஜ்மஹால் பார்க்கப் போகும் வசதி படைத்தவர்கள், அடுத்தவர்கள் வசதிபடைக்காதவர்கள்” ராகவன் சொன்னான். 

“உலகத்து அதிசயங்களில் ஒன்றைப் பார்க்க ஆர்வம் கொண்டவர்கள் ஒரு சாரார். மற்றவர்கள் வசதியிருந்தாலும் சரித்திர சம்பந்தமான விடயங்களில் அக்கறைப் படாமல் ஹொலிடே என்ற சாட்டில் குடித்துக் கும்மாளம் போடுபவர் கள் என்றும் சொல்லலாமே” சோபியா சொல்ல மற்றவர்கள் சிரித்தார்கள். 

“இந்திரா சங்கீதம் கற்றுக் கொண்டவளாம்” டேவீனா சோபியாவுக்குச் சொன்னாள். “தமிழ் சங்கீதம் கற்றுக் கொண்டவள்” மாமா திருத்தினார். 

எல்லோரும் ஆங்கிலத்திலேயே பேசியதால் மிகவும் சந்தோசமாகப் பொழுது போனது. கடைசியாக எல்லோரின தும் வற்புறுத்தலுக்கிணங்க இந்திரா பாடினாள். ராகவனுக்குப் பிடிக்கும் என்பதற்காகத்தான் பாரதி பாடல் பாடினாள் என்று அவனுக்குப் புரிந்தது. 

“காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும். அங்குத் தூணிலழகியதாய் – நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் – அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித்தர வேண்டும்” 

இந்திராவின் குரலில் தெய்வீகம் இழையோடியது. இசைக்கென்றே பிறந்தது அவள் குரல் – சாப்பிட்டு விட்டு வரும்போது மெட்ரோவின் பக்கத்தால் வரும்போது சில பிரான்சிய இளைஞர்கள் ராகவனைக் காட்டி ஏதோ கிண்டல் செய்வதுபோற் பேசினார்கள். 

இரு வெள்ளைக்காரப் பெண்களுடன் ஒரு ஆசிய நாட் டான் போவது அவர்களுக்குப் பொறாமையாக இருக்கிறது என்பது அவர்கள் பார்வையிலேயே தெரிந்தது. 

“இவர்களின் செய்கைக்காக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம்” சோபியாவும் டெவீனாவும் சொன்னார்கள். 

“அவர்கள் இனவாதிகள் இலங்கைத் தமிழனான எனக்கு இது ஒன்றும் ஆச்சரியமான அனுபவமல்ல” ராகவனின் குரலில் துயரம். 

”உங்கள் சொந்தக்காரர்கள் இந்த இனவாதத்தை முகம் கொடுக்க வேண்டியிருப்பதையிட்டு நான் துக்கப் படுகிறேன்” சோபியாவின் குரலில் அவமானம் கலந்த துயரம். 

“அவர்களும் நான் அனுபவித்த கொடுமைகள் போலக் கொடுமைகளை அனுபவித்தவர்கள் தானே” ராகவன் பெரு மூச்சு விட்டான். 

”உனது சொந்தக் காரப் பெண்கள் ரொம்பவும் கெட்டிக்காரர்கள். அழகானவர்கள், துணிச்சலுள்ளவர்கள், பாவம், சொந்த நாட்டில் வாழமுடியாத நிலை யாருக்கும் வரவேண்டாம்.” 

கடைசி நேரத்தில் அன்ரோனியோ இவர்களுடன் வராமல் போய்விட்டான். மார்ட்டின் சோபியாவுடன் ஒன்றிரண்டு நாட்கள் தங்கி விட்டு லண்டன் வருவதாகச் சொன்னான். 

டெவீனாகவும் ராகவனும் கப்பலின் மேற்தளத்தில் நின்றிருந்தார்கள். பாரிசுக்கு வரும்போது இரவில் பிரயாணம் செய்தார்கள் இப்போது காலை பதினொரு மணிக்குக் கப்பல் புறப்பட்டது. 

“நாளைக்கு இதே நேரம் ஸ்காட்லாந்துக்கு ரெயின் எடுப்பேன்” 

புகாரில் ஊர்ந்து போகும் கப்பலின் தளத்தில் முன் தெரியும் ஆங்கிலக் கால்வாயில் பார்வையைப் பதித்தபடி சொன்னாள் டெவீனா. 

“உனது அம்மாவின் உடல் நிலை சரியாக வரவேண்டு மென்று வேண்டிக் கொள்கிறேன்” மனமுணர்ந்த – ஆத்மீக அன்புடன் சொன்னான் ராகவன். 

“நன்றி ராகவன், அம்மாவின் உடல்நிலை இனிப் பெரும் பாலும் முழுக்க முழுக்கப் பழைய நிலைக்கு வராது…. மார்புக் கான்ஸர் வந்து கொஞ்சம் குணம் வந்தது. இன்னொருதரம் ஏதும் பிரச்சினை வந்தால் குணமடைவது நடக்காது என்று டாக்டர் சொன்னார்” 

தாயின் மரணம் பற்றி இவள் துயருடன் சொன்னது இவன் மனதைத் தொட்டது. 

“உனது துயரத்துக்கு எனது அனுதாபங்கள்” 

“ராகவன் உனது சினேகிதத்தை மிகவும் மதிக்கிறேன்”

“நன்றி டெவீனா, கல்லூரிச் சினேகிதமாக இல்லாமல் நீண்ட நாட்கள் எங்கள் உறவு தொடரும் என்று நம்புகிறேன்”

“அப்படியா” அவன் சொன்னதில் நம்பிக்கையில்லாதவர் போல் அவனைப் பார்த்தாள். 

”ஏன் என் சொல்லில் நம்பிக்கையில்லையா” 

அவள் அருகில் வந்தாள். கப்பல் மேற்தட்டில் எத்தனையோ மனிதர்கள், புகாரையும் பொருட்படுத்தாமல் நீலக் கடலில் நீந்தியோடும் கப்பலின் ஓட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தார்கள். 

பிரான்ஸ் நாடு கண் பார்வையிலிருந்து மறைந்து விட்டது. இந்தப் பக்கத்தில் இங்கிலாந்தின் கரை இன்னும் தெரியவில்லை. 

அவள் உஷ்ணக் காற்று கலந்து அவன் கழுத்து நாடிகளின் உதிரத்தைக் கொதிக்கப் பண்ணியது. 

என்னை முத்தமிடப் போகிறாயா என்று கேட்கவில்லை. அவன் இதழ்களை தன்னுடன் இணைத்துக் கொண்டாள். ஒரு முத்தத்திற்கு இவ்வளவு சக்தியுண்டா? அவன் அறியான். வானமெங்கும் நட்சத்திரம் வெடிப்பதுபோல் அவன் உணர்வு கள் தெறித்தன. 

அவர்கள் நீண்ட நேரம் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ”என்னில் உனக்குள் கோபமா… உனது அனுமதியில்லாமல் முத்தம் தந்தேனே கோபமா…” 

அவள் கேட்டு முடிக்கமுதல் அவளையிழுத்தணைத்து முத்தமிட்டான். 

“செயின் நதிக் கரையில் நான் கேட்டபோது ஏன் மௌனமாகப் போனாய்” 

ஏன் மௌனமாகப் போனான்? 

மாமா வீட்டுக்குப் போன குழப்பமா? 

இந்திராவைக் கண்ட கலக்கமா? 

“எனக்குத் தெரியாது” உண்மையான மறுமொழியது.

“உனது அம்மா பேசுவாளா?” 

“அதுவும் தெரியாது” 

“உனது மாமா எங்கள் இருவரையும் பாரிசில் கண்டதாகச் சொல்லியிருப்பார் இல்லையா?” 

“இரண்டு வெள்ளைக்காரப் பெண்களுடன் சாப்பிட வந்ததென்றும் சொல்லியிருப்பார்” 

இருவரும் சிரித்தார்கள். 

“உனது குடும்பத்தைப் பற்றி எனக்கேன் சொல்லவில்லை” 

“என்னிலுள்ள அனுதாபத்தில் உனது அன்பு எனக்கு வேண்டாம் என்று நினைத்தேன். அத்தோடு எனது குடும்பப் பிரச்சினை எனது நினைவு தெரிந்த நாள் முதலாகத் தெரிந்த விடயம். நான் அந்தத் துன்பத்துடன் வாழப் பழகிக் கொண்டேன்” 

“உனது அப்பா கேர்ள் பிரண்ட் வைத்திருப்பது உனக்குக் கோபம் இல்லையா” 

“எப்போதோ இருந்தது. இப்போது இல்லை”

“ஏன் என்ன நடந்தது” 

“கல்யாணம் நடந்து கொஞ்ச நாட்களிலேயே அம்மாவும் அப்பாவும் வெவ்வேறு வழிகளில் சிந்திக்கத் தொடங்கி விட் டார்கள் என்று நினைக்கிறேன். யூனிவர்சிட்டிக் காதல் இரு பத்தி ஓராம் வயதில் அம்மா கிராட்யுவேட் ஆன அடுத்த மாதம் திருமணம். அப்பா கல்யாணம் முடிந்த அடுத்த சிலமாதங்களி லேயே கென்யா போய் விட்டார். அம்மாவுக்குப் பிரயாணம் பிடிக்காது. அத்துடன் நான் அப்போது அம்மா வயிற்றில் சில மாதக் குழந்தை.” 

“உனது தகப்பனுக்கு கென்யாவில் தேயிலைத் தோட்டம் இருப்பது தெரிந்துதானே உனது தாய் திருமணம் செய்து கொண்டாள்” 

“ஆமாம், தோட்டத்தை விற்று அந்தப் பணத்தை லண்டனில் வேறு வியாபாரத்தில் போடுவதாகச் சொன்னாராம். அதற்கு அவர் தமயன் ஒத்துக் கொள்ளாத படியால் அவர் குடும்ப வியாபாரத்தில் ஈடுபட வேண்டித் தொடர்ந்தது. 

“அம்மா லண்டனில் அப்பா கென்யாவில், நான் விடுத லையில் அப்பாவின் தாய் தகப்பனுடன் கிளாஸ்கோவிலும் போய் நிற்பேன். ஏனென்றால் அப்பா வந்ததும் அப்பாவும் அம்மாவும் ஏதோ விவாதம் செய்து கொண்டிருப்பார்கள்” 

“பெரும்பாலான கல்யாணங்களே இப்படித்தான்” 

“எப்படி” 

“ஏதோ ஒரு காரணத்திற்காக, தாய் தகப்பனுக்காக சாத்திர சம்பிரதாயத்திற்காக நடக்கும். ஆரம்பத்தில் எல்லாமே சந்தோ சமாகத்தான் இருக்கும் பின்னர் ஏனோ தானோ என்று இழுத்தடித்து வாழ்ந்து தொலைப்பார்கள்” 

“உனது அப்பாவும் அம்மாவும் அப்படியா” அவள் ஆர்வத்துடன கேட்டாள். 

“இல்லை, எனது தாய் பதினெட்டு வயதாயிருக்கும் போது பப்ளிக் ஹெல்த் இன்ஸ்பெக்டராக அப்பா வந்தார். பாடசாலை மாணவிக்கும் பப்ளிக் ஹெல்த் இன்ஸ்பெக்டருக் கும் காதல். அப்பா இலங்கையின் வடக்குப் பக்கத்தைச் சேர்ந்தவர். அம்மா வடமேற்குப் பக்கத்தைச் சேர்ந்தவர். அடுத்த வருடம் கல்யாணம். அதற்கடுத்த வருடம் அக்கா பிறந்தாள். எனது ஞாபகத்தில் அம்மாவும் அப்பாவும் பெரிதா கச் சண்டை பிடித்து நான் கண்டதில்லை” 

“எவ்வளவு சந்தோசமான சீவியம் உன்னுடையது ” டெவீனா பெருமூச்சு விட்டாள். 

– தொடரும்…

– அவனும் சில வருடங்களும் (நாவல்), முதல் பதிப்பு: ஜூலை 2000, குமரன் பப்பிளிஷர்ஸ், சென்னை.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *