அன்புமணியின் அப்பா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 10, 2026
பார்வையிட்டோர்: 1,514 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மகாதேவ முதலியாரின் மாடிவீடு, அந்த வட்டா ரத்திலேயே அழகானது. ஆனால், மிகப் பெரிய வீடல்ல. மாடி வீட்டிற்கு முன்புறம் ஒரு சிறிய தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தைச் சுற்றிச் சுவர் இருந்தது. மகாதேவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் அன்புமணி.

தீபாவளிக்கு முதல்நாள் மாலை. மகாதேவரின் வீட்டின் முன்பாக ஏழைச் சிறுவர்களும், சிறுமிகளும் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். அவர்கள், அந்த மாடி வீட்டிற்குச் சிறிது தூரத்திலிருக்கும் குடிசை களிலே வசிப்பவர்கள். அவர்கள் தங்களுக்குள் எதைப் பற்றியோ பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டு மிருந்தனர். அப்போது உள்ளேயிருந்து அன்புமணி வெளியே வந்தான்.

“ஒரே குதூகலமாக இருக்கிறீர்களே! கொஞ்சம் பொறுத்திருங்கள். அப்பா இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார்” என்றான்.

மறு நிமிஷமே கார் வரும் சப்தம் கேட்டது. சப்தம் வந்த திசையை எல்லோரும் ஆவலோடு பார்த்தார்கள்.

மாடி வீட்டின் முன்னால் வந்ததும், கார் நின்றது. உள்ளேயிருந்து மகாதேவர் வெளியே வந்தார். அவரைக் கண்டதும் ஏழைப் பிள்ளைகள் எழுந்து ஒதுங்கி நின்றனர். மகாதேவர் வீட்டிற்குள் நுழைந்தார். டிரைவர் ‘காரி’லிருந்து சீன வெடிகளும் மத்தாப்பூ பெட்டிகளும் கம்பி வாணங்களும் கொண்டு வந்து வீட்டின் முன்புறத்தில் உள்ள திண்ணையில் வைத்தான். ஒரு பட்டாசுக் கடையே வைத்து விடலாம். அந்த அளவுக்கு அங்கே பட்டாஸ்கள் இருந்தன.

ஏழைப் பிள்ளைகள் அவற்றை ஆவலோடு பார்த் தார்கள்.உள்ளே சென்ற மகாதேவர் சிறிது நேரத் திற்குப் பின் வெளியே வந்தார். திண்ணையில் உட்கார்ந்தார். அன்புமணியும் பக்கத்திலே நின்றான். அவர்கள் அருகிலே இருந்த வேலையாள் பட்டாசுக் கட்டுக்களைப் பிரித்து வைத்தான்.

மகாதேவர், “குழந்தைகளா, நீங்கள் எல்லோரும் ஒழுங்காக வரிசையில் நில்லுங்கள். ஒவ்வொருவராக வந்து வாங்கிக் கொள்ளுங்கள் ” என்றார். ஏழைக் குழந்தைகள் வரிசையாக நின்றனர். வேலைக்காரன் ஒரு சீன வெடிக்கட்டு, இரண்டு மத்தாப்பூ பெட்டிகள், இரண்டு கம்பிவாணங்கள் முதலியவற்றை எடுத்து மகாதேவரிடம் கொடுத்தான். அவர் அவற்றை வாங்கி வரிசை பில் வந்த ஒரு பையனிடம் அளித்தார். அவன் வாங்கிக் கொண்டு ஒரு கும்பிடு போட்டுவிட்டுச் சென்றான். இன்னொரு பையன் வந்தான். அவனுக்கும் அப்படியே கொடுத்தார். இப்படியே அங்கு வந்திருந்த எல்லாக் குழந்தைகளுக் கும் சீன வெடி, மத்தாப்பூ பெட்டி, கம்பி வாணம் முதலியவற்றை அவர் கொடுத்தார். எல்லோரும் வாங்கிக் கொண்டு போய்விட்டனர். மகாதேவர், மீதத்தை உள்ளே வைக்கும்படி வேலையாளிடம் கூறி விட்டு, அன்புமணியுடன் மேல் மாடிக்குச் சென்றார்.

மாடியிலிருந்த விளக்கின் ‘ஸ்விச்’சைத் தட்டி விட்டார். பிறகு அங்கிருந்த விசுப்பலகையின் மீது அமர்ந்தார். அன்புமணி அவர் அருகிலே உட்கார்ந்தான்.

மகாதேவர் வருடா வருடம் தீபாவளிக்கு முதல் நாள், அன்று செய்ததைப் போல நிறையப் பட்டாசு களை வாங்கிக் கொண்டுவருவார்; அவற்றை ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுப்பார். இதைப் பல ஆண்டு களாக அன்புமணி பார்த்து வந்தான். ஆனால், அவர் ஏன் இப்படிச்செய்கிறார் என்பது மட்டும் தெரியாது! ஏழைகளின் மீது இருக்கும் இரக்கத்தால் இவ்விதம் செய்கிறார் என்று முதலில் நினைத்தான். பிறகு இதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கவேண்டும் என்று எண்ணினான். அதைப் பலமுறை, அப்பா விடம் கேட்க நினைத்தான். ஆனால் கேட்கவில்லை! இன்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாமா?’ என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

“அன்பு, என்னப்பா யோசிக்கிறாய்?” என்று கேட்டார் மகாதேவர்.

“ஒன்றும் இல்லையப்பா!” என்று மழுப்பினான் அன்புமணி.

“தயங்காதே, சொல். ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டார் அவர்.

அன்புமணி சிறிது நேரம் பேசாமலிருந்தான். பிறகு, “அப்பா, ஆண்டு தோறும் தீபாவளிக்கு முந் திய நாள் ஏழைக் குழந்தைகளுக்குப் பட்டாசு வாங்கித் தருகிறீர்களே! இதற்கு ஏதாவது காரணம் இருக்குமா என்று யோசித்தேன்” என்றான்.

“காரணம் இருக்கிறது” என்று பதிலளித்தார் மகாதேவர்.

“அதை நான் அறிந்துகொள்ளலாமா அப்பா?” என்று ஆவலோடு கேட்டான் அன்புமணி.

“அதை நிச்சயம் அறிந்து கொள்ளத்தான் வேண்டும், கேள்” என்று கூறிவிட்டு மேலே சொல்ல ஆரம்பித்தார்:

“அன்பு, அப்போது நான் உன்னைப்போல இருப்பேன். பழையவூர் கிராமத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அந்த ஊரிலுள்ள பள்ளியில் படிக்கச் சுற்றுப் புறத்திலிருந்தெல்லாம் மாணவர்கள் வருவார்கள். அப்போது நான் ஏழைச் சிறுவன். அப்பாவை இழந்து அம்மாவின் ஆதரவில் வளர்ந்தவன். அம்மா எங்கெங்கோ வேலை செய்து என்னைக் காப்பாற்றி வந்தாள்.

பழைய வூருக்கு நான்கு மைல் தூரத்தில் புதுவூர் இருந்தது. அது கிராமமல்ல ; நகரம். அங்குதான் என் மாமா-அம்மாவின் தம்பி-தர்மலிங்கம் வசித்து வந்தார். அவர் பெரிய பணக்காரர். அவர் உதவி யிருந்ததால் தான் நான் படித்தேன்.

வருடத்தில் பல விழாக்கள், பண்டிகைகள் வருகின்றன. அவற்றை பெல்லாம் கிராமத்தினர் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். ஆனால், எங்கள் வீட்டில் மட்டும் எப்போதும் துக்கம்தான்! நான் மற்றவர்களை வேடிக்கை பார்ப்பேன்; அவர்களைப் போல் நம்மால் இருக்க முடியவில்லையே என்று வேத னைப் படுவேன்.

என் வேதனையைக் கண்டு அம்மா வருத்தப்படு வாள். அதைத் தவிர அவளால் வேறென்ன செய்ய முடியும் ? தீபாவளி வரும்போது மட்டும், அம்மா என்னை அழைத்துக் கொண்டு மாமாவின் வீட்டிற்குச் செல்வாள். மாமா வீட்டில் தீபாவளி ‘தடபுடலாக ‘ இருக்கும். அங்காவது நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது என் அம்மாவின் எண்ணம்.

மாமா வீட்டில் நல்ல சாப்பாடு கிடைக்கும். பட்டாசு வகைகள் கிடைக்கும். ஆனால் அன்போ, ஆதரவோ அணுவளவும் கிடைக்காது. மாமி எரிந்து விழுவாள்! மாமாவின் இரு புதல்வர்கள் என்னை ஓர் உயிருள்ள மனிதப் பிறவியாகவே மதிக்க மாட்டார் கள். கேலி கிண்டல் மூலம் என்னைச் சித்திரவதை செய்வார்கள். அவர்கள் அடித்தால்கூட நான் பேசாமல் தான் இருக்கவேண்டும். மாமா மட்டும் நல்லவர். ஆனால், அவரால் மனைவியை அடக்க முடியாது. பிள்ளைகளை அடக்க முயன்றால், மாமி பத்ரகாளியாக மாறி, ‘பச்சைக் குழந்தைகளை ஏன் அடிக்கிறீர்கள்? அந்தப் படுபாவி, தரித்திரம் பிடித்த பயல் மகாதேவன் கோள் மூட்டினானா?’ என்று சீறுவாள்.

இதனால் இவர்கள் வீட்டிற்குப் போக எனக்கு விருப்பமே இருப்பதில்லை. ஆனால், அம்மாவின் வற் புறுத்தலுக்காகச் செல்வேன்.

வழக்கம் போல அந்த வருஷம் தீபாவளிக்கு முதல்நாள் காலையில் அம்மாவுடன் புறப்பட்டு மாமா வீட்டிற்குச் சென்றேன். அன்று பகல், மாமாவின் ‘அருந்தவப் புதல்வர்களின் நண்பர்களில் சிலர் மாமா வின் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களில் ஒருவன் என் னைச் சுட்டிக் காட்டி, ‘இவன் யார்?’ என்று கேட்டான்.

மாமாவின் பெரிய மகன், ‘இவனா? எங்கள் வீட்டு வேலைக்காரன்’ என்றான்.

சிறிய மகன், “இல்லை! வேலைக்காரனாவது வேலை செய்துவிட்டுச் சாப்பிடுவான். இவன் தண்டச் சோற்றுத் தடிராமன். வெட்கமில்லாமல் தீபாவளி யன்று வீடுதேடிச் சோற்றுக்கு வந்து விடுவான், என்றான். அத்துடன் நிற்காமல் என்னைப் பற்றி இன்னும் கேவலமாக ஏதேதோ கூறினர். அவர்களின் நண்பர்களும் என்னைக் கண்டபடி கிண்டல் செய்த னர். எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவே யில்லை. அதைத் தனியாகச் சென்று அழுது தீர்த்துக் கொண்டேன்.

அன்று மாலை என் மாமா வந்தார். அவர் கொண்டு வந்த பட்டாசுகளை மாமாவின் இரு மைந்தர் களுக்கும், எனக்கும் பிரித்துத் தந்தார். எனக்கு அதிகமாகத் தரக்கூடாதென்று அவர்கள் வாதாடி னார்கள். அவர்களுக்குக் கொடுத்த அளவில், பாதி 6 எனக்குத் தந்தார் மாமா. அதுவே மிக மிக அதிகம் என்று அவர்கள் எண்ணினார்கள். மாமா சென்றதும் இருவரும் என்னிடம் சண்டையிட்டார்கள். பட்டாசுகளைக் கேட்டார்கள். ”நீ என்ன பிரபு வீட்டுப் பிள்ளையா? உனக்கு இவ்வளவு ஏன்? பிச்சைக்கார னுக்கு ஒன்றிரண்டு இருந்தால் போதாதா?” என்றனர். எனக்குக் கோபமும், ஆத்திரமும் கலந்து வந்தன. நான் கண்டிப்பாகத் தர முடியாது என்று கூறிவிட்டேன்.

உடனே இருவரும் போய் என் மாமியை அழைத்து வந்தார்கள். அவளிடம், நான் அவர்கள் பட்டாசைத் திருடிக் கொண்டதாகக் குற்றம் சாட்டி னார்கள். என் மாமி, “ஏண்டா, திருட்டு நாயே! இந்த வேலை எத்தனை நாளாக ? என்னென்ன திருடி யிருக் கிறாய்? அவர்கள் பட்டாசைக் கொடுடா” என்று கூறி, என் முதுகில் இரண்டு அடி கொடுத்தாள்: என்னிடமிருந்த எல்லாப் பட்டாசுகளையும் பிடுங்கி அவர்களிடம் கொடுத்து விட்டாள். எனக்கு அங்கி ருக்கவே பிடிக்கவில்லை. நான் அழுதுகொண்டே வெளியே வந்தேன்.

அப்போது அந்த வீட்டில் வேலை செய்யும் கந்தன் என் எதிரே வந்தான். அவன் நல்லவன். அவனி டம், “கந்தா, அம்மாவிடம் நான் வீட்டுக்குப் போய்  விட்ட தாகச் சொல்லு. அம்மாவை இங்கே இருந்து விட்டு வரச் சொல்லு” என்று கூறிவிட்டு, எங்கள் கிராமத்தை நோக்கி நடந்தேன். அப்போது இரவு மணி ஏழு இருக்கும்.

என் கால்கள் வேகமாக நடந்தன. என் மனம் எங்கெங்கோ சுற்றியலைந்தது. ஒரு மைல் வந்திருப் பேன். அதற்குள் வானம் கறுத்தது; மேகம் இடித் தது ; மழை · சோ’ வென்று பெய்தது.

நான் மழையைக் கண்டு அஞ்சி நடுங்கி நின்று விடவில்லை. மழையிலேயே நனைந்து சென்றேன். மாமியும், அவளது பிள்ளைகளும் என்னை நடத்திய விதத்தை நினைக்க நினைக்க என் கண்களில் நீர் பெருகியது.  வானத்திலிருந்து வந்தது மழை நீர்; என் கண்களிலிருந்தது வழிந்தது கண்ணீர். இரண்டும் சேர்ந்து என் உடையை நனைத்தன. உடலையும் நனைத்தன. அழுதுகொண்டே நடந்தேன்.”-மகா தேவர் இந்த இடத்தில் நிறுத்தினார். அன்புமணியின் கண்களில் நீர் வழிந்தது. அவன் ஏறிட்டுப் பார்த் தான். அப்பாவின் கண்களிலும் நீர் நிறைந்திருந் தது. அவர் அதைத் துடைத்துக்கொண்டார். பிறகு சமாளித்துக்கொண்டு, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்:

“மழை நிற்கவே யில்லை நானும் நடந்து கொண்டே யிருந்தேன். புதுவூருக்கும், பழைய வூருக்கும் நடுவே ஒரு கிராமம் இருந்தது. நான் அந்தக் கிராமத்தை அடைந்து விட்டேன். அங்கு மழைக்கு ஒதுங்கப் பல வீடுகள், கடைகள் இருந்தன. ஆனாலும் நான் நடந்துகொண்டே இருந்தேன். அப்போது ‘மகாதேவா!’ என்ற குரல் கேட்டு நின் றேன். என் எதிரே ஒரு கையில் தாழம் குடை யுடனும், மற்றொரு கையில் ஒரு சிறு லாந்தர் விளக் குடனும் என் வகுப்பில் படிக்கும் சுப்பையன் நின்று கொண்டிருந்தான்.

‘தேவா, எங்கே போய்விட்டு வருகிறாய் ? மழை யில் நன்றாக நனைந்திருக்கிறாயே!’ என்று கேட்டான்.

நான் ஒன்றும் பதில் கூறாமல் நின்றேன். அவன் கடையில் ஏதோ சாமான் வாங்க வந்தானாம். என்னை இழுத்துக்கொண்டு கடைக்குப் போனான். தோளில் மாட்டியிருந்த பையில் ஏதோ சில சாமான்களை வாங்கினான்; பிறகு, என்னை அழைத்துக்கொண்டு அவன் வீட்டிற்குச் சென்றான். நான் களைத்திருந்தேன்; பேசாமல் அவனுடன் சென்றேன்.

வீட்டை யடைந்ததும், அவன் தாய் என் நிலை யைக் கண்டு வருந்தினாள். துணி கொண்டு வந்து என் தலையைத் துவட்டி விட்டாள். சுப்பையன், அவன் உடுக்கும் துணியைக் கொண்டு வந்து கொடுத் தான். நான் அதை அணிந்து கொண்டேன். பிறகு அவனிடம் நடந்ததைக் கூறி அழுதேன். அவன் என்னைத் தேற்றினான். தன் வீட்டில் தீபாவளிக்கு இருந்து போகும்படி சொன்னான்.

மறுநாள் அவன் வீட்டிலிருந்தேன் அவனும் ஏழைதான். அவன் வீட்டிலிருந்த பட்சணத்தைத் தந்தான். மாமா வீட்டில் தருவதுடன் அதை ஒப் பிட்டால் அது மிகவும் சாதாரணம். ஆனாலும் அன் புடன் எனக்கு அந்தப் பட்சணத்தைத் தந்தான். அதனால் எனக்கு அது அமிர் தம்போல் இருந்தது.

சுப்பையனின் அப்பா, அவனுக்காக இரண்டு சீன வெடிகளும் மத்தாப்பு பெட்டிகளும், நான்கு கம்பி வாணங்களும் வாங்கிக் கொடுத்திருந்தார். அவற் றில் பாதியை எனக்கு முழு மனத்தோடு, அன்போடு, அவன் தந்தான். மாமா வீட்டில் தரும் பட்டாசுகளை விட அவை மிக மிகக் குறைவுதான். ஆனாலும் நான் சுப்பையன் தந்தவற்றையே அதிகமாக, உயர்ந்ததாக நினைத்தேன். அவற்றைக் கொளுத்தும்போது அள வில்லாத மகிழ்ச்சி யடைந்தேன்.

சுப்பையனும், அவன் பெற்றோரும் என்னிடம் காட்டிய அன்பை இன்றும் என்னால் மறக்க முடிய வில்லை. இனி என்றும் மறக்க மாட்டேன். தீபா வளிக்கு மறுநாள் நான் வீடு சென்றேன். என் தாய் நான் கிராமத்திற்குப் போய் விட்டதைக் கேட்டு வருந் தினாளாம். அவளும் அங்கிருந்து வந்துவிட நினைத் தாளாம். ஆனால். மாமா கோபித்துக் கொண்டால், தற் போது கிடைக்கும் சிறிய உதவியும் நின்று விடுமே என்றுதான் உடனே வரவில்லையாம். இவ்வளவை யும் என்னிடம் அம்மா கூறினாள். நான் நடந்ததைக் கூறினேன். என் அம்மா சுப்பையனின் பெற்றோரை வாழ்த்தினாள்.

பிறகு நான் நன்றாகப் படித்தேன். பல பரீட்சை களில் தேறினேன். உயர்ந்த வேலை கிடைத்தது; பொருளும் புகழும் என்னைத் தேடி வந்தன. அதன் பின்பும் சுப்பையன் செய்த உதவியை – அவன் அன்பை நினைத்துக் கொண்டே இருந்தேன்.

என்னைப் போல எத்தனை ஏழைப் பிள்ளைகள். பணக்காரர்கள் பட்டாசு கொளுத்தும்போது, ‘நாமும் இப்படி இருக்க முடிய வில்லையே!’ என்று எண்ணி வருந்துவார்கள்! இதை நான் எண்ணிப்பார்த்தேன். சுப்பையன் தன்னிடமிருந்த பட்டாசை எனக்குப் பகிர்ந்து கொடுத்ததை நினைத்துக் கொண்டேன். ஏழைக் குழந்தைகள் தீபாவளி நாளிலாவது சிறிது மகிழ்ச்சியோடு பட்டாசு கொளுத்தி மகிழ வேண்டும். நமக்கு சுப்பையன் செய்த உதவியை நாமும் பிறருக்குச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

அன்றிலிருந்து, இன்று செய்வதைப் போல என் நிலைமைக்குத் தக்கபடி செய்து கொண்டு வருகிறேன். அதனால் என் மனம் அமைதியடைகிறது: ஆனந்தம் கொள்கிறது. என் பழைய நிலைமையை மறக்காமல் இருக்கவும் முடிகிறது” என்று கூறி முடித்தார்.

பிறகு, “அன்பு, ஏழைகளாக இருந்தாலும் அவர் களிடமிருக்கும் நல்ல பண்பை நான் சொன்னதி லிருந்து அறிந்து கொண்டிருப்பாய். பெரியவனானதும் அவர்களின் மகிழ்ச்சிக்காக நீ ஏதாவது செய்ய வேண்டும். மறக்கமாட்டாயே?” என்று கேட்டார் மகாதேவர்.

அன்புமணி உறுதியான குரலில், “நிச்சயமாகச் செய்வேனப்பா” என்றான். அவன் பதிலைக் கேட்டு ஆனந்தமடைந்தார் மகாதேவர். அப்பாவும், மகனு கீழே இறங்க எழுந்தனர். தூரத்திலிருந்த குடிசைகளின் அருகில் சிறுவர்கள் பட்டாசு கொளுத்திக் கொண்டிருப்பதைக் கண்டனர். அதைக்கண்ட இருவரின் அகமும் முகமும் ஒருங்கே மலர்ந்தன.

– அன்புத் தாத்தா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1957, பாரி நிலையம், சென்னை.

முனைவர் பூவண்ணன் பூவண்ணன் (வேள்ள தாமோதர கோபாலகிருஷ்ணன்; பிறப்பு: 5 செப்டம்பர் 1932 - இறப்பு: ஜனவரி 11, 2013) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். சிறார்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தமிழ் இலக்கியம், சிறார் இலக்கியம் குறித்து ஆராய்ந்து வரலாற்று நூல்களைப் படைத்தார். தனது இலக்கியப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றார். பூவண்ணன் - Tamil Wiki நேர்காணல்: டாக்டர் பூவண்ணன் (2005) http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1072 பூவண்ணன்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *