அடுத்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 18, 2026
பார்வையிட்டோர்: 879 
 
 

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விடிவதற்கு வெகு நேரமுன்பே பிள்ளைகள் எழுந்து விட்டார்கள். அம்மா காபி போட்டுக் கொண்டிருந்தாள். அவள் கூட சுறுசுறுப்பாயிருப்பது போலிருந்தது. அருணாசலம் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பாவை எழுப்ப பிள்ளைகளுக்குப் பயம். அவரும் எழுந்து வந்து தங்களோடு வாசலில் நிற்க வேண்டுமென்று பிள்ளைகளுக்கு ஆசை. அப்பாவுக்கு எப்போது கோபம் வருமென்று யாராலும் சொல்ல முடியாது.

பிள்ளைகள் தெருக்கோடியையே பார்த்துக் கொண்டிருந் தார்கள். ஒரு ஆட்டோ தூரத்துத் தெருக் தெருக் கோடிக்குள் நுழைந்து தெருவின் அறுபது வீடுகளை யும் தாண்டி டி இந்த வீட்டு வாசலுக்கு வந்து நிற்க. வேண்டும். பிள்ளைகளின் கனவு அதற்குள்ளிருந்து இறங்க வேண்டும், இன்னும் அருணாசலம் தூங்கிக் கொண்டிருந்தார்.

பிள்ளைகள் வைத்தகண் வாங்காமல் தெருக் கோடியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அம்மாவும் வாசலில் ஏதேதோ வேலைகளிருப்பது போல் வந்து நின்று தெருக்கோடியைப் பார்த்தும் பார்க்காததும் போல் பார்வையிட்டுவிட்டுப் போய் வந்து கொண்டிருந்தாள்:

தெருக்கோடியில் சைக்கிள்கள் தெரிந்தன. இரண்டு லாரிகள் வந்தன. ஒரு அம்பாஸடர் கார் வந்தது. இன்னும் ஆட்டோவைக் காணோம். பார்த்துக் காண்டே இருக்கையில் அப்பாவும் தூங்கி எழுந்து வந்து பிள்ளைகளுடன் நின்று கொண்டிருந்தார். அவர் கண்களும் தெருக்கோடிக்குப் போய்த் திரும்பிக் கொண்டிருந்தன.

பிள்ளைகளின் ஒரு வருட நச்சரிப்பு ஒரு டி.வி. வாங்கச் சொல்லி. அருணாசலம் விலையைக் கேட்டு விட்டு ஆரம்பத்திலேயே இது தோதுப்படாது” என்று சொல்லி விட்டார். அரசாங்க ஆபீசில் அவர் ஒரு சூப்பரெண்ட். சம்பள பில்லில் பாதி அட்வான்ஸ்களுக்குப் போனது போகப் பாதியைக் கையில் வாங்குகிறவர்.

அரசாங்க ஊழியர்கள் அந்தந்த அட்வான்ஸை வாங்கி அதற்குப் பயன்படுத்திவிட முடியாது. ஒன்றில் விழுந்த பள்ளத்தில் இன்னொன்றை வாங்கிக் கொட்டுவார்கள். புதிய பள்ளம் எப்போதும் வீட்டு வாசலில் தடுக்கும். உள்ளேயும், திண்ணையிலிருந்து கால்லைவரை, பூராவும் பள்ளங்களாய் உள்ள வீடுகள் ஏராளம்.

அருணாசலத்திடம் அரசாங்க ஊழியர்களிடத்தி வில்லாத அபூர்வமான பழக்கமுண்டு. யாரிடமும் போய் கடன்வாங்க மாட்டார். இரண்டொரு தடவை கிளார்க்குகளிடம் கடன் கேட்டு இல்லை யென் று சொன்னதும் குறுகிப்போய் கடன்கேட்பதை நிறுத்தி விட்டார். அவர் தலைக்கு மேலே மட்டும் சுற்றும் ஃபேன், காற்றுவர உதவும், இருபது தேதிக்கு மேல் மனைவியும் பிள்ளைகளும் கொண்டு வந்து நிறுத்தும் செலவுகளின் போது மேலே பார்த்துக் கொண்டிருக்கவும் உதவும்.

ஒரு வருடம் முன்பு ஆறு வீடு தள்ளியிருக்கும் வக்கீல் வீட்டில் டி.வி. வாங்கினார்கள். அதற்கப்பால் பதினைந்து வீடுகள்ளி ஓரு வீட்டில் டி.வி. இப்படி அந்தப் பெரிய தெருவில் ஏழு டி.விக்கள் எண்பத் தெட்டு வீடுகள் சாயங்காலம் ஆனது. இந்தப்பக்கம் ஆறுவீட்டு மக்களும் அந்தப் பக்கத்து எட்டு வீட்டு மக்களும் பச்சைப் பாலகன் உட்பட வக்கீல் வீட்டில் முண்டியடித்து உட்காரும். இதில் அருணாசலம் வீட்டுப் பிள்ளைகளும் அடக்கம்.

அருணாசலம் மனைவி பி.யு.சி. படித்தவள். அருணாசலத்திடமிருந்து வந்ததோ அவள் பிறந்த வீட்டிலிருந்து! வந்ததோ, கொஞ்சம் பிரிஸ்டீஜ் பார்க்கிற பெண்.

வக்கீல் மனைவி, அருணாசலம் வீட்டு வழியாகத் தான் தினமும் மார்க்கெட்டிற்குப் போவாள், போகும் போதும் வரும்போதும் அவள் பார்வை விழுகிற மாதிரி அருணாசலம் மனைவி வாசலில் நிற்பாள், “டி.வி. பார்க்க வாங்களேன்” என்று ஒரு முறையாவது வக்கீல் மனைவி சொல்லவேண்டும், அப்புறம் போய் டி.வி பார்க்கவேண்டும் என்பதில் பிடிவாதமாயிருந்தாள்.

என்ன ஞாபகத்திலோ ஒருநாள் வக்கீல் மனைவி இவள் நினைத்து வைத்திருந்த வார்த்தைகளை அப்படியே போகிறபோக்கில் சொல்லி விட்டாள். “டிவி பார்க்க வாருங்களேன்” என்று.

அன்றைக்கு சாயங்காலம் பிள்ளைகளோடு இவளும் வக்கீல் வீட்டிற்கு டி.வி. பார்க்க ரொம்ப உற்சாக மாய்ப் போனாள். அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. தமிழ் சினிமா. இவள் பிள்ளைகளோடு வக்கீல் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழையவும் கூட்டம் கட்டுமீறிப் போனதால் வக்கீல் மனைவியே வந்து வாசல் கதவை இழுத்துப் பூட்டவும் சரியாக இருந்தது.

வக்கீல் திண்ணையிலிருந்து வீட்டுக்குள் நுழைய வெகு பாடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் கூட இவளையும் பிள்ளைகளையும் வாங்க என்று ஒரு வார்த்தை கூப்பிடவில்லை. பத்து வருஷங்களுக்கு முன்னால் ஒரு நாள் மாமியார் ‘போடி’ என்றபோது நடுங்கிய மாதிரி உடம்பு நடுங்கியது. இனி யார் வீட்டிற்கும் ஓசியில் டி.வி. பார்க்கப் போவதில்லை என்ற சபதத்துடன் பிள்ளைகளை அடக்கி இழுத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள்.

வந்தநேரம் – அருணாசலம் காலையில் வந்த ஆங்கில தினசரியைப் படித்துக் கொண்டிருந்தார்.

வக்கீல் வீட்டுக் காம்பவுண்டில் மோதிவிட்டுப் பிள்ளைகளோடு ஆத்திரமும் அவமானமுமாய்த் திரும்பியவளுக்கு அவர் கால்மேல் கால் போட்டு ஆங்கில தினசரியைப் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் இன்னும் வேகம் வந்து விட்டது. அவர் முகத்தையே பார்க்கப் பிடிக்கவில்லை.

ஏமாற்றமும் ஏக்கமுமாய் நின்ற பிள்ளைகளிடம் கத்தினாள். “இனி யார் வீட்டுக்காவது ஓசியில் டி.வி. பார்க்கப் போறேன்னு கெளம்பினிய காலை முறிச்சுப்புடுவேன். ஓசியிலெ யாரு வீட்டுக்காவது சோறு தின்னப் போறோமா? அந்த ரோசம் இதுக்கும் வேணும். போயி உக்காந்து பாடத்தை எடுத்துப் படிங்கடி. ஆபீஸிலே ரோசம். கௌரவம். வீட்டிலெ யாரு எங்கே போயி என்ன என்ன அவமானப் பட்டா என்ன?”

அருணாசலம் பேப்பரை மூடிவைத்துவிட்டு வெகு நேரம் சிந்தனை பண்ணினார். அவருக்கு ஒரு வழியும் தெரியவில்லை. ஒரு வார்த்தையும் வரவில்லை.

அவர் மனைவியும் இதைப்பற்றி யோசனை மேல் யோசனை செய்து பார்த்தாள், கழுத்தில் ஒரே ஒரு சங்கிலி. அதுவும் தாலி செயின். அதையும் கழற்றி விட்டு மஞ்சள் கயிறோடு. நாலு இடம் போக முடியாது. ஒரு வீட்டு லட்சணத்தை அந்தவீட்டுப் பெண்ணின் கழுத்திலும் கையிலும் பார்த்துக் கணித்துவிடும் உலகம். தவிரவும் மஞ்சள் கயிறோடு உட்கார்ந்து பார்க்கிற டி.வியில் என்ன சினிமா ஓடினாலும் சழுத்து செயின் கழன்று ஓடுவதுதான் தெரியும்.

தம்பி ஞாபகத்தில் வந்தான். சென்னையில் அவனுக்கும் சர்க்கார் வேலை. வேலைக்குப் போய் நாலு வருஷ்மாகிறது. கல்யாணம் இந்தா அந்தா என்று நடக்க வேண்டிய நேரம். ஒரு சனி ஞாயிறுக்கு வந்தவனை வீடே வளைத்தது. முதலில் பிள்ளைகள் தான் ஆரம்பித்தார்கள். அவள் கறாராய்க் கேட்டாள், “நாளைக்குக் கல்யாணம் ஆகிவிட்டால் உன்பாடு உனக்கு. என்பாடு எனக்கு. என் பிள்ளைகளுக்கு இதுவரை நீ என்ன செஞ்சே? பெரிசா வெல்லாம் வேணாம். உன்னாலெ முடிஞ்ச அளவு போதும். ஒரு சின்ன டி.வி. யாவது வாங்கி அனுப்பு”.

இரண்டு நாள் விருந்து, அன்பு, உபதேசம், கட்டளை பயமுறுத்தலுக்குப் பின் ஒரு டி.வி. வாங்கி அனுப்புவதாக ஒத்துக் கொண்டு ரெயிலேறினான் தம்பி. அதிலிருந்து பிள்ளைகள் மாற்றி அம்மா, அம்மா மாற்றிப் பிள்ளைகளென்று சென்னைக்கு மூன்று மாதங்கள் விதம் விதமாய்க் கடிதம் எழுதினார்கள்.

சாவகாசமாக ஒரு நாள் வந்த சென்னை மாமாவின் கடிதத்தைப் பிள்ளைகள் ஏழெட்டுத் தடவை படித்து விட்டார்கள்.

“யாராவது சென்னைக்கு வரும் ஆளிடம் கடிதம் கொடுத்தனுப்பவும். டி.வி. வாங்கி அனுப்பி வைக்கிறேன்” என்று கடிதம் கடைசியில் முடிந்திருந்தது.

அருணாசலம் ஆபீசுக்குப் போய் ரொம்ப நாளாய் பெண்டிங்கிலிருந்த ஒரு ஃபைலைத் தூசிதட்டி எடுத்தெழுதினார்.

“வெகுநாளாகவே இதற்கான உத்தரவு வராமலே இருந்து வருகிறது. இதனை என்னவென்றறியவும் முடிந்தால் உத்தரவு வாங்கி வரவும். சீனியர் உதவி யாளர் திரு. குமாரசாமியை சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம்!” அன்று மாலைக்குள் அதிகாரியின் ஒப்புதலையும் வாங்கினார்.

குமாரசாமி சென்னையிலிருந்து இறங்கி இப்போது ஆட்டோவில் வரவேண்டிய நேரம். பிள்ளைகள் பாடப்புத்தகங்களை எடுக்கவில்லை. அக்கம் பக்கம் பார்க்கவில்லை. தெருவையே பார்த்துக்கொண்டு நின்றன.

திடீரென்று தெருமுனையில் ஆட்டோ பிள்ளைகள் கைதட்ட ஆரம்பித்தன. அம்மா வெளியில் வந்து பிள்ளைகளின் பின்னால் நின்றாள். அறுபது வீடுகளையும் நொடிகளில் தாண்டி வீட்டு வாசலில் நின்றது ஆட்டோ. குமாரசாமியின் நரைத்ததலை தெரிந்தது. அவர் காலடியில் ஒரு பெரிய அட்டைப்பெட்டி.

குடும்பம் பூராவும் ஆட்டோவைச்சுற்றி. பத்து வீட்டு வாசல்களிலும் ஆள்கள். எல்லோர் கண்களும் அட்டைப்பெட்டி மேல். ”கீழே போட்டுராம பத்திரமா பத்திரமா” என் று அவள் சொல்லிக் கொண்டே பின்னால் வர அருணாசலமும் குமார சாமியும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் போனார்கள்.

“ஆட்டோவுக்கு எவ்வளவாச்சுனு பார்த்து நீங்களே குடுங்க” என்று அவள் அருணாசலத்தை அதட்டி னாள். வெளியில் போய் ரூபாய் கொடுத்துவிட்டு வருவதற்குள் பிள்ளைகள் அட்டைப் பெட்டியைத் திறக்கச் சொல்லிப் பறந்தன.

வெளியிலிருந்து உள்ளை நுழையும்போது குமாரசாமி யிடம் அருணாசலம் திரும்பத் திரும்பக் கேட்டார். “ஆண்ட்டனாவையும் வாங்கித்தரச் சொல்லி விட்டார்னு சொன்னியளா இல்லை மறந்திட்டியளா”.

குமாரசாமி சொன்னார், “நூறுதடவை கேட்டிருப்பேன் உங்க மச்சினன்ட்ட, ஆண்ட்டனாவையும் சேத்தே வாங்கிட்டு வரச் சொன்னாரேன்னு. இதை வாங்கவே ஏழுபேர் கால்ல விழுந்துருக்கேன். எட்டாவதா ஒரு ஆளு எனக்கு மெட்ராஸ்ல இல்லேன்னு, சொல்லுங்கன்னுட்டார்”.

அருணாசலத்திற்குத் திடீரென்று ஒருசின்ன அதிர்ச்சி. ஆண்ட்டனா, பைப் இதெல்லாம் வாங்குவதென்றால் இருநூறு முந்நூறு வேண்டுமேயென்று. பிள்ளைகள் ஒரு பாவமும் அறியாமல் துள்ளிக் கொண்டிருந்தன. எல்லாரும் சுற்றி நிற்க மேசை மேல் வைத்திருந்த அட்டைப் பெட்டியை அருணாசலம் பிரித்துப் பிடித்தார். குமாரசாமி கைகளை உள்ளுக்குள் கொடுத்து மெல்ல மெல்லத் தூக்கி வெளியில் வைத்தார்.

சின்னதுதான். கறுப்புவெள்ளைதான். ஆனால் டி.வி. யை வைத்தகண் வாங்காமல் பார்ப்பதும் தொட்டுப் பார்க்கிற பிள்ளைகளை ‘அழுக்காக்காதே’ என்று அதட்டுகிற சத்தமும் காச்மூச்சென்று கேட்டது.

குமாரசாமி ஃபைல் சம்பந்தமாய் ஹெட் ஆபீஸில் சொன்ன பதிலை அருணாசலத்திடம் சொல்ல ஆரம் பித்தார். நாற்காலியில் உட்கார்ந்து தீவிர யோசனைக்குப் போய்விட்ட சூப்பிரெண்ட் மனைவி குமாரசாமிக்கு ரொம்ப அன்புடன் தானே கொண்டு வந்து காபி கொடுத்தாள். குமாரசாமி கிளம்பிப் போன பின்னும் வெகுநேரம் அருணாசலம் சிந்தனை யிலேயே இருந்தார்.

“நாளைக்கு எங்க வீட்டுக்கு டி.வி. வரப்போகுது” என்று நேற்றுப் பூராவும் சுற்றியுள்ள வீடுகளில் பிள்ளைகள் வாயடித்திருந்தன. அவர் மனைவியும், “ஒருத்தர் வீட்டுக்குப் போயி ஓசியிலெ பார்க்கிற பழக்கம் என்ன பழக்கம்? நாளைக்கு எங்க வீட்டுக்கு மெட்ராஸிலிருந்து வருது” என்று அக்கம் பக்கத்துப் பெண்களிடம் சொல்லியிருந்தாள்.

வீடே அருணாசலத்தை சூழ்ந்து கொண்டது. “இண்ணைக்கு சாயங்காலத்துக்குள்ளெ ஆண்ட்டனா வாங்கி வச்சிருங்கப்பா என்றாள் மூத்த பெண். மத்தியானமே வந்து வேலை ஆரம்பிச்சாத்தான் சாயங்காலத்துக்குப் படம் தெரியும்” என்றாள் இரண்டாவது மகள். வீட்டு நிலை தெரிந்த மனைவி ”அவன் சக்திக்கு மீறி இதை வாங்கி அனுப்பியிருக் கிறான். இல்லைனா நாம இருக்கிற நிலைமைக்கு சொப்பனத்திலே கூட இந்தப்பெட்டி வந்து மேஜையிலே உட்கார்ந்திருக்காது. கீழ் மூணாம் வீதியிலெ ஆண்ட்டணா கட்டறவன் இருக்கானாம், போய்ப் பாருங்க” என்றாள்.

”டி.வி. வாங்கி அனுப்பிச்ச ஓந்தம்பிக்கு ஒரு ஆண்ட்டனாவும் வாங்கி அனுப்பணுங்கிற பொறுப்பில்லை. ஒனக்கு வாய்க் கொழுப்பு” என்று தொண்டை வரை வந்தது அருணாசலத்திற்கு. பல காரணங்களால் அப்படிச் சொல்ல வேண்டாமென்று நிறுத்திக் கொண்டார்.

ஆபீசுக்குக் கிளம்பும்போது மூத்த மகள் வாசலுக்கு ஓடி வந்தாள். “அப்பா ரெண்டு ஆண்ட்டனா கட்டணும். சிலோனுக்கு ஒண்ணு, மெட்ராசுக்கு ஒண்ணு” என்றாள். வாசலில் கால் தடுக்கியது. சமாளித்து நடந்தார்.

டேபிள்கிளாத் பளபளவென்று விரித்துக் கிடந்தது. தலைக்கு மேல் ஓடும் ஃபேன் காற்று ஜில்லென்று வீசியது. அருணாசலம் முன்னெப்போதுமில்லாமல்’ அடங்கி நாற்காலிக்குள் கிடந்தார். ஃபைலைப் பிரித்துப்படிக்க முயற்சி பண்ணினார். மனசு ஃபைல் தாண்டி, ஆபீஸ்தாண்டி, வீட்டு மேசைமேல் வெறு மனே உட்கார்ந்திருந்த டி.வி. மேலேயே போனது.

சாயங்காலம் ஆண்ட்டனா கட்டுகிற ஆளை பியூன் கூட்டி வந்தான். பிள்ளைகள் துள்ள ஆரம்பித்தன ஆண்ட்டனாக்காரர் மொட்டை மாடிக்கு ஏறிப் பார்த்துவிட்டு வந்தார்.

“வீட்டு ஒயரம் ரொம்பக் கம்மி. பைப் நீளமாக வைக்கணும். வயரும் ரொம்ப மீட்டருக்கு வாங்கணும். பூஸ்ட்டர் இருக்குல்ல?” என்றார்.

அருணாசலத்திற்குத் திக்கென்றது. டி. வி. யோடு டி.வியைப் பயன்படுத்தும் முறைகளைப் பற்றி ஆங்கிலத்தில் பளபளவென்று அச்சிட்டு ஒரு கையகராதி அட்டை பெட்டிக்குள் கிடந்தது. அதைப் படித்துவிட்டு அந்த ஆளிடம் தமிழாக்கிச் சொன்னார்.

“உங்களது இந்த உயர்ந்தவகை டி.வி.க்கு பூஸ்ட்டர் வாங்கிப் பணத்தை வீணாக்காதீர்கள். பூஸ்ட்டர் இல்லாமலே இது பிரமாதமாக இயங்கும்”

ஆண்ட்டனாகாரர் ஒரு புன்சிரிப்பு சிரித்துச் சொன்னார்.

“அதெல்லாம் மெட்ராசுக்குள்ளெ வைக்கிற ஒரு டி.வி.க்குத்தான். இங்கெ பூஸ்ட்டர் இல்லாம கோடு கூடத் தெரியாது. அப்புறம் ஒங்க இஷ்டம். ஆண்ட்டனா மட்டும் கட்டணும்னர் கட்டிட்டுப் போகிறேன், இருநூறு ரூபாய் வரை வரும், ரெண்டு  ஆண்ட்டனா  கட்டணும்னா முன்னூத்தம்பது ரூபாயாகும், படம் ஓடணும்னா பூஸ்ட்டர் வாங்குங்க. பூஸ்ட்டர் நானூறு ரூபா. எல்லாம் சேர்ந்து எழுநூத்தாம்பது எண்ணூறு ரூபாய் வரும்.

அருணாசலம் கலங்கி விட்டார். மனைவி முகத்தை நாலைந்து தடவை, பிள்ளைகள் முகத்தை இரண்டொரு தடவை ஒரு உணர்ச்சியில்லாமல் பார்த்தார்.. கடைசியாய்ச் சொன்னார்.

“நாளைக்கு சொல்லிவிடுநேன். நீங்க ரெண்டு நாளைக்கு உள்ளுரிலேதானே இருப்பீய”

டி.வி. வாங்குகிற வீடுகளில்லாத அனுபவம் ஆண்ட்டனாகாரருக்கு. ஒன்றுஞ் சொல்லாமல் போய்விட்டார். எங்கே போகலாம், யாரைக் கேட்கலாம் என்று யோசித்து யோசித்து வரும்போது ராத்திரி ஒன்பது மணியாகி விட்டது.

பிள்ளைகள் சோர்ந்து போய் உறங்கி விட்டார்கள். மனைவி சாப்பிடக் கூப்பிட்டாள். மரியாதை யில்லாமல் கூப்பிட்டது போல் அவருக்குப்பட்டது. “நாளைக்கு என்னமாச்சும் ஏற்பாடுபண்ணிறலாம்”, என்று மனைவிக்கு சமாதானம் சொல்லிக்கொண்டே சாப்பிடப் போனார். அவள் பதில் பேசாதது வேறு இவருக்கு அவமானமாகப் பட்டது.

காலையில் ஆபீஸ் போனதும் குமாரசாமியைக் கூப்பிட்டார். அவர் ஒண்ணு ரெண்டுக்கெல்லாம் கஷ்டப் படுகிறவரென்று தெரியும். என்றாலும் அவரிடமிருதுதான் ஆரம்பிக்க வேண்டும், அல்லது அவர் மூலமாகத்தான் ஏற்பாடு செய்யவேண்டும்

“ஸார் யானை வாங்கியாச்சு, இன்னும் அங்குசம் வாங்கலை எங்க வீட்டிலெ, தெரியும்லெ” என்றார்,

குமாரசாமி ஒரு குமிழ்ச் சிரிப்புடன் கேட்டார்.

“யானை வெலையிலெ பாதியாம்ல அங்குசம் வெலை – கேள்விப்பட்டேன்”.

அருணாசலம் நேரடியாய் விஷயத்திற்கு வந்தார், “ஒரு ஆயிரம் ரூபா எங்கேயாச்சும் புரட்டமுடியு மான் னு பாருங்களேன்”

“நேத்து சாயங்காலம் ஒரு அஞ்சு ரூபாய்க்கு சீட். சீட்டா அலைஞ்சதைப் பார்த்திட்டு ஆயிரம்னு ஒரு போடு போடுறியளே ஸார்”

அருணாசலம் குமாரசாமியை இன்னும் பக்கத்தில் வரும்படி சைகை காட்டினார்.

“ரெண்டு வட்டி மூணு வட்டினு தர்ராங்களாம். எனக்கு ஆள்களைத் தெரியாது. நீங்கள்தான் பாத்து வாங்கிக் கொடுக்கனும். அடுத்த மாசம் இருபத் தஞ்சாம் தேதி ஜி.பி.எப்.டியு வாங்கிக்கட்டிறலாம்” குமாரசாமி யோசித்தார். இரண்டொரு இடங்கள் ஞாபகத்திற்கு வந்தன.

”பார்க்கிறேன், நாளைக்குப் பேசுவோம்” என்று சொல்லிவிட்டு சீட்டிற்குப் போய்விட்டார்.

அன்றுமாலை அருணாசலம் வீட்டிற்குப் போனதும் பிள்ளைகள் சுற்றி வளைத்துக் கொண்டன. “இண்ணைக்காவது ஆண்ட்டனா வந்துருமா அப்பா’, என்றன. அருணாசலத்தின் முகத்தைப் பார்த்ததும் தீர்மானிக்கிற குணம் அவர்மனைவிக்கு. முகம் ஒழுங்காயில்லை என்றதும் சமையலறைக்குப் போய் விட்டாள்.

ஒன்றுந் தெரியாதது போல் உட்கார்ந்திருக்கும் ஒரு மேதையைப் போல் டி.வி. மேசைமேல் உட்கார்ந்திருந்தது. கோடி அதிசயங்கள் உள்ளே கிடந்தன. அவைகளை வெளியே கொண்டுவர ஒரு சமர்த்தான அப்பா இல்லையே என்று பிள்ளைகள் டி.வி.யைச் சுற்றி சுற்றிவந்து விட்டு உறங்கிப் போய் விட்டன.

மறுநாள் ஆபீஸ் போனதும் குமாரசாமியை வெகு அவசரமாய்க் கூப்பிட்டு “என்ன ஆச்சு” என்றார்.

“ஒரு வாரம் ஆகும். குடுத்த பணமெல்லாம் திரும்ப வரலைங்கிறாரு. மூணுவட்டி பிடிச்சது போக மிச்சம் கையிலே வரும்” என்றார்.

அருணாசலம் குமாரசாமியைத் தாண்டி அன்று சாயங்காலம் சுற்றி யார் யாரையோ பார்த்தார். ஒன்றும் பெயரவில்லை. பிள்ளைகளைப் பாக்கப் பாவமாயிருந்தது. மனைவியின் முகம் பயமாயிருந்தது. எல்லாவற்றையும் விட “என்னை என்ன செய்ய உத்தேசம்?” என்று கேட்டுக்கொண்டு மேசை மேல் உட்கார்ந்திருக்கும் டி.வி. அவரை இம்சை பண்ணியது

காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் நெஞ்சு திக்கென்று ஒருவிநாடி நின்றது. எங்கோ நடுக்காட்டில். தன்னந்தனியாய் நிற்பது போல் பிரமை. பழகியவர்கள் நெருங்கியவர்கள் மீதெல்லாம் கோபம் கோபமாய் வந்தது.

சுற்றியுள்ள வீட்டுப்பிள்ளைகள் வாசல் கதவில் சாய்ந்து கொண்டு உள்ளே மேசைமேல் வைக்கப்பட்டி ருக்கும் வெற்று டி.வி, யைப் பார்ப்பதும், இன்னிக்கு சாயங்காலம் படம் ஓடுமா’, என்று அருணாசலத்தின் பிள்ளைகளிடம் விசாரிப்பதும் காதில் நெருப்புத் துண்டுகளாய் விழுந்தன.

அடிக்கடி அவருக்கு ரோஷம் வந்தது. காரணமில் லாமல் கோபம் வந்தது. பேசாமல் உட்கார்ந்திருக் கும் டி.வி. மேல் ஆத்திரம் வந்தது.

குடியிருக்கும் வீட்டுச் சொந்தக்காரர் அடுத்த தெருவிலிருந்தார். ஏழெட்டு வீடுகள் ஊர் பூராவும் அவருக்கு. அன்று சாயங்காலம் அவரைப் போய்ப் பார்த்தார். மறுபடியும் அவமானந்தான்.

‘நூறு இருநூறு என்றால் பரவாயில்லை, ஆயிரம் பெரிய தொகையாச்சே’ என்றதும், தலையைத் தொங்கப் போட்டுத் திரும்பினார்,

குமாரசாமியைக் கூப்பிட்டு நச்சரிக்க ஆரம்பித்தார். தான் படும் மனக்கேட்டை அப்படி அப்படியே சொன்னார். குமாரசாமிருக்கு வயது இவ்வளவு ஆசியிருக்கிறதே தவிர நளினமாய் எதையும் புரிந்து கொள்கிற ஆளில்லை.

“இன்னும் ஒரு வாரங்கழிச்சு ஒங்க டி.வி. வந்ததா நெனைச்சுக்கச் சொல்லுங்க ஒங்கெ வீட்டிலெ” என்கிறார்.

நடுவில் ஒருநாள் இருட்டி வெகு நேரங்கழித்து வீட்டிற்குள் நுழையும்போது வீட்டுக்கு வந்திருந்த பக்கத்து வீட்டுப்பெண்களிடம் மனைவி சொல்லிக் கொண்டிருந்தாள்.

“திருச்சிக்குப் போனாத்தான் நல்ல ஆண்ட்டனா வாங்கலாமாம். இவருக்கு ஆபிஸிலெ நெறைய வேலை. ரெண்டு நாள் கழிச்சுத்தான் போகட்டுமெ, இப்ப என்ன அவசரம்”

குமாரசாமி சொல்லியிருந்த கெடுவுக்கு இன்னும் இரண்டுநாள் தான் இருந்தது. ரோஷப்படவும் அவமானத்தை மறைக்கவும் அவளுக்குத் தெரிந்த அளவு கூட தனக்குத், தெரியவில்லையே என்று நொந்து கொண்டார்.

ஓரு வழியாய் அன்னைக்கு குமாரசாமி வட்டிப்பணம் கழித்து மீதியைக் கொண்டுவந்து கொடுத்தார். அரை நாள் லீவுபோட்டு விட்டுத்தானே கீழ் மூணாம் வீதிக்குப்போய் ஆண்ட்டனாக்காரரைக் கூட்டிக் கொண்டு ஆண்ட்டனா, பைப், பூஸ்ட்டரெல்லாம் வாங்கி ரிக்ஷாவில் கொண்டு வந்து இறக்கினார்.

மாடியிலேறி ஆண்ட்டனாவைக் கட்டிமுடிக்க இருட்டி விட்ட டது. பெட்டிக்கு எதிரில் வாயெல்லாம் பல்லாகப் பிள்ளைகள். சந்தோஷத்தை அடக்கியும் சந்தோஷத்தை அடக்காமலும் மனைவி. சாதித்துவிட்ட பெருமையில் அருணாசலம். வயர்களைப் பின்களில் கோர்த்து டி.வி. பெட்டியில் சேர்ந்து சுவிட்சைப் போட்டார் ஆண்ட்டனாகாரர்.

பளீரென்று முதலில் ஒரு விளம்பரப்படம். ஒரு பெண்ணின் குரல் சகல மென்மைகளோடும்கேட்டது. “நீங்கள் முன்னேறுகீறீர்கள் என்றால் உங்கள் வீட்டில் ஒரு ஃபிரிட்ஜ் இருக்கிறதென்று அர்த்தம்.

ஒரு அழகான ஃபிரிட்ஜ் திரையில்.

– பூவுக்குக் கீழே (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 1987, அன்னம் (பி) லிட், சிவகங்கை.

கந்தர்வன் கந்தர்வன் (க.நாகலிங்கம்) (பெப்ரவரி 3,1944-ஏப்ரல் 22,2004) தமிழ் எழுத்தாளர், முற்போக்கு இலக்கிய அழகியலை சார்ந்து எழுதியவர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்)யுடன் தொடர்புகொண்டிருந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பை வகித்தார். தொழிற்சங்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். கந்தர்வனின் முதல் சிறுகதை 'சனிப்பிணம்' 1970 -ல் தாமரையில் வெளிவந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்து அதில் பணியாற்றினார். கண்ணதாசன் இதழில்இலக்கிய விமரிசனங்கள்,சிறுகதைகள், கவிதைகள் எழுதினார். தாமரை, சுபமங்களா, சிகரம், செம்மலர், ஆனந்த விகடன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *