அக்கதை
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி 
கதைப்பதிவு: September 7, 2026
பார்வையிட்டோர்: 477
(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த வார இதழ் அலுவலகம் இருந்த தெருவை நெருங்கிய போது, ராமச்சந்திரன் ராமச்சந்திரனாக இருக்க முடியவில்லை. விரட்டி விரட்டிக் கல்லெறியப்பட்ட நாயாக அவன் சலிப்பும் எரிச்சலுமாய் பொருமிப் போயிருந்தான். ‘யார் மீது பாயலாம், யாரைக் கடித்துக் குதறலாம்’ என்று அலைபாய்ந்து திரிகிற உள் தீவிரம். உலர்ந்து, காய்ந்து கனன்று கிடந்தான்.
அலுவலகத்தில் நுழைந்தான். வாட்ச்மேன் அடித்த சல்யூட்டை வாங்கிக்கொண்டான். பதிலாகத் தலை யசைப்பும் புன்சிரிப்பும் உதிர்த்துவிட்டு உள்நகர்ந்தான். அதுவும் வழக்கமான செயல்பாடாய்.
நேராக நிர்வாகப் பிரிவுக்குள் நுழைந்தான். பழகி மரத்துப் போன நுழைவு. இடையில் எதிர்ப்பட்ட ‘ஹலோ’க்கள், ‘ஹவ் ஆர் யூ’க்கள். ‘ஃபைன்’கள். எல்லாமே யந்திரச் சப்தங்களாய்…
வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட சூட்டோடு கேண்டீனுக்குள் நுழைந்து வடைக்கும் டீக்கும் டோக்கன் வாங்கினான். சப்ளையிலிருந்த புண்ணியகோடி இவனைக் கண்டதும் புன்சிரித்தார்.
“ஹைய் ராம்ஸ், சௌக்யமா?”
“ஓகே புண்ஸ்.”
“என்னது?”
“வடையும் டீயும்தான் புண்ஸ்.”
இது இப்போதைய புது மோஸ்தர். மச்சி, பங்காளி, தலைவா என்று நண்பர்கள் பரஸ்பரமாய் அழைத்துக் கொள்கிற கேலி கிண்டல் காலாவதியாகி, இது அறிமுகம். பெயரைச் சுருக்கி ‘ஸ்’ சேர்த்துக்கொள்வது.
ராமச்சந்திரன் என்றால் ‘ராம்ஸ். புண்ணியகோடி ‘புண்ஸ்.’ காமராஜ் ‘காம்ஸ்.’ வெங்கடாசலம் ‘வெங்க்ஸ்.’ பொன்னு மணி ‘பொன்ஸ்.’
இந்த வினோதச் சுருக்கத்தில் என்ன அர்த்தம்? நட்பின் அர்த்தம் அடையாளமாகிறது. நெருக்கத்தின் முகம். அந்யோன்யத்தின் வெளிப்பாடு. மன அண்மையில் எடுத்துக் கொள்கிற உரிமை.
புண்ஸின் ஜாலியான குசல விசாரிப்பு கூட இவனுள் ஒரு விளைவும் செய்துவிடவில்லை. வறண்ட தொனியில் மரக்கட்டையாய் பதில் சொல்லி விட்டு நகர்ந்தான்.
கேண்டீனுக்குள் காலைநேரச் சுறுசுறுப்பு. பரபரப் பான ஊழியர் நடமாட்டம். சுற்றிலும் சளசளப்பு. அர்த்த மற்ற மனிதக் கூப்பாடு. கொசுவின் ரீங்காரமாய் முகத்தில் மோதி மொய்க்கிற சப்த அதிர்வுகள்.
ரெண்டு மடக்கு டீ, கனத்த திரவமாய் உள்ளிறங்க, மெல்ல உயிர் அரும்புவதை உணர முடிந்தது. டீயின் அடர்த்தியான ருசி மனசுக்குப் பிடித்திருந்தது. ரசனை யோடு மூன்றாவது மடக்கை விழுங்கும்போது, முகத்தில் கற்றையாய் வந்து மோதுகிற சிகரெட் புகை. குடலைப் பிடுங்குகிற குமட்டல் நாற்றம். வெகுண்டுபோய்த் திரும்பினால்… புகையை ஊதிய ஜிப்பாக்காரன் எங்கோ பார்த்த நிலையில்.
ராமச்சந்திரனுக்குள் ஒரு கொந்தளிப்பு. கத்தவேண்டும் என்கிற மனத்தினவு. நாக்கு வரை பீறிட்டு வந்து விட்ட நாராசச் சொற்கள். நாகரிகம் நாக்கை மடக்க, வார்த்தைகளை நிறுத்தி எடை போட்டு வெளிவிட்டான்.
“சார், சிகரெட் புகையைக் கொஞ்சம் தள்ளி ஊதுங்க.”
ஜிப்பாக்காரன் பார்த்த பார்வையில் அலட்சியம்.
“ஏன், நீங்க தள்ளிப் போய் டீ சாப்பிடலாமே?”
நூறு சத எகத்தாளம். மனிதனைப் பொருட்டாக நினைக்காத திமிர்த்தனம். நடப்புச் சமூகத்தின் குறியீடு. சாக்கடையில் புரண்டெழுந்த சந்தோஷ மதர்ப்பில் உரசிச் செல்கிற பன்றித்தனம்.
அவனுள் குப்பென்று ஒரு தீக்கற்றை. அந்த உணர்வை அணைக்கிற நீர்த்த தெளிப்பாய் ஒரு பிரக்ஞை.
‘ராம்ஸ், பொறுடா. நிதானம் காட்டு. சீண்டலுக்குப் பலியாகாதே. சண்டை விவேகமல்ல. வீரமல்ல. தரக் குறைவு. லகானைச் சுண்டு. நிறுத்து, உன்மத்தத்தை அடக்கு.’
இறுகிப் போய் மௌனமாய் நிமிர்ந்தான், ராமச்சந்திரன். பார்வையில் தெறிக்கிற வெப்பம். கற்றைக்கோபம்.
“டீசண்டா இருக்குறீங்க. பேச்சிலேயும் அதைக் காட்டலாமே.”
“மத்தவர் உரிமையிலே குறுக்கே வுழுறதுதான், உங்க டீசண்டா?”
“எது உரிமை? சிகரெட் குடிச்சு புகையை விடுறதா?”
“புகையை விடாம எதை விடுறது?”
அவ்வளவுதான். ராம்ஸ் வெடித்து விட்டான். தாறு மாறான வெடிப்பும், சிதறலும். ஜிப்பாக்காரனும்தான். ‘வாடா, போடா’ என்று பலத்த வாய்ச் சப்தம் வெக்கை வார்த்தைகள். சூழலே தகிப்பாகி விட்டது.
அதிர்ந்து திகைத்துப் போன கேண்டீன். பதைத்துப்போய் மேனேஜரும், சிப்பந்திகளும் தலையிட்டு, சப்தம் போட்டு, இருவரையும் சமாதானப்படுத்தி, வெளியேற்றிக் கழித்தனர்.
அவமானப்பட்ட மனச்சீற்றத்தில் ராமச்சந்திரன். காயங்களில் அடிபட்ட வலி. கொதிபானையாய்த் தள தளக்கிற நெஞ்சோடு மாடியேறினான்.
தன்னை மறந்த நிலையில் வெந்த மனசின் சிடுசிடுப்பாய்த் தெறித்த முணுமுணுப்பு.
“ச்சே! மனுசனை மனுசனா மதிக்கிற பய… நாட்லே ஒருத்தனுமில்லே. எவன் கிட்டேயும் மனுசத்தன்மையே யில்லே. கால்லே ஒட்டுன எச்சிலா நெனைச்சு, மனுசனைத் தேய்ச்சுத் தள்ளிட்டுப் போறாங்களே…”
வீட்டில், டிபனுக்கு நேரமாகி விட்டதே என்று பதைத்துப் போய்ப் பரபரத்த போது, மனைவியின் அலட்சிய மான சீறல். எடுத்தெறிந்து பேசிய அவளது சாடல். இழிந்த ஜந்துவாய்த் தன்னை உணரவைத்த அந்த அவமதிப்பு.
பஸ்ஸில் வந்தால்… கண்டக்டரின் அத்துமீறலான அதட்டல். செல்லாத நோட்டை பார்க்கிற தோரணையில் பார்வை. மன ஆழத்தில் பூரான் ஊர்கிற நடுக்கமான கூச்சம்.
சாக்குமூட்டையை இடிக்கிற மாதிரி வந்து ஒட்டி உரசுகிற சக பயணிகள். காது மடலில் சூடாய் மோதுகிற சுவாச அருவருப்பு. எரிச்சலும் எதிர்ப்புணர்வுமாய்த் திரும்பிப் பார்த்த இவனைப் புறங்கால்களால் எற்றுகிற அலட்சியம். கத்தியாய் நெஞ்சில் சொருகி ரத்தம் பெருக்குகிற புறக்கணிப்பு.
ஊமைக் குமைச்சலாய் பொருமிய இவனைக் கண்டன மாய்ப் பார்த்த சகபயணிகள்.
“அடுத்தவன் கைபடாம, அலுங்காம போகணும்னா, ஆட்டோவுல டாக்ஸியிலே போக வேண்டியதுதானே? பஸ்ஸுலே வந்தா… கூட்டத்துலே கால் கை படத்தானே செய்யும்?”
காயத்தில் உப்பையள்ளிப் போட்ட அவர்களது முணு முணுப்புகள். நசுக்கப்பட்ட புழுவின் அவஸ்தையில் ராமச்சந்திரன்.
இங்கு வந்தால்… சிகரெட்காரன்!
சப்-எடிட்டர் பிரிவுக்கான அறையின் கதவைத் தள்ளிக் கொண்டு உள் நுழைந்தான்.
“ஹலோ… ராம்ஸ், என்ன லேட்?”
சக சப்-எடிட்டர்களின் உற்சாகச் சப்தங்கள்.
விசாரிப்பா, விசாரணையா என்று தொனியைக் கண்டு பிடிக்க முடியாத ஒரு தோரணையான ‘குட்மார்னிங்’ அது. முள்ளாய்க் குத்திய வரவேற்பு எரிச்சல்.
வெறுமனே ‘ஹலோ’ மட்டும் சொல்லி விட்டு. அவர்களை மட்டம் தட்டிய திருப்தியில் டேபிளில் பேக்கை வைத்தான். சீட்டில் உட்கார்ந்தான். வாட்டர் பேக்கை டேபிளில் வைத்து விட்டு, சுவரை நிமிர்ந்து பார்த்தான். மணி, பத்து நாற்பது.
துணுக்கு எழுதுகிற சப்-எடிட்டர் ஆங்கிலப் புத்தகங் களைப் புரட்டிக் கொண்டிருந்தார். அவரவர் அவரவர் பணிகளில்.
இவன் முகத்தில் இன்னும் உட்கார்ந்திருக்கிற சிடு சிடுப்பு… மென்மையோ குழைவோ இல்லாத மன விறைப்பு. யார் யாரோ முறுக்கேற்றி விட்ட விறைப்பு.
ப்யூன் கொண்டு வந்த தபால்கள். கனத்த கனத்த கவர்கள். இன்லெண்ட் காகிதங்கள், கார்டுகள் தபால் முத்திரைக் காயங்களால் கசங்கலாயிருந்தன.
இதுதான் இவன் பணி. மலைப்பும், சலிப்புமான பணி.
எல்லாவற்றையும் பிரிக்கணும், வகை பிரிக்கணும். வாசகர் கடிதங்களை- மறுப்புக் கடிதங்களை- கவிதை களையெல்லாம் ரக வாரியாய் ஒழுங்குபடுத்தி அதனதன் டிபார்ட்மெண்டுக்கு அனுப்பணும். சிறுகதைகளைப் படிக்கணும். பிரபல எழுத்தாளர்கள் கதை என்றால் எடிட்டர் ரூமிற்கு அனுப்ப வேண்டும்.
எல்லாவற்றையும் ஒன்று விடாமல் படிக்கணும். பென் சில்களால் கோடுகள் போடணும். குப்பை குப்பையா யிருந்தாலும் வாசித்து சரிபார்த்து, திருத்தங்கள் செய்து ‘நோட்’ எழுதி வைத்து எடிட்டர் பார்வைக்கு அனுப்பி வைக்கணும்.
ஆரம்பத்தில் ருசியாக இருந்து உற்சாகமூட்டிய பணி இது. எத்தனையோ எழுத்தாளர்களின் விதம்விதமான எழுத்தை வாசிக்கிற வினோத அனுபவங்கள்.
சீக்கிரத்திலேயே அலுப்பூட்டிவிட்டது. பணி ஒரு சுமையாய் அழுத்திற்று. இவனது தனித்துவத்தை உள் ஓடுங்க வைத்து விட்டது.
தனித்துவத்துக்கான அங்கீகார வறுமை, திறமையை சுயமுனைப்பை ஊமையாக்கி விட்டது.
வந்திருக்கிற மேட்டர்களைத் திருத்தி, நகாசு வேலை செய்து, படைப்பாற்றலைக் காட்டி கதையைத் தேற்றிப் பிரசுரம் செய்து, எத்தனையோ புது எழுத்தாளர்களை ஆர்வமாய் உருவாக்கியிருக்கிறான். அந்த உழைப்பு, அந்த எழுத்தாளர்களால் கூட அங்கீகரிக்கப்பட்டதில்லை. நன்றியும் பாராட்டும் ஆசிரியருக்கும், இதழுக்கும் தான். இவனுக் கில்லை.
பத்திரிகைகளில் சப் எடிட்டர்களும், சினிமாக்களில் அஸிஸ்டெண்ட் டைரக்டர்களும் ஒரே ரகம். மாடாய் வேலைகள், நாயாய்ப் பாடுகள், பலனும், புகழும் மட்டும் வேறு யார்யாருக்கோ.
அஸிஸ்டெண்ட்டைரக்டர்களுக்காவதுகூட்டத்தோடு கூட்டமாய் டைட்டில் கார்டு வரும். உறவினர்களிடம் காட்டி மகிழலாம்.சப்-எடிட்டர்களுக்கு அதுவுமில்லை. இதழின் மொத்தப் புகழில் அடையாளம் தெரியாமல் புதைந்து, நாசமாய்ப் போக வேண்டியதுதான்.
இந்த ஏமாற்ற அனுபவங்களின் அடர்த்தியே பணியின் வெறுப்பாகவும் சலிப்பாகவும் ஆகி விட்டது. மன ஈடுபாட்டை கத்தரித்து, வயிற்றுப் பாட்டுக்கான மாரடிப் பாக்கி விட்டது. முகம் தொலைத்த வறட்டுப் பிழைப்பு. சுயமிழந்த கடுப்பு. ஒரு பகாசுர யந்திரச் சுழற்சியில் கண் காணாமல் போகிற ஒரு திருகாணியைப் போல சிறுமைப்பட்டிருக்கிற நிரந்தர வேதனை.
இந்த நுண்ணுணர்வுகளைப் புரிந்துகொள்ள ஒரு நாதியில்லை. பலனடைந்த எந்தப் பாவியும் இவனை ஒரு பொருட்டாக நினைத்ததில்லை. இவனையும் இவன் தொழிலையும் மனசால் தொட்டுணர்ந்து கௌரவிக்கிற மனிதநேயம் எவனிடமுமில்லை; எந்த எழுத்தாளனிடமும் இருந்ததில்லை. ச்சே!
“மனுசத்தன்மையேயில்லாத இவங்க எழுத்துலே என்ன ஈரம் இருக்கு? எப்படியிருக்கும் உயிர்ப்பு? சவக்கதைகள்!”
உள்மன முணுமுணுப்பாய் நீண்ட நினைவுகளோடும், பெருமூச்சோடும் கற்றையைப் பிரித்தான். எடுத்த எடுப்பில் ஒரு கடிதம். வாசகர் கடிதம். நடப்பு வார ‘இஷ்யூ’ வைப் பாரட்டிய கடிதம். அட்டை டு அட்டையாகப் பாராட்டு. சகலத்திற்கும் பாராட்டு.
பாராட்டில் போலித்தனம் பல்லையிளித்தது. அந்தக் கடிதமே ஒரு பிச்சைப் பாத்திரத்தின் ‘ஐயா, தர்மவானே’ என்ற குரலாக இவனுக்குத் தோன்றியது.
‘இப்படி வாசகர் கடிதம் எழுதியிருக்கிறவன், பிரசுர மேட்டர் எதுனாச்சும் அனுப்பியிருப்பானே…’
அனுபவம் யூகமாய் உறுத்த, அவசர அவசரமாய் கனத்த கவர்களைப் புரட்டினான், ராமச்சந்திரன். அதில் ஒன்று, இதே ஃப்ரம் அட்ரஸோடு.
அந்தக் கர்ப்ப கவரை உடைத்தால்… இவன் நினைத்த மாதிரியே பிரசுரத்துக்குக் கெஞ்சுகிற கடிதத்துடன் கூடிய ஒரு மேட்டர். முழுவதையும் படித்துத் துழாவினாலும், ஒரு துணுக்குக் கூட தேறாது. வெறும் குப்பை.
இப்படி காக்காய் குணத்தோடு உதயமாகிற எழுத்தாள னிடம் மருந்துக்குக் கூட முதுகெலும்பு இருக்குமா? நூறு சதப் போலியாயிருக்கிற இவனெல்லாம் என்னத்துக்குப் பேனா பிடிக்கணும்? தன்னையே மனுசனா மதிக்காத சுயமரியாதை யற்ற ஜந்து, ச்சே!
கை எந்திரமாய்ச் செயல்பட்டது. வாசகர் கடிதங் களைப் பொறுக்கி, இன்னொரு சப்-எடிட்டரிடம் தந்து கவனிக்கச் சொன்னான், ராமச்சந்திரன். மறுப்பும், விளக்கமுமாய் வந்த இன்லெண்ட் லட்டர்களை வாசித்து, நீக்கவேண்டிய பகுதிகளில் சிவப்புப் பென்சில் கோடுகள் போட்டு பியூன் மூலம் எடிட்டர் ரூமிற்கு அனுப்பினான்.
வந்திருக்கும் சிறுகதைகளைப் பிரித்து, நம்பர் போட்டு, ரெஜிஸ்டரில் பதிவு செய்து விட்டு, கதைகளோடு கவரையும் பின் அடித்து, விரித்த நிலையில் ஃபைல் பண்ணி னான்.
கடைசியாக அந்தக் கவரைக் கிழிப்பதற்கு முன்பு ஃப்ரம் அட்ரஸைப் பார்த்தான். அதே எழுத்தாளர். கிராமத்து எழுத்தாளர். அடிக்கடி கதை எழுதி அனுப்புவார். கதையோடு இணைத்து நிச்சயமாய் ஒரு கடிதம் வரும். அதில் ‘கதையில் கை வைக்கவேண்டாம். என்கிற உறுதியான வேண்டுகோள். அதற்கான நியாயங்கள்.
எரிச்சலூட்டுகிற வேண்டுகோள். அத்து மீறலான வேண்டுகோள். முகம் பார்க்காத அந்த எழுத்தாளர் மீது இவனுக்கு எப்போதுமே வெறுப்பும், கோபமும் தான்.
சக சப் எடிட்டர்கள் மூன்று பேருமே அந்த எழுத்தாளர் கட்சி. “தன்னம்பிக்கையுள்ள எழுத்தாளர். சுய மதிப்புமிக்க எழுத்தாளர்களில் ஒருவர்” என்பது அவர்கள் வாதம்.
அடிக்கடி இது பற்றி சர்ச்சை நடக்கும்.
இவன் வாதமே தனி. கேள்விகளை மாறி மாறி அடுக்கு வான், மிக உக்கிரமாய்.
“கதையை பப்ளிஷ் பண்ற பொறுப்புள்ள எடிட்டருக்கு அதைத் திருத்துற ரைட்ஸ் உண்டு. அந்த ரைட்ஸை இவர் எப்படிப் பிடுங்கலாம்?”
“இந்தப் பத்திரிகையிலே கதை பப்ளிஷாகணும், பப்ளி சிட்டி பெறணும்னு ஆசைப்படுற இந்த ஆளு, கண்டிஷ னுக்கு மட்டும் உட்பட மாட்டேன்னு சொல்றது என்ன நியாயம்? கொள்ளுன்னா வாயைத் திறக்குறதும் லகான்னா மூடிக்கிறதும் பம்மாத்து இல்லியா? போலித் தனமில்லியா?’
“ஒரு கதையைக் காயப்படுத்தாம திருத்துற இலக்கிய அறிவு கூட இல்லாமலா, எடிட்டோரியல் போர்டு இருக் கும்? அதை அலட்சியமா எடுத்தெறியுறது அத்துமீறல் இல்லியா?”
“தனக்கு மட்டும் கூடுதலா- விசேஷச் சலுகை கேட் குறது பிரபுத்துவக் குணமில்லியா? மனித நேயம், சமத் துவம்னு வாய் கிழியப் பேசுற எழுத்தாளன் கிட்டே இந்தக் குணம் இருக்கலாமா?”
இதெல்லாம் இவன் உக்ரமாய்க் கேட்கிற கேள்விகள். அசலான மனக்கொதிப்போடு வெறுப்பாய்த் துப்புகிற வாதங்கள்! ஆனால், கேட்காமல் உள்ளுக்குள் நிரந்தரமாய் உறுத்துகிற கேள்வி ஒன்று உண்டு. உண்மையில் அதுதான், மற்ற கேள்விகளுக்கெல்லாம் மூலப் பிறப்பிடம்.
‘கதையில் கை வைக்கவேண்டாம்’ என்கிற இந்த வேண்டுகோள், சப்-எடிட்டர் தொழிலையே துச்சமாக நினைக்கிறது. மிச்ச மீதியாயுள்ள சொற்ப அதிகாரத்தையும் பிடுங்கிக் கொள்கிறது.
கதையை வாசித்து, திருத்த வேண்டிய பகுதிகளில் பென்சில் கோடுகளும், நீக்க வேண்டிய இடங்களில் சிவப்பு கோடுகளும் போட்டு ‘நோட்’ எழுதி அனுப்பி வைக்கிற சப்-எடிட்டர் அதிகாரத்தையே காலில் போட்டு நசுக்கி விடுகிறது.
“என் கதையை வாசித்து அபிப்பிராயம் சொல்கிற தகுதி கூட உனக்குக் கிடையாது” என்று இவனைப் பார்த்து எகத்தாளம் பண்ணுகிற வேண்டுகோள்.
இவனை மட்டுமல்ல – இவனது பணியையும் சேர்த்து சிறுமைப்படுத்துகிற திமிர்த்தனம். சக மனிதர்களில் ஒரு வனான சப்-எடிட்டரை நம்பாமல்- மதிக்காமல் அலட் சியம் செய்கிற குரூரம்.
நினைக்க நினைக்க அவனுள் நெருப்பின் ஜ்வாலைகள். காலையிலிருந்தே தளதளத்துக்கொண்டிருந்த தகிப்பு. யாரையாவது கடித்துக் குதற வேண்டுமென்று துடியாய்த் துடித்த வெறி. வடிகாலற்ற உள் குமைச்சலின் அடர்த்தி யான சீற்றம்.
கவரைப் பார்த்தான். பிரித்து நம்பர் போடாமலேயே குப்பையில் ஒழித்துக் கட்டிவிட்டால் என்ன? பிறரை மதிக்காத இவன் கதையை மட்டும் நான் ஏன் பொருட் படுத்தணும்? சப்-எடிட்டரைத் தூக்கியெறிகிற இந்த எழுத் தாளனை- நாம் தூக்கியெறிந்து விட வேண்டியது தான்…
எதிர்வினையாற்ற துடித்த மனத்துடிப்பு கையில் இறங்க- இதைக் காணாமலாக்குவதன் மூலமே தனது அதிகாரத்தை தனது இருப்பை- இருப்பின் அர்த்தத்தை தானே உணர முடியும் என்ற நினைப்போடு டேபிளுக்கடியில் உள்ள கூடையில் போடப் போனவனுக்குள், ஒரு சிறு தயக்கம். ஒரு சின்ன நெருடலான நப்பாசை.
பிரித்துப் பார்த்து விட்டு… கிழித்துப் போட்டால் என்ன… மேலோட்டமாய் ஒரு பார்வை மேய்ந்துவிட்டு, காணாமல் ஆக்கிவிட வேண்டியதுதான்.
பிரித்தான். நாலாய் மடித்த மடிப்புகள் விரிய மறுத்து அடம்பிடிக்கின்றன. கதையின் இணைப்பாய் ஒரு கடிதம். அதே வேண்டுகோள். ‘கதையில் கை வைக்க வேண்டாம். என்கிற பணிவான வேண்டுதல். ‘பிரசுரிக்க இயலாவிட் டால் திரும்பி அனுப்பிவிடுங்கள்’ என்கிற திமிர்த்தனம்.
‘ச்சே’ என்கிற வெறுப்போடு கடிதத்தைப் புரட்டி விட்டுப் பார்த்தால்… கதையின் தலைப்பு: ‘அர்த்தம்.’
கதையின் முதல் வாக்கியமே அவன் ஆத்மாவுக்குள் அதிர்வோடு இறங்கிற்று. அவனைச் சுண்டியிழுத்து வசீகரித்து உள் இழுத்தது.
“சங்கடத்தில் மாட்டிக் கொண்ட சப்-எடிட்டர் சங்கர நாராயணன் மீள வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தார்.”
படிக்கப் படிக்க இவனுள் அலை மோதுகிற பரவசம். அள்ளி இழுத்துக் கொண்டு பாய்கிற மகிழ்ச்சிப் பிரவாகம்.
இவனது மனசையே- உணர்வையே- ஒத்தியெடுத்த மாதிரியான கதை. திரைக்குப் பின்னால், முகம் மறைத்துக் கொண்டு புதிய புதிய எழுத்தாளர்களைப் பிரபலப் படுத்துகிற நல்ல பண்பு. பிரதிபலன் கருதாத கர்ம சிந்தனை. வார்த்தைச் சிக்கனமில்லாத கதைகளை ‘எடிட்’ பண்ணுகிற கலையின் மூலம், சீவிச் சிங்காரித்து நேர்த்தியாக்கி விடுகிற சிருஷ்டியற்புதம்…
ராமச்சந்திரனுக்குள் உணர்வுப் பரபரப்பு. முகம் தெரியாத அந்த எழுத்தாளனின் கையை முத்தமிடணும் போல ஓர் உள் தீவிரம்.
இவனை மட்டுமல்ல – இவனது தொழிலை மட்டுமல்ல- அதன் ஆத்மாவையே, அதன் சகல அழகுகளோடு வார்த்தைப்படுத்தி மகிமைப்படுத்தியிருக்கிற கச்சிதம். அதையும் செயற்கையாகச் செய்யாமல், இயல்பு குன்றாத யதார்த்தமாய்…
அவனது விறைப்பு, சிடுசிடுப்பு, எல்லாம் இருந்த இடம் தெரியாமல், மாயமாய் மறைய… மனிதனை மனிதனாக மதிக்கிற மகத்துவத்தைத் தரிசித்த பரவசத்தில் அவன் திக்குமுக்காட…
எடிட்டர் ரூமிற்கு அக்கணமே அக்கதையை அனுப்ப விரும்பினான். பியூனுக்காகக் காத்திருக்கிற பொறுமை யில்லாமல் அவனே எழுந்தபோது –
அவன் அவனாகியிருந்தான்.
– ஆகஸ்ட் 1993, கல்கி.
– இலக்கியச் சிந்தனை பரிசுபெற்ற சிறுகதை.
– கணக்கு (சிறுகதைகள்), முதற்பதிப்பு: மார்ச் 1994, திருவரசு புத்தக நிலையம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
வளர்கவி
September 18, 2026
இந்திரா
நீர்வை பொன்னையன்
September 18, 2026
இடைவேளை
எஸ்.சங்கீதா
September 18, 2026
