அறுந்த கயிறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 2, 2026
பார்வையிட்டோர்: 100 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இளமையை அள்ளி வீசிக்கொண்டு பொன்னி அம்மாள் உள்ளே நுழைந்தாள். வானத்திலே வளைந்து வட்டமிடும் மாடப் புறாவை மனங்குளிரப் பார்த்து ஜோடிப்புற ஒன்றைத் துணைக் கனுப்பித் தன்னிடத்தில் இழுக்க எண்ணமிடும் புறாப் பிடிப்பவனைப் போலச் சோமசுந்தரம் அவளைப் பார்த்தார். கண்கள் அவள் உரு வத்தை இதயத்திற்கு இழுத்துச் சென்றன. மட்டரகமான காகி தத்தில் மனதை உருக்கும் ஓவியம் ஒன்றை எழுதி விட்டுக் காகி தத்தால் கைத்திறனின் எழில் மங்கிவிட்டதே எனக் கவலைப்படும் சித்திரக்காரன் நிலை போலானது அவர் மன நிலை! 

அவர் எதிர்பார்க்காத உருவம் எதிரே நின்றது. “மாமா” என்று மழலைமொழி பேசி மடியில் உட்கார்ந்து விளையாடிய சிறு பிள்ளை இன்று அவர் மஞ்சத்தில் உட்கார்ந்து மயக்க மொழிகள் பேசப்போகிறது. அவள் அவருக்கு இப்போது மனைவி. பிஞ்சுக் கைகளால் அவர் இலையில் இருந்த உணவை எடுத்துச் சாப்பிட்ட போது இருந்த இன்பத்தின் ருசிதான் அவரை அவளை மனைவீ யாக்கிக் கொள்ளத் தூண்டியது, அந்தக் கை வாழ்வில் துணை புரியப் போதுமான நிலையிலிருக்கிற்தா என்ற மனத்துடிப்பு அவரைத் திடுக்கிடச் செய்தது. 

ஆசையோடு தன் மாமன் தன்னை அழைத்து அன்புடன் அழைத்து பொன்னி அம்மாளுக்கு எப்பொழுதும் அவர் மேல் ஒரு தனி அன்பு இருந்தது. மாமன் வீட்டிற்குச் செல்வதென்றால் அலாதி இன்பம் உண்டாகும். அவர் வாங்கித்தரும் விளையாட்டுச் சாமான்களைக் கட்டிப் காப்பாள். வீட்டிற்குத் திரும்பிவிட்டால் அவரைப்பற்றி அடிக்கடி தன் தோழிகளிடம் சொல்லிச் சொல்லி மகிழ்வாள். அவரே தனக்கு மாலையிடப் போகிறார் எனத் தெரிந்த வுடன் சென்றுபோன நாட்களை மறுபடியும் வரவழைத்துக் கொஞ்சி விளையாட ஆரம்பித்தாள். 

திருமண நாளன்றுகூட அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. மாமா வீட்டில் செல்வக் குழந்தையாக விளையாடிய அந்த நினைவுகள் எல்லாம் அவளை வானத்தில் நீந்தவிட்டு வேடிக்கை பார்த்தன. அவர் முதுகின்மேல் ஏறிக் குதிரை சவாரி செய்த அந்தப் பழைய நிகழ்ச்சிகள் அவளைப் பரவசப்படுத்தின. “என்னமோம்மா, நீ பாக்கியம் செய்தவள். எங்கண்ணன் ஒன்னை ராஜாத்தி மாதிரி வச்சிருப்பார்” என்று அவள் தாய் தன் அண் ணனைப்பற்றிக் கூறியபொழுது முதல் முதலில் மேடை ஏறிப்பேசுந் தோழருக்கு வரவேற்பும் வாழ்த்தும் மலர் மாலையும் தொடர்ந்த காட்சிகளாகத் தோன்றினால் எப்படி இருக்குமோ அதே நிலையில் தான் அவளும் இருந்தாள். 

அன்றுதான் முதன் முதலில் அடைபட்ட வாழ்க்கையிலிருந்து விடுபட்டுத் தன் மாமனைத் தனிமையில் காணவந்தாள். ஒரு கையில் வெற்றிலைத் தட்டும் மறுகையில் பால் பாத்திரமும் முகத் தில் எப்போதுந் தோன்றாத வெட்கமும் அவளோடு துணைக்கு வந்திருந்தன. வழக்கப்படி கதவை மூடித் தாழிட்டுவிட்டார்கள். கழுத்தைச் சுற்றிக் கைகளைக் கோர்த்து காதைப் பிடித்துக் கிள்ளி “மாமா இன்னைக்குப் பொம்மை வாங்கித் தாரேன்னு சொன்னீங் களே ஏன் வாங்கிட்டு வரல்லே?” என்று கேட்ட காட்சி கண் ணெதிரே நின்று அவளைக் கைநீட்டி அழைத்தது. 

அவள் நெருங்கச் சோமசுந்தரத்தின் அங்கங்கள் சோர்வுற ஆரம்பித்தன. ராஜாமாதிரி ஒருவனுக்கு அவளைக் கொடுத்து ராணிமாதிரி வைத்திருக்கத் தன் தங்கையுடன் எத்தனையோ முறைகள் திட்டம் போட்டிருக்கிறார். இன்று அந்த ராஜா மாதிரி தன்னை நினைத்துக்கொள்ளக்கூட முடியாமல் தவித்தார். பெனாரஸ் புடவையும், மஞ்சள்பூசி அதைப் படவுரால் மெருகு கொடுத்த முகமுங்கொண்ட அந்த உருவம் குனிந்த தலை நிமிராமல் தன்னெதிரே வந்து கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்திலே அவள் தன் பக்கத்திலே அமர்ந்துவிடப் போகிறாளே என்ற அச்சம் அவருக்கு அவரை அறியாமல் ஏற்பட்டது. 

தன்னை உயிர் என மதித்து மாமன் “வா” என்றுகூட அழைக்கவில்லையே என்ற வருத்தத்தால், சோபை நிறைந்த அவள் முகத்தில் ஏக்கத்தின் சாயல் இடம்பெற்றது. ஒருவேளை யாருமே இல்லாமல் தான்மட்டும் தனியாக இருக்கிறோமோ என்ற சந்தேகம் தோன்றியது நிமிர்ந்து பார்த்தாள். அன்பின் ஓளியை எதிர் பார்த்துவந்த அவள் கண்கள் கட்டிலில் உட்கார்ந்திருந்த அந்த உருவத்தைப் பார்த்தன. அன்பு காட்சி அளித்தது. ஆனால் ஒளிமட்டும் இல்லை. 

காலம் மட்டும் தன் காரியத்திலேயே கண்ணாயிருந்தது. அவள் நின்றுகொண்டிருந்தாள். அவளுடைய மாமன் உட் கார்ந்து கொண்டிருந்தார். பத்துப்பேருக்கு மத்தியில்கூடக் கூச்சமோ வெட்கமோ துளிகூட இல்லாமல் பரிகாசம் செய்து பழக்கப்பட்ட அவர்களுக்கு அந்தத் தனிமையில் ஒருவரை ஒருவர் பார்க்கக்கூடத் துணிவேற்படவில்லை. சோமசுந்தரத்திற்கு எப் போதுமே அவளுடனிருப்பதில் வெட்கம் இருந்ததே இல்லை. பொன்னி அம்மாளுக்கு அதுவரையில் இருந்த வெட்கம் எங்கேயோ ஓடிவிட்டது. இருவரும் புதிதல்லவே, பின் உப சாரம் என்பது எப்படிக் குறுக்கே நிற்கமுடியும்? இருவரும் பார்த் துக்கொள்வதற்கு முன்னால் சகஜமான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று என்றுதான் எண்ணினார்கள். பார்த்த பிறகு ஏதோ புதிதாக, நடக்கக்கூடாததாகத் தோன்றிற்று. வீட்டில் இருந் தவர்கள் அத்தனைபேரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள். நிம்மதி சுற்றிலும் தன் முழு ஆட்சியையும் பூரணமாகச் செலுத் திற்று. கடிகாரத்தின் முட்கள் நகர்ந்துகொண்டே இருந்தன. 

காலையிலே அவளுடைய தோழி ஒருவிதமாகப் பார்த்துப் புன் சிரிப்போடு கண்ணைச் சிமிட்டியபோது கோபத்தோடு அவளைப் பார்த்தாள். மறுமுறையும் அவளுடைய விஷமம் நிறைந்த அந்தப் பார்வையை எதிர்பார்த்தது பொன்னி அம்மாளின் மனம். அன்று வீட்டிலுள்ளவர்கள் அத்தனைபேரும் இவளை விசேஷமாகக் கவனித்தார்கள். நாடகத்தில் கதாநாயகி வேஷம் போடு பவளுக்கு எப்படி மரியாதையும் புகழுரைகளும் “அட்வான்ஸா க’க் – கிடைக்குமோ அதேபோலத்தான் இவளிடம் எல்லோரும் அக்கரை காட்டினார்கள். அவள் தாய் “ஏம்மா இப்படி அலையறே? கொஞ்சம் படுத்துத் தூங்கேன்” என்று சொன்னபோது அவள் தாய் வார்த்தையைத் தட்ட முடியாமல் படுத்தாள். தூக்கம் என்ன அவ்வளவு விரையில் வருகிறேனென்கிறதா? வருந்தி வருந்தி அழைத்துப் பார்த்தாள். சாக்குப்போக்குக் காட்டி அது அவளிடமிருந்து தப்பித்துக்கொள்ளவே முயன்றது. கண்ணை மூடினாள். அவள் மாமா அன்பும் ஆதரவும் நிறைந்த பார்வை யோடு வந்து நின்றார். இவள் ஓடி அவர் கைகளைப்பிடித்து இழுத் தாள். இரட்டை மாட்டு வண்டியில் ஒரு மாடு மெள்ளப் பின் தங்கவே அடுத்தமாடும் வேகமாகப் போகமுடியாமல் தத்தளிப் பதைப் போலச் சின்னஞ் சிறு கால்களால் அளந்து அளந்து நடை போடும் இவளோடு அவள் மாமன் நடக்க முடியாமல் தவித்தார். இரண்டு கைகளாலும் அவளைத் தூக்கித் தன் கைகளில் ஏந்திக் கொஞ்சி முத்தங் கொடுத்தார். இவளும் “மாமா நாளைக்குப் பொம்மை கல்யாணம். நான், அடுத்த வீட்டு அக்கா எல்லாரும் சேர்ந்து பண்ணப்போகிறோம்; பணங்கொடு,” என்று கேட்டாள். ஆசையோடு ஒரு ரூபாயை எடுத்து அவர் அவள் கைகளில் வைத்தார். “நீங்க என்னாண்ணேன் சின்ன பிள்ளை கையிலே பணங் கொடுத்துக் கெட்ட பழக்கம் உண்டாக்குறீங்க” என்று அவள் தாய் அந்த ரூபாயைத் தட்டிப் பிடுங்கிக் கொண்டாள். ஏக்கம் நிறைந்த இவள் பார்வையும், கோபம் நிறைந்த இவள் அம்மாவின் பார்வையும்- பரிகாசம் நிறைந்த இவள் மாமாவின் பார்வையும் – அந்தக் காட்சி இவளுக்குப் பிடிக்கவே இல்லை. பிடிக்காத தொடர்கதையைச் சலித்துப் போய்ப் பாதியோடு படிக்காமல் விட்டுவிடுவதுபோல, இவள் விழிகளுக்கு மூடிபோட் டிருந்த அந்த இமைகளைத் திறந்துவிட்டாள். மாலையானதும் ஐயர் இவளிடத்திலே இதுவரையிலே இருந்த தோஷங்களை எல்லாம் என்னென்னவோ சொல்லி விரட்டினார். இரவு நெருங்க நெருங்க இவள் மனமும் சொன்னபடி கேட்க மறுத்தது, இரவும் வந்தது. இவளும் அந்த அறைக்குள்ளே நுழைந்தாள். 

“ஏம்மா வெட்கப்படுறே, இந்தா இந்தப் படுக்கையிலே வந்து படுத்துக்கோ” என்று சொல்லிக்கொண்டே சோமசுந்தரம். எழுந்து நின்றார். இவளுக்கு அந்தப் படுக்கை எப்போதும் போலத்தான் காட்சி அளித்தது. ஆனால் அதில்போய்ப் படுக்க மட்டும் மனம் வரவில்லை. மெள்ளக் கையைப் பிடித்து அழைத் துச்சென்று படுக்கையிலே படுக்கவைத்தார். அவருடைய அந்தக் கை சற்று நடுங்கிற்று. “ராத்திரி எல்லாம் முழிச்சா உடம்புக்கு ஆகாது, படுத்துத் தூங்கு” என்று சொல்லிவிட்டு அவர் பக்கத்திலிருந்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கண்களை மூடினார். 

சூரியன், சந்திரன், ராகு, கேது, சனி அத்தனை கிரகங்களும் அவர் முன்னாலே வந்து நின்றன, மங்கள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. எதிரே சில சுள்ளிகளைப் போட்டு ஐயர் எரித்துக்கொண்டிருந்தார். அரிசியும் மஞ்சளும் கலந்து வைக்கப் பட்ட தட்டு சுற்றிலும் இருப்பவர்களிடம் நீட்டப்பட்டது. ஒவ் வொருவரும் ஒரு பிடி எடுத்துக்கொண்டனர் அது முடிந்ததும் ஐயர் மஞ்சள் நனைக்கப்பட்ட கயிறைக் கையில் எடுத்து இவரிடங் கொடுத்தார். குனிந்து கொண்டிருந்த அந்தச் சிறிய தலையை யாரோ ஒரு பெண் பின்னாலிருந்து நிமிர்த்தினாள். “கெட்டி மேளம்,” “கெட்டி மேளம்” என்று எல்லாரும் கத்தினார்கள். ஏதோ ஒரு ராகத்தை அப்போதுதான் தொடங்கித் தன் கைத் திறமை அத்தனையும் காட்டிக்கொண்டிருந்த நாதஸ்வரக்காரன் அலுப்போடு நாதஸ்வரத்தைக் கீழே வைத்தான். மேளக்காரன் வேகமாகத் தட்டினான். அந்தக் கயிற்றை அவள் கழுத்தருகே கொண்டுபோனார் சோமசுந்தரம். கயிறு கையில் இல்லை. கூரான வாள் ஒன்று அவர் கையிலே மின்னிற்று. ஒரு கல்லின் மேல் அந்தத் தலை கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. கத்தியை ஓங்கினார், மறுநிமிடம் அந்தக் கத்தி அந்தச் சின்னஞ் சிறிய கழுத்தை…1 “ஐயோ பொன்னி” என்று அலறிக்கொண்டே விழித்துப் பார்த்தார். அவளும் திடுக்கிட்டு விழித்துப் பார்த் தாள். கொடுமையான உணர்ச்சியின் ரேகை அவளுடைய கண்களிலே காணப்பட்டது. கலவரமும் கலக்கமும் நிறைந்த பார்வையோடு தன்னைப் பார்த்த பொன்னியை மறு முறையும் கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தார். பொன்னி இன்னும் கன்னியாகத்தா னிருந்தாள்! இரண்டுபேரும் மறுபடியும் தலையைச் சாய்த்தார்கள். மணி மூன்று அடித்தது. பிறகு என்ன நடந்ததோ? இருவரும் அத்தனைநேரம் கண் விழித்திருப்பதற்கு உடல் நிலை இடங்கொடுக்கவில்லை! 

இவர் அறையைவிட்டு காலையில் வெளிவரும்போது, எல்லோ ருக்கும் ஒன்றும் புரியவில்லை. பொன்னியின் தம்பி யாருக்கோ ஏதோ ஒரு புத்தகத்தை உரக்கப் படித்துக்கொண்டிருந்தான். 

“பேடகன்ற அன்றிலைப்போல் மனைவி செத்தால் 
பெருங் கிழவன் காதல் செயப் பெண் கேட்கின்றான்.
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள் 
மணவாளன் இறந்தாற் பின் மணத்தல் தீதோ?” 

இந்த அடிகள் தெளிவாகவும் அழுத்தமாகவும் இவர் காது களில் விழுந்தன. ஆறு வருடங்களுக்கு முன்னால் தவறிவிட்ட தால் பழிக்கஞ்சித் தூக்குப்போட்டுக்கொண்ட இவருடைய தங்கை – பொன்னியின் சிற்றன்னை-உத்திரத்திலே கட்டப்பட்ட கயிறு கழுத்தை நெருக்கிக்கொண்டிருக்கக் காட்சி அளித்தாள்’ அந்தக் கயிற்றைவிட அதிகமாகவே பொன்னியின் கழுத்திலே இவர் கட்டிய கயிறு இறுக்கிப் பிடித்து அவளைச் சித்திரவதை செய்து கொண்டிருந்ததுபோல் இவருக்குத் தோன்றியது. வேக மாக உள்ளே நுழைந்தார். பொன்னி கழுத்திலிருந்த அந்தக் கயிற்றை வெடுக்கெனப் பிடித்து இழுத்தறுத்தார். ‘இனிமேல் நீ என் மகளம்மா, நான் தான் தவறு செஞ்சிட்டேன்னா, நீ ஏனம்மா என்னைக் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு சொல்லக்கூடாது?’. என்று அமைதியான குரலிலே அழுத்தமாகக் கேட்டார். அந்த அணைப்பு பொன்னியின் உடலிலே புதுவிதமான உணர்ச்சியை உண்டாக்கியது. பேசாமல் மாமன் மார்பில் தன் தலையைவைத்து அன்போடு அவர் முகத்தைப் பார்த்தாள். அவர் கண்களிலிருந்து ஒரு துளிக்கண்ணீர் இவள் கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துணைக்கழைத்துக்கொண்டு கீழே விழுந்தது. சுற்றிலும் நின்றவர் கள் ஆத்திரமும் ஆச்சரியமும் நிறைந்த பார்வையோடு இந்தக் காட்சியை கவனித்துக்கொண்டிருந்தார்கள். அறுந்துபோன அந்தக் கயிறு கீழே விழுந்து கிடந்தது! 

– நிலவும் தாமரையும், முதற் பதிப்பு: 1961, கே.ஆர்.நாராயணன் வெளியீடு, சென்னை.

டி.கே.சீனிவாசன் தி.கோ.சீனிவாசன் (டி.கே. சீனிவாசன் - Tamil Wiki) தமிழ்நாட்டின் ஒரு முன்னணி அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாசிரியர் மற்றும் சிறந்த பேச்சாளர் ஆவார். திராவிட இயக்கத்தில் இவரது ஆழமான சிந்தனைகள் மற்றும் பங்களிப்பிற்காக இவர் "தத்துவ மேதை" என்றும், பேரறிஞர் அண்ணாவால் "சின்ன அண்ணா" என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். முக்கிய குறிப்புகள்: பிறப்பு: நவம்பர் 14, 1922 அன்று கோதண்டபாணி - அலமேலு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அரசியல் பயணம்: தொடக்கத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *