நாடகம் போட்டுப்பார்
கதையாசிரியர்: மெரீனா
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: October 12, 2026
பார்வையிட்டோர்: 195
(2010ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6

நாடக ரிகர்சல்கள் எப்போதுமே ஆமை வேகத்தில் தொடங்கி, அரங்கேற்ற நாள் நெருங்க நெருங்க ‘பிக்கப்’ ஆகி, சூடு பிடித்துவிடும். டென்ஷனில் அநேகமாக எல்லோருக்கும் பய ஜுரமே கண்டுவிடும். பரீட்சைக்கு முதல் நாள் புத்தகமும் கையுமாகத் தவிக்கும் மாணவன் போல், நடிகர்கள் ஸ்கிரிப்டும் கையுமாகத் தவமிருப்பார்கள். டைரக்டர் இவர்களை வேலை வாங்கியது போக, இவர்கள் டைரக்டரை வேலை வாங்குவார்கள்! ‘சார்,’ மாடி ஸீனை இன்னொரு தரம் பார்த்துடலாமா?’, ‘க்ளைமாக்ஸ் ஸீனை இன்னும் நல்லா செட்டப் பண்ணலாம் வாங்க’, ‘பதினாறாவது ஸீன் ரொம்பவும் தொய்யுது. ‘டைட்’ பண்ண முடியா பாருங்க…’ என்று ஆளுக்கு ஆள் விரட்டுவார்கள். டைரக்டருக்கு எரிச்சலே வராது. ஆர்ட்டிஸ்ட்ஸ் இவ்வளவு கோவாப்ரேட் பண்றாங்களே’ என்று பூரித்துப் போய் விடுவார்.
டைரக்டர் கல்கத்தா குமாரும் (ராம்குமார்தான்) இப்படித்தான் சந்தோஷத்தில் பூரித்துப் போனான்.
“பார்த்தீங்களா, எல்லாரும் நேரத்துக்கு வந்ததாலே ரெண்டு நாளா நிறைய ஸீன்ஸ் பார்க்க முடிஞ்சுது. ஒருத்தர் வரலேன்னாகூட ‘டம்மி’ ஆளைப் போட்டு ரிகர்சல் நடத்தினா, எனக்கு ஒரு ‘டோட்டல் இம்ப்ரஷன்’ கிடைக்க மாட்டேங்குது. நாளைக்கு இன்டர்வெல் வரைக்கும் ஒரு ‘ரன் த்ரூ’ பார்த்துடலாம்னு இருக்கேன் (காட்சிகளைத் தொடர்ச்சியாகப் பார்ப்பது.) எல்லாரும் டயத்துக்கு வந்துடுங்க” என்று சொல்லியனுப்பினான்.
மறுநாள்… யார் கண் பட்டதோ, நினைத்தபடி ராம்குமாரால் ‘ரன் த்ரூ’ பார்க்க முடியவில்லை. சாரதியின் சைக்கிளை ஆட்டோ ஒன்று இடிக்க அவன் காலில், கட்டுப் போட்டுக் கொண்டு வீட்டில் படுத்துக்கொண்டு விட்டான். சப்பாணிக்கு ஆபீஸில் ஓவர் டைம்!
“இனாகுரேஷனுக்கு இன்னும் ஒரு வாரம்கூட இல்லே. இப்படிப் பண்ணித் தொலைக்கறாங்களே… சே! ஒத்துழைப்பே இல்லை… இவங்களை நம்பி ‘டேட்’ குடுத்தேன் பார், என்னைச் செருப்பாலே அடிச்சுக்கணும்” என்று டென்ஷனாகிச் சத்தம் போட்டான் ராம்குமார். நேற்று ஒரு மூடு,இன்று வேறொரு மூடு. உண்மையிலேயே அவன் ஒரு டைரக்டர் ஆகிவிட்டான்!
மறுநாள் முரளி தன் காதில் விழுந்த செய்தியை ராம்குமாரின் காதில் போட்டான். “சப்பாணி, ராமுடுவின் புது நாடகத்திலே ஒரு ரோல் செய்யறானாம். நேத்து அவன் அந்த ரிகர்சலுக்குப் போயிருந்ததா கேள்விப்பட்டேன். ஆபீஸ் ஓவர் டைம் பொய்!”
ராம்குமார் ‘அப்செட்’ ஆனான். “நீதானே அவனை இங்கே இழுத்து விட்டே. உன்னை நம்பிப் பெரிய ரோலைக் குடுத்தேன். இப்படிக் காலை வார்றானே” என்று தலையில் கையை வைத்துக் கொண்டான்.
சாயந்திரம் ரிகர்சலில் சப்பாணியை ராம்குமார் நேராகவே கேட்டபோது, ‘அதைப் பத்தி நீங்க ஏன் கவலைப்படறீங்க? அந்த ப்ளே ஜூலைலதான் இனாகுரேஷன். உங்க ப்ளேயைச் சொன்னபடி நான் செஞ்சு குடுத்துடுவேன். கவலைப்படாதீங்க” என்றான் கூலாக.
“அப்புறம் ரெண்டு பேர் டேட்ஸும் கிளாஷ் ஆச்சுன்னா?” ஆப்செட் ஆனான் ராம்குமார்.
“அப்போ அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம், கவலைப்படாதீங்க!”
‘கவலைப்படாதீங்க, கவலைப்படாதீங்க’ன்னு சப்பாணி சொல்லச் சொல்ல ராம்குமார் அதிகமாகக் கவலைப்பட்டான்!
கடைசி வாரத்தில், ரிகர்சல் நடந்து முடிந்ததும் தினமும் ‘போஸ்ட்மார்ட்டம்’ நடைபெறும். முக்கியமாக மூன்று நான்கு நபர்கள் தெருமுனையிலோ, பஸ் ஸ்டாண்டிலோ நின்றுகொண்டு ஓயாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். அபிப்பிராயங்கள், ஆலோசனைகள், புகார்கள், எச்சரிக்கை – பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
“நாடகம் நல்லா ‘ஷேப்’ ஆயிருக்கு. அங்கங்கே கொஞ்சம் ‘டச்சுப்’ பண்ணி, நாலஞ்சு டக்கர் ஜோக்ஸா ஒட்டினா, அள்ளிக்கிட்டுப் போகும்” என்று சப்பாணி கூறினான். இன்னும் இரண்டு, மூன்று காட்சிகளில் தான் வரவேண்டும் என்று உள்ளூர அவனுக்கு ஓர் ஆசை!
“சவிதா மேடம் வாய்ஸ் போறாது. ன்னும் போஸ்டர் பேசணும்… கையைக் கட்டிக்கிட்டே பேசறாங்க… அதை கரெக்ட் பண்ணுங்க… இல்லேன்னா ஸ்டேஜ்லேயும் அந்தப் பழக்கம் வந்துடும்” என்று கூறிய பாலு தன் ஆப்சர்வேஷனை தானே மெச்சிக் கொண்டான்.
“டிராமாவுக்குப் புதுசு பாவம்… கொஞ்சம் நெர்வஸா இருக்காங்க… பாங்க்ல வந்து பாரு, அவங்க வாய்ஸை..” என்று கூறிய முரளி, குமார், இந்த மூர்த்தி எல்லார் உசிரையும் வாங்கறார்… ‘காட்ச் வேர்டே’ சரியா குடுக்க மாட்டேங்கிறார்…” என்று புகார் கூறினான்.
தன் வசனத்திலுள்ள கடைசி வார்த்தையைச் சரியாகச் சொன்னால்தான் அடுத்தவர் தன் வசனத்தைத் தொடர முடியும். அதிலும் ‘காட்ச் வேர்டு’ சரியாகக் கொடுக்கா விட்டால், மேடைக்குப் புதியவர்கள் திண்டாடிப் போவார்கள்.
“அந்த ஆளு கடைசி வார்த்தையை மட்டுமா மாத்தறார்… வசனத்தையே முன்னே பின்னே புரட்டிப் போட்டு, எதிராளியைக் குழப்பிடறார். இஷ்டத்துக்குப் பேசறார்” – புகாரில் பாலுவும் சேர்ந்து கொண்டான்.
“நான் மூர்த்திகிட்டே அஞ்சாறு தரம் சொல்லிட்டேன். அவர் இப்படியே அழும்பு பண்ணிக்கிட்டிருந்தார்னா, அவரை ஒதுங்கச் சொல்லிட்டு பேசாம நான் மேடை ஏறிடலாம்னு நினைச்சுக்கிட்டிருக்கேன்” என்று கூறினான் ராம்குமார். பிறகு திடீரென்று ஞாபகம் வந்தவனாக, “இன்னிக்கு வெளி ஆசாமி ஒருத்தர் ரிகர்சல்ல உட்கார்ந்திக்கிட்டிருந்தாரே, அவர் யாரு?” என்று கேட்டான்.
“உங்களுக்குத் தெரியாதா, அவன் தான் சோனி…”
“இன்னொரு ட்ரூப் நடத்தறவன். நாம கூப்பிடாம எதுக்கு நம்ம ரிகர்சலுக்கு வரான்?”
இங்கே கிடைக்கிற நல்ல ஜோக்ஸை அமுக்கிக்கிட்டுப் போய், அவன் ப்ளேல நுழைச்சுக்கத்தான்… இனிமே அவன் இங்கே வரக்கூடாதுன்னு சொல்லிடுங்க” என்றான் சப்பாணி.
“அன்னிக்குக்கூட ஒரு நாள் வந்திருந்தான். நீங்கதான் வரச் சொல்லியிருக்கீங்கன்னு நினைச்சேன்… ரெண்டு, மூன்று சபா செகரட்டரிங்ககிட்டே போய் ‘காமெடியே இல்லை.. ரொம்ப சீரியஸ் சப்ஜெக்ட்… இந்த ப்ளே போணி ஆவாவது’ன்னு சொன்னானாம்…”
“போணி ஆவாதுன்னா என்ன அர்த்தம்?” – ராம்குமார் கேட்டான்.
“ஊத்திக்குமாம்!”
ராம்குமாருக்கு அதுவும் புரியாமல் போகவே, பாலு விளக்கினான்.
“ஒரு நாடகம் நல்லா வந்திருச்சுன்னா, சோனி வயிறு எரிஞ்சு சாவான். நாளைக்கு ரிகர்சலுக்கு வரட்டும், சொல்றேன்…” என்று முரளி கூற அன்றைய போஸ்ட்மார்ட்டம் ஒரு வழியாக முடிந்தது.
– தொடரும்…
– நாடகம் போட்டுப் பார், முதற் பதிப்பு: 2010, அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
பதவிப் பரிதாபங்கள்…
காரை ஆடலரசன்
October 12, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 12, 2026
நாடகம் போட்டுப்பார்
மெரீனா
October 9, 2026