நாடகம் போட்டுப்பார்
கதையாசிரியர்: மெரீனா
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: October 9, 2026
பார்வையிட்டோர்: 164
(2010ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5

முதல் ரிகர்சலிலேயே சாமிஜி ஒரு சர்வாதிகாரியைப் போல், ‘அத்தனை அதிகாரங்களும் என் கைக்குள் அடக்கம்… நான் வைத்ததுதான் சட்டம்’ என்று சவால்விட்டது ராம்குமாரின் சுயமரியாதையையும், சுய கௌரவத்தையும் புண்படுத்தியது. மறு சிந்தனையின்றி அக்கணமே ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.
‘இந்த ரிகர்சல் இதோடு முடிகிறது. ஏதாவது சேதி இருந்தால் சொல்லி அனுப்புகிறேன்’ என்று சுருக்கமாகப் பிரகடனம் செய்துவிட்டு, சட்டென்று எழுந்து விர்ரென்று வெளியேறிவிட்டான். சாமிஜி அருகிலிருந்த ஒன்பது ஸீன் ஸ்கிரிப்டைக் கையிலெடுத்துக் கொண்டு, யாரிடமும் எதுவும் பேசாமல் “வர்றியா பேபி?” என்று சந்தியாதேவியைச் செல்லப் பெயரிட்டு அழைத்தான். “கன்வீன்ஸ் யார் குடுப்பாங்க?” என்று முத்தம்மா கேட்க. ‘நான் தரேன்… வாங்கம்மா” என்று கூறி தாய், மகள் இருவரையும் அழைத்துச் சென்றான்.
பின்னர், ஆளுக்கொரு ‘காமெண்ட்’ அடித்துக் கொண்டு ஒவ்வொருவராகக் கலைந்து சென்றனர்.
முதல் காமெடி நாடகத்தின் தொடக்கமே டிராஜிடியாக முடிந்தாலும், ராம்குமார் மனம் தளர்ந்து விடவில்லை. வீடு கட்டுவதில் எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும் வீடு கட்டாமலா இருக்கிறார்கள்? கல்யாணம் நடத்துவதில் எத்தனை தடங்கல்கள் வந்தாலும் கல்யாணம் பண்ணாமலா இருக்கிறார்கள்? நாடகமும் அப்படித்தான்!
ஒரு வாரத்துக்குள், வி.கே.-யின் ‘நான் ஒரு முட்டாளுங்க’ நாடகத்தின் ஸ்கிரிப்டை வாங்கிப் போடுவது என்று ராம்குமாரும் முரளியும் முடிவு செய்து, அதற்குப் பூஜை போடுவதில் பரபரப்பானார்கள். இதில் காமெடியுடன் கொஞ்சம் கதையும், ஓரளவு கருத்தும் இருந்தது ராம்குமாருக்குப் பிடித்திருந்தது. கன்னடப் படவுலகில் ‘பிஸி’யாக இருந்த வி.கே., யாருக்காகவோ – எப்பவோ எழுதி வைத்திருந்த ஸ்கிரிப்டை ராம்குமாரிடம் கொடுத்து, அட்வான்ஸைப் பெற்றுக் கொண்டு, “என்ன வேணுமானாலும், செஞ்சுக்குங்க” என்று கூறிவிட்டு, ‘ஹம்பி அவுட்டோர் ஷூட்டிங்குக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டான்.
இந்த நாடகத்தில் ஒரே ஒரு லேடி காரெக்டர் இருந்தது முரளிக்கு மகிழ்ச்சி அளித்தது. அதற்கு ராம்குமாரிடம் மூன்று காரணங்களைக் கூறினான்: “இப்பல்லாம் லேடி ஆர்ட்டிஸ்டுங்க கிடைக்கிறது கஷ்டமாயிருக்கு. ரெண்டு, மூணு லேடீஸ் இருந்தா செலவு அதிகம். ஒரு லேடியா இருந்தா செலவு குறைச்சல். அதனாலே ரெம்யூனரேஷனைக் குறைச்சுச் சொன்னா, சபா செக்ரெட்டரி சந்தோஷப்படுவார். ப்ளே அப்படி இப்படி இருந்தாலும் பரவாயில்லை. லேடி ஆர்ட்டிஸ்ட்ஸ் குறைஞ்சா நமக்கும் ப்ராப்ளம் குறைச்சல் எத்தனையோ விதத்திலே…”
“நல்ல வேளை, சந்தியாதேவி – முத்தம்மாகிட்டே நாம் மாட்டிக்காம தப்பிச்சுக்கிட்டோம்…” என்றான் ராம்குமார்.
“பாவம், இப்ப ராமுடு மாட்டிக்கிட்டான். சாமிஜி நமக்கு எழுதின ஸ்கிரிப்டை அவன் தலையிலே கட்டிட்டானாம். சந்தியாதேவியையும் அங்கே சேர்த்து விட்டுட்டானாம்…”
“அவங்க எக்கேடு கெட்டுப் போகட்டும். நமக்கு இப்ப ஒரு லேடி ஆர்ட்டிஸ்ட்டைத் தேடிப் பிடிச்சுக் கொண்டு வா…”
“ஏன்… சுபத்ரா இருக்காங்களே?”
“ரஞ்சிதா ரோலுக்கு அவங்க ரொம்ப ஓல்ட். ங்கிலீஷ். உச்சரிப்பும் ரொம்ப மோசமா இருக்கு… மாடர்ன் கேர்ள் ரோலுக்கு லாயக்கில்லை…”
“அப்படின்னா, நம்ம பாங்க் சேவிங்ஸ் சவிதாவைக் கேட்டுப் பார்க்கட்டுமா? ஆக்ட் பண்ணணும்னு ஆசையா இருக்குதுன்னு ரெண்டு மூணு தரம் என்கிட்டே சொல்லிட்டா…”
“வெரிகுட்! நல்ல சாய்ஸ். ட்ரை பண்ணிப் பாரு…”
அப்போது அப்பாராவ் அங்கே வந்தார். டிஸ்கஷனில் அவரும் கலந்து கொண்டார். “ஸீன் செட், லைட்டிங் எல்லாம் இப்பவே அரேஞ்ச் பண்ணிட்டா நல்லது ராம்குமார்.”
“சூளைமேடு பாபுவைக் கேட்டுப் பார்க்கலாம். நல்ல ஆளு… மூஞ்சியைச் சுளிக்காம, நமக்கு வேண்டிய மாதிரி செஞ்சுக் குடுப்பார்…”
“சோனிக்கு செட் போடறாரே, அவர்தானே… கேட்டுட்டேன். மொத்தம் ஐந்நூறு ரூபா கேக்கறார்…”
“ரொம்ப அதிகமாயிருக்கே…”
“நீ ஏகப்பட்ட ஸ்பாட் லைட்ஸ் கேக்கறியே… மூணுதான் கொடுப்பாராம். எக்ஸ்ட்ரா ஒவ்வொண்ணுக்கும் ருபது ரூபா வேணுமாம்… வாடகைக்கு வாங்கிக்கிட்டு வரணுமாம்…”
“நான்தான் வழக்கமான டாப் லைட்ஸ், ஆலிஜன் ஒண்ணும் வேணாங்கறேனே…”
“அதையும் சொன்னேன். ஸ்டேஜ் பூரா ஸ்பாட்ஸ் ஃபிக்ஸ் பண்றது பேஜார் வேலையாம்… ரெண்டு ஆளுங்க எக்ஸ்ட்ராவா எம்ப்ளாய் பண்ணணுமாம். கூலி,பேட்டா எல்லாம் எகிறிடுமாம்…”
“என்னப்பா, மெட்ராஸ்ல டெக்கினீஷியன்ஸ் இப்படியிருக்காங்க! நான் புது மாதிரி தியேட்டர் பண்ணணும்னு பார்க்கறேன். முடியாது போலிருக்கே… நாம டெக்னிகலா ரொம்ப மாறணும். மாடிப்படி செட்டும், கிழிஞ்ச சோபாவும், ஒடிஞ்ச நாற்காலியும், புராணகாலப் படுதாவும் மொதல்லே ஒழியணும். மைக் இருக்கிற இடம் தெரியாம செய்யணும்…ஸாஃப்ட் லைட்டிங் குடுக்கணும்…”
“எக்ஸ்கியூஸ்மி ராம்குமார்… இதையெல்லாம் மாத்திட்டா போதும்னு நினைக்கிறீங்களா? சப்ஜெக்ட் நல்லா இருக்க வேணாமா? நடிப்பு வேணாமா? ஸ்பாட்டைப் போட்டு, பாதி ஸ்டேஜை இருட்டாக்கிட்டா போதுமா? ஃபர்னீச்சருக்குப் பதிலா பிளாட்பாரத்தைப் போட்டு நீலத் துணியாலே போர்த்திட்டா ஆயிடுச்சா? எல்லாருமே இப்படிச் செய்ய ஆரம்பிச்சுட்டா, அது மட்டும் ஆடியன்ஸுக்கு போர் அடிக்காதா?” என்று குறுக்கிட்டார் அப்பாராவ்.
“எல்லாத்துக்கும் அடிப்படை, நல்ல ஸ்கிரிப்டும் நடிப்பும் தாங்கறதை நான் ஒப்புக்கறேன். சப்ஜெக்ட்டுக்குத் தகுந்த மாதிரி ஸ்டேஜை மாத்தணும். எல்லாரும் ஒரே மாதிரி செய்யணும்னு நான் சொல்லலே… புதுசு புதுசா திங்க் பண்ணணும். கிரியேட்டிவ் தியேட்டரா இருக்கணும்.” சீரியஸ் டிஸ்கஷனை முரளி மாற்றினான். பூஜைக்கு நாள் குறிக்கப்பட்டது.
பூஜைக்கு எல்லோரும் குறித்த நேரத்தில் வந்துவிட்டார்கள். சவிதா தன் அண்ணன் துணையுடன் வந்திருந்தாள். டிபன், காபி முடிந்த பிறகு அனைவரும் சுற்றி அமர்ந்து, முதல் காட்சியிலிருந்து தொடங்கித் தங்கள் தங்கள் வசனங்களைப் படித்து முடித்தனர். அந்த இரண்டு மணி ே நேரமும் ராம்குமார் கண்களை மூடியபடி கேட்டுக் கொண்டிருந்தான். கடைசியில் சிலருடைய தவறுகளைச் சுட்டிக்காட்டினான். சவிதா ‘வேளை’ என்பதை ‘வேலை’ என்றும் ‘வந்தார்கள்’ என்பதை ‘வந்தார்கல்’ என்றும் உச்சரித்ததைத் திருத்தினான். வின்சென்ட் ‘தண்ணி’யை ‘தன்னி’ என்றும், ‘வீணை’யை ‘வீனை’ என்றும் உ உச்சரித் ததைக் குறிப்பிட்டு ‘ண’வுக்கும் ‘ன’வுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒரு முறைக்கு இருமுறையாக நாக்கை மடித்து, டி.வி. டீச்சர் நன்னன் பாணியில் டெமான்ஸ்ட்ரேட் செய்து காட்டினான்.
தொடர்ந்து பத்து நாட்கள் ரிகர்சல் நடந்தது. பதினோராவது நாள்- இன்டர்வெல் வரைக்கும் எல்லோரும் ஸ்கிரிப்டைப் பார்க்காமல் வசனம் பேசவேண்டும் என்று ராம்குமார் கூறியிருந்தான். வசனங்களை ஒழுங்காகப் பாடம் பண்ணாமல், ஐடியாவை மட்டும் வைத்துக் கொண்டு இஷ்டத்துக்கு டயலாக் பேசிப் பழக்கப்பட்ட எல்.ஐ.சி. சிக்கி ”சார்… இதுவரைக்கும் நான் ஸ்டேஜ்ல ஒருமாதிரி பழகிட்டேன். என்னாலே ரொம்ப ஞாபகமெல்லாம் வெச்சுக்க முடியாது. வேற யாரையாவது பார்த்துக்குங்க…” என்று கூறி, நாகரிகமாக விலகிக் கொண்டான்.
– தொடரும்…
– நாடகம் போட்டுப் பார், முதற் பதிப்பு: 2010, அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
கருப்பசாமி தர்மத்தின் சலங்கை
எஸ்.ஜி.மணிகண்டன்
October 9, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 9, 2026
நாடகம் போட்டுப்பார்
மெரீனா
October 6, 2026