இரண்டு கடவுள் வாழும் வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 12, 2026
பார்வையிட்டோர்: 240 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

அவள் முதலில் சிறிய கோட்டினை வரைந்தாள். பின்பு அதன் அருகில் மேலும் சிறிய கோட்டினை வரைந்து, முதலில் வரைந்த சிறிய கோட்டினை பெரிதாக்கினாள். எடுத்து உற்றுப் பார்த்தாள். கண்ணீர் வழியச் சிரித்தாள். பின் ஆவேசமாக மீண்டும் சிறிய கோடு, பின் பெரிய கோடு, மாற்றி மாற்றி வரைந்து, வரைந்து அந்த வெண்ணிறத்தாளை கோடுகளின் கூடாரமாக்கினாள். அதன் பின் கைகள் நடுங்க முதல் கோட்டில் தன் கணவனின் பெயரை நெளித்து நெளித்து எழுதினாள். அது கிழக்கிலிருந்து மேற்காக தலை சாய்த்து நீண்டது.

அதன் மேல் தன் மகளின் பெயரை எழுதினாள் குட்டிப் பெயர் ராணி, குட்டி எழுத்துகள் எழுதிய பின் முத்தமிட்டாள். பின் தன் மகனின் பெயரை எழுதி வெறித்தபடி பார்த்திருந்தாள்.

“இந்த உலகில் அவளுக்குக் கடவுள் என்றால் ராணிதான்”

பேரன், பேத்தி என ஒவ்வொரு கோட்டிலும் தன் நினைவிற்கு தக்கபடி முன் பின்னாக, உறவுகளின் அக்கம் பக்கத்து வீடுகளின் பெயர்களை, மனம் போன போக்கில் எழுதி எழுதி தனது ஆற்றாமையை நிரப்பினாள். பேப்பர் முழுவதும் பெயர்கள் மட்டுமே, வெறித்த வண்ணம் பார்த்து கொண்டே இருந்தாள். பின் எழுந்து கதவைப் பூட்டினாள். விடுவிடுவென்று நிலம் அதிர, தெருக்கள் எப்போதும் போல விசித்திரமாக பார்க்க, சேலையின் முந்தானைக்குள் பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு, தனது மருண்ட விழிகளை நாலாபக்கமும் சுழற்றிக் கொண்டே கடை வீதிக்கு நடந்தாள். யாரோ பின்தொடர்ந்து வருவது போன்ற அச்சம் எழ திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள். வீதிதோறும் கருப்பு உருவங்கள் அலைந்து திரிவதாய் மனதிற்குள் விஸ்வரூபம் எடுக்க, திட்டிக் கொண்டே நடந்தாள். விடுவிடு வென்ற வேகம் எங்கும் நிற்கவில்லை. வீட்டிலிருந்து கடை வீதி நான்கு பர்லாங்

தூரமிருந்தது, மிருகங்கள் துரத்தி ஓடும் மானின் மருண்ட விழியோடு சுற்றிச் சுற்றி பார்த்த படி மருகி மருகி நடந்தாள். பிறந்த ஊர் தான், தெரிந்த மனிதர்கள்தான், யாரும் இவளோடு பேசவில்லை. இவளுக்கும் யாரோடும் பேசத் தோன்றவில்லை. ஆனாலும் யாருக்கும் தெரியாத வண்ணம் போய் விட வேண்டும் என்ற ரகசிய பாவனையுடன், வீதியில் வேர்க்க விறுவிறுக்க அலை பாய்ந்து போய்க் கொண்டிருந்தாள். அவள் வழக்கமாக எடுக்கும் ஜெராக்ஸ் கடை முன் நின்றாள். கடை இன்னும் திறக்கவில்லை. கடைக் காரனை திட்டிக் கொண்டே நாலு கடை தள்ளி இருக்கும் ஜெராக்ஸ் கடை நோக்கி நகர்ந்தாள். கடை திறந்து இருந்தது. ஆனால் ஜெராக்ஸ் எடுக்கவில்லை, தெரிந்த உறவுக்காரப் பெண் அங்கிருந்தாள் ஆகவே திரும்பி விட்டாள். மீண்டும் முதல் கடைக்கே வந்தாள். ஜெராக்ஸ் கடைக்காரன் அப்போதுதான் கதவைத் திறந்து கொண்டிருந்தான். மீண்டும் கடையை சுற்றி பார்த்துக் கொண்டாள். தம்பி கொஞ்சம் சீக்கிரமா ஜெராக்ஸ் எடுப்பா என்றாள், அவன் எத்தனக்கா என்றான். முப்பது என்றாள், “எதையும் படிச்சு பார்க்காம எடுத்துக் கொடு தம்பி” என்றாள், “அவன் சலித்து கொண்டே பாக்காம எப்படி எடுக்கிறது” என்றான், “முக்கியமான விஷயமப்பா கோவிச்சுகிறாத” என்றாள், அவன் மனசுக்குள் இதுவரை முப்பது தடவை எடுத்துருச்சி, என்ன தான்செய்யுதோ தெரியலை, இதுல ரகசியம் வேற, கோணல் மாணலான எழுத்தை எடுத்து, என்னதான் செய்யுது என்று எடுத்துக் கொடுத்தான்.

அவனுக்கென்ன காசுதான, பாக்காத மாதிரி பாத்துக் கொண்டே எடுத்துக் கொடுத்தான். கவனமாக வாங்கி கொண்டு, காசை கொடுத்து விட்டு, மீண்டும் முந்தானைக்குள் மறைத்துக் கொண்டே, சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு வீடு திரும்பினாள்.

“என்னா தம்பி மீனா கை நிறைய பேப்பரோடு போறா” குரல் கேட்டு நிமிர்ந்தான்…

வழக்கமான வாடிக்கையாளர் தான்.

“என்னக்கா செய்றது எதையோ எழுதி வந்து தினமும் ஜெராக்ஸ் எடுத்து போகுது அதையும் ரகசியமா எடுத்து தரச் சொல்லுது எப்படிக்கா ஜெராக்ஸ் எடுக்குறது”.

“புத்தி பிசகிருச்சுப்பா அதான் இப்படி நடந்துக்கிறா பாவம் நல்லவதான் என்ன செய்றது மகளும் லூசாப் போனா, ஆதரவா இருந்த ஒரு மகனும் கல்யாணம் பண்ணி பொண்டாட்டி வீட்டோடு போய்ட்டான். புருசன்காரன் செத்துப்போனான். அவளும் என்னதான் செய்வா?”

“வாச்சதேல்லாம் வாங்கருவா வாழ்கையை அழிச்சிருச்சு படைச்சவன சொல்லணும்” விசனப்பட்டாள்.

அழகி மீனாவிற்கும் அது தான் நடந்தது. எளிய குடும்பம் தான், கிராமத்து வாழ்வியல், அஞ்சாம் வகுப்பிற்கு மேலே படிக்க முடியாத சூழல், வயசுக்கு வந்த மூன்றாம் ஆண்டில் அத்தை மகனுக்கு வாக்கப்பட்டாள். கண்ணன் கட்டிடத் தொழிலாளி, கல்யாணம் ஆன புதிசில் நன்றாகத் தான் வைத்திருந்தான். முதலில் பெண் குழந்தை பிறந்தது, மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டான். அதை சாக்காக வைத்து குடிக்க ஆரம்பித்தான்.

அழகி மீனாவிற்கு நித்தமும் அடியும் உதையும்தான், குழந்தைக்காக பொறுத்துக் கொண்டாள். குழந்தையும் வளர வளர ஏதோ வித்தியாசம் தெரிந்தது. குழம்பினாள், தவறாக தெரிகிறதே என்று எல்லாக் கோயிலுக்கும் தூக்கிப் போனாள். நேர்ச்சை வைத்தாள், முடி இறக்கினாள், மண் சோறு சாப்பிட்டாள், தீச்சட்டி எடுத்து, தெருவலம் வந்தாள். எந்தச் சாமியும் மசிவதாக இல்லை. கல்லுக் கணக்காக கனத்துக் கிடந்தது சாமியும், குழந்தையும். வளர வளர குழந்தை பேச்சு வராமல், முழித்த முழி அப்படியே இருக்க, அக்கம்பக்கம் மனிதர்கள் சத்தம் போட, அரசு மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினாள். பல கட்ட பரிசோதனைக்குப் பின் மூளை வளர்ச்சியற்ற குழந்தை என்று மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். மனசொடிந்து போனாள். பெண் குழந்தையே பிடிக்காத புருஷன், புத்தியில்லாத குழந்தையை, மேலும் வெறுத்து ஒதுக்கினான். குடியும் அடியுமாக குடித்தனம் தொடர்ந்தது, அழகி மீனா மீண்டும் கருவுற்றாள். எல்லாச் சாமியையும் தொழுதாள், இந்தக் குழந்தையாவது ஆரோக்கியமாக பிறக்கட்டும் என்று, சாமி கேட்டதோ, சர்க்கார் தந்த மருத்துவம் கை கொடுத்ததோ, ஒரு அழகிய மகனைப் பெற்றெடுத்தாள். குடிகார கணவனுக்கு சந்தோசம் தாளவில்லை. மகிழ்ச்சியிலும் அளவில்லாமல் குடித்தான், குடி நோய்க்கு அடிமையானான். கட்டிட வேலைக்கு ஒழுங்காக செல்வதில்லை, இரண்டு நாள் வேலைக்கு போயி ஏழு நாளும் குடித்தான். குடும்பத்தை பற்றி கவலையற்று தெருவில் திரியத் துவங்கினான். பிறந்த வீடும், அரசாங்கம் கொடுத்த ரேசன் அரிசியும், கை கொடுக்க கொஞ்ச காலம் வாழ்வை நகர்த்தினாள். தாய் தகப்பன் இறந்து போனதும் பிறந்த வீட்டு தொடர்பும் அறுந்தது. எத்தனை நாள்தான் அரை வயிற்று கஞ்சி குடிப்பது, குழந்தைகளையும் இழுக்குக் கொண்டு சித்தாள் வேலைக்கு போகத் துவங்கினாள். கண்ணன் வேலைக்கு போகக்கூடாது என்று வம்பிழுத்தான். வேலை செய்யும் இடங்களில் சண்டையிட்டான். பொறுத்து பொறுத்துப் பார்த்தவள், ஒரு நாள் செங்கலை தூக்கி புருசனை நோக்கி எறிந்து விரட்டினாள். வலுவற்ற கணவன் விழுந்தடித்து ஓடினான். அன்று துரத்திவிட்டவள் தான் சாகும்வரை அவனை குடும்பத்தில் சேர்க்கவேயில்லை. மன வளர்ச்சியற்ற பெண் குழந்தையும், பையனும் விறுவிறுவென வளர்ந்தார்கள். பையனை பள்ளிக்கு அனுப்பினாள். பொண்ணை கூடவே வைத்துக் கொண்டாள். அது எந்த அசைவு மற்று, சதைப் பிண்டமாய் வளர்ந்தது. தின்ன இடத்திலே பேண்டது, கழிந்தது. விதி விட்ட வழியென்று வளர்த்து வந்தாள். கட்டு செட்டாய் பொழப்பு நடத்தி, சிக்கனம் பிடித்து, கையகல இடமொன்றை வாங்கிப் போட்டாள்.

மகன் பத்தாம் வகுப்பை தாண்டவில்லை, படிப்பு ஏறவில்லை என்று பள்ளிக்கூடம் துரத்திவிட, அப்பாவின் கரண்டியை கையில் பிடித்தான். தொழில் நன்றாகவே வந்தது. ஆத்தாளும், மகனும் பாடுபட்டு வீட்டைக் கட்டினார்கள். சின்ன இடத்திலும், கீழே இரண்டு மாடியில் இரண்டு, சிறியதே அழகு எனும் படி வீட்டைக் கட்டி, வாடகைக்கு விட்டு பணத்தைப் பெருக்கினாள். மகன் கெட்டிக்காரன் தொழிலை நன்றாக கற்றுத் தேர்ந்து, கொத்தனாரிலிருந்து சற்று உயர்ந்து, வீடு கட்டி விற்கத் துவங்கினான். அழகி மீனா ஓய்வெடுத்துக் கொண்டு மகளை முழு நேரமும் கவனிக்கத் துவங்கினாள். ராணிக்கு முப்பது வயதாகிறது, ஆடையற்று நிர்வாணமாகவே திரிந்தாள். எந்த உடையை உடுத்தினாலும் கிழித்தெறிகிறாள். அறைக்குள் பூட்டி வைத்து, சங்கிலியால் எந்நேரமும் கட்டிப் போட்டுத்தான் இருப்பாள். எவரையும் வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை. வாசப்படியோடு அனுப்பி விடுவாள்.

ஓரு நல்லது கெட்டதுக்கு எங்கும் போக முடியாது. மகளோடே வாழ்வு கழிந்தது. தாய்மையல்லவா, ஒரு போதும் முகஞ்சுழித்தாளில்லை ஆனால் மகன் அப்பனை போல அக்காவை வெறுக்கத் துவங்கினான். சகிக்க முடியாமல் திட்டவும், அடிக்கவும், மிரட்டவும் பாய்ந்தான். அக்கா சவம் போலவே கிடந்தாள். கற்சிலைக்கு உணர்வேது, உயிரேது. ஒரு கட்டத்தில் காதலித்த பெண்ணோடு, வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டு, மாமனார் வீட்டோடு செட்டிலாகி விட்டான். மீண்டும் ஆதரவற்றவளாய் நிலை குலைந்தாள்.

வீட்டு வாடகையும், அரசு தந்த ஆதரவுப் பணத்தை வைத்துக் கொண்டு காலத்தை கழித்து வந்தவள், சில வருடங்களாகத்தான் மனசொடிந்து, தனக்குத் தானே பேசிக் கொண்டு, எல்லோரையும் சந்தேதிக்க துவங்கினாள். அச்சமும், பயமும் அதிகரிக்க மனதின் சமநிலை குலையத் துவங்கினாள். அக்கம்பக்கத்தினரோடு வலிய சண்டை இழுத்தாள். கெட்ட வார்த்தைகளை கொட்டித் தீர்த்தாள். இவளின் நிலையறிந்தவர்கள் இவளோடு சண்டையிடுவதில்லை. ஒதுங்கிப் போனார்கள். மன வளர்ச்சியற்ற மகள் இரவு நேரங்களில் ஆங்காரமாய் ஊளையிட்டாள். அவளை அடக்க அதனினும் பெருஞ்சத்தமிட்டாள் அழகி மீனா. அது ஊரெங்கும் எதிரொலித்தது, பரிதாபித்தது, தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தது.

அழகி மீனாவின் துன்பக் கதையை சொல்லி வருத்தப்பட்டாள்.

உள்ளூர் யாவாரமற்ற கடைகளில் இம்மாதிரி வெட்டிப் பேச்சிற்கு குறைவிருக்காது,

ஆனாலும் துயரக்கதை தான் என்ன செய்வது விதி விட்ட வழியென்று நகர்ந்தாள் கடைவீதியிலிருந்து வேகுவேகென்று வீட்டிற்கு வந்தாள். வீட்டு வாசலில் படுத்திருந்த தெரு நாயை கல்லெடுத்து விரட்டினாள்.

எதிர் வீட்டு கிழவி இவளைப் பார்த்ததும்

“அடியே மீனா எங்கடி போன இவ்வளவு நேரம், உம் மக கத்திக் கிட்டே இருந்தா என்னான்னு போய் பாருடி” என்றாள்.

“அவ என்னைக்கு சும்மாயிருந்தா, நீ வேற கொர பாட வந்துட்ட”

வெடுக்கென கேட்டபடி வீட்டிற்குள் போனாள்

“ஆமாடி நான் எதுக்கு உம்மகளை குறை சொல்லப் போறேன். அவ அழுதாலேன்னு சொன்னேன். நீயுமாச்சு உம் அருமை மகளுமாச்சுனு” சலித்தபடி போனாள் எதிர் வீட்டு கிழவி

வீட்டிற்குள் புகுந்து கதவைத் தாழிட்டாள். மகள் இருந்த அறையை எட்டிப் பார்த்தாள். ஆடையற்றவள் சிறுநீர் கழித்து இருந்தாள். தண்ணீர் ஊற்றி அலசி விட்டு, துணியால் துடைத்தாள். கொஞ்சம் சோறும் குழம்பும் எடுத்து வந்து மகளுக்கு ஊட்டினாள். தண்ணீர் குடிக்க கொடுத்தாள். அவளையறியாமல் கண்ணீர் கசிந்தது. துடைத்துக் கொண்டு அறைக்குள் வந்தாள். ஜெராக்ஸ் எடுத்த பேப்பரை வீடெங்கும் ஒட்டினாள். பேனாவை எடுத்து முதலில் கணவன் பெயரை அழித்தாள். பின் மகன், மருமகள், உறவுகள் என எல்லார் பெயரையும் அழித்தவள், மகள் பெயரை மட்டும் முத்தமிட்டாள். வீடெங்கும் மகள் பெயரே இருந்தது.

எல்லோரும் கைவிட்டுப் போன நிலையிலும், கைவிடாதிருந்த கை விட முடியாத மகளே பிரதானமானாள். தீரவே இயலாத துர்க்கனவுகளால் மகளை நோக்கி மெல்ல மெல்ல இழுக்கப்பட்டாள். இப்பொழுது அந்த வீட்டில் இரண்டு கடவுள்கள் இருக்கின்றன. யாரையும் புரிந்து கொள்ளாமலும், யாராலும் புரிந்து கொள்ள முடியாமலும், பூட்டிய கதவின் பின்னிருந்த இரைச்சலும், உள்ளிருந்த மௌனப் பெருவெளியும், யாராலும் கண்டு கொள்ளப்படாமல், உலகம் தன் வழியே தானே சுழன்றது. இரவெலாம் உறக்கமில்லை, யோசித்துக் கொண்டு படுக்கையில் புரண்டாள். என்ன செய்வது என்ற கேள்விக்கு பதிலே இல்லை.

நீண்டு படுத்திருந்த மகளின் நிர்வாணக் கோலம் அவளை மேலும் அச்சமூட்டியது.

அது தனக்குப் பின் மகளின் பாதுகாப்பு குறித்தது.

ஒரு கணம் மகளின் முகத்தைப் பார்த்தாள். நெற்றியில் முத்தமிட்டாள். வீட்டில் மீண்டும் அமைதி குடியேறியது.

இரண்டு நாள் வீடு திறக்கப்படாமலே கிடந்தது. மூன்றாம் நாள் அடித்த துர்வாடையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் கதவை உடைத்து திறந்தனர். அங்கே இரண்டு கடவுள்களும் அமைதியாகக் கிடந்தன. அதன் வெறித்த விழிகளில் சமூகத்தின் மீதான அத்தனை அவநம்பிக்கைகளும் உறைந்து கிடந்தன.

– 30/08/2026  writerscafe நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊக்கப் பரிசு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *