நாடகம் போட்டுப்பார்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 3, 2026
பார்வையிட்டோர்: 49 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(2010ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3

சாமிஜியைச் சந்தித்துவிட்டு வந்ததிலிருந்து நாடகம் எத்தனை தரம் நடைபெறும் என்பதில் கவனமாக இருந்தான் முரளி. ராம்குமாரோ, நாடகத்தின் தரம் நன்றாக இருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டான்! 

என்னதான் ‘ஜோக்ஸ் மன்னன்’ என்றும் ‘காமெடி சக்ரவர்த்தி’ என்றும் சாமிஜியை முரளி புகழ்ந்தாலும், அவன் எழுதும் நாடகம் எப்படியிருக்கும் என்று ராம்குமாருக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. ‘திடீரென்று தலைப்பைச் சொல்லி, மறுநாள் ஒரு ஸீன் எழுதி, மூன்றே நாளில் இடைவேளை வரை நாடகத்தை எழுதி முடிக்கக் கூடியவர்களை நம்பினால் தமிழ் நாடக மேடையின் கதிதான் என்னாவது?’ என்று நினைத்து வேதனைப்பட்டான். 

வெந்த புண்ணில் முரளி வேல் பாய்ச்சினான்: 

“இன்னிக்கு சாமிஜியை அடிச்சுக்க ஃபீல்டுலே ஆள் கிடையாது ராம்குமார். அவன் ப்ளேயை செட்டப் பண்றதைப் பார்த்தா பிரமிச்சுப்பூடுவே. இன்டர்வெல் வரைக்கும்தான் ஸ்கிரிப்ட் இருக்கும். அதுக்கப்புறம் ரிகர்சல்லேயே ஸீன் ஸீனா டெவலப் பண்ணிடுவான். அப்பப்ப சிச்சுவேஷனை மாத்திக்கிட்டே போவான்… அங்கங்கே ஜோக்ஸை ஒட்ட வெச்சுக்கிட்டே வருவான்… கடைசிலே க்ளைமாக்ஸ்ல ஒரு அமர்க்கள ட்விஸ்ட் குடுத்து, தியேட்டரை அசர அடிச்சுடுவான்…” சாமிஜியின் அருமை பெருமைகளை முரளி அடுக்கிக் கொண்டே போனான். 

முழு நாடக ஸ்கிரிப்டையும் பார்த்துவிட்டுத்தான் முடிவு செய்வேன் என்று கூறினால் அதைப் பெரிய அபசாரமாகக் கருதி, முரளி கோபித்துக் கொள்வான் என்பதனால் பூஜை போட நாள் குறிக்கும் பொறுப்பையும் முரளியிடமே விட்டு விட்டான் ராம்குமார். 

நாடகம் போடுவதென்றால், அதற்கு பூஜை போட்டாக வேண்டும். அன்று எல்லோரும் கல்யாண உற்சாகத்திலும் பரபரப்பிலும் காணப்படுவார்கள். முகங்களில் நம்பிக்கை ஒளி வீசும். ஸ்கிரிப்டிலிருந்து சில ஸீன்களை, அந்தந்தப் பாத்திரங்களை ஏற்றுக்கொண்டவர்கள் படிப்பார்கள். 

அதேபோல் மறுநாளும் படிக்கவேண்டும் என்ற நாடக மரபு வழி சென்ட்டிமெண்டும் உண்டு. 

பூஜையை நடத்தும் இலாகா சப்பாணியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. துர்க்கா,லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார் படங்களுக்கு மாலையிட்டு, ஊதுவத்தி ஏற்றி, ‘ஸ்கிரிப்ட்’டுக்கு (ஒரே ஸீன்தான் – பெரிய எழுத்தில் ஆறு பக்கங்கள்) நான்கு மூலைகளிலும் நடுவிலும் குங்குமப் பொட்டு வைத்தான். அங்கிருந்தவர்களில் எல்லோரையும் விட வயதானவர் என்ற ஒரே காரணத்துக்காக அப்பாராவ் தேங்காய் உடைத்து, பழ நைவேத்தியம் செய்து கற்பூர ஆரத்தி காட்டினார். எல்லோரும் பயபக்தியோடு ‘ஓம் சக்தி’ பாடினார்கள். 

அடுத்தபடி, அனைவரும் ஆவலோட எதிர்பார்த்துக் கொண்டிருந்த அயிட்டம் – டிபன்! கேசரி, வெண்பொங்கல், வடை, காபி. 

டிங்குதான் எல்லோருக்கும் கொண்டு வந்து கொடுத்தான். சப்பாணி தான் அவனை அழைத்து வந்து ராம்குமாருக்கும் முரளிக்கும் அறிமுகம் செய்து வைத்தான். அதனால் சப்பாணிக்கு ரகசியமாக இரண்டாவது பிளேட் பொங்கல் வடை கொடுத்தான். 

சிற்றுண்டி முடிந்ததும், யாரும் சொல்லாமலே சாமிஜி திடீரென்று எழுந்து நின்று பேசத் தொடங்கினான். புது நாடகக் குழு சென்னைக்கும், தமிழ் நாடகமேடைக்கும் பெருமை சேர்க்கப் போவது நிச்சயம் என்று அடித்துக் கூறினான். ‘எனக்கு நேரமில்லீங்க’ என்று புது மாதிரியான காமெடியாக இருக்கும் என்றும், அதன் வெற்றிக்கு நாடகாசிரியன் என்ற முறையில் மட்டுமின்றி, அதன் டைரக்டர் என்ற முறையிலும் அனைவரது ஒத்துழைப்பையும் கேட்டுக் கொள்வதாகக் கூறி அமர்ந்தான். 

ராம்குமாருக்குத் தூக்கிவாரிப் போட்டது. நாடகத்தை டைரக்ட் செய்யும்படி சாமிஜியிடம் அவன் கூறவேயில்லை. முரளியைப் பார்த்தான். முரளி வேறு பக்கம் திரும்பிக் கொண்டான். 

அடுத்து ஸ்கிரிப்ட் படிக்க வேண்டும். இருப்பது ஒரு காட்சிதான். அதில் மூன்றே பாத்திரங்கள். யாருக்கு எதைக் கொடுப்பது என்று அந்த இடத்தில் முடிவு செய்ய முடியாது. ராம்குமாரும், முரளியும் சாமிஜியுடன் ரகசிய ஆலோசனை நடத்திய பிறகு, தற்போதைக்கு யாராவது மூன்று பேரைப் படிக்கச் சொல்வது என்று முடிவாயிற்று. 

அன்று பூஜைக்கு வந்திருந்தவர்கள் மொத்தம் பன்னிரண்டு பேர். அவர்களில் மூன்று பேர் பெண்மணிகள். சந்தியாதேவியும், சுபத்ராவும், லேடி ஆர்ட்டிஸ்ட்ஸ், மூன்றாவது பெண்மணி சந்தியாதேவியின் அம்மா – அதாவது எஸ்கார்ட்- அதாவது பெண்ணுக்குத் துணை. 

சப்பாணி, பாலு, சுபத்ரா மூவரையும் அழைத்து, ஒரே ஸ்கிரிப்டை வைத்துக் கொண்டு வசனங்களைப் படிக்கச் சொன்னான் சாமிஜி. 

எஸ்கார்ட் அம்மாவின் முகம் கடுகடுத்தது. சடாரென்று எழுந்தாள். தன் பெண்ணைப் பார்த்து “நமக்கு இங்கே இன்னாடி வேலை! வா போவலாம்” என்று அழைத்துக் கொண்டு விறுவிறுவென்று நடந்தாள். சமாதானம் செய்யப் பின்னாலே சப்பாணி விரைந்தான். 

அன்றைய பூஜைக்கு சந்தியாதேவியையும் அவன் அம்மாவையும் சப்பாணிதான் அழைத்து வந்திருந்தான். முரளி அவர்களை ராம்குமாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். 

|தம்பிகிட்டே எல்லாம் சொல்லிட்டீங்களா?” என்று முத்தம்மா (எஸ்கார்ட்டின் பெயர்) சப்பாணியைப் பார்த்துக் கேட்டாள். “அதை நீங்களே பேசிக்கிடுங்க” என்றான் சப்பாணி பதிலுக்கு. 

விஷயம் தெரியாமல் “என்ன விஷயம்?” என்று கேட்டு வகையாக மாட்டிக் கொண்டான் ராம்குமார். சம்பள விஷயந்தாங்க. தம்பி சொல்லியிருக்கும்னு நினைச்சேன்” என்று தன் காவியேறிய பற்களைக் காட்டினாள் முத்தம்மா. 

சம்பளம் என்பது நாடகத்தில் நடிப்பதற்கு அளிக்கப்படும் தொகையென்றும் தொழில்முறை மேடையிலிருந்து அமெச்சூர் மேடையில் நுழைந்துவிட்ட சொல் என்றும் விளக்கினான் சப்பாணி. 

“என்ன எதிர்பார்க்கறீங்க?” என்று ராம்குமார் கேட்டதற்கு, ‘நீங்க மொதமொதலா நாடகம் போடறீங்க. உங்ககிட்டே ரேட் பேசறது நல்லா இருக்காதுங்க. 120 ரூபா குடுத்துடுங்க. வெளியூருக்கு ரெண்டு சம்பளம். பம்பாய், டெல்லி, கல்கத்தாவா இருந்தா ரெண்டரை சம்பளம். இதைத் தவிர, ரிகர்சலுக்கு வந்துட்டுப் போறதுக்குத் தனியா ‘கன்வீன்ஸ்’ குடுத்துடணும்” என்றார் கறார் குரலில். ராம்குமார் சப்பாணியைப் பார்த்தான். ‘கன்வேயன்ஸ்’ என்பதைத்தான் அவள் சொந்த இங்கிலீஷில் அப்படிச் சொல்கிறாள் என்று புரியவைத்தான். 

முரளி அப்போது அங்கு வரவே, “இந்த விஷயத்தைப் பத்தியெல்லாம் இவர்கிட்டே பேசிக்குங்க” என்று சொல்லிவிட்டு ராம்குமார் அங்கிருந்து நழுவிவிட்டான். 

முத்தம்மா முரளியிடம் பேச்சைத் தொடர்ந்தாள்: இதோ பாருங்க தம்பி, பாலு சார் சொன்னாரேன்னுதான் நாங்க ங்கே வர ஒப்புக்கிட்டோம். அங்கே 150 வாங்கிக்கிட்டிருந்தோம்… இங்கே 120 வாங்கிக்கறேன்… இதுக்குக் குறைச்சுட்டா கட்டுப்படி ஆவாதும்மா. திடீரென்று ‘அம்மா’ போட்டு நெருங்கிப் பழகத் தொடங்கினாள். 

முரளி பழம் தின்னு கொட்டை போட்டவனாயிற்றே! அந்த ட்ரூப்பில் 100 ரூபாதான் வாங்கிக் கொண்டிருந்தாள் என்று அவன் ஏற்கெனவே விசாரித்து வைத்துக் கொண்டிருந்தான். அதைக் காட்டிக் கொள்ளாமல்,100 ரூபாய்க்கு முத்தம்மாவைச் சம்மதிக்க வைத்தான். 

சந்தியாதேவியும் எஸ்கார்ட் அம்மாவும் வந்து அரை மணி கழித்துத்தான் சுபத்ரா வந்தாள். அவள் சந்தியாவைவிட ஐந்தாறு வயது பெரியவள். சீனியர் ஆர்ட்டிஸ்ட். ஹீரோயின் வேஷம் போட்டுக் கொண்டிருந்தவள், இப்போது அக்கா, அண்ணி, அம்மா வேஷங்களெல்லாம் போடுகிறாள். முதல் நாள் முரளி சுபத்ராவைச் சந்தித்தபோது, அவள் பெரிய பந்தாவுடன் பேசினாள். “எந்த ரோல் குடுத்தாலும் உயிரை விட்டுச் செஞ்சுக் குடுப்பேன்” என்றாள். எத்தனை வசனமாயிருந்தாலும் ரண்டே நாள்லே பாடம் பண்ணிடுவாளாம். அவளுக்கு நிறைய ரிகர்சல்கள் தேவையிருக்காதாம். ஜம்பம் அடித்துக் கொண்டாள். ஆனா, எட்டறை மணிக்கெல்லாம் விட்டுடணும்” என்று கண்டிஷன் பேசினாள். வெளியூர் போனால் ஹஸ்பெண்டோ, தங்கையோ கூட வருவார்களாம். அவர்களுக்கு ‘சபரேட்டா’ ரூம் போட்டுக் குடுக்கணுமாம். கடைசியில், “என் சர்வீஸைப் பார்த்துச் சம்பளம் போட்டுக் குடுங்க” என்றாள். அவள் சர்வீஸுக்கு 80 ரூபாய் தருவதாக முரளி கூறியதும், அவள் பதில் பேசாமல் ஒப்புக்கொண்டாள். 

சுபத்ரா உள்ளே நுழைந்ததும், சந்தியாதேவியும் முத்தம்மாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ‘மேக்கப்பைப் பார்த்தியா பேபி… சின்னப் பொண்ணுன்னு மனசுலே நினைப்பு” என்று ஏளனமாகச் சிரித்தாள் முத்தம்மா. உனக்கேன் இதெல்லாம்…. சொம்மா இரேன்” என்று அம்மாவை அடக்கினாள் சந்தியாதேவி. 

சுபத்ரா அவர்கள் அருகில் போய் அமராமல், பத்துப் பதினைந்து அடி தள்ளியே தனியாக அமர்ந்திருந்தாள். ஒரு முறை சுபத்ராவும் சந்தியாதேவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள நேர்ந்தபோது, இருவரும் லேசாகச் சிரித்துக் கொண்டனர். அதோடு சரி, ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை. 

ஒரு சமயம் சுபத்ராவும், சந்தியாதேவியும் ஒரே ட்ரூப்பில் நடித்துக் கொண்டிருந்தனர். ஸ்டேஜ் இன்சார்ஜ் ரங்கப்பாதான் தலைக்கு வைத்துக் கொள்ள அவர்களுக்குப் பூவைப் பங்குபோட்டுக் கொடுப்பது வழக்கம். சுபத்ராவுக்கு அரை முழம் அதிகமாகவே பூ கொடுக்கிறான் என்று ஒரு நாள் முத்தம்மா பெரிய ரகளை பண்ணினாள். இதனால் இவர்களிடையே ஒரு பகை வளரத் தொடங்கியது. அது வெளியூர் நாடகத்துக்குப் போகும்போது ரயிலில் அப்பர் பர்த் யாருக்கு, லோயர் பர்த் யாருக்கு என்ற சூடான வாக்குவாதமாக வெடித்து, பெரிய வாய்ச்சண்டையாக முற்றி, ஒருத்தி முடியை இன்னொருத்தி பற்றி இழுத்துக் கொண்டதில் முடிந்தது! 

இந்தப் பின்னணியில் பார்த்தால்… தன் மகளை ஒதுக்கிவிட்டு சாமிஜி, சுபத்ராவிடம் ஸ்கிரிப்டைப் படிக்கச் சொன்னபோது, முத்தம்மாவுக்கு ஆத்திரம் பொங்கி, ‘இந்த ட்ரூப்பில் தன் மகள் நிச்சயம் அலட்சியப்படுத்தப்படுவாள்’ என்று நினைத்து கோபமாக வெளியேறியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. 

அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற சப்பாணியால் தாயையும் மகளையும் சமாதானம் செய்ய முடியவில்லை. 

இதோ பாருங்க… இந்த ட்ரூப்லே ஒண்ணு நம்ம பேபி இருக்கணும். இல்லே அந்த கஸ்மாலம் இருக்கணும். அதை மொதல்லே முடிவு பண்ணுங்க” என்று முகத்தில் அடித்த மாதிரி கூறித் திருப்பியனுப்பிவிட்டாள் எஸ்கார்ட். முத்தம்மா. 

– தொடரும்…

– நாடகம் போட்டுப் பார், முதற் பதிப்பு: 2010, அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *