அதே கண்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 24, 2026
பார்வையிட்டோர்: 6,931 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

கொக்கு மாதிரி உயரம்! பத்து நாள் பட்டினி கிடந்த மாதிரி ஓட்டிய வயிறு! டொக்கு விழுந்த கன்னம், வாழ்க்கையில் சிரிப்பையே பார்த்தறியாத முகம்…

மேற்கொண்டு வர்ணனை தேவையில்லை சாரங்கன் வாத்தியாருக்கு!

வழக்கமாக காலையில் டியூஷன் சொல்லிக் கொடுக்க வீட்டிற்கு , வரும் வாத்தியார் இன்று மாலையும் வந்திருந்தது குழப்பமாய் இருந்தது!

“மாமி! இன்னிக்கு ஒரு நாள் ரகுவை என் கூட அனுப்பனும்”

வீட்டிற்கு வந்து மாதம் ஐந்து ரூபாய்க்கு (1970) எனக்கு கிளாஸ் எடுக்கும் சாரங்கன் வாத்தியாருக்கு இந்த உதவி கூட செய்யலேன்னா எப்படி?

அம்மா மறு பேச்சு பேசாமல் அனுப்பி வைத்தாள்!

புத்தம் புது சைக்கிள்…அழகுக்காக முன்னால பிளாஸ்டிக் பூங்கொத்து வேற …,ஹேண்ட் பாரில் என்னை உட்கரா வைத்து கொண்டு….

வெண்ணவாசல் பாலத்தை கடந்து, வலதுபுறம் களத்தூரை நோக்கி திரும்பியது சைக்கிள்!

ஊரில் ரெண்டாவது தெருவில் மூன்றாவது வீடு!

வீட்டிற்குள் நுழையும் போது இரவு ஏழு மணி இருக்கும்!

சாரங்கன் சாரின் வைஃப் அம்புஜம், ஒரு பக்கா வெகுளி!

என்னை பார்த்து வாங்கோ! என்றார்.

இந்த அரை டிராயரை மரியாதையாக அழைத்த முதல் பெண்மணி!

இந்த ஒரு வார்த்தைக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் அவளை கீழே விழுந்து நமஸ்கரிக்கலாம்!

தட்டு நிறைய தயிர் சாதம்! கூடவே தொட்டு கொள்ள எண்ணெயில் வறுத்த கால் கிலோ சின்ன வெங்காயம்!

சாப்பிட்டு முடிக்கும் வரை நிலைப்படியில் சாய்ந்தபடியே சாரங்கன் சார் என்னையே பார்த்து கொண்டிருந்தார்

மங்கிய நிலவொளியில் திறந்த முற்றத்தில் பாய் தலையணை!

கூடவே பக்கத்தில் அப்பள குழவி, உலக்கை, நீண்ட தடி….

“ஒ அதுவா! வீட்டுக்கு அடிக்கடி திருடன் வர்ரான்! கண்ணா! அதான் இன்னிக்கு உன்ன துணைக்கு அழைச்சுண்டு வந்திருக்கேன்!”

சாரங்கன் சார் ரொம்ப கேஷுவலாக இதை சொல்ல சொல்ல எனக்கு தூக்கி வாரி போட்டது!

வசமாக இன்னிக்கு இவரிடம் சிக்கி கொண்டு விட்டோம்!

சாதூர்யமாக பேசி நம்மை ஆபத்தில் சிக்க வைத்து விட்டார் வாத்தியார்!

நள்ளிரவை தாண்டிய நேரம்..

பின்பக்க சுவர் வழியாக ஏறிய அந்த கரிய உருவம்.. மெல்ல மெல்ல நகர்ந்து, ஒட்டு சரிவில் சுவருக்கும் முற்றத்திற்கும் இடையே, ஆறடி தூரத்தில் சரியாக உட்கார்ந்து கொண்டது!

முற்றத்தில் இருந்த எங்களை திருடனாலும் அவனை எங்களாலும் தெளிவாக பார்க்க முடியும்!

பயத்தில் சாரங்கன் சார் என் வலது கையை அழுத்தி பற்றிக் கொண்டார்!

கணக்கை தப்பாக போட்டதற்காக எனது ரெண்டு விரல்களுக்கிடையே பென்சிலை வைத்து திருகிய இந்த கொடுர கைகளா இப்படி நடுங்குகிறது?

‘இந்த ஆளை எதற்கும் நம்ப கூடாது’

பட்சி சொல்லியது!

யோசிக்கும் போதே எனது இடது கையை மெல்ல மெல்ல இன்னொரு கரம் இறுக பற்றியது!

பயத்தில் உறைந்து போனேன்!

“I am அம்மாஞ்ஜி! Fifth Standard , இங்கிலிஷ் மீடியம்!”

அர்த்த ராத்திரியில் அதுவும் திருடனுக்கு முன்னால் இந்த அறிமுகம் ரொம்ப அவசியம்!

காதில் கடுக்கன்..S வடிவில் குடுமி…மூன்று வேளையும் வெண்ணெயை தவிர வேறு ஏதும் சாப்பிட்டு இருக்க மாட்டான் போலிருக்கிறது!

என்னை மாதிரியே துணைக்கு கும்பகோணத்திலிருந்து அவனை லெட்டர் போட்டு சாரங்கன் சார் வர வழைத்திருந்தது பிறகுதான் தெரிந்தது!

இதற்கிடையே திருடன் ஒரு ஆள் இறங்குகிற மாதிரி சதுரமாக கரியால் அளந்து கோடு போட்டு சாவகாசமாக ஒட்டை பிரித்து கொண்டிருந்தான்…

சாரங்கன் சாரின் கைகள் நடுக்கத்தில் மேலும் இறுகின…

பயத்தில் “கந்த சஷ்டி” கவசம் புத்தகத்தை கையில் வைத்து கொண்டு, சம்பந்தமே இல்லாமல் “கனகதாரா ஸ்தோத்திரத்தை சத்தமில்லாமல் சொல்லி கொண்டிருந்தவரை பார்க்கும் போது ரொம்ப பாவமாக இருந்தது!

மேற்கூரையில் ஒட்டை பிரித்தவன்..ஒரு அடி ஸ்கேலால் சதுரமாக பென்சிலால் மார்க் செய்து விட்டு சிறிய ரம்பத்தால் மூங்கில் சட்டத்தை அறுக்க தொடங்கினான்.

அவன் செய்கைகள் மதன் கார்டூனில் வரும் சிரிப்பு திருடன் சிங்கார வேலுவை பார்ப்பது மாதிரி இருந்தது!

“30 நாளின் திருடுவது எப்படி ?” என்கிற புத்தகம் எதையாவது மணிமேகலை பிரசுரம் போட்டு வைத்திருக்கிறார்களோ என்னவோ! அரைகுறையாக அதை படித்து விட்டு, இவன் திருட வந்திருப்பான் போலிருக்கிறது!

ஆறடி நகர்ந்து வந்து நான்கடி உயர முற்றத்தில் குதித்தால் போதும் கத்தியை காட்டாமலே சாரங்கன் சார் சகலத்தையும் கொடுத்து விடும் பயந்த சுபாவம்!

எதற்காக தேவையில்லாமல், இவன் இத்தனை மெனக்கெடுகிறான் என்று தெரியவில்லை!

என்ன நினைத்தானோ திருடன், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கண் இமைக்கும் நேரத்தில் முற்றத்தில் குதித்தான்…

குட்டை உருவம், சுருள் முடி, கழுத்தில் தாயத்து, உடல் முழுவதும் எண்ணெய்! கோழி முட்டை கண்கள்… திருடனை முதன் முதலாக அருகில் பார்த்த அதிர்ச்சி எனக்கு!

அம்புஜம் மாமியும், அம்மாஞ்சியும் அலறிய அலறலில்…

வினாடி நேரத்தில் யாரும் எதிர்பாராமல் வாசல் கதவை திறந்து கொண்டு அவன் ஒடத்தொடங்கினான்…..

நாராயணா…,நாராயணா…நள்ளிரவிலும் கை கூப்பி திருடன் ஒடிய திசை நோக்கி நமஸ்கரித்தார் சாரங்கன் சார்!

காலையில் முதல் வேலையாக எங்கிருந்தோ ரெட்டை மாட்டு வண்டி ஒன்றை பிடித்து வந்து விட்டார்!

ஒரு மாதம் கழித்து போக இருந்த விஸ்வநாதபுரம் வீட்டுக்கு இன்றைக்கே போவதென்பது அவரது அவசர முடிவு!

மொத்த சாமானும் அரைமணியில் கட்டை வண்டியில் ஏற்றியாகி விட்டது!

சாரங்கன் சார் வழிகாட்டியாக சைக்கிளில் முன் செல்ல வண்டியில் முன்னால் நான் பின்னால் அம்மாஞ்சி!

சாரங்கன் சாருக்கும் திருடனுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம தொடர்பு இருந்திருக்கும் போலிருக்கு!

ரெண்டு வருஷத்தில், திருடனுக்கு பயந்து இது ஆறாவது ஜாகை!

மேட்டில் ஏறி, வலது புறம் திரும்பிய வண்டி வெண்ணாற்றை ஒட்டிய சாலையில்….

வண்டிகாரனிடம் பேச்சு கொடுத்தேன்..

விஸ்வநாதபுரம் இங்கிருந்து ரொம்ப தூரமோ?- நான்.

தூரம் பாத்தா தொழில் செய்ய முடியுங்களா?

சொல்லி கொண்டே முண்டாசை சரி செய்து, என் பக்கம் திரும்பிய அவனை பார்த்து அதிர்ந்தேன்!

இரவில் முற்றத்தில் நான் பார்த்த அதே கண்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *