அந்நியமாய்…
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 7, 2026
பார்வையிட்டோர்: 119
(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மழையில்லாத காலத்தில் ஊருக்குள் இப்படி ஓர் இடி வந்து விழும், விழுந்த இடி ஊரையே ஒரு தூக்கு தூக்கி டம்ம்மென்று கீழே போட்டு நொறுக்கியெடுக்கும் என்று யாரும் நினைக்கவேயில்லை. அதிலும் முனியசாமி துளிக்கூட நினைக்கவில்லை.
நாற்பத்தியாறாவது சுதந்திர தினத்துக்குக் கொடியேற்றி, அவன் பிள்ளைகள் மிட்டாய் வாங்கித் திங்க பள்ளிக் கூடம் போயிருந்தன. யூனிஃபார்ம் டிரஸ்களை நன்றாகத் துவைத்து, பளிச்சென்று போட்டுக்கொண்டு ஒளிமய மாய்ப் போயிருந்தனர், நீலமும், வெள்ளையுமாய்…
அந்தப் பிள்ளைகள் பத்தரை மணிக்கெல்லாம் வந்து விடுவார்கள். மூன்றும் ஆண் பிள்ளைகள். மதியத்திற்கு பஸ் ஏறி, ராசபாளையம் போய், அங்கிருந்து குற்றாலம் போய், நாலைந்து தடவை அருவிக் குளிப்பு குளித்துவிட்டு வரவேண்டும் என்கிற உல்லாசத் திட்டம். குற்றாலம் போவதில் பிள்ளைகளைவிட முனியசாமிக்குத்தான் ஏகப்பட்ட கனா. மகிழ்ச்சி. குதூகலக் குளிர்ச்சி.
முனியசாமி மனமெல்லாம் அதன் மலர்ச் சிரிப்பு. வாசமும், ஒளியுமான மலர்ச் சிரிப்பு. அவனது துறுதுறுப் பான ஒவ்வொரு அசைவிலும் வந்து முகம் காட்டுகிற மனப் பிரவாகம்.
அப்போது தான்-
அந்தச் செய்தி, தீப்பிடித்த மாதிரி ஊர் முழுக்க உஷ்ண மாய்ப் பரவியது.
“ராமையாத்தேவரு மகன் செத்துப்போய்ட்டானாம்.”
”ஐயய்யோ…! என்ன செய்ஞ்சதோ?”
“வாயாலே வயித்தாலே போச்சாம். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் குளுக்கோஸ் ஏத்தியிருக்காக. பிரயோசன மில்லாமப் போச்சாம்.”
“அடக் கொடுமையே…! மூணு வயசுதானே இருக்கும்? துறுதுறுன்னு திரிவானே… லட்சணமான பயல்…”
‘ஆமாமா… நல்ல பயதான். குடுத்து வைக்கலியே. கூத்துவன் தூக்கிட்டுப் போய்ட்டானே…”
“அடப் பாதரவே…”
“முருகையா நாடாரு மகனுக்கும் வாயாலே வயித்தாலே போகுதாம்.”
“ஐய்யய்யோ…. பெறகு?”
“சைக்கிள்லே வைச்சு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயி ருக்காக. புள்ளை கீரைத்தண்டா வாடித் தொவண்டுருச்சு.”
“அப்ப இதென்ன காலராவா?”
“அப்படித்தானிருக்கும் போலிருக்கு. நடுத்தெருவுலே சின்னப் பெருமாள் நாயக்கருக்கும் வாயாலே வயித்தாலே போகுதாம்.”
“அப்படியா? அப்ப… காலராவே தான்!”
ஊர் முழுக்க பதற்றநிலை. ஆண், பெண் எல்லார் முகங்களிலும் அச்சத்தின் நிழல். ‘என்ன ஆகுமோ ஏது ஆகுமோ’ என்கிற பீதி இருட்டு. வேலை வெட்டி இல்லாமல் துட்டு துக்காணியில்லாமல் தவிக்கிற கோடை.
இந்தத் துன்பம் போதாதென்று, காலரா நோயும் ஒரு பங்காளியாய் வந்து மல்லுக்கு நிற்கிறதே…
ஊரெல்லாம் சுற்றிச் சுற்றி ஊளையிடுகிற நாய்கள் வேறு, உள் மனத்தில் மரண பயத்தைத் தூவுகின்றன.
ஆட்கள் கூடிக் கூடிப் பேசினர். பேசிப் பேசி பீதியைப் பகிர்ந்து கொண்டனர். நிமிஷத்திற்கு நிமிஷமாய்ப் புதுத் தகவல். ‘அன்னாருக்கு’ ‘இன்னாருக்கு’ என்று எல்லாமே வாந்தி பேதிதான்…
குற்றலாம் போகிற மகிழ்ச்சியில் திளைத்த முனிய சாமிக்குத் திக்கென்றது. திகில் பற்றிக்கொண்டது. குடித்துக் கொண்டிருந்த காப்பியில் பல்லி விழுந்து விட்ட மாதிரி… அவனுள் ஒரு பகீர் உணர்வு.
உள்ளூர்த் தலையாரி பதற்றத்தோடு சைக்கிளில் புறப் பட்டார். வி.ஏ.ஓ.விடமும், ஆர்.ஐ.யிடமும் தகவல் சொல்லி, ரிப்போர்ட் தயாரித்து எட்டு மைல் தள்ளியிருக்கிற அரசு மருத்துவமனை தலைமை டாக்டரிடம் நேரில் ஒப்படைத் தார்.
அவர் ஊசியில்லையே… மருந்தில்லியே என்று .கை விரித்துப் புலம்பினார்.
தலையாரி ஊர் திரும்புவதற்குள் சமூக அக்கறையுள்ள சில வாலிபர்கள் கலெக்டருக்கும், சப்-கலெக்டருக்கும், பி.டி.ஓ.வுக்கும் தந்திகள் அடித்தனர்.
“ஒரு மரணம். காலரா தாக்குதல். முப்பதுபேர் சீரியஸ். டாக்டர் குழு வரவேண்டும். உடன் நடவடிக்கை.”
தந்தி அடிக்கவே நாலு மைல் தள்ளியிருக்கிற சிறு டவுனுக்குத்தான் போகணும். அங்கேதான், தனியார் மருத்துவமனையில் வாந்தி பேதி நோயாளிகள் வந்து அட்மிட் ஆகியிருக்கின்றனர்.
டக்கர்களில் வைக்கோல் பரப்பி அதன் மேல் நோயாளி களைக் கிடத்தி, மாறி மாறிக் கொண்டுவந்த வண்ண மாயிருக்கிறது.
மருத்துவமனையில் போய்ப் பார்த்தால்-
கால் வைக்க இடமில்லை. இருக்கிற பத்து அறைகளிலும் நாற்பது பேர். அது போக, வழிநடைகளில் குறுக்கும் நெடுக்கமாய் நோயாளிகள். வராண்டாவிலும் தான். எல்லார் முகங்களிலும் அகதிகளைப் போன்றதோர் அவல உணர்ச்சி. மரண பீதி. குளுக்கோஸ் ஏறிக் கொண்டி ருக்கிறது. ஸ்டாண்ட் இல்லாக் கொடுமையால் நோயாளி களின் உறவினர்களே ஸ்டாண்டாக நின்று, குளூக்கோஸ் பாட்டிலை ஏந்திக் கொண்டிருந்தனர்.
டாக்டரும், டாக்டர் மனைவி டாக்டரும் தங்கமான வர்கள். அசிங்கம் பாராமல் உறக்கம் பாராமல்– உயிர்களைக் காப்பாற்றுகிற போராட்டத்தில் சளைக்காமல் ஓடி ஓடிப் பரபரத்தனர்.
வாந்தி பேதியாகிறவர்கள் பய உணர்ச்சியில் அரண்டு கிடந்தனர். உரித்துப் போட்ட வாழைப்பழத் தொலிகளாகக் கிடந்த அவர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.
உள்ளே போய் விட்டு வந்தால்… ஒருவித நாற்றமும் கிலியும் குடலைப் புரட்டுகிறது.
காலரா, சூறாவளியாய் ஊரைப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி, உலுக்கியெடுக்க, மேற்கொண்டு ரெண்டு பேர் சாவின் மடியில் முகம் புதைத்தனர். வழக்கமான சாஸ்திரம் எதுவும் கடைப்பிடிக்காமல், ‘அரக்க பறக்க’ தூக்கிக் கொண்டு போய் மயானக்கரை சேர்த்தாயிற்று.
நூற்றுக்கும் மேலாகிவிட்ட எண்ணிக்கையில் தனியார் மருத்துவமனைகளில். சுற்றுப்பட்டி பூராவும் இந்த ஊரைப் பற்றித்தான் பேச்சு.
ஏழு தடவை வந்து போகிற டவுன் பஸ்ஸில் ஜமுக் காளமும், தூக்கு வாளியுமாய்க் கைத்தாங்கலாய் ஏற்றப்படுகிற நோயாளிகள். டக்கர்களில் வேறு.
சூறாவளியின் சுழற்சியில் காய்ந்த சருகுகளாய் ஜனங்கள். நாதியற்றுப் போய்…
கிராம சேவக் வந்தார். ஊசி மருந்தில்லாமல் சும்மா விசிட்டுக்கு வந்த டாக்டர், ஜனங்கள் கொதிப்பில் ஓடியே போய் விட்டார். மூன்றாவது நாள்தான் தடுப்பு ஊசி மருந்து கொண்டு நர்ஸ்கள் வந்தனர்.
காலங் கடந்த காரியம். பத்து நாளைக்கு முன்செய்ய வேண்டிய காரியம். காலரா வந்த பிறகு, ஆட்கள் சாய்ந்த பிறகு தடுப்பு ஊசி போட்டு என்ன செய்ய?
கட்டுத் தரையை விட்டு மேய்ச்சல் தரையில் மூக்க ணாங்கயிறு மாட்ட முயல்கிற சர்க்காரின் புத்திசாலித்தனம்!
காலராவை ஒழிக்க வேண்டிய கடமையுள்ள சர்க்கார், கும்பகர்ணன் தூக்கத்தில். தந்திகள் அடித்த பின்னும், குறட்டைச் சப்தம் தான். சர்க்கார் யந்திரம் அசைவதாகத் தெரியவில்லை. மூச்சுவிடாமல் கம்மென்று கிடந்தது.
கிராமத்து ஜனங்கள் செய்வதறியாமல் அலைபாய்ந்து வந்தனர். சூறாவளியின் உக்கிரமும், வேகமும் அடிவயிற்றைக் கலக்குகின்றன. பத்து மாசமாய் ஒற்றைத் தூறல் கூட மண்ணில் பொட்டென்று விழவேயில்லை. அருங்கோடை, கூலி ஜனம் கையில் காலணா துட்டுக்கும் வழியில்லை.
மருத்துவமனையில் கிடத்தப்பட்ட நோயாளிகளை மீட்கக் காசில்லை. கண்விழி பிதுங்க கதியற்றுப் புலம்புகிற அவலம்.
முனியசாமி ஊர் மடத்தில் உட்கார்ந்து பேசிய மனக் கொதிப்போடு வீட்டுக்குப் போனான். வீட்டில் ஒரே கந்தர்கோளம்.
ஆவுடை தலையில் அடித்துக் கொண்டு கதறிக் கொண் டிருந்தாள்.”ஐயய்யோ… எந்தங்கப் பெட்டி… தலைக்குப் புறக் கெடக்கே… மலடியாயிருந்த சிறுக்கியைத் தாயாக்கின என் ரத்தினம், கண் இருண்டு கெடக்கே…”
முனியசாமி கதிகலங்கிப் போனான். சூறாவளிக்காற்று நம் வீட்டிற்குள்ளும் நுழைந்து விடுமோ என்று நிமிஷத்திற்கு நிமிஷம் பயந்து செத்துக்கொண்டிருந்தான். நுழைந்தே விட்டது.
மூத்த பயல் ரெண்டு தடவை வாந்தியெடுத்திருக்கிறான். நாலைந்து தடவை தண்ணியாய் பீச்சியடித்திருக்கிறது. அறுபட்ட வாழை இலையாய் வாடிச் சுருங்கிப்போய்க் கிடந்தான்.
அவன் முகத்தில் விடாமல் மொய்க்கிற ஈக்கள். மரண நிழல்கள்.
முனியசாமிக்குள் குலைநடுக்கம். நெஞ்சு பதறிப் பதைத்தது.
“அடக் கிரகச் சாரமே, இப்ப நா என்ன செய்ய?” என்று கையறு நிலையில் தவித்தான். ரெண்டும் கெட்ட நேரம். பஸ்ஸெல்லாம் போய் விட்டது.
வேறு வழி?
சைக்கிளில் தூக்கி கேரியரில் உட்கார வைத்துக்கொண்டு புறப்பட்டான், முனியசாமி.
முனியசாமிக்குக் கல்யாணமாகி நாலைந்து வருஷம் ஓடிய பிறகும் ஆவுடைவயிற்றில் ஒரு சலனமில்லை. புதுசு மங்காமலிருந்தாள். புழுவோ பூச்சியோ ஒன்றும் தட்டுப் படவில்லை.
ரெண்டு தடவை நடை நடையாய் நடந்து போய், திருச் செந்தூர் முருகனைத் தரிசித்தான். குடும்பத்துக்குப் பாத் தியப்பட்ட குலதெய்வம் முனீஸ்வரன்சாமி நடுக்காட்டில் தன்னந்தனியாய் வெயிலில் காய்ந்து கறுக்குத் கிடந்தது. அதற்கும் மூன்று தடவை நேர்த்திக் கடன் போட்டு, கடாய் வெட்டி பொங்கலிட்டு, மொட்டையடித்தான்.
பாச்சா ஒன்றும் பலிக்கவில்லை.
‘இதேதுடா… பெரிய வம்பாய்ப் போச்சு. வம்சப்பேரு சொல்ல ஒரு புள்ளையில்லாம், பூண்டத்துப் போயிரு வோமா’ என்று மனம் கிடந்து பேதலிக்க…
இவன் மலடா, அவள் மலடா என்று ஆராய்ச்சியே யில்லாமல், மறு கல்யாணம் பற்றி யோசிக்கவும் துவங்கிய தருணத்தில்…ஆவுடை வாந்தியெடுத்தாள் – கர்ப்பவாந்தி.
அப்படித் தவமாய் தவமிருந்து, ஏங்கித் தவித்தபிறகு பிறந்தவன்தான், ரத்தினமுனி. முனிசாமியின் அய்யா அச்சு. கண்விழி, மூக்கு நுனிக்கூர்மை, உதட்டுச் சுழிப்பு, நொடிக்கொரு தடவை மூக்கு நுனியைத் திருகிக் கொள்கிற பழக்கம்… எல்லாமே அய்யாதான்.
அஞ்சாங்கிளாஸ் படிக்கிற ரத்தினமுனிதான், இப்போது காலராச் சூறாவளியில், சருகாக…
ஆடி மாத இருட்டு அப்பிக் கிடந்தது. சைக்கிள் தன் போக்கில் கிடங்குகளில் விழுந்து ஏறுகிறது. கேரியரில் துவண்டு போய் உட்கார்ந்திருக்கிற பயல், மயங்கிக் கீழே விழுந்து விடுவானோ…?
முனியசாமிக்குள் அந்தப் பதற்றம் வேறு… அடிக்கடி சத்தம் காட்டி கூப்பிட்டுக் கொண்டே போனான்.
“ஏலேய்… ரத்துனம்.”
“ம்.”
“ஒறங்கிராதேடா.”
“ம்.”
“கிறுகிறுப்பா வருதா?”
“இல்லே….”
“கண்ணை இருட்டிக்கிட்டு வந்தா… சொல்லிரு.”
“ம்.”
முனியசாமிக்குள் குழப்பமான எண்ணங்கள்.
இதுவரை தாசில்தாரோ, டாக்டர் குழுவோ கிராமத்திற்கு எட்டிப் பார்க்காமலிருப்பதை அவனால் புரிந்துகொள்ளவே இயலவில்லை. எத்தனை தந்திகள்? எத்தனை வழியில் தகவல்கள். எல்லாம் போயும்… ஆபீசர்மார்கள் ஆட்டுரலாய் அசையாமல் இருக்கிறார்களே… பாவிகள்!
இவங்களாலேதான் ஆட்சிக்குக் கெட்ட பெயர். ஆளுங் கட்சிக்கும் ஏகப்பட்ட வசவுகள். மனக்கொதிப்பில் தெறிக்கிற சாபக் கங்குகள்.
…நேற்று மடத்தில் போய் உட்கார்ந்திருந்தான். நிறைய ஊர்ஜனம். ராத்திரி ஏழு மணி பஸ்ஸுக்குக் கைத்தாங் கலாய் அழைத்துச் செல்லப்படுகிற மூன்று கேஸ்கள்.
அதைப் பார்த்தவுடன் கோபத்தில் ஆட்சியைத் திட்டித் தீர்த்தனர். ஆள் ஆளுக்கு கொதிப்போடு வைதனர். வசவு என்றால் வசவு… அப்படி நாற வசவு. உரித்து எடுத்து விட்டனர்.
“ஜனங்க செத்து மடியுது. சர்க்காரு குத்துக்கல்லாய் உக்காந்துருக்கு.”
“அடிச்ச தந்திகளை வாங்கிப் குப்பைக் கூடையிலே போட்டுட்டு,ஆபீஸர்மாருங்க ஜீப்புலே ‘டர்ர், புர்ர்’ருன்னு வெறுஞ்சுத்தா சுத்துவாக.”
“அவுக ஆத்தா அப்பன்மாருக்கு வாந்தி வயித்தாலே போனா தெரியும்.”
“ஓட்டு வாங்கி ஜெயிச்சிட்டுப் போன எம்.எல்.ஏ.க் கும்லே, எட்டிப் பார்க்க நேரமில்லே?”
“முதலமைச்சர் கால்லே விழுந்த எம்.எல்.ஏ. இன்னும் எந்திக்கவேயில்லியாம்.”
“ஊர் ஜனம் காலராவுல உருண்டுக்கிட்டுக் கெடக்குதுக. எம்.எல்.ஏ.எட்டிப் பாக்காம இருக்காரு. இவங்கள்லாம் மனுசங்கதானா?”
“வரட்டும்… அடுத்த தடவை ஓட்டுக்கேட்டு வரணும்லெ? அப்ப பேசிக்குவம்.”
“ஆமா… அந்தக் கட்சிக்காரங்க வரட்டும். வாயாலே பேசக் கூடாது. எடுத்துக்கிட்டு போடுற போட்டுலே, எல்லாம் கந்துகந்தாய்ப் பிய்ச்சுக்கிட்டு ஓடணும்.”
முனியசாமி இறுகிப்போய்க் கேட்டுக் கொண்டிருந் தான். சகிக்க முடியவில்லை. பல்லைக் கடித்துக் கொண் டான். அவனுக்குள் திகுதிகுவென்று எரிகிற ஆத்திரம். தன் கட்சியை இப்படிக் கூசாமல் திட்டுகிறார்களே என்கிற கோபம். தன்னை வைத்துக்கொண்டே இத்தனை வசவு என்றால்… அது தன்னையே செருப்பால் அடிப்பது போல் தானே?
ஆயினும், ஒன்றும் சொல்ல முடியவில்லை. என்னத்தைச் சொல்ல? எந்த நியாயத்தை வைத்துக் கொண்டு வாதாட? வாய் திறந்து பேசுவதற்கு என்ன ரைட் இருக்கு?
கொதித்துப் போயிருக்கிற ஜனங்களிடம் ஏடாகூடமாய் வாயைக் கொடுத்தால்… ‘வாங்கிக் கட்டி’க்கொள்ள வேண்டியதுதான். பட்டதுதான் மிச்சம்.
… தேர்தலுக்குப் பத்துநாள் இருக்கும்போது இந்த எம்.எல்.ஏ.வேட்பாளராய் வந்தார். ஊரில் முனியசாமி தான் முன்னணி ஆளாய் இருந்து வேர்வை சிந்திக் கொண் டிருந்தான். ராவ்வும் பகலும் உறக்கமில்லாமல், பச்சைத் தண்ணீர் பல்லில் ஊற்றிக் கொள்ளாமல் ஒரே மூச்சாய்ப் பாடுபட்டான்.
பெரிய பெரிய தட்டி போர்டுகளையெல்லாம் வேப்ப மர உச்சியில் கொண்டு போய்க் கட்டி, சீரியல் லைட் மாட்டினான். தெருவை மறித்து வரிசை வரிசையாய் ஓட்டுக் கேட்கிற பேனர்கள். சூரிய வெளிச்சம் தரையில் விழ விடாமல், அடர்த்தியாய்ச் சின்னம் பொறித்த கட்சித் தோரணங்கள்.
ஊரே சுயமிழந்து, புலிவேஷம் கட்டிக்கொண்ட மாதிரியிருந்தது.
வந்த வேட்பாளர் இவனைப் பார்க்கவில்லை. வேறொரு பிரமுகரிடம் பணத்தைக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்.
இவன் அதைப் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. வேட்பாளர் ஜெயித்தால்… தான் ஜெயித்த மாதிரி. அப்படி ஒரு வைராக்கியத்தில் வெறி பிடித்தவனாய்… சுழன்றான்.
புலனாய்வு வாரப் பத்திரிகைகள் ஆய்வு நடத்தி, கட்டுரை எழுதி இவன் வயிற்றில் புளியைக் கரைத்தன. ‘இந்தக் கட்சி ஜெயிக்க முடியாது. ஜெயித்தாலும் ஆட்சியில் உட்கார்கிற மெஜாரிட்டி கிடைக்காது’ என்று ஆய்வு முடிவுகள் அலற… இவன் பதறியடித்துப் போய் பம்பர மாய்ச் சுழன்றான். முனியசாமிக்குள் திக்திக்கென்று அடித்துக்கொண்டது.
கூட்டணிக்கட்சித் தலைவர் வெடிகுண்டு வெடித்துக் கொலை செய்யப்பட… நாடே அதிர்ந்துபோய் வெல வெலக்க… மொத்த நிலவரமும் தலைகீழாய் மாறி, கலவரமாக…
இவன் கட்சி ‘ஜே, ஜே’ என்று ஜெயித்து வந்து விட்டது.
மூன்று மாதம் கழித்து எம்.எல்.ஏ.ஆற அமர நன்றி சொல்ல வந்தார். பொத்தம் பொதுவாய் நன்றி சொல்லி விட்டு அன்றைக்குப் போனவர்தான், இன்று வரைக்கும் இந்தப் பக்கம் தலையைவைத்துக் கூட படுக்கவேயில்லை.
மற்ற நேரம் தான் வரவில்லை. போய்த் தொலையுது. ஊர்லே இப்படி ஒரு இடி விழுந்து, ஊரே இழவு வீடாகிக் கிடக்கையிலாச்சும் எட்டிப் பார்க்க வேண்டாமா? ஓட்டுப் போட்ட ஜனத்துக்கு ஆறுதலா நாலு வார்த்தை சொல்ல வேண்டாமா? அசையாமல் இறுகிக் கிடக்கிற அதிகாரிகளை அதட்டி விரட்ட வேண்டாமா? டாக்டர் குழுவை ஊருக்குள் கொண்டு வந்து, உடனுக்குடன் உள்ளூரிலேயே வைத்தியம் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டாமா?
இதெல்லாம் செய்யாம… எம்.எல்.ஏ. பொறுப்பத்துப் போய் எங்கேயோ கிடந்தா… என்ன அர்த்தம்? ஊர் ஜனங்க மனக்கொதிப்புலே வையத்தானே செய்வாக? பாத்துக்கிட்டு நாம சும்மாத்தானே கிடக்கணும்? வாயைப் பொத்திக்கிட்டு பம்மிப் போய்த்தானே இருக்கணும்?
முனியசாமி சைக்கிள் அந்தச் சிறு டவுனுக்குள் போய் நின்றது. தனியார் மருத்துவமனையில் ரத்தினமுனியையும் சேர்த்தான். அவனுக்கு அவசரமாய் ரெண்டு ஊசி போட்டு, குளூக்கோஸ் ஏற்றுவதற்கான ஏற்பாடு செய்தார், டாக்டர். ஸ்டாண்டு இல்லாததால், இவனே குளுக்கோஸ் பாட்டிலை ஏந்திப் பிடித்துக் கொண்டு மரமாய் நின்றான், விடிய விடிய..
மறுநாள்-
மிச்சமிருந்த ஊர்க்காரர்கள் ஆண்களும் பெண்களுமாய் நாலு டக்கர்களில் ஏறி… சாலை மறியலுக்குப் போனார்களாம். அங்கே… ஒரே சச்சரவாம். எஸ்.ஐ. வயர் லெஸ்ஸில் அதிகாரிகளுக்குச் செய்தி சொல்ல… மறியலுக்கு வந்த ஜனம் பூராவும் ஒரே கூப்பாடுதானாம்.
அதற்குப் பிறகுதான் தாசில்தார் ஊருக்கு வந்தாராம்… பி.டி.ஓ., டி.டி.ஓ. எல்லாருக்கும் ஊர்ப்பாதை தெரிந்ததாம். டாக்டர் குழுவும் மூன்று வேன்களில் ஊசி மருந்துகளோடு வந்து விட்டதாம். கலெக்டர் கூட ஊர் வரப் போவதாகத் தகவல்.
ஜீப்களும் வேன்களும் சர்ர் புர்ர்ரென்று ஓடிப் பாய்ந்து… ஊரையே கலங்கடிக்கிறதாம்.
முனியசாமிக்கு எல்லாமே தகவல்தான். இவன்தான் ரத்தினமுனிக்குப் பராமரிப்பாய் இங்கே கிடையாய்க் கிடக்கிறானே…
இத்தனை பரபரப்பிலும் எம்.எல்.ஏ. வராதது, இவனுக்கு ரொம்ப வருத்தம், மனச்சங்கடம். ‘ச்சே’ என்று வெறுப்பாக இருந்தது.
அப்போதுதான்-
வேர்க்க விறுவிறுக்க சைக்கிளில் வந்து இறங்கினான் ராமசாமி.
”நம்ம ஊருக்கு எம்.எல்.ஏ. வந்துருக்காரு.”
அத்தனை துன்பத்திலும் முனியசாமிக்குள் ஒரு சிலிர்ப்பு. செத்துப் போகாத நம்பிக்கையின் உயிர்ப்பு. உயிரின் வெளிச்சம் அவனுக்குள் சட்டென்று பரவிப் பாய்கிற பெருமித உணர்ச்சி.
அவன் முகமெல்லாம் ஒரு மலர்ச்சி. தூக்கமில்லாமல் கனத்துக் கிடந்த கண்களில் மிருதுவான பிரகாசம். உண்ணாமல் காய்ந்து கிடந்த தேகத்தில் ஒரு தெளிவு. நெஞ்சு நிமிர்வு.
“நெசம்மாவா?” என்று ஆனந்தக் கொந்தளிப்போடு கேட்டான், முனியசாமி.
“நெசந்தா. சிமிண்டுக் கலர் மாருதி வேன்ல வந்திருக்காரு.”
“இங்கிலீஷ்லே தண்ணிபட்ட பாடாய்ப் பேசுவாரே… அடடா… அதைப் பாக்க நா அங்கே இருக்க முடியலியே…”
“இங்கயும் வரப் போறாரு. இங்க அட்மிட்டாயிருக்கிற நம்மூரு ஆளுகளைப் பாக்க வரப் போறாரு.”
”அப்படியா? வரட்டும், எம்.எல்.ஏ.ஐ கொறை பேசுறதுன்னா… நம்ம ஊர்லே உப்பு போடாம் பேசுவாக. இப்பவாச்சும் அவரோட அருமையைத் தெரிஞ்சிக்கிடுவா கல்லே?”
அவனுக்குள் சொல்லிமாளாத மகிழ்ச்சி. ஆட்சியின் கௌரவம் காப்பாற்றப்பட்டால் இவன் மானம் காப் பாற்றப்பட்டது மாதிரி. இவன் தலைக்குக் கிரீடம் கிடைத்த மாதிரி.
மருத்துவமனையின் வாசலில் நின்று, ரோட்டின் நுனியில் பார்வையை நங்கூரமிட்டான். கண்களில் வந்து நின்ற மன ஆவல்.
ஸ்கூட்டர் வருகிறது. டி.வி.எஸ். 50 வருகிறது. மஞ்சள் வேன்கள், லாரிகள், கட்டபொம்மன் பஸ், சைக்கிள்கள் எல்லாம் வருகின்றன. சிமெண்ட் கலர் மாருதி வேன் மட்டும் வரவில்லை.
அவனுள்ளே றெக்கையடிக்கிற இதயம். வெளியே வந்து விடப் போவதைப் போல விம்முகிற நெஞ்சு. நிமிஷம் யுகமாகத் தோன்ற பொறுமையின்றித் தவித்தான். மனப் பரபரப்பில் கூடுதலாய் ரெண்டு பீடி பற்ற வைத்தான்.
‘ஒரு வேளை…இங்க வர்றதைக் கேன்ஸல் பண்ணிட் டாரோ…?’
ரத்தினமுனிக்கு வயிற்றோட்டம் நின்றுவிட்டது. குளுக்கோஸையும் நிறுத்தியாகிவிட்டது. சாயங்காலம் வரைக்கும் இருந்து பார்த்து விட்டுப் போகச்சொல்லி யிருக்கிறார், டாக்டர்.
“இனிமே… அவ்வளவுதான். எம்.எல்.ஏ. இங்க வர மாட்டாரு” என்று ஏமாற்றம் நெஞ்சில் சோகமாய்த்திரள முணுமுணுப்போடு பெருமூச்சோடு திரும்பிய போது-
அதோ… சிமிண்டு கலர் மாருதி வேன். நேராய் வந்து மருத்துவமனையில் நிற்கிறவேன். பரிவாரங்களோடு இறங்குகிற எம்.எல்.ஏ.
முந்திக்கு இப்போது சற்று ஊதியிருக்கிறார். கூடுதலான சிவப்பு உதட்டில் நல்ல கனிந்த சிவப்பு. கொசு வந்து உட் கார்ந்தால்கூட துல்லியமாய்த் தெரியும். அப்படியொரு பளீர் வெள்ளையில் வேட்டியும், ஷர்ட்டும். வழுவழுப் பான பளிச். கனத்த கழுத்தில் முறுக்கு வடத் தங்கச்செயின். வலது கையிலும், இடது கை வாட்ச்சிலும் தங்கச் செயின்கள்.
மகிழ்ச்சியும் பரவசமுமான உணர்ச்சித் ததும்பலோடு ஓடிப் போய் வணக்கம் சொன்ன முனியசாமி. சிநேகித மற்ற உதட்டசைவோடு (புன்னகை) அவனைக் கடக்கிற எம்.எல்.ஏ.
இவனது வியர்வை மழையில் – தூக்க விழிப்புகளில் வீடு வீடாய் அலைந்து ஓட்டிய டோர்சிலிப்புகளில் – ஜெயித்து எம்.எல்.ஏ. ஆனவர். கண்டு கொள்ளாமல் நகர்ந்து போகிறார்.
அவனுக்குள் சுள்ளெறும்பு கடித்த மாதிரியானதோர் வலி. உள்ளோடுகிற அவமதிப்பு அவஸ்தை. சமாளித்துக் கொண்டான்.
‘தினம் தினம் ஆயிரக்கணக்கான ஆட்களோடு புழங்குகிற தலைவர், எம்.எல்.ஏ., ஒரு கிராமத்துத் தொண்டனை ஞாபகத்துலே வைச்சிருக்க முடியாமப் போனது… பெரிய தப்பு இல்லை…”
மருத்துவமனைக்குள் நுழைகிற எம்.எல்.ஏ. கால் வைக்க இடமில்லாமல் படுத்துக் கிடக்கிற ஆட்கள். உயிர்க் களையற்று வெளுத்துப் போன முகங்கள்.
எம்.எல்.ஏ. முகத்தில் வந்து சப்பென்று மோதுகிற நாற்றம். மலமும், வாந்தியும், மருத்தும் கலந்து குமட்டலான நாற்றம். அவர் முகத்தில் விழுகிற சுருக்கங்கள்.
சில சில வினாடிகள், ஒரு சிலரிடம் தங்கி நின்று விட்டு யந்திரமாய் நகர்கிற எம்.எல்.ஏ. பின்னால் ஆர்வப் பரபரப் பாய்ப் பின்னோடுகிற முனியசாமி.
“பானெட்டுப் பேரு டிஸ்சார்ஜ் ஆகிப் போய்ட்டாக, இப்ப நாப்பத்தொம்பது பேரு நம்மூரு ஆளுக இங்க இருக்காக. நம்மூருக்கு வடக்கே ஒம்பதாவது மைல்லே கவர்மெண்ட் ஆசுபத்திரி. அங்க இருபத்திநாலு பேரு இருக்காக. மேக்கொண்டு ராசபாளையம், சிவகாசின்னு பெரிய ஊர்கள்லே போய்ச் சேர்ந்தவுக வேற…”
பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவலைச் சொல்லிக் கொண்டே பின்வந்தான், முனியசாமி கேட்காமலேயே தலையசைத்துக் கொண்டு போன எம்.எல்.ஏ., டாக்டர் ரூமிற்குள் நுழைந்தார். அவருடன் வந்த பரிவாரம், வேடிக்கை பார்க்கக்கூடிய கூட்டம் எல்லாம் அடர்த்தியாகி விட… பிதுக்கப்பட்ட மொச்சைப் பயிராக வெளியே நின்றான், முனியசாமி.
டாக்டரிடம் இங்கிலீஷிலேயே பேசுகிற எம்.எல்.ஏ., ஆங் கிலத்திலும், தமிழிலுமாகப் பேசுகிற டாக்டர். டாக்டரிடம் துல்லியமாக வெளிப்படுகிற வெறுப்பு… வற்புறுத்தலுக்குப் பணிய மறுக்கிற திமிறல்.
ஆங்கிலத்திலேயே படபடக்கிற எம்.எல்.ஏ.
கோபத்தைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு பலவந்தச் சிரிப்போடு பேசுகிற டாக்டர்.
“ஏங்கிட்டே அறுபத்தி ஏழு பேரு அட்மிஷன். நா விடிய விடிய ட்ரீட் பண்ணியிருக்கேன். எதுக்காக இருபத்தி யொன்னுன்னு நா லிஸ்ட் குடுக்கணும்? நோ!”
மீண்டும் வற்புறுத்துகிற எம்.எல்.ஏ. மறுத்துப்பார்த்த டாக்டர், வேறு வழியின்றிப் பணிகிற காட்சி.
இவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. புரிந்த விஷயம், உள்ளுக்குள் விஷமாக இறங்குகிறது.
மக்கள் மறியல் போராட்டம் நடத்தி… டாக்டர்கள், அதிகாரிகள் எல்லாம் வந்து சேர்ந்த பிறகு… கடைசி ஆளாய் வந்து சேர்ந்த எம்.எல்.ஏ., இப்போதும் துன்பத்தைத் துடைக்க வரவில்லை. துயரங்களில் பங்கெடுக்க வரவில்லை. பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வாங்கித் தர வரவில்லை. இனியும் காலரா நிரந்தரமாகப் பாதிக்காம லிருக்க, புதிய குடிநீர்க் கிணறு தோண்டுவதற்கான முயற்சிக்காக வரவில்லை.
நோயில் தாக்குண்டோரின் எண்ணிக்கையைக் குறைத் துக் காட்டுகிற பட்டியல் தயாரிக்கத்தான் வந்திருக்கிறார். 67 என்ற உண்மையை 21 என்று பொய்யாக்கத் தான் வந்திருக்கிறார். பொய் ரிக்கார்டு உருவாக்க மட்டுமே…
முனியசாமிக்குள் பிரளயம். முகத்துக்கு நேராகப் பாய்ந்து வருகிற செருப்புகள். சீறிச் சினந்து வருகிற செருப்புகள். உற்றுப் பார்த்தால்… எல்லாச் செருப்புகளுமே இவனது செருப்புகள்தான். நீலமும் வெள்ளையுமான செருப்பு.
‘தானே தன்னை முட்டாளாக்கிக் கொள்ள முடியுமா? முடிந்திருக்கிறதே…! இதோ நா முட்டாளாகி நிற்கிறேனே…’
இந்தப் புதிய நிஜத்தை தரிசிக்கத் தெம்பில்லாமல் முனியசாமி தவித்தான். உள்திணறல். பேச்சற்று, திகைத்துப் போய் உறைந்து விட்டான்.
திரும்பி வந்த எம்.எல்.ஏ. இவனிடம் வந்தார். இவன் கண்களில் இவனை வாசித்துக் கொண்டார். நெருங்கி நின்று தோளில் கை போட்டார். மனசோடு பேசுகிற அந்யோன்யத்துடன் சன்னைக் குரலில் நிறைய பேசினார்.
‘நம்ம ஆட்சி,’ ‘நம்ம கட்சி, ‘பேப்பர்காரங்க,’ ‘விஷமம்,’ ‘களங்கம்,’ ‘எதிர்க்கட்சி,’ ‘சட்டசபை’ என்றெல்லாம் ரெண்டு நிமிஷம் பேசினார்.
இவனுக்குள் எதுவுமே இறங்கவில்லை. கண்களின் முன் கலர் கலராய் ரேகைகள் மிதந்தன.
“சரி, போங்க…” என்று மட்டும் கடைசியாய்ச் சொன்னான், முனியசாமி.
பரிவாரங்களுடன் எம்.எல்.ஏ.யும் ஏறிக்கொள்ளசிமிண்டு கலர் மாருதிவேன் புறப்பட்டது. இவன் அங்கேயே நிற்க, வேன் மட்டும் போய்க்கொண்டேயிருக்கிறது. தூரம் தூரமாய்… அந்நியமாய்…
– நவம்பர் 1993, கல்கி தீபாவளி மலர்.
– கணக்கு (சிறுகதைகள்), முதற்பதிப்பு: மார்ச் 1994, திருவரசு புத்தக நிலையம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
வளர்கவி
September 18, 2026
இந்திரா
நீர்வை பொன்னையன்
September 18, 2026
இடைவேளை
எஸ்.சங்கீதா
September 18, 2026
