தனக்கு வந்தால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 27, 2026
பார்வையிட்டோர்: 91 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

இந்த ‘கதையின் கரு’ கூட டைரக்டர், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரன் அவர்களின் “வாரம் ஒரு கதை” தொலை காட்சி தொடரில் பார்த்ததுதான். பல வருடங்கள் ஆகி விட்டது. இருந்தாலும் இவை எல்லாம் மறக்க முடியாதது. கதை என் போக்கில் எழுதப்பட்டது.

காலையில் கண் விழித்த “அந்த பங்களா” அதிர்ச்சியாகி நின்றது.

வேலைக்காரர்கள் அலறி அடித்து பங்களாவின் உரிமையாளரும் ராகேஸ் ஸ்டீல் கம்பெனியின் உரிமையாளரனுமான ராகேஸ்வர்,முன்னால் நின்று கொண்டிருந்தனர்.

சுமார் அறுபது வயதுக்கு மேல் ஆகியிருந்த ராகேஸ்வரன் கோபத்தில் குமுறிக் கொண்டிருந்தார். போங்க, போய் முதல்ல அவங்களை விரட்டுங்க, இது என்ன கடை வீதியா இல்லை,ஆளுங்க வசிக்கற இடமா?

அவர் முன்னால் நின்ற வேலைக்காரன் தலையை சொறிந்தான். ஐயா அவங்களை மிரட்டி பார்த்துட்டோம், விரட்டியும் பார்த்துட்டோம், ஆனா கேட்கமாட்டேங்கறாங்க.

அவர்களை முறைத்து பார்த்த ராகேஸ்வரன், நீங்க எல்லாம் எதுக்கும் ஆகமாட்டீங்க, திட்டியவாறே அவரே பங்களா காம்பவுண்ட் கேட்டருகே வந்தார்.

வாங்க வாங்க சூடா இட்லி, சாம்பார், பொங்கல், பூரி எல்லாம் இருக்கு, சாப்பிட்டு போங்க, அந்த தள்ளு வண்டி கடைப்பெண், கூவிக்கொண்டிருந்தாள்..

அவள் புருசன் போவோர் வருவோர் சாப்பிட்டு விட்டு தரும் தட்டுக்களை கழுவி துடைத்து வைத்து கொண்டிருந்தான்.

பத்து நிமிடம் காம்பவுண்ட் கேட்டருகே நின்றவாறு அவர்களை கவனித்து கொண்டிருந்தார் ராகேஸ்.

அவர்கள் இவரை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை, இதை விட அவரை மிகவும் கோபபடுத்தியது பக்கத்து பங்களா பரமசிவம் தன் பொண்டாட்டி எங்காவது பார்த்து விடுவாளோ என்று பயந்து பயந்து பூரியும் மசாலையும் உள்ளே தள்ளி கொண்டிருந்தார்.

வாங்க சாமி சாப்பிட்டு பாருங்க, நல்லா இருக்கு, இவரை பார்த்து சர்ட்டிபிகேட்டும் கொடுத்தார். ராகேஸ்சுக்கு எரிச்சல் அதிகமாக ஆரம்பித்தது. இந்தாளுக்கு சுகர், பி.பி அதிகமாக இருக்கிறது என்று அவர்கள் வீட்டு மாமி இவர்கள் வீட்டு மாமியுடன் தினம் புலம்பி கொண்டிருக்கிறாள்.

இப்படி போட்டு திணித்தால், எல்லாம் வரத்தான் செய்யும், நினைத்து பல்லை கடித்தவருக்கு தான் எதற்கு வந்திருக்கிறோம் என்பது ஞாபகம் வர வேகமாக அவர்களை நெருங்கினார்.

யாருப்பா நீங்க? இங்க எல்லாம் கடை போடக்கூடாதுன்னு தெரியாதா? கடுமையாக அந்த ஆளை பார்த்து கேட்டார்.

அவன் அதை கண்டு கொள்ளாமல் அடுத்து வந்தவரிடம் தட்டில் இட்லி எடுத்து வைத்து கொடுக்க சொன்னான்.

ஏம்ப்பா நான் கத்திகிட்டிருக்கேன், நீ பாட்டுக்கு வியாபாரம் பண்ணிகிட்டிருக்கே?

சாமி நாங்க ஏழைங்க, எங்களுக்கு வியாபாரம் மட்டும்தான் தெரியும், அதைத்தான இப்ப பண்ணிகிட்டிருக்கோம்.

நீ எங்க வேணா போய் வியாபாரம் பண்ணு ஆனா, என் வீட்டு முன்னாடி வந்து பண்ணாத.

அந்த பெண் சிரித்தாள், என்னா சாமி இப்படி சொல்றீங்க? இங்க பாருங்க இது கார்ப்பரேசன் ரோடு, இதுல நான் ஓரமா கடை போட்டிருக்கேன். இதில வந்து போட கூடாதுன்னு எதுக்கு சாமி நீங்க சண்டை பிடிக்கறீங்க?

இது முழுக்க முழுக்க “ரெசிடெண்சியல் ஏரியா” இங்க இதெல்லாம் இருக்க கூடாது, மரியாதையா இப்ப காலி பண்ணறீங்களா? இல்லை போலீசை கூப்பிடட்டுமா?

பகபகவென சிரித்தாள், சாமி இப்பத்தான் போலீசு சாப்பிட்டுட்டு நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போச்சு. நீ கூட சாப்பிட்டு பாரு சாமி, அதுக்கப்புறம் மாமி சமைக்கறதை கண்டுக்கவே மாட்டே. அந்த பெண் ஒரு வாழை மட்டையை எடுத்து அதில் வாழை இலை வைத்து இரண்டு இட்லி சட்னி, சாம்பார் ஊற்றி கொண்டு வந்தாள்.

அவருக்கு குமட்டலாக வந்தது, வேண்டாம், வேண்டாம், கத்தியபடி காம்பவுண்டுக்குள் நுழைந்து கொண்டார்.

சாப்பிட்டு போடப்பட்ட தட்டுக்களும், இலைகளும் அவரை பார்த்து சிரித்தன.

கடும் கோபமாக பங்களாவுக்குள் நுழைந்தவர் போலீஸ் அதிகாரிக்கு போனை எடுத்து பேசினார்.

எனக்கு தெரியாது சார், எங்க வீட்டு முன்னாடி கடை போடறதுக்கு யார் சார் பர்மிஷன் கொடுத்தது? உங்க போலீசூம் இதுக்கு உடந்தை,

எதிரில் என்ன சொன்னார்களோ தெரியவில்லை, அவரது முகம் கொஞ்சம் சமாதானமானது மாதிரி தெரிந்தது.

பத்து மணிக்கு குளித்து தயாராகி அவரது கார் வெளியே வரும்போது அந்த இடம் சுத்தமாக இருந்தது.

“வெரிகுட்” சொல்ல வேண்டிய இடத்துல சொன்னால்தான் நடக்குது, பெருமையாக மனதுக்குள் சொல்லிக் கொண்டார்.

மறு நாள் விடிந்தது. மீண்டும் பங்களா பரபரப்பானது, அவரது பங்களா கேட் முன்னால் தள்ளு வண்டியில் டிபன் கடை வியாபாரம் தூள் பறந்தது. மாடி ஜன்னல் வழியாக பார்த்த பொழுது அவரது கிளப்பில் மெம்பராக இருப்பவர்கள் கூட சத்தமில்லாமல் தட்டில் வாங்கி சாப்பிட்டு விட்டு ஒன்றும் தெரியாதவர்கள் போல அவரவர்கள் பங்களாவுக்குள் போவதை பார்த்தவருக்கு பற்றிக்கொண்டு வந்தது.

போனை எடுத்து நேற்று பேசிய அதிகாரியிடம் மீண்டும் கோபமாக பேசி விட்டு போனை வைத்தார்.

சரியாக பத்து மணிக்கு வெளியே கிளம்பும் போது பளிச்சென்று இருந்தது. இருந்தாலும் இவருக்கு மனம் திருப்தி இல்லாமல் ஏதோ ஒரு சங்கடம் வந்திருந்தது.

பேசாமல் யாராவது ஒரு “ரவுடியை” ஏற்பாடு செய்து இவர்களை விரட்டலாமா? ஆனால் இது அவரது ‘வியாபார மூளைக்கு’ சிக்கல் வரும் என்று உணர்த்த என்ன செய்யலாம்? யோசிக்க ஆரம்பித்தார்.

கிட்டத்தட்ட ஒரு வாரம் இதே போல் இவர் பங்களா முன்னால் கடை போடப்பட்டு கணவனும் மனைவியும் வியாபாரத்தை கவனித்து பத்து மணிக்குள் அந்த இடத்தை சுத்தப்படுத்தி விட்டு சென்று விடுவார்கள்.

ஒரு கட்டத்தில் பேசாமல் விட்டு விடலாமா ! என்று மனம் நினைத்தாலும் அவரது பணக்கார எண்ணம், ஏன் என் பங்களா முன்புதான் கடை போட வேண்டுமா? இந்த கேள்வி எழ மனம் கோபத்தின் உச்சிக்கு போய் விடும்.

நண்பர் ஒருவரை யோசனை கேட்டார். நீ அவங்களை, இவங்களை, நம்பறதுக்கு பதிலா பேசாம அவங்களையே கூப்பிட்டு கேட்டுடு, பணம் கொஞ்சம் கேட்டாலும் அழுது தொலைச்சுடு. முதல்ல என் வீட்டு முன்னாடி கடை போடாதேன்னு அவங்களை சரிகட்டு.

கணவன் மனைவியாய் அவர் முன் நின்று கொண்டிருந்தார்கள். இங்க பாருங்க, நான் இந்த ஒரு வாரமா சொல்லி பார்த்துட்டேன், நீங்க கேட்க மாட்டேங்கறீங்க. சொல்லுங்க, திடீருன்னு எதுக்கு என் வீட்டு முன்னாடி இப்படி கடை போட்டு இடத்தை அசுத்தம் பண்ணறீங்க.உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இதை செய்யறீங்க, அதை பத்தி எல்லாம் நான் கவலைப்படலே. எவ்வளவு எதிர்பார்க்கறீங்க, அதை சொல்லுங்க, அழுது தொலைக்கிறேன். தயவு செய்து என் வீட்டு முன்னாடி இப்படி அசுத்தம் பண்ணறதை நிறுத்தி தொலையுங்க.

அந்த பெண் சப்தமாய் சிரித்தாள். ஏன் சாமி எவ்வளவு கொடுப்பீங்க?

நேரிடையாய் அந்த பெண் இந்த கேள்வியை கேட்கவும் சற்று தடுமாறினார். நீ எவ்வளவு கேட்கறேங்கறதை பொருத்தது.

அவள் கணவன் முன் வந்து இப்ப நாங்களே உங்க இடத்தை சுத்தம் பண்ணிட்டுத்தான் போறோமே. மிஞ்சுனா மூணு மணி நேரம் இந்த அசுத்தம் உங்களை என்ன பண்ணுதாம்.

அவனை முறைத்தார். என்ன பேசறே, இவ்வளவு செலவு பண்ணி கட்டியிருக்கற பங்களா முன்னாடி ஒரு சாப்பாட்டு கடைய போட்டு நாஸ்தி பண்ணிட்டு மூணு மணி நேரம்தான் அட்ஜெஸ்ட் பண்ணிக்குங்க அப்படீன்னு சொல்றியே, உனக்கு அறிவு இருக்கா?

இப்பொழுது அந்த பெண் சிரித்தாள், வாய் விட்டு சத்தம் போட்டு சிரித்தாள். சாமி இப்ப சொன்னீங்களே இவ்வளவு செலவு பண்ணி கட்டியிருக்கற பங்களா முன்னாடி அசிங்கம் பண்ணாதீங்கன்னு, அறிவு இருக்கான்னும் கேட்கறீங்களே, இதே கேள்விய நாங்க உங்களை பார்த்து கேட்டா என்ன பண்ணுவீங்க.

என்ன சொல்கிறாள் இந்த பெண்? என்னம்மா பேசறே, நான் என்ன பண்ணேன் அறிவில்லாம போறதுக்கு?

அப்படி கேளு சாமி, உன் கம்பெனி இருக்கற இடத்து பக்கத்துலதான் நாங்க குடியிருக்கோம். நாங்க எல்லாம் உன்னை மாதிரி இம்மாம் பெரிய பங்களா கட்டி குடியிருக்கலை. ஓலை குட்சி வீடுதான் எங்களோடது.

அந்த இடத்துல நூறு குடும்பம் தங்கிக்கினு இருக்கோம். ஆனா நீ உன் கம்பெனியில இருந்து வெளி வர்ற எல்லா கெமிக்கலும், எங்க குடிசை வாசல்ல வந்து தேங்கி நின்னுக்கினு எங்க குழந்தைங்க எல்லாம் அதனால நோவுல சீரழிஞ்சுகினு இருக்கோம்.

எத்தனை முறை உங்களாண்ட வந்து கெஞ்சி கூத்தாடியிருப்போம். அப்ப இன்னா சொன்னீங்க, ‘கோர்ட்டுல கேசு போட்டுக்க’ அப்படீன்னு தெனாவெட்டா உங்க கம்பெனி ஆளுங்க சொன்னாங்க.

மூணு மணி நேரத்துக்கு சாப்பாட்டு இலையும் மீதி சோறும் உனக்கு அசிங்கமா தெரியும்போது எங்களை யோசிச்சு பாரு, உன்னோட ‘கெமிக்கலுக்குள்ளதான்’ நாள் பூரா வாழ்ந்துகினு இருக்கோம். எங்களுக்கு எத்தினி கஷ்டம் இருக்கும்னு. தினம் ஆஸ்பத்திரின்னு அல்லாடிக்கிட்டு வாழ்ந்திகினு இருக்கோம். சொல்லிக்கொண்டே அந்த பெண்ணும், அவள் கணவனும் தேம்பி தேம்பி அழ..

அதிர்ச்சியாய் நின்று கொண்டிருந்தார் ராகேஸ்.

ஒரு வாரம் ஓடியிருந்தது. ஜன்னலை திறந்து பார்த்த ராகேசுக்கு, மனம் எதிர்பார்ப்பாய் இருந்தது. அங்கு சாப்பாட்டு கடை வியாபாரம் நடக்காதா என்று..!

அவர்கள் ஏன் வரப்போகிறார்கள், மறு நாளே ராகேஸ் அவர்கள் குடிசைப் பகுதிக்கே போய் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தகுந்த முன்னேற்பாடுகள் செய்து கொடுத்தது மட்டுமல்ல, அந்த குடிசைப் பகுதியின் அடிப்படை வசதிகளை இனி கம்பெனியே ஏற்றுக்கொள்ளும் என்று ஏற்பாடு செய்திருந்தார்.

dhamodharan பிறந்த வருடம் 1966, “கோவை மருத்துவ மையம்” (KMCH) கோயமுத்தூர். துணை மருத்துவமான ‘செவிலியர்’ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். 1. இவரது சிறுகதை “நிலம் விற்பனைக்கு அல்ல” இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 2. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” இவரது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது. இலக்கிய அங்கீகாரம் 3. “குவிகம்” இலக்கிய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *