அக்டோபர் மூன்று

அக்டோபர் 3ஆம் தேதி, விடியற்காலை. ஜெர்மன் நேரப்படி, அதிகாலை 3. 53 மணிக்கு, அரவிந்தன் பயணித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், ஸ்டர்ட்கார்ட் நகரத்தில் தரை இறங்கியது. எங்கும் கடும் குளிர். அந்தக் கடும் குளிரிலும், எந்தவித கம்பளி உடையும் இல்லாமல், சாதாரண உடையில், கரும்பச்சை வண்ண மெர்சிடெஸ் பென்ஸ் சிற்றுந்தில் லேசாகச் சாய்ந்தபடி, ஜோஸ்பின் என்ற ஜோஸ்பின் சகாய வின்மதி தனியே உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருக்க, நின்று கொண்டிருந்தாள்.
அரவிந்தன் ஜோஸ்பினைப் பார்க்க அதிகம் சிரமப்படவில்லை. அவள் அரவிந்தனுக்காக, அந்த அதிகாலை நேரத்திலும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தாள். அவளைப் பார்த்தவுடன் அரவிந்தன் புன்னகைத்தான். அரவிந்தனைப் பார்த்தவுடன் அவள் முகம் பளிச்சென்று பரவசத்தில் பிரகாசம் அடைந்தது. அவள் ஓடி வந்தாள். அவனை ஏற இறங்கப் பார்த்தாள். அவனது இரு கரங்களையும் மென்மையாகப் பற்றி கொண்டு,
“என்னடா நல்லா இருக்கியா?” என்று கேட்டுக் கொண்டே அவனது கைகளில் மென்மையாக முத்தமிட்டாள். அரவிந்தனும் அவளது கரங்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டு சற்று ஆனந்தத்தோடு சொன்னான்,
“நான் நல்லா இருக்கேன்டி, நீ நல்லா இருக்கியாடி?” என்று கேட்டபடி, அவன் அவளுடன் அவளது சிற்றுந்துவை நோக்கி நடந்தான். திடீரென்று ஆனந்த பரவசத்தில் அவள் அரவிந்தனைக் கட்டியணைக்க முற்பட்டாள். அவன் விலகி நின்றான். அரவிந்தன் அவளிடம் செல்லமாகக் கோபித்துக் கொண்டான்.
“என்னடி நீ மட்டுமா வந்திருக்க? உன் வீட்டுக்காரர் வரலையா?” எனக் கேட்டு பேச்சை மாற்றினான்.
அவள் பதில் எதுவும் சொல்லாமல் வேகமாக கதவைத் திறந்து விட்டு, அவனை உள்ளே தள்ளினாள். அடுத்த சில நொடிகளில் சிற்றுந்து சிறகடித்து சிட்டாக விரைந்தது.
அவள் அவனை நினைத்தபடி ஏக்கத்தில்… அரவிந்தனோ பயணக்களைப்பில் ஆழ்ந்த தூக்கத்தில்… வழியில் இருவரும் எதுவும் பேசிக்கொள்ள வழி இல்லை. சிற்றுந்து 100 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நிமிடங்கள் 110 கிலோமீட்டர் வேகத்திலுமாக மாறி மாறி வேகம் எடுத்துப் போய்க்கொண்டிருந்தது. வழியில் உள்ள வீடுகள் எல்லாம் பாரம்பரியமான வீடுகள். உயரம் தான் வித்தியாசம். மற்றபடி ஜன்னல்கள் எல்லாம் ஒரே மாதிரி ஒரே அளவில் வரிசையாக இருந்தன. எல்லா வீட்டு கூரைகளும் தகர்த்தால் மூடப்பட்டு ஒரே மாதிரியாக, நம்ம ஊர் ஓட்டு வீடுகளைப்போல், ஆனால் சற்று உயரமாக இருந்தன. அவள் இப்போது அவனை ஸ்டர்ட்கார்ட் நகரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ‘ஓஹா’ என்னும் சிறிய கிராமத்தில் உள்ள புதிய அழகிய தோட்ட வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தாள்.
ஆறு மாதங்களுக்கு முன்பு வரை, ஜோஸ்பினும் அவளது கணவன் டேவிட் இருதயராஜும் பெர்லின் நகரத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். எல்கா நதிக்கரை ஓரம் அமைந்துள்ள ஒரு மலைப் பாங்கான இடத்தில் உள்ள ‘மோட்சன்’ என்ற 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய திராட்சைத் தோட்டத்தில் ஜோஸ்பின் மேற்பார்வையாளராக பணி புரிந்தாள். டேவிட் அங்கிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹூவர்ட் மதுபான ஆலையில் நிர்வாகியாக பணிபுரிந்து வந்தான். இப்போது இருவரும் அங்கே பணி புரியவில்லை.
ஜோஸ்பின் சகாய வின்மதி தற்போது குவெட்லின்பர்க் நகரத்திற்கு அருகில் உள்ள 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட மால்கம் எகர்ன் என்ற பெரிய திராட்சைத் தோட்டத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகின்றாள். அவளுக்கு முன்பை விட தற்போது அதிக சம்பளம் கிடைக்கிறது.
சிற்றுந்து “அரவிந்தன் விண்மதி வில்லா” என்று பெயர் பொறிக்கப்பட்ட அந்த வீட்டின் முன்பு அமைதியாக நின்றது. வீட்டின் பெயர் வீட்டின் மேற்புறத்தில் சிறிய வடிவத்தில் இருந்தது. அது அரவிந்தன் கண்களில் படவில்லை.
இருவரும் சிற்றுந்துவின் கதவைத் திறந்து வெளியே வந்தார்கள். அரவிந்தன் வீட்டையும் வீட்டைச் சுற்றியுள்ள அழகான தோட்டத்தையும் பிரமிப்போடு பார்த்துக் கொண்டே நின்றான்.
“டேய் இதாண்டா என் வீடு. வாடா உள்ளே போகலாம்”என்று ஜோஸ்பின் சொல்ல, அவன் மெல்ல அவள் பின்னே சென்றான். அவன் தயங்கியபடியே அவளிடம் கேட்டான்.
“ஏய் உன் வீட்டுக்காரர் எங்கடி? அவர் என்ன வேலை விஷயமா வெளியூர் போயிருக்காரா, சொல்லுடி?”
அரவிந்தன் ஆர்வத்துடனும் கொஞ்சம் பதட்டத்துடனும் கேட்டான். அவள் பதில் எதுவும் சொல்லாமல் அரவிந்தனைக் கோபமாக பார்த்தாள். பின் கேட்டாள்.
“டேய் அப்படியே ஓங்கி அறைஞ்சேன்னு வச்சுக்க கன்னம் வீங்கிப் போயிடும். பேசாம என் பின்னால வாடா”
அரவிந்தன் ஜோஸ்பினைப் பார்த்துக் கேட்டான்.
“ஏய் நீ பண்றது எதுவும் எனக்குப் புரியலடி. எனக்கு ரொம்பப் பயமா இருக்குடி. நீ உன் வீட்டுக்காரரைப் பத்தி சொன்னாதான், நான் உள்ள வருவேன். இல்லன்னா இப்படியே திரும்பிப் போயிடுவேன்”என்று அரவிந்தன் அவளிடம் அடம் பிடித்தான்.
அவள் அரவிந்தனை ஆழமாகப் பார்த்தாள். அருகே வந்தாள். அவனைக் கட்டிப்பிடித்தபடி, அவனது கன்னத்திலும் உதடுகளிலும் மேய்ந்தாள். அவன் அவளிடம் சாய்ந்தான். அவனுக்கு அது குதூகலமாக இருந்தபோதிலும், உள்ளே குழப்பமும் அவனைக் குதறிக் கொண்டே இருந்தது. அடுத்து அவன் வேறு பேச்சு எதுவும் பேசாமல் அவள் சொன்னபடி அவள் பின்னால் சென்றான்.
அரவிந்தன் காலை 8 மணி வரை தூங்கினான். அதன்பின் எழுந்து குளித்தான். காலை உணவை சாப்பிட்டபின், தனி அறையில் படுத்து ஓய்வெடுத்தான். அவனுக்கு தூக்கம் வரவில்லை. ஜோஸ்பின் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள். அவளது கணவனுக்கு என்ன ஆயிற்று? அவளது கணவனைப் பற்றி ஏன் சொல்ல மறுக்கிறாள்? ஏன் அதை மறைக்கிறாள்? இது எங்கே போய் முடியப் போகிறதோ! என்கிற ரீதியில் அவனது யோசனை பரங்கிக் கொடியாய் அவனைச் சுற்றிப் படர்ந்து கொண்டிருந்தது.
ஜோஸ்பின் மிக மிக நல்லவள். பண்பானவள். எல்லோரிடமும் அன்பாகப் பழகுபவள். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவள் அவனது காதலி. இவனும் ஜோஸ்பினும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ஒன்றாகப் படித்தவர்கள். படிக்கும்போதே அவர்களிடையே காதல் மலர்ந்தது. கல்லூரி படிப்பு முடிந்தபின் இருவரும் திருமணம் செய்வதென முடிவு செய்து பெற்றோரிடம் தெரிவித்தனர். ஜோஸ்பினின் பெற்றோர் பச்சைக்கொடி காட்ட, அரவிந்தனின் பெற்றோரும் உற்றார் உறவினர்களும் இதற்கு சிகப்புக் கொடியை காட்ட, திருமணம் தடைப்பட்டது. அதன் பின் ஜோஸ்பினின் குடும்பம் திருநெல்வேலிப் பக்கம் சென்று விட்டது. அதன் பின் இருவருக்கும் இடையே கடிதத் தொடர்போ அலைபேசி தொடர்போ இருக்கவில்லை.
இப்போது ஜோஸ்பின் இன்னொருவரின் மனைவி. அப்படிப்பட்டவள் ஏன் இப்படி தாறுமாறாக நடந்து கொள்கிறாள்? அவளது செய்கைகள் தவறானதாகவே தோன்றுகிறது. ஆனாலும் அவளது செய்கையில் ஏதோ அர்த்தம் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அவளது கணவன் அவளைப் பிரிந்து விட்டானா? அல்லது வேறு பெண்ணுடன் வாழ ஆரம்பித்து விட்டானா? அல்லது இருவரும் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து விட்டார்களா? என்பதுதான் இன்னும் புரியவில்லை.
ஆனாலும் அவள் நல்லவள். அவள் எடுக்கும் முடிவுகளும் நல்லதாகவே இருக்கும் என்ற நம்பிக்கையும் அவள் மேல் உள்ள பழைய ஈர்ப்பும், அன்பும் அவனை இங்கே ஜெர்மனிக்கு வரவழைத்து இருக்கிறது.
அரவிந்தன் அவளோடு மீண்டும் இணைந்து வாழ்வதற்கான வழியாக இந்தப் பயணம் இருக்கும் என்ற அளவில் அவனது எண்ணங்கள் இருந்ததனால், அவள் அலைபேசியில் அவனை அவசரமாக வரச் சொன்ன பிறகு, மறுப்பு சொல்லாமல் இங்கே வந்திருக்கின்றான்.
தொலைதூரத்திலிருந்து வந்த பிறகு, அதுவும் அவள் அனுப்பி வைத்த பணத்தைக் கொண்டு விமானம் ஏறி அவள் சொன்னபடி மறுப்புச் சொல்லாமல் வந்த பிறகு, இப்போது அவளிடம் வம்பு பண்ணிக் கொள்ள அவனுக்கு மனமில்லை. அவன் பொறுமையாக இருந்தான்.
“போற மாட்ட போற போக்குல விட்டுத் தான் திருப்பணும்”என்று அப்பா அடிக்கடி சொல்லும் பழமொழி அரவிந்தனை அடிக்கடி வந்து விசாரித்து விட்டுச் சென்றது.
மதியம் ஜோஸ்பின் தானே சமைத்த உணவுகளோடு, அவனுக்கு அன்பையும் சேர்த்து பரிமாறினாள்.
அந்த உணவில் அவனுக்குப் பிடித்த உருளைக்கிழங்கு உன்னதமாய் இடம்பெற்று இருந்தது. அரவிந்தன் அவற்றை ரசித்து, ருசித்து சாப்பிட்டபடியே ஜோஸ்பினையும் அவளது சமையலையும் மனதாரப் பாராட்டினான். அரை மணி நேரத்திற்கும் மேலாக அவன் அவளிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டான்.
சாப்பிட்டு முடித்த பின்னர் அரவிந்தன் நாற்காலியில் அமர்ந்தபடி, ஜோஸ்பினை ஓரக்கண்ணால் பார்த்தான். கண் ஜாடையில் அவளை அருகே அழைத்தான். அவள் அவன் அருகே வந்தாள். அவளை ஆசையோடு பார்த்தான். அவன் அமர்ந்தபடி இருக்க, அவள் அவன் அருகே நின்று கொண்டிருந்தாள். அவளது இரு தோள்களையும் தனது இரு கைகளால் பற்றிக் கொண்டான். அவளது இரு மார்புகளுக்கு இடையில் முகம் புதைத்து அவளைக் கட்டிப்பிடித்தபடி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். அந்த நிலையில் அவனை அவள் ஒரு குழந்தையாக நினைத்து, தனது மார்பை அவனது வாயில் வைத்து அழுத்தியபடி அவனது அழுகையை நிறுத்த முயன்றாள். அதிலும் அவனது அழுகை நிற்கவில்லை. அவனது முகம், நெற்றி, கழுத்து தோள்கள் என மாறி மாறி முத்தமிட்டாள். அவனது அழுகை நிற்கவில்லை.
இப்போது ஜோஸ்பினும் சேர்ந்து அழ ஆரம்பித்தாள். உடனே அழுதபடியே அவனை கட்டிலில் கிடத்தினாள். தன் மடியில் வைத்து, அவனை தட்டிக் கொடுத்தாள். அவன் அப்படியே அவள் மடியில் தூங்கிப் போனான். சிறிது நேரத்தில் அவளும் அவனோடு தூங்கிப் போனாள். அப்போது மதியம் சாப்பிடும்போது அவர்களுக்கிடையே நடந்த உரையாடல்கள் கனவு போல அவன் நினைவில் வந்து நிழலாடியது.
“ஜோஸ்பின் இந்த மாதிரி ருசியா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சுடி. ரொம்ப நல்லா இருக்குடி”
“உனக்கு உருளைக்கிழங்கு பிடிக்கும்னு அத்தை சொல்லி இருக்காங்க. அதனாலதான் நான் உனக்காக உருளைக்கிழங்கிலேயே வகை வகையா பொறியல், அவியல், மசியல், போண்டா, ஊறுகாய் என விதவிதமா செஞ்சிருக்கேன். இங்கே ஜெர்மனியிலேயும் எல்லாரும் உருளைக்கிழங்கு ரொம்ப விரும்பி சாப்பிடுறாங்க”
“சரிடி அத்தைன்னு யாரைச் சொல்ற?”
“. போடா மடையா உங்க அம்மாவைத்தாண்டா சொல்றேன். சரிடா, பேசாம சாப்பிடுடா. அப்புறம் பேசிக்கலாம். அப்புறம் இங்க சூப் வச்சிருக்கேன்டா. இதை மறக்காம குடிச்சுக்கடா “
“ என்ன சூப்புடி அது? “
“அதுவா, அது நான் உனக்காக செஞ்ச முருங்கைக்கீரை மற்றும் காய்கறி சூப்டா. நீ மறக்காம குடிச்சிடுடா”
“ஏண்டி நீ ஒரு முடிவோடதான் என்ன இங்கே வரச் சொல்லி இருக்கியா?”
“டேய் ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்க. பொதுவா பொம்பளைங்க மனச அவ்வளவு சீக்கிரம் மாத்திக்க மாட்டாங்க. ஆனா ஆம்பளைங்க குறிப்பா இந்தக் காலத்துப் பசங்க, அடிக்கடி மனச மாத்திக்கிற மாதிரிதான் இருக்காங்க. உங்க அப்பா அம்மா உனக்கு பண்ணி வச்ச கல்யாணமோ சரியில்லாமல் போயி, நீ இப்ப தனியா இருக்கிற. ஆனாலும் நீ இன்னும் என்னோட பழைய அரவிந்தனா இருக்கியா இல்ல மாறிப் போயிட்டியா? என்று எனக்குத் தெரியலடா. அதனாலதான் நான் உன்கிட்ட சில விஷயங்களை சொல்லாமல் மறச்சேன். மத்தபடி உன்னக் குழப்பனும்னு நான் நினைக்கலடா. என்னப் புரிஞ்சிக்கடா. சில விஷயங்களை அலைபேசியில் பேச முடியாது. நேர்ல பேசினா தான் ஒரு நல்ல முடிவுக்கு வர முடியும். அதனால்தான் நேரிலேயே பேசி ஒரு முடிவுக்கு வரணும்கிறதுக்காகத்தான் உன்ன நான் இங்க வரச் சொன்னேன். ஆனா உன்ன விமான நிலையத்துல பார்த்த உடனேயே நீ என்ன வாடி போடின்னு அன்பா பேசுனப்பவே நான் உன்னைப் புரிஞ்சுகிட்டேன்டா. இனி உனக்கு நான். எனக்கு நீன்னு இங்கேயே வாழ்ந்துருவோம்டா. நீ என்ன சொல்ற?”
“சரிடி எனக்குக் கல்யாணம் ஆன விஷயம் உனக்கு எப்படித் தெரிஞ்சது?”
“அதான் நம்ம ஊர்ல வடக்குத் தெருவுல செண்பகம்னு ஒருத்தி இருக்கா. அவ நம்மளோட படிச்சவ. உனக்கு அவள நல்லாத் தெரியுமே”
“ஆமாண்டி, மாமா மூக்கையாப் பொண்ணு. அவ இப்ப மதுரையில வேலை பார்க்கிறா. சரிடி என்னோட சிறுக்கி கல்யாணம் ஆன அன்னைக்கு ராத்திரியே வேறு ஒருத்தனோட ஓடிப்போன விஷயம் உனக்குத் தெரியுமாடி?”
“ஓ நல்லாத் தெரியும். ஆனா அந்த சக்களத்தி நமக்கு நல்லதத்தான் செஞ்சுட்டு போயிருக்கா. அது தெரிஞ்சப் பிறகுதான் நான் உன்னோட அலைபேசி மூலமாக பேசினேன்”
“எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாருடி. நடக்கிறது எல்லாம் நன்மைக்கே. அது சரியாதான் இருக்கு”
“ஆமா உங்க அப்பா அம்மாவைச் சொல்லாத. அவங்க மட்டும் நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருந்திருந்தா, இந்நேரம் நமக்கு ஏழு எட்டு பிள்ளைகள் பிறந்திருக்கும். அவங்கதான் ஜாதி, மத,ம் அது இதுன்னு சொல்லி நம்மளபீ பிரிச்சு வச்சுட்டாங்க”
“சரிடி அது எப்படி மூணு வருஷத்துல ஏழு எட்டு பிள்ளைகள் பிறக்கும்?”
“இல்லடா எனக்கு குழந்தைங்கன்னா ரொம்பப் பிடிக்கும்டா. நம்ம வீடு முழுக்க குழந்தைகளா இருக்கணும். அதுங்க அடிக்கடி அடிச்சுக்கிட்டு, விளையாடிக்கிட்டு சிரிச்சிக்கிட்டு இருக்கிற காட்சி, அதெல்லாம் அந்தக் காலத்து மனுஷங்களுக்கு வாச்சது. இப்ப எனக்கும் அது மாதிரி ஆசை வந்துருச்சு. இனி நம்ம நல்ல மனசுக்கு நமக்கு ரெட்டை குழந்தைதான் பிறக்கும்னு நினைக்கிறேன்”
“ஓஹோ நீ அதனால தான் அப்படிச் சொன்னியா? சரிடி நம்ம கல்யாணப் பேச்சு முடிஞ்சு போன பிறகு, உங்க குடும்பம் திருநெல்வேலிக்குப் போய்ட்டதா நான் கேள்விப்பட்டேன். உனக்கு எப்படி அந்த ஜெர்மனி மாப்பிளை கிடைச்சான்? உனக்கு சொந்தக்காரனாடி?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லடா. நாங்க திருநெல்வேலியில் எங்க சித்தப்பாவோட பெரிய வீட்ல தங்கி இருந்தோம். அங்க சித்தப்பா வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பையன் ஜெர்மனியில் வேலை பார்த்துக்கிட்டு இருந்தான். அவன் வருஷம் ஒரு தடவை ஊருக்கு வந்துட்டு போவான் அவன் மூலமாத்தான் சரியா விசாரிக்காம அவசரப்பட்டு எனக்கு இந்த டேவிட்ட கல்யாணம் பண்ணி வச்சாங்க”
“நீ சொல்றது செய்யறது எல்லாம் சரிடி. ஆனா இந்த டேவிட் பற்றிய தகவல் மட்டும் சொல்லிட்டேனா நான் கொஞ்சம் குழப்பம் இல்லாம நிம்மதியா இருப்பேன்டி’” அவன் கெஞ்சினான். அவள் அரவிந்தனின் கண்களை கனிவோடும், அடங்காத காதலோடும் பார்த்தாள். ஒரு கனப் பொழுதிற்கு மேல் அவள் தனது பார்வையை தனித்துக் கொண்டாள். அவளால் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கத்தினாள்.
“டேய் இப்ப என்ன விடுடா. எனக்கு ஒரு மாதிரியா இருக்குடா. எல்லாத்தையும் ராத்திரிக்கு பேசிக்குவோம்”
“ஏய் ஏண்டி இப்படிக் கத்துற? யாரு உன்னப் பிடிச்சு வச்சிருக்கா? பைத்தியம் மாதிரி ஏண்டி நீயா பொலம்புற? அது சரி எனக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கொஞ்சம் சொல்லிட்டு அப்புறம் போடி”
“என்ன டேவிட் விஷயம் தானே? அதைத்தான் கண்டிப்பா ராத்திரி சொல்றேன்டா. எனக்கு இப்ப ரொம்ப களைப்பா இருக்குடா என்னக் கொஞ்சம் தூங்க விடுடா”
“நான் அதக் கேக்கலடி. நான் இங்க வந்து பத்து நாள் தங்கணும்னு சொல்லி என்ன வரச் சொன்ன. இந்த பத்து நாள் திட்டம் என்னன்னு கொஞ்சம் சொல்லிட்டு போடி”
அரவிந்தனுக்கு இப்போது 90 சதவீத நிம்மதி கிடைத்துவிட்டது. டேவிட் பற்றிய விஷயம் மட்டும் தெளிவாகி விட்டால், அவனது மனம் நூறு சதவீதம் நிம்மதியை அடையும். அவன் மனம் அன்பினாலும் ஆசையினாலும் அதிகமாய் ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது இரவின் பிடியிலும், இன்பத்தின் மடியிலும் கிடந்து அவன் இளைப்பாரிக் கொண்டிருந்தான்.
ஜோஸ்பின் பேச ஆரம்பித்தாள். அவளை ரசித்தபடியே அரவிந்தன் கேட்க ஆரம்பித்தான்.
“நம்மளோட திட்டப்படி நாளைக்கு அதாவது அக்டோபர் 4ஆம் தேதி, நோட்ரைன்வெஸ்ட்பாலன் மாநிலத்தில் ஹம் என்ற ஊரில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுறோம். 5 ஆம் தேதி குவெட்டிலின்பர்க்ல உள்ள பெரிய திராட்சைத் தோட்டத்தை சுத்திப்பார்க்கிறோம். 6 ஆம் தேதி பாம்பெர்க் நகரம், 7 ஆம் தேதி கோச்செம் நகரம், 8 ஆம் தேதி பச்சராச் நகரம், 9 ஆம் தேதி கோர் லிட்ச் நகரம், 10 ஆம் தேதி மார்பர்க் நகரம், 11ஆம் தேதி நாம பூசென் நகரத்தை சுத்திப் பார்க்குறோம். 12ஆம் தேதி ரையின் நதிக்கரை படுகை, 13-ஆம் தேதி எல்கா ஆற்றுப்பூங்கா, 14ஆம் தேதி தண்யூப் நதிகரை தோட்டங்களச் சுற்றிப் பார்க்கிறோம். 15 ஆம் தேதி பெர்லின் நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்த பாக்குறோம். கடைசியா அங்க உள்ள தேவாலயத்துக்குப் போயி ஆயர் கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு வர்றோம். இதான்டா இப்போதைய திட்டம். இதுக்கப்புறம் நீ ஊருக்குப் போயிட்டு அடுத்த பத்து நாள்ல மீண்டும் திரும்ப இங்க வந்துடணும். நான் வேலை பார்க்கிற இடத்திலேயே உனக்கும் வேலை கிடைக்க நான் ஏற்பாடு செய்றேன்டா. என்ன சரியாடா?”
“சரிடி நாம இன்னைக்கே நம்ம கச்சேரியை வச்சுக்கிட்டா என்னடி?”
அவன் ஆசையாகக் கேட்டான்.
“ஏண்டா ரொம்ப அவசரப்படுற? ஒரு பத்து நாள் ஊரெல்லாம் நல்லா சுத்திப் பார்த்துட்டு, அப்புறமா நாம கச்சேரிய வச்சுக்கலாம் என்று நினைத்தேன். உன்ன பாத்ததுல இருந்து, எனக்கும் கொஞ்சம் தவிப்பா தான்டா இருக்கு. சரிடா நாம இன்னைக்கு ராத்திரியே நம்ம கச்சேரியை வச்சுக்குவோம் சரியாடா”
ஜோஸ்பினின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அரவிந்தன் மிகவும் சந்தோசம் அடைந்தான்.
ஜோஸ்பின் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே நின்றாள். அரவிந்தன் அப்போது தங்கமென மின்னிய அவளது அங்கத்தைப் பார்த்துப் பார்த்து பரவசப்பட்டான். அவன் வேகமாக எழுந்து வந்து அவளை நெருங்கினான். அவள் அவனின் வேகத்தையும் நோக்கத்தையும் புரிந்து கொண்டு, சிரித்துக்கொண்டே வேகமாகப் பக்கத்து அறைக்குள் சென்று மெதுவாக கதவை சாத்திக் கொண்டாள். இருப்பினும் அரவிந்தன் வருத்தப்படவில்லை.
மூன்று ஆண்டுகளாய்ப் பட்ட மரமாய் படாதபாடு பட்டுக் கொண்டிருந்த அவன் மனம், இப்போது மகிழ்ச்சியில் மலர்ந்தது. அப்போது, “ஆக்கப் பொருத்தவனுக்கு ஆறப் பொறுக்க முடியலையா?” என்றபழமொழி அவன் முன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
மாலை 4 மணிக்கு ஜோஸ்பின் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் அரவிந்தன் துணிச்சலோடு நுழைந்தான். அவள் தூங்கும் அழகை, அவளது மேனி செழிப்பை, மின்னும் வன ப்பை, குலுங்கும் இளமையை பார்த்து ரசித்தபடியே சிலையாக நின்றான். அவளது தூக்கத்தைக் கெடுக்க மனமில்லாமல் அவன் அப்படியே திரும்பி வந்தான்.
இரவு 7:15 மணிக்கு இரவு உணவை சாப்பிட, இருவரும் நடுக்கூடத்தின் கீழ்புறத்தில் இருந்த, அழகிய மரமேசையில் அருகருகே அமர்ந்தார்கள். அரவிந்தன் மெல்ல பேச்சை ஆரம்பித்தான்.
“சரிடி உன் வீட்ல தொலைக்காட்சிப் பெட்டியக் காணோம்டி. ஏண்டி பழுதுபார்க்க குடுத்துருக்கியாடி?”
“இல்லடா. இப்பதான் எனக்கு தொலைக்காட்சியைப் பார்க்கவே பிடிக்கலடா. அதை பாக்குறதுக்கு பதிலாக புத்தகங்கள் நிறைய படிக்கிறேன்டா”
“சரிடி இப்ப சாப்பிட என்னடி செஞ்சி வச்சிருக்க ?”
“உனக்குப் பிடிச்ச இடியாப்பம், அப்புறம் கேழ்வரகு குழிப்பணியாரம், உனக்குப் புடிச்ச பசும்பால் பாயசம்”
அரவிந்தன் ஆச்சரியப்பட்டபடியே ஆனந்தம் அடைந்தான்.
“ஏய் எனக்கு புடிச்சதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?”
“பள்ளிக்கூடத்துல நாம படிக்கிற காலத்துலயே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா. அப்போலிருந்தே உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்பதை நான் முதல்ல தெரிஞ்சுக்கிட்டேன்டா. உனக்கு புடிச்சதெல்லாம் என்னன்னு என்னோட நாட்குறிப்புகள்ல எழுதி வச்சுக்கிட்டேன். அந்த நாள் குறிப்புகளைப் பார்த்துவிட்டுத் தான் நான் உனக்கு பிடிச்சதெல்லாம் சமைச்சு வச்சுக்கிட்டு இருக்கேன்டா. எனக்கு உன் மேல அவ்ளோ ஆசை இருக்கு. உன்னை மறக்க முடியாமல் இந்த பெர்லின் நகரத்துல தனியா இருந்துகிட்டு எத்தனை நாள் தவிச்சேன் தெரியுமா? நீதான் என்ன சரியா புரிஞ்சுக்காம தப்பா நினைக்கிற. வெளிநாட்டில் வந்து எந்த ஆண் துணையும் இல்லாம ஒரு கஞ்சாப் பேர்வழியோட போராடிக்கிட்டு வாழ்ந்துகிட்டு இருந்தேன். என்ன புரிஞ்சுக்கடா”
இரவு எட்டு முப்பத்தி ஐந்து மணிக்கு இருவரும் தனி அறையில் இருந்த அகலமான மரக் கட்டிலில் அருகருகே படுத்துக் கொண்டனர். அரவிந்தன் பேச ஆரம்பித்தான்.
“சரிடி . நீ இப்ப டேவிட்டபத்தி சொல்லுடி?”
“சொல்றேன்டா.டேவிட் இப்ப பெர்லின் சிறையில இருக்கான்டா”
“ஏண்டி ஏதாச்சும் கொலை கில பண்ணிட்டானா?”
“இல்லடா அவன் கஞ்சாக் கடத்தி விக்கிற விவகாரத்துல ஈடுபட்டிருந்தான். அதனாலதான்…”
“ஏண்டி நல்ல வேலையில இருக்கிறான். நல்ல சம்பளமும் கிடைக்குது. லட்டு மாதிரி பொண்டாட்டி இருக்கா. பிறகு ஏன் அவனுக்குக்கு இந்த ஈன புத்தி?”
“அத நீ அவன்கிட்டதான் கேட்கணும்”
“சரிடி அவன் இப்படிப்பட்ட வேலையில் ஈடுபட்டுக்கிட்டு இருக்கிறத எப்படி யாரு கண்டுபிடிச்சா?”
“நான் தான்டா கண்டுபிடிச்சேன். அவன் பண்ணின கூத்தப் பார்த்துட்டு நான் பெர்லின் காவல்துறை அதிகாரிக்கு அலைபேசி மூலமாக அவனைப் பற்றிய விஷயத்தைச் சொன்னேன். அவங்க டேவிட் இல்லாதப்ப நாங்க தங்கி இருந்த பெர்லின் வீட்டுக்கு நேர்ல வந்து, என்கிட்ட ஒரு மனுவை எழுதி வாங்கிட்டுப் போனாங்க”
“அதுக்கப்புறம் என்னடி ஆச்சு?”
“அவன் மேல வழக்குப் பதிஞ்சு அவன உள்ள வச்சுட்டாங்க. என்னோட துணிச்சலையும் நேர்மையையும் பாராட்டி எனக்கு இந்த வீட்டை இந்த அரசாங்கம் பரிசாகக் கொடுத்தாங்க”
“ஓ அப்படியா! சரிடி இப்ப டேவிட் எந்த ஊரு சிறையில் இருக்கான்டி?”
“டேவிட் இப்ப பெர்லின் சிறையில் தான் இருக்கான். அவன் மேல ரெண்டு மூணு கொலை வழக்கும் இருக்குன்னு இப்ப எனக்கு சேதி கிடைச்சிருக்கு இனி அவனுக்கு ஆயுசு பூரா சிறைதான்”
“சரிடி இந்த டேவிட் கல்யாணத்துக்குப் பிறகு உன் கிட்ட…”
“நீ என்ன கேட்க வர்றேங்கிறது எனக்குப் புரியுதுடா. அந்தக் கூத்த ஏன் கேக்குற? டேவிட் கல்யாணம் பண்ணின நாளிலிருந்து ஆறு மாசத்துக்கு முன்னாடி அவனக் கைது பண்ணி சிறைக்கு கொண்டு போற வரைக்கும், என்னோட ஒரு நாள் கூட கூடினது இல்லடா. ஏன் ஒரு முத்தம் கூட கொடுத்தது இல்லடா. அவன் ராத்திரியில ஒரு தடவ என்னை வந்து பார்ப்பான். கன்னத்தை தடவுவான். அப்படியே பேசாமப் போயிருவான். இப்படியே அவன் மாசக்கணக்கா பண்ணிட்டு இருந்தான். என்ன காரணம்னா அவன் கஞ்சா விக்கிறது மட்டுமல்ல அவனுக்கு கஞ்சா அடிக்கிற பழக்கமும் இருந்திருக்கு. வெளியில சொன்னா வெட்கக்கேடுண்ணு நான் இதை யார்ட்டையும் சொல்லல. இப்பதான் உன்கிட்ட முதல்ல சொல்றேன்டா”
“சரிடி நீ விவகாரத்து வாங்கிட்டியா இல்லையா?”
“நான் பெர்லின் காவல்துறை அதிகாரிகள் எங்க வீட்டுக்கு வந்தப்பவே, நான் விவாகரத்துக்கும் ஒரு மனுவை எழுதி நீதிமன்றத்துக்கு அப்பவே அனுப்பி வச்சேன். பத்து நாளைக்கு முன்னாடி தான் எனக்கு விவாகரத்து கிடைச்சுச்சு”
“சரிடி அக்டோபர் 3ஆம் தேதி, இங்க இருக்கிற மாதிரி வந்துருன்னு சொன்னியே. அந்த அக்டோபர் 3ஆம் தேதி அப்படி என்ன விசேஷம்?”
“அதுவா ரெண்டா பிரிஞ்சி இருந்த கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும், ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒண்ணா இணைஞ்ச நாள் அது. நாமலும் அது மாதிரி இணையனுங்கறதுக்காகத்தான் அக்டோபர் 3ஆம் தேதி, ஒன்ன இங்க வரச்சொன்னேன். இப்ப புரியுதாடா ?”
அரவிந்தன் ஜோஸ்பின் கண்களையே வெகு நேரம் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
![]() | எழுத்தாளர் பற்றிய குறிப்புகள்: பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்: 1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள் (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க... |
