தமுக்கம் தந்த திருப்பம்
கதையாசிரியர்: அம்பாள் ஆர்.முத்துமணி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி 
கதைப்பதிவு: April 6, 2026
பார்வையிட்டோர்: 347
(2025ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மதுரை வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. சின்ன அண்ணாமலை பொறுமையிழந்த நிலையில் இருந்தார். காலேஜ் ஹவுஸ் வரையில் பொடி நடையாக வந்து பில்டர் காபி குடித்துவிட்டு ஒரு பெட்டிக் கடையில் நியூஸ் பேப்பர் வாங்கிக் கொண்டார். அந்த விடிகாலைப் பொழுது வீதியெங்கும் நடமாட்டமின்றிக் கிடந்தது. தெரு ஓரங்களில் ஒதுக்கப்பட்ட குப்பைகள் இன்னும் துப்புரவு பணியாளர்களால் எடுத்துச் செல்லப்படாமல் அங்கங்கே குவிந்து கிடந்தன. நியூஸ் பேப்பரை வாங்கிய சின்ன அண்ணாமலை ஒரு சிகரெட்டையும் வாங்கிக் கொண்டு, தன் இடுப்பில் சொருகியிருந்த வெட்டுப்புலி தீப்பெட்டியிலிருந்து ஒரு குச்சியை எடுத்து உரசி பத்தவைத்து ஒரு இழுப்பு இழுத்துவிட்டார்.
பிறகு தான் தங்கியிருந்த கீதா லாட்ஜை நோக்கி கண்ணுக்கு எட்டும் தூரத்தில் கிழக்குக் கோபுரம் தெரிகிறதா என்று அண்ணாந்து வானத்தைப் பார்த்தவாறு நடக்க ஆரம்பித்தார். குறுக்கும் நெடுக்குமாய் இரண்டொரு சைக்கிள்கள் அவரைக் கடந்துபோய் கொண்டிருந்தன. ஊர் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. பகல் முழுவதும் நெருக்கடியையே சந்தித்துவரும் வீதி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது போல் வெறிச்சோடிக் கிடந்தது.
சின்ன அண்ணாமலை திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதுவது, படங்கள் தயாரிப்பது என்று பிரபலமாவதற்கு முந்தைய காலங்களில் எதையாவது செய்து சாதித்துவிட வேண்டுமென்ற துடிப்போடு வளர்ந்துவந்த காலம் அது. என்றாவது ஒருநாள் நானும் பிரபலமாவேன் என்ற உந்துதலும் உறுதியும் அவருக்குள்ளே பொதிந்து கிடந்தது. இளம்வயதில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைபட்டார். இவையெல்லாம் அவருக்கான இளமைக்கால அடையாளங்கள். ஆனால் தனக்குள்ளும் இன்னும் பலவகைக் கோணங்களில் திறமை ஊன்றிக் கிடப்பதை அறியாதவராய் இருந்தார். பிற்காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உற்ற நண்பராய் மற்றுமின்றி அவருடைய ரசிகர்மன்றத் தலைவராகவும் செயல்பட்டார். அவரைக் கொண்டு திரைப்படங்களும் தயாரிக்கலானார். வாழ்க்கை எதிர்காலக் கனவுகளுக்குள் தனக்குத் தெரியாமலேயே எதையெல்லாம் மறைத்து வைத்திருக்கிறது என்பதற்கு சின்ன அண்ணாமலை போன்றவர்களே சாட்சி.
கீதா லாட்ஜின் வாசலை நெருங்கிய போது, அண்ணாமலை அண்ணே, உங்களுக்கு டிரங்கால் வந்திருக்குனு ஓடிவந்து ரூம்பாய் சொன்னதும், அவர் தன் வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு படியேறி ரிசப்ஷனில் போனை வாங்கிப் பேசினார். எதிர்முனையில் அவருடைய நண்பர் சாவியிருந்தார். சின்ன அண்ணாமலை விரக்தியோடு அடப்போங்கய்யா, நான்வந்து இரண்டு நாளா இருக்கேன். நீரும் இங்கு வரக்காணோம். என்ன செய்யிறதுனு தெரியாம நான் இங்கு தவிச்சிக்கிட்டுக் கிடக்கேன் என்று சாவியிடம் புலம்பினார். சாவி கொஞ்சம் பொறுமையாயிரும் என்றும் ட்ரெயினில் டிக்கெட் போட்டேன். நாளைக் காலையில் வந்துவிடுவேன் என்றும் சொல்லிவிட்டு போனைத் துண்டித்துவிட்டார். சின்ன அண்ணாமலைக்கு ஏனோ அந்த போனைத் தூக்கித் தரையில் போட்டு உடைத்துவிட வேண்டும் போல ஆத்திரம் பொங்கியது கடைசியாக ஒரு இழு இழுத்துவிட்டு, தன் விரல் இடுக்கிற்குள் சிக்கிக் கொண்ட அந்த துண்டு சிகரெட்டைச் சுண்டி ரோட்டைப் பார்த்து எறிந்துவிட்டு வேகமாகத் தன் அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டார்.
சா. விஸ்வநாதன் என்ற ‘சாவி’ சின்ன அண்ணாமலையின் வெகுநாளைய நண்பர். வடஆற்காட்டில் மாம்பாக்கம் என்ற ஊரில் பிறந்தவர். எல்லோருக்கும் அவரை எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் சிறந்த இலக்கியவாதி என்றுதான் தெரியும். பள்ளிப்படிப்பை அதிகம் அறியாத அவர், சுயமாய் சிந்தித்து தன்னை உயர்த்திக் கொண்டவர். கல்கி பத்திரிகையில் ‘விடாகண்டர்’ என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார். பிற்காலங்களில் குங்குமம், சாவி என்ற அவருடைய வாரப்பத்திரிகைகள் உலகெங்கும் பிரபலமாகி அவருக்குப் புகழ் ஈட்டித் தந்தன.
இரண்டு மாதத்திற்கு முன், சாவியிடம் சொல்லிவிட்டு பம்பாய் போயிருந்த சின்ன அண்ணாமலை அங்கு பிரபலமாயிருக்கும் மல்யுத்த வீரர்களை எப்படியாவது தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டுமென கங்கணமாய் இருந்தார். பம்பாயில் மல்யுத்தம் பிரபலமாயிருந்தது. மக்களுக்கு அதன்மீது ஒரு மோகமே இருந்தது. அங்கு நடக்கும் அந்த ஷோவை மதுரையில் அரங்கேற்றினால் நிறைய வருமானம் ஈட்டலாம் என்ற தனியாத ஆர்வம் அவருக்குள் மேலிட்டது. பம்பாய் சென்ற அவர் பெரும்பாடுபட்டு அன்றைய பிரபல தாராசிங்கை எப்படியோ சந்தித்து அவரிடம் சம்மதம் வாங்கிவிட்டார்.
தாராசிங் தன்னோடு ஆட்டத்தில் எதிர்த்து ஆடும் கிங்காங்கையும் அழைத்துவருவதாய்ச் சொன்னார். ஆனால் தாராசிங் சொன்ன சில நிபந்தனைகளைக் கேட்ட சின்ன அண்ணாமலை அதிர்ந்துபோனார். அதில் முக்கிய மானது, ஐயாயிரம் ரூபாய் அட்வான்ஸ். அதுபோக மெட்ராஸ் வரை விமானக் கட்டணமும், மதுரைக்கு வரும்வரை போக்குவரத்து ஏற்பாடும் என்ற தாராசிங் அத்தோடு நிறுத்தவில்லை. மொத்த வசூலில் 25 சதவீதம் கொடுத்துவிட வேண்டுமென்றும் நிபந்தனைகளையும் நீட்டிக்கொண்டே போனார். இதுதவிர மதுரையில் தங்கவசதி, சாப்பாட்டுச் செலவு என்று சகலமும் இருக்கும் என்பதை நினைத்துப்பார்த்த சின்ன அண்ணாமலைக்குக் கண்ணைக்கட்டியது. அவர் முகம் சுருங்கிவிட்டதைப் பார்த்த தாராசிங் அவசரம் இல்லை நண்பரே, நாளைக்குக் கூட யோசித்து உங்கள் முடிவைச் சொல்லுங்கள் என்று அனுப்பிவைத்தார்.
அரைகுறை ஹிந்தி பேசி சமாளித்த சின்ன அண்ணா மலையை தாராசிங் உதவியாளர்கள் வாசல்வரை விட்டுச் சென்று ஏதோ கிண்டலாய் கிசுகிசுத்தார்கள். சின்ன அண்ணாமலைக்கு அது புரியவில்லை ஆனாலும் அவர்கள் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட வேண்டும்போல் ஆத்திரம் வந்தது. நிர்க்கதியாய் காட்டில் விடப்பட்டதுபோல தெருவின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். பிறகு ஏதோ முடிவு செய்வதாய் பக்கத்திலிருந்த போஸ்ட் ஆபீஸில் சென்னைக்கு டிரங்கால் புக் பண்ணியபடி அங்கு கிடந்த பெஞ்சில் சாய்ந்துபடுத்தார். ஆரம்பமே இவ்வளவு சிரமம் என்றால் எப்படி இந்த குஸ்திஷோக்களை நடத்திப் பணம் சம்பாதிப்பது என்ற மலைப்போடு மனதில் எதைஎதையோ போட்டுக் கொண்டவராய் சற்று கண் அயர்ந்தார்.
அலறிய தொலைபேசி அவரை அடித்து எழுப்பியது. எதிர்முனையில் சாவி. சின்ன அண்ணாமலை எல்லா விவரத்தையும் விளக்கமாய் சொன்னார். நமக்கு இது ஆகாது என்று ஒட்டுமொத்தமாய் மறுத்தார் சாவி. ஆனால் சின்ன அண்ணாமலை விடவில்லை. நான் எப்படியாவது பணத்தைப் புரட்டி அட்வான்ஸ் கொடுத்து விட்டுத்தான் வருவேன் பாரும் என்று சபதம் செய்தார். என்னத்தையும் செய்யும், என்னைய இந்த ஆட்டையில் சேக்காதீரும்னு விரக்தியோடு போனைத் துண்டித்தார். சில்லறையை எண்ணிக் கொடுத்துவிட்டு ஒரு முடிவோடு பிளாட்பாரத்தில் வந்து நின்றார்.
சமீபகாலத்தில் பம்பாயில் டிராம் சர்வீஸ் நிறுத்தப்பட்டு விட்டதைக் கேள்விப்பட்டிருந்த சின்ன அண்ணாமலை தாபருக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறினார். இருக்கையில் அமர்ந்த அவருடைய மூளை அபாரமாக வேலை செய்தது. தன் பழைய டைரியைத் தன் பையிலிருந்து எடுத்துப் புரட்டினார். அவசரத்திற்குத் தேவைப்படலாம் என்று எண்ணி என்றைக்கோ பம்பாய் வந்து செட்டிலாயிருந்த தன் அத்தைமகன் சந்தநாதனின் விலாசத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.
தாபரில் இறங்கி அந்த விலாசத்தை ஒரு பெட்டிக் கடைக்காரரிடம் விசாரித்தார். அந்த நபர் கையைக் காண்பித்து ஏதோ சொன்னார். அதைக் கேட்டுவிட்டு விடுவிடுவென சின்ன அண்ணாமலை நடக்க ஆரம்பித்தார். மனதில் உறுதி இருக்கும்போது கால்களுக்குத் தெம்பு வந்து விடுகிறதே என்று எண்ணியபடி சந்தநாதனின் வீட்டுக் கதவைத் தட்டினார்.
சின்ன அண்ணாமலைக்கு வரவேற்பு தடபுடலாய் இருந்தது. சந்தநாதனின் மனைவி அருள்மொழி நலன் விசாரித்துக் கொண்டே சுடச்சுட காபியைக் கொடுத்தாள். இரண்டு குடும்பங்களுக்கும் உள்ள நெருக்கத்தை சந்தநாதன் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தான். மச்சான் சின்ன அண்ணாமலை மீது மிகுந்த அன்பும், பாசமும் சந்தநாதனுக்கு எப்போதும் உண்டு. உங்க அப்பாரு எத்தனையோ எங்க ஆத்தாவுக்கு செஞ்சாறு மச்சான், இதுல என்ன தயக்கம்! இதுகூட நான் செய்யமாட்டேனான்னு சொல்லி சந்தநாதன் ஐயாயிரத்தை உடனே எடுத்துக் கொடுத்தான். வசூல் ஆகிற முதல் பணத்துல இதை ஊருல ஆச்சிக்கிட்ட திருப்பிக் கொடுத்துருவேனு சொல்லிவிட்டு சின்ன அண்ணாமலை அங்கிருந்து கிளம்பினார்.
பணத்தைப் பத்திரமாக பைக்குள் வைத்துவிட்டு நடக்க ஆரம்பித்த சின்ன அண்ணாமலை மனதில் தன்னைக் கேலி செய்த தாராசிங்கின் கையாள்களிடம் இதைக் காண்பித்து அவர்கள் வாயை அடைக்க வேண்டுமென்று சிந்தித்தவாறு தாராசிங்கின் அலுவலக வாசலை அடைந்தார்.
பணத்தை வாங்கிக் கொண்ட தாராசிங் சின்ன அண்ணாமலைக்கு நன்றி சொல்லியவாறு எழுந்து நின்றார். எழுந்து நின்ற தாராசிங்கின் ஆஜானுபாகுவான உயரமான தோற்றத்தையும் தங்கம் போல் மின்னிய அவருடைய தேகத்தையும் கண்ட சின்ன அண்ணாமலை அப்படியே ஒரு நிமிடம் திகைத்து நின்றுவிட்டார். தாராசிங் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய வம்சத்தில் பிறந்தவர் என்பதையும் உலகளவில் மல்யுத்தத்தில் புகழ்பெற்றவர் என்பதையும் அவரின் தோற்றம் அண்ணாமலைக்கு நினைவூட்டியது. தாராசிங் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெறுவதற்கு முன் மல்யுத்தம்தான் அவர் வாழ்வின் கனவாக இருந்தது.
தாராசிங் சின்ன அண்ணாமலையிடம் தேதிகளைக் குறித்து வாங்கிக் கொண்டு வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று தினங்களில் நிகழ்ச்சியாகையால் வியாழன் காலையிலேயே நானும் கிங்காங்கும் மதுரை வந்து சேர்ந்துவிடுவோம் என்பதாயும் அதை உறுதிப்படுத்தும் விதமாய் தந்தி ஒன்று அனுப்பி விடுவோம் என்றும் சொன்னார். சின்ன அண்ணாமலை அறை எண் 8, கீதா லாட்ஜ், டவுன் ஹால், மதுரை என்று விலாசத்தை எழுதி அவரிடம் கொடுத்தார். தன் உதவியாளர்களிடம் அதைக் குறித்துக் கொள்ளும்படி சொன்ன தாராசிங் அவர்களிடம் சின்ன அண்ணாமலைக்கு குடிக்கப் பழரசம் கொடுக்கும்படி அதை வாங்கி அவரிடம் கொடுத்து ‘பயப்பட வேண்டாம் அண்ணாமலை, நான் ஒரு அரிச்சந்திரன். சொன்னபடி செய்வேன்’ என்று கிண்டலாய் சொல்லிக்கொண்டே அந்த கட்டிடமே அதிரும் வண்ணம் சிரித்தார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தாராசிங்கின் கையாட்கள் ‘இவன் சாதாரண ஆள் இல்லை..’ என்பதுபோல் அண்ணாமலையைப் பார்த்த பார்வையில் மாற்றமிருந்தது.
சென்னை வந்தவுடன் சின்ன அண்ணாமலை சாவியை வீட்டில் சந்தித்து பம்பாயில் நடந்ததை விலாவாரியாக எடுத்துச் சொன்னார். பிறகு ‘இந்தாரும் நூறு ரூபாய், இதை வைத்துக்கொண்டு நீரும் இரண்டு தேதிக்கு முன்னாலேயே மதுரை வந்து சேரும்’ என்று சொல்லிவிட்டு ‘தெம்பாய் இரும்மைய்யா. நாம் ஜெயிக்கிறோம்’ இப்படி சின்ன அண்ணாமலை சொன்ன மாத்திரத்தில் சாவி அப்படியே அவரைக் கட்டிபிடித்து ‘ஒண்ணாவே பழகிட்டோம், ஒண்ணாவே ஜெயிப்போம்’னு பதிலுக்குத் துள்ளிக் குதித்தார். சாவியின் மனம் அப்போதே இந்த குஸ்திப் போட்டியை எப்படி வெற்றிகரமாய் நடத்துவது என்று திட்டமிடத் துவங்கியது.
ராமநாதன் பழைய தினத்தந்தி பத்திரிகை எல்லா வற்றையும் எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தார். கிட்டதட்ட இரண்டுமாத பத்திரிகைகள் முழுவதுமாய் அந்தப் பரண்மேல் கிடந்தன. எல்லாவற்றையும் எடுக்கும் போது நாள்பட்ட தூசியும் நெடியும் அந்த அறைமுழுவதும் பரவி நின்றது. திறந்திருந்த ஜன்னல் வழியாக நீண்டு அறைக்குள் விழுந்த காலை வெயிலின் ஒளிக்கதிர்களுக்குள் தூசிகள் மின்மினி போல் மிதந்து நின்றன.
பழைய பத்திரிகை கிளப்பிவிட்ட தூசியின் நெடி சமையற்கட்டிற்குள்ளும் நுழைந்துவிட்டது. மரகதம் தும்மல் போட்டபடியே அறைக்குள் நுழைந்தாள். ஏன் இப்படி எல்லா பழசையும் இழுத்துப்போட்டு தூசியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறீர்கள், என்னத்தை தேடுகிறீர்கள் என்று ராமநாதனைக் கடிந்தாள். ராமநாதன் ஒரு பண்டல் பழைய பேப்பர்களோடு ஸ்டூல் மேலிருந்து தரையில் குதித்தார். அவரைத் திட்டிக் கொண்டே மரகதம் போதும், தூசியைக் கிளப்பியது. என்ன வேணும் சொல்லுங்கள் என்றார்.
பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்னால் ‘மதுரையில் முதன்முறையாக மல்யுத்தம்’ என்ற தலைப்பில் வந்திருந்த செய்தியைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று ராமநாதன் சொன்னவுடன் மரகதம் அத படிப்பீங்கணு நினைத்தேன். அன்றைக்கே அலமாரியில் மறுபடியும் எடுத்து வைத்திருக்கிறேன் என்று துணிமணிகளோடு அவள் பத்திரப்படுத்திவைத்த அந்த நாள் தினத்தந்தியை அவரிடம் கொடுத்தாள். இப்படிக் கணவனின் குறிப்பறிந்தவளாய் மரகதம் நடந்து கொள்வாள். ஒரு நாள்கூட ராமநாதன் அதற்கான நன்றியை நேரடியாக அவளிடம் காண்பித்ததில்லை. ஆனாலும் சில நாட்கள் வீட்டிற்குவரும் சுற்றங்களிடம் இதைச் சொல்லி மகிழ்ந்து கொள்வார். இதையெல்லாம் மரகதம் மனதிற்குள் போட்டுக் கொள்பவள் இல்லை. கண்ணுக்குத் தெரியாத அன்பு வட்டத்திற்குள் சிக்கியவளாய் அந்த வீட்டையே சுற்றிக் கொண்டிருக்கிறாள். வேறு எதுவுமே அவளுக்குத் தெரியாது.
ராமநாதன் மீண்டும் மீண்டும் அந்த செய்தியைப் படிக்கிறார். அதில் தாராசிங், கிங்காங் இன்னும் சில பிரபல சீன மல்யுத்த வீரர்களைப் பற்றியும், விரைவில் தமுக்கம் மைதானத்தில் போட்டிகள் நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தின் மூலம் செய்திகள் கிடைத்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ராமநாதன் அந்தப் பக்கத்தை மட்டும் கிழித்துப் பத்திரப்படுத்திக் கொண்டார்.
ராமநாதன் மல்யுத்தம் பற்றிய செய்திகளோ படங்களோ கண்ணில்பட்டால் அதை எடுத்து சேகரித்துக் கொள்ளும் பழக்கம் வைத்திருந்தார். மல்யுத்தம் என்பது உடல் வலிமை மட்டுமல்ல, மனவலிமையையும் சார்ந்த ஒரு பயிற்சி என்பதை ராமநாதன் அறிந்திருந்தார். சிறுவயதில் ஊருக்குத் தெற்கே ஒரு நந்தவனத்தின் உடற்பயிற்சி கூடத்தில் சிறிது காலம் குஸ்தியை முறைப்படி பயின்றிருக்கிறார். அதை அவருக்குக் கற்றுக் கொடுத்த ராமையா வாத்தியார் சமீபத்தில் தன் 90 வயது வரை வாழ்ந்து இறந்துபோனார்.
பிற்காலத்தில் ராமநாதனுக்குக் குஸ்தியைத் தொடர வாய்ப்பில்லாமல் போனது. இருந்தாலும் குஸ்தி மீதுள்ள ஆர்வம் அவரோடு ஒட்டிக் கொண்டது. மல்யுத்தத்திற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. இதிகாசங்களில் அங்கங்கே மல்யுத்தம் பற்றிய குறியீடுகள் காணப்படுகின்றன. பாண்டவ சகோதர்களில் பீமசேனன் மல்யுத்தத்தில் வல்லவனாகத் திகழ்ந்திருக்கிறான். ஜராசந்தன், நிடும்பன், கிட்சகா, பரகாசுரன், ஜடாசுரன் ஆகியோரையும் ராமாயணத்தில் அனுமரையும் மகா மல்யுத்தத்தில் பலாகிரமம் பொருந்திய வீரானாய் சித்தரிக்கிறது. அதுபோல் துரியோதனனும், ராவணனும் மல்யுத்தம் கற்றிருந்த வீரர்களே. இதுபோன்ற மல்யுத்தம் பற்றிய இதிகாச ஆதாரங்களைக்கூட ராமநாதன் எடுத்து வைத்திருந்தார். அவருக்கு அடுத்த தலைமுறைகளுக்கு எப்படியாவது இந்தக் குஸ்தியைப் பற்றிய சேதியைக் கொண்டு சேர்த்து விட வேண்டும் என்ற தணியாத ஆசையிருந்தது.
ராமநாதன் அதன் பிறகு தொடர்ந்து செய்தித்தாளில் நான்கு நாட்களாகத் தினமும் மல்யுத்தம் பற்றிய செய்தி வருகிறதா என்று பார்த்த வண்ணமே இருந்தார். ஆனால் அதுவரை அது சம்பந்தமான செய்திகள் ஏதும் வரவில்லை.
அன்றைக்குப் பஜார் கடையில் உட்கார்ந்திருந்த ராமநாதன் திடீரென யோசனை வந்தவராய் வேகமாய் ஒரு சீட்டை எடுத்து ஏதோ எழுதினார். பிறகு அதைக் கடைப்பையன் வசம் கொடுத்து இதை உடனே பேப்பர் நிருபர் நவநீத கிருஷ்ணனிடம் கொடுத்துவிட்டு வா என்று அனுப்பினார் நவநீத கிருஷ்ணன் பல வருடங்களாக மதுரையிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரை அப்போதைய நிருபராக இருந்தார். ராமநாதன் குடும்பத்தோடு பல காலமாக இணக்கமாக இருந்துவந்தார்.
நவநீத கிருஷ்ணன் பையனிடம் துண்டுச் சீட்டை வாங்கிப் படித்துவிட்டு என்ன இது, எதை எதையோ எழுதியிருக்கிறார் உங்க முதலாளி. எதுவுமே புரியலேயே. சரி, நீ போ. நான் பின்னாலேயே வருகிறேன் என்று சொல்லிவிட்டு வெற்றிலையை வாயில் குதப்பிக் கொண்டே தன் தோளில் சோல்னா பையை மாட்டியவாறு சந்துக்குள்ளிருந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினார். சந்துக்குள் வரும்போது மணியடித்தவாறு பிளிச் பிளிச் என்று வெற்றிலை எச்சிலை துப்பியவாறே வருவார். இதனாலேயே சந்துக்குள் இவர் வரும்போதே நடப்பவர்கள் ஒதுங்கிப் போய்விடுவார்கள்.
கடைக்குள் நுழையும்போதே என்ன ராமநாதா, இது. வர வர உன் எழுத்து இவ்வளவு மோசமாயிருச்சுனு விமர்சித்துக் கொண்டே ராமநாதன் கையில் அந்த சீட்டைத் திருப்பிக் கொடுத்தார். ராமநாதன் அட என்னைய்யா, இதுகூடப் புரியலயா? எப்ப மதுரை தமுக்கத்தில் குஸ்தி ஆரம்பிக்குது. நீர்தான் நிருபராச்சே. தந்திப்பேப்பரே உம்ம கையில தானே. கேட்டுச் சொல்லும்யா என்றார். நவநீதன் அதுகென்ன இந்தா கேட்டுச் சொல்லுறேன்னு ராமநாதன் மேஜைமேல இருந்த போன சட்னு தன் பக்கம் இழுத்தார். உடனே தினத்தந்தி ஆபீஸுக்கு டிரங்கால் புக் பண்ணினார். போன் லைன் கிடைக்கும் வரை ஏதோ ஏதோ ஊர் நிலவரத்தைப் பற்றி தொணதொணவென்று பேசிக் கொண்டே இருந்தார்.
போன் கிடைத்தவுடன் பேசிவிட்டு நவநீதன் நம்ம மேனேஜர்தான் பேசினாரு, அவருக்கு கிடைச்ச தகவல்படி அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை குஸ்தி ஆரம்பமாகிறது என்ற செய்தியை ராமநாதனிடம் சொல்லிவிட்டு, நீர் இதை யார்கிட்டயும் சொல்லிடாதீரும். செய்தி பேப்பர்ல வருவதற்கு முந்தி இப்படியெல்லாம் யாருக்கும் தெரிஞ் சிறக்கூடாது என்று எச்சரித்தவாறு தன் சைக்கிளை எடுத்து விர்ரென்று கிளம்பிவிட்டார்.
சின்ன அண்ணாமலையிடம் போனில் கூறியபடி அன்றுகாலை சாவி மதுரை வந்து சேர்ந்தார்.இதற்கு முன்னரும் அவர் மதுரை வந்திருக்கிறார்.. ஆனாலும் இன்று ஏனோ அவர் வருகைக்காக மதுரை நகரமே காத்திருப்பது போன்ற ஒரு பிரமை அவருக்குள்.
ட்ரெயினில் வந்திறங்கிய பயணிகளில் சிலர் ரயில்வே ஸ்டேசன் எதிர்புறமாய் உள்ள மங்கம்மாள் சத்திரத்திற்குள் தங்குவதற்குச் சென்று கொண்டிருந்தனர். அகன்ற அந்த வீதியில் சவாரிக்கென்று குதிரை வண்டிகளும், வாடகை சைக்கிள் ரிக்ஷாக்களும் நின்று கொண்டிருந்தன. இரட்டை மாட்டு வண்டிகள் காய்கறிகள், சரக்குகள் என ஏற்றிச் சென்று கொண்டிருந்தன. சிம்மக்கல் என்ற பெயர் பலகையுடன் இடது ஓரமாக TVS டவுன் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு நகன்றது. ஒரு கிழவி சின்ன அடுப்பை பத்த வைத்தவளாய் தன் தெரு ஓர ஆப்பக்கடையைத் தயார்படுத்திக் கொண்டிருந்தாள். வழி நெடுகிலும் இவற்றையெல்லாம் சாவி கவனித்தவாறே டவுன் ஹால் முனையில் திரும்பினார்.
அந்த திருப்பத்தில் பிரேமவிலாஸ் அல்வா கடையில் தனக்கும் அண்ணாமலைக்கும் சின்னதாய் இரண்டு பொட்டலங்கள் அல்வா வாங்கிக் கொண்டு நடையைத் தொடர்ந்தார்.
அண்ணாமலை சாவியின் வருகையை எதிர்நோக்கி இருப்புக் கொள்ளாமல் கீதா லாட்ஜின் வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். டவுன் ஹால் முழுவதுமே பரபரப்பாய் ரிக்ஷாக்களும், சைக்கிள்களும் நடமாடும் மனிதர்களுமாய் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
வரும் வழியில் கருப்பாய் குள்ளமாய் ஒருவன் சாவியிடம் மிகவும் தெரிந்தவன் போல் அண்ணே வாங்க, நல்ல ரூம் போட்டுத்தறேன். நீங்க நினைச்சமாறி எல்லாம் கிடைக்குமென்று தன் கண்ணைச் சிமிட்டினான். சாவி ஓகோ இங்கு இதுவெல்லாம் கூட உண்டோ என்று சிரித்தவாறு அவனைத் தள்ளிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.
வாசலில் நின்று கொண்டிருந்த சின்ன அண்ணாமலை அட என்னய்யா, ட்ரெயின் வந்து அரைமணியாயிருச்சுனு சொன்னாங்க. நீங்க இப்படி மெதுவா வர்றீங்களேனு சொன்னவரிடம் இந்தாரும் அல்வா. இத உமக்கு வாங்கத்தான் லேட்டாயிருச்சினு சொல்லி இருவரும் கிண்டலும் கேலியுமாய் சிரித்தவாறு அறைக்குள் நுழைந்தனர். காலைக்கடன்களை முடித்தவாறு இருவரும் உட்கார்ந்து திட்டம் போடத் துவங்கினர். சாவி மிகத் திறமையான விளம்பர உக்தியுள்ளவர். சென்னையில் திரைப்படங்களுக்குப் பெரும்பாலான சினிமா விளம்பரங்களை செய்து கொண்டிருந்தார். உயரமாய் வித்தியாசமான முறையில் முதன்முதலில் சென்னை நகரத்தில் கட்டவுட் செய்து திரைப்படங்களைப் பிரபலபடுத்தியவரே இவர்தான்.
தான் தயாரித்து வந்திருந்த அத்தனை திட்ட வரைபடங்களைக் கொண்டு போட்டிகளை தளத்தில் எவ்விதமாய் புது விதமாய் மக்கள் விரும்பும் வகையில் செயல்படுத்துவது என்பது பற்றி விவரித்தார். சின்ன அண்ணாமலை தமுக்கம் மைதானத்திற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டதாயும் மேடை அமைப்பது, மைக், லைட்டுகள் அமைப்பது என்று அத்தனைக்கும் காண்ட்ராக்ட் பேசியுள்ள விவரத்தையும் விளக்கினார். இப்படி இரண்டு பேருமே தங்களின் முயற்சிக்காக எடுத்துக் கொண்ட முன் ஏற்பாடுகளைப் பற்றி திட்டமிட்டவாறே அந்தப் பகல் கடந்தது. இரவுச் சாப்பாட்டைக் கூட ரூம்பாயிடம் காலேஜ் ஹவுஸில் வாங்கிவரச் சொல்லி சாப்பிட்டுக் கொண்டனர். நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் இன்னும் தாராசிங்கிடமிருந்து தந்தி வரவில்லையே என்று சிந்தித்தவாறு சின்ன அண்ணாமலை அன்று இரவு விரிப்பை விரித்து தரையிலேயே தூங்கிப்போனார்.
கடந்த பல நாட்களாகவே தன்னை வருத்திக் கொண்ட களைப்பு அவரை சுருட்டிக் கொண்டது. தலையணை கூட இல்லாமல் படுத்திருந்த சின்ன அண்ணாமலையைப் பார்த்த சாவி தன் கட்டிலில் இருந்த மற்றொரு தலையணையை எடுத்து அவர் தூக்கம் கலைந்துவிடாத படி தலைக்குள் சொருகினார். பிறகு மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளைக் குறிப்பெடுத்து எழுதிக் கொண்டு கூஜாவில் இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு விளக்கை அணைத்தார்.
அந்த லாட்ஜின் வராண்டாவில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளின் வெளிச்சம் ஜன்னல் கம்பி வழியாக அறைக்குள் எட்டிப்பார்த்தது. அப்போது பல்லி ஒன்று ஜன்னல் கம்பி வழியாக ஊர்ந்து, வெளிச்சத்தை நோக்கி வெளியே தாவிச் சென்றது. படுக்கையில் தலை சாய்ந்த சாவி, விட்டத்தில் ‘கடக்கடக்’ என சத்தம் கொடுத்து சுழன்று கொண்டிருந்த அந்த ரிமைட்டன் மின் விசிறியை உற்றுப் பார்த்தபடியே கண்ணயர்ந்து போனார். இருவரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாலும் ஆழ்மனதில் சாதிக்க வேண்டுமென்ற வேட்கை விழித்துக் கொண்டுதானிருந்தது.
அரைகுறையாக விடிந்திருந்த போது யாரோ அறையின் கதவைத் தட்டுவதைக் கேட்டு விளக்கைப் போட்டபடி சாவி கதவைத் திறந்தார். சார், உங்களுக்குத் தான் தந்தி வந்திருக்கிறதென்று அங்கு ரிஷப்சனில் வேலை பார்க்கும் பையன் வந்து தந்தியைக் கொடுத்துவிட்டுச் சென்றான். சத்தம் கேட்ட சின்ன அண்ணாமலையும் விழித்துக் கொண்டார். சாவி தந்தியை அவரிடம் கொடுத்துப் பிரித்து படியும் என்று கொடுத்தார். அண்ணாமலை படித்துவிட்டு, தாராசிங் தான் இன்று பகல் பாம்பே மெயிலில் மெட்ராஸ் வந்து பிறகு திருவனந்தபுரம் மெயிலில் காலை மதுரை வந்து விடுவதாக கொடுத்திருக்கிறார் என்று சொன்னார். சின்ன அண்ணாமலைக்கு அவர் வரும் செய்தி மகிழ்ச்சியாக இருந்தாலும், அவரையும் கிங்காங்கையும் தங்கவைக்க வேண்டுமே என்ற சிந்தனை ஒருபுறம் ஓடியது.
சாவி சின்ன அண்ணாமலையிடம் இதென்னய்யா, இதற்குப் பதிலா ஒரு சினிமா படமே எடுத்துறலாம் போலய்யா என்று சலித்துக் கொண்டார். சரி, வாரும் காலேஜ் ஹவுஸ் வரை போய் ஒரு காபியை குடிச்சுக்குவோம். அப்பத்தான் மூளையும் சுறுசுறுப்பா வேலை செய்யுமென்று சொன்னார். இருவரும் சட்டையைப் போட்டுக் கொண்டு லாட்ஜை விட்டு இறங்கும்போது அவர்களை வரவேற்பது போல் இளம்காலை வெயில் இதமாய் தவிழ்ந்து வந்து வாசலில் நின்றது.
சின்ன அண்ணாமலை, தாராசிங் கிங்காங் மற்றும் அவர்களுடன் வந்த இரண்டு உதவியாளர்களை ரேஸ் கோர்ஸ் மைதானத்தின் அருகே பாரதி உலா தெருவில் இருந்த ராஜசபை லாட்ஜில் தங்க வைத்தார். பிரபலங்கள் தங்குவதற்கான பிரத்யேகமான அந்த விடுதியில் செட்டி நாட்டைச் சேர்ந்த நண்பர்கள் மூலம் எப்படியோ இடம் பிடித்தார். அவர்களைக் கவனிப்பதற்கென்றே அண்ணாமலை தனியாக ஒரு நபரை நியமனம் செய்திருந்தார்.
சாவி அடிக்கடி சின்ன அண்ணாமலையிடம் மல்யுத்தம் பார்ப்பதற்கு ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாக இருந்தால் மட்டும் போதாது. அதை ஒரு பரபரப்போடு நடத்த வேண்டும். புதுபுது உத்திகளை அறிமுகப்படுத்த வேண்டும். அப்போதுதான் ரசிகர்களைக் கவரமுடியும். அதேநேரம் வசூலில் கவனம் இருக்க வேண்டும் என்றும் கூறிக்கொண்டே இருந்தார்.
நிகழ்ச்சியின் முந்தியநாள், தமுக்கம் மைதானம் களைகட்டியது. திறந்தவெளியில் மேடை அமைக்கப்பட்டு ரசிகர்கள் உட்கார வட்டமாக மைதானத்தில் மரப்பலகை களால் பால்கனி அமைக்கப்பட்டிருந்தது. இதையெல்லாம் காண்ராக்ட்காரர்களுடன் சின்ன அண்ணாமலை மேற்பார்வை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார். ஒருபக்கம் சுற்றிலுமாக மறைப்பு தட்டிகள் வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர். ஒளிபெருக்கி, விளக்குகளைக் கம்பங்களில் கட்டியபடி மற்றொரு பக்கம் வேலை நடந்து கொண்டிருந்தது. சின்ன அண்ணாமலை சுறுசுறுப்பாக அவர்களுக்கு அவ்வப்போது யோசனை சொல்லியவாறு சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தார். மேடை மீது ஏறி, சொன்னபடி அவர்கள் பலகைகளை அடித்தியிருக்கிறார்களா என்று குதித்துப் பார்த்தார்.
மல்யுத்த வீரர்கள் மறைந்திருந்து கொள்ள வசதியாக ஒரு அறையை சின்ன அண்ணாமலை உருவாக்கியிருந்தார். அதில் அவர்களுக்கு ஒரு மின்விசிறியையும் வாடகைக்கு எடுத்து மாட்டிவைத்தார். இப்படி ஒவ்வொரு விஷயமாக நுணுக்கத்தோடு சின்ன அண்ணாமலை முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். மத்தியான உணவைக்கூட அத்தனை வேலையாட்களுக்கும் வாங்கிக் கொடுத்து தானும் அவர்களோடு சமமாக உட்கார்ந்து சாப்பிட்டார்.
இரவில் சின்ன அண்ணாமலையும், சாவியும் பல மணி நேரம் நடக்க வேண்டிய விஷயங்களைத் தெளிவாக விவாதித்து, திட்டமிட்டுக் கொண்டனர். சாவி தன் பங்கிற்கு டிக்கெட் விலை நிர்ணயிப்பது மற்றும் அதை பிரிண்ட் செய்வது போன்ற வேலைகளையும் தட்டி விளம்பரம், ரிக்ஷாவில் ஒலிபெருக்கியுடன் ஒருவரை அனுப்பி தெருக்களில் சுற்றிச்சுற்றி வருவது போன்ற வேலைகளைத் துரிதப்படுத்தினார்.
அவர்களின் மற்றொரு உக்தி கொஞ்சம் ஆபத்தானதாகத் தெரிந்தாலும் அதை செயல்படுத்தினால் தளத்தில் ரசிகர்களிடம் மிகுந்த ஆரவாரமும் வரவேற்பும் இருக்கும் என்று இருவரும் நம்பினார்கள். சின்ன அண்ணாமலை இது சீனாவின் “அதிரவைத்த மல்யுத்த நாட்கள்” என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொண்டார்.
இந்த திட்டத்தை தாராசிங், கிங்காங் இருவரிடமும் விளக்கியபோது இதற்கு சம்மதித்தது மட்டுமல்ல, நல்ல திட்டம் என்று சின்ன அண்ணாமலையைப் பாராட்டித் தட்டிக் கொடுத்தனர். ஆனால் இதில் மிகக் கவனம் வேண்டுமென்று கிங்காங் சொல்லிவிட்டு, ஆனால் இதை ஒருநாள் மட்டும்தான் செய்து காண்பிக்கமுடியும். அதனால் அதைக் கடைசி நாள் ஞாயிறு அன்று வைத்துக் கொள்வோம் என்று சொன்னார்.
முதல் நாள் காட்சி பூஜைகள் போடப்பட்டு வெள்ளிக் கிழமையன்று தொடங்கியது. மைதானம் நிரம்பிய வண்ணம் இருந்தது. தொடர்ந்து மைக்கில் ஒருவர் அறிவித்துக் கொண்டேயிருந்தார் மாமிசமலை கிங்காங் என்றும், மல்யுத்த பீமசேனன் என்று தாராசிங்கை வர்ணித்ததுமே மக்களிடம் கைதட்டலும் உற்சாகமும் பொங்கி வழிந்தது. போட்டிகள் முடியும் வரை சின்ன அண்ணாமலையும் சாவியும் இருப்புக் கொள்ளாமல் அரங்கத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தனர்.
முதல்நாள் நிகழ்ச்சி விறுவிறுப்பாய் சிறப்பாக நடந்திருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு வசூலாகவில்லை என்ற குறை அவர்கள் இருவர் மனதிலும் இருந்தது. இன்னும் இரண்டு நாட்களும் இது போல் இருந்தால் எப்படி சமாளிப்பது என்று இருவரும் குழம்பிய நிலையில் அறைக்கு வந்து சேர்ந்தனர். திட்டமிட்டபடி வசூல் ஆகாது போனால், எல்லாருக்கும் அட்வான்ஸ் கொடுத்தது போக மீதித் தொகையை எப்படிக் கொடுப்பது என்ற கவலை சாவியை மீண்டும் மீண்டும் யோசிக்கச் செய்தது. சின்ன அண்ணாமலையோ வேறு எந்த சிந்தனையுமின்றி அப்படியே தரையில் விழுந்து உடனே தூங்கிப் போனார்.
மறுநாள் அதிகாலை தாராசிங்கை சந்தித்தபோது முதல் நாள் வசூல் அப்படித்தான் இருக்கும். பயப்பட வேண்டாம். மிகவும் குழப்பிக் கொள்ளாதீர்கள்…
இந்த இரண்டு நாட்கள் கூட்டத்தைக் கூட்ட நான் ஒரு யோசனை சொல்கிறேன் என்றவாறு அவருடைய திட்டத்தை விளக்கினார். சின்ன அண்ணாமலையும், சாவியும் அதன்படி செயலில் இறங்கினர்.
அந்த திட்டத்தின்படி, திறந்தவெளி ஜீப் ஒன்றில் தாராசிங்கும் கிங்காங்கும் தங்கள் பிரத்யோகமான மல்யுத்த உடையோடு மதுரை நகர் வீதிகளின் வழியே பவனி வந்தனர். சிம்மக்கல்லில் தொடங்கிய இவர்களின் ரோடு ஷோ மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் இரண்டு புறமும் நின்று ஆரவாரம் செய்தனர். வீட்டிற்குள் இருந்த பெண்கள்கூட அவர்கள் வரும் காட்சியை வேடிக்கை பார்க்க மொட்டை மாடியில் கூட்டமாய் நின்று கொண்டிருந்தனர்.
மேலமாசி வீதியில் அவர்கள் வரும்போது சில மல்யுத்த ரசிகர்கள் ஜீப்பை நிறுத்தி அவர்களுக்கு மாலையணிவித்து மகிழ்ந்தனர். ஜீப்பின் பின்னால் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் சாவியும் அண்ணாமலையும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். கூடவே வந்த ஒருவன் சாவி எழுதிக் கொடுத்திருந்த அறிவிப்பை மைக்கில் உரக்கக் கத்திக் கொண்டே வந்தான்.
அன்று மாலை நான்கு மணிக்கே மாலை முரசு பத்திரிகையில் தாராசிங்கும் கிங்காங்கும் ஜீப்பில் மதுரை வீதியெங்கும் வந்த காட்சிகளின் படங்களோடு செய்தி வெளியாகியது. இந்தச் செய்தி மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதே நேரம், இரண்டாவது நாள் எப்படியிருக்குமோ என்று நண்பர்கள் இருவரும் சிந்திந்தவாறு தமுக்கம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை விடிந்தது.
அரைகுறையாகத் தலையைத் துவட்டிக் கொண்டு ஈரத்துண்டோடு “அக்கா உனக்குத் தெரியுமா? இன்னிக்கி அய்யாகூட நானும் மதுரைக்கு குஸ்தி பாக்கப்போறேன்” என்றவாறு தூங்கிக்கிட்டு இருந்த சின்னக்காவை எழுப்பிவிட்டு குமார் சந்தோஷத்தில் கத்தினான். ஈரம் அவள் முகத்தில் தெறித்து விழுந்தவுடன் அவள் “போடா எரும என்னைய எதுக்கு இப்ப எழுப்பிவிட்ட? எனக்கு எல்லாம் தெரியும். அம்மா நேத்தே சொன்னாங்க. இப்ப என்ன தூங்க விடு. போ” என்றவாறு மறுபடியும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.
பிற்பகலில் மதுரைக்குக் கிளம்பும் வரை குமாரின் சேட்டை அதிகமாக இருந்தது. மதுரை போவதென்பது அவனுக்கு ஏதோ வெளிநாட்டுப் பயணம் செல்வது போல் மனம் உற்சாகத்தால் துள்ளிக் குதித்தது.
ரயில் பயணத்தின் போதெல்லாம் குமாருக்கு மனதில் குதூகலம் வந்துவிடும். அது சக்கரங்கள் பொருத்தப்பட்ட நகரம் போல் அவனுக்குக் காட்சியளிக்கும். அது காற்றைக் கிழித்துக் கொண்டு செல்வதாலேயே அவனுக்கு உற்சாகம் பீறிடும்.
குமார் அங்கும் இங்குமாக காலி இருக்கைகளுக்குள் தாவிக் கொண்டிருந்தான். ராமநாதன் அவனை ஒரு இடத்தில் உட்கார் என்று அதட்டியவாறு கையிலிருந்த துண்டை வைத்து கரித்தூசி படிந்த அந்த இருக்கைகளைத் துடைத்துக் கொண்டார். அவன் அவருக்கு எதிரே ஜன்னல் ஓரமாய் உட்கார்ந்து கொண்டான். ரயில் மெதுவாக நகர ஆரம்பித்தது.
அவன் ஜன்னல் கம்பியில் கன்னத்தை வைத்தவாறு வெளியே வேடிக்கை பார்த்தபடி இருந்தான். எதிர்காற்றில் அவன் தலைமுடி குலைந்து பறந்த வண்ணமே இருந்தது. ராமநாதன் கன்னத்தைக் கம்பியில் வைக்காதே. இஞ்சின் கரித்தூசி கண்ணில் விழுந்துவிடும் என்று எச்சரித்துக் கொண்டே வந்தார்.
குமார் வேடிக்கை பார்த்தபடியே அய்யா ஏன் மரம், கொடிக்கம்பம், வீடு எல்லாமே பின்னால நகண்டு போய்க்கிட்டே இருக்கு என்று கேட்டான். சில நேரங்களில் குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு நாம் சரியாகப் பதில் சொல்ல முடிவதில்லை. ராமநாதன் அது ஏன்னு போகப்போகத் தெரிஞ்சுக்குவ. இப்ப பேசாம வா என்று சொல்லி அவன் வாயை அடைத்தார். இவர்கள் இருவரையும் தவிர அந்த இருக்கை முழுவதும் காலியாகத்தான் இருந்தன. ரயிலின் ஆட்டம் தாலாட்டுவது போலிருந்தது. தண்டவாளங்களில் சக்கரங்கள் “தடார் தடார்” என்று எழுப்பும் சத்தமும் அத்தோடு இன்ஜினின் ஊவென்ற சத்தமும் ஒத்திசைவோடு தாளம் தப்பாத சங்கீதம் போல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே வழிநெடுகிலும் வந்தது.
ராமநாதன் எட்டணா என்று தமுக்கத்திற்குப் பேரம் பேசி ரிக்ஷா ஒன்றைப் பிடித்து குமாரை உட்காரவைத்து அவரும் ஏறிக் கொண்டார். வழி நெடுகிலும் சுவரில் ஓட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டர்களைப் பார்த்தபடியே ராமநாதன் தன் கண்களை ஓடவிட்டார். சிவாஜியின் இருவர் உள்ளம், எம்ஜியார் நடித்த காஞ் சித் தலைவன் இவற்றுக்கிடையே தாராசிங் கிங்காங் நின்று கொண்டிருப்பதைப் போன்ற போஸ்டர்களும் தென்பட்டன. “மாபெரும் மல்யுத்த போட்டிகள்” காணத் தவறாதீர்கள் என்ற வார்த்தைகளைப் பார்த்த உடன் அவருடைய ஆர்வம் இன்னும் கொஞ்சம் வேகமா போ என்று ரிச்சாக்காரரை அவசரப்படுத்தியது.
குமார் பின்னால் உட்கார்ந்தபடி ரிக்ஷாக்காரரையே கவனித்தபடியே வந்தான். பரட்டைத் தலை, விரல்கள் இடுக்கில் பீடி, அழுக்குத் துணியில் தலைப்பா, கிழிந்த டவுசர், அத்தோடு செருப்பே போடாத அந்தக் கால்கள் பெடலை மிதித்து மிதித்து ஓட்டிக் கொண்டு வந்த அந்தக் காட்சி, அத்தனையும் அவன் மனதிற்குள் அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்பியவாறு வந்தன. மதுரையின் வீதிகள் அந்திசாய்கிறது என்பதற்கு சாட்சியாய் மங்கிக் கொண்டிருந்தது.
தமுக்கம் மைதானம் சுற்றிலும் தட்டிகளால் சுவர் எழுப்பட்டிருந்தது. பிரம்மாண்டமான போஸ்டர்கள் அனைவரையும் வரவேற்கும் விதமாய் அணிவகுத்து நின்றன. நுழைவு வாயிலில் நின்றுகொண்டு கூட்டம் முண்டியடித்துக் கொண்டு நின்றது. ஒரு நிமிடம் ராமநாதன் திகைத்தபடி நின்றிருந்தார். இடதுபுறம் கடலை வறுத்து விற்பவரிடம் 10 பைசா வீதம் இரண்டு பொட்டலம் வறுத்த கடலையை வாங்கி கைப் பைக்குள் போட்டுக் கொண்டு உள்ளே போனார்.
குமாரின் கையைப் பிடித்தவாறு அரங்கத்திற்குள் நுழைந்த அவரை வரவேற்பது போல் விளக்குகளின் வெளிச்சம் அரங்கம் எங்கும் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
“தாராசிங் கிங்காங் பங்கு பெறும் பிரமாண்டமான மல்யுத்தத்தின் கடைசிக் காட்சி…. தவற விடாதீர்கள்” என்று மைக்கில் அறிவிப்புகள் வந்த வண்ணமே இருந்தன.
சனிக்கிழமை வசூல் தாராசிங் கிங்காங் ரோடு ஷோ உக்தியால் இருமடங்காகியிருந்தது. இது சாவி சின்ன அண்ணாமலை இருவரின் மனதிலும் புதிய தெம்பைக் கொடுத்தது. இறுதிக்காட்சியின் போது அவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டனர்.
ராமநாதன் குமார் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல இயலாமல் திணறிக் கொண்டிருந்தார்.
ராமநாதன் இதற்கு முன் இரண்டு முறை மெட்ராஸ் சென்று இதே போன்ற குஸ்திஷோவைப் பார்த்திருக்கிறார். ஆனாலும் தாராசிங் கிங்காங் ஷோக்களைப் பார்ப்பது இதுவே முதல் முறை. அவருடைய கண்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு மேடையைப் பார்த்த வண்ணமே இருந்தன.
அப்போது விளக்குகள் அணைக்கப்பட்டு அரங்கம் முழுவதும் இருளுக்குள் மறைந்தது. ராமநாதன் திகைப் போடு இருந்தார். குமார் ஏதும் புரியாமல் ராமநாதன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
ஒரு நிமிடம் மௌனம். மீண்டும் வெளிச்சம் மேடையை நோக்கி வீசியது. மாமிச மலைபோல் இரண்டு உருவங்கள். தங்கள் கைகளை உயர்த்தியவாறு தாராசிங் கிங்காங் இருவரும் காட்சியளித்தனர். இதைக்கண்ட ரசிகர்களின் கரஓசை அடங்க நேரம் பிடித்தது.
ஒவ்வொரு சுற்றிலும், உற்சாக அலைகள் எழுந்து எழுந்து மோதிய வண்ணமே இருந்தன. இவையெல்லாம் செட்டப் தான் என்று ராமநாதன் போன்ற வெகு சிலரே போட்டிகளின் நுணுக்கங்களை மட்டுமே ரசித்தபடி அமர்ந்திருந்தனர்.
பரபரப்போடு இரண்டு சுற்றுக்கள் முடிந்தன.
மூன்றாவது சுற்றின் தொடக்கமே அட்டகாசமாய் இருந்தது. யாரும் எதிர்பார்த்திராத வகையில், கிங்காங் தாராசிங்கை வலுச் சண்டைக்கு இழுத்து மேடையிலிருந்து தாராசிங்கைக் கீழே தள்ளிவிட்டார். கீழே போய் விழும் தாராசிங் கோபமுற்று மேடைமீது தாவி கிங்காங்கைத் தனது இரண்டு கைகளாலும் உயரத்தூக்கித் தலைக்கு மேல் மூன்று முறை தட்டாமல் சுற்றிக் கீழே போட்டார். கிங்காங் கீழே விழுந்தவுடன் மேடையே இடிந்து விழுவது போல அதிர்ந்தது. தாராசிங் மிகுந்த ஆவேசத்துடன் அவர்மீது அமர்ந்து அவர் நெற்றியில் ரத்தம் கசியும் அளவுக்குத் தன் முரட்டுக்கரங்களால் அடித்தார். ரத்தம் வழிந்து கிங்காங்கின் தாடை வரை இறங்கியது. அந்த ரத்தத்தை தாராசிங் தனது வலது உள்ளங்கையில் ஒற்றி எடுத்து குறுக்கே வந்த ரெஃபரி அணிந்துள்ள வெள்ளை வெளேரென்ற பனியன்மீது துஷ்வேகத்தோடு இழுவினார்.
அந்த ரத்தம் சூரிய ஒளி போன்ற விளக்கு வெளிச்சத்தில் சுற்றி உள்ள ரசிகர்களின் கண்களுக்குப் பளிச்சென்று தெரிந்தது.. ரசிகர் கூட்டம் இதைப் பார்த்து ஆரவாரம் செய்தது. இதையெல்லாம் பார்த்த குமார் மிரண்டு போயிருந்தான். ரத்தம் கசிந்தாலும் உண்மையில் இதுவும் ஒரு செட்டப்தான் என்பதை ராமநாதன் குமாரிடம் சொல்லிக் கொண்டேயிருந்தார்.
கிங்காங் ஏற்கனவே தடித்த தன் நெற்றியின் மடிப்பில் பிளேடால் மெல்லிதாய் கிழித்து விட்டுப் பவுடரை அதில் அப்பியிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. மக்கள் பலரும் இதை உண்மை என்றுதான் நம்பினர். ரத்தம் நெற்றியில் கசிந்ததை பிரமிப்பாய் ஷோ முடிந்த பின்கூட பலரும் விமர்சித்துக் கொண்டிருந்தனர்.
காட்சி முடிந்தவுடன் தாராசிங்கைப் பார்த்து விட வேண்டும் என்று மல்யுத்த ரசிகர்கள் ஆவலோடு நின்று கொண்டிருந்தனர். ராமநாதன் தற்செயலாக பிரிட்டிஷ் ஸ்டூடியோவின் ஓனர் அய்யாதுரை கேமராவுடன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, அவரிடம் எப்படியாவது தன்னையும் தன் மகனையும் தாராசிங் பக்கத்தில் நிற்க வைத்துப் படம் எடுக்கும்படி நச்சரித்தார். பிரபலங்கள் வரும்போது எல்லாருக்குமான ஆவல் இது போன்றதுதான். ராமநாதனைப் பொருத்தவரை தாராசிங்கை ஒரு ஹீரோவாக மனதிற்குள் பதிந்து வைத்திருந்தார்.
சிறிது நேரத்தில் அந்த கூரை வேய்ந்த அறையிலிருந்து வந்த தாராசிங்கையும் கிங்காங்கைனையும் பார்த்த அய்யாதுரை ராமநாதனையும் குமாரையும் கூட்டிச் சென்றார். தாராசிங் குமாரை அப்படியே அலாக்காகத் தூக்கி தன் கைக்குள் வைத்துக் கொண்டார். ராமநாதன் ஸ்டூடியோகாரரிடம் பிரிண்டிங் சார்ஜ் ரூ.4 கொடுத்து விட்டுப் படத்தைத் தபாலில் அனுப்பச் சொல்லி விலாசத்தைக் கொடுத்தார்.
குமாரிடம் ஆரம்பத்தில் இருந்த குதூகலம் காணாமல் போயிருந்தது. இன்னும் சொல்லப்போனால், அந்தக் கூட்டத்தில் மிகச்சிலரே குமரைப் போன்ற சிறுவர்களை அழைத்து வந்திருந்தனர்.
அவன் முகத்தில் களைப்பின் சுவடுகள் தெரிந்தன. குஸ்தி என்ற கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதை ராமநாதன் சாத்தியமற்றதாய் உணர்ந்தார். தலைமுறைகள் மாறும்போது விருப்பங்களும் மாறிவிடுகின்றன.
இன்றைய மனிதர்கள் எதற்குள் மகிழ்ச்சியைத் தேடுகிறார் களோ அடுத்த தலைமுறைகள் அதன் கதவுகளை மூடி விடுகிறார்கள். வாழ்க்கை இதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறது.
வெளியில் வந்த ராமநாதன் குமாரின் கையைப் பிடித்தவாறு ஸ்டேஷன் போக ஒரு ரிக்ஷாவைத் தேடிக் கொண்டிருந்தார்.
ஒரு வழியாக சாவி கணக்கை முடித்து அண்ணாமலையிடம் காண்பிக்கும்போது நடுநிசி ஆகிவிட்டது. அண்ணாமலை ஏதோ கிடைத்திருக்கும் என்றுதான் நினைத்திருந்தார். ஆனால் இப்படியொரு பெரிய தொகையை வாழ்வில் முதன் முறையாக அவர் காண்கிறார். அடுத்த சில வினாடிகள், அண்ணாமலை பேச்சின்றி மௌனமானார். மொத்த வசூலில் இருபத்தைந்து சதவீதம் பணத்தை எடுத்துக் கொண்டு சாவியும் அண்ணாமலையும் தாராசிங்கைப் பார்க்க கிளம்பினர்.
தாராசிங் சின்ன அண்ணாமலையைக் கட்டிப் பிடித்துப் பாராட்டினார். பணத்தைக் கொடுத்தபோது அவர் தனக்கு 15 சதவீதம் மட்டும் போதும் என்றார்.
“இந்தப் போட்டியை நடத்த நீங்கள் இருவரும் எத்தனை சிரமங்களைக் கடந்து வந்திருக்கிறீர்கள். தென் இந்தியாவில் இப்படியொரு வாய்ப்பைக் கொடுத்து எங்கள் இருவரையும் பெருமைப்படுத்திவிட்டீர்கள். அதனால் உங்கள் ஊக்கத்திற்காக இந்த 10 சதவீதத்தை விட்டுக் கொடுக்கிறேன்” என்று சொல்லி விடைபெற்றார்.
என்ன மனிதர் இவர் என்று பிரமித்தபடி இருவரும் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
அன்று மாலை, சின்ன அண்ணாமலையும் சாவியும் கீதா லாட்ஜைக் காலி பண்ணிவிட்டு டவுன் ஹால் வீதியில் வரும்போது ஓரமாய் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் பக்கத்தில் வந்து ‘ஏன் சார், அந்த குஸ்தியில் தாராசிங் அடித்தது, கிங்காங் நெற்றியில் ரத்தம் வழிந்தது எல்லாமே நிஜம்தானே!’ என்று கேட்டார். இருவரும் பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தவாறே அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டே நகன்றனர்.
ஒரு வேளை அது நிஜம்தான் என்று சொல்லியிருந்தால் அவர் சந்தோஷப்பட்டிருப்பாரோ…
– காலச்சித்திரங்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 2025, மழைமான் பதிப்பகம், சென்னை.
![]() |
விருதையில் 'அம்பாள்' என்று அழைக்கப்படும், பிரபல வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை அம்பாள் ராமசாமி அவர்களின் வழியில் வாழ்ந்து தொழிலும், தன் வாழ்விலும் உயர்வு பெற்றவர். தன் தந்தை வழி இலவச யோகா பயிற்சி மையப் புரவலர், யோகா பயிற்றுனர், ஆரோக்கிய விழிப்புணர்வுப் பேச்சாளர், தந்தை நிறுவிய அறக்கட்டளை மூலம் நல்ல பல இலவச சேவைகள் செய்து, விருதை மக்கள் போற்றும் சமூக ஆர்வலர் என்று இப்படி பன்முக ஆளுமை கொண்டவராய்…மேலும் படிக்க... |
