கர்ப்பிணிப் பசுவின் சாபம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 6, 2026
பார்வையிட்டோர்: 153 
 
 

2009-ல் வெளிவந்த 2012 உலக அழிவு என்ற ஆங்கிலேய திரைப்படத்தின் மூலம் 2012-ல் உலகம் அழியும் என்பது பலருக்குக் கட்டுக்கதையாக இருந்திருக்கலாம். ஆனால் 2012-ல் எங்கள் மருதநிலப்பட்டி கிராமத்திற்கு அது உண்மையாகிப் போனதுதான் ஆச்சரியம். மருதநிலப்பட்டியில் இரா.ராம்தாஸ் என்ற ஒரு நபர் இருக்கிறார். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் குடி இருக்கிறார். அந்த அழிவின் தொடக்கப்புள்ளியாக இருந்தவர் இரா.ராம்தாஸ்தான். 65 வயது உடையவர் ஆனால் அவர் 45 வயதிற்கும் குறைவான தோற்றம் கொண்ட மனிதர். காளையைப் போல இறுக்கமாக இருக்கும் அவர் தோற்றம். அவர் உயரமாகவும் குண்டாக இல்லாமல் கட்டையாக கருமை நிறத்தில் இருப்பார். ஒரு மகள் இரண்டு மகன்கள் இருந்தாலும் அவர் தனிமையில் மனைவியுடன் குடித்தனம் நடத்துகிறார். பிள்ளைகளிடம் சண்டை, ஊரோடு பகை என அவர் வாழ்க்கை இருந்தது.

நான்கு ஏக்கர் விவசாய நிலம். ஒரு பசு மாடு, நான்கு ஆடுகள் வைத்திருக்கிறார். பணம், சொத்துகளுக்கு பஞ்சமில்லாதவர். வட்டிக்கும் பணம் கொடுப்பார். பிள்ளைகள் ஒற்றுமையாக இல்லை. அவர்களுக்கு இடையே சண்டை. பெற்றோர்களிடமும் சண்டை. அதேபோல இவரும் இவருடைய மனைவியும் ஒற்றுமையாக இல்லை.இவர்கள் காதலித்தது ஒருவரை ஒருவர் அல்ல. தாங்கள் சேர்த்து வைத்த பணத்தை மட்டும்தான். இவர் தனியாக ஒரு பக்கம் வட்டிக்கு விட, மனைவி மறுபக்கம் வட்டிக்கு விட என இருவருமே பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தனர். அனாவிஷயமாக ஒரு ரூபாய் கூட செலவு செய்யமாட்டார்கள். அந்த அளவுக்கு பணத்தில் ஒரு மோகம். வட்டிக்கு பணம் கொடுத்தாலும் அதை யார் சரியாக திரும்பக் கொடுப்பார்களோ அவர்களுக்கு மட்டும்தான் பணம் கொடுத்து உதவுவார்கள். பணத்தை அவர்கள் திரும்பத் தராமல் ஏமாற்றி விடுவார்களோ என்ற அச்சம்தான் வேற என்ன காரணமாக இருக்கும். இரா.ராம்தாஸ் க்கு இவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் முதியோர் உதவித்தொகை இது வேற இவருக்கு கிடைக்கிறது. போதாத குறைக்கு, இத்தனை வசதி இருந்தும் அரசாங்கம் தரும் முதியோர் உதவித்தொகையையும் (OAP) அவர் விடுவதில்லை. இப்படிபட்ட பணம் கொடுத்து உதவும் மனிதருக்கு ஊருக்குள் ஒரு பக்கம் கொஞ்சம் நல்ல பேரு இருந்தாலும் கெட்ட பழிச் சொல்லுக்கு ஆளானார். அதாவது வாசாப்பு வாங்காத என்று சொல்வார்கள்.

மாப்பிள்ளை கணக்கா இருந்துகிட்டு இந்த மனுஷனுக்கு எதுக்கு OAP காசு? செத்த பிறகு, கூடவா பணத்தை எடுத்துட்டுப் போகப்போறான்? என்றும். இந்த வயசான காலத்துல இவ்வளவு சொத்து இவனுக்கு எதுக்கு, பிள்ளைகளிடம் கொடுக்க கூடாதா? என்றும் முடியாதவர்களுக்கு பணம் கொடுத்து உதவாமல் பணம் வைத்துக்கொண்டு இல்லையென்று சொல்கிறான் பாவி பைய! என்றும் முடியாதவங்க தானே இந்த வட்டி வாங்காட்டி என்னா என்றும் சாபம் கொடுக்காத குறையாக ஊர் மக்களின் வாசாப்புக்கு மேல வாசாப்பு வாங்கினார். ஆனால் எங்களைப் பொறுத்தவரை அவர் நல்ல மனிதர்தான். பக்கத்து வீடு, நல்ல பழக்க வழக்கம். கஷ்டம் வரும்போதெல்லாம் வட்டிக்கு பணம் கொடுத்து உதவுவார். நல்ல வாயாடி. நல்லா கதை பேசுவார். ஊர் மக்கள் கொடுத்த சாபத்தால் தான் இவருக்கு இந்த நிகழ்வு நடந்துவிட்டதா?! அப்போது கோடைகாலம். சித்திரை சூரியன் ஒரு பக்கம் தன் கோர முகத்தை காட்டிக்கொண்டிருந்தது. அப்போது வானம் பார்த்த விவசாயம் அறுவடை விசேஷமாக நடந்து முடிந்தது. அறுவடைக்கு பின் ஒரு மாதக் காலத்திற்குள் விவசாய நிலங்கள் அழிந்து மேய்ச்சலுக்குக் கூட வழியின்றி ஆடு மாடுகள் தவித்துக் கொண்டிருந்தது. மழையும் இல்லை. விவசாய நிலங்களில் உரிமையாளர்கள் தீ வைத்து விவசாய காட்டை தீக்கு இறையாக்கிக் கொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டில் அரசாங்க மானியத்தில் நான்கு ஆடுகள் வாங்கி இருந்தோம். இரா.ராம்தாஸ் இவருடன் சேர்ந்துதான் மேச்சலுக்கு செல்வோம்.

அன்று இடியுடன் பலத்த காற்று மழை. இந்த சம்பவம் சரியாக மாலை 03.30 மணியளவில் நடந்தது. நான் அன்று எனது ஆடுகளை மேச்சலுக்கு கூட்டிச் செல்லவில்லை. மாறாக என் அண்ணன் தான் சென்றிருந்தான். இடி காற்று மழையால் எங்களது ஆடுகளும் இரா.ராம்தாஸ் அவருடைய ஆடுகளும் பயந்து வீட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் இவர் மழை விட்டு விடும் என்று நம்பி கம்பீரமான உயர்ந்த புளிய மரத்தடியில் தனது ஓரிரு நாட்களில் கன்றுக்குட்டி ஈன இருக்கும் பசு மாட்டுடன் குடை பிடித்துக்கொண்டு நின்றார். முதலில் லேசான மழை தான் வந்தது. அதனால் தான் அவர் அங்கே நின்று இருக்கிறார். பிறகு மழையின் நிலைமை மோசமாக மாறியது. பலத்த காற்று மழையால் புளியமரம் முறிஞ்சி விழும் நிலைமையில் பயங்கரமாக காற்றில் ஆடிக்கொண்டு இருப்பது அவருக்கு தெரிந்ததால் சற்றும் தாமதம் இன்றி வீட்டுக்கு புறப்பட்டார். கண்களை திறந்து பார்க்க முடியாத அளவிற்கு பலத்த காற்று மழை. குடை பிடித்தால் காற்றில் உடைந்து கிழிந்து பறக்கிறது. அது பேருந்து நிறுத்தம் மூன்று சாலைகள் சந்திக்கும் இடம். அங்கு பழமையான மிகப்பெரிய ஆலமரம் இருந்தது. அது சுமைதாங்கி. (ஒரு கர்ப்பிணி பெண் இறந்ததால் அந்த பெண் நினைவாக சுமைதாங்கி கற்கள் வைத்து அந்த ஆலமரம் வளர்க்கப்பட்டதாம்). காற்று மழையால் முறிந்து விழும் நிலைமையில் பயங்கரமாக காற்றில் ஆடிக்கொண்டு இருந்திருக்கிறது அந்த ஆலமரம். பேருந்துக்கு காத்திருந்தவர்கள் இதைப் பார்த்துவிட்டு பயந்து அலறியடித்து ஓடிவிட்டார்கள். இதை அறியாத அப்பாவி இரா.ராம்தாஸ் மிகச் சிரமத்துடன் கர்ப்பிணி பசுமாட்டை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறார்.

மிகப்பெரிய ஆலமரம் கண்ணிமைக்கும் நேரத்தில் மட மடவென்று முறிந்து விழுந்து இருகிறது. இதை அவர் யூகித்து இருக்கிறார்.செனை பசுமாட்டை எப்படியாவது ஓட்டிக்கொண்டு தப்பித்துவிடலாம் என்று தான் நினைத்தார். ஆனால் நிலமை கை மாறி போனது. ம்… ஆமாம். எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. இவர் மீதும் இவர் பசு மாட்டின் மீதும் மிகப்பெரிய ஆலமரம் அடியுடன் முறிந்து சாய்ந்தது. இந்த சம்பவம் இன்னும் என் கண்களில் மறக்க முடியாத நினைவாக பதிந்திருக்கிறது. நானும் காத்திருந்தேன் இரண்டு மூன்று நாட்களில் பசு மாட்டின் சீம்பால்காக ஆசையாக காத்திருந்த நாட்கள் அது. கர்ப்பணியாக இருந்த பசுமாடு கொடூரமான முறையில் இறந்து கிடந்தது. கண்களில் கண்ணீருடன் நாக்கு வெளிய வந்த வாறு, பசுவின் கன்றுக்குட்டி பின் கால் வெளியே வந்தவாறு என பார்க்க முடியாத நிலைமையில் இறந்து கிடந்தது. இந்த பசு மாடு எவ்வளவு வலிவுடன் இறந்து இருக்கும் என்று என்னால் கற்பனை பண்ணி பார்க்கவே முடியவில்லை. வந்த வினை தலப்பாகட்டுடன் போனது போல அவர் குருட்டு அதிர்ஷ்டமாக உடம்பில் பலத்த அடியுடன் தப்பித்து விட்டார். மழை பெய்து முடியும் வரை யாரும் உதவ செல்லவில்லை. அருகில் வீடுகளில் இருந்தவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்து இருக்கிறார்கள். பலத்த காற்று மழையில் மரத்தில் அடிபட்டு நேராக எங்கள் வீட்டிற்கு உதவி கேட்டு வந்தார்.

மழை நின்ற பின், மரத்தில் அடிபட்ட பசுமாட்டை பார்க்க கிராமமே ஒன்று கூடி கதைகள் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அன்று மூன்று பால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இரண்டு அரச மரமும் ஒரு ஆல மரமும். அன்றிலிருந்து தான் எங்கள் ஊர் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்தது. அன்றிலிருந்து எங்கள் ஊருக்கு ஏனோ சனி பிடித்தது போலானது. ஆங்காங்கே மழை இடியில் விவசாயக்காட்டில் மாடுகள் பலியாவதும் மரங்கள் முறிந்து விழுவதும். வாரத்திற்கு இருவர் மரண அடைவது, வயதானவர்கள் இறப்பது. இளம் வயது உடையவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்று ஐந்து மாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. மக்கள் பயந்து நடுங்கி கொண்டிருந்தனர். இப்படியே மருதநிலப்பட்டி கிராமத்து மக்களின் வாழ்க்கை பயந்து நடுங்கி ஓடிக்கொண்டிருந்தது. இந்த நிகழ்வு வெகு நாட்களுக்கு பிறகு நிலைமை சரியானது. அதன் பிறகு இரா.ராம்தாஸை ஒரு முறை பாம்பு கடித்தும், பல்லி விழுந்த உணவை சாப்பிட்டும் இறக்கவில்லை. அவருடைய ஆயுள் கெட்டியாக இருந்தது. கொரோனா காலகட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் பல பேர் இறந்தவர்களில் இவரும் இறந்துவிட்டார். கணக்கில்லா பணம் இருந்தும், பல ஏக்கர் நிலம் இருந்தும், அந்தப் பெருந்தொற்று காலத்தில் அவருக்கு ஒரு பிரம்மாண்டமான இறுதிச் சடங்கு கூட நடக்கவில்லை. தனிமையிலேயே அவர் பயணம் முடிந்தது.

(எங்கள் கிராமத்தில் நடந்த நிகழ்வு இது. ஒரு உண்மை கதையை கதையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *