கனகலிங்கத்தின் கவனம்

கனகலிங்கம் காலை பத்தரை மணிக்கு உடலில் அத்தரை பூசிக்கொண்டு தனது பழம்பெருமை வாய்ந்த பழைய மிதிவண்டியில், மிதமான வேகத்தில் ஒரு திருமண மண்டபத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தான்.
வழியில் ஓர் ஏரிக்கரை மேட்டில் மிதிவண்டியை ஏற்ற முடியாமல் கீழே இறங்கி மிதிவண்டியை தள்ளிக் கொண்டு வந்தான். அங்கே ஏரிக்கரை ஓரத்தை சுத்தம் செய்வதாக சொல்லிக் கொண்டு 100 நாள் வேலை ஆட்கள் ஆலமர நிழலில் அமர்ந்தவாறு ஊர்க்கதைகளை ஒருவர் பின் ஒருவராக சொல்லிக்கொண்டு உற்சாகமாய் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் எல்லோரும் பெண் சிங்கங்களாக இருந்தனர். கனகலிங்கம் அவர்களில் சிலரின் அங்கங்களை ரசிக்க முயன்றான். பலன் கிடைக்கவில்லை.
அடுத்து கனகலிங்கம் வாய்க்கால் கரை ஓரமாக தனது வாகனத்தில் வலம் வந்தபோது, அங்கே இருந்த வயல்களில், வயல் வேலைகளை பெரும்பாலும் பெண்களே செய்து கொண்டிருந்தார்கள். வயலுக்கு சொந்தக்காரனின் பசு வரப்பு ஓரத்தில் உள்ள புற்களை மேய்ந்து கொண்டிருக்க, அவனது பார்வை அந்த பாவையரை மேய்ந்தபடி இருந்தது. பாவையரின் இடி போன்ற பார்வையால் பாதிக்கப்பட்டு அவன் ஒரு நொடிப் பொழுதில் அங்கிருந்து அகன்றான்.
கனகலிங்கம் வேகமாக விவசாயிகள் முன்னேற்ற சங்கக் கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து, தனது வண்டியை ஓர் ஓரமாக நிறுத்தினான். அங்கே விவசாயிகள சங்கக் கூட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அவன் உள்ளே நுழைந்து கடைசி வரிசையில் இருந்த ஒரு காலியான நாற்காலியில் காலை நீட்டிக்கொண்டு அமர்ந்தான். பலவகை மனிதர்கள் பலவாறு பேசிக் கொண்டிருக்க கனகலிங்கம் தன் போக்கில் தலை சாய்த்து நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தான்.
அவன் தூங்கி எழுந்த போது அருகில் எவரும் இல்லை. கூட்டம் முடிந்திருந்தது.
பசி வயிற்றை படாதபாடு படுத்த, கனகலிங்கம் உணவகத்தைத் தேடி சிறிது தூரம் தனது மிதிவண்டியை தள்ளிக் கொண்டு நடந்தான். வழியில் செல்வராணி எனும் ஒரு சிறிய உணவகம் அவன் கண்ணில் பட்டது. உடனே அவன் அந்த உணவகத்திற்குள் நுழைந்தான்.
அந்த சிறிய உணவகத்தில் மொத்தம் நான்கு பேர் இருந்தனர். அந்த நால்வரும் நளினமான இளம் பெண்களாகவே இருந்தனர். அந்த நால்வரையும் ரசித்தபடியே அவன் உணவை ருசித்து சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தான். அப்போது அவன் உடலும் மனமும் ஒருங்கே குளிர்ச்சி அடைந்தது.
பிற்பகல் மூன்று மணிக்கு அவன் ஆற்றுப்பாலம் அருகே உள்ள துணிக் கடைக்கு தனது மகன் பரமசிவத்திற்கு துணிமணிகள் வாங்குவதற்காக உள்ளே நுழைந்தான். அங்கு முதலாளியாக இருக்கும் முதியவர் மட்டும் கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்க, ஏனைய மூன்று பேர்களும் இளமை பூத்துக் குலுங்கும் இனிய பெண்களாக இருந்தனர். அவன் தனது மகனுக்கு ஒரு புதுச் சட்டையையும், கால் சட்டைத் துணியையும் வாங்கிக் கொண்டான். அங்கிருந்த மகளிர் அனைவரும் புன்னகை பூத்தபடி பொலிவோடு அவனை வழி அனுப்பி வைத்தார்கள். அவன் மகளிர் கூட்டத்தை மனதில் நிறுத்தியபடி வெளியே வந்தான்.
பிற்பகல் நான்கு மணிக்கு மகனின் கால்சட்டைத் துணியை தைக்கக் கொடுப்பதற்காக காந்திஜி சாலையில் உள்ள ஒரு தையல் கடைக்குள் கனகலிங்கம் எட்டிப் பார்த்தான்.
“வாங்க, வாங்க, உள்ள வாங்க” என்ற இனிமையான பல குரல்கள், ஒன்றாகவும் நன்றாகவும் ஒருசேர கேட்க, அவன் அப்படியே காலணிகளை வெளியே விட்டு விட்டு, அந்த தையலகத்தின் உள்ளே தனது காலடிகளை கவனமுடன் பதித்தான். அங்கே அழகுடனும் அலங்காரத்துடனும் இருந்த அனைவரும் தையல் நாயகிகளாகவே இருந்தனர். துணிகளுக்கு அளவெடுத்த பெண் மட்டும் சிறிய சந்துகளில் செல்ல சிரமப்படும் விதமாக சற்று அகலமாக இருந்தாள். ஆனாலும் அவனுக்கு அவள் அழகாகவே தெரிந்தாள். கனகலிங்கத்திடம் தையல்நாயகிகள் அனைவரும் பிரியமாக பேசினார்கள். பிரிய மனம் இல்லாமல் பிரியாவிடை பெற்றுக் கொண்டு கனகலிங்கம் கடையை விட்டு லேசான வருத்தத்துடன் வெளியேறினான்.
அடுத்து மாலை ஐந்து மணிக்கு ஒரு பழரசக் கடைக்குள் கனகலிங்கம் பக்குமாய் புகுந்தான். கனகலிங்கம் நளினமாக உள்ளே சென்று அங்கே இருந்த நங்கையரை நாவினிக்க நோட்டமிட்டான். அங்கே நான்கு பணியாளர்களும் ஒரு காசாளரும் பளிச்சென்று பளபளப்புடன் காணப்பட்டார்கள்.
பழரசத்தை பருக வரும் கூட்டம் அங்கே குறைவுதான். திறந்த மனதுடன் இருக்கும் ஒரு ஞானி போல, பரந்த மனப்பான்மை கொண்டு தங்கள் மேனியை பல ரகங்களில், பல விதங்களில், விசாலமாய் வெளிப்படுத்தும் விதத்தை, நாவினிக்க ரசிக்க வரும் கூட்டமே அங்கு அதிகமாக இருந்தது.
பாவையறை பார்த்து ரசிக்கவே அங்கே வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியபடி, வருவதும் போதுமாய் இருந்ததை உணர்ந்த சிவலிங்கத்திற்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது. சிவலிங்கம், தான் மட்டுமே, பெண்களைப் பொறுத்தவரை கொஞ்சம் பலகீனமானவனாக இருப்பதாக அதுவரை நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அங்கு வருகின்ற வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் அவனைப் போலவே இருப்பதைக் கண்டு அவன் நெகிழ்ந்து போனான்.
கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததனால் கனகலிங்கம் பழரசத்தை பருகிய பின், கடையிலிருந்து வெளியே வருவதற்கு மட்டுமல்ல, அந்தப் பாவையரை மனதில் இருந்து வெளியேற்றுவதற்கும் அவன் மிகவும் சிரமப்பட்டான்.
இரவு ஏழு மணிக்கு அவன் அன்னபூரணி உணவகத்திற்குள் இரவு உணவை சாப்பிடுவதற்காக நுழைந்தான். அங்கேயும் சமையல் முதல் சாப்பாடு பரிமாறுவது வரை எல்லோருமே பெண்களாகவே இருந்தனர். அதில் ஒருவர் மட்டும் கொஞ்சம் வயதானவராக இருந்தார். ஏனையோர் எல்லோரும் இளமையுடன் இருந்தனர். அவர்களை ரசித்தபடியும், ருசித்தபடியும் உணவை உள்ளே தள்ளினான். அவன் சாப்பிட்டுவிட்டு உணவகத்தை விட்டு வெளியே வருவதற்கு இரவு எட்டு மணி ஆகிவிட்டது.
அப்போது சாலைகளில் குண்டு குண்டாய் சில பெண்கள் முக்காடிட்டு முகங்களை மறைத்தபடி இரண்டு பேர்களாகவும், தனியாகவும், இனம் புரியாத உற்சாகத்தில் இருசக்கர வாகனங்களில் வலமிருந்து வருகை புரிந்தபடி இருந்தார்கள். அவர்கள், சிலரின் அசதியை தீர்ப்பதற்காக, வசதியான இடம் நோக்கி, வாசனையுடன் போய்க் கொண்டிருப்பதாக அவன் ஐயம் அடைந்தான். அவனது ஐயத்தை தெளிவுபடுத்த வேண்டி அவன் அவர்கள் பின்னால் சிறிது தூரம் சென்று சில மின்னல் தாக்குதல்களுக்கு ஆளாகி, பின்னர் வீணே திரும்பினான். அவர்கள் எங்கே போனால் என்ன? என்றும் அவர்கள் என்ன செய்தால் நமக்கென்ன? என்றும் கனகலிங்கத்தால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.
அவன் கடைவீதிகளில் தனது மிதிவண்டியை தள்ளிக் கொண்டு கால் வலிக்க நடந்த களைப்பில், உடல் கொஞ்சம் உற்சாக பானத்தை உறிஞ்சிப் பார்க்கத் துடித்துக் கொண்டிருந்தது, உடனே அவனது கால்கள் மதுபான கடையை நோக்கி மகிழ்ச்சியுடன் விரைந்தது.
அவன் இரவு ஒன்பது மணி அளவில் உற்சாக பானம் விற்கும் கடைக்குள் சென்று, தனக்குப் பிடித்த ஒரு சரக்கை வாங்கிக் கொண்டான். அங்கே ஆண்கள் அதிகம் பேர் இருந்தனர். இருபது வயது முதல் எண்பது வயது வரை உள்ள அவர்கள், ஆங்காங்கே அமர்ந்து பொறுப்புடனும், முழு விருப்பத்துடனும் பல வகை மதுபானங்களை உள்ளே தள்ளி மாய உலகில் மல்லாந்து கிடந்தனர். அங்கே ஓர் ஓரத்தில், இரு கிழவிகள் மோரை குடிப்பது போல் பீரை உள்ளே தள்ளி உற்சாகம் பெற்று ஒய்யாரமாய் நின்று கொண்டிருந்தார்கள்.
அங்கே அவனுக்கு உட்காருவதற்கு இடமில்லாமல் நின்றபடியே தான் வாங்கிய முழு சரக்கையும் ஊறுகாய் பொட்டலத்தை நக்கிக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே தள்ளி உற்சாகமடைந்தான்.
மேசையில் அமர இடம் இல்லாததால், அரை மணி நேரமாக நின்று கொண்டே மது அருந்தியவன் மெல்ல உடலை தாழ்த்தி தரையில் அமர்ந்தான். மீதமிருந்த மதுவை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்தான்.
தனியே மண்ணில் தவழ்ந்தபடி, “எனக்கு இன்னும் போதை ஏறவே இல்லை. உள்ளே போனதும் சரியில்லை. வெளியிலே இருப்பதும் சரியில்லை. அண்டகா ரசம். இது அனைவருக்கும் விஷம். இனி அழ வேண்டியது தான் நெசம்” என்று அடம் பிடித்தபடி கனகலிங்கம் அழுது கொண்டே இருந்தான். இரவு பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தபோது அவன் அங்கே உள்ள பணி செய்யும் மேதைகளால் பத்திரமாக வெளியே வீசி எறியப்பட்டான்.
அப்போது அவனது மகனுக்கான புதுச்சட்டை இருந்த துணிப்பையை ஒரு நாய் தனது வாயினால் கவ்வியபடி இழுத்துச் சென்று கொண்டிருந்தது. நிதானம் இல்லாத அவனைப் பார்த்து ரசித்தபடி அந்த நாய் நிதானத்தோடு தெருமுனையை நோக்கி போய்க் கொண்டிருந்தது.
![]() | எழுத்தாளர் பற்றிய குறிப்புகள்: பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்: 1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள் (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க... |
